குறை கூலி தேசத்து சொப்பன சுந்தர/சுந்தரிகளே!
மேலும் உலகிலேயே மூன்றாவது குறைந்த கூலி இந்திய IT தொழிலாளி வாங்கினாலும் கூட எப்படி அது மிகப் பெரிய சம்பளமாக உள்ளது என்ற விசயத்தை கிழே உள்ள சுட்டியிலுள்ள கட்டுரை பேசுகிறது.
ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!
இதே நேரத்தில், 100% வருமானவரிச் சலுகை முதல் பல்வேறு சலுகைகளை அனுபவித்துக் கொண்டு கோடிகளில் லாபம் சம்பாதிக்கும் IT கம்பேனிகள் ஒரு எறும்புக் கடி போன்ற ரூபாயின் சிறு மதிப்புயர்வுக்கே சம்பளத்தில் கை வைக்க முடிவு செய்துவிட்டனர். ஒருவேளை நாளை இந்த சலுகைகளும் பறிக்கப்பட்டால் என்னாகும்....
அசுரன்
இந்த விசயங்கள் எல்லாம் சேர்ந்து உலகமய பொருளாதார அமைப்பில் பின்னி பிணைந்துள்ள அனைத்து வர்க்கங்களையும், அனோமிய் என்ற மனோநோய்க்கு இட்டுச் செல்கிறது. இந்த அனோமிய் பின்புலமாக கொண்டு ஏகாதிபத்திய சமூக அமைப்பை கலாச்சார, பண்பாட்டு தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு நாவல் எழுதியுள்ளார் பிரபாத்.
அதாகப்பட்டது, உலகமய பொருளாதாரத்தின் உடன் விளைவாக அது சார்ந்த உற்பத்தி உறவுகளில் ஈடுபட்டுள்ள மனிதர்களுக்கு வரும் மனோவியாதியை அடிப்படையாகக் கொண்டு சத்யம் கம்யுட்டரின் இணை நிறுவனர்(Co Founder) G.B. பிரபாத் ஒரு நாவல் எழுதியுள்ளார். அது குறித்து இந்து பத்திர்க்கையின் மெட்ரோப்ளஸ் அவரை அணுகி ஒரு சிறிய உரையாடல் ஒன்றை நடத்துகிறது. அந்த அனுபவம் ஒரு சிறு கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.
உலகமயத்தின் பலன்களை அனுபவித்தவர்களில் ஒருவரான அவர், உலகமயம் சார்ந்த சுரண்டல் பொருளாதாரத்தின் அடிப்படையில் இந்தியாவின் முகத்தை மாற்றியவர்களில் முக்கியமானவரான அவர், அதன் பின் விளைவுகள் அவருடன் உற்பத்தி ரீதியாக நெருங்கிய தொடர்புள்ள வர்க்கத்தினரையே(IT employee etc) பாதிப்பதை உணர்கிறார். ஆக, அந்த அம்சத்தில் உலகமயத்தின் மோசமான பக்கங்களை அம்பலப்படுத்துகிறார். உலகமய ஏகாதிபத்திய பொருளாதாரத்தை அவர் படு மோசமான அளவு விமர்சிப்பதாக மெட்ரோ ப்ளஸ் சொல்லுகிறது.
தரகு வர்க்க பிரபாத் சொல்கிறார்: "நான் பங்களித்து உருவாக்கிய ஒரு உலகம் எனது மனதை கவர்தாக இல்லை". "சில நேரங்களில் நம் நோக்கத்திற்க்கு மாறான விசயங்களை உருவாக்கி விடுகிறோம்".
யுப்பி கலாச்சாரமும், தனி மனித நுகர்வு வெறியும், ஒட்டு மொத்த சமூகத்தின் உயர் பண்புகள் அதலபாதளத்தில் புதைக்கப்பட்டும் உள்ள சூழலில் (இது பொதுவாக புரட்சிகர சூழலுக்கு முந்தைய சூழல்தான்) இது போன்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதில் அவரது தொழில் துறையின் பங்களிப்பை மதிப்பிட்டு கூறியவைதான் மேலெயுள்ள அவரது வரிகள்.
வேலைவாய்ப்பு, ஐந்திலக்க சம்பளம், சராசரியை விட சிறிது(சிறிது மட்டுமே) சுகமான(சுகாதாரமான அல்ல) வாழ்க்கை இவற்றை காரணம் காட்டி உலகமயத்திற்க்கு ஆதரவாகவும், தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களின் உரிமைகளுக்கான குரல்களுக்கு எதிராகவும் கோசமிடும் IT தொழிலாளர்களை இங்கு விவாதம் செய்ய அழைக்கிறேன். உங்களது துறையைச் சேர்ந்த முன்னணி வீரர் ஒருவர் வாயிலிருந்துதான் நாங்கள் சுட்டிக் காட்டும் அதே பிரச்சனைகள் பற்றிய அங்க்லாய்ப்பு வந்துள்ளது.
நாங்க சொன்னாக்க நம்ப மாட்டீங்க. இவர் சொல்றாரே என்ன சொல்லப் போறீங்க....?
'அமெரிக்காவின் மிகபரவலான நோய் - தனிமை' இது இந்தியாவில் இப்பொழுது பரவி வருகிறது என்கிறார் இவர். மேலும், 'இங்கு தனிமையில் இருப்பவர்கள் பெரும்பான்மையாகவும், பிறர் அவர்களிடமிருந்து துண்டிக்கப்பட்டும் உள்ளன்ர். இந்த புதிய சூழலுக்கு சரியான பெயர் வைக்க விரும்புகிறேன்' என்கிறார். தகவல் தொழில் நுட்ப வல்லுனர்கள் யாரேனும் இந்த பெயர் வைப்பு வைபவத்திலும் அவருக்கு உதவலாம்.
பொருள் நுகர்வு நாட்டம், கட்டவிழ்த்து விடப்பட்ட முதலாளித்துவம், தொழில்நுட்ப சாதனங்களைச் சார்ந்த ஒரு வாழ்க்கை இவை அனைத்தும் சேர்ந்து உருவாக்கும் ஒரு நிச்சயமற்ற சமுதாயம் குறித்த நிலையை சித்த்ரிக்கிறது அந்த நாவல். ஆயினும் இன்றைய இந்தியாவின் இளைய சமுதாயம் அப்படிப்பட்ட ஒரு சமூக வாழ்வை அடைவதைத்தான் லட்சியமாகக் கொண்டுள்ளனர்.
"ஆனால் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. அப்படி ஒரு நிலை இருப்பதை நாம் உணர்வதில்லை அல்லது அதிலிருந்து ஓடி ஒளிய விரும்புகிறோம். முரன்நகையாக, தகவல் தொடர்பின் உச்சத்தில் உள்ள ஒரு உலகத்தில், தனிமையும், அதீத அச்சமும், மனச் சஞ்சலுமும்தான் அதிகப்படியாக உணரப்படுகிறது. எந்த ஒரு உறவும் உத்திரவாதப்படுவதாக இல்லை." இப்படி சொல்வது நாம் அல்ல. ஏகாதிபத்தியத்தின் குலக் கொழுந்து திருவாளர் பிரபாத், சத்யம் இணை-நிறுவனர் கூறுகிறார்.
"அதிகப்படியான தனிமனித வாதம் நிலவுகிறது, முற்றுமுதலாக நாம் தனி மனித மோக வயப்பட்டுள்ளோம், நாம் இணையத்தின் மூலமாக ஒரே ஒரு நபரிடம் மட்டுமே தொடர்பு கொள்கிறோம் அது நாம்தான்' - இப்படி ஏகாதிபத்திய தனிமனித வாதத்தின் அவலத்தை அம்பலப்படுத்துகிறார் பிரபாத்.
"எனது தாத்தாவோ அல்லது உங்களது தாத்தாவோ தனது வேலையை இழந்து விடுவது குறித்தோ அல்லது தனது மனைவி தன்னைவிட்டு விலகிவிடுவது குறித்தோ கவலைப்பட்டதுண்டா?" இப்படி கேட்ப்பது நாமல்ல. இது போன்ற நிலையிலுள்ள வர்க்கத்தை சுரண்டி, கொழுத்த லாபம் சேர்க்கும் தரகு வர்க்க முதலாளி பிரபாத் கேட்க்கிறார்.
சொல்லுங்கள் IT தொழிலாளர்களே என்ன பதில் சொல்லலாம் என்று? பிரபாத் உங்களுக்கு உலகமயத்தின் நன்மைகள் பற்றி தெரியாது என்று அறீவுரை பகர்வோமா? தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு சாலவும் சிறந்த் ஒரு எதிர்காலம் ஒளிமயமாக காத்திருக்கிறது, உங்களது பயம் ஒரு துர் கனவு என்று ஆலோசனை சொல்லுவோமா? வேலை வாய்ப்பு குறித்து RBIயும் சொல்கிறது, உலகமயத்தின் சாரதிகளில் ஒருவரும் சொல்கிறார் இன்னுமா மயக்கம்?
அவர் தொழில்நுட்பம் முதலாளித்துவ/ஏகாதிபத்தியத்தின் கையில் மாட்டிக் கொண்டு படும் பாடு குறித்தும் குத்திக் காட்டுகிறார், "தொழில்நுட்பத்தை நாம் எப்படி கையாளுகிறோம் என்பதிலும் அதை வைத்து என்ன செய்ய விரும்புகிறோம் என்பதிலும் தான் விசயம் உள்ளது. தொழில்நுட்பம் என்பதை பொருத்தளவில் தன்னளவில் எந்த ஒரு நல்லது கெட்டதுகளை கொண்டிருப்பதில்லை."
முதலாளித்துவத்தின் இழி நிலை குறித்து அவர் மேலும் குறிப்பிடுகிறார். "முதாலாளித்துவத்தால் செலுத்தப்படும் தொழில் நுட்பம் குறித்து யாரேனும் எச்சரிக்கை செய்து கொண்டிருக்க வேண்டும்". "முதலாளித்துவம் நமது உள்ளுணர்வுகளை கட்டவிழ்த்து விடுகிறது, நாமோ நம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நம்க்கு தீங்கு விளைவிக்கும் என்றூ பார்க்கிறொம்'. இதே விசயத்தைத்தான் இயற்கையுடன் முரன்படும் ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் இரு கட்டுரையாக இங்கு பிரசுரிக்கப்பட்டது.
பிரபாத்தின் இந்த கட்டுரை கூட தனிமனித வாதத்தின் அடிப்படையில்தான் பிரச்சனையை அணுகுகிறது. அது எந்த அம்சத்திலும் உலகமய பொருளாதாரத்தில் ஆதாயமடையும் துறைகளில் ஏற்ப்படும் விளைவுகளை சித்தரிப்பதைத் தாண்டி, இதே பொருளாதாரம் இந்தியாவின் இதர பெரும்பான்மை மக்களின் வாழ்வை சுனாமியாக சூறையாடி இருப்பது குறித்து எதுவும் சொல்லுவதாக தெரியவில்லை.
நாம் எதை இழந்து எதை பெறுகிறீர்கள்? கணிணியுடன் இணைந்து அதன் ஒரு உறுப்பாக மாறி சொந்த வாழ்க்கையை இழப்பதுடன், சமூக வாழ்க்கையையும் இழந்து திக்கற்ற நிற்கிறோம். எந்த ஒரு தொழிலில் ஈடுபடுபவனுக்கும், அந்த தொழிலில் ஈடுபடும் உடல் உறுப்பு(கை, கால், விரல் etc) செய்யும் வேலைக்கேற்ற பாதிப்பை அடையும். அப்படியெனில் கணிணியின் ஒரு அங்கமாக மாறிப் போன நமது மூளைக்கு என்னவிதமான பாதிப்பு ஏற்ப்படுகிறது?
குறைந்த கூலி என்ற அம்சமும், இந்திய பணத்தின் மதிப்பு டாலருக்கு நிகராக குறைவாக இருப்பது இந்த அம்சங்கள் உண்மையாக இருக்கும் காலம் மட்டுமே நமது வேலை உத்திரவாதப்படுத்துகிறது. நமது மென்பொருள் தயாரிக்கும் திறமையல்ல மாறாக அவனுக்கு லாபம் தயாரித்துக் கொடுக்கும் திறமை-அதாவது குறைந்த கூலி- இதுதான் மதிக்கப்படுகிறது. இது தவிர்த்து உலக பொருளாதார சூழல், நம்மைவிட குறை கூலி உழைப்பை வழங்க தயாராயிருக்கும் வேறு நாடுகள், உள்நாட்டிலேயே வெளி நாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வழி வகுக்கும் SEZ. இப்படி கண் முன்னே நமது உரிமைகளை குழி பறிக்க தேவையான விசயங்கள் நடக்கும் போது கூட சுகநாட்ட வாதத்தில் மூழ்கி திளைத்து நிதர்சனத்தை உள்வாங்கும் திறன் இழந்து நிற்கிறோமே என்ன செய்யலாம்?
வார இறுதி நாட்களிலும் வேலை, IBM-ன் யுட்டலிசேசன் டார்கெட்(90% மேல் ஒவ்வொரு நபரும் billable ஆக இருக்க முயற்சி செய்ய வேண்டும்), விப்ரோவின் மாணவ தொழிலாளர்கள், இப்படி நமது உழைப்பை சுரண்டி கோடிகளில் குளீர் காயுபவர்கள், கம்பேனியின் ஒரு துறையில் லாபம் இல்லையென்றவுடன் சம்பளத்தை குறைப்பதும் நடக்கிறது. கம்பேனி ஒட்டு மொத்தமாக லாபம் எடுக்கும் போதே இவ்வாறு எனில் இந்திய தொழிலாளர்கள் இனிமேலும் அவர்களின் டார்லிங்குகள் கிடையாது என்ற நிலை வரும் பொழுது என்ன செய்வார்கள்? இது தவிர்த்து பல்வேறு உடல் உபாதைகள் வேறு.
நம்மை விட அதிக உரிமைகளை சட்ட ரீதியாக பெற்றுள்ள அமெரிக்க தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூட இந்த கம்பேனிகளின் அநியாயங்களை எதிர்த்து போரிடுவதற்க்கு சங்கமாக திரண்டுள்ளனர். அதுவும் அமெரிக்க கார்ப்போரேட் வரலாற்றில் முதல் முறையாக IBM IT (Alliance@IBM) தொழிலாளர்கள் சங்கமாக திரண்டு பென்சன் பணத்தில் அவன் கைவைப்பதை எதிர்த்து போராடி வெற்றி பெற்றுள்ளனர். உரிமைகள் உத்திரவாதமான அவர்களுக்கே சங்கம் தேவைப்படுகிறது, நமக்கு?
IT தொழிலாளிக்கு எதிராக எப்படியெல்லாம் ஆப்பு வைப்பது, சுரண்டலை அதிகப்படுத்தி எப்படியெல்லாம் லாபத்தை அதிகப்படுத்துவது என்பது குறித்து கலந்து பேசி ஒரு பொது முடிவுக்கு வருவதற்க்கு IT முதலாளி சங்கமாக திரள்கிறான்(NASCOM, CII). National Skills Registry என்ற பெயரில் நமக்கு அடையாள எண் கொடுத்து மையப்படுத்தப்பட்ட ஒரு தகவல் கிடங்கை ஏற்படுத்தியுள்ளான். தேவைப்பட்டால் இந்தியாவின் எந்த ஒரு IT தொழிலாளி மீதும் கரும் புள்ளி குத்தி இந்தியாவில் அவனுக்கு எந்த இடத்திலும் வேலை கிடைக்க விடாமல் செய்யலாம். ஆக, எதிர்காலத்தில் IT தொழிலாளி மீது அவனுக்கு ஆதிக்கம் தேவைப்படும் என்பதை உணர்ந்து இப்பொழ்து தயாராகிறான் அவன். நாமோ பலி ஆடுக்கு நல்லா தீவனம் கிடைக்கிறது என்று தேமேவென்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எதை இழந்து எதை பெறுகிறோம்? நமது பெற்றோர்கள் அரசு நிறுவனங்களில் வேலை பார்த்து ரிடையர் ஆகி வெளி வரும் பொழுது பெண்ணின் திருமணம், பையனின் படிப்பு, அது போக குறிப்பிடத் தகுந்த பென்சன், கையில் ஒரு பெரிய தொகை, இவை தவிர்த்து வீடு வாசல் அமைதியான வாழ்க்கை, உடல் ஆரோக்கியம் என்று இருந்தார்கள். நமது நிலைமை?
இந்த அம்சங்களையேல்லாம் விளக்கி ஒரு கட்டுரை ஆறேழு மாதங்களுக்கு முன்பு வந்து மிகப் பரவலாக அனைவராலும் மெயிலில் அனுப்பட்டது.
இதை விடுங்கள் ஒரு சமூகமே சீரழிந்து கொண்டிருக்கும் பொழுது, நாம் மட்டும் நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்திட முடியுமா? கார்போரேட் லெசன் என்ற பெயரில் சிறு கதைகள் அடங்கிய ஒரு இமேயிலை பெரும்பாலனவர்கள் படித்திருப்பீர்க்ள். அதில் குழுவில் ஒருவருக்கு பிரச்சனை வரும் பொழுது நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது நமக்கும் ஆபத்து வரும் பொழுது பேரிடராக இருக்கும் என்பதை வலியுறுத்தி ஒரு கதை வரும். இந்த சமூகம் ஒரு குழுவாக இணைந்து ஒவ்வோரு மனிதனின் தேவைகளை நிவர்த்தி செய்ய உற்பத்தி செய்கிறது. இதில் சமூகத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெரும்பகுதி துன்பத்தில் துவளும் பொழுது நாம் மட்டும் எப்படி ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட முடியும்?
என்ன செய்யலாம்? க்ளையண்டின் பிரச்சனைகளை ஆய்வு செய்து தீர்வு சொன்ன நேரம் போக நமது பிரச்சனைகளையும் ஆய்வு செய்து தீர்வு குறித்து யோசிக்கலாம். After all, மற்ற யாரையும் விட சிந்திக்கும் திறமையிலும், அதற்க்கு தேவையான தகவலகளின் அருகாமையிலும் நாம் ஒரு சிறப்பான இடத்தில் இருக்கிறோம். பிரச்சனை நம்மை பற்றி சிந்திக்க நமக்குக் கிடைக்கும் சொற்ப நேரம்தான்......
என்ன செய்யலாம்?.....
அசுரன்
***********
அனோமிய் நோய் குறித்து:
ஒவ்வொரு சமூகமும், மனிதனும் தான் ஈடுபட்டுள்ள உற்பத்தியின் தன்மையைப் பொறுத்த அறிவு, மனவள முதிர்ச்சி அடைகிறான். இதுதான் சமூக பரிணாமத்துவம் குறித்த மார்க்ஸிய பொருள்முதல்வாதப் பார்வை. ஆக, ஏகாதிபத்திய சமூகத்தில் ஒரு பக்கம் நுகர்வு வெறி மூலமாகவும், இன்னொரு பக்கம் அதிகப்படியான சுரண்டல் மூலமாகவும்(12 மணீ நேரம் வேலை) சமூகத்துடனான தொடர்பை இழக்கிறான் மனிதன். அதே நேரத்தில் நுகர்வு வெறியை நியாயப்படுத்தவும், சமுகமாக தன்னை உணர்ந்து கூட்டுச் சேர்வதற்க்கான அடிப்படைகளை அடித்து நொறுக்கவும் தேவையான பல்வேறு பொதுக் கருத்துக்களை அவனது ஊடக பலத்தின் மூலம் உறுதிப் படுத்துகிறான். அப்படி ஒன்றுதான் தனிமனித வாதம். இதன் காரணமாக முந்தைய சமூகத்தின் மதிப்புவாயந்த பண்புகள் இன்று இழிச்சவாயத்தனமாகவும், முட்டாள்தனமாகவும் பார்க்கப்படுகிறது. விளைவு, இந்த சூழலிலான உற்பத்தியில் ஈடுபடும் ஒரு மனிதன் தனது பழைய உயர் மதிப்புகளை இழக்கிறான். இவை தவிர்த்து இந்த சூழல் உருவாக்கும் கலாச்சார பிரச்சனைகளும், தொழில் ரீதியான பிரச்சனைகளும், உடல், மன உபாதைகளும் சேர்ந்து உருவாக்கும் ஒரு மனோ வியாதிதான் - அனொமிய்.
"Alienation and purposelessness experienced by a person or a class as a result of a lack of standards, values, or ideals" - Anomie(அனொமிய்)
"தரம் தாழ்ந்த நிலை, உயர் பண்புகளை இழத்தல் இவற்றின் விளைவாக ஏற்ப்படும் அந்நியப்படுதலும், எந்த ஒரு குறிப்பிட்ட லட்சியமோ/நோக்கமோ அற்ற வாழ்க்கையும் ஏற்ப்படுத்தும் மனவியல் பிரச்சனை" - அனோமிய் எனப்ப்டுகிறது.
Must Read articles:
IBM IT union
software_job_india
workers-of-cyber-world-uniteatleast
corporate-lesson-secret-of-dreaming
it-survivors-staying-alive-in-software
are-we-living-at-mercy-of-their-profit
still-sleaping-jobs-started-flying
இயற்கையின் அழிவில் இன்பம் காண்போம் - பாகம் 1
அழிவில் லாபமும், லாபத்தால் அழிவும் - பாகம் II
கணிணி தொழில்நுட்ப வல்லுனர்களே !
இது குறித்து கருத்துக்களை ஆலோசனைகளை எனக்கு தனிமடலிலும் அனுப்பலாம்: