TerrorisminFocus

Tuesday, July 29, 2008

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

குண்டு வெடிப்புகளின் அரசியல், இது மிக முக்கியமான சமூக ஆய்வு பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக பார்ப்பன இந்து பயங்கரவாதிகள் சமீப காலங்களில் குண்டு வெடிப்புகளின் ஈடுபட்டு பிடிபட்டுள்ளதும். அவை எல்லாமே இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது பலி போடுவதை நோக்கமாக கொண்டிருந்தன என்கிற அம்சமும், இங்கு முக்கியமாக கவனிக்கத்தக்கது. தற்போதைய பெங்களூர் குண்டு வெடிப்புகளும் கூட இந்த கோணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக பெங்களூர் குண்டு வெடிப்புகள் தொழில் நேர்த்தியில்லாத குழுவால் செய்யப்பட்டுள்ளது என்பதும், உள்ளூர் குழுக்கள் செய்துள்ளன என்ற போலீசின் சந்தேகமும் இங்கு கவனிக்கத்தக்கது. இவை நடந்துள்ள மாநிலங்களும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் பார்ப்பன ஊடகங்கள் காட்டிய அவசரமும்(குறிப்பாக டைம்ஸ் ஆப்பு(ஆப்பு இந்தியாவுக்கு) இந்தியா பத்திரிகை) சந்தேகத்தை வரவழைக்கிறது. பெங்களூர் குண்டு வெடிப்புக்கு காரணம் என்று முதல் பக்கத்தில் சில சந்தேகங்களை எழுப்பியிருந்தது டைம்ஸ் ஆப்பு இந்தியா. அதில் அங்கு சமீபத்தில் நடந்த மசூதியில் பன்றி மாமிசம் வீசப்பட்ட சம்பவத்திற்கு பலி வாங்குவதாக இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று பொறி பற்ற வைக்கப்பட்டிருந்தது. விசாரணை ஆரம்பிக்கக் கூட இல்லை, ஆனால் தீர்ப்புக்கான நகல் எழுதப்பட்டுவிட்டது. வெடித்த குண்டுகள் IED வகை Crude வெடி குண்டுகள். இதே வடிவத்திலான குண்டு வெடிப்புகள்தான் மாலேகான் மசூதி குண்டு வெடிப்பு உள்ளிட்ட சமீபத்திய சில மசூதி குண்டு வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பஜ்ரங் தள் பார்ப்பன பயங்கரவாதிகள் கடந்த சில வருடங்களில் கைது செய்யப்பட்டுள்ள குண்டு வெடிப்புகள் இதே வகையைச் சேர்ந்தவை என்பதும் கவனிக்கத்தக்கது.
பெங்களூரில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் எல்லாமே மக்கள் அதிகம் கூடும் இடத்தில், மக்கள் வராத பகுதியாக வைக்கப்பட்டிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. சமீபத்திய காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தோல்வியடைந்துள்ளதும், அதன் உறுப்பினர்கள் மாற்றி வோட்டு போட்டிருந்ததும், இவை பாஜகவின் இமேஜை பெரிய அளவில் டேமேஜ் செய்துள்ளதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. மன்மோகனை ஆட்சிக் கட்டிலில் உறுதிப்படுத்த அமெரிக்க ஆளும் கும்பல் இங்கு பஞ்சாயத்து செய்திருக்கலாம் என்பதும், பாஜகாவின் உடன்பாடு அதில் கோரப்பட்டிருக்கலாம் என்பதும் ஒரு அம்சமாக இருந்த போதும், பாஜகாவின் இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது நிதர்சன உண்மை. ஆகவே, மீண்டும் தேச வெறி பிரச்சாரம் செய்ய வேண்டிய நிர்பந்தம் அந்த கட்சிக்கு ஏற்ப்பட்டுள்ளது. இந்த விசயத்தை குண்டு வெடிப்புகளின் அரசியல் குறித்த மிகப் பெரிய உண்மை ஒன்றுடன் ஒப்பிட வேண்டியுள்ளது. குண்டு வெடிப்புகளின் அரசியலால் ஆதாயம் அடைவது என்றைக்குமே ஆளும் ஒடுக்குமுறை கும்பல்தான். இந்தியாவில் அது பாஜகாதான். குஜராத்திலும் கூட தொடர்ந்து பயங்கரவாத பீதியை உற்பத்தி செய்வதற்க்கு மோடி செய்த நாடகங்கள் வெட்ட வெளிச்சமானதை இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

நிற்க, இவையெல்லாம் ஒரு சம்பவம், அதன் அரசியல் குறித்த உண்மையின் பல்வேறு கோணங்களை, உறவுகளை பார்க்க உதவுவததற்க்காக இங்கு சொல்லப்பட்டுள்ளவைதானேயன்றி எதுவும் அறுதியிட்டுக் கூறப்படவில்லை. அப்படி அறுதியிட்டு கூறுவதற்க்கு அத்வானி, மோடி போன்ற அணைத்தும் தெரிந்தவர்கள் அல்ல கம்யூனிஸ்டுகள். அத்வானி, மோடி கும்பலிடம் இருப்பது போல அதி உன்னத ஜோசிய கும்பல் எதுவும் கம்யுனிஸ்டுகளிடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கு கீழே குண்டு வெடிப்புகளின் அரசியல் குறித்த ஒரு விரிவான கட்டுரை வினவு தளத்திலிருந்து மறு பிரசூரம் செய்யப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புகள் யார் செய்தனர் என்ற ஆய்வு செய்வதை விட அதன் பாரிய வெகு மக்கள் விரோத அரசியலையும், அது யாருக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறது என்கிற அம்சத்தையுமே பிரதானமாக விவரித்து இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. படித்து பாருங்கள்.
__________________________________________________________

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!
vinavu எழுதியது

மாநிலத் தலைநகரங்களில், மாநகரங்களில், மக்கள் கூடுமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. குண்டுகள் எங்கு, எப்போது வெடிக்கும் என்பதை முன்னறிவிக்காது என்றாலும் வெடித்த பிறகு என்ன நடக்குமென்பதைத் தெரிவிக்கின்றன. உற்றாரைப் பலிகொடுத்த உறவினரின் சோகம் பத்திரிகைகளில் படிமங்களாக, குண்டுவெடித்த இடங்களை வழக்கமாக பார்வையிடச் செல்லும் அரசியல் தலைவர்களின் பயணமாக, வெடித்த இடத்தில் பதட்டமாக இருக்கும் வாழ்க்கை வெடிக்காத இடங்களில் சகஜமாக, அடுத்த பரபரப்புச் செய்திகள் வரும்வரை குண்டு வெடிப்பை தொலைக்காட்சிப் பெட்டிகளில் மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் அலைவரிசைகள், விளம்பர இடைவெளிகளில் மகிழ்ச்சியாக, மொத்தத்தில் நாடு வழமையாகவே இயங்குகிறது. முன்புபோல நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வலிமையினை இப்போது அடிக்கடி வெடிக்கும் குண்டுகள் இழந்துவிட்டன. பொழுதுபோக்குகளில் மையம் கொள்ளும் இன்றைய நுகர்வுக் கலாச்சார வாழ்க்கை சமூக நிகழ்வுகளை ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பதற்குத் திறமையாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. குண்டுகள் வெடிப்பதற்குப் பிந்தைய விளைவுகளின்பால் அனுதாபமோ, வெடிப்பதற்கு முந்தைய அரசியலின்பால் கவனமோ அற்றுப்போய்விட்டதனால் இப்போது குண்டுகள் மலிவாக வெடிக்கின்றன. எனினும் குண்டுகள் வெடிப்பதற்குக் காரணம்தான் என்ன?
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் அனாதைப் பிணங்களை சடங்குக்காக அறுத்து நீதிமன்றத்திற்காகப் பதிவு செய்து யாரும் கோருபவர் இல்லாமல் எரிக்கப்படுவது போல குண்டு வெடிப்பின் அலசல்கள் அரசியல் அரங்கிலும், ஊடகவெளியிலும் உயிரின்றி பேசப்படுகின்றன. அண்ணாசாலையில் தொழிலாளி ஊர்வலம் சென்றால் அதைப் போக்குவரத்திற்கு இடையூறு என்று இந்து பேப்பருக்கு வாசகர் கடிதம் எழுதும் நடுத்தரவர்க்க அறிவாளிகள் போல குண்டுவெடிப்பைத் தடுப்பதற்கு பலரும் ஆலோசனைகளை இலவசமாக வழங்குகின்றனர். போலீசின் அலட்சியம், உளவுத்துறையின் குறைபாடு, பலவீனமான மத்திய அரசு, குண்டு வைப்பவர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கை எடுக்காதது, பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் சதிகளை முறியடிக்காதது என்று நீளும் இந்தப்பட்டியல் ஆத்திச்சூடி அறஞ்செய விரும்பு போல மக்களிடம் மனப்பாடமாய் இறக்கப்பட்டிருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தையை தூக்கத்தில் எழுப்பி தீவிரவாதத்திற்கு எதிராக என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் கூட அழகாய் ஒப்புவிக்கும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் குண்டு வெடிப்பு நிகழ்கிறுது என்றாலும் இது தேசத்திற்கெதிரான போர் என்று முழங்கும் அத்வானி பொடா போன்ற கடுமையான சட்டங்களை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்கிறார். புரட்சித் தலைவியும் அதனை வழிமொழிகிறார். ஈழத்தமிழர்களை ஆயுள்தண்டனை கைதிகளாக முகாம்களில் அடைத்து கண்காணிப்பது போல வங்கதேச அகதிகளை கண்காணிக்கவேண்டும் என்று தலையங்கம் எழுதுகிறது தினமணி. நாடாளுமன்றத் தாக்குதலுக்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி அப்சல்குருவை இன்னும் தூக்கில் போடாதது தீவிரவாதிகளுக்கு குளிர் விடச்செய்திருக்கிறது என்கிறார் ஒரு தலைவர். உதட்டளவிலோ, அரசியல் ஆதாயத்திற்காகவோ, உள்ளத்தில் இருக்கும் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பினாலோ பேசப்படும் இந்த போதனைகளால் குண்டுகள் அழிந்துவிடுமா?
குண்டுகள் இந்த வெற்றுப்பேச்சினை சட்டை செய்வதில்லை. ஓரிடத்தில் குண்டுவெடிப்பது ஏதோ தீபாவளி பட்டாசு வெடிப்பது போல, ஹாலிவுட் படத்தில் நிகழ்வது போல அவ்வளவு சுலபமில்லை. அதிரடிக்காட்சிகளை நொறுக்குத்தீனியாக மனதில் பதியவைத்திருக்கும் திரைப்பட-தொலைக்காட்சி உணர்ச்சி, உண்மைக்கும் கற்பனைக்குமான வேறுபாட்டை, நிஜத்தின் வலியை உணர்த்துவதில்லை. உண்மையில் குண்டு வைப்பதற்கு இரும்பு மனம் கொண்ட நபர்கள், அதுவும் உயிரைப் பணயம் வைக்கும் துணிச்சலுடன், பிடிபட்டால் போலீசின் சித்திரவதைக்கும், நீதிமன்றத்தின் மரணதண்டனைக்கும் பயப்படாத நெஞ்சுரத்துடன் வேண்டும். இந்த மன உறுதியை வைத்து இவர்கள் வாழ்க்கை முழுவதும் கொள்கைக்காக களமிறங்குபவர்கள் என்று பொருளல்ல. இது குறிப்பிட்ட சமூகக் காரணத்தால் கணநேரத்தில் வந்துபோகும் சாகச உணர்வு. குறிப்பிட்ட நடவடிக்கையின் காலம் வரைக்கும் மனதில் இருக்கும் தற்கால உறுதியால் நினைத்ததை முடிக்கும் வல்லமையினை இவர்கள் பெறுகிறார்கள். அதே சமயம் இவற்றை தனிநபராக இருந்து மட்டும் செய்ய முடியாது. இரகசியமாய் பணம் திரட்டுவது, பொருட்களை சேகரிப்பது, தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வது, ஆயுதங்களை சோதித்தறிவது, இரகசிய இடங்களை உருவாக்குவது, எல்லாவற்றுக்கும் உதவி செய்யும் ஆதரவாளர்களை அணிசேர்ப்பது வரை பல தயாரிப்புகள் வேண்டும். இலட்சியத்தின்பால் இருக்கும் உறுதியுடன் கூடவே அப்பாவி மக்களை கொல்லுவது குறித்த இரக்கமின்மையும் கணிசமாக வேண்டும். ஆனாலும் சங்கபரிவாரங்களால் அடுத்த பிரதமராக முன்னிறுத்தப்படும் அத்வானி இரும்புக் கரம் கொண்டு குண்டுகளை அடக்கமுடியுமென வன்மையாக எடுத்துரைக்கிறார். அதன்படி குண்டுகளை அடக்க முடியுமா?அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே பொடா சட்டமும், அதில் அப்பாவி முசுலீம்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்படுவதும், வங்கதேச ஏழை அகதிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விரட்டப்படுதும், இசுலாமிய அமைப்புகள் பல தடைசெய்யப்பட்டதும் என ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் எத்தனையோ செய்து பார்த்தும் குண்டுகள் மறையவில்லையே! சொல்லப்போனால் இந்த இரும்புக்கர நடவடிக்கைகள் குண்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. எனில் இந்த சட்டதிட்டங்களை தகர்த்தெறியும் வலிமையினை குண்டுகள் எங்கிருந்து பெற்றன?
குண்டுகள் அந்த வலிமையினை வரலாற்றின் அநீதியிலிருந்து பெற்றுக்கொண்டன. குண்டுகளினுள் பொதியப்பட்டிருக்கும் வேதிப்பொருட்களின் வீரியத்தினைவிட சமகால வரலாற்றின் வீரியம் அதிகமானது. குண்டுகள் தன்னளவில் இயல்பாக வெடித்துவிடுவதில்லை. கூர்ந்து நோக்கினால் அவை வரலாற்றின் விளைபொருட்கள்! 1992 பம்பாய் கலவரத்திற்கு பிந்தையதுதான் 1993 பம்பாய் குண்டுவெடிப்பு! 2002 குஜராத் கலவரத்திற்கு பிந்தையதுதான் 2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு! 1996 கோவை கலவரத்திற்கு பிந்தையதுதான் 1999 கோவை குண்டுவெடிப்பு! இந்த சங்கிலித் தொடர் நிகழ்வின் தீர்மானிக்கும் கண்ணியாக கலவரங்கள் இருக்கின்றது. இருதரப்பார் அடித்துக்கொள்வதுதான் கலவரம் என்பதன் இலக்கணமாக இருக்கும்போது அவற்றைக் கலவரங்கள் என அழைப்பது பொருத்தமற்றது. சரியாகச் சொல்வதானால் அவை இந்துமதவெறியர்களால் தொடுக்கப்பட்ட போர்! இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை! இவற்றின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டால் குண்டுகளின் தோற்றுவாயை அறிந்து கொள்ள இயலுமா?
நிச்சயம் முடியும். 91 ஆம் ஆண்டு குஜராத்தின் சோமநாத்தில் ஆரம்பித்த அத்வானியின் இரத யாத்திரை வட இந்தியா முழுவதும் இசுலாமிய மக்களை காவு வாங்கியபடிதான் இரத்த யாத்திரையாக சென்றது. அதன் உச்சம் பம்பாய் கலவரமாக வெடித்தது. சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே தனது சாம்னா பத்திரிகையின் மூலம் இசுலாமிய மக்களை அடித்து விரட்டுமாறு கட்சிக் குண்டர்களுக்கு ஆணையிட்டார். போலீசு உதவியுடன் இசுலாமிய குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டன. இந்த உண்மைகளை எடுத்துக்கூறி குற்றவாளிகளை அடையாளம் காட்டிய ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை இன்றைக்கு குப்பைத்தொட்டியி்ல் தூங்குகிறது. ஒரு வேளை நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களைக் கொன்ற சிவசேனா வெறியர்களை தண்டித்திருந்தால் பின்னர் பம்பாயில் குண்டுகள் வெடிக்காமலே போயிருக்கலாம். ஆனால் ஒருவேளை என்ற சொல்லை வரலாற்றை பரீசீலிப்பதற்கு பயன்படுத்தலாமே ஒழிய வரலாற்றை மாற்றிப்போட்டு கற்பனை செய்வதற்கு இடம் கிடையாது. இன்று பம்பாய் குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். அவர்களில் பல அப்பாவிகள் நிரபராதியாக பல வருடங்களாக சிறையில் கழித்தார்கள். எனினும் பம்பாய் கலவரக் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பதோடு வழக்கே நடைபெறவில்லை. கலவரங்களுக்கு சலுகை! குண்டுகளுக்கு தண்டனை! எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?
2002 குஜராத்தில் நடந்த இனக்கலவரம் நாடே அறியும். 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். நரோடா பாட்டியாவின் சவக்கிடங்கு, கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து தாயும், சேயும் கறுவறுக்கப்பட்ட காட்சி, பெஸ்ட் பேக்கரியின் 17பேரை உயிரோடு எரித்த சம்பவம், இரத்தக் கவிச்சி அடிக்கும் வெறியுடன் இந்து மதவெறியர்கள் சம்பவங்களை குதூகலத்துடன் தெகல்காவின் கேமராவில் வருணித்த ஆதாரம், முடிவில்லா குஜராத்தின் இனப்படுகொலைப் படிமங்கள் உணர்ச்சியுள்ள எவருக்கும் நெஞ்சை விட்டு அகன்றிருக்காது. ஆனால் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்காக, செய்யாத குற்றத்திற்காக பல அப்பாவி முசுலீம்கள் சிறையில் வாடும்போது இனப்படுகொலை செய்த இந்து மதவெறிக் குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். குண்டுகள் செய்யும் இரகசிய ஏற்பாடுகளெல்லாம் இந்து மதவெறியர்களுக்கு தேவையில்லை. குஜராத்தில் அவர்கள் நடத்திய நரவேட்டைக்கான துப்பாக்கிகள், குண்டுகள், ஆயுதங்கள், எல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து வண்டி வண்டியாக இறங்கின. குண்டுகளின் ஏற்பாடுகளை சதிகள் எனப்பார்க்கும் பொதுப்புத்தி இந்துமதவெறியர்களின் ஏற்பாடுகளை கலவரங்களில் நடக்கும் வழக்கமான ஒன்றாகப் பார்க்கின்றது. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?
கோவையில் காவலர் செல்வராசு கொலைசெய்யப்பட்டதை அடுத்து நடந்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்ட முசுலீம் மக்கள் கொலைசெய்யப்பட்டு பல கோடி மதிப்பிலான இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கோவை சங்கபரிவார ரவுடிகளை கைது செய்து தண்டிக்க முடியாத இந்த சமூக அமைப்பு கோவை குண்டுவெடிப்பின் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து தண்டித்திருக்கிறது. அதிலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பல வருடங்களை சிறையில் கழித்து விட்டு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். குற்றமின்றி தண்டனையை மட்டும் அனுபவித்துவிட்டு மனைவியையும், குழந்தைகளையும் நிர்க்கதியில் தவிக்கவிட்டு வாழ்வைத் தொலைத்திருக்கும் இந்த சாதரண மனிதர்களுக்கு இந்த சமூக அமைப்பின் மேல் எத்தனை பெரிய கோபம் இருக்கும்? இவர்கள் எவரும் படித்து வசதியாக வாழும் நடுத்தரவர்க்கத்தினரோ, இசுலாமிய மதத்தின் பால் ஆழ்ந்தபிடிப்போ, வெறியோ, இந்துக்களின் மீது விரோதமோ கொண்டவர்கள் அல்லர். இவர்களின் நெஞ்சில் வஞ்சினத்தை ஏற்றுவதற்கு ஐ.எஸ்.ஐ தேவையில்லை. அது உண்மையுமில்லை. இரக்கமற்று தனிமைப்படுத்தும் சமூகத்தின் காரணத்தால் இந்த இளைஞர்களின் அவலம் குண்டுகளாக பரிமாணம் கொள்கின்றன. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?
இந்து மதவெறியர்கள் இந்தியாவில் நடத்தியிருக்கும் கலவரங்களில் பதிவு செய்திருக்கும் கொலைக்கணக்கும், பொருள் இழப்பும் அளவில் குண்டுகளை விட பலநூறு மடங்கு அதிகம்தான். ஆனால் அவை பொதுவில் தீவிரவாதிகள் செய்த குற்றமென்று மதிப்பிடப்படுவதில்லை. பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு சிறு கும்பலான சங்கபரிவாரம் செய்யும் அநீதிக்கான அங்கீகாரம் பெரும்பான்மையின் மவுனத்தில் இருக்கிறது. குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் எல்லா இந்துக்களும் பங்கேற்கவில்லை என்றாலும் நேரடி மவுன சாட்சியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த மவுனம் அநீதியை மறுக்கவில்லை. அதுவே அநீதியின் அங்கமாக மாறிவிடுகிறது. இதன் விளைவால் உண்மையான தீவிரவாதிகளான இந்துமதவெறியர்கள் பொது அங்கீகாரத்துடன் எல்லாக் கட்சிகளைப்போல ஒரு கட்சியாக இயங்குகிறார்கள். சமூகநீதி, திராவிடம் பேசும் எல்லா கட்சிகளும் இந்து மதவெறியர்களுடன் தேர்தல் கூட்டணி வைப்பது முதல் அரசில் பங்கேற்பது வரை முரணின்றி செய்கின்றன. இந்தியாவின் பொதுவாழ்வில் இந்து மதவெறியர்கள் அதிகாரத்துடன் ஆணவமாக நடந்து கொள்வதற்கு இத்தனை சலுகைகள் இருக்கும்போது குண்டுகளுக்கான முயற்சிகள் எங்கோ இரகசியமாக நடந்து கொண்டுதானே இருக்கும்?
குண்டுகள் உருவாதற்கான நிலைமைகளை உருவாக்கிவிட்டு குண்டுகள் மட்டும் வேண்டாம் என்று நினைப்பதி்ல் பயனொன்றும் இல்லை. இந்திய அரசியல் அரங்கில் இந்துமதவெறிச் சக்திகள் கறுவருக்கப்படாதவரை குண்டுகளையும் கருவறுக்க முடியாது. மதசார்பாற்ற அரசியல் அதன் உண்மையான பொருளில் அமலுக்கு வராதவரை குண்டுகள் வந்து கொண்டே இருக்கும். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் போராட்டத்தில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வெல்லும்வரை குண்டுகள் தோல்வி அடையப்போவதில்லை. ஆகையால் குண்டுகளை நாம் நியாயப்படுத்துகிறோமா?
குண்டுகள் வெடிப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி. அதாவது இந்துமதவெறியர்களின் கோரப்பிடியிலிருந்து இசுலாமிய மக்களை பாதுகாப்பதில் குண்டுகள் தோல்வியடைவதோடு உண்மையில் பாதுகாப்பின்மையைத்தான் அதிகப்படுத்தியிருக்கின்றன. குண்டுகளின் முக்கியமான விளைவுகளே இந்துமதவெறியை வலுப்படுத்துவதும், இசுலாமிய மக்களை தனிமைப்படுத்துவதும்தான். தற்போதைய குண்டுவெடிப்புகளில் கூட இந்துமதவெறியர்கள் எவரும் சாகவில்லை என்பதோடு அப்பாவி உழைக்கும் மக்கள்தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். எதிர்கால குண்டுவெடிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மாநகரங்களில் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கும், கோவில்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் அரசு உழைக்கும் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை. இப்படி குண்டுகள் வெடித்தால் நிச்சயமாக கொல்லப்பட இருக்கின்ற உழைக்கும் மக்கள்தான் உண்மையில் பார்ப்பன இந்துமதவெறியால் ஏற்கனவே அடிமைகளாக நடத்தப்படுவர்களாகவும், வர்க்க ரீதியில் இந்துமதவெறியர்களை வீழ்த்துவதற்கான சக்தியாகவும் இருக்கின்றனர். குண்டுகள் இந்த மக்களைத்தான் இந்துமதவெறியர்களின் கைகளில் எளிதாக மாற்றித் தருகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் வாழ்க்கைப் போராட்டத்தால் கவலையில் உழன்று கொண்டிருக்கும் அப்பாவி மக்களை இரக்கமின்றி கொல்லும் குண்டுகளில் பாசிச மனமும் கலந்திருக்கிறது. மறுபுறம் தமது எதிர்வரிசையில் எல்லாப் பிரிவு மக்களையும் ஒன்று சேர்க்கும் வேலையையும் குண்டுகள் அடி முட்டாள்தனமாக செய்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க குண்டுகளால் இசுலாமிய மக்களுக்கு என்ன பாதிப்பு?
ஒவ்வொரு குண்டுவெடிப்பின்போதும் எண்ணிறந்த பாதிப்புகளை இசுலாமிய மக்கள்தான் எதிர்கொள்கின்றனர். குண்டுகளின் அரசியலுக்கு கடுகளவும் தொடர்பில்லாத அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் இருப்பதும், இசுலாமிய மக்கள் அனைவரையும் பொதுச்சமூகம் தீவிரவாதிகளாக பார்ப்பதும், இதன் தொடர் விளைவாக இசுலாமிய மக்களுக்கு வீடு வாடகைக்கு இல்லை, கல்வி இல்லை, வேலை இல்லை மொத்தத்தில் மதிப்பு இல்லை என்ற நிலைமை உருவாக்கப்படுகிறது. இதையே இந்துமதவெறியர்கள் பிரச்சாரத்தின் மூலம் செய்வதை குண்டுகள் தமது வெடிப்பின் மூலம் செய்கின்றன. யாரை எதிர்த்து உருவனதோ அவர்களுடன் எதிர்மறையில் ஒன்றுபடுவதுதான் குண்டுகளின் தர்க்கரீதியான முடிவு. வெடிமருந்தின் மேல் அசாத்திய நம்பிக்கை வைத்திருக்கும் குண்டுகள் வெகுஜன அரசியல் நடவடிக்களுக்காக பொறுமையுடன் ஈடுபடுவதில்லை. பொறுமையிழந்து அவசர அவசரமாக வெடிக்கும் குண்டுகள் நீண்டகால நோக்கில் இசுலாமிய மக்களைத்தான் காவு கேட்கின்றன. குண்டுகளுக்கும் இசுலாமிய மதத்திற்கும் என்ன தொடர்பு?
குண்டுகளின் தோற்றுவாயை சமூக நிலைமைகளே தோற்றுவிக்கின்றன என்ற போதிலும் குண்டுவைப்பவர்களின் மன உறுதிக்கு இசுலமிய மதப்பற்றும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குண்டுகள் தாம் இசுலாமிய மதத்தைப் பாதுகாக்கும் புனிதப்போரில் ஈடுபட்டிருப்பதாக நம்புகின்றன. இதை பல இசுலாமிய சமுதாயப் பெரியோர்களும், மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் குண்டுகள் தாம்தான் உண்மையான இசுலாமியர்கள் என்று கற்பித்துக் கொள்கின்றன. ஆனால் உலக வரலாறு நெடுகிலும் இந்தக் கற்பிதம் பொய்யென்றே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இசுலாமிய மதம் ஒரு தீர்வாக அமைய முடியாது. கூடவே உலகில் இசுலாமிய மதத்தை உண்மையாக பின்பற்றும் நாடு எதுவும் கிடையாது, அப்படி இருக்கவும் முடியாது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை. இசுலாமிய நாடாக அறிவித்துக்கொண்ட பாக்கிஸ்தானில் சன்னி, ஷியா பிரிவுகளிடையே மசூதியில் குண்டு வைத்துக் கொல்லும் அளவுக்கு பிளவு இருப்பதும், ஷரியத்தின் சட்டதிட்டங்களை கறாராக பின்பற்றும் வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் விசுவாசிகளாக இருப்பதும், ஏழை இசுலாமிய மக்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்த பணஉதவி செய்யும் அரபு ஷேக்குகள் தனிப்பட்ட வாழ்வில் களிவெறியாட்ட பொறுக்கிகளாக இருப்பதும் இந்த உண்மைகளை எடுத்தியம்பும். ஆனால் குண்டுகள் இந்த யதார்த்த்த்தை மறுப்பதுடன் கற்பனையான மத உலகை சித்தரித்துக்கொண்டு வாழ முயல்கின்றன. எனில் குண்டுகளின் எதிர்காலம் என்ன?
எதிர்காலம் இந்துமதவெறியர்களின் எதிர்காலத்தைப் பொறுத்தது. சங்க பரிவாரங்கள் இருக்கும் வரையிலும் இந்துத்வா திட்டமும், முசுலீம் மக்களின் மீதான துவேசமும், கலவரங்களும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தபடியே இருக்கும். இந்த நிகழ்ச்சிநிரலை மாற்றாதவரை, வரலாறு திருத்த்தப்படாதவரை குண்டுகளையும் இரத்து செய்ய முடியாது.ஆகவே நம்முன் இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று அடுத்த குண்டு எங்கு எப்போது வெடிக்கும் என்று திகிலுடன் வாழ்வது. அல்லது குண்டுகளைத் தோற்றுவிக்கும் சங்கபரிவார கும்பலை வீழ்த்துவது. இதைத்தாண்டி குண்டுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை.

நன்றி வினவு

Related Articles:

கோவை குண்டு வெடிப்பு சதி ஒரு பொய்யான நாடகம் - இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி!!!

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

"கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்:நவீன மனுநீதி!"

"கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை"

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!

9 பின்னூட்டங்கள்:

said...

RSS இல்லாத பல நாடுகளில் ஏன்
இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டு
வைக்கின்றனர்.லண்டனில் ஏன்
குண்டு வைத்தார்கள்.
இங்கிலாந்தில் விமான நிலையத்தை தகர்க்க வெடிபொருட்களுடன் காரில் சென்றவர்கள் எந்த மத தீவிரவாதிகள்.
முஸ்லீம் தீவிரவாதம் உலகளாவிய
சவாலாக உள்ளது. அதன் உள்ளூர்
ஆதரவாளர்கள் செய்கின்றவற்றை
முறியடிக்க ஒரே வழி அவர்களின்
ஆதரவு சக்திகளை ஒழிப்பதுதான்.
அதற்கு பாகிஸ்தான் உடந்தையென்றால் பாகிஸ்தானுக்கு
தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.
வங்க தேச அகதிகளை திருப்பி
அனுப்ப வேண்டும்.ஈழ அகதிகள்
நிலை வேறு.இந்தியாவில் திருட்டுத்தனமாக புகுந்து வங்க
தேச அகதி என்று இருப்பவர்களை
முற்றிலுமாக வெளியேற்ற வேண்டும்.

அதை விடுத்து RSS, பாஜக என்று
குற்றம் சாட்டும் இடதுசாரிகள் உண்மையை திசை திருப்ப முயலும் தேசத் துரோகிகள்.

said...

இந்து-முஸ்லீம் கலவரம்,மோதல்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும்
இருந்தது.1947க்குப் பின்னும்
தொடர்ந்தது.பாஜக 1980களில்தான்
அத்வானியின் ரதயாத்திரையை
நடத்தியது.ஆனால் 1960,70களிலும் குஜராத், உ.பி உட்பட பல மாநிலங்களில் மிக மோசமான கலவரங்கள் நடந்துள்ளன.நாடு பிரிவினையான போதும் வகுப்புக் கலவரம் பல பகுதிகளில் நடந்தது.
அப்போது ஜனசங் என்ற கட்சி உருவாகவே இல்லை.

எனவே ஏதோ பாஜக அல்லது
ஆர் எஸ் எஸ் தான் மூல காரணம் என்பது பச்சைப் புளுகு.இங்கே, அதாவது ஐரோப்பாவிலும்
இஸ்லாமியர்தான் தீவிரவாத ஆதரவாளர்களாக உள்ளனர்.
இந்துக்கள் அல்ல. முஸ்லீம்கள் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் இதற்கு விடிவில்லை.மதவாத நோய்
இந்துக்களை விட அவர்களையே
அதிகம் பீடித்துள்ளது.எனவே
உங்கள் அறிவுரையை அவர்களிடம் முதலில் சொல்லுங்கள். அப்புறம்
இந்துக்களுக்கு சொல்லுங்கள்.

said...

தம்பி அனானி,

முதல்ல பாஜக பிரிட்டிஸ்க்கார்ன காலத்துல இல்லேனு சொல்ற. அப்புறமா அது மூலமா வந்த கன்கூலுசன RSSக்கு அப்ளை செய்யிற... நீங்க சிந்திக்கிறா முறையே கொஞ்சம் காமெடியாத்தான் இருக்கு.

RSS ன் மூதாதையர் சித்பவன் பார்ப்பனர் அவர்கள் பிரிட்டிசாரை நக்கிப் பிழைத்தவர்கள். RSSன் அமைப்பு வடிவத்தின் மூதாதை ஆனந்த மடம் நாவல். பார்ப்ப்ன பய்ங்கரவாதாம் ஒரு அமைப்பாக இந்திய சுதந்திர போராட்ட காலத்தின் நவீன காலத்திற்கு முன்பே வந்துவிட்டது.

இஸ்லாம் பயஙகரவாதத்தை இங்கு நாம் மறுப்பதாக அனானியே கற்பனை செய்து கொள்கிறார். அப்படியெதுவும் இங்கு சொல்லப்படவில்லை. மாறாக, இஸ்லாம் பயங்கரவாதியும், பார்ப்ப்ன பயங்கரவாதியும் ஒருவனுக்கொருவன் பிசினஸ் பார்டனர்கள் என்பதே எனது கருத்து. இங்கு வைக்கப்பட்டுள்ள தர்க்கங்களை மறுக்க இயலுமா என்று யோசியுங்கள். இஸ்லாம் பயங்கரவாத்த்தின் சர்வதேச தன்மை, இன்றைய காலகட்டத்தில் அதன் நோக்கங்கள், சர்வதேச அளவில் இஸ்லாமிய பயங்கரவாதம் மட்டுமல்ல, கிருத்துவ பயங்கரவாதம் முதல் பல்வேறு பயங்கரவாத, பிராந்திய, இன, மத வெறிகளுக்கு ஏகாதிபத்திய பொருளாதார-அரசியல் ஒடுக்குமுறை முக்கிய ஆதாரமாக இருப்பதை மறுந்துவிடக் கூடாது. இஸ்லாமிய பயங்கரவாதம் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த துவங்கியது என்பது பார்ப்பன் பயஙக்ராவதிகளின் அயோக்கியத்தனங்களுக்கு பிறகுதான்(பாபர் மசுதி). இதனை அனானியே தனது பின்னூட்டத்தில் ஒத்துக் கொண்டுள்ளார். 1990 பாபர் மசுதிக்கு முன்பு அனானியால காட்ட முடிந்த எல்லாம் கலவரங்கள்தான். இப்பொழுது நடப்பது போலான பயங்கரவாத குண்டு வெடிப்புகளை அல்ல. கலவரம் என்பது இரண்டு தரப்பு செய்வதுதான். அதிலும் கூட RSS கும்பலே கள வேலை செய்துள்ளது பல முறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆம் இஸ்லாமிய பயங்கரவாதியின் மதவாத நோய் அடித்து நொறுக்கப் பட வேண்டியதுதான். அதற்க்கு இணையாகவே அதைவிட வீரியமாக பார்ப்பன சனதான மக்க்ள்விரோத வெறி நோயை அடித்து விரட்ட வேண்டியுள்ளது. ஏனேனில் பார்ப்பனிய -இந்து சனதானம் மதமல்ல். அது ஒரு அடக்குமூறை மக்கள் விரோத வாழ்க்கை தத்துவம்.

RSS ஆதிக்கம் பெறாத இந்தியாவில் ஏன் இஸ்லாம் பயங்க்ரவாதம் இருந்ததில்லை? RSS வளர்வதற்க்கு இணையாகத்தன் இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாம் அடிப்படைவாதமும் ஏன் வளர்கிறது?

இந்த கேள்விக்கு அனானி பதில் சொல்லட்டும்.


அப்புறம் இங்கு குண்டு வைக்கும் போது செத்து போனதாகவும், பிடிப்பட்டதாகவும் முன் வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களில் உள்ளவர்கள் சங் பரிவார கும்ப்லை சேர்ந்தவர்களா அல்லது சங்பரிவார கும்பல் போல மாறு வேசம் போட்டவ்ர்களா?

அசுரன்

said...

anony hasnt know the mindset of terrerism. He knew only the mainstrem media's political view. They are support the Hindutva. Because they need peaceful society,..ie, without question like domestic animals.Here peace is not for people.

He didnt know about democracy also. Bcase He will ready to attack on a mass for against a individual in that group.

said...

தோழர்,

இன்று சூரத்தில் 12 இடங்களில் குண்டுகள் 'கண்டுபிடிக்க'ப்பட்டுள்ளது..

சமீபகால சம்பவங்கள் குறித்து எனக்கும் சில கேள்விகள் இருக்கிறது.. அது சுருக்கமாக இங்கே

சமீபமாக நடந்த ஜெய்பூர், பெங்களூர், அகமதாபாத் சம்பவங்களை எடுத்துக் கொள்வோம்

* மூன்றும் பி.ஜே.பி ஆளும் மாநிலங்கள்

* சாதாரணமாக சோனியா காந்தியை பற்றி ஆர்குட்டில் எழுதினாலே ஐ.பி விபரங்களை வைத்துக் கொண்டு சரியாக வீட்டுக் கதவைத் தட்டும் அளவிற்கு துப்பறியும் திறமை கொண்ட போலீசு, ஜெய்பூர் சம்பவத்திற்குப் பின் அச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று( சைக்கிலின் சீரியல் நெம்பரோடு) மெயில் அனுப்பியதற்கு இத்தனை காலம் கடந்தும் அனுப்பிய நபரை நெருங்க முடியவில்லையே ஏன்?

* பெங்களூர் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகள் உள்ளூர் தயாரிப்புகளென்றும், லோ-இண்டன்ஸிடி வகையினதும் என்பதும் தெரியவந்துள்ளது. சிமி லஸ்கர் ஹூஜி போன்ற ப்ரொபசனல் தீவிரவாதிகளோடு நெருக்கம் கொண்டதாக கருதப்படும் இண்டியன் முஜாஹிதின்களுக்கு இப்படி லோ- இண்டன்சிடி வெடிகள் தான் கிடைத்ததா?

* இன்று சூரத்தில் 12 இடங்களில் வெடிகள் 'கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'. 12 வெவ்வேறு இடங்களில், வெடிக்கும் முன்னதாகவே எப்படி மிகச் சரியாக போலீசால் பிடிக்க முடிந்தது - அப்படி வைத்தவர் எவரையாவது கைது செய்து தகவல் பெற்றதாகவும் செய்தி இல்லை.

மொத்தத்தில் நடக்கும் சம்பவங்களை ஊடகங்கள் நமக்கு வழங்கும் பார்வையில் பார்த்தால் இது போல் பல்வேறு கேள்விகள் எழுகிறது..

வினவின் கட்டுரை அருமை

-கார்க்கி

said...

asuran your right answer truth

said...

'ஒன்று அடுத்த குண்டு எங்கு எப்போது வெடிக்கும் என்று திகிலுடன் வாழ்வது. அல்லது குண்டுகளைத் தோற்றுவிக்கும் சங்கபரிவார கும்பலை வீழ்த்துவது. '


குண்டு வைத்தவர்கள் யாராக இருந்தாலும், அதற்கு பின்னால்
இருப்பவர்கள் யாராக/எந்த நாடாக
இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்
என்று எழுதாமல் வழக்கமான பாஜக
விரோத கச்சேரியை இன்னும் எத்தனை நாள் நடத்துவீர்கள்.

said...

//தண்டிக்கப்பட வேண்டும்
என்று எழுதாமல் //


எழுதி? என்ன பிரயோசனம்? இதனால வெடி குண்டு வெடிப்புகள் நின்றுவிடுமா? அமெரிக்கா அழிக்காத வெடிகுண்டு நாடுகளா? அமெரிக்காவின் அழித்தொழிப்பு, வெடிகுண்டுகளை அதிகமாக உற்பத்தி செய்ததா? இல்லை குறைத்ததா?

பாஜக சங் பரிவாரத்தின் இந்த பிரச்சாரம் வேறொன்றுமில்லை அதுதான் வெடிகுண்டின் அரசியல்.... இஸ்லாமிய பயங்கவாத அமைப்புகள் கூட நேரடியாக இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று நேர்மையாக சொல்லிக் கொண்டுதான் வெடி குண்டு வெடிக்கீறான்(அவர்களுக்கான சமூக வேர் கிடைப்பது என்னவோ பார்ப்ப்னிய பயங்கரவாதிகளின் கோடூரங்களாலும், ஏகாதிபத்தியத்தின் கோடூரங்களாலும் என்றாலும் கூட இஸ்லாமிய அடிப்படைவாதமே அந்த அமைப்புகளின் சித்தாந்தம்), ஆனால் பார்ப்பனிய பயஙக்ரவாதி இது போல நாட்டு நல்ன் என்று சொல்லிக் கொண்டு வெடி குண்டு அரசியல் செய்கிறான்.

அனானியாக இங்கு புலம்பிக் கொண்டிருக்கும் So and Soக்கள் எல்லாம் அந்த ரகம்தான். இவர்களுக்காக நம்மை பிரச்சாரம் செய்யச் சொல்லி கோரிக்கை வைக்கிறார்கள். அத நீங்களே ஒரு பதிவு ஆரம்பிச்சு செய்யுங்க... இங்க சமூக பொருளாதார தளங்களின் சகல விதமான உறவுகளையும் வாசகர்களுக்கு புரிய வைப்பதற்காக எழுதுவதுதான் நோக்கம்.

குண்டு வைப்பது எந்த நாடு என்று சொல்வதன் மூலம் வெடித்த குண்டுகள் யார் வைத்தார்கள் என்று தெரியும் முன்பே தீர்ப்பு கூற எத்தணிக்கிறார் இந்த அனானி. ஒரு வேளை இதற்க்கு முந்தைய சில குண்டு வெடிப்புகளை RSS கும்பல் செய்தது அம்பலப்பட்டது போல இந்த குண்டு வெடிப்புகளீலும் RSS அம்பலப்பட்டால் அனானி எந்த நாட்டை அழிக்க முன் வருவார்? அவருக்கு உதவி செய்ய சின்ன துப்பு ஒன்று கொடுக்கலாம். இந்தியாவில் ரெண்டு இந்தியா இருக்கிறது. ஆளும் வர்க்க இந்தியா, உழைக்கும் மக்கள் இந்தியா மேலே வெடி குண்டு வீசிக் கொண்டு உள்ளது. RSS வெடி குண்டு வைத்ததாக நிரூபனமான சம்பவங்களில், அனானி அந்த ஆளும் வர்க்க இந்தியாவ போட்டு தள்ளுறத பத்தி தைரியமா பேசுவாறா? அதுக்கான நேர்மை அவரிடம் இருக்குமா? நிஜங்களே மொள்ளமாறிகளா அலையும் RSS கும்பலின் நிழலான So and Soக்களா நேர்மையுடன் இருக்கப் போகிறதுகள்?

அசுரன்

said...

நல்ல பதிவு வினவு,

நன்றிகள் அசுரன்.

// குண்டுகள் உருவாதற்கான நிலைமைகளை உருவாக்கிவிட்டு குண்டுகள் மட்டும் வேண்டாம் என்று நினைப்பதி்ல் பயனொன்றும் இல்லை //

"For every action, there is an equal and opposite reaction." -Newton

I’m not supporting bomb blast, you should not miss understand me, strongly against that about the bomb blast, so sad many people were died and many injured, really they are not human being. Many days I’m also thinking same of point of you, really you are very good analyzing, excellent post.

Thanks
--Mastan

Related Posts with Thumbnails