பல் இல்லாத பாம்பை அடிப்பியா, இல்ல பாம்பாட்டியை அடிப்பியா?
ஆதார் அட்டை (அது அட்டையா எண்ணா என்பதையே குழப்பி விடுகிறார்கள் வேண்டுமென்றே) சட்டவிரோதமானது என்பதையும், அது கட்டயமாக்கப்படுவதை எதிர்த்தும் தொடுக்கப்பட்ட வழக்கில் ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
உளவுத் துறை தலைவன் நீல்கேனி
வழக்கு விவரங்கள் வினவில் உள்ளன. சுருக்கமாக உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் மத்திய அரசின் பாதி உண்மை, பாதி பொய் கலந்த பிரச்சாரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் இல்லாமல் நந்தன் நீல்கேனி மூலம் ஒரு நிறுவனத்தை உருவாக்கி, 122 கோடி மக்களுக்கு அடையாள அட்டை வழங்குகிறேன் என பிரச்சாரம் செய்து இதற்காக சுமார்ரூ. 50,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை.
ஆதார் என்பது 12 டிஜிட் அடையாள எண் தான். இதனால் எந்த அட்டையையும் வழங்க மாட்டோம் என்ற உண்மையை கூட மக்களுக்கு அரசாங்கம் சொல்லவில்லை. ’ஆதார்’ ஒரு அடையாள அட்டை என பிரச்சாரம் செய்து, மானியம், கேஸ் சிலிண்டர் அது இருந்தால் தான் கிடைக்கும் என மக்களை அச்சுறுத்தி இத்திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. மக்களை உளவு பார்க்க மட்டுமே ஆதார் அடையாளம் பயன்படும்.
சரி இதில் பாம்பும், பல்லும் எங்கே வந்தது. உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்தான் மேற்படி பல்லில்லாத பாம்பு. உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கிவிடவில்லை. மாறாக ஆரம்ப கட்ட விவரங்களின் அடிப்படையில் ஆதார் அட்டை சட்ட விரோதமானது, அரசியலமைப்புச் சட்டங்களுக்கு எதிரானது என்பது உறுதிப்பட்ட நிலையில் அதனை மக்களுக்கு கட்டாயமாக்கக் கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இதற்கே அரசு தைய தக்க என்று குதியாட்டம் போட்டு நீதிமன்றத்தை மிரட்டியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் ஆதார் அட்டை உத்திரவை ரத்து செய்யக் கோரியும், குற்றப் பிண்ணனி கொண்டவர்கள் தேர்தலில் பங்கெடுப்பது, 49 O வை ஒரு பட்டனாக வோட்டுப் பெட்டியில் இணைப்பது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிய உச்சநீதிமன்ற உத்திரவை ரத்து செய்யக் கோரியும் மத்திய அரசு மனு கொடுத்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது உச்சநீதிமன்றம் அநாவசியமாக அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவதாக அரசால் சுட்டிக் காட்டப்பட்டது. இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை என்பதுதான் அரசின் கருத்து. மேலும், மேற்படி விவகாரங்களில் உச்சநீதிமன்றத்தின் எந்த முடிவையும் குப்பை கூடையில் வீசும் வகையில் சட்டம் இயற்றவதற்கான வேலைகள் அமைச்சரவையில் நடந்துவருவதும் விவாதிக்கப்பட்டது. இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முரன்நகையாக இப்படி குறிப்பிட்டனர் "You have the ordinance route also. If you have a law this case becomes irrelevant.' அதாவது, 'சட்டம் போட்டுட்டா நீதிமன்ற வழக்கு ஒன்னுமில்லா போயிரும் இல்லையா' என்று கேட்டுள்ளனர்.
இப்படியாக பாம்புக்கு பல் இல்லை என்பதை ஒரு வழியாக ஒத்துக் கொண்டார்கள். அணு ஒப்பந்தம் தவறு என்று நீதிமன்ற படியேறினால், அது வெளியுறவு கொள்கை முடிவு அதில் நாடாளுமன்றத்திற்கே அதிகாரமில்லை பிறகல்லவா உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் என்றனர். இப்போ ஆதார் எண், தேர்தல் சீர்திருத்தம் பற்றிய வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு அரசின் கொள்கை முடிவுகளிலே தலையிடுவதற்கு அதிகாரமில்லை என்கின்றனர். இப்படியெல்லாம் நீட்டி முழக்க வேண்டாம் என்றுதான் நேரடியாக எங்களுக்கு பல் இல்லை என்று அறிவித்து விட்டனர் நீதிபதிகள்.
பல்லில்லாதா பாம்பு
ஆனாப் பாருங்க நம்ம ஜனங்க சரியா பழக்கப்படுத்தினா இந்த பாம்பு கொத்தி கொன்றும்னு இன்னும் நம்பிட்டு திரியுதுங்க. இந்த பாம்பு புஸ் புஸ் என்று கார்போரேசன் குழாய் மாதிரி சவுண்டு மட்டும்தான் விடும் எனும் போது பாம்பை நொந்து என்ன பயன்? பாம்பாட்டியை அல்லவா நொங்கெடுக்க வேண்டும்?
அசுரன்