பாரதியார், எஸ்.வி.ராஜதுரை மற்றும் சிலகேள்விகள்!!!
மார்க்சிய அறிஞர் என்றும் பெரியாரியல் மேதை என்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி என்றும் போற்றப்படும் எஸ்.வி.ராஜதுரையின் சொற்பொழிவு ஏப்ரல் 11 அன்று ரோஜா முத்தையா நூலகக் கட்டிடத்தில் நடைபெற்றது. தலைப்பு “ஃபுலே முதல் பெரியார் வரை: சுயமரியாதை ஏடுகள்”.
மகாத்மா புலே, அம்பேத்கர், பெரியார் ஆகிய மூவரும் ஆற்றிய தொண்டுகளை ஒப்பிட்டுப் பேசி வந்த எஸ்விஆர், சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசும்போது அக்காலகட்டத்தில் சாதிகுறித்து இம்மூவரைத் தவிர பிற அறிவுஜீவிகளின் கருத்து என்னவாக இருந்தது என்பதைத் தொட்டுச் செல்ல பாரதியை துணைக்கழைத்தார். இந்து பத்திரிக்கையில் ‘அரசியல் சீர்திருத்தங்களை விட சமூக சீர்திருத்தமே முதலில் செய்யப்பட வேண்டும்’ எனும் சங்கரன் நாயரின் கருத்தை ஆதரித்து பாரதி எழுதிய கடிதத்தைப் பற்றிக் குறிப்பிட்ட எஸ்விஆர், பாரதியிடம் வெளிப்பட்ட தடுமாற்றத்தையும் சரியாகவே குறிப்பிட்டார். ‘சங்கரன் நாயர் சொல்வது போல முதலில் செய்யப்பட வேண்டியது சமூக சீர்திருத்தமே. இதற்கு திலகர் வழிகாட்டி இருக்கிறார்’ என்று பாரதி எழுதிய கடிதத்தை சுட்டிக் காட்டிய எஸ்விஆர் ‘இங்குதான் நமக்குப் பிரச்சினை வருகிறது. ஒன்று சமூக சீர்திருத்தத்தை மட்டும் பேசி இருக்க வேண்டும். அல்லது திலகரை மட்டும் குறிப்பிட்டிருக்க வேண்டும். திலகர் சமூக சீர்திருத்தங்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் செயல்பட்டார்?” என்றும் பூலே,பெரியார் அம்பேத்கர் ஆகியோரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பகவத்கீதையை பாரதியார் உயர்த்திப் பிடித்தார்’ என்றும் எஸ்விஆர் ஒப்பிட்டுப் பாரதியின் வர்ணாசிரம ஆதரவுப் போக்கை இலேசாக சுட்டிக் காட்டினார்.
இதை எல்லாம் சொல்வதற்கு முன், பீடிகையாக பாரதியார் இந்துவுக்கு எழுதிய கடிதங்களைத் தேடி எடுத்த ஆ.ரா. வெங்கடாசலபதியைக் கருத்தில் கொண்டு ‘இந்த இளம் முனைவர் ஆரம்பகட்டத்தில் பாரதியார் பிரெஞ்சு இந்தியாவில் இருந்து வெளியேறி பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் வருவதற்காக அழாத குறையாக தெண்டனிட்டு கவர்னருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதத்தைத் தேடி எடுத்தவர். அப்போது பாரதி எதுவுமே செய்யாமல் புதுவையில் முடங்கிக் கிடப்பதற்குப் பதில் எழுதிக் கொடுத்து விட்டு இந்தியாவிற்கு வந்து இயங்கலாமே எனும் உணர்வில் அப்படி செய்திருக்கக் கூடும். மேலும் அவர் அந்தக் காலகட்டத்தின் குழந்தை. இந்தக் கடிதத்தின் மூலம் அவரை மலினப்படுத்தக் கூடாது. அவருடைய அரசியல் மீது எனக்கு விமர்சனங்கள் இருப்பினும் தமிழின் நவீனப் போக்குகளுக்கு பாரதி வற்றாத ஊற்றுக்கண்.” என்றெல்லாம் சலபதியிடம் சொன்னதாக அறிஞர் தனது சொற்பொழிவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அறிஞர் எஸ்விஆர், ஆய்வு என்பது எவ்வாறு காய்தல் உவத்தலின்றி இருக்கவேண்டும் என்றும் அறம் போதித்தார். “பாரதி ஆய்வாளர்கள் கூட பாரதியை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்திருக்கும் இரண்டு நூல்களையும் படித்து விட்டுத்தான் ஆய்வு முடிவுக்கு வரவேண்டும். அதில் ஒரு நூல் பாரதியை ஆர்.எஸ்.எஸ். இயக்க முன்னோடி என்று கூடக் கடுமையாக விமர்சித்திருந்தது. அந்த இரண்டு நூல்களின் ஆசிரியர்களில் ஒருவர் இங்கு வந்திருக்கிறார்” என்று நான்கைந்து முறை அந்த ‘இரண்டு நூல்’களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த அறிஞரோ சொற்பொழிவின் இறுதி வரை நூல்களின் பெயரைச் சொல்லவில்லை. சொற்பொழிவைக் கேட்க வந்திருந்தவர்களில் நாம் அந்த ஒருவரைத் தேடினோம். பாரதிய ஜனதாப் பார்ட்டி எழுதிய மதிமாறன் வரவில்லை. பாரதிபக்தர்களின் கள்ளமவுனம் நூலின் ஆசிரியர்களில் ஒருவரான மருதய்யன் எங்காவது ஒளிந்திருக்கிறாரா என்று தேடும் அளவிற்குக் கூட்டமும் அதிகமில்லை. அறிஞரையும் சேர்த்து 31 பேர்கள்தான் இருப்பர். ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ ஆசிரியர் வாலாசா வல்லவன் முதல்வரிசையில் அமர்ந்திருந்தது, கொஞ்ச நேரம் கழித்த பிறகுதான் தெரிந்தது.
கேள்வி நேரத்தின்போது ஒரு நண்பர் கேள்வி எழுப்பினார். “நீங்கள் சொன்னீர்களே மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பாரதி எதையாவது உருப்படியாகச் செய்யலாமேன்னு. பாரதி மன்னிப்புக் கடிதம் கொடுத்திட்டு வந்த பிறகு புரட்சி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லையே? கடலூர் சிறையில் இருந்து வந்தபிறகு அவர் செய்த காரியம் என்னவென்றால் எட்டப்ப மகாராஜாவிடம் தூது விட்டு ‘தங்கள் குலவம்ச வரலாற்றை சிறப்பாக எழுதித்தருகிறேன்’ என்றுதானே செயல்பட்டிருக்கிறார்” என்றார். எஸ்விஆர் இடைமறித்து “பாரதி, அரசியல்வாதி அல்ல. அவர் கவிஞர். அவர் கடுமையான வறுமையில் வாடியவர் என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். இளமையிலும் சரி பின்னாளிலும் சரி அவர் புரட்சி ஏதும் செய்ததில்லை” என்றார். “இரண்டு நூல்கள் என்று சொன்னீர்களே! அதன் பெயரைக் கூறலாமே?” என்றதும் “அதுதான் பாரதிய ஜனதா பார்ட்டி..இன்னொன்னு வாலஜா வல்லவனோடது’ என்று குறிப்பிட்டார். (இத்தனைக்கும் மதிமாறனின் கட்டுரைத்தொடர் வெளிவந்த தலித்முரசுவிலே அக்கட்டுரைக்கு பக்கத்திலேயே எஸ்விஆர் கட்டுரைகளும் வெளிவந்தன. பெயரைக் குறிப்பிடாமலே இருக்கும் அளவிற்கு அந்த நூல், ‘அறிஞரை’ ரொம்பவே படுத்தி இருக்கிறது போல)
இன்னொருவர் எழுந்து நின்று “அப்படின்னா நீங்க சுஜாதாவை ஆதரிக்கிறீர்களா? ஏனென்றால் பாரதி,சுஜாதா இந்த ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. இரண்டு பேரும் செத்துப்போவதற்குக் கொஞ்சக்காலம் முன்பு பார்ப்பனர் சங்கத்தின் மாநாடு,பொதுக்கூட்டங்களில் போய்க்கலந்து கொண்டு சாதிப் பற்றாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டனர்” என்றார். இந்த விவாதம் இப்படிப்போனதுமே எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் கீழ் ‘புரட்சிகர’ நாடகங்களை நடத்தி வரும் அ.மங்கை ‘பாரதியும் சுஜாதாவும் ஒன்னா? ரெண்டு பேரும் வாழ்ந்த காலகட்டமும் ஒன்னா?’ என்று சாமியாட முனைந்தார்.
அறிஞர் ‘நான் சுஜாதாவை ஆதரிக்கலை’ என்றார். காலகட்டம் பற்றிய அ.மங்கையின் கேள்விக்குக் கூட்டத்தில் இருந்து கேள்வி கேட்ட முதல் நண்பர் “அவர்கள் வாழ்ந்த காலகட்டம் புரட்சிக்கு இளைஞர்கள் கிளர்ந்தெழுந்த கால கட்டம். ஜாலியன் வாலபாக் படுகொலையில் மக்கள் கொதித்தெழுந்த நேரம். அந்த நேரத்தில் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விட்டு ஒன்றுமே செயல்படாமல் பார்ப்பன சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்தானே பாரதி. தம்மிடம் இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து கொள்ள முயற்சித்து வெற்றி காண்பவர்கள்தான் கதாநாயகர்களாக இருக்க முடியும். முரண்பாடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்கள் நிறைய பேர் அக்காலகட்டத்தில் இருந்தார்கள். நீங்கள் சொல்வது போல் பார்த்தால் அவர்கள் அனைவருமே கதாநாயகர்கள்தான். காலகட்டம் கோருவதை நிறைவு செய்ய முடிந்தவர்கள்தான் கதாநாயகர்களாக முடியும். பாரதியைக் கதாநாயகனாக முன்னிறுத்துவதால்தான் பிரச்சினை. ஒரு பெரியாரிஸ்டாக, மார்க்சிய லெனினியத்தைப் படித்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்துகொண்டு பாரதியை எப்படி ரசிக்க முடிகிறது?” என்று எஸ்விஆரிடம் கேள்வி எழுப்பினார்.
எஸ்விஆர் இதற்கு சரியான பதிலைக் கூறாமல் “இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற கவிஞர் அவர். அவர் காலகட்டத்தின் குழந்தை. நவீன தமிழ் அவரிடம் இருந்துதான் ஆரம்பமாகிறது. அதை மதிக்கிறேன்.” என்று சொல்லி நழுவிக் கொண்டார்.
இப்படி பாரதியாரை கவிஞர் என்று மட்டுமே ரசிக்கப் பழகியவர், இதற்கடுத்த கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் ‘பாரதிதாசன், சாதி உணர்வாளர்தான். அவர் தன் சொந்த சாதியில்தான் குடும்பத்தினருக்குக் கல்யாணம் செய்துவித்தார்’ என்று அறிஞர் நீட்டி முழங்கிக் கொண்டிருந்தார். பாரதியின் அரசியலைக் குறித்துக் கேள்வி கேட்டால் அவரின் கவிதையை சிலாகித்துக் கொள்ளும் அறிஞர், பாரதிதாசனை மட்டும் ஏன் கவிதைக்கு வெளியில் நின்று விமர்சிக்கிறார் என்பது நமக்குப் புரியவில்லை.
அன்று கேள்வி நேரம் முடிந்துவிட்டாலும் அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் பல இன்னும் மிச்சம் உள்ளன.
1) பெரியார் சமதர்மம் போன்று தலையணை தடிமனுக்குப் புத்தகம் எழுதும் பெரியாரியல் அறிஞர், பாரதி பற்றிய பெரியாரின் கருத்து என்ன என்பதை ஏன் பேசுவதில்லை?
2) பெரியாரைப் பின்பற்றும் அமைப்பினர், மரபாக பாரதியை அவனுடைய பார்ப்பன சார்பைக் காரணமாக்கி ஒதுக்கி வைத்துப் பாரதிதாசனை உயர்த்திப் பிடித்து வருவது அறிஞருக்குத் தெரியுமா? பெரியார் ஆய்வு மையத்தில் இருந்து கொண்டே பாரதிதாசனைத் திட்டிக் கொண்டும் பாரதியை உயர்த்திப் பிடிப்பதும் பெரியாரியல் சிந்தனையா? அந்தக் கருத்துக்களை திரிக்கும் செயல் இல்லையா?
3) பாரதிக்கு அடுத்து தமிழுக்கு தொண்டாற்றியவர் சுஜாதாதான் என்கிறார்களே? வெறுமனே தமிழை, இலக்கியத்தை மட்டும் ரசிப்பவர் எஸ்விஆர் என்றால் சுஜாதாவை மட்டும் உதறித் தள்ளுவது ஏன்?
4) பல இசங்களைக் கரைத்துக் குடித்து விட்டு இப்போதைக்கு பெரியாரியலை ஒருவழி பண்ணிக் கொண்டிருக்கும் எஸ்விஆர், நீதிக்கட்சியைப் பற்றிய பாரதியின் கருத்து பற்றி என்ன கருதுகிறார்? (‘இன்றைக்கு நாங்கள்தான் முன்னர் ஆண்டோம் என்பார்கள். . .. இப்படியே போனால் நாளைக்கு காக்கை குருவிகள் கூட நாங்கள்தான் முன்னர் ஆண்டோம் எனக் கூறி உரிமை கோருவார்கள்’ என்று பாரதி நீதிக்கட்சியின் கொள்கையை நக்கல் செய்து எழுதினார்.)
5) போகிறபோக்கில் ஒரு மனிதனுடைய சாரம் கடைசிக்காலத்தில் இல்லை என்ற எஸ்விஆரின் வாதத்தை நியாயப்படுத்துவதற்காக பெரியாரையும் மாவோவையும் கடைசிக்காலத்தில் தங்களது கொள்கைகளின்பால் நம்பிக்கையற்றுத் தனிமையில் புலம்பியதாக அவதூறு செய்ததுதான் எஸ்விஆரின் அரசியலற்றவாதத்தின் அற்பத்தனம்தானே? ஒரு வாதத்திற்காக எஸ்விஆர் சொல்வது உண்மை என்றால் கூட ‘கராறான கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது’ என்ற எஸ்விஆரின் பிழைப்புவாதக் கண்ணோட்டம்தானே நியாயப்படுத்தப்படுகிறது? விமர்சனம் என்று சொல்லவந்தால் நேர்மையாக பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலை.யில் இருந்து பெரியாரை விமர்சித்து விட்டு ராஜினாமா செய்ய வேண்டியதுதானே?
பாரதியை பாரதிக்குள் நின்று ஆய்வு செய்வதை விட அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அறிவுஜீவிகளிடம் இருந்து தொடங்கலாம். ஜாலியன்வாலாபாக்கிற்கு கள்ளமவுனம் சாதித்த பாரதி, ஒருவேளை வசதிவாய்ப்புகள் பெற்ற நபராக இருந்திருந்தால், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கோ, ஃபோர்டு பவுண்டேசனுக்கோ தன்னுடைய கவிதைப்படைப்பைக் காணிக்கையாக்கி இருப்பார். தில்லைவாழ் அந்தணர்களுக்கு ஆதரவாக ஆரிய சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு பராசக்தியையும் அழைத்திருப்பார், பாரதி. தீட்சிதர்களோடு நின்று மீசைக்கும் வெண்ணெய் தடவிப் போரிட்டிருப்பார். சோ ராமசாமிக்கும் அர்ஜூன் சம்பத்திற்கும் வேலை குறைந்திருக்கும்.
எஸ்விஆருக்கோ அல்லது அறிவு ஜீவிகளுக்கோ தம்முடைய படைப்பிற்கு நேர்மையாகத் தாம் இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தைக் காலம் என்றென்றைக்கும் கோருகிறது. சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இருக்கவேண்டும் என்பது சாதாரண மனிதர்களுக்கே பொருந்தும்போது பூஜ்யங்களுக்குத் தலைமை வகிக்கும் இவர்களுக்கோ செயலில் மாத்திரம் பிற்போக்கு அவசியமாகிறது. அதுதான் அவர்களது சாரமும் கூட. சமூகம் இப்படித்தான் எல்லோரையும் மதிப்பிடுகிறது. கள்ளுண்ணாமைக்குத் தனி அதிகாரம் எழுதிய வள்ளுவர் எழுதிய களைப்புத் தீர கள்ளருந்தினார் என்று ஒருக்கால் கூறினால் அதனை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? தன்னார்வக்குழுக்களிடம் தாங்கள் சோரம் போன வரலாற்றின் காலகட்டத்தை இப்படித்தான் நியாயப்படுத்துகிறார்கள், இன்றைய அறிவுஜீவிகள். இவர்களுக்கு வகைமாதிரி பாரதி.
பாரதியின் கவிதைகளை ரசிப்பதாகச் சொல்லும் எஸ்விஆர், மகாபாரதத்தினையும் ரசித்தாக வேண்டும். கம்பராமாயணத்தை ரசிக்கத் தெரிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ராமர் பாலப் பிரச்சினையில் மூடநம்பிக்கைக்கெதிராக அதாவது ராமாயணத்துக்கு எதிராகப் போராடுவதை எப்படி வேறு வேறாகக் கருதினார்களோ அப்படித்தான் எஸ்விஆர் பாரதியையும் ரசிக்கிறார். பெரியாரையும் ரசிக்கிறார்.
ஆதிக்க சாதியில் பிறந்து முற்போக்கை அதாவது பரந்துபட்ட மக்களின் விடுதலையை தங்களுடைய extra-curricular activity ஆகப் பார்க்கப் பழகிய அறிவுஜீவிகளுக்கு தத்துவமோ, கட்சியோ கட்டுப்பாடுகள் போலத்தான் தெரிகிறது. இது பாரதியிடமும் இருந்தது. அறிவுஜீவிகளாக மாறி இருந்தாலும், ஆதிக்க சாதிக்கோ, தன்னை உயர்சாதிக்காரன் போலக் காட்டிக் கொள்ளுவதில் அகவிருப்பம், தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சொந்த சாதியின் ஆதிக்கத்திற்கு எதிராக, அரசியல், பண்பாட்டு, கலாச்சாரத் துறைகளில் போராடுவதன் மூலமாகத்தான் உண்மையான கம்யூனிஸ்ட்கள் தங்களைப் புடம்போடுகிறார்கள். அதற்குக் கட்சியும் தத்துவமும் உதவுகின்றன. கட்சி சார்பற்ற அறிவுஜீவிகளுக்கோ தாங்கள் நிலை தடுமாறிய தருணங்களை நியாயப்படுத்தச் சொல்கிறது. அதுதான் பாரதியின் அவலத்தை அவனைக் கண்டுகொள்ளாத சமூகத்தைப் பழிக்கச் சொல்கிறது. அதுதான், தான் போர்டு பவுண்டேசன் முன்னாலும் எம்.எஸ்.சுவாமிநாதன் முன்னாலும் கைகட்டி நிற்க நேர்ந்த தருணத்திற்காக சமூகத்தைப் பழிக்கிறது.
எஸ்விஆர், பாரதி, புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்காததற்கான காரணமாக வறுமையை சுட்டிக்காட்டுகிறார். வறுமையிலோ அல்லது இக்கட்டான தருணங்களிலோதான் மனிதனின் சாரமான குணம் வெளிப்படுகிறது.
இன்றைக்கும் அரசியல் போராட்டங்களில் கலந்து கொள்வதற்கு இந்துத்துவா, மற்றும் வலதுசாரிகளுக்குத்தான் வறுமையின்மை முன்நிபந்தனையாகிறது. ஆனால் மா-லெ இயக்கங்களுக்கோ இது ஒரு பொருட்டல்ல. வறுமையின்மைதான் பாரதியின் முன்நிபந்தனை என்றால், அதை ஆர்.எஸ்.எஸ். மட்டும் தான் நிறைவு செய்ய முடியும். இல.கணேசனும், ராம.கோபாலனும் பாரதி இலக்கியத்தின் உள்ளடக்கத்தை ரசிப்பதன் மூலம் தங்களது அகண்டபாரதக் கனவிற்கு பாரதியைத் துணைக்கு அழைப்பது, பாரதி அன்பர்களுக்கு கண்ணில் பட்ட முள்ளாக உறுத்துவதே இல்லை.
பாரதியின் அன்பர்கள் உதிர்ந்து கொண்டிருக்கும் நிலப்பிரபுத்துவ இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள். இவர்களுக்கு முன்னோடிகள், 50 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சினிமாவில் ‘பா’வரிசைப் படங்களைத் தந்துவிட்டுப் போய்விட்டார்கள். ஆம், கடந்த காலம் அற்பவாதிகளுக்குச் சொந்தமானது (நன்றி-கார்ல்மார்க்ஸ்).
நன்றி: இமெயிலில் மருதன்









