"
தனது எதிரியை சரியாக எடை போடாதவன் கூட வெற்றியடையலாம், ஆனால் மிகையாக மதிப்பிட்டு பிரமிப்படைபவன் வெற்றியடைந்ததாக இல்லை".
இங்கோ பெரும் கேவலமாக தன்னை பற்றியே சரியான புரிதல் இன்றியும், எதிரியைப் பற்றியோ மிக மிக அதீதமான கற்பனைகளுடனும் இருக்கிறார்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள். இந்த சமூகத்தையே ஒரு பெரும் மலைப்பாம்பாக வளைத்து பிடித்து பார்ப்பினியம் பண்பாட்டு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ள சூழலில் இது போன்ற மயக்கம் மக்கள் விரோதிகளுக்கு/பாசிஸ்டு இந்துத்துவவாதிகளுக்கு சாதகமான பொதுக் கருத்துக்களை வலுப்படுத்தி விடுகீறது.
முதலில் நம்மை நமது இசை பண்பாட்டு மரபுகளை அறிவோம், தத்துவம், மருத்துவம், வானவியல் முதல் கலை இலக்கியம் வரை பிறரிடமிருந்து திருடி அதனையே தனது சொந்த கண்டுபிடிப்பாக வரலாற்று புரட்டு செய்யும் பார்ப்ப்னியத்தின் புரட்டுகளில் ஒன்றாகிய இசை புரட்டையும் அறிவோம், பிறகு இதை ஏன் நாம் மீட்டெடுக்க வேண்டும் என்பதை அறிவோம், பிறகு இந்த வருட தமிழ் மக்கள் இசை விழா குறீத்து ஒரு சிறு சித்திரம். இவையெல்லாம் முடிந்தளவு சுருக்கமாக ஆனால் வீச்சாக இருக்குமாறு எழுத முயற்சிக்கிறேன்.
தமிழிசையும், வரலாற்று புரட்டும்:தென்னிந்தியாவின் இசை மரபாக மகா பெரிய புனித வட்டம் கட்டப் பட்ட கர்நாடக சங்கீதம் வலம் வருகிறது. பிரதமர் முதல் ஜனாதிபதி வரை அரசாங்கத்தின் அனைத்து பிரதிநிதிகளும் தியாகய்யர் விழாவில் கலந்து கொண்டு இந்த வரலாற்று புரட்டுக்கு வலு சேர்க்கிறார்கள். வாசகர் படித்தாலும் படிக்காவிட்டாலும் அனைத்து பார்ப்பன பத்திரிக்கைகளும் பத்து பக்கங்களை ஒதுக்கி ஒரே பாட்டை பற்றீயே வருட வருடம் பல்வேறு விதங்களில் பொருளற்ற வார்த்தை ஜாலங்களின் மூலம் விமர்சனம் என்ற
பெயரில் வக்கரித்து செல்கின்றனர். புரியாத சாதாரண ஜனங்களோ இது ஏதோ உண்மையிலேயே மிகப் பெரிய விசயம் போல் என்று கருதி இதன் அடக்குமுறை வடிவம் உணராமல் அடையாளம் மறுத்து பக்கங்களைப் பிரட்டிச் செல்கிறார்கள்.
இத்தனையும் ஒரு வரலாற்று உண்மையை மறைத்து விட்டு செய்யப்படும் அசிங்கமாக உள்ளது. கர்நாடக சங்கீதம் என்பதே களவாடிய இசை என்பதை மறைத்துவிட்டே இத்தனை புனித ஆன்ம வியாபராமும் நடைபெறுகிறது. கர்நாடக இசை என்பது பார்ப்பனர்களின் வரலாறு படி, இசை சாம வேதத்திலிருந்து பிறந்ததாம். ஏழு கன்னிகள்தான் ஏழு சுரங்கள் என்று சொல்கிறார்கள். சாமவேதம் உதித்த இடம் சிந்து சமவெளி. ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. சாம வேததிலிருந்துதான் இசை உருவானது என்றால் அது வடநாட்டிலும் கருநாடக இசை போலவே இருக்க வேண்டுமே? ஏன் இல்லை. மேலும் சாம வேதத்தில் ஐந்து சுரங்களால் பாடப் பெறுகிறது. கர்நாடக சங்கீதமோ ஏழு சுரங்களில் பாடப் பெறுகிறது.
ஆனால், தமிழ் நாட்டில் 2000 வருடங்களுக்கு முன்பே இசை நன்கு வளர்ந்திருந்தது. நிலத்தை ஐந்து வகையாக பிரித்து ஒவ்வொரு பிரிவிற்க்கும் ஒவ்வொரு இசை வடிவை/உணர்வை வடித்திருந்தனர் தமிழர்கள். பேரகத்தியம் என்ற நூல் இசை, இயல், நாடக தமிழ் குறித்து பேசும் ஆதி நூலாகும். செய்யுட்டுறைக் கோவை என்ற நூல் இசைத் தமிழுக்கான இலக்கணத்தை பற்றிய நூலாகும். உலகிலேயே தொன்மையான இசை இலக்கண நூல் இதுவாகும். இது தவிர்த்து இடை, கடைச் சங்க கால நூல்கள் என இசைத் தமிழுக்கான நூல்கள் பல உள்ளன. தமிழ்நாட்டு இசையைப் பற்றி சிலப்பதிகாரம் முதல் பல்வேறு பௌத்த, சமண நூல்கள் எடுத்துரைக்கின்றன. பண்டைய தமிழிசையின் நுட்பங்களை இந்த நூல்கள் விளக்குகின்றன. அதனை காணுமிடத்து மிக உயர்வான ஒரு இசையாக தமிழிசை வழங்கி வந்துள்ளது தெரிகிறது. இந்த ஆதரங்களிலிருந்துதான் ஆய்வாளர்கள் இசை திருட்டை அம்பலப்படுத்தினர்.
அன்றைய தமிழகத்தில் ஐந்து வகை நிலங்களுக்கும் பெரும் பண், சிறு பண் என இசை வடிவங்கள் ஆகியவை வகுக்கப்பட்டிருந்தன. பண்கள்தான் காலப் போக்கில் இராகங்களாக வளர்ச்சி அடைந்தன. பண் என்பது பாடலின் இசை வடிவம். அதை மெட்டு என்றும் கூறலாம். சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை பாடல்பகுதி வருகிறது. அது முல்லை தீம்பாணி என்று கூறப்படுகிறது. இதற்க்கு சுரம் அமைத்து பாடியுள்ளார் குடந்தை சுந்தரேசனார். இந்த முல்லை தீம்பாணிதான் மோகனராகம் என கர்நாடக சங்கீதத்தில் உள்ள ராகம் ஆகும்.
மரபுகளை திருடும் பார்ப்பனியம், திருடும் பொழுதே அதன் மூலங்களை அழிப்பது/திருத்துவது வழக்கமாகக் கொண்டுள்ளது. இது அதனது வரலாற்று இயல்பாக இருந்துள்ளது. காட்டுமிராண்டி கூட்டமாக இந்தியா வந்த ஆரியக் கூட்டம் இங்கிருந்த நாகரிக சமூகத்தின் கூறுகளை தனதாக்கிக் கொண்டு அந்த கூட்டத்தவரை அழித்து அடிமையாக்கியது போல, சாருவாகம் முதல் சாங்கியம் வரை பல்வேறு தத்துவ மரபுகளை தன்னுள் செரித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அவற்றீன் மூல நூல்களை திரித்து சிதைத்து அழித்து பேரழிவையும் ஏற்படுத்தியுள்ளனர் இவர்கள். இசையிலும் கூட மரபுகளை திருடிக் கொண்டு மூல நூல்களை ஆயிரக்கணக்கில் அழித்து விட்டனர். ராஜராஜ சோழன் தில்லை நடராசன் கோயிலுக்கு சென்றிருந்த போது அங்கு பூட்டியிருந்த ஒரு அறையை திறக்கச் சொன்னான். அந்த அறை முழுவதும் பழைய ஓலைச்சுவடிகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிதல் அரித்து அழிந்த போனவை தவிர மீதி கிடைத்தவைதான் தேவாரப் பதிகங்கள். இவற்றின் மொத்த எண்ணிக்கை 1,03,000. கிடைத்தவையோ 791. பௌத்தம் சமணம் வேகம் குன்றிய கட்டதில் இசைத் தமிழை வளர்த்தில் பக்தி இலக்கிய கால தேவரம் முக்கிய பங்களிப்பு செய்துள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும். பார்ப்பனர்களின் சம்ஸ்கிருத வெறி இது போல பல தமிழ் நூல்களை அழித்துள்ளது.
தமிழகத்தின் பல ஊர் பெயர்களையும், சொற்களையும் சம்ஸ்கிருதமயமாக்கினர் பார்ப்பனர்கள். மறைக்காட்டை வேதாரண்யம்(வேதம்+ஆரண்யம்) என்று மாற்றீயதைப் போலவே தமிழிசையும் கர்நாடக இசை என்று பெயர் மாறியது. மாறீயது பெயர் மட்டுமல்ல அதன் கலைச் சொற்களும், வடிவங்களும் கூட சம்ஸ்கிருதமயமாக்கப்பட்டன. கருநாடக சங்கீதத்தின் 'விநாயகுனி' தமிழிசையின் செந்துருத்திப் பண். தமிழிசையின் 'மீளா அடிமை' கர்நாடக சங்கீதத்தில் 'மத்தியமாவதி'. தமிழிசையின் காந்தார பஞ்சமம் கர்நாடக சங்கீதத்தின் கேதார கௌளம்.
இத்தனையையும் மீறி தமிழிசை வளந்தே வந்துள்ளது. பல தமிழிசை வாணர்கள் ஏராளமான தமிழ் உருப்படிகளை எழுதி குவித்துள்ளனர். அருணகிரிநாதர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சல கவிராயர், ஊத்துக்காட்டு வேங்கட சுப்பையர், கோபால கிருஷ்ண பாரதியார், இராமசாமி சிவன், இராமலிங்க அடிகளார், கவிகுஞ்சாபாரதி, வேதநாயகம் பிள்ளை, திரிகூடராசப்ப கவிராயர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பாரதி, பாரதிதாசன். அண்மைக்காலத்தில் மாரியப்ப சுவாமிகள், சிதம்பரம் ஜெயராமன், திருவாரூர் நமச்சிவாயம், தண்டபாணி தேசிகர், கே.பி. சுந்தராம்பாள், தியாகராஜ பாகவதர்.
தியாகய்யருக்கும் முன்னால் தமிழில் செவ்வியல் இசை இருந்துள்ளது. ஆதி மும்மூர்த்திகளான முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசல கவிராயர் எனப்படும் சீர்காழி மூவர் இருந்துள்ளனர். தேவாரம் பதிகங்கள் இருந்துள்ளன. தமிழ் செவ்வியல் மரபை இசை வேளாளர்களும், ஓதுவார்களும் வளர்த்தனர். இதிலிருந்துதான் தியாகய்யர் தனது இசையை பெற்றார்.
இசை முதல் அனைத்து கலைகளும் உழைப்பின் ஊடாக பரிணமித்து வளர்கின்றன. அதனால்தான் வேறுபட்ட உற்பத்தி முறையை உடைய ஒரு சமூகங்களின் கலை இலக்கிய ரசனை மட்டத்திலும் வேறுபாடு உள்ளது. படகு வலிக்கும் அத்தனை பேரின் சக்தியையும் ஒருங்கினைக்க அவர்கள் எழுப்பும் சத்தம் இசையாகிறது. வயல் வேலையின் களைப்பை போக்க வேலையின் ரிதத்திற்க்கு ஏற்ப்ப ஓசை எழுப்ப அது இசையாகிறது. ஏற்றம் இறைக்க, வரப்பு வெட்ட என்று உழைப்பின் ஊடாக இசை பல்வேறு வடிவங்களை பெறுகிறது. பிரிண்டிங்க் பிரஸ்ஸில் வேலை பார்க்கும் ஒருவனுடைய உணர்ச்சிகள் அனைத்தும் சடக் புடக் என்ற இயந்திரத்தின் ரிதத்துடனும், சல சலக்கும் நகரத்தின் பிற இரைச்சல்களுடனும்தான் அவனுக்கு அறீமுகமாகிறது. அப்படியொரு சத்த அடிப்படையை கொண்ட இசையால்தான் அவனுக்குள் அந்த உணர்ச்சிகளை உருவாக்க முடியும். அப்படிப்பட்ட இசையைத்தான் அவனால் ரசிக்க முடியும். பின் தங்கிய உற்பத்தி முறையில் ஈடுபட்டுள்ள ஒருவரால் முன்னேறிய இசை வடிவங்களை ரசிக்க முடியாது. ஒரு கிராமத்தில் திரும்ப திரும்ப ஒரே கூத்தை அதிகாலை 3:00 வரை நடத்தினாலும் அவனால் ரசிக்க முடியும் ஆனால் ஒரு பத்து நிமிட பாப் இசையை அவனால் ரசிக்க இயலாது. இப்படி உழைப்பின் ஊடாக வளர்ந்து புழக்கத்தில் இருக்கும் நாட்டார் இசையிலிருந்துதான் செவ்வியல் இசை தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. இது உலகமுழுவதிற்க்குமான உண்மை. இதே போலத்தான் செவ்வியலாக பரிணமித்து புழங்கி வந்த தமிழிசையின் மரபுகளையும், அந்த தமிழசையை களவாடி டாகுமெண்ட் செய்த கர்நாடக இசையின் மரபுகளையும், நாட்டார் இசையின் இசை மரபுகளீலும் காணலாம். வள்ளப்பாட்டு ஆனந்த பைரவியாகவும், ஏற்றப்பாட்டு சங்கராபரணமாகவும் இருக்கிறது.
பார்ப்பனியம் மரபுகளை களவாடி தமதாக புரட்டுவதற்க்கு ஆயிரத்தெட்டு உதாரணங்கள் இருக்கின்றன அவற்றில் ஒன்றுதான் இந்த இசை திருட்டு, கிபி 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாரங்க தேவர் எனபவர் எழுதிய 'சங்கீத ரத்னாகரம்' என்ற இசை நூலில் தான் தமிழிசை முறையிலான சரிகமபதநி என்னும் ஏழு தமிழ்க் குறீயிடுகளுக்கும் வடமொழி அடிப்படையிலான காரணப் பெயர்களை வலிந்து உருவாக்கி புரட்டலை செய்தார். இதனை அபிரகாம பண்டிதர் தனது கர்ணாமிர்த சாகரம் எனும் நூலில் மிக அருமையாக அமபலப்படுத்தியுள்ளார். இவர்தான் ஆலபனைகளுக்கான அடிப்படைகளை கண்டறிந்தவர். இவர்தான் ராகபுடம் செய்யும் முறையை கண்டறிந்தவர். இதற்க்குப் பிறகு கர்நாடக இசை களவாடிய இசை என்பதை நிறுவி பல ஆய்வு நூல்கள் விரிவாக வெளிவந்துள்ளன. இன்று வரை அதை மறுத்து பேச ஆள் இல்லை. இது என்ன அயோத்தி ராமனா? இங்குதான் படுத்தான், காலைக் கடன்களை முடித்தான் என்பது எங்கள் நம்பிக்கை என்று புருடா விட.
விசயம் இப்படி இருக்க இந்த வரலாற்று உண்மைகள் வெகு சனங்களுக்கு தெரியாத காரணத்தினாலேயே தமிழகத்தின் இசை கர்நாடக இசை என்று சாதித்து வருகிறார்கள் இவர்கள். தமிழிசை வளர்த்த காலத்தில் ஐந்து நிலங்களுக்கும் பறையையே இசைக் கருவியாக வரையறுத்து வைத்திருந்தனர் தமிழர்கள். மேற்கத்திய இசைக் கருவிகளைக் கூட அனுமதிககிறது தியாகய்யர் உற்சவம். ஆனால், தமிழிசையை களவாடிய இந்த திருட்டு கும்பல் தமிழ் வாத்தியக் கருவியான பறையை தியாகய்யர் விழாவில் அனுமதிக்குமா? அதைப் பற்றி பேசுவதற்க்கே அனுமதி கிடைக்காது இந்த ஜனநாயக நாட்டில். தமிழ் நாட்டில் தமிழில் பாடு என்று சொல்வதே தீவிரவாதமாக உள்ளது, போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் இசை விழாவில் தமிழிசையை பற்றீ பேசலாமாம் ஆனால் அது திருடப்பட்டதை பேசக் கூடாதாம் - திருட்டைப் பற்றீ பேசலாமாம் ஆனால் திருடனைப் பற்றி பேசக்கூடாதாம் -அன்றைய நீதிமன்ற உத்தரவு இப்படி வெளிப்படையாக திருடனுக்கு ஆதரவாக நிற்கிறது. சிதம்பரம் கோயிலில் தமிழில் பாடக் கூடாது இன்றைய நீதிமன்ற உத்தரவும் பார்ப்ப்னியத்திற்க்கு ஆதரவாகவே நிற்கிறது. தியாகராயர் உற்சவத்தில் இன்றளவும் தமிழிசைப் பாடபடுவதில்லை. திட்டமிட்டே புறக்கணித்து வருகின்றனர். தியாகய்யர் விழாவில் தமிழில் பாடுவது மட்டுமா நோக்கம்?
அது பிரதான நோக்கமாக இருக்க முடியாது. ஆயினும் அதனை வலியுறுத்துவதில் நமது தன்மானப் பிரச்சனை அடங்கியுள்ளது. நாங்கள் வழிபடுவதென்றுதான் கோயில் கட்டி வைத்திருக்கிறோம். நீங்கள் சாமி கும்பிட வேண்டுமென்றால் தனியாக உங்களுக்கென்று ஒரு கோயிலை கட்டி கும்பிட்டுக் கொள்ளுங்கள் அதை விடுத்து எங்களது கோயிலில் தான் நுழைவோம் என்று தலித்துக்கள் சொல்வது சரியில்லை என்று உயர் சாதியினர் அடாவடித்தனம் செய்வது போலத்தான், தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, ஒரு கூட்டம் திருடிய இசையையே தான் கண்டுபிடித்த இசை என்று கூறுவதும். அதை விழாவாக கொண்டாடுவதும். அதை மறுத்து தமிழில் பாடச் சொன்னால் நீ தனியாக விழா நடத்தி பாடிக் கொள் என்பதும். திருடன் நமது வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு நமது வீட்டில் திருடிய தொலைக்காட்சியிலேயே படம் பார்ப்பதை நாம் அனுமதிப்போமா? தமிழ் நாட்டிலேயே இருந்து கொண்டு தமிழில் பாட மாட்டோ ம், தமிழ் இசைக் கருவிகளான பறை, தவில் வாத்தியங்களை அனுமதிக்க மாட்டோ ம் என்றூ
பகிரங்கமாக திமிரோடு பேசுவது சுயமரியாதை உள்ளவர்களுக்கு அவமரியாதை இல்லையா? இதனை எதிர்த்து போராடமல் தமிழிசை வளர்ப்போம் என்பது ஈனத்தனமில்லையா? உண்மையில் இந்த பண்பாட்டு அடக்குமுறையை, மோசடியை எதிர்த்து போராடுவதின் ஊடாகத்தான் தமிழிசையை வளர்க்க முடியும். இது வெறும் இசையின் பெருமையையோ அல்லது வரலாறையோ மீட்டெடுக்கும் முகமாக மட்டுமல்ல, மாறாக மறுகாலனியாதிக்க சூழலில் மயங்கி அடிமை மனோபாவத்தில் சுனங்கிப்
போயிருக்கும் உழைக்கும் மக்களின் முகத்தில் அறைந்து சுயவுணர்வடையச் செய்யவும் தேவைப்படுகீறது.
தமிழிசைக்கு தனி விழா ஏன்?தியாகய்யர் உற்சவத்தை தமிழில் பாடவைப்பதுதான் நோக்கமெனில் தனியாக தமிழ் மக்கள் இசை விழா கொண்டாடுவதில் என்ன நோக்கம் இருக்க முடியும்? தியாகய்யர் விழாவில் தமிழிசை பாடச் சொல்லுவது கர்நாடக சங்கீத புனிதத்தின் உண்மை முகத்தை கிழித்து காட்டுவதற்க்கத்தான், ஒரு பண்பாட்டு திருட்டை அம்பலப்படுத்தத்தான், தமிழகத்தின் சுயமரியாதையை காக்கத்தான். மாறாக தமிழிசையின் வளர்ச்சி என்பதும் அதன் நடைமுறைப் பயன்பாடு என்பதும் தியாகய்யர் விழா மேடையைத் தாண்டிய ஒன்று. அது வெகு சன உழைக்கும் மக்கள் என்ற மிகப் பெரிய மேடையின் ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் வல்லமை பெற்றது. இந்த வல்லமை தமிழிசையின் என்றும் அழியா அதன் நாட்டார் இசையியல் விழுமியங்களில் பொதிந்துள்ளது. அதனாலேயே தனியாக தமிழிசைக்கான ஒரு விழா தேவைப்படுகிறது.
பார்ப்பனியம் என்பது இந்திய தேசிய இனங்களின் உரிமைகளை ஒடுக்கும் இந்து தேசியம் எனும் தேசிய இனங்களின் சிறைக் கூடத்திற்க்கு தத்துவ பலமளிப்பதாக உள்ளது. இந்த இந்து தேசியத்தை வலுப்படுத்தும் தார்மீக கருத்துக்களூக்கு ஆதர பலமாகத்தான் இந்தியா முழுமைக்கும் ஒற்றை பார்ப்ப்னிய பண்பாட்டு அடையாளங்களை கட்டிக் காக்கும் வேலையை எல்லா பார்ப்ப்னிய வெறீயர்களும் செய்து வருகிறார்கள். இப்படி இந்தியாவின் தேசிய இனங்களனைத்தையும் வலுக்கட்டாயமாக இறூக்கி கட்டி வைப்பதன் மூலம்தான் ஏகாதிபத்தியத்திற்கு இஸ்டம் போல சுரண்ட ஏதுவாக வசதி செய்து கொடுக்கிறது. பார்ப்ப்னியமும், ஏகாதிபத்தியம் இணையும் புள்ளி ஜனநாயக மறுப்பு எனும் இந்த அம்சம் எனில். அவர்கள் தத்துவ ரீதியாக இணையும் வர்ணாஸ்ரம புள்ளி ஒன்று உள்ளது அதனை பின்னொரு கட்டுரையில் விளக்குகிறேன்.
இது உழைக்கும் மக்கள் தங்களைப் பற்றி தங்களது பண்பாடு பற்றி தாழ்வு மனப்பான்மை கொள்வதை உறுதிப்படுத்துகிறது. இதன் மூலம் உழைக்கும் மக்களை கருத்தியல் ரீதியில் தொடர்ந்து அடிமை நிலையில் வைத்திருக்க உதவுகிறது. அனைவரும் அர்ச்சகராவது குறித்து புதிய காலாச்சாரம் பத்திரிகை கருத்துக் கணீப்பு நடத்திய பொழுது, சாதி வேறுபாடின்றி, ஆதிக்க சாதி முதல் தாழ்த்தப்பட்டவர்கள் வரை அனைவரும் பார்ப்பனர்களே புனிதமானவர்கள் பிற சாதியினர் கருவறைக்குள் போவது புனிதமல்ல என்றும் கூறினர். தனது பிறப்பையே கேவலாமாக எண்ணும் கருத்து எப்படி வலுப்பெற்றது? இதே எண்ண அடிப்படையில்தானே பார்ப்ப்னிய பண்பாட்டு அடையாளங்களே சிறந்தது எனும் கருத்தும் வெளீப்படுத்துகிறது. உலகில் மூளையில் சிறந்தவர்கள் இரு இனங்களாம் ஒன்று யூதர்கள் இன்னொன்றூ பார்ப்பனர்கள். இந்த கூற்றை கேள்விப்பாடதவர் இருக்க முடியுமா?
இந்திய மக்களின் பொருளாதார/கலாச்சார விடுதலை என்பது பார்ப்பினியத்தின் வர்க்க அடிப்படையை உணர்ந்து அதனை எதிர்க்கும் போராட்டத்தின் ஊடாக மட்டும்தான் சாத்தியமாகும். இந்தியாவைச் சுரண்டும் ஏகாதிபத்தியத்திற்க்கு உள்ளூரில் களம் தயாரித்துக் கொடுக்கும் பார்ப்ப்னியத்தின் வர்க்க அடிப்படை புரிந்தால் மட்டுமே அதனை எதிர்த்து உழைக்கும் மக்களின்/ஒடுக்கப்பட்டவர்களின் மரபுகளை வளர்த்தெடுப்பதற்க்கான வழி புலப்படும். பார்ப்ப்னியம் குறித்த இந்த பார்வை இல்லாதால்தான் முந்தைய தமிழிசை இயக்கங்கள் அனைத்தும் கர்நாடக சங்கீதத்திற்க்குள் செரிமானமாகி விட்டன. நாட்டுக் கோட்டை செட்டியார்கள் எனும் தமிழகத்து முதலாளீகள் ஆதரித்த தமிழிசைச் சங்கம் அந்த முதலாளிகள் தரகு முதலாளிகளாக வளர்ந்த பிற்ப்பாடு வர்க்க இயல்புகேற்ப்ப கர்நாடக சங்கீதத்துடன ஐக்கியமாகி விட்டது. பண்ணாராய்ச்சி வித்தகர் சுந்தரேசனார் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழிசை மன்றம் தொடக்கத்தில் தியாகய்யர் விழாவிற்கு போட்டியாக நடந்து பிறகு மெல்ல மெல்ல தியாகய்யர் விழாக்குழுவோடு சங்கமமாகி விட்டது.
கர்நாடக இசை எனும் பார்ப்பினிய ஒடுக்குமுறை கலையின் உள்ளடக்கம் மூட நம்பிக்கை, கடவுள் பக்தி, அடிமை மனோபாவம், பார்ப்பினிய பண்பாடு என்பதாக உள்ளது. மாறாக விடுதலை விரும்பும் மக்களுக்கு அறிவியல் பூர்வமான, சிந்தனை, பகுத்தறிவு ஆகியவற்றை வளர்க்கும் விதமான உள்ளடக்கதோடான கலையே இன்றைய தேவையாக இருக்கிறது. மக்களிசையாக தமிழிசை மாற வேண்டுமெனில் இந்த உள்ளடக்கத்தையே அது சுவீகரிக்க வேண்டும். மாறாக தெலுங்கில் உள்ளதை அப்படியே தமிழில்
பாடுவதால் ஒரு வித்தியாசம் வந்து விடப் போவதில்லை. தமிழிசை இயக்கத்தின் ஆரம்பத்தில் அதில் சேர்ந்த தந்தை பெரியார், பார்ப்ப்னிய உள்ளடக்கத்தை அப்படியே தமிழில் பாடத் துவங்கிய உடன் அதன் ஆபத்தை உணர்ந்து தமிழிசை இயக்கத்திலிருந்து விலகிக் கொண்டார். தியாகய்யர் விழாக்குழு தமிழ் மக்களிசைக்கு குழி வெட்டுகிறது எனில். தமிழிசைக்காரகள் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள்.
கர்நாடக இசையின் வரலாற்று திருட்டை அம்பலப்படுத்துவது மட்டும் தமிழிசையை வளர்த்து விடாது மாறாக இன்றைய உழைக்கும் மக்களின் தேவைக்கேற்ப்ப அதன் உள்ளடகத்தை புத்துருவாக்கம் செய்வதன் மூலம் மட்டுமே, ஏகாதிபத்திய கழிசடை கலாச்சாரத்தை விற்பனை செய்யும் ஊடக வியாபாரிகளுக்கு மாற்றாக அதனை மக்கள் முன் நிறுத்தி தமிழிசையை நிகழ் கலையாக மாற்றும் பொழுது மட்டுமே அதனை வளர்த்தெடுக்க முடியும்.
பிப் 2007 - தமிழ் மக்கள் இசை விழா எழுச்சியாக ஆரம்பித்த பேரணியுடன் பிப்ரவரி 24, சனிக்கிழமை தஞ்சாவூரில் தமிழ் மக்கள் இசை விழா ஆரம்பித்தது. திடலின் நுழைவாயிலின் இரு மருங்கிலும் முற்போக்கு புத்தக நிறுவனங்கள் கடைகள் போட்டிருந்தனர். இந்த முறை விழாவின் உள்ளடக்கமாக காலனியாதிக்க இந்தியாவின் உண்மையான விடுதலை போராட்ட மரபுகளை முன்னிறுத்தும் வகையில் கருத்தரங்க தலைப்புகளும், கலை நிகழ்ச்சிகளும் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தன.
பெரும்பாலான உழைக்கும் மக்களின் வாழ்க்கை மிகப் பெரிய கேள்விக் குறியாக்கியுள்ள உலகமயத்தின் பயன்களை நுகர்வோரின் அடிமை நிலையை/சுயமரியாதையின்மையை குத்திக்காட்டுவதாகவும், விடுதலைப் போரின் வீரமரபுகளான தென்னகத்தின் முதல் சுதந்திரப் போரையும், திப்புவையும், பகத்சிங்கையும் அவர்களின் உண்மையான வடிவத்தில் அறீமுகப்படுத்தும் விதமாகவும், காலனிய விடுதலைப் போராட்டத்தின் வீரத்திலிருந்தும், தியாகத்திலிருந்தும், துரோகத்தில்ருந்தும் - நாட்டு விடுதலையை விரும்பும் நாம் பாடங்கள் கற்றுக் கொண்டு அந்த மரபுகளை மறுகாலனியாதிக்கத்திற்க்கு எதிரான உரமாக இடவேண்டிய தேவையை வலியுறுத்தும் விதமாகவும் தலைப்புகளும் கலை நிகழ்ச்சிகளும் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தன. விடுதலை வீரர்களையும் அவர்களின் மரபுகளையும் நினைவுபடுத்து/அறிமுகப்படுத்தும் முகமாக பேரா. இராசைய்யன், தலக்காடு சிக்கே ரங்க கவுடா, பேரா சமன்லால் ஆகியொருக்கான கருத்தரங்க தலைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன, இந்த மரபுகளை அறிந்து கொண்ட உழைக்கும் வர்க்கம் இதனை பயன்படுத்த தடையாக இருக்கும் மறுகாலனியாதிக்க பண்பாட்டு சீரழிவுகளான அடிமைத்தனத்தையும், பிழைப்புவாதத்தையும், கழிசடைத்தனத்தையும் குத்தி கொதறி ஒவ்வொருவரையும் குற்றவுணர் கொள்ள செய்யும் விதமாக தோழர் துரை. சண்முகத்திற்க்கும், மருதையனுக்கும் தலைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் நிகழ் கலையாக உழைக்கும் மக்களிடம் புழங்கி வரும் பல்வேறு நாட்டார் கலை வடிவங்களுக்கு புரட்சிகர உள்ளடக்கம் கொடுக்கும் வகையிலான நிகழ்ச்சிகளை ஏற்ப்பாடு செய்திருந்தனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து குடும்பத்துடன் திரண்டு வந்திருந்த உழைக்கும் மக்களால் திருவள்ளுவர் திடல் நிரம்பியிருந்தது. செஞ்சட்டை தோழர்கள் ராணுவ அணிவகுப்பில் விழா நடைபெற்ற திடலில் ஒழுங்கை பராமரித்தனர். போலீசாரோ மகஇகவின் விழாக்கள் குறித்த அனுபவம் உண்டு என்பதால் கவலையின்றி நாற்காலிகளில் அமர்ந்து பொழுதை போக்கிக் கொண்டிருந்தனர். பதினைந்தாயிரத்துக்கும் மேல் திரண்டிருந்த கூட்டத்தில் செஞ்சட்டை தோழர்கள் ஒவ்வொரு வரிசையிலும் தூங்குபவர்களை எழுப்பிவிட்டும், செல்பேசிகளை உபயோகிப்பதை கட்டுப்படுத்தியும், பேசுபவர்களை கண்டித்தும் ஒழுங்கை நிலைநாட்டிய பாங்கும், அதில் இருந்த நியாயத்தை உணர்ந்து கட்டுப்படுடன் நடந்து கொண்ட மக்களும் பெருவாரியான மாற்று அரசியல் கருத்துக் கொண்டவர்களுக்கு முற்றிலும் ஆச்சரியகரமான விசயமாக இருந்திருக்கும். மக்கள் சர்வாதிகாரம் குறித்தும், புரட்சிகர ஜனநாயகம் குறித்தும் சேறு வாரி வீசுபவர்கள் இது போன்ற அரங்குகளில் அது நிலைநாட்டப்படும் அழகை கண்ணுற்றால் தங்களது பிற்போக்கு மயக்கத்திலிருந்து தெளிவுபெறும் அபாயம் உள்ளதை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
திடலின் உள்ளே மக்கள் உட்காரும் இடத்திற்க்கு ஒரு பக்கத்தில் மிக அருமையாக விடுதலைப் போராட்ட காட்சிகள் ஓவியங்களாக வடிக்கப்பட்டிருந்தன, சீறிப்பாயும் குதிரைகளும், புகை கக்கும் துப்பாக்கிகளும், பீரங்கிகளும் மிக அருமையாக சித்த்ரிக்கப் பட்டிருந்தன. இன்னொரு பக்கம் சின்ன மருதுவும், தீரன் சின்னமலை, திப்பு, கட்டபொம்மன் போன்றோர் நம்மையே முறைத்துப் பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். என்னடா எங்களது தியாகத்தை விழா வைத்து நியாபகப்படுத்தும் இழி நிலையிலா இந்த நாடு உள்ளது? கேவலம், எமது மரபுகளை பற்றி விடுதலை வேண்டி காத்திருக்கும் நாட்டிற்க்காக அணி திரள்வாய் என்பது போல அந்த பார்வை நம்மை நாலா பக்கமிருந்தும் உறுத்தியது. அதே பக்கத்தில் புகைப்படக் கண்காட்சியில் கோக் ஆலை எதிர்ப்பு போராட்ட சமயத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த. மனதிலிருந்து மறந்து போன பல சம்பவங்களை திரும்ப கொணரும் வகையில் அந்த ஓவியங்கள் சிந்திக்க தூண்டுவதாக இருந்தது. நவீன ஓவியம் என்ற பெயரில் கண்ட கிறுக்கல்களையும் கடைபரப்பும் கலை இலக்கிய வியாபாரிகள் மத்தியில் புரட்சிகர கலை இலக்கியத்தின் வலிமைக்கு சான்று பகர்வதாக இந்த ஓவியக் கண்காட்சி இருந்தது.
இனி தோழர் கோபால் என்பவரின் வார்த்தைகளிலேயே தமிழ் மக்கள் இசை விழா கருத்தரங்கு குறித்த வர்ணனைகளை தருகிறேன்,
*****************
தென்னிந்தியக்கிளர்ச்சி 1800-01, முதல் சுதந்திரப்போர்'- என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசுவதாயிருந்த பேரா. இராசைய்யன், என்ன நினைத்தாரோ, தனக்கு அவ்வளவாய் வராத தமிழிலேயே பேசினார். விடுதலைக்கு போராடிய வீரர்கள் பற்றிய நிறைய வரலாற்றுச்செய்திகளை அடுக்கினார். முதல் விடுதலைபோர் தென்னகத்தில் தான் நடந்ததென்று அறிவிக்கக்கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார். விட்டால் திப்புவையே கூட்டி வந்திருப்பார், சாட்சி சொல்ல. பேராசிரியர் என்பதை நிரூபித்துக்கொண்டிருந்தார். புள்ளிவிவரங்கள் எதுவும் இப்போது நினைவில் இல்லை.
தலகாடு சிக்கே ரங்க கௌடா, திப்பு பற்றி நாம் அறிந்திராத நிறைய தகவல்களை கன்னடத்தில் சொன்னார். மொழிபெயர்ந்த சொற்கள் வீரியத்தை கொஞ்சம் தொலைத்திருந்தாலும், மறைக்கப்பட்ட பல தகவல்கள் கிடைத்தது. அந்த காலத்திலேயே நியாயமான நிலப்பங்கீடுகளைச் செய்திருக்கிறார், . தலித்களுக்கும் நில உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அரண்மனைகளில் ஆடல் பாடல் கூத்துகளை அறவே வெறுத்து 'சந்திரனே சூரியனே' எனப்பாடி பைசா பார்க்க நினைத்த பார்ப்பனர்களை நைசாகத் துரத்தியடித்திருக்கிறார். அப்பவே புரளி புலம்ப ஆரம்பித்து விட்டிருக்கிறார்கள். திப்பு ஆட்சியில் அரசு விழாக்கள் சிக்கனமாய் நடந்திருக்கின்றன. தவறுகள் செய்த விவசாயிகளுக்கு சிறைத்தண்டனை கிடையாது, மாறாக மரக்கன்றுகளை நடச்சொல்லி பணித்திருக்கிறார். ஆச்சரியமாயிருந்தது.
ப்ரான்சிலிருந்து நீராவி எந்திரம் வாங்கமுயன்றது, உயிரித்தொழில்நுட்பத்தை ஊக்குவித்து, உளவுச்செய்திகளை விரைவாக கொண்டு வரும் திறமையான புறாக்களை உருவாக்கியது. சிவப்புச்சீருடையணிந்த வெள்ளையனின் படையாட்களை காளைப்படைகொண்டு காவு வாங்கியது, பட்டுபுழு வளர்க்கும் தொழிலை அறிமுகப்படுத்தியது என இன்னும் பல சாதனைகளை அடுக்கிகொண்டே போனார் ரங்க கௌடா. திப்பு, தொழில்புரட்சித்தருவை தண்ணீர் விட்டு வளர்த்திருக்கிறார். அதில்தான் அந்த வீணாய்ப்போன வெள்ளையனும் பாழாய்ப்போன பார்ப்பனியனும் வானத்தை வெறித்துக்கொண்டு சிறுநீர் கழித்திருக்கிறார்கள். திப்பு சரிந்ததும் முதல் வேலையாய் அவரது நூலகத்தைச் சூரையாடி தொழில்நுட்பக்குறிப்புகளைக் களவாடியிருக்கிறார்கள், வெள்ளையர்கள்.
தோழர். துரை சண்முகம் நையாண்டியாக சமூகசீர்கேடுகளை இடித்துரைத்தார். கெர்லாஞ்சியில் ஒரு இளம்பெண்ணும் அவளது தாயும் நிர்வாணப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்களே, அப்போது வாய்மூடிய வாசகன் ஒருவன், 'முற்றும் துறந்த முதிர்கன்னி' ஷில்பா ஷெட்டி அவமானப்படுத்தப்பட்டார் என்று வருத்தப்பட்டு பத்திரிகைக்கு கடிதம் எழுதுகிறானே, அவன் கையை உடைத்தால் என்ன?- கொதித்துப் போய் பேசினார். சம்பந்தப்பட்டவர்கள் சிக்கியிருந்தால் புத்தூருக்கு பயணமாயிருப்பார்கள்.
கெர்லாஞ்சி போன்ற சம்பவங்களை பத்திரிக்கைகள் இருட்டடிப்பு செய்கின்றன. அவனுக்கு முக்கியமான செய்தியாகப்படுவது ' இந்த வயதிலும் ரஜினி சுறுசுறுப்பாக இருக்கிறார்'. யாருக்குய்யா வேணும் இது? வெள்ளையனுக்கு எதிரான போரை சைகைகள் மூலமாகவே நடாத்திய ஊமைத்துரையின் சுறுசுறுப்பை நீ என்னவென்பாய்?? ஆறே நாளில் கோட்டையை எழுப்பிய பாஞ்சாலங்குறிச்சி மைந்தர்களின் சுறுசுறுப்பை நீ எப்படி மறந்தாய். கைத்தட்டல் கூரையைக் கிழித்தது.
'கேப்டன்' விஜயகாந்த் என்று சில கேனையன்கள் கூவித்திரிகிறான்கள். உரச்சாக்கு போல் இருக்கிறான், கேப்டனாம். வெள்ளைய ஏகாதிபத்தியத்திற்க்கு எதிராக மக்களிடம் நிதி திரட்டி சுதேசி கப்பல் விட்டானே வ. உ. சி, அவந்தானையா உண்மையான கேப்டன். தென்னாப்பிரிக்க இந்தியன் ஒருவன் வ.உ.சி. யிடம் சேர்ப்பிக்கச் சொல்லி காந்தியிடம் கொடுத்த 5000 ரூபாய் இன்று வரை கொடுக்கப்படவில்லை.இந்த துரோகிகள் தானேய்யா நமது நிஜ சுதந்திரத்தின் சங்கை அறுத்தவர்கள். பாலஸ்தீனத்தில் தமது நாட்டையும் உயிரையும் பறிக்கவரும் பீரங்கியை நோக்கி செருப்பைக்கழற்றி காட்டினானே அந்தப் பொடிச் சிறுவனின் வீரம் இந்த துரோகிகளிடம் இருந்ததா?
கோக்கையும் கோக்கை குடிக்கும் கோமாளிகளையும் ஒருபிடிபிடித்தார். இப்பத்தான் தெருமுக்கிலெல்லாம் இளநீர் கிடைக்கிறதே, வாங்கிப்பருகினால் உடம்புக்கும் நல்லதுதானே என்றுகேட்டால், கோக்கும் பெப்சியும் ஈசியாக கிடைக்கிறது என்கிறான். ஈசியாகக் கிடைத்தால் பினாயிலையும் குடிப்பாயா? காமாலைக்கு கறும்புசாறையும் இளநீரையும் தனேய்யா குடிக்கச் சொல்கிறார்கள். 200 மி.லி. கொக்ககோலாவையா குடிக்கச் சொல்கிறார்கள். நாம் அனைவருமே இளநீர் சாப்பிட ஆரம்பித்தால் எத்தனை விவசாயிகள் பிழைத்துக்கொள்வர்கள் என்று யோசித்தீர்களா??
தோழர் பேசிமுடிக்கையில் இடி ஓய்ந்தது போலிருந்தது. பேரா. சமன்லால் ஆங்கிலத்தில் 'பகத் சிங் மற்றும் அவர் தோழர்கள் பற்றிய ஆவணங்கள்' குறித்து பேசினார். மொழிபெயர்க்க அழைக்கப்பட்ட தோழர். அரசு சரியான தேர்வு.பகத்சிங் பற்றி அரசு பேசி நிறைய கேட்டிருந்ததால், சமன்லால் உரையின்போதுபோது கொஞ்ச நேரம் தஞ்சை கோவிலுக்கு இளைப்பாறச் சென்றுவிட்டேன். ராசராசன் கட்டிய தஞ்சையின் கொவிலையும் மாடமாளிகைகளையும் பார்த்தபோது துரை சண்முகம் பேசியதுதான் நினைவில் வந்தது. தஞ்சை பெரியகோவில் பெருமைகள் கிடக்கட்டும், அந்த கோவில்கட்டும் பணியில் கோபுரத்தின் மீதிருந்து கீழே வீழ்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர்? தஞ்சையை சுற்றி இராசராசன் அவன் வைப்பாட்டிகளுக்கு கட்டிய மாளிகைகளும் சத்திரங்களும் அவமானச்சின்னங்கள் தானே?
தஞ்சை
பூங்காவில் ஒய்வெடுத்துவிட்டு பந்தலுக்குத் திரும்பியபோது தோழர் மருதையன் பேச ஆரம்பித்திருந்தார். எப்போதும் போல எதிரிலிருப்போரின் தலையை நிமிர்த்தி 'உங்களைத்தான் கேட்கிறேன்' என்று கணை தொடுத்துக்கொண்டிருந்தார்.
ரிலையன்சு போன்ற உள்நாட்டு களவாணிகளுக்கும் ,வால்மார்ட் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கும் சில்லறை வணிகத்தின் கதவை திறந்துவிட்டிருக்கிறது அரசு. ரிலையன்சு கடையில் 'சீப்'பாகக் கிடைக்கிறதாம். முலாயம் சிங் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை இலவசமாக கொடுத்தால் ஏன் அவன் 'சீப்'பாக கொடுக்கமாட்டான். என்ன ஒரு பத்து ரூபாய் குறைத்து கொடுத்து விடுவானா? நீங்கள் யோசிக்கவேண்டும்.
உங்கள் தெருமுனையில் உள்ள அண்ணாச்சிக் கடையில் கவனித்திருப்பீர்கள். அந்த கடையில் ஒரு குடும்பமே உழைத்துக்கொண்டிருக்கும். காலை நான்கு மணிக்கு சந்தைக்கு சரக்கெடுக்க செல்வதில் ஆரம்பிக்கிறது அவனது நாள். பகல் முழுதும் உழைத்துக் களைத்து அவர்கள் உறங்கச் செல்லும் போது இரவு பன்னிரெண்டாகிறது. இவ்வளவு உழைக்கிற அந்தக் குடும்பம் கோடிகோடியாக சேர்த்து விட்டதா என்ன?? யோசியுங்கள்.. அந்த அண்ணாசிக் கடையில் எத்தனை நாள் கடன் வைத்திருக்கிறீர்கள்? எத்தனை முறை 'புளி சரியில்லை' என்று சண்டை போட்டிருப்பீர்கள்? எத்தனை விசேஷங்களுக்கு அழைப்பு விடுத்திருப்பீர்கள்?? இன்று விலை மலிவாக கிடைக்கிறதென்று கோடிகளைச் சேர்த்துவைத்திருக்கிற அந்த கொள்ளையர்களுக்கு இன்னும் கொஞ்சம் கொட்டிக்கொடுக்கப் போகிறீர்களா? விலை அதிகமானாலும் எளியவனான நம்மவனையே ஆதரிக்க வேண்டுமென்ற எண்ணம் நமக்கு எழ வேண்டாமா?
ஐ.டி கம்பெனிகளின் படையெடுப்பு ஆரம்பித்திருக்கிறது. முப்பதாயிரம் நாப்பதாயிரம் என கொடுக்கிறானே நல்லதுதானே என்று கேட்பீர்கள். அங்கு வேலை செய்கிறவன் ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் உழைக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை முன்னேற்றம் என்று கூறுவீர்களா? ஒரு எந்திரத்தையும் அதனைப் பயன்படுத்துவதையும் கற்றிருத்தல் உண்மையான அறிவியல் முன்னேற்றமில்லை. அடிப்படை அறிவியலைக் கற்று அதில் ஏற்படுத்துகிற முன்னேற்றம் தானே உண்மையான முன்னேற்றம்! சீனாவும் வங்காளதேசமும் இந்த ஐ.டி போட்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டை விட்டுப் பிரிந்து வந்து வேலை செய்வோருக்காக அவரவர் ஊரிலேயே ஐ.டி. கம்பெனிகளை ஆரம்பிக்கப் போகிறார்களாம். எதற்கு?? இன்று சம்பளமாய் கொடுத்துக்கொண்டிருக்கிற நாப்பதாயிரத்தை நாலாயிரமாகக் குறைக்கத்தான்.
பேரா. சமன்லால் பேசும்போது விடுதலை வீரர்களின் வீர மரபைப் பற்றிய கூட்டத்திற்க்கு இவ்வளவு கூட்டம் கூடியிருப்பது பெருமையாக இருக்கிறதென்று சொன்னார். உண்மையில் பெருமைப் படுகிறோமா நாம்? அந்த வீரர்களின் பெருமைகளைப் பேசித்தான் தெரியப்படுத்தவேண்டும் என்கிற அவலநிலையில் அல்லவா நாம் இருக்கிறோம். உண்மையான சுதந்திரத்திற்காக போரிட்டு மாய்ந்தவர்களின் குடும்பத்தினரின் இன்றைய நிலை என்ன? அவர்கள் கட்டிய கோட்டைகள் தரைமட்டமாக்கப்பட்டு அலங்கோலமாய் காட்சியளிக்க தொண்டைமானின் மாளிகையும் எட்டப்பனின் அரண்மனையும் இன்றும் கம்பீரமாய் இருப்பதன் காரணம் தெரிகிறதா??
இன்றும் தஞ்சை கோவிலில் சரபோஜியின் வாரிசுகள் தான் பரம்பரை தர்மகர்த்தாக்கள். குடியரசு தினங்களில் ஆர்காட் நவாபின் வாரிசுகள் மேடையேறுகிறார்கள், சிறப்பு விருந்தினர்களாய். நம் சுதந்திரத்தை கருவறுத்த கயவர்களான தொண்டைமான்களும், எட்டப்பன்களும், சிந்தியாக்களும், பேஷ்வாக்களும், நவாப்களும் இன்று ஆட்சிஅதிகாரத்துடன் சுற்றித்திரிகிறார்களே, தெரியவில்லையா உங்களுக்கு எப்படிபட்ட விடுதலையை நாம் பெற்றிருக்கிறோம் என்று?
'மகாபிரபுவே, நான் நெடுநாளாய் பார்த்துவந்ததில் ப்ரெஞ்சுக்காரர்களோ திப்புவோ உங்களை எதிர்த்து வெற்றிபெறமுடியவில்லை. ஆனால் கம்பெனியை நம்பி வாழ்ந்தோர் பேரும் புகழும் பெற்றிருக்கின்றனர். இந்தக் காட்டு நாய் சின்ன மருது எதற்க்காக போராடுகிறான் என்றே தெரியவில்லை.' - என்று தனது கும்பினி எசமானுக்கு எழுதுகிறான் தொன்டைமான். அவனுக்கு நிஜமாகவே புரியவில்லை. வெள்ளையன் ஆண்டால் என்ன, மாளிகையும் மனைவிகளும் பத்திரமாய் இருக்கின்றனரே என்ற பிழைப்புவாதத்தில் ஊறிப்போயிருக்கிறது அவன் இரத்தம்.
தொண்டைமானுக்கு நிஜமாகவே புரியவில்லை. நமக்குப் புரிந்திருக்கிறதா? பன்னாட்டு நிறுவனங்களை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு இருநூறு மி.லி. தொண்டைமான் இரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது. நமது விவசாய நிலங்களை ஆக்கிரமித்தால் என்ன, வேலை கொடுக்கிறானே, ஆயிரமாயிரமாய் சம்பளம் கொடுக்கிறானே என்று சாதிப்பீர்களானால் உங்கள் இரத்தத்தில் முன்னூறு மி.லி. எட்டப்பனுடையதாக இருக்கிறது.
திருச்சிப் பிரகடனத்தில் சின்ன மருது சரியாகக் கூறுகிறான் - இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
தோழர் மருதையன் தன் உரையை முடித்ததற்கும் கலைநிகழ்ச்சிகள் தொடங்குவதற்குமிடையேயான அரைமணிநேர இடைவெளி சுயபரிசோதனைக்காகவே விடப்பட்டிருக்கவேண்டும். திருவள்ளுவர் திடல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.
'ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்... இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்... இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது... இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!.... '-என்ற மருதுவின் திருச்சிப் பிரகடனம், திருவள்ளுவர் திடல் பிரகடனமாக எதிரொலித்துக் கொண்டிருந்தது.-
*****************
நாகரீக கோமாளி திரைப்பட இயக்குனரின் உரைக்கு பிறகு வாத்தியங்களின் பிளிரலுடன் ஆரம்பித்தது கலை நிகழ்ச்சிகள். முதல் நிகழ்ச்சியாக வீர சோழ தப்பாட்ட குழுவினரின் சூறாவளி கிளப்பும் தப்பாட்டம் அரை மணி நேரத்திற்க்கு கூட்ட அரங்கை கட்டி போட்டு விட்டது. தப்பாட்டம் முடிந்த பொழுது இடி மின்னலுடன் கூடிய ஒரு கோடை மழையின் அனுபவத்தை உணர முடிந்தது. வசந்தத்தின் இடி முழக்கம் இப்படித்தான் இருக்குமோ என்று எதிரிகளுக்கு கிலியூட்டும் வகையில் கலை நிகழ்ச்சியின் ஆரம்பம் இருந்தது. திப்புவின் புகழ் பாடும் சுபி இசை மரபிலான ஒரு இசைப்பாடல் பாடப்பெற்றது. திப்புவின் வீரத்தை கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்த கார்வாலி சிப்பாய்களின் இசை கார்வாலி இசையாக இசைக்கப்பட்டது. இஸ்லாமிய மரபுடன் இசைக்கப்பட்ட அந்த இசை காதுகளில் இன்னும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது. முற்றிலும் புதுமையானதொரு அனுபவமாக அந்த இசை இருந்தது. பல்வேறு அளவுகளிலான தோல் வாத்தியக் கருவிகளுடன் பக்கீர்கள் எனப்படுபவர்கள் டம் டம் என்று தட்டிக் கொண்டு திப்புவின் புகழை புரியாத மொழியில் பாடினர். ஆயினும் அன்றைக்கு அவர்களிடம் இருந்த இசை மரபை விடுதலை போரின் வேள்விக்கு பயன்படுத்தினர் என்று பார்க்குமிடத்து மொழி ஒரு தடையாக இருக்கவில்லை. இதே கைகள் மக்களுக்கு புரிந்த மொழியில் பாடல் இசைத்து நாட்டு விடுதலைக்கு போராடும் என நம்பிக்கை தெரிவித்து பாராட்டினார் மகஇக மைய கலைக்குழு பாடகர் கோவன். இடையில் நடத்தபெற்ற நாடகம் தொய்வை ஏற்ப்படுத்தும் வகையில் இருந்தது ஆயினும் இது ஒட்டு மொத்த நிகழ்ச்சி ஏற்ப்படுத்திய தாக்கத்துடன் ஒப்பிடும் பொழுது கடலில் கரைத்த பெருங்காயமாகவே இருந்தது.
பிறகு, மருதிருவரின் புகழ் பாடும் மருதிருவர் கும்மி இசைக்கப்பட்டது.
"
காளையார் கோயிலு காட்டுக்குள்ளேரெண்டு கன்னி கழியாத மாமரங்கஅது பூக்கவுமில்லே காய்க்கவுமில்லேமருதிருவர் இன்னும் சாகவில்ல..."
என்ன மெட்டில் பாடுவது என்று தெரியவில்லையா? இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்' என்ற பாடலை பாடாத வாய் இன்றளவும் தமிழகத்தில் கிடையாது. அந்த மெட்டு கும்மி பாடலிலிருந்து எடுத்தாளப்பட்டு ஹார்மொனி வடிவம் கொடுக்கப்பட்டதுதான். பிறகு அனைவரும் எதிர்பார்த்த மகஇகவின் மையக் கலைக்குழுவின் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. சமீப காலமாகவே ஹார்மொனி இசை வடிவங்களை முயற்சி செய்து வரும் இவர்கள் அதில் மிக அருமையானதொரு மேடை நிகழ்ச்சியை இந்த முறை நிகழ்த்தி காட்டின. ஆண் குரல் முடியும் தருவாயில் பெண்ணின் ஹம்மிங்குடன் புல்லாங்குழல் இணைந்து மிக அற்புதமான ஒரு இசை அனுபவத்தை வழங்கினார்கள். பாடல்களுக்கேற்ற மேடை நடனம் அல்லது அடவுகள் நவீன நாடக உத்திகளை புரட்சிகர கலை வடிவங்களுடன் இணைத்து வழங்கும் நல்ல முயற்சியாக இருந்தது. உழைக்கும் மக்களின் ஆக்ரோசத்தையும் வெஞ்சினத்தையும் வார்த்தைகளிலும், வாத்தியக் கருவிகளிலும், நடனத்திலும் வெளிப்படுத்தியது மகஇகவின் நிகழ்ச்சிகள். சிறுவர்களின் பாடல்கள் மிகச் சிறப்பாக இருந்தது, சிறார்களின் தடுமாறும் மழலையில் புரட்சிகர பாடல்களை கேட்ப்பது ஒரு நல்ல அனுபவமாக, கொண்ட கொள்கைக்கு நாம் நேர்மையாக இருக்க வேண்டும் ஏனேனில் நம்மை அடியொற்றி ஒரு சிறு தலமுறை உருவாகி வருகிறது அவற்றின் நம்பிக்கைகளை வெம்ப வைப்பதாக நமது நடவடிக்கைகள் இருந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கை உணர்வை வூட்டுவதாக இருந்தது.
தூக்கு மரம் - இசைச் சித்திரம் என்ற மேடை நிகழ்ச்சி வடிவத்தில் விடுதலைப் போராட்ட வீரர்கள் நமக்கு விட்டுச் சென்று செய்தி வசனங்களின்றி - இசை மற்றும் மேடைச் சித்திரம் வடிவத்தில் வழங்கப்பட்டது. முற்றிலும் புதியதொரு முயற்சியாக பார்ப்பவரை முழுவதும் கட்டியிழுக்கும் ஆற்றலுடன் இந்த நிகழ்ச்சி நடந்தேறியது. தமிழ் மக்கள் இசை விழாவிற்க்கு மகுடம் சூட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி இருந்தது. ஒரு சாதாரண வீரனாக போர்களத்தில் உயிர் துறந்த திப்புவை இரவு நேரத்தில் வெள்ளையர்கள் தேடி கண்டு பிடித்து மடியில் சாய்த்து உறுதிப்படுத்தும் ஒரு ஓவியம் அன்றைய பிரிட்டிஸ்க்காரர்களால் வரையப்பட்டது. அதை கண்ணுறும் யாரும் மனங்கலங்கிப் போகும் ஆற்றல் படைத்த அந்த ஓவியத்தை ஒரு திரைச் சித்திரத்தின் வலிமையுடன் மேடையில் அரங்கேற்றினர் மகஇக குழுவினர்(இந்த நிகழ்ச்சி ஆக்கத்தில் பங்களித்தவர்கள் - மையம் கலைக்குழுவினர்). திப்புவை தேடி வரும் வெள்ளையர் மேடையில் நுழையும் பொழுது அதிரும் இசை நமது மனதில் இனம் புரியாத உணர்வுகளை ஏற்ப்படுத்தியது, கையில் தீப்பந்தத்துடன் சிகப்பு நிற ஒளி பின்னணியில் அவர்கள் குவிந்து கிடக்கும் பிணங்களை பிரட்டிப் போட்டு திப்புவை தேடி கண்ணுறும் பொழுது திப்புவின் மீது ஒளி வெள்ளம் பாய்கிறது. தீப்பந்தம் பிடித்திருக்கும் ஒரு வெள்ளையனின் மடியில் தலை சாய்ந்து கிடக்கிறார் திப்பு. அந்த ஓவியம் கண்முன்னே உயிர் பெற்று நிற்க்கிறது. அல்லா... என்று ஒரு குரல் துயரச் சுவையுடன் ஒலிக்கிறது, மனது பாரமாகிறது. என்ன கைமாறு செய்யப் போகிறோம் இந்த மன்னர் குலம் சாரா புரட்சிக்காரர்களின் தியாகத்துக்கு என்ற கேள்வி மனது முழுவதும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது. இதே போல வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்களின் வீர தியாகம் உணர்வு பொங்க இதே போல சித்தரிக்கப்பட்டது. மருது சகோதரர்கள் தூக்கில் தொங்கிய பிற்ப்பாடு அந்த ஒற்றை தூக்கு ஊசலாடுகிறது. மேடையின் பின்னணி இருட்டாக நம்மை பயமுறுத்துகிறது. தூக்கு கயிறின் வட்ட வடிவின் மீது ஒளி வெள்ளம் பாய்கிறது. ஒரு பெண்ணின் குரல் சோகம் ததும்ப பாடுகிறது.
"காளையார் கோயில் காட்டுகுள்ளே ரெண்டு கன்னி கழியாத மாமரங்க....." தட்டச்சு செய்ய வார்த்தைகளின்றி தடுமாறுகின்றன எனது விரல்கள். கணிணி திரையின் மேல் எனது கண்ணீர் திரையாக படர்கிறது. இது கண்ணீர் விடுவதற்க்கான காவியம் அல்ல என்று என் உள்மனம் என்னை எச்சரிக்கிறது. பகத்சிங்கின் தத்துவ தரிசனமும், கோர்ட் மேடையையே தனது பிரசங்கமாக பயன்படுத்திய அந்த வீரமும் தூக்கு மேடையை ஒரு துச்சமாக கருதிய தியாகமும் காவியமாக எந்தளவுக்கு வீச்சாக மேடையில் நிகழ்த்தப்பட்டதென்றால், பகத்சிங் முழங்கிய இன்குலாப் சிந்தாபாத் என்ற முழக்கத்தை பார்வையாளர்களிலிருந்த இளைஞர் கூட்டம் எதிரொலித்து முழங்கும் அளவு வீச்சான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்தது. மேடையில் குண்டூசி பொட்டால் கேட்க்கும் ஆழ்ந்த நிசப்தம். சிறிது நேரத்தில் சுதாரித்த கூட்டம் கரவொலிகளால் தனது பாராட்டுக்களை தெரிவித்தது. சீட்டு நுனிக்கு வந்தனர் என்று இதுவரை புத்தகங்களீல்தான் பாடித்திருக்கிறேன் அன்று என்னையும் உள்ளிட்டு பெரும்பாலோர் சீட்டு நுனியில் உட்கார்ந்திருந்ததை கண்ணுற்று உதடுகளுக்குள் சிரித்துக் கொண்டேன்.
இது தவிர்த்து ஜிம்ப்ளா மேளம், தமுறு மேளம், வில்லுப்பாட்டு, உடுக்கடிப் பாடல், தெருக்கூத்து என்று அந்த இரவே இருட்டை விரட்டிய இசை இரவாக மாறிப்போனது. மறுகாலனிய பண்பாட்டு படையெடுப்பில் மறக்கடிக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தின் தன்மான உணர்ச்சிகளையும், நேர்மையையும் வலுப்படுத்தும் முகமாகவும், புதிய உத்வேகத்துடன் ஏகாதிபத்தியத்தையும், பார்ப்ப்னியத்தையும் எதிர்க்கும் ஆற்றலையும் மனதில் ஏற்றிக் கொள்ளவும். பிழைப்புவாதம், அடிமைத்தனம் போன்ற உணர்ச்சிகளையே வாழ்வின் வெற்றிகரமானவையாக முன்வைக்கும் ஊடகங்களை காறி உமிழும் நெஞ்சு நேர்மையையும் வழங்கும் முகமாகவும் இந்த விழா இருந்தது. நிகழ்ச்சி முடிவடைந்த போது நேரம் இரவு 2.30. திரும்பி வந்த போது முழக்கங்களும் கருத்துக்களும் எனது எண்ணங்களை களமாக்கி கொண்டிருந்தன. இந்த நாட்டின் விடுதலையை தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பாக பகத்சிங் உணர்ந்திருந்தார் என்ற தோழர். மருதையனின் சொற்கள் என் மனதில் "நீ பொறுப்பானவன் தானா?" எனற கேள்வியாய் எதிரொலித்துக் கொண்டே இருந்த்து. அந்த கேள்வியை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன்..
"நீங்கள் பொறுப்பானவர்தானா?"அசுரன்