புனித பிம்பங்கள்!! நல்லொழுக்க ஆதீனங்கள்!!! ஆனந்த விகடன்கள்!!!
திபெத் பிரச்சினையை ஒட்டி மிகப் பெரும்பாலனவர்கள் தமது புனிதத் தன்மையை விளம்பரப்படுத்திக் கொண்டனர். தமது அரசியல் அரிப்பை சொறிந்து கொண்டனர். பொதுவாகவே ஒடுக்குமுறைகள், காட்டுமிராண்டித்தனங்களுக்கு எதிராக தமது தார்மீக கோபத்தை எப்போதுமே வெளிப்படுத்துபவர்களை இங்கு நான் குறிப்பிடவில்லை. அது போன்றவர்கள் கணக்கில் காஸ்மீரும், ஈராக்கும், வடகிழக்கும், ஈழமும், பாலஸ்தீனமும், திபெத்தும் ஒன்றுதான். மாறாக, திபெத் பிரச்சினை அது சீனாவுடன் சம்பந்தப்பட்டது என்ற ஒரே காரணத்தால் தமது புனிதத்தன்மையெனும் போர்வையில் நல்லொழுக்க ஆதினங்கள் செய்த அரசியல் சித்து விளையாட்டுகளையே இங்கு குறிப்பிடுகிறேன். உடனே சீனாவுக்கு நாம் வக்காலத்து வாங்குவதாக யாரேனும் குறிப்பிட விரும்பினால் மன்னிக்கவும், சீனா என்ற பிற்போக்கு ஜனநாயக விரோத அரசுக்கு பட்டு குஞ்சலம் கட்டும் வரலாற்று கடமை எமதுடையது அல்ல. அந்த வேலையையும் கூட அதே நல்லொழுக்க ஆதினங்கள்தான் செய்து வருகின்றன.
ஆனந்த விகடனின் போலி வீரவேசமும், கேலிக்கூத்தான தார்மீக கோபமும்!!!:
குறிப்பாக - ஒரு வகை மாதிரியாக(prototype) - ஆனந்த விகடனை எடுத்துக் கொள்வோம். ஆனந்த விகடன் மட்டுமல்லாமல் அகில இந்திய RSS பத்திரிகையான டைம்ஸ் ஆப்பு இந்தியா(ஆப்பு இந்தியாவுக்கு) வும் இதுதான் சாக்கு என்று வளைத்து வளைத்து எழுதியிருந்தது. பல்வேறு பத்திரிகைகளும் அவ்வாறே செய்திருந்தன. ஆனந்த விகடனில் பா. ராகவன் என்பவர் எந்தவொரு தர்க்கமும் இல்லாமல், தரவும் இல்லாமல் வெறுமே திபெத் ஒடுக்குமுறையின் உணர்வுப் பூர்வமான பொது புரிதலின் பலத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதனை படித்தவுடன் மனதில் எழுந்த கேள்வி ஒன்றேயொன்றுதான் இந்தளவுக்கு நல்லொழுக்க சீலரான ஆனந்த விகடன் இதே வாரத்தில் இங்கு சிதம்பரத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து ஒரு துண்டு செய்தி கூட எழுதவில்லையே என்ன அதிசயம் என்பதுதான்.
இவர்கள் கடந்த காலத்திலும் கூட தமது நல்லொழுக்கத்தை செலக்டிவாகவே காட்டியுள்ளனர். அகில உலகமே CPM பாசிஸ்டுகளை காறி உமிழ்ந்த நந்திகிராம் குறித்து இவர்கள் எவனும் இப்படி டே-டு-டே கவர் ஸ்டோரி எழுதவில்லை. இன்று வரை ஒரு பரபரப்பு சினிமாவுக்கு இணையாக நடந்தேறிவரும் ஒரிஸ்ஸாவின் கலிங்காநகர் போராட்டம் பற்றி இந்த நாய்களின் எவனும் மூச்சு கூட விட்டதில்லை. சட்டீஸ்கர அரசை குறிப்பாக சல்வாஜுதம் அமைப்பு எந்தளவுக்கு மக்கள் விரோதமானது என்று போன வாரம் உச்ச நீதிமன்றம் கண்டிக்கும் அளவு இருக்கும் பேயாட்சி சூழல் குறித்து மனித உரிமை போராளியான பினாயக் சென் கைது செய்யப்பட்டு எந்த முகாந்திரமும் இன்றி பினை மறுக்கப்பட்டுள்ள நிலையிலும் இவர்கள் எவனும் எதுவும் எழுதவில்லை. சட்டீஸ்கரில் கிராமப்புறங்களை எரித்து தீக்கிரையாக்கி மக்களை வலுக்கட்டாயமாக முகாம்களில் அடைத்து வைத்துள்ளது குறித்து இவன்கள் எவனும் எந்த காலத்திலும் எழுதப் போவதில்லை. குஜராத் கலவரத்தின் போதும் சரி அதனை தெஹல்கா விரிவாக அம்பலப்படுத்திய போதும் சரி இவர்கள் எல்லாம் எந்த நல்லொழுக்கத்தை பற்றி ஒழுகிக் கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. திபெத்தின் மீது சீனா செய்து வரும் ஆக்கிரமிப்பு குறித்து மனிதாபிமான அங்கலாய்ப்புகளை கடை விரிக்கும் இந்த நாகரிக கோமான்கள் இந்தியாவையே ஆக்கிரமித்து வருசத்துக்கு 17000 விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளி உணவு பஞ்சத்தின் விளிம்பில் நிறுத்தியுள்ள உள்நாட்டு யுத்தத்தை ஒத்த நிலை குறித்து எழுத தமது பேனாவின் ஒரு சொட்டு மையைக் கூட இவர்கள் செலவழித்ததில்லை. அதை விடுங்கள் ஈழத்தில் நடக்கும் யுத்தத்திற்க்கு சிரிலங்காவிற்க்கு ராணூவ ரீதியாக எல்லாவகை உதவிகளும் செய்வதுடன் ஈழத் தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ள இந்திய தரகு அதிகார பார்ப்பன அரசு குறித்து மூச்சு கூட விடுவதில்லை இந்த மேன் மக்கள்.
தற்போதைய திபெத் பிரச்சினை போன்ற தருணங்களில் ஜனநாயகம், மனிதாபிமானம், நியாயம், தர்மம், அஹிம்சை என்று பெரிய நன்னூல்கள் போல பிரசங்கம் செய்து போலி ஆவேசங்களையும் தார்மீக பலத்தின்பாற்ப்பட்ட சாபங்களையும் கண்டனங்களையும் எழுதும் இவர்களின் தலையங்கங்கள் உண்மையிலேயே இந்த சொல்லாடல்களின் நடைமுறைக்கு ஆபத்து நிகழ்ந்து கொண்டிக்கும் போது பதுங்கி பம்மி வேறதாவது அலப்பத்தனமான உளறல்களில் முங்கி முத்தெடுக்கின்றன. ரஜினி வீட்டிலும், விஜய் வீட்டிலும் புல் புடுங்கிக் கொண்டிருக்கின்றன.
அட இவர்களின் இந்த செலக்டிவ் புத்தி உள்நாட்டு விவகாரங்களில்தான் என்று பார்த்தால் வெளிநாட்டு விசயங்களிலும் இவர்கள் அப்படியே. லெபனான் மீது மிக சமீபத்தில் மிகக் கோடூரமானதொரு யுத்தத்தை - எந்தவொரு தரக்க நியாயமுமற்ற யுத்தத்தை - இஸ்ரேல் தொடுத்து பேரழிவை உண்டாக்கி தோல்வியடைந்து ஓடியது இந்த கனவான்களின் மனதை கலக்கியதேயில்லை.
இதே திபெத் பிரச்சினை நடக்கும் சமகாலத்தில்தான் ஈராக்கில் யுத்தம் வேறெந்த காலத்தையும் விட தீவிரமடைந்துள்ளது குறித்தும், நாளும் அமெரிக்காவினால் ஈராக் மக்கள் படுகொலை செய்யப்படுவதும், கொத்து கொத்தாக மனிதர்கள் சாகடிக்கப்படுவதுமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதும் பற்றி செய்திகள் வருகின்றன. குறிப்பாக திபெத் பிரச்சினை வரும் அதே சர்வதேச செய்திகள் பக்கத்திலும், மையப் பகுதிகளிலும் இது குறித்து செய்திகள் வருகின்றன(செய்திகள் மட்டுமே அதன் மீதான தார்மீக கோபத்தின் வெளிப்பாடாக அமைந்த கருத்து கட்டுரைகள் அல்ல). அமெரிக்க எனும் ஒரு நாடு வெறும் பொய்களின் அடிப்படையில் ஈராக் என்னும் ஒரு நாட்டை ஒரு இருபது வருடங்கள் தொடர் யுத்ததில் சிதறடித்து வரலாறு இது வரை கண்டிராத மிக கோழைத்தனமானொதொரு யுத்தத்தின் மூலம் தனக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத ஒரு நாட்டில், தனது அவதூறுகள் அனைத்தும் பொய் என்று அப்பட்டமாக நிரூபணம் ஆகிய பிறகும் மிகத் தைரியமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதுடன், ஒரு முழுமையான யுத்தத்தை தொடுத்து வருவது குறித்து இந்த நன்னூல்கள் யாரும் வாய் தவறி கூட பேசுவது இல்லை. இந்த உலகமாகா அயோக்கியத்தனத்திற்க்கு உரை போடக் காணாது திபெத்தில் சீனாவின் அட்டுழியம். ஆயினும் இந்த அன்பர்கள் யாரும் அமெரிக்க தூதரகத்திற்கு முன்போ அல்லது அகில இந்திய அளவிலோ அல்லது அகில உலக அளவிலோ அமெரிக்காவின் இந்த அயோக்கியத்தனத்திற்க்கு எதிரான நடைபெறும் மக்களின் இயல்பான தன்மான உணர்ச்சியின் பாற்பட்ட ஆவேச போராட்டங்கள் குறித்து எழுதுவதில்லை.
ஏனேனில் திபெத்தோ அல்லது ஈராக்கோ அல்லது காஸ்மீரோ இவர்களை உந்தித் தள்ளுவதெல்லாம் இவர்களின் அரசியல்-பொருளாதார நலன்கள்தானேயன்றி பரந்துபட்ட மக்கள் நலன்களல்ல, உண்மையான நல்லொழுக்க கருத்துக்கள் அல்ல, மக்களின் மீதான காதல் அல்ல, மனித குலத்தின் மீதான அன்பு அல்ல. இவர்களின் இந்த அரசியல் கழிசடைத்தனத்தை, அரசியல் மலச்சிக்கலை அல்பத்தனமான சரசரப்பு காகிதங்களின் பலபலப்பில் கட்டிக் கொடுத்தால் அதுவும் மனிதாபிமானம், ஜனநாயகம், அஹிம்சை என்பது போன்ற சொல்லாடல்களின் புனித புகை எபெஃக்ட்டுகளுடன் கொடுத்தால் கேள்வி கேட்க்காமல் தின்று செரிக்க சொந்த புத்தியில்லாத தற்குறிகளாக வாசகர்கள் இருக்கும் வரை இவர்களுக்கு கவலையில்லை.
அசுரன்
Related Article:
இன்னொரு கொசோவா உருவாகிறது!