TerrorisminFocus

Tuesday, June 17, 2008

கருணாநிதியின் காரியவாதம் இராமதாசின் கவாச்சிவாதம்!

திமுக பாமக கூட்டணி முறிந்துவிட்டது. ஏதோ பாமக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தது போலவும் அது பொறுக்காமல் திமுக அவர்களுடனான கூட்டை முறியடித்துக் கொண்டதாகவும் பொதுக் கருத்து உருவாக்கப்படுகிறது. கருணாநிதியோ ராமதாஸ்தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறார் என்றும் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் உண்மை என்னவோ வேறாக உள்ளது. பதவி சுகத்தை நக்கிப் பிழைக்க ராமதாஸ் செய்யும் பிழைப்புவாத பித்தலாட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் மக்கள் பிரச்சினைகள் என்ற பெயரில் கருணாநிதியை எதிர்க்கிறார். தமிழ்நாட்டை கூட்டி கொடுத்து தனது உறவினர்களும், இன்ன பிறரும் வளப்பமாக அலைவதற்க்காகவே தரகு வேலை பார்க்கும் கருணாநிதி பாமகவை தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவராக சித்தரிக்கிறார். இவர்களிடையேயான இந்த நாற்காலிச் சண்டையைத்தான் ஏதோ மிகப் பெரிய கொள்கை முரன்பாடாகவும், மக்கள் நலன் சார்ந்த விசயமாகவும் காட்டி நம்மை நம்ப சொல்கிறார்கள் ஊடகங்கள். இந்த அம்சத்தில் இவர்களது பிழைப்புவாதத்தை குறித்து வந்துள்ள பின்வரும் புதிய ஜனநாயக கட்டுரை இங்கு மறு பிரசூரம் செய்யப்படுகிறது.

___________________________________________________


கோடை வெய்யில் தமிழக மக்களை வறுத்தெடுத்துக் கொண்டிருக்க, அதையும் விஞ்சும் வகையில் அனலைக் கக்கி தி.மு.க. அரசுக்கு எதிராக அறிக்கைப் போர் நடத்தி வருகிறார், பா.ம.க. நிறுவனர் இராமதாசு.

விமான நிலைய விரிவாக்கம், துணை நகரங்கள் அமைப்பது, முல்லைப் பெரியாறு காவிரி பாலாறு விவகாரங்கள், தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் கொள்ளை, சில்லறை வணிகத்தில் ஏகபோக நிறுவனங்களின் நுழைவு முதலானவற்றுக்கு எதிராக அவ்வப்போது அறிக்கை விடுத்து, முதல்வர் கருணாநிதியுடன் லாவணி நடத்திக் கொண்டிருந்த அவர், இப்போது சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகவும் தமிழக அரசின் தொழிற்கொள்கைக்கு எதிராகவும் சீறுகிறார். கடந்த மே மாதத் தொடக்கத்திலிருந்து அடுத்தடுத்து அறிக்கைகள் விடுத்து, அடுத்த கட்டப் போரைத் தொடங்கி விட்டார்.

""புதிய இரு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்; அது குறித்து சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்; வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள் தொடங்குவதாகக் கூறிக் கொண்டு, ரியல் எஸ்டேட் தொழில் நடக்கிறது; புதிய தொழிற்சாலைகள் தொடங்கும் போது பின்தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; வெளிநாட்டினர் அல்லாமல் தமிழர்கள் தொழில் தொடங்க அரசு ஊக்குவிக்க வேண்டும்'' என்று கடந்த மே முதல் நாளில் காட்டமாக அறிக்கை வெளியிட்டார், இராமதாசு.

இதற்கு விளக்கமளித்து கேள்வி பதில் வடிவில் முதல்வர் கருணாநிதி ஒரு மறுப்பு அறிக்கை வெளியிட்டார். அதில், தவறான தகவல்களின் அடிப்படையில் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளதை அம்பலப்படுத்தியதோடு, கடந்த ஈராண்டுகளில் 13 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, அதில் 6 நிறுவனங்கள் பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 1 லட்சத்து 26 ஆயிரத்து 610 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாகவும் புள்ளி விவரங்களை அடுக்கி, எதையும் சந்தேகக் கண்ணோடு பார்க்காதீர்கள் என்று இராமதாசுக்குப் பதிலளித்தார். இராமதாசு இப்படியெல்லாம் கேள்வி எழுப்பிக் கொண்டிருப்பது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியின் விசை ஒடிந்திடும் நிலைக்கு உள்ளாக்கும் என்றும் இடித்துரைத்தார். தூத்துக்குடி டைட்டானியம் ஆலை முதல் ஓசூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் வரை பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததே இராமதாசுதான் என்று சாடினார்.

உடனே இராமதாசு, ""நானா தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறேன்?'' என்று எதிர்கேள்விக் கேட்டு அறிக்கை வெளியிட்டார். ""வெள்ளை அறிக்கை கேட்டால் மவுனம் சாதிக்கிறார்கள். எத்தனை பேருக்கு, என்ன மாதிரியான வேலை கிடைத்துள்ளது என்று கேட்டால் பதில் இல்லை. வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு வேலையின்றி தவிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. கணினி தொழில்நுட்பத் துறை மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்பைப் பெருக்கும்படி தொழிற்கொள்கை அமைய வேண்டும். வெளிநாட்டு உதவியுடன் வரும் முதலாளிகளுக்கு இங்குள்ள நிலங்களைத் தாரை வார்க்கக் கூடாது'' என்றெல்லாம் அதில் பொருமித் தீர்த்தார்.

அதைத் தொடர்ந்து கருணாநிதி, ""சிலர் கூட இருந்தே குழி பறிக்கிறார்கள்'' என்று இராமதாசின் பெயரைக் குறிப்பிடாமல் சாடினார். இரு தரப்புக்குமிடையிலான அறிக்கை போரும் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பற்றிய லாவணியும் இரு வாரங்களுக்கு நீடித்தது. பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்குமிடையிலான உரசலின் புதிய அத்தியாயம் என்று செய்தி ஊடகங்கள் இந்த விவகாரத்தை ஊதிப் பெருக்கி பரபரப்பூட்டின.

தி.மு.க. ஆட்சியின் ஈராண்டு கால ஆட்சியைப் பற்றிய மதிப்பீட்டைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ""தி.மு.க. ஆட்சிக்கு நான் மார்க் போட விரும்பவில்லை; மக்களே மார்க் போடுவார்கள். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை; சாராய வளர்ச்சிதான் ஏற்பட்டிருக்கிறது'' என்று இராமதாசு பொருமினார்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பற்றி தி.மு.க. அரசு மீது அதிரடி விமர்சனங்களுடன் இராமதாசு அறிக்கை விடுவது இப்போது முதன்முறையல்ல; ஏற்கெனவே கடந்த டிசம்பர் இறுதியில் இந்தியா டுடே வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், ""நான் தமிழகத்தின் தொழில் வளத்திற்கு எதிரி இல்லை. சிறு தொழில்களை ஊக்குவியுங்கள் என்றுதான் சொல்கிறேன். சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் ஏக்கர் கணக்கில் நிலத்தை எடுத்துக் கொண்டு ஒரு சில பேருக்கு மட்டும் வேலை தருவதைத்தான் எதிர்க்கிறேன். தனியார்மயம் என்ற பெயரில் விவசாயத்தை அழிப்பதை எதிர்க்கிறேன். ரயில்வே போல விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடச் சொல்கிறேன். சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் தமிழ்நாட்டிற்கு எந்தப் பயனுமில்லை. வேலை வாய்ப்பு பெருகும் என்று கருணாநிதி சொல்வதெல்லாம் ஏமாற்று வேலை'' என்று அவர் தி.மு.க. அரசைச் சாடியுள்ளார்.

தி.மு.க. அரசு மீது அதிரடித் தாக்குதலுடன் இராமதாசு அறிக்கை விடுவதைப் பார்க்கும் எவருக்கும் அவர் ஏதோ தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மீது அக்கறை கொண்டுள்ளதைப் போலத் தோன்றும். மக்களின் அதிருப்தியை எதிரொலிப்பதாகத் தோன்றும். ஏனென்றால் அதில் சில உண்மைகளும் இருக்கின்றன.

மறுபுறம் கருணாநிதி, புள்ளி விவர ஆதாரங்களுடன் மறுப்பு அறிக்கை வெளியிட்டு, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறுவதை ஏமாற்று வேலை என்று ஒரேயடியாக மறுத்துவிட முடியாது. ஏனென்றால் அதிலும் சில உண்மைகள் இருக்கின்றன.

தொழில் வளர்ச்சி என்று இருதரப்பும் அறிக்கைப் போர் நடத்துகிறார்களே, அது யாருக்கான தொழில் வளர்ச்சி என்பதுதான் மையமான கேள்வி.

கருணாநிதியோ, தனியார்மய தாராளமய கொள்கையின் வழியிலான தொழில் வளர்ச்சியை, அதாவது பன்னாட்டுஉள்நாட்டு ஏகபோக முதலாளிகளின் சூறையாடலுக்கான தொழில் வளர்ச்சியை, வேலைவாய்ப்பற்ற தொழில் வளர்ச்சியைச் சாதித்து, மக்களின் அதிருப்தியை இலவசத் திட்டங்கள் மூலம் வடியச் செய்யும் காரியவாத நோக்கில் செயல்படுகிறார்.

கருணாநிதி அரசின் தொழில் கொள்கையைக் கடுமையாகச் சாடி அறிக்கைப் போர் நடத்தும் இராமதாசிடம் இருப்பதும் இதே தனியார்மயதாராளமயக் கொள்கைதான். இராமதாசு உள்ளிட்டு அனைத்து ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளும் விசுவாசமாக ஆதரித்துப் பின்பற்றுவதும் இதே கொள்கைதான். இருப்பினும் ""ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி'' என்று தனது பா.ம.க.வை வர்ணிக்கும் இராமதாசு, கல்வி முதல் பட்ஜெட் வரை பல துறை நிபுணர்களையும் கலந்தாலோசித்து அரசுக்கு மாற்று திட்டங்களையும் ஆலோசனைகளையும் முன்வைப்பதாகப் பீற்றிக் கொள்கிறா.

தனியார்மயம் தாராளமயம் என்பது அனைத்து ஓட்டுக் கட்சி ஆதரவுடன் செயல்படுத்தப்படும் கொள்கை. எந்த ஓட்டுக் கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் விசுவாசமாகப் பின்பற்றப்படும் கொள்கை. இத்தனியார்மயம் தாராளமயம்தான் விவசாயத்தை நாசமாக்கி, விவசாயிகளைத் தற்கொலைச் சாவுக்குத் தள்ளுகிறது. உள்நாட்டுச் சிறுதொழில்களை ஒழித்துக் கோடிக்கணக்கானோரை வேலையற்றவர்களாக்குகிறது. சில்லறை வணிகத்தில் உள்நாட்டு பன்னாட்டு நிறுவனங்களை நுழைத்து கோடிக்கணக்கான சிறு வியாபாரிகளின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறது. காசுள்ளவனுக்கே கல்வி என்று புதிய மனு நீதியைத் திணிக்கிறது. பணவீக்கம் விலையேற்றம் கட்டண உயர்வை உழைக்கும் மக்களின் தலையில் சுமத்துகிறது.

இராமதாசு சவடால் அடித்து அறிக்கை விட்டுள்ள வேலையின்மையை ஒழிக்க வேண்டுமானால், முதலில் தனியார்மயம் தாராளமயத்தை ஒழித்துக் கட்டவேண்டும்; உள்நாட்டுத் தொழில் வளர்ச்சியைப் பெருக்க வேண்டுமானால், அதற்கு மிகப் பெரிய எதிரியாக உள்ள தனியார்மயம், தாராளமயத்தை வீழ்த்த வேண்டும். அன்னிய இறக்குமதியையும் ஏகாதிபத்திய சார்பையும் ஒழித்து, சுயசார்புடன் உள்நாட்டுத் தொழிலையும் விவசாயத்தையும் வளர்க்க வேண்டும். அதற்கான திட்டமோ கொள்கையோ, போராட்டமோ, வெங்காயமோ இராமதாசிடம் கிடையாது.

பா.ஜ.க. கூட்டணி ஆட்சியானாலும் சரி, காங்கிரசு கூட்டணி ஆட்சியானாலும் சரி, அவை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும் தனியார்மயம் தாராளமயக் கொள்கைகளின் விளைவுதான், இராமதாசு தனது காகித அறிக்கைகளில் குறிப்பிடும் நிலைமைகள். தமிழகத்தின் கணக்கற்ற சிறு தொழில்களின் நசிவுக்கும் வேலையின்மைக்கும் விவசாயத்தின் அழிவுக்கும் முதன்மைக் காரணம், தனியார்மய தாராளமயக் கொள்கைகள்தான். விளைநிலங்களை அபகரித்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவது, சிறு தொழில்களை ஒழித்து உள்நாட்டு பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் பகற் கொள்ளைக்குப் பட்டுக் கம்பளம் விரிப்பது உள்ளிட்ட அனைத்து கொள்கை முடிவுகளையும் மைய அரசுதான் எடுக்கிறது. அமைச்சரவை முடிவுகளில் இராமதாசின் மகன் அன்புமணி அங்கே கையெழுத்திட்டு செயல்படுத்துகிறார். தந்தையோ இங்கே தாவிக் குதிக்கிறார்.

""சாராய வளர்ச்சிதான் ஏற்பட்டுள்ளது; இளைஞர்கள் சீரழிகிறார்கள்'' என்று கூப்பாடு போடும் இராமதாசிடம், ""வேறு எப்படித்தான் அரசுக்கு வருவாயை திரட்டுவது? அதற்கான மாற்றுத் திட்டம்தான் என்ன? புதுச்சேரி மாநிலத்தில் அவரது திட்டத்தைச் செயல்படுத்துவாரா?'' என்றெல்லாம் முன்பு கருணாநிதி கேட்டார். சாராயம் இல்லாமல் அரசுக்கு வருவாய் திரட்டுவதற்கான மாற்றுத் திட்டம் எதையும் இன்றுவரை இராமதாசு முன்வைக்கவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி தீர்வு காண வேண்டும் என்று பொத்தாம் பொதுவாகக் கூறி நழுவிக் கொள்கிறார்.

இப்படித்தான் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றியும் மாற்றுத் திட்டம் எதுவுமின்றி இராமதாசு சவடால் அடித்து வருகிறார். ""சிறப்புப் பொருளாதார மண்டலங்களை சென்னையிலும் சென்னைக்கு வெளியிலும் அமைக்கக் கூடாது என்றால் என்னதான் செய்ய முடியும்? வெளிநாட்டினர் அல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோரை மட்டும்தான் ஆதரிக்க வேண்டும் என்றால், அத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யக் கூடிய தொழில் அதிபர்கள் தமிழகத்தில் இல்லையே!'' என்று கருணாநிதி தனது மறுப்பு அறிக்கையில் கேட்ட பின்னரும், இராமதாசு மாற்றுத் திட்டம் எதையும் முன் வைக்கவில்லை.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவும்போது, அங்கு வேலைபார்க்கும் தொழில்நுட்பவாதிகள் அதிகாரிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டுமென்பதற்காக, வீடுகள், பள்ளிகள், மருத்துவமனை, கேளிக்கை விடுதிகள் முதலானவற்றையும் அமைக்க வேண்டும் என்பதை மைய அரசு தனது கொள்கை விதியாக வகுத்துள்ளது. இதன்படியே, சிங்கூரில் ""நானோ'' கார் தயாரிக்க டாடா நிறுவனத்துக்கு மே.வங்க போலி கம்யூனிச அரசு, ஆலைக்காகவும் வீடுகளுக்காகவும் விளைநிலங்களை ஒதுக்கியுள்ளது. இதேபோலத்தான் சென்னையில் அமையவுள்ள இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் நிலம் ஒதுக்கப்பட்டு, உலகின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எஃப், குடியிருப்புக்கான வீடுகள், விடுதிகள் கட்டுவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறது. இதைத்தான் ""தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் வியாபாரம் நடக்கிறது'' என்று சாடுகிறார் இராமதாசு. கருணாநிதியோ, ""சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கென வகுக்கப்பட்டுள்ள விதிப்படித்தான் இப்படிச் செய்யப்பட்டுள்ளது. வேறு என்னதான் செய்ய முடியும்?'' என்கிறார்.

இப்படி சென்னையில் அமையவுள்ள இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் ஒதுக்கியதை எதிர்க்கும் இராமதாசு, அதே சென்னை எண்ணூரில் கப்பல் கட்டும் தளமும் துறைமுகமும் அமைக்க எல் எண்டு டி நிறுவனத்துக்கு 1500 ஏக்கர் நிலம் ஒதுக்கியிருப்பதை எதிர்க்கவில்லை. புதிய தொழிற்சாலைகள் நிறுவும்போது தமிழ் முதலாளிகளுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்று உபதேசிக்கும் இரா மதாசு, இங்கே எல் அண்டு டி நிறுவனத்தை ஆதரிக்கிறார். நவீன தானியங்கி எந்திரங்களைக் கொண்டு அமையவுள்ள இத்துறைமுகத்தில் எவ்வளவு பேருக்கு வேலை கிடைக்கும் என்பது இராமதாசுக்கே வெளிச்சம். ஒருபுறம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிர்ப்பு காட்டும் கவர்ச்சிவாத சவடால்! மறுபுறம், அச்சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் ஏகபோக தொழில் நிறுவனங்களையும் ஆதரிக்கும் பச்சோந்தித்தனம்! — இதுதான் இராமதாசின் அரசியல் யோக்கியதை.

தி.மு.க. அரசின் தொழிற்கொள்கையை எதிர்த்து மட்டுமா இராமதாசு அறிக்கைப் போர் நடத்துகிறார். சாராயம், ரியல் எஸ்டேட் கொள்ளை, மணல் குவாரி கொள்ளை, தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் கொள்ளை முதலானவற்றுக்கு எதிராகவும் அறிக்கை விடுத்து சாடுகிறார். இவையெல்லாம், கருணாநிதியின் ஆட்சி மட்டுமின்றி, எல்லா மாநிலங்களிலும் எல்லா ஓட்டுப் பொறுக்கி ஆட்சிகளிலும் தான் நடக்கிறது. இந்நிலையில் சாராயமே இல்லாத, கிரிமினல் குற்றக் கும்பலின் ஆதிக்கமும் கொள்ளையும் இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற வேண்டுமானால், இன்றைய சமூக அரசியல் பொருளாதார அமைப்பு முறையையே தூக்கியெறிந்து விட்டு, உழைக்கும் மக்களின் கரங்களில் அதிகாரத்தைக் குவிக்கும் புரட்சியை சாதிக்க வேண்டும். அத்தகைய புரட்சிக்கான திட்டமோ, நடைமுறையோ எதுவுமின்றி பொதுவில் சமூகச் சீரழிவுகளைப் பற்றி சவடால் அடித்து அறிக்கை விடுகிறார் இராமதாசு.

தி.மு.க. ஆட்சி மட்டுமல்ல; எந்தவொரு ஓட்டுக் கட்சி ஆட்சியிலும் இத்தகைய சீரழிவுகளும் மோசடிகளும் ஊழலும் கொள்ளையும் ஒழிந்துவிடப் போவதில்லை. எனவே, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சாராயச் சீரழிவு பெருகி விட்டது, ஊழலும் கொள்ளையும் தீவிரமாகிவிட்டதென்று எவரும் சாடிப் புலம்பலாம். ஆனால் ஒரு அரசியல் கட்சித் தலைவர் அதிலும் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சித் தலைவராகத் தன்னைச் சித்தரித்துக் கொள்ளும் இராமதாசு, இப்படி சாடிப் புலம்புவதுதான் அவர் முன்வைக்கும் மாற்றுத் திட்டமா?

இன்றைய சமூக அரசியல் பொருளாதார அமைப்பு முறையே கெட்டழுகி சாக்கடையாக நாறிக் கொண்டிருக்கிறது. இன்றைய அரசியலமைப்பு முறையை ஆதரித்து, அதில் நாற்காலி சுகம் கண்டுகொண்டே, ""ஐயோ, சாக்கடை நாறுகிறதே!'' என்று கூப்பாடு போட்டு அறிக்கை விடுகிறார் இராமதாசு. சாக்கடை நாற்றத்தால் அவதிப்படும் மக்களின் கவனத்தை ஈர்த்து, ஏதோ சாக்கடையை ஒழிக்கப் புறப்பட்டு விட்டவரைப் போல கவர்ச்சி காட்டுகிறார்.

கருணாநிதியோ, சாக்கடை என்றால் நாறத்தான் செய்யும்; வேறென்னதான் செய்வது என்று கூறிக் கொண்டே, நாளொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அந்நியப்பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களைத் தொழில் தொடங்க வரவேற்று கொண்டிருக்கிறார். மறுபுறம், உலக வங்கி மூலம் ஏகாதிபத்தியங்கள் புகுத்தும் திருத்தப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கைப்படி இலவசகவர்ச்சித் திட்டங்களை வாரியிறைத்து, காரியவாதத்துடன் "தொழில் வளர்ச்சி'யைச் சாதிக்கத் துடிக்கிறார். இதை அம்பலப்படுத்தி, மத்தியமாநில அரசுகள் தீவிரமாக்கிவரும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை வீழ்த்த முன்வராத இராமதாசு, கவர்ச்சிவாத சொல்லடுக்குகளால் இக்கொள்கைகளை எதிர்ப்பதைப் போல காட்டிக் கொள்கிறார்.

போலி கம்யூனிச சி.பி.எம். கட்சி, மைய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்ப்பதாக நாடகமாடிக் கொண்டு, தாங்கள் ஆளும் மே.வங்கத்தில் கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி மறுகாலனியாக்கக் கொள்கையை விசுவாசமாக நடைமுறைப்படுத்துகிறது.

அதேபோல, இங்கே தமிழகத்தில் இராமதாசு மறுகாலனியாக்கக் கொள்கையின் விளைவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு எதிராகச் சவடால் அடித்துக் கொண்டிருக்க, அவரது மகன் அன்புமணி மத்திய அமைச்சராக அங்கே உட்கார்ந்து கொண்டு பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கும் கோக்பெப்சிக்குப் பல்லக்கு தூக்கியது போதாதென்று, மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு எல்லா வகையிலும் துணை போகிறார். பா.ம.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான புதுச்சேரி இராமதாசு, 2005ஆம் ஆண்டில் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின்போது, சீனாவின் வழியில் இந்தியாவில் இத்தகைய மண்டலங்களை நிறுவக் கோரினார். இப்படி, அங்கே ஆதரவு; இங்கே எதிர்ப்பு என்று இரட்டை நாடகமாடுவதே இராமதாசு உள்ளிட்ட அனைத்துப் பிழைப்புவாத ஓட்டுப் பொறுக்கிகளின் நடைமுறையாகி விட்டது.

போதாக்குறைக்கு, விவசாயத்துக்கென தனியாகச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவ வேண்டும் என்று, உலக வங்கியின் திட்டத்தையே தனது மூளையில் உதித்த திட்டம் போல இராமதாசு அறிக்கை விடுகிறார். பார்ப்பன பாசிச ஜெயாவையே விஞ்சும் வகையில், யாரோ எழுதிக் கொடுக்கும் அறிக்கைகளை தனது பெயரில் நாளேடுகளில் வெளியிடச் செய்து ""கவர்'' பண்ணுகிறார். எப்படியாவது தி.மு.க. கூட்டணியை உடைத்துவிடத் துடிக்கும் பார்ப்பன பத்திரிகைகள், அவரது காகித அறிக்கைகளைப் பரபரப்பாக வெளியிட்டு ஊதிப் பெருக்கி வருகின்றன.

மறுகாலனியாக்கத்தால் வாழ்விழந்து நிற்கும் உழைக்கும் மக்களின் எதிர்ப்பையும் அதிருப்தியையும் அறுவடை செய்து ஓட்டுப் பொறுக்க வேண்டும்; மக்களுக்காகக் குரல் கொடுத் துப் போராடுபவரைப் போல காட்டிக் கொள்ள, அடிக்கடி சவடால் அடித்து அறிக்கை வெளியிட்டு அடையாள எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி கவனத்தை ஈர்க்க வேண்டும்; தமிழகத்தை ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இழுத்துச் செல்லும் ஆக்கப்பூர்வ எதிர்கட்சியாக நாடகமாட வேண்டும்; இவற்றின் மூலம் அடுத்த தேர்தல் கூட்டணியிலும் ஆட்சியிலும் அதிக பங்கு கோர வேண்டும் என்பதற்கு மேல் பிழைப்புவாத இராமதாசிடம் வேறு கொள்கையோ, திட்டமோ கிடையாது. அவரது பச்சோந்தி அரசியலைக் கவனித்து வரும் தமிழக மக்கள், இனி அவரை நம்பி ஏமாறவும் முடியாது.

-பாலன்-
புதிய ஜனநாயகம் - 2008
நன்றி: தமிழ்சர்க்கிள்

3 பின்னூட்டங்கள்:

said...

அப்படி என்னதான் பேசினார் காடுவெட்டி குரு?
புதன்கிழமை, ஜூன் 18, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற


சென்னை: ஒரு பலமான அரசியல் கூட்டணியையே முறித்துப் போடுமளவுக்கு கடந்த ஜனவரியில் அப்படி என்னதான் பேசினார் பாமக முக்கிய புள்ளியும் வன்னியர் சங்கத் தலைவருமான குரு?

இதோ அவரது பேச்சு விவரம்:

2008ம் ஆண்டு பாமகவுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக மலரப் போகிறது. ஆண்டிமடம் எம்எல்ஏ (திமுக) சிவசங்கருடைய அப்பாவாலேயே ஒன்றும் புடுங்க முடியவில்லை. இவன் நேத்து வந்த பையன். அமைச்சர் ராஜாவோட (மத்திய திமுக அமைச்சர்) எடுபிடி. அந்த ராஜாவோ கருணாநிதிக்கு எடுபிடி.

இந்த ராஜாவுக்கு ஒரு எடுபிடி இருக்கான். அவன்தான் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்.

எங்க மாவட்டச் செயலாளர் வைத்தி மீது இந்த கலெக்டர்தான் வழக்கு போடச் சொல்லியிருக்கான். அவன் போடச் சொன்னானா... அல்லது அவனுக்கு தலைவனான அந்த கருணாநிதி போடச் சொன்னானா தெரியாது. நீ என்ன வழக்கு வேண்ணா போடு, ஒண்ணும் புடுங்க முடியாது. என் .... கூட புடுங்க முடியாது.

எங்க கட்சி பொறுப்பாளர்கள் யார் மேல கேஸ் போட்டாலும், இந்த ராஜா, சிவசங்கர் அவனுங்களுக்குத் தலைவன் எவனும் உயிரோட இருக்க முடியாது.

குடும்பத்தையே உயிரோட எரிச்சுடுவோம். இந்த பெரம்பலூர் கலெக்டர் மாமா வேல பாக்குறான். அந்த மாமா சொன்னான்னு இந்த போலீஸ் மாமாக்கள் ஆட்டம் காட்றானுங்க...

ஒரு போலீஸ்காரன்கூட அவனுங்க... (போலீசாரின் குடும்பத்தினரை சுட்டிக் காட்டி மட்டமாக பேசுகிறார்)...ஜாக்கிரத...

நாங்க மாநாட்டுக்கு வசூல் பண்றதா சொல்றானுங்க திமுககாரனுங்க. ஏன் வசூல் பண்றது இவனுங்களுக்கு மட்டுமே உள்ள ஏகபோக உரிமையா... ஆமாண்டா... நாங்க வசூல் பண்ணோம். என்ன பண்ணிடுவ... மிரட்டி தாண்டா வசூல் பண்ணோம். உன்னால என்ன புடுங்க முடியும்?

டேய் சின்னப் பையன் சிவசங்கரா... உங்க அப்பன்கிட்டப் போய் என்னப் பத்தி கேட்டுப் பாருடா... வைத்தியை மட்டும் கைது பண்ணியிருந்தா மவனே ஆண்டிமடம் தொகுதில இந்நேரம் இடைத்தேர்தல் தாண்டி...

வைத்தியை உள்ளே அனுப்பிட்டு நாங்க வாயில விரல வச்சிக்கிட்டிருப்பமா... இனிமே திமுக்காரன் எவனாவது பாமகவை எந்த பொதுக் கூட்டத்தில் தாக்கிப் பேசினாலும் அங்கேயே வெட்டுங்கடா... இந்த ராஜாவோ அந்த கருணாநிதியோ ஒரு ம...ம் புடுங்க முடியாது. கருணாநிதியால இனி நிம்மதியா ஆட்சி செய்ய முடியாது. அதுக்கு நாங்க விடவும் மாட்டோம்.

இந்த ஆற்காடு வீராசாமி ஆந்திராவிலருந்து வந்த செ...டு (மிருகத்தை சொல்லி திட்டுகிறார்).. இவனே ஒரு பொறம்போக்கு. இவன் வந்து நம்ம வன்னியர் சங்க கல்விக் கோயில பொறம்போக்குல கட்டியிருக்கிறதா சொல்றான்.

மவனே... தைரியம் இருந்தா ஒரு கமிஷன் போட்டு நிலத்தை சர்வே செய்து பாரு. ஊராட்சித் தேர்தலில் திமுக்காரனுங்க காட்டிக் கொடுத்ததும் கூட்டிக் கொடுத்ததும் ஊருக்கே தெரியும்டா... மானங்கெட்ட பயலுங்களா.

27 சதவிகித இட ஒதுக்கீட்டுக்காகப் போராடுற ஒரே தலைவன் யாரு... இந்தியாவிலயே நம்ம டாக்டரய்யாதான். நீ திராவிடம் பேசி நாட்டை ஏமாத்திக்கிட்டிருக்கே. ரெண்டு கோடி மக்கள் உள்ள நம்ம சமுதாயத்துக்கு 3 அமைச்சராம். ரெண்டு சதவிகிதம் கூட இல்லாத ஆற்காடு வீராசாமி குரூப்புக்கு 2 அமைச்சராம். என்னங்கடா விளையாடறீங்களா...

2011ல் பாமகதான் தமிழ்நாட்டுல ஆட்சி அமைக்கும். இதைக் கருணாநிதியோ ஜெயலலிதாவோ தடுக்க முடியாது.

கருணாநிதியே, எங்களுக்கு முகவரி இருக்கு. உனக்கிருக்கிறதா... திமுக கூட்டணியில் பாமதான் இருக்கு. வன்னியர் சங்கம் இல்ல. சும்மா எங்களை மிரட்டிப் பார்க்காதே. தாங்க மாட்டே... நீ எத்தனை வழக்குப் போட்டாலும் சந்தோஷமா ஜெயிலுக்குப் போவோம், ஆனா வெளிய உள்ள எங்க ஆளுங்க என்ன செய்யணுமோ அதைச் செய்துடுவாங்க. அப்புறம் வருத்தப்பட்டு பிரயோஜனமில்ல.

எங்க டாக்டரய்யா டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்றார். காரணம், அதனால நஷ்டம் எங்க பாட்டாளி மக்களுக்குத்தான். டாஸ்மாக் மூலம் 9000 கோடி ரூபாய் வருதுன்னு சொல்றே. இது அத்தனையும் எங்க பாட்டாளி மக்கள் பணம். எந்த... (பிராமண சமூகத்தினரை சுட்டிக் காட்டி) டாஸ்மாக்குக்கு வந்து குடிக்கிறான்... பொண்டாட்டி பிள்ளைகளை பட்டினி போட்டுட்டு எங்க விவசாய மக்கள்தானே குடிச்சி அழியறாங்க... அவங்க தாலிய அறுத்துதானே நீ இவ்ளோ கல்லா கட்ற!

இந்த அமைச்சர் ராஜாவுக்கு பூர்வீக சொத்து எவ்வளவு? இன்னிக்கு எத்தனை நூறு கோடி சேர்த்திருக்கான். இதுக்கு காரணம் திமுகாரன் ஓட்டா... எங்க ஓட்டுடா... நாங்க போட்ட ஒன்னரை லட்சம் ஓட்டுலதான் நீ இன்னிக்கு ஜம்பமா சம்பாதிக்கிற... நீதான் எங்காளுங்க மேல கேஸ் போடச் சொன்னியா... மவனே தொலைச்சிடுவேன்!.

மரியாதையா எல்லா கேஸ்களையும் வாபஸ் வாங்கிட்டு வேற வேலயப் பாரு..."

-இதுதான் குரு பேசிய முழு பேச்சு விபரம்.

குருவின் பேச்சில் உள்ள பிரசுரிக்கவே முடியாத அளவுக்கு மட்டகரமான வார்த்தைகளை 'எடிட்' செய்துள்ளோம்.

said...

தமிழ் வலைப் பதிவுலக

சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்

என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட

அன்புகளுமிய அன்பர்கள்

திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்

அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி

என்றும் உங்கள்
விஜய்
கோவை.

http://pugaippezhai.blogspot.com

said...

எவ்வளவு அம்பலப்பட்டாலும் எந்த தைரியத்தில் இவர்களால் மக்கள் முன் வந்து பேச முடிகிறது.அது சரி சூடு சொரணை உள்ளவர்களுக்குத்தான் இந்தப் பிரச்சனையெல்லாம்.

அப்புறம் தோழர்,
senkodi.multiply.com வந்து என்னையும் செதுக்குங்களேன்.

Related Posts with Thumbnails