மீள் பதிவு: "அடிமை நாடும், போலி சுதந்திரமும்"
1947 - இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அது போலி சுதந்திரம். வெள்ளையன் இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படவில்லை; தனது விசுவாசமான கையாட்களிடம் அவன் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தான். பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான மும்பை கடற்படை வீரர்களின் எழுச்சியும் தெலிங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டமும் நாடெங்கும் பற்றிப் படர்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களும், அன்று காங்கிரசு - முஸ்லிம் லீக் தலைமைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு புரட்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்தன.
ஒரு மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, இந்தியாவைத் திரைமறைவிலிருந்து ஆட்டி வைக்கும் திட்டத்துடன், தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. இந்தப் போலி சுதந்திரத்திற்கு வயது 60.
இன்று, வாயளவில் சுதந்திரம் என்று பீற்றிக் கொள்வதற்குக் கூட வழியில்லாமல், வெளிப்படையாகவே நம் நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன ஏகாதிபத்திய வல்லரசுகள். தற்போது நம்மீது திணிக்கப்படும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையின் உண்மையான பொருள் மறுகாலனியாதிக்கம் என்பதுதான். நமது நாட்டின் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள், மக்களின் தேவையையோ நாட்டு நலனையோ கணக்கில் கொண்டு வகுக்கப்படுவதில்லை. மாறாக, உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம், சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு நிறுவனங்கள் ஆகிய ஏகாதிபத்திய நிறுவனங்களின் ஆணையைத்தான் எல்லா அரசாங்கங்களும் பணிவுடன் அமல்படுத்தி வருகின்றன.
இந்தக் கொள்கைகளால் இந்தியத் தரகு முதலாளிகளின் லாபம் விண்ணை முட்டுமளவு உயர்கிறது. உழைக்கும் மக்களின் வாழ்க்கையோ மரணக் குழிக்குள் சரிகிறது. இது தெரிந்தும் "இந்தியா ஒளிர்கிறது" என்று குதூகலிக்கிறார்கள் ஏகாதிபத்திய அடிமைகள். உலகையே தன் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்காகப் போர்வெறி பிடித்து அலையும் அமேரிக்க வல்லரசின் எடுபிடியாகவும் ஆசியப் பகுதிக்கான அடியாளாகவும் இந்தியா மாற்றப்பட்டு விட்டது. இந்த அடிமைகளோ, "இந்தியா வல்லரசாவதற்க்கு இதுதான் சிறந்த வழி" என்று குதூகலிக்கிறார்கள்.
இவர்கள் சுதந்திர உணர்வற்ற பிழைப்புவாதிகள், நாட்டுப்பற்றும் சுயமரியாதை உணர்வுமற்ற புழுக்கள் - ஆனால் படித்த புழுக்கள், "ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், ஹார்வர்டு, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் எனப் படித்துப் பட்டம் வாங்கி பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளாகி லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம்; குடும்பத்தோடு அமேரிக்காவில் குடியேறலாம்; பன்னாட்டு முதலாளிகளுடன் சேர்ந்து கூட்டாக இந்தியாவைக் கொள்ளையிடலாம்" என்றெல்லாம் கனவு காணும் இத்தகைய அற்பர்கள்தான் மறுகாலனியாக்க அடிமைத்தனத்தை முன்னேற்றம் என்று கூறி நம்மை ஏமாற்றுகிறார்கள்.
அன்று பகத்சிங் முதலான போராளிகள் நாட்டு விடுதலைக்காக தூக்கு மேடையில் நின்று கொண்டிருந்த போது இத்தகைய மானமற்ற புழுக்கள் பிரிட்டிஷ் அரசின் பதவி நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். கலெக்டராக, ஜட்ஜாக, போலீசு அதிகாரியாக, அமைச்சராக, துரைமார்களுக்கு தொண்டூழியம் செய்யும் விசுவாசமான அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு வெள்ளைக்காரனின் நிர்வாகத்திறனை மெச்சி, அவன் ஆட்சி நீடிக்க வேண்டுமெனப் பிரார்த்தனையும் செய்து கொண்டிருந்தார்கள்.
அன்றைக்கும் இன்றைக்கும் வேறென்ன வேறுபாடு? அதிகார நாற்காலியில் அந்நியன் நேரடியாக அமர்ந்திருந்தால்தான் காலனியாதிக்கமா? கல்லாவில் அமர்ந்திருந்தால்தான் கடைமுதலாளியா?
"பிரிட்டனின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை நிற்க வேண்டுமென்றும், தன்னை மீறி வேறு அரசுகளுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாதென்றும் வெல்லெஸ்லியின் துணைப்படைக் கொள்கை அன்று இந்திய மன்னர்களை நிர்பந்தித்தது. இன்றைய அமேரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தம், அமெரிக்காவின் ஆக்கரமிப்புப் போர்களுக்கேல்லாம் இந்திய இராணுவம் அடியாள் வேலை செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்துகிறது, இரானுடன் உறவைத் துண்டிக்குமாறு உத்தரவிடுகிறது, இந்திய அணு ஆயத உற்பத்திக்குத் தடை விதிக்கிறது.
அன்று டல்ஹவுஸியின் வாரிசிலிக் கொள்கை, வாரிசு இல்லாத மன்னர்களின் நாட்டை இணைத்துக் கொள்வதாகக் தொடங்கி, பின்னர் எல்லா சமஸ்தானங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வதில் முடிந்தது. இன்றோ, 'நட்டமாகும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்' எனத் தொடங்கிய தனியார்மயக் கொள்கை, லாபமீட்டும் பொதுத்துறைகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளின் பசிக்கு விருந்தாக்க வேண்டும் என்று வளர்ந்திருக்கிறது.
அன்று ஜமீன்தாரி, ரயத்வாரி, மகல்வாரி முறைகள் மூலம் விவசாயிகளைப் பிழிந்து கஜனாவை நிரப்பியது பிரிட்டிஷ் அரசு. இன்று அரசுக் கொள்முதல் ரத்து, மானிய வெட்டு, தானியக் கொள்முதலில் அன்னியக் கம்பெனிகள், அதிலும் ஊகவணிகம், விவசாயிகளின் பாரம்பரிய விதைகளையே அன்னியன் உடைமையாக்குவது போன்ற சதிகள் மூலம் விவசாயியைக் கடனாளியாக்கி விவசாயத்தை விட்டே துரத்துகிறது அரசு.
அன்று கந்து வட்டிக்குக் கடன் பட்ட தமிழ்நாட்டின் விவசாயிகளை ஏமாற்றிக் கப்பலேற்றி, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களிலும், மலேசியாவின் ரப்பர் தோட்டங்களிலும் அவர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. இன்றோ கடன்பட்ட விவசாயிகளின் பிள்ளைகள், 'கொத்தடிமையாவோம்' என்று தெரிந்தே மலேசியாவுக்கு ஓடுகிறார்கள். பஹரைனில் தீக்கிரையாகி சவப்பெட்டியில் வீடு திரும்புகிறார்கள்.
எதுவும் பழங்கதையல்ல. கடந்த காலத்தின் காலனியாதிக்கக் கொடுமைகளைப் பூதக் கண்ணாடியால் பெருக்கிக் காட்டியதைப் போல இன்று நம் கண் முன்னே காட்சி தருகிறது மறுகாலனியாதிக்கம். இதற்கெதிராக நம்மைப் போராட தூண்டும் உந்துவிசையாக, இந்திய விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியாக, 200 ஆண்டுகளுக்கு முன்னரே வெள்ளையனுக்கு எதிராக வீரச்சமர் புரிந்திருக்கிறார்கள் தென்னகத்தின் வீரர்கள், தமிழகத்தின் வீரர்கள்!
1801 ஜூன் மாதம் திருச்சியிலிருந்து சின்ன மருது வெளியிட்ட பிரகடனம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. "இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தே வெள்ளையர்களை விரட்டியடிக்க சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று திரளுமாறு" மக்களை அறை கூவி அழைக்கிறான் சின்ன மருது. இந்தியா ஒரு நாடு என்ற கருத்து அக்காலத்திய பேரரசர்களிடமே உருவாகியிராத போது துணைக் கண்டத்தின் விடுதலைக்கே குரல் கொடுத்த இந்த அறிக்கைதான் இந்தியாவின் முதல் விடுதலைப் போர்ப் பிரகடனம்.
1795-இல் வெள்ளையருக்கெதிராக திப்பு நடத்திய போரில் தொடங்கி, 1806-இல் வேலூர்க் கோட்டைச் சிறையில் சிப்பாய்கள் நடத்திய புரட்சி வரை நீடித்த இந்தப் போர்தான் இந்தியாவின் உண்மையான முதல் சுதந்திரப் போர். ஆனால் தென்னிந்திய வரலாற்றைப் புறக்கணிப்பது, இசுலாமியர்களை புறக்கணிப்பது என்ற இந்து தேசியக் கண்ணோட்டத்தின் காரணமாக, தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் பெருமைமிக்க இந்த விடுதலைப் போராட்ட மரபு இந்திய வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
1799-இல் சீரங்கப்பட்டினம் கோட்டையின் வாசலில் ஒரு சாதரணப் போர்வீரனைப் போலப் போரிட்டு மடிந்தான் திப்பு சுல்தான். நிஜாமும், பேஷ்வாவும், ஆறுகாட்டு நவாபும் துரோகமிழைத்துவிட்ட நிலையில் தென்னிந்தியா முழுவதும் உள்ள விடுதலை வீரர்களுடன் கூட்டணி அமைத்தான். தீரன் சின்னமலை திப்புவுடன் நின்று வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு சிறையிலிருந்து தப்பிய ஊமைத்துரைக்கு சின்ன மருது பாதுகாப்பு கொடுத்தான். கும்பினியாட்சியை எதிர்த்து சின்ன மருது நடத்திய போருக்கு திப்பு ஆயுதமும் நிதி உதவியும் வழங்கினான்.
திப்பு சுல்தான் கேளிக்கைகளில் திளைத்திருந்த மன்னனுமல்ல, சின்ன மருது கிணற்றுத் தவளையை ஒத்த பாளையக்காரனுமல்ல; இருவரும் ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழி அறிந்தவர்கள். பிரெஞ்சுப் புரட்சியால் கவரப்பட்ட திப்பு தன்னை 'குடிமகன் திப்பு' என்றே அழைத்துக் கொண்டான். சின்ன மருதுவோ "ஏழை மக்கள் கண்ணீரில்லாத வாழ்க்கை வாழ கும்பினியாரை எதிர்த்துப் போரிட வேண்டும்" என்று கூறி விடுதலைப் போருக்கு மக்களையும் அறைகூவி அழைத்தான்.
சின்னமலை, பூலித்தேவன், சின்ன மருது, வேலு நாச்சியார், ஒண்டிப்பகடை, சுந்தரலிங்கம், கட்டபொம்மன், ஊமைத்துரை, வெள்ளையத்தேவன் போன்றோர் தனித்தனியாகப் போராடி மடிந்த வீரர்கள் அல்ல. அவர்கள் தமக்குள் கூட்டிணைவுகளை உருவாக்கியிருந்தனர். நெல்லைக் கூட்டிணைவுக்கு கட்டபொம்மனும், திண்டுக்கல் கூட்டிணைவுக்கு கோபால நாயக்கரும், கன்னட நாட்டில் துந்தாஜியும், கேரளத்தில் கேரளவர்மனும், கோவையில் கானிஜகானும் தலைமை தாங்கினர். அனைவரும் இணைந்து உருவாக்கியிருந்த 'தீபகற்பக் கூட்டிணைவு' தனது ஆட்சிக்கே பேராபத்து என்று கும்பினிக்காரன் ஆஞ்சினான்.
1800-1801-ஆம் ஆண்டுகளில் மிகத் தீவிரமாக நடைபெற்ற இந்தப் போரில் சுமார் 30,000 வீரர்கள் தென்னிந்தியா முழுவதும் கும்பினியாட்சியை நிலைகுலைய வைத்திருக்கின்றனர். சாதி மத வேறுபாடுகளைக் கடந்து கிளர்ந்தெழுந்த இந்தப் போராட்டம் 1806-ஆம் ஆண்டு வேலூர் புரட்சியில் முடிவடைந்தது. இந்த விடுதலை வீரர்கள் காலனியாதிக்கத்தை ஒழிப்பதுடன் தம் கடமை முடிந்ததாகக் கருதவில்லை. கண்ணீரில்லாத மகிழ்ச்சியான வாழ்வை மக்கள் பெற வேண்டும் எனக் கனவு கண்டான் சின்ன மருது. பிரெஞ்சு புரட்சியால் கவரப்பட்ட திப்புவோ நாட்டைத் தொழில்மயமாக்கவும், மக்களுக்கு நல்வாழ்வு வழங்கவும் கனவு கண்டான். ஒரு சோசலிச இந்தியாவைப் படைக்க விழைந்தான் பகத்சிங்.
தூரோக வரலாறும் - தேர்தல் அரசியலும்:
அன்று அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்; இன்றோ அவர்களது கனவும் தோற்றுக் கொண்டிருக்கிறது. பகத்சிங்கின் மண்ணிலிருந்து ஒரு மண்புழுவாம் மன்மோகன் சிங்! மருதுவின் சிவகங்கை மண்ணிலிருந்து சிரழிவுவாதி சிதம்பரம்! வீரர்களின் மண்ணிலிருந்து தப்பிப் பிறந்துவிட்ட இந்த ஈனர்கள், கூசாமல் துரோகிகளின் மொழியில் பேசுகிறார்கள்.
சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட பின் சிவகங்கை அரியணையை கும்பினியாரிடமிருந்து பிச்சையாகப் பெற்ற கவுரி வல்லபத் தேவன், கர்னல் அக்னியூவின் காலில் விழுந்து வணங்கினான் என்கின்றன ஆவணங்கள். "200 ஆண்டுகள் எங்களுடன் வணிகம் செய்தீர்கள். மேலும் 200 ஆண்டுகள் வணிகம் செய்ய உங்களை அழைக்கிறோம்" என்று கூறி இன்றைய ஐரோப்பிய முதலாளிகளிடம் பல்லிளிக்கிறார் ப.சிதம்பரம்.
'கடவுளே' என்று கும்பினியாரை விளித்துக் கடிதம் எழுதிய துரோகி தொண்டைமான், சின்ன மருதுவை 'நாய்' என்று கடிந்து ஏசுகிறான். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்குச் சென்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங்கோ காலனியாட்சி செய்த நன்மைகளுக்காக பிரிட்டனுக்கு நன்றி கூறுகிறார். ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக போராடும் உண்மையான நாட்டுப்பற்றாளகளான நக்சல்பாரிகளை "இந்தியாவின் மிகப்பெரிய உள் நாட்டு அபாயம்" என்று கூறி ஒடுக்குவதற்கு திட்டம் தீட்டுகிறார்.
அன்று கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுத்தது தொண்டைமானின் கூலிப்படை. இன்று கோலாவுக்கு எதிராக போராடும் அனைவரையும் ஒடுக்க நெல்லை மண்ணிலேயே எதிரிக்கு ஏவல் செய்கிறது தமிழக போலீசு. அன்று வெள்ளையனை எதிர்த்த விடுதலை வீரர்களைத் தன்னுடைய படைகளைக் கொண்டே ஒடுக்கினான் ஆற்காட்டு நவாப்; இன்று, ஜப்பானிய ஹோண்டா நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்க்கும் தொழிலாளர்களை நரவேட்டையாடுகிறது அரியானா போலீசு.
முந்தைய காலனியாதிக்கத்தைக் காட்டிலும் கொடியது இந்த மறுகாலனியாதிக்கம். இதனை முன்னேற்றம் என்று கூறி மக்களை மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கம். பதவிக்கும் பவிசுக்கும் ஆசைப்பட்டு அன்று ஆங்கிலேயருக்குச் சேவகம் செய்தவர்களை 'ஈனப்பிறவிகள்' என்றான் சின்ன மருது. இன்று நாடே அன்னியனுக்கு அடிமையாகி வருவதை அறிந்தும் அமைதி காப்பதும், அலட்சியம் காட்டுவதும் கூட ஈனச் செயல்தான்.
விடுதலைப் போரில் முதல் குரல் எழுப்பிய தமிழகத்திலிருந்து இன்றைய மறுகலனியாக்க எதிர்ப்புப் போரும் துவங்கட்டும்! விடுதலைப் போராளிகளின் தியாக வரலாறு நம்மை முன்னோக்கிச் செலுத்தும் உந்து விசையாகட்டும்!
************
மேலே உள்ள கட்டுரை புதிய காற்று என்ற வலைப்பூவில் இருந்த ஒரு பதிவிலிருந்து மறுபதிப்பு செய்யப்படுகிறது.
*****
தொடர்புடைய பதிவுகள்:
The Transfer of Power: Real or Formal? -- Suniti Kumar Ghosh
1 பின்னூட்டங்கள்:
கட்டுரையின் தலைப்பை மட்டுமே படித்து பின்னூட்டமிடும் எளிய வாசகனே உன்னைப் போன்றவர்களின் குழப்பம் தீருவதற்க்காகத்தான் இரண்டு தொடர்புடைய கட்டுரைகளை இணைத்துள்ளேன் படித்து பார்த்து தெளிவாகிக் கொள்.
அசுரன்
Post a Comment