TerrorisminFocus

Tuesday, January 22, 2008

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியுமா எது உள்ளே எது வெளியே என்று?

நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது. காலம் கடந்தால்தான் என்ன? குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது அல்லவா? குஜராத் 2002 இனப் படுகொலையின் போது தனது குடும்பத்தவர் 14 பேரை கண்முன்னால் பறி கொடுத்து, பாலியல் பலாத்காரத்திற்குள்ளான பில்கிஸ் என்ற இஸ்லாமிய பெண்மணி, இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்க்கு முந்தைய நாள், நீதி நிலைநாட்டப்படும் என்று தான் நம்புவதாகவும், இந்திய நீதித் துறையின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதோ அவரது நம்பிக்கை வெற்றி பெற்றுவிட்டது அல்லவா? 7 பேர் விடுவிக்கப்பட்டால்தான் என்ன? 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது அல்லவா? ஆறு வருடங்கள் தாமதமான தீர்ப்பாயிருந்தால்தான் என்ன? குற்றவாளிகள் சிறை அனுப்பப்படுவது உறுதியாகிவிட்டது அல்லவா? இனி அவர்களின் வாழ்க்கை கம்பிகளுக்கு பின்னால்தான்.

ஆயினும் சிறைச்சாலைக் கம்பிகளுக்கு தெரியவா போகிறது எது உள்ளே எது வெளியே என்று? 'கம்பிகளுக்கு பின்' என்ற சொற்றொடரில் 'பின்' என்பது கம்பிக்கு எந்த பக்கம் வருகிறது என்பதை யார் தீர்மாணிக்கிறார்கள்? எது தீர்மாணிக்கிறது? எப்படி தீர்மாணிக்கப்படுகிறது?

குஜராத் இனப் படுகொலையில் போது தமது சொந்த வீடுகளை விட்டும் கிராமங்களை விட்டும் விரட்டப்பட்ட லட்சக்கணக்கான முஸ்லீம்கள் இன்றும் தமது வீடுகளுக்கு திரும்ப இயலாமல் நிவாரண முகாம்களில் கைதிகளாகத்தான் வைக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியின் யூத கொட்டடிகள் திறந்த வெளிக் கூடங்கள்தான். ஆயினும் அவை சிறைச்சாலையே. அது போன்றதுதான் குஜராத்தின் நிவாரண முகாம்கள். கம்பிகளோ சுவர்களோ இல்லாத மாய சிறைச்சாலை. சிறைச்சாலையைவிட கோடூரமானதொரு வெளி உலகம் இருக்கின்ற பொழுது சிறைச்சாலையே தேவலாம் என்று பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் தங்கியதில் வியப்பொன்றுமில்லை. அப்படி தங்கிய அப்பாவி கைதிகளில் ஒருவர்தான் பில்கிஸ்.

தீர்ப்பு வழங்கப்படும் முன்பே தண்டனை கொடுக்கப்பட்டது. குற்றமிழைத்தவர்களுக்கு அல்ல. குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு. நிவாரண முகாம் என்ற சிறைக்கூடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையாக தரப்பட்டது. தண்டனையிலிருந்து சட்டம் தரும் பாதுகாப்பு கவசத்தில் குற்றவாளிகளும், குற்றமயமாக்கப்பட்ட சமூகம் தரும் வன்முறையிலிருந்து பாதுகாத்துகொள்ள பாதிக்கப்பட்டவர்கள் சிறைச்சாலையிலுமாக இருக்கின்றது அங்கு நிலைமைகள். பார்க்கின்றவர்களுக்கு எது சிறை எது வெளியே என்ற தேவையற்ற குழப்பம் வரவேண்டாம் என்று சிறைச்சாலை கம்பிகள் அந்த சமூகத்தின் மனங்களில் பதிக்கப்பட்டுவிட்டன. அவை வெறும் கண்களுக்கு தெரியாது.

சபர்கந்த கிராமத்திலுள்ள நிவாரண முகாமில்தான் தற்போது வாழ்ந்து வருகிறார் பில்கிஸ் சரியாகச் சொன்னால் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சிறைக் கூடத்தின் பாதுகாப்புக்கு சிறப்பு அதிரடிப் படை ஒன்று போடப்பட்டுள்ளது. அவர்களின் அன்புக் குரியவர்களில் 33 பேர் கோடூரமாக கொல்லப்பட்ட சர்தார்பூர் பகுதியிலுள்ள சைய்க் மொஹல்லா பகுதிக்குள் அவர்களால் நுழையக் கூட முடியாது. சிறையில் இருப்பவர்கள் வெளியே வருவதே சிரமம் இதில் அவர்களுக்கு கோடூரம் இழைக்கப்பட்ட பகுதியை பார்ப்பதாவது? இதே போல 70 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தண்டனையிலிருந்து மட்டுமல்ல குற்றப்பத்திரிகையிலிருந்தே கூட தப்பித்து சென்று விட்டனர். 27 பேர் கொல்லப்பட்ட ஆனந்த் மாவட்டத்தில் 41 குற்றவாளிகள் முன்பினையில் வெளியே வந்தனர். சிறைக்கு வெளியே இருந்தாலும், உள்ளே இருந்தாலும் யாருக்கும் எதுவும் பெரிதாக மாறிவிடப் போவதில்லை. ஏனேனில் சிறைக்கு உள்ளே வெளியே என்பதை தீர்மானிப்பது சிறைக் கம்பியல்லவே?

கடந்த ஆறு வருடங்களாக பயத்தில் வாழ்ந்து வருவதாக கூறுகிறார் பில்கிஸ். இன்னும் பெரும்பாலனவர்கள் மனதிலிருக்கும் வெறுப்பிலிருந்து தனது குழந்தைகளை காப்பதற்க்கு முயற்சி செய்ததாக சொல்கிறார். குஜராத் அரசே நடத்திய இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட பிற பெண்களுக்கு கட்டாயம் நியாயம் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஆயினும் அவரால் தனது சொந்த கிராமத்திற்க்கு திரும்ப முடியாது. தனக்கெதிரான வெறுப்பு மறைய வேண்டும், அமைதியானதொரு வாழ்வை வாழ வேண்டும் என்ற நிறைவேற இயலா ஏக்கத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறார். ஆனால் மக்களின் மனங்களில் விதைக்கப்பட்ட சிறைக்கம்பிகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டதை பில்கிஸ் உணர்ந்தது போல தெரியவில்லை. தனது வழக்கில் தீர்ப்புகள் ஆறு வருடங்கள் தாமதாமாக அல்ல மாறாக அடுத்த நிமிடமே 2002 மார்சிலேயே கொடுக்கப்பட்டுவிட்டதை அவர் உணரவில்லை இன்னும். அதனால்தான் இந்த ஏக்கம், எதிர்பார்ப்பு.

இந்த தீர்ப்பிற்க்கு பிறகு குற்றவாளிகளீன் சொந்த ஊரில் பதட்டம் நிலவுவதாக செய்திகள் கூறுகின்றன. பெரும்பான்மை இந்துக்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டதில் கோபமுற்றுள்ளதாக செய்திகள் சொல்கின்றன. சிறைச்சாலை கம்பிகள் இன்னும் வலுவாக கட்டபடுகின்றன. பில்கிஸ் ஒரு நிரந்தரமான சிறைச்சாலையில் இருப்பதை உறுதிப்படுத்துவதைத்தான் இந்த தீர்ப்பு மேலதிகமாக செய்துள்ளது.

தீர்ப்பு குறித்து அத்தனை பார்ப்பன ஊடகங்களும் தலைமேல் வைத்து கொண்டாடுகின்றன. பிறகு இந்தியா மதச்சார்பற்ற நாடல்லவா? இஸ்லாமியர்களுக்கு நீதி வழங்கப்படுகிறது அல்லவா? தெஹல்கா விடீயோக்கள் வெளிவந்த போது இதே ஊடகங்கள் கள்ள மௌனம் சாதித்ததும். இல்லாத நீதி ஏதோ வழங்கப்பட்டுவிட்டதாக தற்போது பரபரப்பு ஊட்டுவதும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இவை பொது கருத்தில் வினையாற்ற ஏதுவாக அவர்கள் செய்யும் திட்டமிட்ட செயல் தந்திரம்.

பார்ப்பனிய பாசிசம் ஆட்சி செய்யும் இந்த போலி ஜனநாயகத்தில் சிறைச்சாலையும் அரசு இயந்திரத்தின் ஒரு பகுதிதான் என்ற உண்மை புரிந்தால் ஆளும் வர்க்கத்திற்க்கு கொடுக்கப்படும் தண்டனைகளின் தராதரம் நமக்கு புரிந்து விடும். ஒடுக்கப்படும் மக்களோ நிரந்தர சிறைக் கூடத்தில் இருக்கும் அவலம் புரிந்து விடும். இந்தியா என்னும் இந்த திறந்த வெளி சிறைக்கூடத்திலிருந்து அன்று விடுதலை கீதங்கள் முழங்கத் துவங்கிவிடும்.

அசுரன்

12 பின்னூட்டங்கள்:

said...

இன்னாபாது.... இம்மாந்தூரம் வந்து ஒரு கட்டுரை போட்டுனுகிறேன். யாருமே வந்து பின்னூட்டாம் போடலினாக்க ஒரே மெர்சலாக்கீது....

எதுனா செய்ங்கபா....

அசுரன்

said...

முன்பே வோர்ட்ப்ரஸ் பயன்படுத்தி இட்ட கமெண்ட் வரவில்லை போல் இருக்கிறது. நினைவில் இருந்து மீண்டும்...

//சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியுமா எது உள்ளே எது வெளியே என்று//

கம்பிகளுக்கு மட்டும் தானா தெரியாமல் இருக்கிறது?

ஒருபக்கம் பக்கம் நேரடியாக பார்ப்பன பயங்கரவாதிகள் நடத்தும் நேரடிக் கொலைகள், கற்பழிப்புகள், குண்டுவைப்புகளால் செத்துப் போகும் மக்கள்..

மறுபக்கம் அரசின் பொருளாதாரம் கொள்கைகள் காரணமாக லட்சக்கணக்கில் சாவுக்குத் தள்ளப்படும் மக்களும்
கோடிக்கணக்கில் செத்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களும்..

தாக்குதல் இலக்காகி இருக்கும் மக்களுக்கு சிறையும் ஒன்று தான் வெளியும் ஒன்று தான்.

குற்றவாளிகளோ ஆட்சியாளர்களாய், பாரதரத்னா கோருபவர்களாய் மெய்யான சுதந்திரத்தோடு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்..

நீங்கள் முன்பு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள் ( சரியான வார்த்தைகள் நினைவில் இல்லை)- “சோசலிச நாடுகளில் கொல்லப்பட்ட மக்கள் என்று இயற்கையான பஞ்சத்தால் இறந்த மக்களைக் கூட கணக்குக் காட்டுகிறார்கள் அல்பவாதிகள்- அப்படி இங்கே அரசின் கொள்கைகளால் கொல்லப்பட்டவர்களை கணக்கில் எடுத்தால் கடந்த அய்ம்பது வருடங்களில் அப்படி இறந்து போன மக்களின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்டும்”

இதோடு பார்ப்பன பாசிசத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் இன்று பிழைத்துக் கிடப்பவர்களில் 99%பேரும் கூட ஏதோவொரு வகையில் குற்றவாளிகளாய்த் தான் இருப்பார்கள். தமது மவுனத்தின் மூலம் அந்தக் குற்றங்களை ஆதரித்தவர்களாகவோ - அப்படி ஆதரித்தவர்களின் வாரிசுகளாகவோ தான் இருக்க முடியும்..


//பார்ப்பனிய பாசிசம் ஆட்சி செய்யும் இந்த போலி ஜனநாயகத்தில் சிறைச்சாலையும் அரசு இயந்திரத்தின் ஒரு பகுதிதான் என்ற உண்மை புரிந்தால் ஆளும் வர்க்கத்திற்க்கு கொடுக்கப்படும் தண்டனைகளின் தராதரம் நமக்கு புரிந்து விடும். ஒடுக்கப்படும் மக்களோ நிரந்தர சிறைக் கூடத்தில் இருக்கும் அவலம் புரிந்து விடும். இந்தியா என்னும் இந்த திறந்த வெளி சிறைக்கூடத்திலிருந்து அன்று விடுதலை கீதங்கள் முழங்கத் துவங்கிவிடும்.//

சரியான வார்த்தைகள்..

said...

நண்பர் அசுரன்

பின்னூட்டம் பற்றி நீங்கள் சட்டை செய்ய வேண்டாம். உங்களின் ஒவ்வொரு பதிவும் படிக்க வேண்டியவர்களால் படிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. காட்டு தர்பார் நடத்தும் இந்தக் காட்டு மிராண்டிகளை வாழ்த்தி வரவேற்று காலை கழுவிக் குடிக்கும் கல் நெஞ்சக் காரர்கள் மத்தியில் உண்மையை உரத்து முழங்கும் உங்களைப் போன்றவர்களையும் இந்த சமுதாயம் கவனித்துக் கொண்டே தான் இருக்கிறது.

said...

மிக்க நன்றி தோழரே....

ஆதரிக்க அளின்றி அனாமத்தாக நின்று கொண்டிருந்தேன் :-))

எல்லாரும் அந்த பங்கு சந்தை பதிவையே மொய்க்கிறாங்க.... என்ன செய்ய... அந்த பதிவு பக்கமே ஓவர் சூடாகி போய் இருக்குது.

சமீபத்தில் ஒரு நண்பர் கடிதத்தில் பகிர்ந்து கொண்ட செய்தி.

ஒரு ரவுடியை எதிர்த்து பெயரில் மட்டும் முற்போக்கை கொண்ட கட்சியின் பகுதி உறுப்பினர்களில் சிலர், முன்னணியில் இருப்பவர்கள், போராடுகிறார்கள். அவனது சட்ட விரோத செயல்களை அம்பலப்படுத்துகிறார்கள். அவனோ திமுக கட்சியில் சமீபத்தில் சேர்ந்த தீடிர் பணக்கார தாதா நாய். எதிர்த்து போராடுபவர்களோ ஏழை உழைக்கும் மக்கள்.

அந்த ரவுடி இதற்க்கு மேல் பொறுக்க முடியாது என்று போராடும் முன்னணியாளர்களை போட்டுத் தள்ள இறங்குகிறான். ஒரு முன்னணியாளர் சாகடிக்கப்படுகிறார். கைது செய்யப்பட்டு உடனே பெயிலில் வெளியே வருகிறான் அந்த ரவுடி. மற்ற முன்னணியாளர்களை கொல்வதற்க்கான முயற்சியில் இருக்கிறான். முன்னணியாளார்களை காப்பதற்க்கு போலிசு பாதுகாப்பு போடப்படுகிற்து.

இந்த இடம் வரை கதையை கேட்டால் ஏதோ அரசு நீதியை நிலைநாட்ட நேர்மையின் பக்கம் நிற்பதாக தெரியும். ஆனால் உண்மையில் விசயம் என்ன?

குற்றம் செய்தவன் சுதந்திரமகாவெ இருக்கிறான. அலைகிறான். அடுத்த இலக்கை தாக்குவதற்க்கு தயார் செய்து கொண்டிருக்கிறான். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடம் வேலைக்கு போனால்தான் வயிறு கழுவ முடியும் என்ற நிலையிருக்கும் அந்த ஏழை முன்னணீயாளார்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். வீட்டை வெளியே போனால் உங்களது உயிருக்கு நான் பொறுப்பில்லை என்று பாதுகாப்பிற்க்கு நிற்க்கும் போலீசு கை விரித்து விட்டது. இது மக்களுக்கான அரசு என்றால் போலிசு இன்னேரம் அந்த பொறூக்கி தாதாவை கைது செய்து உள்ளே வைத்து நொக்கை பிதுக்கியிருக்க வேண்டும். மாறாக எதிர்த்து போராடியவர்கள் சிறையில் இருக்க அக்கிரம் செய்த்வன் சுத்ந்திரமாக வலம் வருகிறான்.

சிறைக் கம்பிகள் தீர்மாணீப்பதில்லை எது சிறை என்று. வர்க்கம்தான் இங்கும் தீர்மாணிக்கிறது.

அசுரன்

said...

//சிறைக்கு உள்ளே வெளியே என்பதை தீர்மானிப்பது சிறைக் கம்பியல்லவே?//

மிகவும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்!

said...

oh. ippadi oru angle irukka? naan kooda parava illeye , needhi kidaikkudhenu nenechen!

there is no wonder modi won the election. even hitler had a huge following to execute his fascist ideas. he could not have done it on his own totally. i tend to think entire gujarat has become fascists now.

said...

அண்ணாத்தே

நாங்கல்லாம் பட்ச்சிக்கினுதான் கீறோம்...

பின்னூட்டம் போடலன்னா இன்னா...

நீ எய்தறத எய்துபா...

said...

//கடந்த ஆறு வருடங்களாக பயத்தில் வாழ்ந்து வருவதாக கூறுகிறார் பில்கிஸ். //

இப்படி குஜராத்தின் சிறுபான்மை மக்களை அதிகபட்ச அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருப்பதுதான் மோடியின் வெற்றி ரகசியம். மோடியின் ஆட்சியில் நிறையவே பயனடைந்து வரும் பெரும்பான்மையினருக்கு அவருக்கு எதிராக சொல்லப்படும் மதவெறி குற்றச்சாட்டுகள் ஒரு பொருட்டே அல்ல!

said...

பின்னூட்ட கயமை மூலமாக இப்பதிவை ஆதரிக்கிறேன் :-)

said...

நல்ல பதிவு தோழர், நீதிகிடைத்துவிட்டதாய் நினைப்பவர்களுக்கு இந்த நாடே ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாய் மாறிவிட்டிருப்பதை சுட்டிக்காட்டும் பதிவு., ஆத்திரமும், இயலாமையும் கவித்துவத்தோடு ஒருசேர ஒலித்திருக்கிறது.

முதலாவதாக பின்னூட்டமிட்டிருக்கும் அனானி சில அருமையான விசயத்தை சொல்லிச் சென்றிருக்கிறார், அதனை நான் அப்படியே வழிமொழிகிறேன்.


//நீங்கள் முன்பு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள் ( சரியான வார்த்தைகள் நினைவில் இல்லை)- “சோசலிச நாடுகளில் கொல்லப்பட்ட மக்கள் என்று இயற்கையான பஞ்சத்தால் இறந்த மக்களைக் கூட கணக்குக் காட்டுகிறார்கள் அல்பவாதிகள்- அப்படி இங்கே அரசின் கொள்கைகளால் கொல்லப்பட்டவர்களை கணக்கில் எடுத்தால் கடந்த அய்ம்பது வருடங்களில் அப்படி இறந்து போன மக்களின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்டும்”

இதோடு பார்ப்பன பாசிசத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் இன்று பிழைத்துக் கிடப்பவர்களில் 99%பேரும் கூட ஏதோவொரு வகையில் குற்றவாளிகளாய்த் தான் இருப்பார்கள். தமது மவுனத்தின் மூலம் அந்தக் குற்றங்களை ஆதரித்தவர்களாகவோ - அப்படி ஆதரித்தவர்களின் வாரிசுகளாகவோ தான் இருக்க முடியும்..


//பார்ப்பனிய பாசிசம் ஆட்சி செய்யும் இந்த போலி ஜனநாயகத்தில் சிறைச்சாலையும் அரசு இயந்திரத்தின் ஒரு பகுதிதான் என்ற உண்மை புரிந்தால் ஆளும் வர்க்கத்திற்க்கு கொடுக்கப்படும் தண்டனைகளின் தராதரம் நமக்கு புரிந்து விடும். ஒடுக்கப்படும் மக்களோ நிரந்தர சிறைக் கூடத்தில் இருக்கும் அவலம் புரிந்து விடும். இந்தியா என்னும் இந்த திறந்த வெளி சிறைக்கூடத்திலிருந்து அன்று விடுதலை கீதங்கள் முழங்கத் துவங்கிவிடும்.//

சரியான வார்த்தைகள்..//

ஸ்டாலின்

said...

எங்களவாள திட்டலேன்னா நோக்கு நேரமே போகாதோ வோய்??

இந்த பதிவ நான் வன்மையா கண்டிக்கிறேன்.

said...

இதுவன்றோ வீரம்
குஜராத் முஸ்லீம் படுகொலைகள் தொடர்பான வழக்கொன்றில், குற்றவாளிகளைத் தண்டித்து, மும்பாய் குற்றவியல் நீதிமன்றம் சனவரி மாத இறுதியில் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பானது, ரவுடிகள், மாஃபியா கும்பலைவிட, ஆர்.எஸ்.எஸ் இந்து மதவெறி பாசிஸ்டுகள் வக்கிரமான கிரிமினல் பேர்வழிகள்; பஞ்சமா பாதகத்தையும் செய்யத்துணியும் பயங்கரவாதிகள் என்பதையும்: மோடி அரசிற்கும், இப்படுகொலைகளுக்கும் நேரடித் தொடர்புண்டு என்பதையும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இன்னொருபுறம் இப்பயங்கரவாதிகளை எதிர்த்து மன உறுதியுடனும், துணிச்சலோடும் ஆறாண்டுகளாகப் போராடி வரும் பில்கிஸ் பானு என்ற வீராங்கனையையும் அடையாளம் காட்டியிருக்கிறது.

பில்கிஸ்பானு, குஜராத் மாநிலம் தாஹோட் மாவட்டத்திலுள்ள ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்தவர். தனது கணவர் யாகூப் ரசூல், மூன்றரை வயது பெண் குழந்த சலேஹாவுடன் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது பிறந்த வீட்டிற்கு பில்கிஸ் பானு வந்திருந்தபொழுதுதான், குஜராத்தில் இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதல் வெடித்தது.

ரந்திக்புர் கிராமத்தில் வசித்துவந்த முசுலீம்களின் 71 வீடுகளும்; அவர்களுக்குச் சொந்தமான 14 மளிகைக் கடைகளும்; வேறுசில பெட்டிக் கடைகளும் இந்து மதவெறிக் கும்பலால் முற்றிலுமாகத் தீக்கிரையாக்கப்பட்டன; அனைத்து முசுலீம் குடும்பங்களும் உயிரையாவது காப்பாற்றிக் கொள்ள, கிராமதைவிட்டு வெளியேறின.

பில்கிஸ்பானுவும், தனது கணவர், குழந்தை, தாயார், இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளிட்டு தனது உறவினர்கள் 16 பேரோடு ரந்திக்புரிலிருந்து வெளியேறி, பரியா என்ற ஊரை நோக்கித் தப்பிச் செல்லத் தொடங்கினார். இந்து மதவெறியர்களின் கண்களில் அகப்பட்டுக் கொண்டுவிடாமல் பில்கிஸ்பானுவின் குடும்பம் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டிருந்த நேரத்திலே, அவரின் அத்தை மகளுக்கு குஜாவல் மசூதியில் பெண் குழந்தையும் பிறந்தது. இதற்கு மறுநாள் குத்ரா என்ற ஊருக்கு அவர்கள் வந்தபொழுது, அவ்வூரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர்.

அங்கு இரண்டு நாட்கள் பாதுகாப்பாக இருந்துவிட்டு, மூன்றாவது நாள் ஒவ்வொருவரும் பழங்குடியினர் போல வேடமணிந்து கொண்டு, குத்ராவில் இருந்து வெளியேறி, சாபர்வாட் என்ற கிராமத்திற்கு வந்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான வயல்வெளியில் பதுங்கியிருந்தனர்.அப்பொழுது அந்த வழியாக ஆயுதங்களுடன் சென்றுகொண்டிருந்த இந்து மதவெறிக் கும்பலிடம் பில்கிஸ்பானு குடும்பம் மாட்டிக் கொண்டது. அக்கும்பலில் இருந்த ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்த இந்து வெறியர்கள் பில்கிஸ்பானுவை அடையாளம் கண்டுகொண்டு, தங்களின் வ‌க்கிரமான தாக்குதலை நடத்தினர்.

ஷைலேஷ்பட் என்ற இந்து மதவெறியன் பில்கிஸ்பானுவின் குழந்தை சலேஹாவை அவரிடமிருந்து பிடுங்கி, அவரின் கண் எதிரிலேயே அக்குழந்தையை தரையில் அடித்துக் கொன்றான். பிறகு அவனும், அக்கும்பலைச் சேர்ந்த லாலா டாக்டர், லாலோ வக்கீல், கோவிந்த் நானா ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, பில்கிஸ்பானுவைக் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தினர் கர்ப்பமாக இருக்கும் தன்னைவிட்டுவிடும்படி பில்கிஸ்பானு கெஞ்சியதை, கதறியதை அக்கும்பல் காதிலாயே போட்டுக் கொள்ளவில்லை. தங்களின் காமவெறியைத் தீர்த்துக் கொண்ட ப்றகு, அக்கும்பல் பில்கிஸ்பானுவைத் தீர்த்துக் கட்டும் வெறியோடு தாக்கியதில், அவர் சுயநினைவு இழந்து விழுந்தார்.

பில்கிஸ்பானு மட்டுமின்றி அவரின் தாயார், சகோதரிகள் உள்ளிட்டு எட்டுப் பெண்கள் அக்கும்பலால் பாலியல் பலாத்காரப்படுத்தப் பட்டனர். பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைவரும் கத்தியாலும், ஈட்டியாலும், குண்டாந்தடிகளாலும் தாக்கப்பட்டனர்.

இரண்டு மூண்று மணி நேரம் கழித்து பில்கிஸ்பானுவிற்கு நினைவு திரும்பிய பொழுது, தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களும், நான்கு சிறுவர்களும் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டார்; மீதிப்பேர் இருந்த சுவடே தெரியவில்லை. பில்கிஸ்பானு, அந்தப் பலவீனமான நிலையிலும் நடந்து சென்று, வழியில் தென்பட்ட ஒரு பழங்குடி இனப் பெண்ணிடம் இரவலாக ஆடைவாங்கி அணிந்து கொண்டு, லிம்கேடா போலீசு நிலையத்திற்குச் சென்று இத்தாக்குதல் பற்றி புகார் கொடுத்தார். அப்பொழுதுதான், இந்து மதவெறிக் கலவரத்தின் சூத்திரதாரியாக மோடி அரசு இருப்பதை பில்கிஸ்பானு புரிந்து கொண்டார்.

அப்போலீசு நிலையத்தில் தலைமைக் காவலராக இருந்த சோமபாய்கோரி, பில்கிஸ்பானு வாக்குமூலம் அளித்தபடி நடந்த சம்பவத்தைப் புகாராகப் பதிவு செய்யாமல், குற்றவாளிகளைக் காக்கும் நோக்கத்தோடு, ஒரு பொய்யான புகாரைப் பதிவு செய்தான். பில்கிஸ்பானுவைப் பரிசோதித்த மருத்துவர்களும், சம்பவம் ந்டந்த தேதி/நேரம், காயங்கள் பற்றிய குறிப்புகள் இன்றி, மொன்னையான அறிக்கையைத் தயார் செய்தனர். 'குற்றவாளிகளை அடையாளம் காட்ட முயற்சி செய்தால், விஷ ஊசி போட்டுக் கொலை செய்துவிடுவோம்' என போலீசாரால் பில்கிஸ்பானு மிரட்டப்பட்டார்.

இந்து மதவெறி பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காக நடத்தப்பட்ட கோத்ரா முகாமில், பஞ்ச்மஹால் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி ரவியைச் சந்தித்த பில்கிஸ்பானு, தனது குடும்பப் பெண்கள் கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதையும்; தனது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களும், சிறுவர்களும், தனது பெண் குழந்தையும் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதையும்; குற்றவாளிகளை அடையாளம் காட்டக் கூடாது என போலீசாரால் தான் மிரட்டப்பட்டதையும் கூறினார். இந்து மதவெறியர்கள் நடத்திய தாக்குதலில் தப்பிப் பிழைத்த பில்கிஸ்பானுவின் இரண்டு உறவினர்களும் சாட்சியம் அளித்தனர். இதனையடுத்து இச்சம்பவம் பற்றி மீண்டும் போலீசு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

எனினும், அவ்விசாரணை ஏனோ தானோவென்றே நடத்தப்பட்டு, ஒப்புக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் மிக விரைவாகவே பிணையில் விடப்பட்டனர். இவ்வழக்கின் முக்கிய சாட்சியன பில்கிஸ்பானு பலவழிகளில் மிரட்டப்பட்டதால், அவர் தலைமறைவாகப் போக நேர்ந்தது. குஜராத் படுகொலை தொடர்பான நூற்ருக்கணக்கான வழக்குகளைச் சாட்சியம் இல்லை என்று கூறி மோடி அரசு கைகழுவியபோது, கும்பலோடு கோவிந்தாவாக பில்கிஸ்பானு வழக்கையும் கைவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். பில்கிஸ்பானு. உச்சநீதி மன்றம், இவ்வழக்கை மேண்டும் புலன்விசாரணை செய்யுமாறு சி.பி.ஐ க்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. நடத்திய புலன்விசாரணையின் அடிப்படையில் அகமதாபாத் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. 'சாட்சிகள் தொடர்ந்து மிரட்டப்படுவதால், இவ்வழக்கு குஜராத்தில் நடந்தால் நீதி கிடைக்காது; எனவே, வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்' எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடுத்தார், பில்கிஸ்பானு. இதனையடுத்து, இவ்வழக்கு மும்பய்க்கு மாற்றப்பட்டது.

மும்பாய் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில், 20 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களுள் இரண்டு மருத்துவர்கள், ஐந்து போலீசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏழுபேர் நிரபராதிகளாகத் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுதே குற்றவாளி ஒருவர் இறந்து போனதால், மீதி 12 பேரில் 11 குற்றவாளிகளூக்கு ஆயுள் தண்டனையும்; பில்கிஸ்பானு அளித்த புகாரைப் பதிவு செய்ய மறுத்த போலீசு கான்ஸ்டபிள் சோமபய் கோரிக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

.......................

பில்கிஸ்பானுவின் விடாப்பிடியான போராட்டத்தின் காரணமாகத்தான் இத்தீர்ப்பு கிடைத்திருக்கிறதேயொழிய, நீதிமன்ற முனைப்பின் காரணமாக இந்தச் சிறிய வெற்றி கிடைக்கவில்லை. இந்து மதவெறிக் கும்பல் இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை, தாக்குத‌ல் நடந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, பக்கத்தில் இருந்த காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்று புதைத்துவிட்டது. பில்கிஸ்பானுவின் மகள் சலேஹாவின் சடலம் எங்கோ மாயமாய் மறைந்து போனது. இதனைக் காட்டி, இப்படிப்பட்ட சம்பவமே நடக்கவில்லை என இந்து மதவெறிக் கும்பல் வாதாடியது.

பில்கிஸ்பானுவின் உறவினர்களின் சடலங்களை இரண்டாம் முறை பிரேதப் பரிசோதனை செய்வதற்காக சி.பி.ஐ. தோண்டியெடுத்த பொழுது, அச்சடலங்கள் தலையற்ற முண்டங்களாக இருந்தன. சடலங்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகவே, அவ்வுடல்களில் இருந்து தலைகள் 'மர்மமான' முறையில் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டிருந்தன‌. சடலங்கள் விரைவாக அழுகிப் போய்த் தடயங்கள் மறைந்து போய்விடவேண்டும் என்பதற்காகவே, சடலங்களின் உடம்பு முழுவதும் உப்பு தடவப்பட்டிருந்தது.

தாக்குதல் தொடர்பான முக்கியமான சாட்சியங்கள் அனைத்தும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பில்கிஸ்பானு மற்றும் அச்சம்பவத்தில் தனது தாயைப் பறி கொடுத்த மற்றொரு சிறுவனின் வாக்குமூல‌ங்கள்தான், இவ்வழக்கிற்கே உயிர்நாடியாக இருந்தன. பெஸ்ட் பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஷஹீரா ஷேக்கை மிரட்டிப்பணிய வைத்ததைப் போல, பில்கிஸ்பானுவையும் மிரட்டிப் பணியவைக்க முயன்றது, இந்து மதவெறிக் கும்பல். இதற்கொல்லாம் அஞ்சிவிடாத பில்கிஸ் பானு, கடந்த ஆறாண்டுகளாகத் தலைமறைவாக வாழ்ந்து கொண்டே, வழக்கையும் நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை தர மறுத்துவிட்ட நீதிமன்றம், அதனை நியாயப்படுத, 'அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்கு தண்டனை வழங்கமுடியும்; இக்குற்றவாளிகளுள் யார் யார் என்னென்ன குற்றங்களைச் செய்தார்கள் என்பது தெளிவாக நிரூபிக்கப்படவில்லை' என்று கூறியிருக்கிறது.

குஜராத்தில் இந்து மத வெறி பயங்கரவாதிகள் நடத்திய கலவரத்தில், ஏறத்தாழ 2,000 த்துக்கும் மேற்பட்ட அப்பாவி முசுலீம்கள், வக்கிரமான முறையில் தான் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமான பிறகும், நீதிமன்றம் பில்கிஸ்பானு வழக்கை ஏதோ தனித்ததொரு சம்பவமாகப் பிரித்து பார்த்திருப்பதே நாணயக்கேடானது. மேலும், இந்து மதவெறியர்கள் ஒவ்வொரு கலவரத்திலும், 'கும்மலாகச் சென்று முஸ்லீம்களைத் தாக்குவது; முஸ்லீம் பெண்ககைப் பாலியல் பலாத்காரப்படுத்துவது' என்பதை ஒரு உத்தியாகவே செயல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், 'இந்து மதவெறிக் கும்பல் எப்படிப்பட்ட குற்றச் செயல்களில் ஏடுபட்டாலும் அவர்களின் உயிரை நீதிமன்றம் பறித்து விடாது' என்று உத்தரவாதமளிப்பதாகவே, இத்தீர்ப்பு அமைந்துள்ளது.

குண்டு வைக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு சர்வ சாதாரணமாகத் தூக்கு தண்டனை அளிக்கும் இந்திய நீதித்துறை, கும்பல் வன்முறையில் ஈடுபடும் இந்து மதவெறி ப‌யங்கரவாதிகளுக்குத் தண்டனை அளிக்கும் போதோ, 'நிதானமாக' நடந்து கொள்கிறது. இந்திய நீதிமன்றங்களிடம் கானப்படும் இந்தக் காவிப் பாசத்தை நிரூபிப்பதற்கு ஏராளமார தீர்ப்புகளை ஆதாரமாகக் காட்ட முடியும்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு மருத்துவர்களும், ஐந்து போலீசு அதிகாரிகளும், 'தங்களின் கடமையை முறையாகச் செய்யாமல், நடந்த குற்றத்தை மூடி மறைத்து, இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு உதவியிருக்கிறார்கள்' என நீதிமன்றமே ஒத்துக் கொண்ட பிறகும், 'அவர்களுக்கு இச்சதிச் செயலில் பங்கில்லை' என்ற காரணத்தைக் 'கண்டுபிடித்து' அவர்களை விடுதலை செய்திருக்கிறது. காவிமயமாகி வரும் இந்திய அதிகார வர்க்கத்திறிகு, இதைவிட இனிப்பான தீர்ப்பு வேறெதுவும் இருக்க முடியாது.

இவர்களின் விடுதலையை எதிர்த்து மோடி அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார் பில்கிஸ்பானு. இந்தக் கோரிக்கை மோடிக்கு மட்டுமல்ல, 'மோடியை இந்து மதவெறியன் அல்ல' எனச் சப்பைக்கட்டு கட்டும் 'சோ' போன்ற நயவஞ்சகப் பேர்வழிகளுக்கும் விடப்பட்டுள்ள சவால்.

..............

தீர்ப்பு வெளிவந்த பிறகும், தான் தொடர்ந்து மிரட்டப்படுவதாகக் கூறியிருக்கும் பில்கிஸ்பானு, 'இத்தீர்ப்பு முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு அரசுயலை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என நான் கருதவில்லை' எனப் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார். தீர்ப்பு வெளிவந்த நாளன்று, ரந்திக்புர் கிராமத்தைச் சேர்ந்த 60 முஸ்லீம் குடும்பங்கள் தங்களின் பாதுகாப்பு கருதி, கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டனர்.

இந்து மதவெறியர்களைத் தெருவில் எதிர்த்து நின்று பொராடக் கூடிய வலிமை கொண்ட ஜனநாயக‌ இயக்கங்கள் இல்லையென்றால், நீதிமன்றத் தீர்ப்புகளால் முஸ்லீம்களைப் பாதுகாத்து விட முடியாது என்பதை அவைகள் உணர்ந்திருப்பதையே இவ்வெளியேற்றம் எடுத்துக் காட்டுகிறது. உண்மை இப்படியிருக்க, முதலாளித்துவப் பத்திரிக்கைகளோ, இத்தீர்ப்பைக் காட்டி, சட்டத்தின் மூலமே இந்து மதவெறியர்களைத் தண்டித்து விட முடியும்' என்ற மாயையைப் பரப்பி வருகின்றனர்.

குஜராத் படுகொலை தொடர்பான 1,600 வழக்குகள் கடந்த ஆறாண்டுகளாக விசாரணை நிலையிலேயே உள்ளன. பில்கிஸ்பானுவைப் போல, எத்தனை சாட்சிகளால், தலைமறைவாக வாழ்ந்து கொண்டு, இந்து மதவெறியர்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றுவிட முடியும்?

இரண்டாம் உலகப் போரில் யூதர்களுக்கு எதிராக நாஜிகள் நடத்திய இனப் படுகொலையை விசாரிக்க நூரம்பர்க் நீதிமன்றம் அமைக்கப்பட்டதைப்போல, குஜராத் படுகொலையை விசாரிக்கவும் சிறப்பு நீதிமன்றக்ஙள் அமைக்கப்பட வேண்டும்; இப்படுகொலையை நடத்திய சங்பரிவார அமைப்புகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும். இதன் மூலம் மட்டும்தான், பதிக்கப்பட்ட முஸ்லீம்கள் அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.

ஆனால், இந்தியக் 'குடியரசோ' இதனைச் செய்ய மறுத்து வருகிறது. எனவே, பில்கிஸ்பானு போராடி பெற்ற இத்தீர்ப்பை, மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றியாக இந்திய ஆளும் கும்பல் கொண்டாடத் துடிப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது.

'மேற்க‌ண்ட‌ க‌ட்டுரை புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌ம் பிப்ர‌வ‌ரி/2008 இத‌ழில் வெளியாகியிருக்கிற‌து.'

Related Posts with Thumbnails