TerrorisminFocus

Friday, August 08, 2008

புவிச் சூடேற்றமும், அதன் அரசியலும்

புவி சூடேற்றம் குறித்த விழிப்புணர்வுக்காக ஐந்து நிமிடங்கள் மின்சாரம் பயன்படுத்துவதை நிறுத்தக் கோரும் பதிவுகள் கண்ணில் படுகின்றன. நல்ல விசயம்தான். ஆயினும் விழிப்புணர்வு என்று எதைச் சொல்கிறார்கள்? பெரும்பாலனவர்கள் தனிமனித முயற்சிகள் பலன் தரும் என்று கருத்துச் சொல்கிறார்கள். அது பலன் தருமா தராத என்பதை ஆய்வு செய்வதற்க்கு முன்பு உண்மையில் புவிச் சூடேற்றம் என்ற பிரச்சினை குறித்த பாரிய புரிதல் எத்தனை பேருக்கு இருக்கும் என்பதை தெரிந்து கொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும். ஒரு விசயத்தைப் பற்றிய விஞ்ஞானப் பூர்வமான புரிதல் இல்லாமல் கற்பிக்கப்பட்ட தீர்வுகளை பிடித்து தொங்கிக் கொண்டு மனத்திருப்தி அடைவது நமது வழமையாகவே இருக்கிறது.

பொதுவாக மனிதன் ஒரு சமூகமாக இயற்கையிடமிருந்து தனது தேவைகளுக்கு எந்த வடிவத்தில் உற்பத்தி செய்கிறான் என்பதுதான் புவிச் சூடேற்றத்தின் பொருளாதார பின்னணியாக இருக்கிறது. இயற்கையிடம் முரன்பட்டு வெட்டுக் கிளியாய் சுரண்டும் மனித சமூகத்தின் இந்த சுய அழிவுப்பாதையை மாற்ற இயலாததன் பின்னணியாக அரசியல் உள்ளது. இவை தனிமனிதன் சம்பந்தப்பட்டவையல்ல மாறாக ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த பிரச்சினை என்பதும் அது குறித்த அறிவும், தீர்வும் தெரிந்த தனிமனிதர்களின் கூட்டுச் செயல்பாடே புவிச் சூடேற்றத்திற்க்கு தீர்வாக இருக்க முடியும் என்பதுமே சரியான பார்வை என்று கருதுகிறேன். வெறுமே மின்சாரத்தை ஐந்து நிமிடம் நிறுத்துவது என்பது ஒரு பிரச்சாரம் என்ற அளவில் கூட பலன் தராததே. ஏனேனில் பிரச்சினையின் சரியான வடிவம் குறித்து போதிக்காத எந்தவொரு பிரச்சாரம் பிரச்சினையை தீர்ப்பதற்க்கு எந்த வகையிலும் பங்களிப்பு செய்யாது.

இயற்கையை வெட்டுக் கிளியாய் சுரண்டும் முதலாளித்துவ பொருளாதாரம் குறித்த இரண்டு கட்டுரைகள் அசுரனில் முன்பு பிரசூரம் செய்யப்பட்டது. அவை இங்கு இரு பகுதிகளாக மறுபிரசூரம் செய்யப்படுகின்றன(#1, #2). இவை புவிச் சூடேற்றத்தின் பின்னால் உள்ள அரசியல்/பொருளாதார அடிப்படையை புரிந்து கொள்ள உதவி செய்யும்.

இந்த இரண்டு கட்டுரைகள் தவிர்த்து நேரம் இருந்தால் மூன்றாவதாக இன்றைய மறுகாலனிய/உலகமயச் சூழலில் புவிச் சூடேற்றத்தின் அரசியல் என்னவாக இருக்கிறது என்கிற விசயத்தையும், புவிச் சூடேற்றம் குறித்து புவிச் சூடேற்றத்தின் தாயாகிய அமெரிக்க முதலாளிகள் 1990களுக்கு பிறகு புலம்பத் தொடங்கியதன் அரசியல்/பொருளாதார வேர்கள் எவை என்பது குறித்தும், தனிமனித தீர்வுகள் முன் வைக்கப்படுவதன் அரசியல் குறித்தும் சுருக்கமான ஒரு கட்டுரை பிரசூரிக்கப்படும்.இயற்கையின் அழிவில் இன்பம் காண்போம் - பாகம் 1

இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம்!

ஆறு, கடல், காடு, மலைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கக் கோரும் உலக முதலாளி வர்க்கத்தின் கரங்களில் வேதப்புத்தகமாகவும் நீதிநூலாகவும் பயன்பட்டு வருகிறது ஒரு கட்டுரை. "பொதுச் சொத்தின் அவலம்" (The Tragedy of the commons) என்ற அந்தக் கட்டுரையை எழுதியவர் காரட் ஹார்டின் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.

1968 டிசம்பரில் 'சயின்ஸ்' என்ற அமெரிக்க இதழில் வெளியான அந்தக் கட்டுரை மாபெரும் அறிவியல் ஆய்வாக முதலாளிவர்க்கத்தால் கொண்டாடப்படுகிறது. இதுவரை 600 பதிப்புகள் வெளியாகியுமிருக்கிறது.


ஹார்டின் முன்வைக்கும் "அறிவியல் பூர்வமான" ஆய்வின் முடிவுகளை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்:


"இந்த உலகின் வளங்கள் வரம்புக்குட்பட்டவை. எனவே அவற்றை நுகரும் மக்கத்தொகையும் வரம்புக்குட்பட்டதாகவே இருக்க முடியும். ஆனால் ஏழைகள்தான் வகைதொகையின்றி பெற்றுத் தள்ளுகிறார்கள். வேண்டுகோள்களால் இதைக் கட்டுப்படுத்த முடியாது. இதற்குரிய "தண்டனை" வழங்கப்பட வேண்டும். பொறுப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகள் பட்டினி கிடந்து சாகவேண்டியுதுதான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.


பொதுச் சொத்து என ஒன்று இருப்பதனால் தான் இப்படி உருவாகும் கூட்டம் அதனை நாசமாக்குகிறது. எனவே பொதுச் சொத்துக்களை, ஆறு, கடல், காடு போன்றன தனியாருக்கு விற்றுவிடலாம் அல்லது அவற்றைப் பயன்படுத்தும் உரிமை குறிப்பிட்ட அளவு சொத்துள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலையை உருவாக்க அவற்றை ஏலம் விடலாம். பொதுச்சொத்தின் அழிவா தனியார்மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்" என்று கூறுகிறார் ஹார்டின்.


கார்ல் மார்க்ஸ் தன்னுடைய மூலதனத்தில் ஏளனம் செய்து ஒதுக்கிய மால்தஸ் பாதிரியின் மக்கள் தொகைக் கோட்பாடுதான் ஹார்டின் முன் வைக்கும் "அறிவியல்" ஆய்வின் வழிகாட்டி எனினும் இதனை "இன்னொரு அமெரிக்கக் குப்பை" என்று நாம் புறந்தள்ளி விடவும் முடியாது. இந்தக் "குப்பை" தான் இன்று உலகவங்கியின் பைபிள். உலக வங்கியின் ஆணைக்கிணங்க மகாராட்டிர அரசு கொண்டு வந்துள்ள "நீர்வள ஒழுங்குமுறைச் சட்டம்" என்பதே "ஹார்டின் சட்டம்" தான்.


"தனது சொத்தாக இல்லாத எதையும் ஒரு மனிதன் பாதுகாக்கமாட்டான். இது மனித இயல்பு எனவே இயற்கை வளங்களைத் தனிச் சொத்தாக்குவது ஒன்றுதான் அவற்றைப் பாதுகாப்பதற்குகந்த அறிவியல் பூர்வமான வழி" என்கிறார்கள் பன்னாட்டு முதலாளிகள்"

"மாநிலத்தின் நீர்வளங்கள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை முதலாளிகள் அதிகாரிகள் வல்லுனர்கள் அடங்கிய மூவர் குழுவிடம் ஒப்படைப்பது ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு பாசன வரி ரூ. 8000. இரண்ரு பிள்ளைகளுக்கு மேல் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 12000" என்ற விதிமுறைகளின் பொருள் வேறேன்ன?


"எனக்குப் பிள்ளையில்லை நிலமும் இல்லை. அரசாங்கம் எனக்கு நிலம் தரப்போகிறதா?" என்று மகாராட்டிர அரசை நோக்கிக் கேள்வி எழுப்பினார் ஒரு விவசாயி. உடைமைகள் ஏதுமற்ற இந்தப் பாமர விவசாயியின் கேள்வி உலக முதலாளி வர்க்கத்தின் நோக்கத்தை அம்பலமாக்குகிறது. நீர்வளத்தைப் பாதுகாப்பதோ இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதோ உலக முதலாளிகளின் நோக்கமல்ல அவற்றைத் தங்களது தனிச் சொத்தாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது வேட்கை.


"உங்களுக்கு வேலை கொடுப்பதற்க்காகத்தான் நான் ஆலை தொடங்குகிறேன்" என்று தொழிலாளியிடம் கூறும் இந்தப் பரோபகாரிகள் "இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு"த்தான் அதனைத் தாங்கள் சொத்தாக மாற்றிக் கொள்ள விரும்புவதாக நம்மிடம் சொல்கிறார்கள்.


"இது பேராசை அல்ல இயற்கையைப் பாதுகாப்பதற்க்கு இதுதான் அறிவியல்பூர்வமான வழி" என்றும் நமக்கு விளக்கமும் சொல்கிறார்கள்.


"தனக்கு சொந்தமில்லாத எதையும் ஒரு மனிதன் பாதுகாக்க மாட்டான் ஏனென்றால் தனிச் சொத்தைச் சேர்ப்பதுதான் மனிதனின் இயல்புணர்ச்சி. எனவே பொதுச் சொத்தான இயற்கையைத் தனிச் சொத்தாக்குவதொன்றுதான் இயற்கையைப் பாதுகாப்பதற்கான வழி" என்பதே முதலாளி வர்க்க அறிவுத்துறையினரும் பன்னாட்டு நிறுவனங்களும் முன் வைக்கும் வாதங்கள்.


சொத்து சேர்ப்பது மனிதனின் இயல்புணர்ச்சி! பொதுச் சொத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு முதலாளித்துவம் முன்வைக்கும் "அறிவியல் பூர்வமான" இந்தக் காரணத்தைத்தன் பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பதற்க்கும் முதாலாளித்துவம் பயன்படுத்தி வருகிறது. கம்யூனிசத்தை எதிர்ப்பதற்குப் பயன்பட்ட இந்தக் காரணம் இன்று தேசியத்தை எதிர்ப்பதற்கும் உலகின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் முதலாளித்துவ சர்வதேசியத்தை நியாயப்படுத்தவும் ஏகாதிபத்தியங்களால் பயன்படுத்தப் படுகிறது.


பொதுச் சொத்தைச் சூறையாடத் தூண்டும் இதே "இயல்புணர்ச்சி"தான் கோடிக்கணக்கான சிறு உடைமையாளர்களின் தனிச் சொத்தைச் சூறையாடுமாறும் பன்னாட்டு முதலாளிகளைத் தூண்டுகிறது.


எனவே, முதலாளித்துவச் சொத்துடைமையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, அதன் சமூக வீரோதத் தன்மையை அம்பலப்படுத்தாத வரை, இயற்கையையே உடைமையாக்கிக் கொள்ள எத்தனிக்கும் இந்த ஏகாதிபத்தியச் சதியை நாம் முறியடிக்கவியலாது.


எனவேதான், தண்ணீர் முதல் கடல், காடு, மலை, உயிரணுக்கள், விதைகள் ஈறான அனைத்தையும் தனியார்மயமாக்கும் ஏகாதிபத்திய வெறித்தனத்தை இன்று கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி கம்யூனிஸ்டு அல்லாத பலரும் எதிர்த்துப் போராடுமாறு தள்ளப்படுகிறார்கள்.


ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற அடிப்படையில் இத்தகைய போராட்டங்கள் வரவேற்க்கப்பட வேண்டியவையெனினும் இவர்கள் முன்வைக்கும் மாற்றுகள் பலவீனமானவை, முரன்பாடானவை. முதலாளித்துவ சொத்துடமையை இவர்கள் ஏற்றுக் கொள்வதால் தற்போதிருக்கும் நிலையை தக்க வைப்பது, சிறு தொழில் மற்றும் சிறு உடைமைகளைப் பாதுகாப்பது, மரபுரிமைகளைக் காப்பது என்ற பல கோணங்களிலேயே இந்த மாற்றுகள் முன்வைக்கப்படுகின்றன.


சூழலியம், புவி ஜனநாயகம், மையப்படுத்துதல் எதிர்ப்பு, மரபுக்குத் திரும்புதல் போன்றவை எவையும் முதலாளித்துவத்தைப் தகர்ப்பது பற்றிப் பேசுவதில்லை. "சொத்து சேர்ப்பது மனிதனின் இயல்பு" என்று கூறும் முதலாளித்துவத்தை இவர்கள் யாரும் சித்தாந்த ரீதியில் கேள்விக்குள்ளாக்குவதில்லை. மாறாக, வெவ்வேறு விகிதங்களில் அந்தக் கருத்துடன் உடன்படுகிறார்கள்.


ஆனால், "சொத்துரிமை மனிதனின் பிரிக்கவொண்ணாத உரிமை" என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டால் சொத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் உரிமை, அதாவது அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் உரிமையும் மேற்படி பிரிக்கவொண்ணாத உரிமையின் அங்கமாகி விடுகிறது.


எனவே, முதலாளித்துவச் சொத்துடமையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, அதன் சமூக விரோதத் தன்மையை அம்பலப்படுத்தாத வரை, இயற்கையையே உடைமையாக்கிக் கொள்ள எத்தனிக்கும் இந்த ஏகாதிபத்தியச் சதியை நாம் முறியடிக்கவியலாது.

*************


அனைவரும் அறிந்த ஒரு உதாரணத்திலிருந்து தொடங்குவோம். நகராட்சிக் குழாயில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறது. குடம் நிறைந்து தண்ணீர் சாலையில் ஓடுகிறது. ஒரு வழிபோக்கர் குழாயை மூடிவிட்டுச் செல்கிறார். அவர் அந்த குழாயின் உரிமையாளர் அல்ல.


விளைந்த பயிரை மாடு மேய்ந்து கொண்டிருக்கிறது. அந்த வழியே செல்லும் விவசாயி அதனை விரட்டிவிட்டுச் செல்கிறார் அவர் அந்த நிலத்தின் உடைமையாளரல்ல.


தண்ணீரின் பயன் மதிப்பையும் தானியத்தின் பயன் மதிப்பையும் அவர்கள் உணர்ந்திருப்பத்ன் வெளிப்பாடுதான் அவர்களது நடவடிக்கைகள். ஒழுகும் குழாயைக் காணும் ஹார்டினும் பதறுகிறார். சுமார் எத்தனை லிட்டர் தண்ணீர் வீணாகியிருக்கும் என்று மதிப்பிட்டு அதனை 12 ரூபாயால் பெருக்கிப் பார்க்கிறார். தண்ணீருக்கு முதலாளித்துவம் நிர்ணயித்திருக்கும் சந்தை மதிப்பின்படி சுமார் 1200 ரூபாய் தண்ணீர் வீணாகியிருக்கிறது. "தனியாமயம்தான் இதற்குத் தீர்வு" என்று உடனே குரல் கொடுக்கிறார்.


மண்ணுக்கும் மனிதனுக்கும், நீர் வளத்துக்கும், மனிதவளத்துக்குமிடையே முதலாளித்துவம் பாராபட்சம் காட்டுவதில்லை. பொரி பொரியாய்த் தெறித்து ஈரப்பசை ஒட்ட மறுக்கும் பாலாற்றின் படுகைக்கும், சொறியும் சிரங்கும் வந்து தோல் வறண்ரு போன அந்தப் பகுதி மக்களின் தோலுக்கும் என்ன வேறுபாடு? ஒரத்தப்பாளையம் கழிவுநீருக்கும் சிறுமி செல்வராணியின் கொப்புளங்களிலிருந்து வழியும் சீழுக்கும் என்ன வேறுபாடு?

வழிப்போக்கனின் பார்வையில் அங்கே வீணாகிக் கொண்டிருந்தது பயன் மதிப்புமிக்க தண்ணீர். எனவேதான் அவர் குழாயை மூடுகிறார். ஹார்டினின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் குழாயை மூடுவதில்லை.


ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரை குடத்தில் நிரம்பியிருக்கும் தண்ணீருக்கும் வழிந்து தெருவில் ஓடும் தண்ணீருக்கும் வேறூபாடு இல்லை. ஏனென்றால் அது விலைமதிப்பு நிர்ணயிக்கப்படாத நகராட்சித் தண்ணீர், இலவசக் குடிநீர். சரக்காக மாற்றப்படும் வாய்ப்பில்லாத தண்ணீர், குடத்தில் நிரம்பினாலும் தெருவில் ஓடினாலும் அது அவர்களைப் பொருத்தவரை வீணானதுதான்.


மனிதன் உள்ளிட்ட இயற்கை அனைத்தையுமே முதலாளித்துவம் பண்டமாகவும், உற்பத்திச் சாதனமாகவுமே பார்க்கிறது. எனவே அத்தகைய பண்டம், தான் மட்டும் நுகரக் கூடியதாகவோ, தான் மட்டுமே சுரண்டக்கூடியதாகவோ, தன்னால் விற்கப்படக் கூடியதாகவோ இல்லாதவரையில் எந்த ஒரு பொருளின் பயன் மதிப்பையும் அது பொருட்படுத்துவதில்லை.

தொடரும்..............

kUijad;

Gjpa fyhr;rhuk;- nrg;lk;gH 2005

********************

புதிய கலாச்சாரம் - செப்டம்பர் 2005 இதழில், மருதையன் எழுதி பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இங்கு இரண்டு பகுதிகளாக பதிக்கப்படும். மேலே காண்பது முதல் பகுதி.

7 பின்னூட்டங்கள்:

said...

'ஒரு விசயத்தைப் பற்றிய விஞ்ஞானப் பூர்வமான புரிதல் இல்லாமல் கற்பிக்கப்பட்ட தீர்வுகளை பிடித்து தொங்கிக் கொண்டு மனத்திருப்தி அடைவது நமது வழமையாகவே இருக்கிறது.'

இது உங்களைப் பற்றியது என்றால்
100% உண்மையான சுய விமர்சனம்.

ஏற்கனவே இட்டதை மறுபடியும்
ஏன் இட வேண்டும்.சுட்டி கொடுத்தால்
போதுமே. புவி சூடேற்றத்திற்கு காரணம் முதலாளித்தும், தீர்வு சோசலிசம் என்ற பழைய பாட்டை ஐயா நீங்கள் அதே டியுனில் எத்தனை முறைதான் பாடுவீர்கள். கொஞ்சம் உருப்படியாக ரீமிக்ஸ் செய்யவாவது முயற்சி செய்யலாமே.

said...

சிறப்பான விளக்க உரைக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள் தோழர்.

said...

தக்க சமயத்தில் செய்யப்பட்ட சரியான மறுபதிப்பு. நன்றி தோழர்.

நந்தன்

said...

புவி வெப்பமடைகிறது - எல்லோரும் ஒரு நாள் பட்டினி கிடப்போம்...!


வெப்பம் வெளிப்படுகிற எல்லா வழிவகைகளையும் கண்டறிந்த அமெரிக்க விஞ்ஞானிகள்... மனிதர்கள் உணவு உட்க்கொள்வதால் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றங்களால் மனித உடல் வெப்பத்தை வெளியேற்றுவதை கண்டறிந்துள்ளனர்.

இதனால் இந்தியா, சீனா மாதிரியான அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் உலகம் சூடாவதை தடுக்க எல்லோரும் ஒரு நாள் பட்டினி இருக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்!

இதன் தொடர்பில் இந்தியாவில் உள்ள NGO - கள் ஒன்றிணைந்து வருகிற மாதம் முதல் தேதி பட்டினி கிடப்பது பற்றிய பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்...


மேலதிக தகவல்கள் விரைவில்....


நன்றி பாரிஅரசு
http://pktpariarasu.blogspot.com/2008/08/blog-post.html

said...

Read this blog

http://sovietbooks.blogspot.com/

said...

முதலில் உன்னால் உருப்படியாக எதையும் சொல்ல முடியவில்லை என்றால் மறு மொழி இடாமல்
இருக்கவும்.
உன்னை போன்றவர்கள் மற்றவர் விமர்சனத்தை கேட்காமல், தன்னை தானே எல்லாம் தெரிந்தவன் என்று நினைத்து
கொண்டு இருக்கிறார்கள்.
சரி, இந்த கட்டுரையின் ஆசிரியர் சொன்னதையே சொல்கிறார் என்றால், புதிதாக நீ ஏதாவது சொல்.
அதை விட்டு விட்டு மறு மொழி இடத்தெரியாத நீ, ஆசிரியரை கட்டுரைக்கான சுட்டி யை கொடுக்க சொல்கிறாய்.
நாகரிகம் தெரியாத கோமாளி.

said...

Dear Comrade,
Good timely article.
My previous reply refers to the Anony's reply.

Related Posts with Thumbnails