அணு ஒப்பந்தம் குறித்து... பாகம் I
அணு ஒப்பந்தம் குறித்து பொதுவாகவே ஆதரவான கருத்து நிலவுகிறது. அது குறித்து சரியான விவாதம் தமிழ்சூழலில் நடந்தேறாமலேயே போய்விட்டது. ஒவ்வொருவரும் தமது அரசியல் நிலைப்பாடுகளுக்கேற்ப இந்த பிரச்சினையை அனுகுவது என்பதும், உண்மையிலேயே இதை புரிந்து கொள்ள முயற்சி செய்யும் ஜனநாயக சக்திகளுக்கோ பக்க சார்பான தகவல்களே இலகுவாக கிடைக்கப் பெறுகிறது என்ற நிலையும் நிலவுகிறது. இந்த நிலையை கலையும் சிறு முயற்சியாக இரண்டு பாகங்களாக அணு ஒப்பந்தம் குறித்த விசயங்கள் இங்கு பேசப்படவுள்ளன. முதல் பாகம் இது அணு ஒப்பந்தம் சம்பந்தப்பட்டது என்ற பொது கருத்து நிலையிலிருந்தே அலசுகிறது. இரண்டாவது பாகம் இந்த ஒப்பந்தத்தின் உண்மையான பொருள், நோக்கம் அணுவை கடந்தது என்பதை அலசுகிறது.
__________________________________________________________
அணு ஒப்பந்தம் குறித்து நிலவும் கருத்துக்கள்:
#1) இந்தியாவின் மின்சாரத் தேவைக்காகவே இது போடப்படுகிறது
#2) இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இது தேவைப்படுகிறது
#3) இதை எதிர்ப்பவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரிகள்
#4) இதை கம்யுனிஸ்டுகள் எதிர்ப்பதன் காரணம் அமெரிக்க எதிர்ப்பு அரசியல்
#5) அணு ஒப்பந்தம் வேறு நாடுகளுடன் போடப்படவில்லையா? ஏன் இந்தியாவுடன் போடுவதை மட்டும் எதிர்க்கிறார்கள்?
#6) அமெரிக்கா ஏற்கனவே நாட்டை பாதி அடிமையாகிவிட்டது. தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது ஜாண் போனால் என்ன முழம் போனால் என்ன?
#7) அபாயகரமான கதிரியக்கம் என்பது பெட்ரோல் உற்பத்தி முதல் பல்வேறு விசயங்களில் வெளிப்படும் ஒன்றுதான். அணுவைப் பொறுத்தவரை இது ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட வதந்தி.
இன்னும் சில கருத்துக்கள் விடுபட்டிருக்கலாம். அணு ஒப்பந்தம் குறித்து பெரும்பாலனவர்களுக்கு தெரியவில்லை என்பது வெள்ளிடை மலை. பெரும்பாலான கட்டுரைகள் யானையை விவரிக்க முயன்ற ஐந்து கண்பார்வையில்லாதவர்களின் கதையை நினைவூட்டுகின்றனர். 123 என்றால் என்ன? 123 ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டதா இல்லையா?, IAEA என்றால் என்ன? ஹைட் சட்டத் திருத்தம் என்றால் என்ன? எப்படி இந்த ஒப்பந்தம் இந்தியாவை அடிமைப்படுத்தும் என்கிறார்கள்? இப்படி பல கேள்விகள்.
இது தவிர்த்து, இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிடமிருந்து அணு உலைகளையும், அதற்கு தேவையான யுரேனியத்தையும் பெறுவதற்கே போடப்படுகிறது, CPM இந்தியாவின் இறையாண்மைக்காக தியாகம் செய்துள்ளது என்பது போன்ற பல்வேறு மூட நம்பிக்கைகள் வேறு பரவலாக உலாவுகின்றன. இவை குறித்து ஓரளவு புரிந்து கொள்ளக் கூடிய வகையில் ஆக விளக்கமாக, எளிமையாக எடுத்துரைப்பதே இந்த கட்டுரை.
முதலில் அணு என்றால் என்ன, அணு சக்தி என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்:
ஒரு பொருளை உடைத்துக் கொண்டே சென்றால் ஒரு கட்டத்திற்க்கு மேல் உடைக்கும் போது அது இனிமேலும் அந்த குறிப்பிட்ட பொருள் என்பதற்க்கான பண்புகளை இழக்கும். அந்த கடைசி அளவிலான பொருளே அந்த குறிப்பிட்ட தனிமத்தின் அணு என்று புரிந்து கொள்ளலாம் #1. அணுவை உடைக்கும் போதோ அல்லது இணைக்கும் போது சக்தி உருவாகிறது. இதனை ஆங்கிலத்தில் Nuclear Fission, Nuclear Fusion என்று குறிப்பிடுகிறார்கள். இதில் உடைப்பதன் மூலம் சக்தி உருவாக்கும்(fission) தொழில் நுட்பமே பரவலாக பயன்பாட்டில் உள்ளது. இணைவின் மூலமான தொழில்நுட்பம் வெகு சில நாடுகளிடமே உள்ளது (ஹைட்ரஜன் குண்டுகள்).
அணு உடைப்பின் மூலம் அதிக சக்தி பெறுவதற்க்கு அந்த குறிப்பிட்ட அணுவின் எடை அதிகமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் எடை அதிகம் கொண்ட அணுவின் பிணைப்பு விசை(Binding energy) அதிகமாக இருக்கும். எனவே இந்த அணு உடைக்கப்படும் போது இந்த பிணைப்பு விசை சக்தியாக வெளியிடப்படுகிறது #2. அந்த வகையில் அதிகமான அணு எடை கொண்ட தனிமங்களே அணு உடைப்பிற்கு பயன்படுத்தப் படுகின்றன. இது போல அணு எடை அதிகமான தனிமங்களை கதிரியக்க தனிமங்கள் என்கிறோம். இவை யுரேனியம், தோரியம், புளுட்டோனியம் இன்னபிற. இவற்றில் யுரேனியமே எடை அதிகமுள்ளது. எனவே யுரெனியத்திலிருந்துதான் அணு சக்தி பெரும்பாலும் பெறப்படுகிறது.
ஒரு தனிமம் அணு உடைப்பிற்கு தகுதியானதா என்பதை முடிவு செய்வதில் அந்த தனிமத்தின் அணு உடைப்பு ஐசோடோப்பு பண்பு (Fissile Isotope) முக்கிய பங்கு ஆற்றுகிறது. எடுத்துக்காட்டுக்கு யுரேனியம் அணு பரவலாக u238 என்ற வடிவில்தான் கிடைக்கிறது. ஆனால் U235 என்கிற வடிவம்தான் அணு உடைப்பு ஐசோடோப்பு பண்பு கொண்டதாக இருக்கிறது. இந்த பண்பு கொண்ட அணுதான் நீடித்த அணு உடைப்பு சங்கிலி விளைவை ஏற்படுத்தும்(Sustained Chain reaction). இது நடந்தால்தான் யுரேனியம் அணுக்கள் அடுத்தடுத்து வெடித்து சக்தி அபரிமிதமாக கிடைக்கும் #3. இதில் 235, 238 என்பவை அணு எடையைக் குறிக்கின்றன.
ஐசோடோப் என்றால் என்ன?#4. ஐசோடோப்பு குறித்து பேசும் முன்பு அணு எண், அணு எடை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு அணுவின் அணு எண்தான் அது எந்த தனிமம் என்பதை குறிக்கிறது. அணு எண் என்பது ஒரு அணுவில் உள்ள நேர்மின் துகள்களை குறிக்கிறது(எதிர் நேர் மின் துகள்கள் அணுவில் சமமாகவே இருக்கும்)#5. அணுவின் மையப்பகுதியான நியுக்ளியசில் புரோட்டானும்(நேர்மின்), நிய்ட்ரானும் இருக்கும், இது தவிர்த்து எல்க்ட்ரான்(எதிர்மின்) நியுக்ளியசுக்கு வெளியே சுற்றி வரும். அணு எடை என்பது நியூக்ளியசில் உள்ள நேர்மின் துகள்(புரோட்டான்), நியுட்ரானின் எண்ணிக்கையாகும் #6. ஐசோடோப் என்பது வெவ்வேறு அணு எடை கொண்ட ஆனால் ஒரே அணு எண்ணை உடைய அணுக்கள். அதாவது ஒரே தனிமத்தின் வெவ்வேறு அணு எடை கொண்ட அணுக்களே ஐசோடோப்புகள். U235 என்ற அணு எடை கொண்ட யுரேனியம் ஐசோடோப்பின் நீயுக்ளியசில் அணுச் சமன்பாடு குலைக்கப்பட்டுள்ளதால் இதனை உடைப்பது எளிது, இதிலிருந்து உருவாகும் சக்தி சுற்றியுள்ள பிற U235 அணுக்களை உடைப்பதன் மூலம் நீடித்த சங்கிலி விளைவை உருவாக்குகிறது. அணு, அணு சக்தி குறித்த அடிப்படை விஞ்ஞானம் இதுதான். அணு சக்தியின் நன்மை தீமை குறித்து இப்போது பார்க்கலாம்.
அணு சக்தியின் நன்மை, தீமை:
அணு வெடிப்பின் மூலம் சக்தி இரு வழிகளில் வெளிப்படுகிறது. ஒன்று கைனடிக் சக்தி(சுழற்சி விசை என்ற மொழிபெயர்ப்பு சரியா?) இன்னொன்று கதிரியக்கமாக வெளிப்படுகிறது. இந்த கதிரியக்கம் தன்னைச் சுற்றியுள்ள பொருட்களின் அணுக்களையும் பாதித்து கதிரியக்க தன்மைவாய்ந்ததாக மாற்றி விடுகிறது. இப்படி உருவாகுபவை அணு உலைகளில் பயன்படுத்தும் கையுறை முதலான பொருட்களில் இருந்து அனைத்தும் அடங்கும். அணு உடைப்பிற்கு பிற்பாடு மிச்சமிருக்கும் கதிரியக்க பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ள இந்த அனைத்துவிதமான பொருட்களையும் அணுக் கழிவுகள் என்று குறிப்பிடுகிறார்கள். விலை குறைவாக, வீரியமான முறையில் சக்தி கிடைக்கிறது, கார்பன் மாசுபாடு மிகக் குறைவு என்பது அணுவின் நன்மை எனில், அதனால் உருவாகும் இந்த கழிவுகள் மிக அபாயகாரமானதாக இருக்கின்றன#7.
பொதுவாக அணு உலைகள் தவிர்த்து பிற தொழிற்சாலை உற்பத்திகளில் குறிப்பாக, எண்ணெய் உற்பத்தி நிலையங்களில் மிக அதிகளவில் கதிரியக்க கழிவுகள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு அபாயகராமானவைதான் என்றாலும் இவை குறை சக்தி கதிரியக்க கழிவுகள்(LLW/ILW). அதாவது பிற தொழிற்சாலை கழிவுகள் போன்றதே இது. இப்படி சொல்வதன் அர்த்தம் இந்த கழிவுகள் குறித்து நாம் குறைத்து மதிப்பிடுவது என்பது அல்ல. இன்று மனித குலத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள உலக வெப்பமடைதலுக்கு பின்னால் உள்ள அராஜக ஏகாதிபத்திய உற்பத்தி முறையை இந்த பிரச்சினைக்கும் காரணம். இவை நமது கடும் கண்டனத்திற்க்கும் எதிர்ப்பிற்கும் உள்ளாகும் விசயமாகவே உள்ளது. ஆயினும் ஒரு குற்றத்தை காரணம் காட்டி அதை விட பல மடங்கு பெரிய தவறை நியாயப்படுத்த முயலும் கயமைத்தனத்தை அம்பலப்படுத்தும் போது பெரிய தவறு உண்மையில் பெரிய தவறு என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டியுள்ளது. ஏனேனில் HLW எனப்படும் அதி உயர் கதிரியக்க கழிவுகளில் அணு கழிவு மட்டும்தான் வருகிறது. இப்படி ஒரு வருடத்திற்க்கு உருவாகும் HLW கழிவுகள் 12,000 மெட்ரிக் டன். அதாவது நூறு இரண்டு அடுக்கு பேரூந்து நிறைய கழிவுகள் உருவாகின்றன.
அணு வெடிப்பின் மூலம் கதிரியக்க தன்மை வாய்ந்தவையாக வெளிவரும் அணுக்களின் கதிரியக்க வாழ்நாள் வேவ்வேறாக உள்ளது ஒரு எடுத்துக்காட்டுக்கு ஐயோடின் உப்பின் கதிரியக்கம் 8 நாட்களில் வடிந்துவிடுகிறது. ஆனால் யுரெனியம் வெடிப்பில் பயன்படுத்தப்படும் புளோட்டனியம்-239 கழிவு வாழ்நாள் பல நூறு-ஆயிரம் வருடங்கள் நீடித்திருக்கும் தன்மை வாய்ந்தது. இன்ன பிற கழிவுகளின் வாழ்நாள் பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் நீடித்திருக்கும். இதுதான் அணுக் கழிவுகளை மிக அபாயகரமானதாக மாற்றுகிறது. ஆக, மனித சமுதாயத்தின் தொடர்பிலிருந்து, புவியின் உயிர் சூழலின் தொடர்பிலிருந்து இந்த அணுக் கழிவுகள் சுத்தமாக தனிமைப்படுத்தப்பட்டு பல நூறு-ஆயிரம்-மில்லியன் வருடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியிருக்கிறது. இப்படி பாதுகாப்பதற்க்கான தொழில் நுட்பம் எதுவும் இல்லை.
இது போன்ற கழிவுகளை ஒழித்துக்கட்டும் தொழில்நுட்பம் இன்றி அவற்றை மூட்டைக் கட்டி சேர்த்து வைக்கும் வேலையையே தற்போது செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் யுகா(Yucca) மலையை இப்படி அணு குப்பைக் கூடையாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இது கடும் எதிர்ப்புகளை கடந்து வந்து கொண்டிருக்கிறது. இப்படி சேமித்து வைக்கப்படுவதற்க்கும் இடங்கள் இன்றி தற்போது தவித்து வருகிறார்கள். இது அணுக் கழிவுகள் என்ற அபாயம் குறித்தானது.
இது ஒருபக்கம் என்றால் இந்த அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் என்ன நடக்கும் என்பது மிக அபாயகரமானதாக இருக்கிறது.
அணு எந்தளவுக்கு சக்தி கொண்டது எனில் நிலக்கரி, டிஎண்டி போன்றவற்றிலிருந்து பெருவதைவிட குறைந்தது 10மில்லியன் மடங்கு அதிகமான உபயோகிக்ககூடிய சக்தி அணுவிலிருந்து கிடைக்கிறது #8. ஹிரோசிமாவில் போடப்பட்ட அணு குண்டில் இருந்த யூரேனியம்-235 அணுவின் அளவு 60கிலோ இதில் 828 கிராம்தான் வெடித்தது, இதிலும் 6கிராம்தான் சக்தியாக உருமாறியது #9. இதிலிருந்து வெளிப்பட்ட சக்தியின் அளவு 13கிலோடன் டிஎண்டி வெடித்ததற்க்கு இணையாக இருந்தது. இதுவே ஒரு முழு நகரத்தை உடனடியாக அழித்தது எனில் இதன் சக்தியை புரிந்து கொள்ளலாம். இந்த தோல்விகரமான குண்டு வெடித்ததில் உடனடியாக 1.6 கிலோமீட்டர் சுற்றளவு அழிந்து விட்டது. இதனால் ஏற்பட்ட தீ 11.2 சதுர கிலோமிட்டர் பரப்பளவிற்கு பரவியது. ஹிரோசிமாவின் 90% நகரம் முற்றிலும் அழிந்தது #10. நாகசாகியில் வெடித்த குண்டு உருவாக்கிய காளான் புகையோ 18 கிலோமீட்டர் உயரம் இருந்தது.
நாகசாகியில் இடப்பட்ட புளூட்டோனியம்-239 குண்டு 6.4 கிலோதான். இதிலிருந்து வந்த சக்தி 21 கிலோடன் டிஎண்டிக்கு இணையாக இருந்தது. உருவான வெப்பம் 3900 டிகிரி செல்சியஸ், காற்றின் வேகம் 1005கிமீ/மணி. உடனடி அழிவு 1.6 கிமீ சுற்றளவிலும், இதனால் ஏற்பட்ட தீ 3 கிமீ சுற்றளவுக்கு பரவியது. இந்த இரண்டு குண்டு வெடிப்பிலும் உடனடியாக இறந்தவர்கள் லட்சங்களில். கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு அடுத்த சில மாதங்களில் இதே அளவில் இறந்தார்கள். இது தவிர்த்து இதன் கதிரியக்க விளைவுகள் இன்று வரை கூட தொடர்கின்றன.
அணு விபத்துக்கள் என்றால் அவ்வப்போது சிறிய அளவில் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலும் உண்மை நிலவரங்களை யாரும் வெளியிடுவதில்லை. அணு விபத்துக்களில் முக்கியமானவை எனில் ரஸ்யாவில் நிகழ்ந்த செர்னோபிள்ளும், அமெரிக்காவில் நிகழ்ந்த மூன்று மைல் தீவு விபத்தும் உள்ளன. இதில் செர்னோபிள் விபத்தில் 56 பேர் சொச்சம் இதுவரை இறந்துள்ளனர். கதிரியக்க பின் விளைவுகள் குறித்து முரன்பாடான தகவல்கள் உலாவுகின்றன. மூன்று மைல் தீவு விபத்தில் யாரையுமே கதிரியக்கம் பாதிக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆயினும் இந்த உலை மூடப்பட்டது. குறிப்பாக செர்னோபிள் விபத்தில் கதிரியக்க சாம்பல்களும், தூசுகளும் 1000மைல்களுக்கு அப்பால் ஐரோப்பிய நாடுகளில் காற்றில் பரவி கதிரியக்க பாதிப்பை ஏற்படுத்தும் அளவு இருந்தது. செர்னோபிள்லிருந்து சில கிமீ தள்ளியிருந்த பிரிபியாட் நகரமே மொத்தமாக காலி செய்யப்பட்டது. வெறும் கட்டங்களுடன் பேய் நகரமாக அது நிற்கிறது. செர்னோபிளில் வெடித்த அணு உலையை மறைக்கும் வகையில் ஒரு பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டது. பிறகு அந்த வெடித்த அணு உலையில் அபாயகரமான கழிவுகள் இருப்பதை முன்னிட்டு தற்போது 105மீ உயரம், 200 மீ நீளத்தில், 257மீ அகலத்தில் ஒரு பெரிய வளைவு உலோக மூடி ஒன்றை தயாரித்து 2011ல் இந்த அணு உலையை மூடப் போகிறார்கள். இந்த இரண்டு விபத்துக்களும் அணு உலை குறித்த சர்வதேச கண்ணோட்டத்தை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு ஆற்றின. குறிப்பாக மேற்கு நாடுகள் புதிதாக அணு உலைகள் திறப்பதையே இத்துடன் நிறுத்திக் கொண்டன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அனைத்துமே தம்மிடம் ஏற்கனவே உள்ள அணு உலைகளின் வீரியத்தை அதிகப்படுத்தி தமது மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டனர் #11, #12.
அணுவின் நன்மை தீமைகள் குறித்து இங்கு பார்ப்பதன் முக்கியத்துவம் ஒன்று உள்ளது. விஞ்ஞானிகள் மனித குலத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காகவே அரிய பல கண்டுபிடிப்புகளை செய்கிறார்கள். ஆயினும் மனிதர்களிடையே இருக்கின்ற முரன்பாடுகளும், முதலாளித்துவ லாப வெறியும் அந்த கண்டுபிடிப்புகளை மனித குலத்திற்கே எதிராக பயன்படுத்தச் செய்து விடுகிறது. எய்ட்ஸை சோதனைச் சாலையில் உருவாக்கி தனது சொந்த நாட்டு மக்கள் மீதே பரிசோதித்த அமெரிக்க முதல் இன்று பரிசோதனைச் சாலை எலிகளாக அப்பாவி இந்தியா ஏழைகளை அரசு மருத்துவமனைகளில்(AIIMS Children killed in Medical trial) கொன்று குவிப்பது வரை இவர்களின் லாப வெறியும் போட்டி பொறாமையும் மனிதர்களை மதித்ததே இல்லை என்பதுதான் உண்மை. இங்கு கேள்வி நாம் ஒரு சமூகமாக அணு சக்தியை பயன்படுத்தும் பொறுப்பு உடையவர்களாக இருக்கிறோமா என்பதுதான்.
இந்த விபத்துக்கள் எல்லாமே மிக முன்னேறிய நாடுகளில் ஏற்பட்ட விபத்துக்கள். எடுத்துக்காட்டுக்கு செர்னோபிள் விபத்தில் வெளியேறிய மக்களுக்காக பல கோடிகளில் புதிய குடியிருப்புகளும், பள்ளிக் கூடங்களும், மருத்துவமனைகளும் இன்ன பிற நகர்ப்புற அத்தியாவசிய உள்கட்டுமானங்களும் புதிதாக கட்டியமைக்கப்பட்டன. உள்ளூரில் கிடைக்கும் மரத்தை எரித்தால் கதிரியக்கம் வரும் என்று நம்பியதால் இந்த இடங்களுக்கான எரிபொருள் தேவைக்காக 8,980 கிமீ நீளத்திற்க்கு புதிதாக எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டன. உள்ளிருந்தே சிதைக்கப்பட்டுக் கொண்டிருந்த சோசலிச கட்டுமானத்தைக் கொண்டு அன்றைய ரஸ்ய ஏகாதிபத்தியம் இவற்றை சமாளித்தது. இதே போன்ற விபத்து இந்தியாவில் ஏற்பட்டால் என்ன ஆகும்? இந்தியாவில் அணு உலைகள் மக்கள் வாழும் இடங்களின் அருகிலேதான் வைக்கப்பட்டுள்ளன- கல்பாக்கம் அணு உலை முதற் கொண்டு. இந்தியா தனது மக்களை எந்தளவிற்கு மதிக்கிறது என்பதற்க்கு ஆதாரங்கள் தேவையில்லை. அணு விபத்து அல்ல மாறாக ஒரு சாதரண ராசயண விபத்து இந்தியாவில் போபாலில் நிகழ்ந்தது. யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க உளவு கம்பேனி நடத்திய சோதனையின் விளைவாக ஆயிரக்கணக்கில்(அரசு சொல்வது - 3000 பேர், ஓரளவு நம்பத்தகுந்த விவரம் - 8000 பேர், ஒட்டு மொத்தமாக இது வரை கிட்டத்தட்ட 20,000 பேர் வரை) போபால் மக்கள் இறந்து போயினர். இன்று வரை இந்த அமெரிக்க கம்பேனியின் பொறுப்பாளர் எவனையும் கைது செய்யவோ தண்டனை கொடுக்கவோ இல்லை இந்த அரசு. இது வரை அந்த தொழிற்சாலை கழிவுகள் அகற்றப்படவில்லை. வாழும் வெடி குண்டாக அந்த தொழிற்சாலைக் கழிவுகள் நீர், நிலம், காற்றை நஞ்சாக்கி பல்வேறு உடல் கேடுகளை உருவாக்கி வருகிறது. இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணம் தரப்படவில்லை. விசயம் இப்படி இருக்க யூனியன் கார்பைடு மீது உள்ள வழக்கை விலக்கிக் கொள்ள தயார் என்று முழங்குகிறார் மன்மோகன் சிங். இதுதான் இந்திய அரசு தனது மக்களை மதிக்கும் விதம். சென்னை அருகில் உள்ள கல்பாக்கம் அணு உலை உலகின் மிக அபாயகரமான உலைகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது, அடிப்படை குளிர்விக்கும் வசதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இல்லாத அணு உலை அது என்பது இங்கு கவனிக்கத்தக்கது #13.
அணு சக்தி என்பது மிக மிக அற்புதமானதொரு/அபாயகரமானதொரு சக்தி அதனை பயன்படுத்துவது என்பதற்க்கு குறைந்த பட்ச ஜனநாயக பண்பு கொண்ட சமூகத்தாலேயே முடியும் இல்லையேல் அது அபாயகரமானது. அணு சக்தி தயாரிப்பு தொழில் நுட்பம் குறித்து இப்போது பார்க்கலாம்.
அணு சக்தி உற்பத்தி தொழில் நுட்பம்: (Sensitive Nuclear Technology - SNT)
அணு சக்தி தொழில் நுட்பத்தில் மூன்று தொழில் நுட்பங்கள் மிக முக்கியமானதாக சொல்லப்படுகின்றன(SNT).
அவை முறையே #14,
#1) யுரேனியம் செறிவூட்டுதல் - Uranium Enrichment,
#2) மறு பயன்பாட்டுக்கான தயாரிப்பு - Nuclear Fuel Reprocessing,
#3) கன நீர் தாயாரிப்பு - Heavy water manufacturing.
இந்த மூன்று தொழில் நுட்பங்களை தெரிந்த கொண்டுள்ள நாடு அணுவிலிருந்து சக்தி எடுப்பதைப் பொறுத்தவரை சுயச் சார்பான நாடாகும் தகுதி படைத்தது. இந்த மூன்று தொழில் நுட்பம் தெரிந்த நாடு சொந்தமாக அணு குண்டுகளையும் தயாரிக்கலாம். எனவேதான் இந்த தொழில் நுட்பங்கள் பிற நாடுகளுக்கு பரவுவது ஏகாதிபத்தியங்களுக்கு பிடிப்பதில்லை. இப்பொழுது இந்த மூன்று தொழில் நுட்பங்கள் குறித்து சுருக்கமாக பார்க்கலாம்.
யுரேனியம் செறிவூட்டுதல் எனப்படுவது இயற்கையில் U238 என்ற அணு எடை கொண்ட ஐசோடோப்புகள் அதிகம் இருக்குமாறு கிடைக்கும் கச்சா யுரேனியத்தை U235 என்ற அணு எடை கொண்ட யுரெனியம் ஐசோடோப்பு அதிகம் கொண்டதாக மாற்றுவதே யுரேனியம் செறிவூட்டுதல் எனப்படுகிறது. இதுதான் எரிப்பதற்க்கு ஏற்ற அணு எரிபொருள் வடிவம் ஆகும் #15.
மறு பயன்பாட்டுக்கான தாயாரிப்பு (N Fuel Reprocessing) எனப்படுவது ஒரு முறை பயன்படுத்தப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரி பொருள் கலவையிலிருந்து புளூட்டோனியம், கச்சா யுரேனியம்(U238) போன்றவற்றை பிரித்தெடுப்பது ஆகும். இதனுடன் யுரெனியம் செறிவூட்டுதலில் கிடைக்கும் தரம் குறைந்த யுரேனிய எரிபொருளை(Depleted Uranium) கலந்து, இது மீண்டும் இன்னொரு முறை எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது குறை செறிவு யுரேனிய எரிபொருளுக்கு இணையான சக்தியை கொடுக்கும் தன்மை கொண்டது. உலகிலுள்ள பெரும்பாலான அணு சக்தி உலைகள் குறை செறிவு யுரேனியத்தில் இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டவையே (குறிப்பாக ரஸ்ய வகைகள்). இந்த மறுபயன்பாட்டு எரிபொருள் கலவையை ஆக்சைடு எரிபொருள் கலவை என்கிறார்கள்(Mixed Oxide Fuel) #16, #17. இந்த தொழில் நுட்பத்தின் மூலமும் அணு ஆயுதம் தயாரிக்கலாம்.
கன நீர் தாயாரிப்பு குறித்து. சாதாரண நீர் என்பது H2O. கன நீர் என்பது D2O. இதில் D என்பது ஹைட்ரஜன் ஐசோடோப்பு. அணு உலையில் எரிக்கப்படும் அணுவிலிருந்து கிடைக்கும் வெப்பத்தால் கனநீர் ஆவியாக்கப்பட்டு அந்த அழுத்தமான ஆவி டர்பைனில் மோதவிடப்பட்டு அது ஒரு ஜெனெரேட்டரை இயக்கி மின்சாரம் தாயார் செய்யப்படுகிறது. கன நீர் தயாரிப்பு தொழில் நுட்பத்தின் மூலம் யுரெனியம் செறிவூட்டுதல் தொழில் நுட்பம் இன்றியே (புளுட்டோனியம்)அணு ஆயுதம் தயாரிக்க முடியும். #18.
மேற்சொன்ன மூன்றில் ஏதேனும் ஒரு தொழில் நுட்பம் இருந்தாலே அதன் மூலம் அணு ஆயுதத்திற்க்கு தேவையான புளூட்டோனியமோ அல்லது செறிவூட்டப்பட்ட யுரேனியமோ எரிபொருளாக தயாரிக்க முடியும் என்பதால் இவற்றை மிக முக்கிய தொழில் நுட்பங்களாக வகைப்படுத்தியுள்ளனர் ஏகாதிபத்தியங்கள்.
இந்த மூன்று தொழில் நுட்பங்களுமே இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன. நாம் யாரிடமும் யுரேனியம் சம்பந்தப்பட்ட இந்த தொழில் நுட்பங்களுக்காக கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான் உண்மை.
ஒரு உண்மை கடந்த 30 வருடங்களாக புதிய அணு உலைகளை மேற்கு நாடுகள் நிறுவாததால் அந்த அரதப் பழசான விற்காத தொழில்நுட்பங்களை, உலைகளை 3 லட்சம் கோடிக்கு நம் தலையில் கட்டுகிறார்கள் அமெரிக்க யுரெனிய உலை முதலாளிகள். இன்னொரு உண்மை இந்த தொழில் நுட்பங்களும் நம்மிடம் ஏற்கனவே இருக்கின்றன. இன்னொரு உண்மை இதே போல இந்தியா விஞ்ஞான வளர்ச்சியடைந்து சுயசார்பு அடைவது என்பதை, அமெரிக்கா எப்போதுமே திட்டமிட்டு முடக்கி வந்துள்ளது அல்லது இணைந்து வேலை செய்யலாம் என்று தொழில் நுட்பங்களை திருடி வந்துள்ளது. வெகு சுலபமான உதாரணங்கள் ராணுவ தளவாடங்கள், ராக்கெட், இலகு ரக விமான தயாரிப்புகளில் எப்பொழுதெல்லாம் இந்தியா அடுத்தக்கட்ட தொழில் நுட்ப வளர்ச்சியடைகிறதோ அப்பொழுது அந்த தொழில்நுட்பத்தை பயன்பாட்டுக்கு வரவிடாமல் தடுத்து தன்னிடம் உள்ள இணையான-பழைய தொழில் நுட்பத்தை தலையில் கட்டும். ஈராக்கிற்கு ஒரு ஸ்கட் என்றால் இஸ்ரேலுக்கு ஒரு பேட்ரியாட். பேட்ரியாட்தான் சக்தி வாய்ந்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அமெரிக்காவுடனான நமது இதுவரையான வணிக உறவுகளில் நம்மை அவர்கள் ஏமாற்றியதுதான் வரலாறாக உள்ளது. தராப்பூர் அணு மின் நிலையம், பசுமைப் புரட்சி, கோதுமையில் பார்த்தீனியச் செடி, செயற்கைகோள் மூலம் பார்த்து வளங்கள் இல்லை என்று பொய் சொன்னது, முதல் சமீபத்திய ராணுவ தளவாட வியாபாரங்கள் வரை. அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பது பற்றிய நமது இந்த கருத்து ஒரு அம்சம் மட்டுமே. இதுவும்கூட மையமான நமது எதிர்ப்பிற்க்கு காரணம் அல்ல.
இது தவிர்த்து அணு சக்தி தாயாரிப்பில் தோரியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் தொழில் நுட்பம் வேறு உள்ளது #19. தோரியத்தை எரிபொருளாக பயன்படுத்தும் போது அது U233 என்ற யுரேனியம் ஐசோடோப்பாக மாறி பின்பு எரிகிறது. U233 என்பதும் U235யை போலவே அணு உடைப்பு பண்பு கொண்ட ஐசோடோப்பு ஆகும் (Fissile Isotope). எனவே யுரேனியத்தை பயன்படுத்தும் முன்பு அதனை U235 ஆக மாற்றுவது போல தோரியத்தை பயன்படுத்தும் போது செய்ய வேண்டியது இல்லை. அதாவது யுரேனியம் செறிவூட்டல் என்று தனியாக எதுவும் செய்யத் தேவையில்லை. மேலும் தோரியத்திலிருந்து உருவாகும் அணு கழிவு குறைவு.
இந்த தொழில்நுட்பத்திலும் இந்தியா சுயச்சார்பானதாகவே உள்ளது. தோரியத்தை அடிப்படை எரிபொருளாக பயன்படுத்தும் ஆராய்ச்சியில் மூன்று கட்டத் திட்டம் ஒன்றை இந்தியா கடைபிடித்தது.
முதலில் கன நீர் தயாரிப்பு தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதன் மூலமும், Reprocessing மூலமும் பூளூட்டோனியம் தயாரிப்பது, உயர் அழுத்த கன நீர் உலைகளை தொழில்நுட்பத்தில் சுயச்சார்படைவது.
இரண்டாவது கட்டமாக இந்த புளூட்டோனியத்தை, தோரியத்துடன் சேர்த்து யூரேனியம் U233ஆக மாற்றி அணு உலையில் எரிப்பது.
மூன்றாவதாக இந்த வகை அணு உலையிலிருந்து தோரியத்தை நேரடியாக U233 ஆக மாற்றி பிறகு அதனை எரிபொருளாக பயன்படுத்துவது #20.
இது தவிர்த்து இதே தோரியம் தொழில் நுட்பத்தில் இயங்கும் அணு உலைகளை இந்தியாவிற்க்கு விற்பதற்க்கும் அமெரிக்காவில் உள்ள சில கம்பேனிகள் தயாராக உள்ளன. ஆனால் அந்த கோரிக்கைகள் அமெரிக்க இந்திய அரசுகளால் ஊக்கப்படுத்தப்படவில்லை. அந்த தொழில் நுட்பம் கிடைத்தால் இந்தியா வெளிநாடுகளை நம்பியிராமல் தனது சொந்த தோரியம் இருப்பைக் கொண்டே அணு சக்தி தயாரிக்கலாம் (''Thorium to give India an edge'' எக்னாமிக் டைம்ஸ் - 4 Jan, 2007). ஆனால் அவ்வாறு நடந்தேறாமல் யுரேனியம் என்ற துருப்புச் சீட்டின் மூலம் மட்டுமே இந்த ஒப்பந்தம் நடந்தேற வேண்டும் என்பதில் அமெரிக்காவும், இந்திய அரசும் உறுதியாக நிற்கின்றன. ஏனேனில் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் அணு சக்தி கிடையாது. இது பின்னர் விரவாக பார்க்கப்படும்.
உண்மையில் அமெரிக்க கம்பேனியின் தோரியம் தொழில் நுட்பமும் நமக்கு தேவையில்லை. நாமே இந்த துறையில் போதிய தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றுள்ளோம்.
செப்டம்பர் 1970லேயே டிராம்பேயில் உள்ள பாபா அணு சக்தி மையம் தோரியத்திலிருந்து U233 யுரேனியம் ஐசோடோப்பை வெற்றிகரமாக பிரித்தெடுத்தது #21.
1995-ல் காக்ரபுர்-ல் இரண்டு அணு உலைகளில் குறை செறிவு யுரேனியத்திற்கு பதிலாக உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தோரியம் வெற்றிகரமாக உபயோகிக்கப்பட்டது.
குறிப்பாக ஆகஸ்டு 2005ல் மும்பை பாபா அணு ஆய்வு மையம் தோரியத்தை புளூட்டோனியத்துடன் வினையூட்டி U233 எரிபொருள் உருவாக்கி அணு சக்தி தயாரிக்கும 600MW திறன் கொண்ட இரண்டாம் கட்ட அணு உலையை வடிவமைத்து அறிவித்தனர் #22. உலகிலேயே மிக பாதுகாப்பான அணு உலையாக இதனை பெருமையுடன் அறிவித்தனர். ஏனேனில் யுரேனியம் செறிவூட்டல் தேவையில்லை. இரண்டு வருடத்திற்க்கு எரிபொருள் தேவையின்றி, எந்த தலையீட்டுக்கான அவசியமுமின்று சுலபமாக சக்தியை உருவாக்கும் இந்த அணு உலை. அணு உடைப்பு சுமுகமாக நடந்தேறுவதால் அணு உலையில் எரிபொருளை தாங்கி நிற்கும் Core எனப்படும் பகுதியின் வாழ்நாள் இரண்டு வருடங்களாக அதிகரிக்கிறது. எனவே அணுக் கழிவுகளை கையாள்வதும் யுரேனியம் அணு உலைகள் போன்று அடிக்கடி இல்லாமல் இலகுவானதாக உள்ளது. இதிலிருந்து அணுக் கழிவுகளும் குறைவாக வருகிறது. வடிவமைப்பில் இருந்த இந்த அணு உலை 2008ல் கல்பாக்கத்தில் நிறுவப்பட்டு கடைசி கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இது தோரியம் அணு உலையை நோக்கிய இரண்டாவது கட்டம்.
தோரியம் தொழில் நுட்பத்தின் கடைசி கட்டமாகிய மூன்றாவது கட்டம் வரை இந்தியா வெற்றி கண்டுள்ளது(AHWR). AHWR வகையில் 75% தோரியம் எரிபொருளாக இருக்கும். இது தவிர்த்து மூன்றாவது கட்டத்தில் முற்றிலும் தோரியத்தை மட்டுமே பயன்படுத்தும் ADS (Accelerator Driven Systems) உலைகளை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் சோதனை அளவில் வெற்றி பெற்றுள்ளது. கல்பாக்கத்தில் காமினி(KAMINI)-கல்பாக்கம் மினி என்ற பெயரில் 30KW உலை நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.300MWல் புதிய தோரிய அணு உலை நிறுவும் வேலைகள் நடந்து வருகின்றன #23.
இரண்டாவது கட்டத்தில் உள்ள ஒரு பிரச்சினை தோரியத்துடன் சேர்ந்து புளூட்டோனியத்தை பயன்படுத்த வேண்டியுள்ளது. புளூட்டோனியம் நமக்கு இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒன்று வெளிநாடுகளிடமிருந்து வாங்குவது. மற்றொன்று Reprocessing மூலமும், கன நீர் தயாரிப்பு தொழில்நுட்பத்தின் மூலமும் புளுட்டோனியம் தயாரிப்பது. இதில் முதல் வகையை நாம் நம்ப இயலாது. மேல்நிலை வல்லரசுகள் நமது சுயசார்பை ஒழித்துக்கட்ட வசதியாக புளூட்டோனியம் கிடைப்பதை தடுக்கவே செய்வார்கள். ஆனால் நம்மிடம் ஏற்கனவே உள்ள Reprocessing தொழில்நுட்பத்தின் மூலமும், கன நீர் தொழில் நுட்பத்தின் மூலமும் நமக்கு தேவையான புளூட்டோனியத்தை நாமே தயாரித்துக் கொள்ளலாம் (இதுவும் கூட மூன்றாவது கட்டமாகிய ADS முழுமையாக வியாபார பயன்பாட்டுக்கு வரும் வரைதான். அதற்க்கு பிறகு இந்த பிரச்சினைகளும் கிடையாது).
இதன் அர்த்தம் SNT எனப்படும் அணு தொழில்நுட்பங்களில் இந்த இரண்டு தொழில்நுட்பங்கள் இந்தியா தனது அணு விஞ்ஞானத்தை அடுத்தக்கட்டத்திற்க்கு சுதந்திரமாக வளர்த்தெடுப்பதற்க்கு இன்றியமையாததாக உள்ளது என்பதே ஆகும். தற்போதைய 123 ஒப்பந்தம் இந்த இரண்டு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவதற்க்கும், வளர்த்தெடுப்பதற்க்கும் ஆப்பு அடிப்பதாக இருப்பதாலேயே விஞ்ஞானிகள் இதனை எதிர்க்கிறார்கள் #24. இப்பொழுது இந்தியாவில் அணு தொழில் நுட்பம் வளர்ந்த பாதையையும், இந்தியாவின் மின்சாரத் தேவை குறித்தும், இந்தியாவில் உள்ள யுரேனியம், தோரியம் எரிபொருள்களின் எதிர்காலம் குறித்தும் பார்க்கலாம்.
இந்தியாவில் அணு தொழில் நுட்பத்தின் வளர்ச்சிப் பாதை, எரிசக்தி தேவை, எரிபொருள் இன்னபிற:
22 ஜனவரி 1965-ல் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி புளூட்டோனியம் ரிபுரோசசிங் ஆலையை டிராம்பேவில் திறந்து வைத்தார். அமெரிக்காவின் கருத்தில் அப்போதைய இந்தியா ஒரு வருடத்திற்க்கு 100 அணு குண்டுகள் தாயாரிக்க தேவையான புளூட்டோனியம் ரிபுரோசஸ் செய்யத் தேவையானவற்றை கொண்டிருந்தது.
செப்டம்பர் 1970லேயே டிராம்பேயில் உள்ள பாபா அணு சக்தி மையம் தோரியத்திலிருந்து U233 யுரேனியம் ஐசோடோப்பை வெற்றிகரமாக பிரித்தெடுத்தது #25.
22 May 1972-ல் பூர்ணிமா-I ஆய்வு உலை பாபா அணு சக்தி மையத்தில் நிர்மாணிக்கப்பட்டது. முற்றிலும் பாபா அணு சக்தி மையத்தின் இந்திய விஞ்ஞானிகளாலேயே தயாரிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது. 21 கிலோ புளூட்டோனியத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது இந்த உலை #26.
இந்த காலகட்டத்தில் அணு ஆயுதம் குறித்த இந்தியாவின் கருத்து அமைதிக்காக அணு ஆயுதம் பரிசோதனை செய்வது என்ற நிலையை அடைந்தது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமிருந்து அணு உதவிகளை பெற்று வந்தது. ஆயினும் வெளிப்படையாகவே அணு வெடிப்பு சோதனைக்கு தயாராகி வருவதை அறிவித்தே வந்துள்ளது இந்தியா. பாராளுமன்றத்திலும் இவை குறித்து அடிக்கடி மயிர் பிளக்க விவாதிக்கப்பட்டது.
1974-ல் IAEAன் நிர்வாகக் குழுவில் இந்தியா உறுப்பினராக தொடர்ந்து 18வது வருடமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. காரணம் அணு சக்தி தொழில் நுட்பம் உள்ள உலகின் 9 நாடுகளில் ஒன்றாக அன்று இந்தியா இருந்தது.
18 மே 1974-ல் இந்தியா பொக்ரானில் அணு குண்டு வெடிப்பு சோதனை செய்கிறது. அணு இணைப்பு(Fusion) தொழில் நுட்பத்திற்க்கான ஆய்வுகளையும் இந்திய விஞ்ஞானிகள் தொடங்கினர்.
இதற்க்கு பிறகும் கூட ஜூன் 1974ல் தராப்பூர் அணு மின் நிலையத்திற்க்கு யுரேனியம் அனுப்புகிறது அமெரிக்கா. இந்தியாவின் அணு குண்டு சோதனை எந்த ஒப்பந்தத்தையும்(1963 ஒப்பந்தம்) மீறிவிடவில்லை என்று அமெரிக்க கூறியது #27.
ஆனாலும் கூட செப்டம்பர் 1974ல் இந்திய அணு சக்தி கமிசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா. இது அடுத்தக்கட்ட யுரேனியம் அனுப்புவதற்க்கு புதிய உறுதிமொழிகளையும், பாதுகாப்பு உடன்படிக்கைகளையும் கோருவதாக இருந்தது.
25 ஆகஸ்டு 1975-லோ இன்னும் ஒரு படி மேலே போய் அமெரிக்க உளவு பிரிவினர் பின் வரும் அறிக்கை அளித்தனர் அதாவது, இஸ்ரேலுக்கு எதிராக எகிப்து அணு குண்டு தயாரிக்க இந்தியாவின் உதவியை வேண்டி இருப்பதாக அறிக்கை அளித்தனர்.
தீடிரென்று ஜனவரி 31 1976-ல் தாராப்பூர் அணு உலையில் கதிரியக்க கசிவு அபாயம் இருப்பதாக சொல்லும் GE(General Electricals என்ற ரத்தவெறி கம்பேனி)யின் குற்றச்சாட்டை அமெரிக்க செனட் கமிட்டி ஆய்வு செய்ய இருப்பதாக அமெரிக்க செனட்டர் ஜான் க்லன் கூறினார். அமெரிக்க அணு கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த டாக்டர் ஸ்டீவன் ஹனயுர் தராப்பூர் அணு உலை பெரிய அபாயாத்தை எதிர்நோக்கி இருப்பதாக கூறினார். இத்தனைக்கும் இந்த அணு உலையில் புதிய எரிபொருள் நிரப்புவதும் அதனை ஒட்டி பராமரிப்பு பணிகள் முழுவதும் சில வாரங்களுக்கு முன்புதான் செய்து முடிக்கப்பட்டிருந்தன. இந்த புதிய எரிபொருள் கூட அணு குண்டு வெடிப்பிற்கு பிறகு அமெரிக்கா இந்தியாவிற்கு அனுப்பியதுதான். விசயம் அணு வெடிப்பு அல்ல மாறாக எகிப்து உடனான இந்திய அணு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டதே பிரச்சினை.
இதற்கிடையில் இந்தியாவின் உறுதிமொழியை ஒட்டி கனடா மீண்டும் உதவிகள் செய்ய ஒத்துக் கொண்டது(பிறகு உடனடியாக பின்வாங்கியும் விட்டது). ஒப்பந்தத்தை இந்தியா மீறிய போதும் கூட வலியுறுத்தி கேட்ட போது கனடா ஒத்துக் கொண்டது. ஆனால் போட்டுக் கொண்ட 1963 ஒப்பந்தத்திற்க்கு சம்பந்தமில்லாமல் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தனக்கு விரோதமாக இருப்பதாலேயே இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்தது அமெரிக்கா. ஏப்ரல் 1974-ல் NSG வழிகாட்டுதல்களுக்கு கட்டுப்படுவதாக எழுதிக் கொடுக்கச் சொல்லி இந்தியாவிற்க்கு புதிய நிபந்தனைகளை விதித்து மிரட்டுகிறது அமெரிக்கா. குறிப்பாக உயர் அணு தொழில்நுட்பங்களை இந்தியா ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துவதுதான் அமெரிக்காவின் இந்த நெருக்குதலுக்கு காரணம். கடைசியில் 1963 ஒப்பந்தத்தை தூக்கி குப்பையில் போட்டு மூடியது அமெரிக்கா. காரணம் அணு குண்டு வெடிப்பு என்று அமெரிக்காவும் சொல்லவில்லை. உண்மையும் அதுவல்ல. தராப்பூர் ஆலை தனக்கான எரிபொருள் தேவைக்கு மாற்று வழிகளை வேண்டி நின்றது.
உலகில் வேறு எங்குமே இல்லாத புதிய தொழில் நுட்பத்தில் ரிபுரோசசிங் செய்யும் ஒரு ஆலையை 1974-ல் ஹைதராபாத்தில் நிறுவப்பட்டது. இதனிடையா இந்தியா ஈரான், எகிப்து, லிபியா போன்ற நாடுகளுக்கு அணு சக்தி தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்க்கான வேலைகளில் இறங்கியது.
இந்தியாவிற்கு அணு எரிபொருள் தொடர்ந்து வேண்டுமென்றால் முழு அணு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும், ரிபுரோசசிங் தொழில்நுட்பத்தை தலைமுழுக வேண்டுமென்றும் அமெரிக்கா நிர்பந்தித்தது. இந்த அடிப்படையில் அணு எரிபொருளை அனுப்பியும் வைத்தது. ரிபுசோசசிங் தொழில் நுட்பத்தையும், கன நீர் தயாரிப்பு தொழில் நுட்பத்தையும் விட்டொழித்தால் எல்லா காலத்திற்க்கும் இந்தியா மேல் நிலை வல்லரசுகளிடம் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டியதுதான். ஏனேனில் நமது அணு எரிபொருள் சுயச்சார்பை உறுதிப் படுத்தும் துருப்புச் சீட்டு இந்த இரண்டு தொழில் நுட்பங்கள்தான் என்பதை நாம் மேலே ஏற்கனவே விளக்கியிருந்தோம்.
ஆயினும் இந்த காலகட்டம் முழுவதும் தராப்பூர் அணு உலைக்கு தேவையான யுரேனியத்தை அமெரிக்க அனுப்பியே வந்தது(தாமதமாகவேனும்). காரணம் வேறொன்றுமில்லை, இந்தியாவிடமே இருக்கும் யுரேனியம் 1980-ல் கண்டுபிடிக்கப்பட்டதும். அதனை செறிவூட்டுவதற்க்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகளை இந்திய விஞ்ஞானிகள் 1980களில் உடனடியாகவே தொடங்கிவிட்டதுமே காரணம். அமெரிக்கா 1980 மத்தியில் யுரெனியம் அனுப்புவதற்க்கு முரண்டு பிடித்த வேளையில் இந்தியா தான் சொந்தமாக தாயரித்த யுரேனியத்தின்(உத்தரபிரதேசத்திலிருந்து) மூலமே அணு உலைகளை நடத்தும் வேலைகள் தொடங்கிவிட்டது. 1981-ல் ரீகன் அரசு தராப்பூர் அணு உலைக்கு யுரேனியம் அனுப்புவதை நிறுத்திக் கொள்வதற்க்கு அடிப்படையாக இருந்த 1963 ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. தராப்பூர் அணு உலைக்கு தேவையான உதிரி பாகங்கள் வழங்குவதற்க்கு GE கம்பேனிக்கு அமெரிக்க அரசு அனுமதியளிக்க மறுத்துவிட்டது. ஒப்பந்தப்படி அனுப்ப வேண்டிய 19 டன் யுரேனியத்தை கடைசி வரை அனுப்பாமலும் ஏமாற்றியது.
இதனிடையே இந்திய விஞ்ஞானிகள் ரிபுரோசசிங் தொழில் நுட்பம், கன நீர் தொழில் நுட்பம், யுரேனியம் செறிவூட்டுதல் தொழில் நுட்பங்களையும், அவற்றை நடைமுறையில் பயன்படுத்துவதற்க்கான பல்வேறு அணுக் கூடங்களையும் நாடு முழுவதும் கட்டியிருந்தனர். யுரேனியம் வளங்களும், தோரிய வளமும் இந்தியாவில் கிடைக்கும் இடங்களும் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. பிற நாடுகளுடன் அணு தொழில்நுட்ப வியாபாரம் செய்யும் அளவு இந்தியா வளர்ந்திருந்தது. இந்த காலகட்டத்தில் 1963 ஒப்பந்தத்தின் படி இந்தியாவுக்கு அமெரிக்க அனுப்பியிருந்த 250டன் எரிபொருள் பயன்படுத்தப்பட்டு அது மீண்டும் ரிபுரோசசிங்குக்கு செய்து புளூட்டோனியம் எடுப்பதற்க்கு தயாராக இருந்தது. தாராப்பூர் அணு உலைக்கு தேவையான எரிபொருளை அமெரிக்கா அனுப்பாததை இந்திய விஞ்ஞானிகள் சமாளித்துவிட்டனர். ஆனால் யுரெனியம் அணு உலைகளில் அடிக்கடி தேய்ந்து போகும் உதிரி பாகங்களை அமெரிக்கா அனுப்பாமால் கழுத்தறுத்தைத்தான் இந்திய விஞ்ஞானிகளால் சமாளிக்க இயலவில்லை.
1983ல் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் முதல் உலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் இந்திரா காந்தி. இது 235MW திறன் கொண்ட அணு உலை இது.
இதோ 2008 ஜூன் 25ல் வந்த செய்தி என்ன சொல்கிறது என்றால் இந்தியாவிலேயே தாயாரான பாதுகாப்பு குழாய் (Safety Vessel) கல்பாக்கம் அணு உலையில் நிறுவியுள்ளனர். இந்த குழாயை தயாரித்ததன் மூலம் அதி வேக பெருக்கி அணு உலைகள்(Fast Breeder) தொழில் நுட்பத்தில் முன்னேறிய தொழில்நுட்பம் கொண்ட வெகு சொற்பமான நாடுகளின் வரிசையில் நாமும் இருக்கிறோம் இப்போது #28.
இந்த செய்தியிலேயே உள்ள வேறு சில விசயங்கள், முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 500MW மின் திறன் கொண்ட அதி வேக பெருக்கி அணு உலை கல்பாக்கத்தில் நிறுவப்பட்டு கடைசி கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. 2005-ல் மும்பையில் பெருமையுடன் அறிவிக்கப்பட்ட தோரியம் இரண்டாம் கட்ட அணு உலைதான் இது. இது போல இன்னும் பல அணு உலைகளை நிறுவும் வேலையில் இந்திய அணு சக்தி கழகம்(NPCIL) உள்ளது. மேலும் உலகிலுள்ள முன்னேறிய தொழில் நுட்பங்களில் ஒன்றாக இந்தியாவிடம் உள்ள அணு சக்தி தொழில்நுட்பம் உள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதி வேக பெருக்கி அணு உலைகள்(FBR) ஏற்னகவே குறிப்பிடப்பட்ட தோரியம் தொழில்நுட்பத்தின் இரண்டாவது கட்டத்தை உபயோகப்படுத்துகின்றன. மூன்றாவது கட்டத்திற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றன. நம்மிடம் தோரியம், செறிவூட்டப்பட்ட யுரேனியம், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எரிபொருளிலிருந்து தயாரிக்கப்படும் ஆக்ஸைடு கலவை எரிபொருள் இவையணைத்தையும் உபயோகித்து மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்தியா சர்வதேச அணு உதவி கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டதால் சொந்தமாகாவே அணு சக்தி உற்பத்தி செய்தது. இதனால் உலகிலேயே வீரியம் குறைவான அணு உலைகளைக் கொண்ட நாடாக இந்தியா 1990களில் இருந்தது. ஆயினும் இந்த தொழில்நுட்ப தடங்களை கடந்து 2002ல் 85% வீரியம் கொண்டவையாக தனது அணு உலைகளை மாற்றிக் காட்டியது. இந்த அணு உலைகளின் வீரியம் இன்னும் அதிகப்படுத்தப்படும். பொதுவாகவே இது போலத்தான் உலகம் முழுவதும் செய்யப்படுகிறது. அணு உலைகளின் எண்ணிக்கையை கூட்டமாலேயே அவற்றின் வீரியத்தை கூட்டியே தமது அணு மின் உற்பத்தை அளவை மேற்கு நாடுகள் கடந்த 30 வருடங்களாக அதிகரித்து வந்துள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
தாராப்பூரில் உள்ள 3வது, 4வது உலைகள் இந்திய அணு சக்தி கழகத்தால்(NPCIL) இந்தியவிலேயே தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டது. இது தவிர்த்து Kaigaவில் உள்ள அணு உலைகள், ராவாபாட்டாவில் உள்ள சில உலைகள் இவையும் NPCILஆல் தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டன. இவையெல்லாம் தற்போது இயங்கிக் கொண்டுள்ளவை.
மேலே கால வரிசைப்படி கொடுத்துள்ள விவரங்கள் நமக்கு காட்டுவது அணு விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை நாம் சுயச்சார்பானவர்களாக மாறியதுடன், அதனை ஏற்றுமதி செய்யும் அளவு தொழில்நுட்பம் தெரிந்த நாடாக நாம் மாறிய அடுத்த நிமிசத்திலிருந்து அமெரிக்கா நமக்கு தொந்தரவு கொடுக்கத் தொடங்கிவிட்டது என்பதுதான். அன்றிலிருந்து இந்தியாவை சர்வதேச ஒப்பந்தங்களிலும், NPTயிலும் கையெழுத்திடச் சொல்லி தொடர்ந்து நிர்ப்பந்தித்து வந்துள்ளது அமெரிக்கா. 1963-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை ஒருதலை பட்சமாக தூக்கி குப்பையில் கடாசிவிட்டு தனது அனைத்துவிதமான தந்திரங்களையும் பயன்படுத்தி வந்துள்ளது அமெரிக்கா. யுரேனிய அணு உலைகளில் அணு உடைப்பு தோரியத்தில் நடப்பது போல சுமூகமாக நடப்பதில்லை எனவே யுரெனிய அணு உலைகளின் உதிரிபாகங்கள் அடிக்கடி மாற்றப் பட வேண்டியுள்ளது. இவர்களை நம்பி நாம் இங்கு கட்டிய தராப்பூர் யுரேனியம் அணு உலைக்கு தேவையான உதிரி பாகங்களை தராமல் முடக்கியது அமெரிக்கா. இதனால் அந்த அணு உலை பல காலத்திற்க்கு தனது பாதி வீரியத்திலேயே இயங்கியது. தற்போது இருப்பில் உள்ள யுரேனியமும் முடிந்துவிட்டதால் இயங்காமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது உள்நாட்டு யுரெனியத்தின் மூலம் இயங்கி வருகின்றன.
உலகிலேயே முன்னேறிய அணு சக்தி தொழில் நுட்பம் கொண்ட நாடாக இந்தியா இருந்தும்(குறிப்பாக தோரியம் தொழில்நுட்பம்) இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்க்கு, இந்த அணு ஒப்பந்தத்தை வேறு வழியே இல்லை என்று நியாயப்படுத்துவதற்க்கு பயன்படும் முக்கியமான வாதம் இந்தியாவின் யுரெனியம் இருப்பு போதாமான அளவு இல்லை என்கிற வாதம். தொழில் நுட்பம் சிறப்பாக இருந்தாலும் மூல வளம் இல்லையே என்ற இந்த வாதம் குறித்து இந்த பகுதி பதில் சொல்லும். இந்தியாவில் உள்ள யுரேனியத்தின் அளவு எவ்வளவு? மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள உலைகள் எல்லாமே தனது மொத்த திறனில் பாதியளவே ஓடுகின்றன. காரணம் யுரெனியம் தட்டுப்பாடு.
இதுவரை பயன்படுத்த தகுதியானது என்று உறுதிப்படுத்தப்பட்ட யுரேனியத்தின் அளவு 61,000 டன்னிலிருந்து 90,000 டன்வரை இருக்கிறது #29 பக்கம் 23. தோரியம் 2,15,000 டன்னிலிருந்து 3,60,000 டன் வரை இருக்கிறது #30. தோரியம் உலகிலேயே நம்மிடம்தான் அதிகம் உள்ளது என்றும், நாம் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த நிலையிலிருக்கிறோம் என்றும், நாம் உலகில் நான்காவது பெரிய தோரியம் வளம் உள்ள நாடு என்றும் பல்வேறு புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. ஆனால் இவையணைத்தும் பிற நாடுகளின் தோரியம் அளவில் ஏற்படும் முரன்பட்ட தகவலினாலேயே வேறுபடுகின்றன. இந்தியாவின் தோரியம் இருப்பைப் பொறுத்தவரை இவர்கள் அனைவரும் ஒரே அளவையே சொல்கிறார்கள்.
"The potential of Nuclear resources is about 93% of the total potential based on the proven reserves of all the energy resources in the country" - இப்படி சொல்கிறது NPCILன் 2006-07க்கான ஆண்டு அறிக்கை. இதே ஆண்டறிக்கை 2006ல் இயக்கத்தில் இருந்த அணு உலைகளின் உண்மையான திறனாக 58478MW என்று குறிப்பிட்டுள்ளது #31 பக்கம் 56. இதன் அர்த்தம் இந்தளவுக்கு அதிகபட்சம் அவை அணு சக்தி உருவாக்கும் திறனுள்ளவை. அதாவது இதுவரை நிர்மாணிக்கப்பட்ட அணு உலைகளின் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொண்டு சென்றாலே போதும், புதிதாக நிர்மானிக்கப்படும் அணு உலைகளை தோரியம் அடிப்படையிலானதாக கூட நாம் செய்து கொள்ளலாம்.
தற்போது 4120MWதான் அணு சக்தியிலிருந்து பெறப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 3% கொஞ்சம் கூட வரும். மேலும் 2660MWத்திற்க்கான அணு உலைகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர்த்து 6800MW உற்பத்தி செய்யும் அளவு அணு உலைகளை கட்டுவதற்க்கான வேலைகள் நடந்து வருகின்றன #32. இவையணைத்திற்க்கும், அதாவது 10,000MW உற்பத்தி செய்ய 50 வருடத்திற்க்கு தேவையான யுரேனியத்தை இந்தியாவிலிருந்தே எடுத்துக் கொள்ளலாம். எந்தவொரு வெளிநாட்டையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று 2005ல் இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவர் S.K. ஜெயின் கூறுகிறார் ('We can meet India's electricity demands' - Frontline Mar 12-25, 2005 ). 2020-ல் அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் மூலம் நாம் உற்பத்தி செய்யவுள்ள அணு சக்தி 6%தான். இதே அளவை அவர்களின் உதவியின்றியே அடைய முடியும் என்று சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.
பிசினஸ் இந்தியாவில் மார்ச் 2006ல் ஒரு விரிவான கட்டுரை வந்திருந்தது "What can't we Produce? - Business India, March 12, 2006 பக்கம் 40" #33. இதில் அணு சக்தி கமிசனின் தலைவர் அனில் ககோதரிடம் இந்திய அமெரிக்க அணு ஒத்துழைப்பின் பயன் குறித்து கேட்ட போது பின்வருமாறு கூறுகிறார்: "இந்தியா தனது மூன்று கட்ட அணு திட்டத்தில் முதல் கட்டத்தில் 10,000 MW அணு சக்தியை இந்தியாவிலேயே உள்ள யுரேனியத்தைக் கொண்டு உற்பத்தி செய்யும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதை விட பத்து மடங்கு உற்பத்தி செய்யப்படவுள்ள அடுத்தடுத்த கட்டங்களுக்கோ உபரியாக யுரேனியம் எதுவும் தேவையில்லை. இந்த ஒப்பந்தத்தை பொறுத்தவரை மலிவு விலை யுரேனியம் அதிகப்படியான பயன்பாட்டுக்கு கிடைக்கும் வாய்ப்பு மட்டுமே இந்தியா பார்க்கக் கூடியதாக இருக்கிறது." இந்த காலகட்டத்தில் அணு ஒப்பந்தம் உயிராதாரமானது என்பதை இவர்கள் எங்குமே வலியுறுத்தவில்லை. மாறாக நமது சொந்த திறனில் சாதிக்க முடியும் என்பதை பல்வேறு கட்டங்களில் இவர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர்.
இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் இந்தியாவிற்கு யுரேனியம் கிடைப்பதற்க்கும், பரஸ்பரம் ஏற்றுமதி இறக்குமதிக்கு உதவும் ஒரு ஓப்பந்தமாக இருப்பதையே இவர்கள் வலியுறுத்துகிறார்கள். மாறாக அது அப்படியில்லை என்பதுடன் அதன் உண்மையான நோக்கம் பிரதானமாக யுரேனியமோ, அணுவோ சம்பந்தப்பட்டதாகவோ இல்லை.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகப்படியான மின்சாரம் எதிர்காலத்தில் தேவைப்படுகிறது என்கிறார்கள். இது யாருக்கான பொருளாதாரம் என்ற கேள்வியை இப்போதைக்கு தவிர்த்துக் கொண்டு பார்த்தால் கூட இந்தியாவின் எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்வதற்க்கு அணு சக்தி தவிர்த்து இந்தியாவின் நீர் மின்சக்தியும், காற்று மின்சக்தியும், சூரிய சக்தியும், இயற்கை வாயுவும் பெரிய அளவில் பயன்படுத்தப்பாடாமலேயே உள்ளது. இவற்றிலிருந்து மிக அதிகப்படியாகவே மின்சாரம் எடுக்க முடியும் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கட்டுரையின் விரிவு அஞ்சி அவற்றை இங்கு கொடுக்காமல் தவிர்க்கிறேன்.
இங்கு நாம் இது வரை பார்த்த விசயங்களை முடிவாக பட்டியலிட்டுக் கொள்வோம்.
#1) புதிய அணு உற்பத்திக் கூடங்கள் எதையும் கடந்த 30 வருடங்களில் மேற்கு நாடுகள் கட்டவில்லை விற்க்காத பழைய சரக்கை நம் தலையில் கட்டுகிறார்கள்.
#2) உலகிலேயே அதிகமான யுரேனியம் உள்ள நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் மின்சாரம் தயாரிக்க ஒரு அணு உலைகூட கிடையாது.
#3) யுரேனியம் அடிப்படையிலான அதி அழுத்த கன நீர் உலைகள் ஏற்கனவே இருப்பவையே போதும், அதற்கு அடுத்தகட்ட தொழில்நுட்பங்களை விரிவாக நாம் நிறுவ வேண்டிய நிலையில் தற்போது உள்ளோம் எனும் போது அமெரிக்காவிடமிருந்து பழைய தொழில் நுட்பத்தை வாங்குவது நமது சுயசார்பை ஒழிக்கும் தந்திரம். அதாவது நம்மிடம் ஏற்கனவே இருக்கும் காலவதியான விசயத்தையே நாம் திரும்ப வாங்குகிறோம் என்பதுதான். அதுவும் 3லட்சம் கோடிக்கு எனும் போது யார் முட்டாள் என்பதை புரிந்து கொள்ளலாம். நமக்கு இனிமேலும் தேவையில்லாத தொழில்நுட்பத்தை வாங்குவதன் மூலம் நமது அணு சக்தி தேவையை அடுத்தக்கட்டத்திற்கு வளர்க்காமல் முடக்குகிறோம், மேலும் நாம் அவர்களை நம்பியிருக்குமாறு செய்துவிடுகிறோம்.
#4) அணு சம்பந்தப்பட்ட தொழில் நுட்பம் அணைத்தும் நம்மிடமே உள்ளது. கனநீர் உற்பத்தியிலும், அணு தொழில்நுட்பத்திலும் நாம் ஏற்றுமதி செய்யும் நாடு. இந்த தொழில்நுட்பங்களை நாம் இன்னும் வீரியமாக வளர்த்தெடுக்க இந்த 3 லட்சம் கோடியை பயன்படுத்தலாம்.
#5) எதிர்கால, நிகழ்கால மின்சாரத் தேவைகளை அமெரிக்க ஒப்பந்த்தை நம்பியிராமலேயே இந்திய அணு சக்தி திட்டங்கள் மூலமே சாதிக்க முடியும். இது தவிர்த்து பிற மூல வளங்களை முழுமையாக பயன்படுத்தும் திட்டங்களை நாம் ஆழமாக பரிசீலிக்க வேண்டும்.
#6) யுரேனியம், தோரியம், புளுட்டோனியம் போன்ற அடிப்படை அணு எரிபொருட்களுக்கு நாம் பிறரை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இல்லை. நம்மிடம் இருப்பதை வைத்தே சமாளிக்க இயலும். ஒருவேளை நமது எதிர்காலத்திற்கு ஆபத்தில்லாத வகையில் யுரெனியம் கிடைத்தால் கொஞ்சம் வசதி அவ்வளவுதான்.
#7) நிலக்கரி, இயற்கை வாயு உள்ளிட்டவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்க வசதியாக இவற்றை அதிகமாக இறக்குமதி செய்யும் முயற்சிகளில் இந்தியா இறங்க வேண்டும். நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவை மேற்கு நாடுகள் மட்டுமே பயன்படுத்துவதற்க்கான மூல வளங்கள் அல்ல. நாமும் பயன்படுத்தலாம்.
#8) ஏற்கனவே அமெரிக்க இந்தியாவை தனக்கு கீழ்படிய வைக்க 1963 அணு ஒப்பந்தத்தை வைத்து ப்ளாக்மெயில் செய்து மிரட்டியுள்ளது. இந்தியா அடிபணிய மறுத்த பொழுது தாராப்பூர் அணு உலையை கை கழுவி நமக்கு நஸ்டம் ஏற்படுத்தியுள்ளது. இன்னிலையில் 3 லட்சம் கோடி முதலீடு செய்து பிறகு நமது காலை வாரிவிட்டால் நமக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. மேலும் இதனை ஒட்டி போடப்படுகிற சர்வதேச ஒப்பந்தகளிலிருந்து நாம் எந்த காலத்திலும் விலக முடியாது. ஏனேனில் பிற சர்வதேச ஒப்பந்தங்களை 123 ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது.
இது வரை பார்த்துள்ள விசயங்கள் எல்லாமே இந்த ஒப்பந்தம் அணு சக்தி, தொழில்நுட்பம், யுரெனியம் சம்பந்தப்பட்டது என்பதை கருத்திக் கொண்டு ஆய்வு செய்தது. இதன் முடிவுகள் அணு ஒப்பந்தம் ஒரு மொள்ளமாறித்தனமான ஒப்பந்தம் என்பதைத்தான் தெளிவாகச் சொல்கின்றன. ஆனால் இன்னொரு பெரிய உண்மை இந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவின் அல்லக்கை தேசங்களில் ஒன்றாக மாற்றி அமெரிக்காவின் உலகாளாவிய ரவுடித்தனங்களுக்கு அடியாள் வேலை செய்ய இந்தியாவைச் சேர்த்துக் கொள்வதையே பிரதான நோக்கமாக கொண்டுள்ளது என்ற அம்சம். இது குறித்து அடுத்து பார்க்க இருக்கிறோம்.
அசுரன்
20 பின்னூட்டங்கள்:
காத்திரமான கட்டுரை. நன்றி, அசுரன்.
Great Artcile.
REgards
Izzath
You have analysed this issue elaborately. Thank you for all your efforts.
Anbudan
Izzath
கருத்துக்களுக்கு நன்றி சுந்தர்
அசுரன்
மிக ஆழமான ஆய்வு. இந்த கட்டுரையை எழுத எடுத்துக்கொண்ட நேரத்தை எண்ணி வியர்ப்படைகிறேன். நன்றி தோழர்.
நந்தன்
சிறப்பான கட்டுரை. நிறைய தகவல்களுடன் இருக்கிறது. அடுத்ததடுத்த பாகங்களையும் சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்
கார்க்கி
மிக நேர்த்தியாக, எளிய முறையில் விளக்கப்பட்ட ஒரு ஆய்வு கட்டுரை. இந்த ஒப்பந்தம் எதோ இந்திய நலனுக்காக போடப் பட்டுள்ளது என்றும் , இதனால் இந்திய விரைவில் வல்லரசு ஆகும் என்றும், இதை எதிர்ப்பவர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாய் இருப்பவர்கள் என்றும், எல்லா நாட்டு மக்களின் காதிலும் பூ சுற்றும் நமது பிரதம மந்திரி முதல் போலி கம்யுனிஸ்டுகள் வரை அனைவருக்கும் இந்த கட்டுரை ஒரு நெத்தியடி.
உங்கள் முயற்சிக்கு நன்றிகள் பல தோழர்.
மிக நல்ல காலத்தே எழுதப்பட்ட கட்டுரை.
இந்த அணு ஒப்பந்தத்தில், ஹைட் சட்டம் இந்திய சர்வதேச உறவுகளைப் பாதிப்பது / கட்டுப்படுத்துவது போல எங்கேயும் விதிகளோ, சரத்துகளோ இல்லை என சில அமெரிக்க கனவுலக இந்தியர்கள் சொல்வதைப் படித்தேன். (யார் என்று நினைவு இல்லை.)
உங்களால், இந்த விதிகளை (சர்வதேச உறவுகளை கட்டுப்படுத்தும் விதிகள்) விளக்க முடியுமா ?
அருமையான தெளிவான கட்டுரை...தோழரே உங்களிடம் ஒரு விசயத்தை பகிர்ந்துக்கணும் என நினைக்கிறேன், தினமலர் பத்திரிக்கையில் அணுசக்தி சம்பந்தமாக வரும் கட்டுரைகள் மற்றும் மதரீதியான கருத்துகளை (நடுநிலை கருத்தக்களை) தெரிவித்தால் அவர்கள் வெளியிடமாட்டார்கள், ஆனால் ஏதாவது மொக்கைய ஏதாவது எழுதினோம்னு நமக்கே தெரியும், அதை வெளியிடுவார்கள்..என்ன தர்மமோ தோழர்!! வெளிநாடுகளுக்கு அடிமையாக வந்த எங்களுடைய கருத்துகளுக்கு கூட தடை...தடை செய்வதும் தமிழனே!. விந்தையாக உள்ளது.. உங்களுடைய இந்த கட்டுரையை என்னுடைய வட்டாரத்திலும் பரப்புவேன்..நன்றி அசுரன் அவர்களே...
அடுத்த பாகங்களையும் எதிர்பார்க்கிறேன்
Too goood...article...
பல்லாயிரக்கணக்கில் படிக்க வேண்டிய கட்டுரையை சில நூறுபேர் மட்டுமே படிக்கப்போகிறார்கள் என்பதில் வருத்தம். வாழ்த்துக்கள் அசுரன்!
-வினவு.
பல்லாயிரம் பேர் படிக்க வேண்டிய கட்டுரையை இணையத்தின் சில நூறுபேர்கள் மட்டுமே படிக்கப்போகிறார்கள் என்பதில் வருத்தம்! வாழ்த்துக்கள் அசுரன்!
-வினவு
தோழர் அசுரன் வணக்கம்,
இந்த உங்களின் கட்டுரைக்கு நான் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். ஏனோ அது இடம்பெறவில்லை. எனக்கு தெரிவித்தால் உங்கள் ஆலோசனைகளை ஏற்க ஆயத்தமாயுள்ளேன். senkodithamizhan.gmail.com க்கு அனுப்பவும். இந்த கட்டுரையை என்னுடைய வலைப்பூவில் ஒட்டியுள்ளேன், அனுமதி தருவீர்கள் எனும் நம்பிக்கையில் (இந்த கட்டுரையின் தொடரும் பாகங்களை கூட).
ஒழிவாய் நேரம் இருந்தால் senkodi.multiply.com க்கு வருகை தாருங்கள்
செங்கொடி
செப்டம்பர் அக்டோபரில் பதிவுகளே வரவில்லை தோழர் ஏமாற்றம் மட்டும் வருகிறது உங்கள் வலைப்பூவுக்கு வந்து :)
அன்புள்ள தோழர் தியாகு,
விரைவில் எழுதுவேன்
அசுரன்
//இந்த நிலையை கலையும்//
க'ளை'யும் !?
//இந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவின் அல்லக்கை தேசங்களில் ஒன்றாக மாற்றி அமெரிக்காவின் உலகாளாவிய ரவுடித்தனங்களுக்கு அடியாள் வேலை செய்ய இந்தியாவைச் சேர்த்துக் கொள்வதையே பிரதான நோக்கமாக கொண்டுள்ளது என்ற அம்சம்//
இதுதான் மிகப் பெரிய கவலை1
இந்தியா சொந்தக் கால்ல நின்னுடவே கூடாதுன்னு கங்கணம் கட்டிகிட்டி திரியுது அமெரிக்கா!
அது தெரியாம(தெரிஞ்சே!?) அவனுக்கு ஜால்ரா போடுறாங்க நம்ம ஆளுங்க!
கூடங்குளம் அணுமின் உலைக்கு எதிர்ப்புத் தெரிவித்த நண்பர் அசுரனுக்கு நான் திண்ணையில் எழுதிய பதில் கட்டுரை :
http://jayabarathan.wordpress.com/2007/06/15/kudangulam-atomic-reactor/
சி. ஜெயபாரதன், கனடா
அசுரன்,
அருமையான ,அணு சக்தி ஆத்தி சூடி பதிவு, அ..முதல் ஃ வரை சொல்லி இருக்கீங்க, கிட்ட தட்ட இதே போல தான் நம்ம தோழர் தியாகு உடன் உரையாடியுளேன். ஆனால் என்ன ஆச்சரியம் இந்த பதிவில் பின்னூட்டம் போட்டு இருக்கார் ஆனால் படிக்கவில்லை போலும்,அவர் பிடித்த முயலுக்கு 3 கால் என்று சொன்னால் கூட பரவியில்லை ,காலே இல்லை என்கிறார் :-))
தோழர்,
#நீங்க நம்ம அணு உலை 85 % சதவீத திறனூடன் இயங்குவதாக சொல்லி இருக்கிங்க, ஆனால் அந்த அளவு இல்லை ,அரசு தற்பெருமிதத்துக்கு சொல்லிக்கொள்கிறது.
#123 ஒப்பந்தம் பற்றி, நீங்கள் சொன்னால் போல அந்த ஒப்பந்தம் தேவை இல்லாதது, நாமே செறிவூட்டிக்கொள்ளலாம், அரசுக்கு நிதி இல்லை, செறீவூட்டும் உலை செலவு, யுரேனியம் தோண்டும் செலவு, இதுக்கு எல்லாம் நிதி ஒதுக்கிட்டு, பின்னர் அணு உலைக்கும் நிதி வேண்டுமே, அதான் நுகர்வு கலாச்சாரமாக எளிதாக செறிவூட்டிய யுரேனியம் வாங்க ஒப்பந்தம் போட்டுக்கொண்டுள்ளது.
# வெளிநாட்டில டீ ஷர்ட் செய்ய முடியாதா ஏன் திருப்பூர்ல வாங்குறான் சுளுவா வேலைய முடிச்சுக்க தான் அதே பாலிசில நம்ம அரசு யுரேனியம் வாங்க அடிமை சாசனம் போடவும் தயரா இருக்கு.
#மேலும் கூடன் குளம் வகை அணு உலைக்கு, செறிவூட்டிய யுரேனியம் தேவை கட்டியாச்சு, இனிமேல் கால தாமதம் செய்ய முடியாது என்பதாலே இத்தனை காலம்,டபாய்த்த இந்தியா சமிபகாலத்தில போய் 123 சொல்லி மாட்டிக்கிச்சு.
#கூடன் குளத்தை மூடியாச்சுனா 123 க்கு அடிய பணிய தேவை இல்லாமல் போயிடும்.
#நாம அணு உலை நுட்பத்தில வளர்ந்து இருக்கோம்னு நீங்க பெருமிதம் படுகிறீர்களா?
உண்மைல நம்மாட்களுக்கு அவங்க செய்த வேலை மேலயே அவநம்பிக்கை உண்டு என்பதே உண்மை.
#கல்பாக்கத்தில எப்படி வேலை செய்றாங்கனு தெரிந்தவர்களைக்கேட்டுப்பாருங்க, எனக்கு செவி வழி செய்தியாக கேள்விப்பட்டது என்ன வென்றால், அப்பாவி டிப்ளமோ,ஐடிஐ, அப்ரண்டிஸ்களை பலியாடாக அணு உலைக்கு அருகில் வேலை செய்ய வைத்துவிட்டு விஞ்ஞானிகள் பாதுகாப்பான தூரத்தில் இருப்பார்கள்.உண்மைல கல்பாக்கத்தில உலையை இயக்குவது கத்துக்குட்டிகளே.சரியான ஆதாரம் இல்லை என்னிடம்.அதனால் பொதுவில் இதனை வைக்க யோசிக்க வேண்டியதாக இருக்கு.
#இது போன்ற அப்ரண்டீஸ்கள்,தற்காலிக பணியாளர்களை அவ்வப்போது நீக்கி விடுவதால், எத்தனைப்பேர் வேலை செய்த இடத்தில் கதிரியக்கா பாதிப்பு ஆளானார்கள் என்பதே தெரிவதில்லை.மேலும் அரசு ரகசியம் காப்பதால் தெரிவதில்லை.
#இதற்கு முன்னோடி, ருசியர்களே, செர்னோபிளில் விபத்து நடந்த போது வேலை செய்தவர்கள் அனைவரும் கத்துக்குட்டிகள் என்பதை ஆய்வு தெரிவித்துள்ளது, அவர்கள் தொலைவில் இருந்து வயர்லெஸ்ஸில் வந்த கட்டளைக்கு வேலை செய்ததால் தான் விபத்து ஏற்பட முக்கிய காரணம் என்றும் அறிக்கையில் உள்ளது.fail safe mechaanism நிறுத்தி விட்டு வேலை செய்துள்ளார்கள்.மேலும் கட்டுமான குறைபாடான அணு உலை என்பதும் அடுத்த காரணம்.
இதை எல்லாம் நீங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.
Post a Comment