TerrorisminFocus

Tuesday, May 22, 2007

பார்ப்பனியத்திற்க்கு எதிராய் ஒரு புதிய தளம்

யங்கரவாதம் என்றால் என்ன? ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான எல்லாவற்றையும் பயங்கரவாதம் என்ற ஒற்றை வாதத்தில் அடக்கி ஒடுக்கும் தந்திரத்தை செயல்படுத்தி வருகிறது. இன்னொரு பக்கம் பார்ப்பனிய பயங்கரவாதம் ஆளும் வர்க்கமாக இருந்து கொண்டே தனது இருப்பை நியாயப்படுத்தும் தேவைக்காக தனது வர்க்க நலன்களுக்கு நேரெதிரானவர்களையும், மத சிறுபான்மையினரையும் பயங்கராவாதிகள் என்று முத்திரை குத்தி பீதி கிளப்புவதன் மூலமே தனது மக்கள் விரோத பயங்கரவாத நடவடிக்கைகளை மக்களின் பார்வையிலிருந்து பாதுகாத்து வருகிறது.

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழல் உருவாக்கும் சமூக பொருளாதார அழுத்தம் என்பது அதன் உண்மையான வடிவங்களில் வெளி வருவது என்பது ஆளும் வர்க்கங்களுக்கு என்றுமே ஆபத்தானதுதான். அப்படியே எங்கேனும் வந்தால் கூட அவற்றையும் பயங்கரவாத முத்திரை குத்தி வெகு சன அரங்கில் தனிமைப்படுத்தி முறியடிக்கும் தேவை தரகு வர்க்கத்துக்கு உள்ளது(Nandigram, etc).

வரைமுறையின்றி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் தரகு வர்க்க அரசியல்வாதிகளும், அதற்க்கு தரகு வேலை செய்யும் பார்ப்ப்னிய பயங்கரவாதிகளும் தமது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள தொடர்ந்து ஒரு போலியான எதிரியை உருவாக்கும் தேவை உள்ளது.

பார்ப்பனியத்தின் நலனும், ஏகாதிபத்தியத்தின் நலனும் ஒரு சில சொற்பமான விசயங்களைத் தவிர்த்து வேறு எங்கும் முரன்படவில்லை. ஆனால் இவர்கள் இருவரின் நலனும் ஒன்றிணையும் புள்ளிகள் பல உள்ளன. தொடர்ந்து பயங்கரவாத பீதியூட்டுவதன் மூலம் தமது பாசிச செயல்பாடுகளையே நியாயமானது என்ற பொதுக்கருத்தை வலுப்பெறச் செய்யும் தேவை இருவருக்கும் உள்ளது.

ஏகாதிபத்தியத்தின் தேவைக்குட்பட்டு பார்ப்பனியம் இங்கு இருக்கும் அதே வேளையில் உபரியாக பார்ப்ப்னியத்தின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்குபவர்களுக்கு எதிராகவும் இந்த பாசிச சூழலை பயன்படுத்தும் சலுகையை ஏகாதிபத்தியம் பார்ப்ப்னியத்திற்க்கு உறுதிப்படுத்துகிறது.

அதே நேரத்தில் இந்திய பாசிசமான பார்ப்பனியத்தின் சித்தாந்த அடிப்படை என்பதே ஏகாதிபத்தியத்தின் சமூக பொருளாதார சுரண்டல் வடிவத்துக்கு சேவை செய்வதாக உள்ளதும் இவர்களின் சகோதரத்துவ உறவுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

இந்த சூழலில், ஏகாதிபத்தியத்திற்க்கு சேவை செய்யும் எந்தவொரு வோட்டுக் கட்சிகளும் தவிர்க்க இயலாமல் பார்ப்பனிய நடைமுறைகளை தமது செயல்பாடுகளாக கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதன் அளவு வேண்டுமானால் வோட்டுக் கட்சிக்கு வோட்டு கட்சி மாறுபடலாம். ஆனால் பார்ப்பனியம் இன்றி ஏகாதிபத்திய சேவை இந்தியாவில் செய்ய இயலாது என்பதுதான் உண்மை.

மேலும் பார்ப்பனியம் தனது நலன்களை மட்டும் முன்னிறுத்தும் சில பத்து அமைப்புகளை கொண்டுள்ளதோடல்லாமல். தனது தேவைக்காக பிற மத, இன, சாதி ஆட்களையும் சேவை செய்ய வைக்கும் இயல்புடன் எல்லா வகை அமைப்பு வடிவங்களிலும் ஊடுருவி நிற்கிறது. சில ஆயிரம் வருடங்கள் ஆட்சியிலிருந்த பார்ப்பனியம் சமூகத்தின் அனைத்து விழுமியங்களிலும் தனது இருப்பை காட்டிக் கொள்வது ஆச்சரியமான விசயமல்ல. இதனை நேரடியாக பார்ப்பனிய கட்சிகளில் இல்லாமலேயே பார்ப்பனிய சேவை செய்யும் பிற வோட்டுக் கட்சி பயங்கரவாதிகள் அதீதமாக காணக் கிடைப்பதைக் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்.

இதே நிலைதான் ஊடகங்களிலும் நிலவிவருகிறது. ஊடகங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியம் பார்ப்ப்னியம் என்ற இந்த கூட்டணியின் நீட்சியாகவே இருக்கின்றன. இவையணைத்தும் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரி பிரச்சாரம் செய்யும் அளவு அதன் நிர்வாக இடங்களில் RSS ஆட்கள் உட்கார்ந்துள்ளனர்.

இந்நிலையில் பின்வாங்கியதாக பரவசவாத குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகளால கருதப்பட்ட பார்ப்பனியம் இன்னும் வெளிப்படையாக தனது பாசிச நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொணடு பொது அரங்கில் வெளிகாட்டி வருகிறது. இன்னொரு பக்கம் மறுகாலனிய நடவடிக்கைகளும் மிக வேகமாக ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை வேகம் பெறுகின்றன என்ற உண்மை நமக்கு நேர்மறையாக சொல்லும் விசயம் என்னவென்றால், இதற்கெதிரான மக்களின் போராட்டங்களும் வேகம் பெரும் என்பதைத்தான்.

எதிர்மறையாக நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், இவர்களின் பாசிச நடவடிக்கைகளும் வீரியம் பெற இருக்கின்றன என்பதே ஆகும். இவர்களின் பய பீதியூட்டும் கோயபல்ஸ் பிரச்சாரம் வேகம் பிடிக்கப் போகின்றன என்பதே ஆகும். பய பீதியூட்டவும், போலி எதிரியை உருவாக்கவும் தேவையான சம்பவங்கள் இனி தொடர்ந்து அடிக்கடி உற்பத்தி செய்யப்படும் என்பதே ஆகும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் போடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சி நடந்தேறி வருகிறது. எந்த வகையிலும் வோட்டுக் கட்சிகள் இவர்களின்(ஏகாதிபத்தியம், பார்ப்பனியம்) நலனுக்கு ஊறானவர்கள் இல்லை என்பதால் போடா சட்டத்தில் வோட்டுக் கட்சிகளுக்கு மட்டும் விலக்கு கொடுக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் போடா சட்டம் தனது உண்மையான இலக்காகிய ஜனநாயக, புரட்சிகர சக்திகளுக்கு எதிராக மட்டும் வேலை செய்வதை உறுதிப்படுத்துவதுடன், அதற்க்கு எல்லா பிழைப்புவாதிகளின் ஆதரவையும் உறுதிப்படுத்த இருக்கின்றன பாசிச சக்திகள்.

இந்நிலையில் ஒவ்வொரு ஜனநாயகவாதியின் கடமையாக பார்ப்பனியத்தின் முழு வடிவத்தையும் (அதன் வர்க்க சார்பு, வர்ண சார்பு, சித்தாந்த பின்புலம்) புரிந்து கொண்டு அதற்கெதிரான கருத்து பிரச்சாரத்தை, அதன் ஆணி வேரை தகர்த்தெறியும் வகையில் செய்ய வேண்டிய மிக மிக முக்கியமாக உள்ளது. மாற்று ஊடகங்களை கட்டியமைப்பதின் மூலம் இந்த் உண்மையான அதி பயங்கர பயங்கரவாதம் குறித்து வெகு சனங்களிடம் கொண்டு செல்லும் கடமை வேறு எப்போதையும் விட இன்று மிக முக்கியமானதாக முன் வந்துள்ளது.

எந்தவொரு ஊசலாட்டத்திற்கும் இடமின்றி கறாராக ஏகாதிபத்தியம்-பார்ப்பனியம் கூட்டணிக்கும், ஜனநாயக-புரட்சிகர கூட்டணிக்கும் இடையில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் ஒரு வரலாற்று நிர்பந்தம் இதோ ஆரம்பமாகிவிட்டது. எல்லாவித மன சஞ்சலங்களையும் விட்டொழித்து விட்டு சமரசமின்றி சிந்திக்க கோரி ஜனநாயக சக்திகளுக்கு இந்த கட்டுரையின் மூலம் அரைக் கூவி அழைக்கிறேன்.

இந்த அம்சத்தில் செயல்பட வேண்டிய தேவையை முன்னிட்டு முதல் முயற்சியாக இந்தியாவின் பெரிய பயங்கரவாதமாகிய பார்ப்பனியத்தின் பயங்கரவாதத்தையும், அரசு பயங்கரவாதத்தையும் அறிமுகப்படுத்தும் விதமாக இந்த தளத்தில் செய்திகள், விமர்சனக் கட்டுரைகள் இடம்பெறும். இந்த தளத்தில் பங்களிக்க விரும்பும் ஜனநாயக சக்திகள் இந்த பின்வரும் மெயில் ஐடியை தொடர்பு கொள்ளவும் - asuran@inbox.com. அல்லது இந்த பதிவில்(http://terrorinfocus.blogspot.com/) பின்னூட்டமிடவும். தகவல்களை பெயர் வெளியிட விரும்பாமலும் தரலாம். தகவல்களின் நம்பகத்தன்மை உத்திரவாதப்படுத்தப்பட்ட பின்பு வெளியிடப்படும்.


பிற சிறுபான்மை பயங்கரவாத நடவடிக்கைகளை விரிவாக பேசி துவேசம் பரப்ப பாசிஸ்டு ஊடகங்கள் இருக்கின்ற காரணத்தாலும், வேறு வெகுசன முதாலளித்துவ ஊடகங்கள் இந்த அம்சத்தில் விவாதத்தை முன்னெடுத்து சென்று மக்களிடம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி வருவதாலும் அவற்றிற்கு இங்கு முக்கியத்துவம் தேவைப்பட்டால் ஒழிய அளிக்கப்படாது.

Terrorinfocus

17 பின்னூட்டங்கள்:

said...

நல்ல முயற்ச்சி. வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ்

said...

சரியான நேரத்தில், இதனை ஆரம்பித்து உள்ளீர்கள்.

இந்தியாவில் இன்று இந்த இரண்டு பயங்கரவாதமும் எப்படி ஒன்றை ஒன்று சார்ந்தும், சேர்ந்தும் செயல்படுகிறது என்பதை பலர் இன்னும் அறியாமல் தான் உள்ளனர்.

இத்தகைய நிலையினை மாற்றி,ஜனநாயக சக்திகள் பலவும் தங்கள் பதிவுகளை, விமர்சனங்களை வைத்து இந்த பயங்கரவாத பாசிச சக்திகளை வேரறுக்கும் விதமாக இந்த தளம் அமையும்.

இந்த மக்கள் நல விரோதிகளின் எதிர்கால கோயபல்ஸ் பிரச்சாரதை எதிர்கொள்ளும் புரட்சிக்கர சக்திகளுக்கும் இந்த தளம் பக்கபலமாக அமையும்.

வாழ்த்துக்கள்.

said...

உங்கள் கட்டுரை குழப்பமாய் இருக்கிறது.

வோட்டுக்கட்சிகளுக்கு போடாவில் விலக்கு என்றால் என்ன?

எல்லா வோட்டுக்கட்சிகளுமே பார்ப்பனீயத்துக்கு உட்பட்டவை என்கிறீர்களா? அப்புறம் ஜனநாயக-புரட்சிகர கூட்டணி எப்படி அமையும்? இந்த கட்சிகளை விடுத்து ஜனநாயகம் ஏது? இதே கட்சிகளை எதிர்த்துதான் புரட்சியா?

பரவிவரும் உலகளாவிய தீவிரவாதத்துக்கு காரணி ஏது? பார்ப்பனீயமா? அந்த தீவிரவாதத்துக்கு ஜனநாயக-புரட்சிகர கூட்டணியின் தீர்வுதான் என்ன?

விளக்கவும்..

said...

எனது கட்டுரை குழப்பமாக இல்லை என்றே நம்புகிறேன் மாறாக ஜனநாயகம் புரட்சி குறித்தான உங்களது புரிதலில் குழப்பம் இருக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறேன்.

வோட்டு கட்சிகளில் யார் ஜனநாயக கட்சிகள் என்று ஒரு சின்ன பட்டியலிட்டால் பரிசீலிக்க வசதியாக இருக்கும்.

நாடளுமன்றம் என்பது ஜன்நாயகம் என்ற தவறான புரிதலில் இருந்து நீங்கள் பேசுவது போல தெரிகிறது.

நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தினை வேறு வழியின்றி விரக்தியுடன் ஏற்றுக் கொள்ளும் வணிகர் சங்கம் போன்றவையே ஜனநாயக புரட்சிகர கூட்டணியில் இருப்பர்.

வோட்டுக் கட்சி பிரதிநிதிகளை போடாவில் கைது செய்வதிலிருந்து விலக்கு அளிக்கும் பரிந்துரையை பாஜக (எனது நினைவுகள் சரி எனில்) முன் மொழிந்துள்ளது. இது குறித்தான் செய்தி போன வாரம் ஹிந்துவில் வந்துள்ளது.

உலகளாவிய பயங்கரவாதமாக இருப்பது ஏகாதிபத்திய பயஙக்ரவாதமே, அதன் உள்ளூர் பயஙக்ரவாத கூட்டணியாக இருப்பது பார்ப்ப்னியமே.

அரசு பயங்கரவாதம் என்று இங்கு குறிப்பிட்டுள்ள விசயம் உலகளாவிய ஏகாதிபத்திய பயங்கரவாதத்தின் பிரதிநிதியே.

பயங்கரவாதம் முதல் ஜனநாயகம் வரை ஆளும் வர்க்க கருத்தியல் நிலையில் இருந்து கொண்டு பார்ப்பதாலேயே இது போன்ற கேள்விகளை அனானி கேட்க்கிறார் என்று நினைக்கிறேன்.

************

கோபாவின் வருகைக்கு நன்றி, பார்ப்பனிய, அரசு பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த செய்திகளை, விமர்சனங்களை இந்த தளத்தில் உடனுக்குடன் பதிவிடும் திட்டத்தில் ஆரம்பித்துள்ளேன். இதை ஒரு கூட்டுப் பதிவாக வளர்த்தெடுக்கும் எண்ணம் உள்ளது.

அசுரன்

said...

நாடாளுமன்றத்தையும் எல்லா வோட்டு கட்சிகளையும் கொண்ட கட்டமைப்பு ஜனநாயகத்தை எதிர்க்கும் நீங்கள் அதற்கு ஈடான வேறொரு மாற்று அமைப்பை தெளிவுபடுத்துவீர்களா? எல்லா கட்டமைப்புகளும் அதில் பலம் பெரும் அமைப்புகளின் சுயலாபத்துக்கு இலக்காகிப்போவது ஏகாதிபத்தியம் அல்ல அது மனித நாகரீகத்தின் ஒரு சந்தர்ப்பவாத இயல்புணர்வில் எழும் ஒரு கிளைப்பொருள் என்றே தோன்றுகிறது. அதை தவிர்க்க இயலுமா? தவிர்க்க வேண்டுமா? இந்த ஜனநாயக அமைப்பில்தான் பல பார்ப்பனீய அமைப்புகளும், கருத்தியல்களும் கட்டுடைபட்டிருக்கின்றன. இதுகாரும் சமுதாயம் கண்டிராத பல சமூக அமைப்புகள் இன்று தன் குரல் பெற்றிருக்கின்றன. இது எப்படி கூடாததாகும்? விளக்கவும்.

ஏகாதிபத்தியமே உலகளாவிய பயங்கரவாதத்தின் அடிப்படை என்பதும் நெருடலாய் இருக்கிறது. மத, இன உரசல்களில் விளையும் பல பயங்கரவாதங்கள் ஏகாதிபத்தியத்துடன் எப்படி தொடர்புடையதாகும்? விளக்கவும்.

போடாவில் வோட்டுக்கட்சி உறுப்பினர்களுக்கு விலக்கு அளிக்கப்படுமானால் அது தற்போதைய ஆட்சி பலம் பெற்ற பல சுயநல அதேசிய சக்திகளின் தவறான நடவடிக்கையாக இருக்கும். இந்தியாவில் இப்போது ஒவ்வொரு சமூக குழுவும் தன் சுயலாபத்திற்காக இயங்கும் ஒரு குறிக்கோளை வெளிப்படையாக எடுத்து தேசீய நலனை புறக்கணித்ததின் பின்விளைவே இந்த ஒவ்வாத சட்டங்கள். இதற்கும் இடதுசாரி புரட்சி கூட்டணிகள் விலக்கு அல்ல. நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

said...

வாழ்த்துக்கள்!

நிச்சயம் தேவையான ஒன்று

என் ஆதரவும்.

said...

இந்திய போலி ஜனநாயக நாடாளுமன்றத்திற்க்கு புனித வட்டம் கட்ட அதில் நடந்தேறிய சமூக சீர்திருத்த இன்னபிற மாற்றங்களை முன் கொண்டு வரலாம் எனில் இந்தியாவில் பிரிட்டிஸ் காலணீயாட்சியை நியாயப்படுத்த முதலாளித்துவ உற்பத்தியை அறிமுகப்படுத்தி வளர்த்து விட்டதையும், இதே நீங்கள் மேற்கோளிட்ட சமூக சீர்திருத்த இன்ன்பிற முற்போக்கு மாற்றங்களையும் முன்கொண்டு வரலாம்.

விசயம் ஒரு குறிப்பிட்ட வரலாற்று கட்டத்தில் உண்மையிலேயே சாத்தியமான வளர்ச்சிக்கும் அதை தடுத்து நிறுத்திவிட்டு ஆளும் வர்க்கம் செய்யும் சிற்சில சீர்திருத்த சல்ஜாப்புகளுக்கும் இடையில் உள்ள வெளியை ஆய்வு செய்வதில் கிடைக்கும்.

இந்திய நாடாளுமன்றத்தை ஏன் போலி ஜனநாயகம் என்று சொல்கிறேன் என்பதை இங்கு படிக்கவும்,

இதற்க்கான மாற்று அமைப்பு குறித்து விவாதம் செய்ய கீழ் கண்ட அது சம்பந்தப்பட்ட பதிவில் வந்து விவாதிக்கலாம் என்று கருதுகிறேன். இங்கு இந்த பதிவில் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகம் இல்லை என்பதை நிறுவுவது என்ற அளவில் தான் பதிவிற்கு நேர்மையான விவாதமாக இருக்கிறது. சுருக்கமாக குறிப்பிடுவது எனில் புதிய ஜனநாயக நடைமுறைகள்தான் மாற்று அரசமைப்பாக இருக்கும்(சீனாவின் மாதிரியை உத்ததாக இருக்கும். ஆனால் சீனாவுடன் ஒப்பிடும் பொழுது இங்கு ஜனநாயக சக்திகள் வலுவாக இருக்கின்ற காரணத்தால் இங்கு இன்னும் கொஞ்சம் தளர்வானதாக பாட்டாளி வரக்கம் தவிர்த்து பிற ஜனநாயக சக்திகளுக்கு கொஞ்சம் அதிகப்படியான செல்வாக்கு இருப்பதாக இந்த அமைப்பு இருக்கும் என்று கருதலாம். மற்றபடி அதே வோட்டெடுப்பு இருக்கும், திருப்பியழைக்கும் முறை இருக்கும்.).

தற்போதைய மத பயஙக்ரவாதம் என்பதில் ஏகாதிபத்தியத்தின் பாத்திரம் என்பது இன்றியமையாதது, இதுவரை ஒராண்டு கூட இடைவேளியின்றி குறிப்பாக அரேபிய நாடுகளின் மீது தொடர் யுத்தத்தில் இருந்த நாடு அமெரிக்கா என்ற உண்மையும், எண்ணைய், வைரம் முதல் பல்வேறு வளங்கள் மீதான ஆதிக்கத்திற்க்கான போராட்டத்தின் கொதிகலனாக இந்த உலகம் இதுவரை இருந்தது என்ற உண்மையையும், எப்பொழுதுமே ஒரு சமூக பொருளாதார அழுத்தம் என்பது ஏற்கனவே அந்த சமூகத்தை தாங்கி ஒற்றுமைப்படுத்தும் கலாச்சார அடையாளம் தாங்கியெ வெளி வரும் என்ற உண்மையை நோக்கும் போதும்(எ-கா: முதல் தென்னிந்திய சிப்பாய் கலகம், இரண்டாம் இந்திய சிப்பாய் கலகம், மாப்ளா கலகம் etc) இஸ்லாம் மற்றும் பிற உலகளாவிய பயங்கர்வாதத்தின் அடி கொள்ளியாக இருந்து வளர்த்து விட்டது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளே என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

மத இன முதல் எந்தவொரு உரசலும் வளங்களின் மீதான் உரிமை கோரி நிகழ்வாதாகவோ அல்லது உள்நாட்டு சிக்கல்களின் நீட்சியாகவோதான் இருக்கிறது. ஒருவேளை கால போக்கில் இந்த பொருளாதார அடித்தளங்கள் மறைந்து மருவி விட்ட போதிலும் கருத்து நிலையில் இந்த மத இன மோதல்கள் வேறு ஏதாவது பொருளாதார தேவைக்கான கருவியாக பேணிப் பாதுக்காக்கப் படுகின்றன. அடிவயிற்றில் கிள்ளும் பசியை விட, மான உணர்ச்சியை விட எந்தவொரு கடவுளும் பெரிதானவன் அல்ல.

//போடாவில் வோட்டுக்கட்சி உறுப்பினர்களுக்கு விலக்கு அளிக்கப்படுமானால் அது தற்போதைய ஆட்சி பலம் பெற்ற பல சுயநல அதேசிய சக்திகளின் தவறான நடவடிக்கையாக இருக்கும். இந்தியாவில் இப்போது ஒவ்வொரு சமூக குழுவும் தன் சுயலாபத்திற்காக இயங்கும் ஒரு குறிக்கோளை வெளிப்படையாக எடுத்து தேசீய நலனை புறக்கணித்ததின் பின்விளைவே இந்த ஒவ்வாத சட்டங்கள்.//

இதை ஓரளவு ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இது அந்த கட்சிகளின் தவறல்ல. உண்மையில் அவற்றின் இயல்பே அப்படித்தான். மேலும் வேறு என்னவிதமான மாகா புனிதமான தேசிய நலன் கோள்கைகளை கொண்ட அமைப்பாக இருந்தாலும், போலி ஜன்நாயக ஓட்டு அரசியலில் குதிக்கும் யாவருமே பார்ப்ப்னிய ஏகாதிபத்திய பூசாரிகளாக மறுஅவதாரம் எடுக்கும் நிர்ப்பந்தத்திற்க்குள்ளாவார்கள்.


//
இதற்கும் இடதுசாரி புரட்சி கூட்டணிகள் விலக்கு அல்ல. நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?//

என்ன அடிப்படையில் இடதுசாரி புரட்சிகர கூட்டணியை இந்த பிரதேசவாத/குழுவாத லிஸ்டில் சேர்க்கிறேர்கள்?

யாரை இடதுசாரி புரட்சிக்ர கூட்டணி என்று சொல்கிறீர்கள்?

இங்கு நீங்கள் CPI,. CPM உள்ளிட்ட போலிகளை குறிப்பிடவில்லை என்று நம்புகிறேன்,

வருகைக்கும் தொடர்ந்து விவாதிப்பதற்க்கும் நன்றி

அசுரன்

said...

பார்ப்பனிய பயங்கரவாதம் - திற்காக புதிய தளம் சமகால அவசிய தேவை.

அதில், பலருடைய பங்கேற்பு முயற்சியும் பாராட்டுக்குரியது. ஜனநாயக சக்திகள் பங்கேற்க உற்சாகத்துடன் முன்வரவேண்டும்.

பதில்களில், மேலும், மேலும் கலைச்சொற்களும், கணமும் அதிகரிக்கிறது. பலருக்கு புரியாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. கவனம் கொள்ளுங்கள்.

said...

ஐயா,

உண்மையான ஜனநாயகத்திற்கு சீன குடியரசை ஒரு மாடலாக கொண்டு நீங்கள் சொல்லுவது குறித்து அதிர்கிறேன். சீனத்தில் உண்மையான பொதுமக்களின் ஜனநாயக மாண்புகள் எப்போதும் சிதைக்கப்பட்டே இருக்கின்றன. அது டினான்மண் சதுக்கம் போன்ற பிரபலமான அராஜகம் மட்டும் அல்ல, ஆனால், நூற்றாண்டுகளாக - கலாசார புரட்சி என்ற கருங்காலத்தில் தொடங்கி - நடந்து வருவதுதான். இந்த புரட்சி ஜனநாயக போர்வையில் ஒரு போலிட்பீரோ ஆதிக்க சக்திகள்தான் அங்கு ஏகாதிப்பத்தியத்தின் எல்லா கூறுகளையும் உள்வாங்கி நிலைபெற்றன. சமீபத்தில் அந்த ஏகாதிபத்தியமும் - நீங்கள் சொல்வதுபோல் - முதலாளித்துவத்துக்கு அடிபணிந்தே விட்டது.

ஒரு சீனாவை இங்கு ஜனநாயக சான்றாக அமைப்பதே இந்த புரட்சி கூட்டணியின் இலக்காக இருக்குமானால் - இந்த நாடாளுமன்ற அரைகுரை ஜனநாயகம் ஆயிரம் மடங்கு மேல் என்றே தோன்றுகிறது. இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

இடதுசாரி புரட்சிகர கருத்தாக்கங்களும் பலமுறை இந்த சுயநல அதேசீய சக்திகளைப்போன்றே பல ஒவ்வாத நடவடிக்கைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியிருக்கின்றன என்று நம்புகிறேன். பல சமயங்களில் அவை மதவாத, இனவாத சக்திகளுடன் துணைபோய் அவற்றை மேலும் நியாயப்படுத்தும் பல செய்கைகளுக்கு அடிகோலிட்டுவிட்டன. அதனாலேயே, நான் இடதுசாரி வர்க்கமும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்று சொன்னேன்.

நீங்கள் சொன்ன அடிவயிறு பசிக்குமானால் எல்லா வாதமும் அழிந்துபோகும் என்பது ஏற்ககூடியதே? ஆனால், அந்த அடிவயிறு பசியை களைத்தது ஏகாதிபத்தியம்தானே (ஒரு சராசரி விழுக்காட்டில் பார்த்தோமானால்) - மற்ற நீங்கள் மேம்படுத்தும் எல்லா கட்டமைப்புகளும் தன் குடிகளுக்கு பசியைத்தானே பரிசாக கொடுத்திருக்கின்றன. விளைவைப்பார்த்து எடை போட வேண்டுமானால் இந்த சீன இடதுசாரி புரட்சிகர சக்திகளால் விளைந்தது பஞ்சமும், படுகொலைகளும்தானே. இதற்கு நீங்கள் என்ன மறுப்பு சொல்ல முடியும்?

said...

அனானி,

நான் குறிப்பிட்டேது கம்யுனீச சீனாவின் குடியரசு குறித்தும், ஜனநாயகம் குறித்தும்.

நீங்கள் இங்கு குறிப்பிடுவது முதலாளித்துவ சீனாவின் அராஜகம் குறித்து. இன்றைய சீனாவின் ஜனநாயக் மாண்பின் இழிநிலை குறித்த் தங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்.


//இடதுசாரி புரட்சிகர கருத்தாக்கங்களும் பலமுறை இந்த சுயநல அதேசீய சக்திகளைப்போன்றே பல ஒவ்வாத நடவடிக்கைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியிருக்கின்றன என்று நம்புகிறேன். //

இருக்கலாம். தவறுகள் இல்லா புனித தேசம் சோசலிசம் என்றோ அல்லது தவறுகள் செய்யாத புனித கட்சி கம்யுனிஸ்டு கட்சி என்றோ நான் சொல்லப் போவதில்லை.

இதிலிருந்து தொடரந்து பாடம் கற்றுக் கொள்கிறது என்பதும் கம்யுனிஸ்டு கட்சியின் அடிப்படை பொருளாதார சித்தாந்தம் சரியாகவே இருக்கிறது(நடைமுறையிலும் கூட) என்ற விசயமும்தான் ஏகாதிபத்திய அராஜகத்தை தூக்கி வீசி மாற்றாக இதனை வைக்கும் மன உந்துதலை தருகிறது.



// பல சமயங்களில் அவை மதவாத, இனவாத சக்திகளுடன் துணைபோய் அவற்றை மேலும் நியாயப்படுத்தும் பல செய்கைகளுக்கு அடிகோலிட்டுவிட்டன.//

அப்படியா? இனவாத சக்திகளுடன் துணை போன சம்பவங்கள் இருக்கலாம்(ஆந்திர மாவோயிஸ்டுகள்). மதவாத சக்திகளுடன் இருகக் வாய்ப்பில்லை. (ஆந்திர மாவோயிஸ்டுகள் மத அடிப்படையிலான அமைப்புகளுடன் கூட்டு சேர்கின்றன அதில் எனக்கு ஒப்புதல் இல்லை. ஆனால் மத அடிப்படையிலான அமைப்புகளுக்கும் மதவாத அமைப்புகளுக்கு வித்தியாசம் உள்ளதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அப்பொழுதும் கூட அங்கு ஒடுக்கப்பட்ட பிரிவினர் என்ற அடிப்படையிலேயே மத அடிப்படை அமைப்புகளுடனான கூட்டு சாத்தியமாகிறது. இதே இடத்தில் இந்து மதத்தின் பிற ஒடுக்கப்பட்ட பிரிவினருடனும் இதே புரிதலில்தான் கூட்டு சேர்கிறார்கள்).

இந்த காரணங்களிலானால்தான் இடதுசாரிகள் (போலி கம்யுனிஸ்டுகளை அல்ல) நீங்கள் சொன்ன அடிப்படையில் வரவில்லை என்று சொல்கிறேன்.



//நீங்கள் சொன்ன அடிவயிறு பசிக்குமானால் எல்லா வாதமும் அழிந்துபோகும் என்பது ஏற்ககூடியதே? ஆனால், அந்த அடிவயிறு பசியை களைத்தது ஏகாதிபத்தியம்தானே (ஒரு சராசரி விழுக்காட்டில் பார்த்தோமானால்) //

பசியை களைத்துள்ளதா? மேம்ம்பட்டுள்ளதா? எங்கிருந்து பார்க்கிறீர்கள்? இந்தியா முதல் எல்லா இடங்களிலும் அரைப் பட்டினி கூட்டத்தின் சதவீதம் அதிகரித்துள்ளது. இதனை மூடி மறைக்க வறுமை கோடு வரையறையை மாற்றியமைத்த காமெடியும் நடந்துள்ளது.(இது குறித்து ஏன் ஒப்பாரி வைக்கிறேர்கள் அமெரிக்க அடிவருடிகளே? என்று ஒரு கட்டுரை இங்கு பிரசூரிக்கப்பட்டுள்ளது).

பசியில் வருட வருடம் செத்து போகிறவர்கள் குறித்த செய்தி தற்போது அதிகமாக வருகீற்தே உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? லட்சம் விவசாயி தற்கொலை செய்ததன் காரணம் என்ன? உங்கள் கூற்றுப் படி பார்த்தால் கூட ஏகாதிபத்திய தாக்குதல் வீரியமான 90' களுக்கு பிறகு நிலைமை மோசமடைந்துள்ளது(85- 90 கள்தான் இந்தியாவின் வறுமை நிலை மிக ந்ன்றாக இருந்த காலம் - அரசாங்கா புள்ளிவிவரம் படி).

நான் மேற்கோளிடும் எந்த அமைப்பு இதுவரை பசியை மக்களுக்கு கொடுத்துள்ளது?

இந்தியாவை விட மிக மிக பிந்தங்கி போயிருந்த சீனா 20 வருடங்களில் இந்தியாவை விட பல மடங்கு முன்னேறி ஒவ்வொரு தலைக்குமான தானிய அளவை பல மடங்கு உயர்த்திய சாதனையை எங்கு கொண்டு வைப்பது?

வரலாற்றை பல்வேறு தரவுகளிலிருந்து புரிந்து கொள்ள ,முயற்சி செய்யுங்கள் - புரட்சி, ஜனநாயகம், சோசலிசம், கம்யுனிஸ்ம் குறித்து ஏகாதிபத்திய ஊடகங்கள் மூலம் படிப்பதன் விளைவே இது போல புரித்லில் கொண்டு விடுகிறது என்று கருதுகிறேன்.

சீனா, ரஸ்ய சோசலிசம் குறித்த பொய்களையும் அவதூறுகளையும் அம்பலப்படுத்தி இதே தளத்தில் போன மாதம் சில கட்டுரைகள் இட்டுள்ளேன் பார்க்கவும்.

********

சாக்ரடீசின் எச்சரிக்கைக்கு நன்றி... கவனம் கொள்வேன்.

தோழி லிவிங் ஸ்மைலின் வாழ்த்துக்களுக்கு நன்றி

அசுரன்

said...

=======

அப்படியா? இனவாத சக்திகளுடன் துணை போன சம்பவங்கள் இருக்கலாம்(ஆந்திர மாவோயிஸ்டுகள்). மதவாத சக்திகளுடன் இருகக் வாய்ப்பில்லை.

=======

இடதுசாரி, புரட்சிகர கூட்டணிகளுடன் இஸ்லாமிய மதவாத சக்திகளுக்குள்ள நெருக்கமான பிணைப்பு உலகலாவியதாக இருப்பதும், மிக பிரபலமானதும் ஆகும். அதைத்தான் சொல்கிறேன்.

==========

இந்தியா முதல் எல்லா இடங்களிலும் அரைப் பட்டினி கூட்டத்தின் சதவீதம் அதிகரித்துள்ளது.

===========

இந்தியாவில் ஏழ்மை குறைந்துள்ளதுதான். பல வருடங்கள் முன்பிருந்த பட்டினிச்சாவுகள் இன்றில்லை. இன்று சராசரி இந்தியன் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது.

இந்த வாழ்க்கைத்தர உயர்வு எல்லா தேசங்களிலும் காணக்கிடைக்கிறது. இந்த தர உயர்வு அந்த தேசத்தின் முதலாளித்துவ கொள்கைக்கு ஏற்ப மாறுபடுகிறது. அவ்வளவே!

இதுவே உலகலாவிய நிலை.


========
இந்தியாவை விட மிக மிக பிந்தங்கி போயிருந்த சீனா 20 வருடங்களில் இந்தியாவை விட பல மடங்கு முன்னேறி ஒவ்வொரு தலைக்குமான தானிய அளவை பல மடங்கு உயர்த்திய சாதனையை எங்கு கொண்டு வைப்பது?
==========

தங்கள் பதில் சுவாரசியமாய் இருக்கிறது. ஆரம்பத்தில் சீனாவின் சமீபத்திய "இழி" நிலையை ஏற்பதாக சொல்லும் நீங்கள், கடைசியில் சீனாவில் ஏற்பட்ட சமீபத்திய பொருளாதார ஏற்றத்தையும் சொல்லுகிறீர்கள். ஆனால், அது இரண்டுக்கும் உள்ள தொடர்பை நீங்கள் உணரவில்லையா? இந்த "இழிநிலை"தான் முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும். இதை சீனா அரவணைத்து தன் இடதுசாரி, புரட்சிகர கருத்தாக்கங்களை களைந்த போதுதான் அதன் மேற்சொன்ன முன்னேற்றம் ஏற்பட்டது.

இடதுசாரி, புரட்சிகர கூட்டணிகளை தவிர்த்தே எல்லா பொருளாதார ஏற்றமும் சமுதாயத்திற்கு கிடைத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இதற்கு ஒரு விதிவிலக்கும் நான் அறியேன். நீங்கள் இதை மறுக்க முடியுமா?

said...

சீனா இந்தியாவை விட பின் தங்கி போய் இன்று இருக்குன் நிலைக்கு இடையில் 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. நான் இங்கு 20 ஆண்டுகளில் என்று குறிப்பிடும் போதே தெரியவில்லையா நான் குறிப்பிடுவது சோசலிச சீனவை என்று? இன்றைய சீனா சோசலிச சீனா இல்லை என்றும் ஏறகனவே முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்ததை கவனிக்கவில்லையா?

இன்றைய சீனாவின் சீரழிவு குறித்து SEZ குறித்தான எனது கட்டுரை ஒன்றில் படிக்கலாம். சீனா முன்னேறவில்லை சீரழிந்துள்ளது என்று சீன போலி கம்யுனிஸ்டு கட்சியின் அறிக்கையே கூறுகிறது. எனது கருத்துக்களை முழுமையாக உள்வாங்காமல் படிப்பதாலேயே இது போல தவற் விடுகிறீர்கள்.

மத அடிப்படையில் கூட்டுச் சேர்வதை நான் ஒத்துக் கொள்வதில்லை என்றே குறிப்பிடுகிறேன். இதே நிலைப்பாடுள்ள கட்சிகள் உள்ளன.

ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் சேர்வது தவறில்லை என்பதே எனது கருத்து(இதனை நான் மறுதலிக்கு அம்சம் இதுதான் - நடைமுறையில் இது வேறு விளைவுகளை ஏற்ப்படுத்துவதாலேயே இதனை நான் ஏற்றுக் கொள்வதில்லை) இதனை இந்து மதத்தின் சில ஒடுக்கப்பட்ட மத பிரிவினருடனும் கூட கம்யுனிஸ்டு அமைப்புகள் கூட்டுச் சேர்வதை குறிப்பிட்டு கூறியிருந்தேன் வசதியாக அந்த பகுதியை நீங்கள் விலக்கி விட்டீர்கள்.

மேலும் மத வாத அமைப்புகளுக்கும் மத அடிபப்டையில் அணி திரண்டு அமைப்புகளுக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் கூறியிருந்தேன் அதனையும் வசதியாக ஒதுக்கி விட்டீர்கள். இந்த இடத்தில் ஏற்கனவே நிலைபெற்ற கலாச்சார அடையாளத்தின் கீழ்தான் மக்கள் தங்களது பொருளாதார கோரிக்கைக்கு அணி திரள்வார்கள் என்று நான் கூறியிருந்த முந்தைய கருத்தையும் சேர்த்து பர்க்க வேண்டும்(மாப்ளா கலகம், சிப்பாய் புரட்சிகள்).

இங்கு(மத அடிப்படை அமைப்புகளில்) மதம் ஒரு ஒற்றுமைக்கான அடையாளாமாக மட்டுமெ இருக்கும் அதுவே இறுதி லட்சியமாக கொண்ட மதவாத அமைப்புகளை(லஷ்கர் இ தொய்பா, RSS, தாலிபான், சங் பரிவாரங்கள்) அல்ல இங்கு நான் குறிப்பிடுவது.


இந்தியாவில் ஏழ்மை குறைந்துள்ளது என்ற அம்சத்தில் ஏற்கனவே நான் மேற்சொன்ன கட்டுரையில் விரிவாக விவாதம் நடந்து ஏகாதிபத்திய முன்னணி ஓடி ஒளிந்து கொண்டது (ஏன் ஒப்பாரி வைக்கிறீர்கள் அமெரிக்க அடிவருடிகளே? என்ற கட்டுரை).

மற்றபடி ஆதரப்பூர்வமாக ஏகாதிபத்தியத்தின் பொருளாதாரம் தாழ்ந்து போயுள்ளதை குறிப்பிட்டு இங்கு கட்டுரைகள் உள்ளன (ஒவ்வொரு அம்சத்தில் பதில் சொல்லியுள்ளோம் - வறுமை கோடு, SEZ, சில்லறை வணிகம், விவசாயம் etc). அதே நேரத்தில் ஆதாரப்பூர்வமாக சோசலிசத்தில் பொருளாதாரம் அத்தனை விதமான தடைகளையும் களைந்து தழைத்தோங்கியதையும் இதே தளத்தில் கட்டுரைகளாக எழுதியுள்ளேன்.

அசுரன்

said...

விளக்கங்களுக்கு நன்றி.

தாங்கள் குறிப்பிட்ட பகுதிகளை படித்து பின் என் கருத்துக்களையும், சந்தேகங்களையும் முன்வைக்கிறேன்.

மாலையாகிவிட்டது. அலுவலகத்திலிருந்து கிளம்பும் நேரம். விடை பெறுகிறேன். எனக்கு மதிப்பளித்து பதில் அளித்ததற்கு நன்றி.

said...

இது வரையான விவாதங்களுக்கு மிக்க நன்றி

நாளை விவாதத்தை தொடவீர்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் கேட்டிருந்த பல விசயங்கள் மிக விரிவாக பேச வேண்டியவையாகவும், ஏற்கனவே விவாதித்தவையாகவும் இருந்த காரணத்தாலேயே என்னால் விரிவான உங்களை திருப்தியுறச் செய்யும் வகையில் பதிலிட இயலவில்லை.

ஆயினும் இதே பதிவில் சாத்தியமான அளவு உங்களது கருத்துக்களில் நான் தவறாக கருதுவனவற்றை விளக்கி பின்னூட்டமிடுகிறேன்.

இனிய மாலை வணக்கங்கள் :-))

அசுரன்

said...

வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி அரசுபால்ராஜ்

Related Posts with Thumbnails