TerrorisminFocus

Wednesday, May 30, 2007

இத எப்படி புரிஞ்சிக்கலாம்னு நீங்களே சொல்லுங்க!

அடங்க மறு! அத்து மீறு! என்று சொன்னவர். சட்டமன்றத்தை சாக்கடையுடன் ஒப்பிட்டு கண்டனம் செய்தவர். அதே கேடு கெட்ட பாதையில் விழுந்து இன்று ஒரு NGOவாக, ஒரு செட்டில்மெண்ட் குழுவாக திரிந்துவிட்டதை எப்படி பார்ப்பது?

பார்ப்பனியத்தை எதிர்த்து களத்தில் போராடிய கரங்கள், கும்பமேளா மரியாதையை சிரம் தாழ்த்தி வாங்கிய பெருமை என்ன.


ஊருக்கு குறைந்தது ஒரு தலித் என்ற அளவில் ரத்தம் சிந்தி புடம் போட்டு வளர்த்த சிறுத்தைகளின் பாசறை இன்று ரவுடிகளின் தொழுவம் ஆன சீரழிவு என்ன.


இந்தியா முழுவதும் தலித் தலைவர்கள் பார்ப்பனிய பீடத்தை அலங்கரிக்க - தலித் மக்களோ.... மறுகாலனியாதிக்க பீடையில் மாட்டி விழி பிதுங்குகிறார்கள்.


தலித்தியம்? அதன் வரம்புகள் என்ன? அதன் உண்மையான சித்தாந்த சார்பு என்ன?


அம்பேத்காரின் கறுப்பு பார்ப்பனர்கள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறார்கள்.


நன்றி கீற்று


தமிழக சிறுத்தைகள் காதை:

""""

அய்யாசாமி: இதுக்கிடையில விடுதலை சிறுத்தையில இருக்குற எங்க சொந்தக்காரன் ஊத்தங்கால் சண்முகம் ஒருநாள் வந்தான். இந்தாங்க அண்ணன் (திருமாவள வன்) பேசறார்னு செல்போனை என்கிட்ட கொடுத்தான். கேஸ் அதுஇதுன்னு விசயத்தை பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்னார். எனக்கு திகீர்னு ஆயிருச்சு. என்ன இப்படி சொல்றீங்கன்னு கேட்டேன். அன்புமணி மூலமா ரொம்ப பிரஷர் தர்றாங்க... நீங்கதான் பக்குவமா முடிவெடுக்கனும்னு அவர் சொன்னதை என்னால நம்பவே முடியல. நான் போனை எங்கண்ணன் சாமிக்கண்ணுகிட்ட கொடுத்தேன்.


சாமிக்கண்ணு: வழக்கை வாபஸ் வாங்கிடுங்கன்னார் திருமாவளவன். அதெல்லாம் வக்கீல் ஐயாதான் முடிவெ டுக்கனும்னு சொன்னேன். வழக்கு போட்டது நீங்க. இதுல வக்கிலுக்கு என்ன வேலை நடுவுல? நீங்க முடி வெடுங்க. ஒத்துக்கிட்டா பணம்கூட கணிசமா தர்றதா சொல்றாங்கன்னார் அவர். காசு வரும். எம்புள்ள வரு மான்னு கேட்டுட்டு போனை கட் பண்ணிட்டேன். அப்புறம் ஐயாவுக்கு போன்போட்டு விசயத்த சொன் னோம். அவர் இந்தப்பையன் சண்முகத்தைப் பிடித்து சத்தம் போட்டார். இந்த மாதிரி கட்டப்பஞ்சாயத்து வேலை செய்யற நெனப்பிருந்தா சொந்தக்காரன்னும் பாக்கமாட்டம்னு நாங்களும் திட்டி அவனை தொரத்தியுட்டடீம்.

""""


""""

அய்யாசாமி: அதுக்கப்புறம் விசாரிச்சதுல தெரிஞ்சது என்னன்னா, எங்காளுங்க நாலுபேர் மேலயும் கேஸ் போடறதுக்கு ஐடியா கொடுத்ததே விடுதலை சிறுத்தை கடலூர் மாவட்ட அமைப்பாளர் கருப்புசாமிதானாம். எங்க மேலயும் கேஸ்போட்டாத்தான் பயந்துபோய் பேச்சுவார்த்தைக்கு வருவோம்னு இந்த ஏற்பாடு. அப்பு றம் ஒருநாள் வி.சி. மாநில விவசாய அணி செயலாளர் திருச்சி கிட்டு கோர்ட்டுக்கே வந்து எங்ககிட்ட சமாதா னமா போகச் சொல்லி பேசினார். நாங்க முடியாதுன்னு சத்தம் போட்டு அனுப்பிட்டடீம். பிறகு நெய்வேலி சிந்தனைச் செல்வன்.

"""


ஒரு வேளை இந்த கட்டுரை உதவலாம்:

கயரலாஞ்சி காட்டும் பேருண்மைகள் - உலகமயம் - தலித்தியம் - தலித் விடுதலை


அசுரன்

அம்பேத்கர் என்ன சொல்கிறார்?

..........
..........
நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை. சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம் இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம் கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில் இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க மாட்டேன். இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)

நன்றி: கீற்று

பற்றி படரும் மறுகாலனிய எதிர்ப்பு போர்!

ந்தியா முழுவதும் மறுகாலனிய திட்டங்களை எதிர்த்து மக்கள் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டங்கள் இரண்டு வடிவங்களில் பெரும்பாலும் முன் வருகின்றன. ஒன்று தங்களையே அழித்துக் கொள்வது, அதாவது தற்கொலை. மஹாராஸ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா என்று தொடரும் இந்த தற்கொலை சாவுகள் மறுகாலனியத்தை எதிர்க்கும் மக்களின் ஒரு வகையான மனப்போக்கை காட்டுகின்றன. கரும்பு விவசாயிகளின் தற்கொலை பூமியாக மாறிப் போன வட கர்நாடகவிற்க்கு மோசடி நாடகம் நடத்த சென்ற முதலமைச்சர் குமாரசாமி பின்வருமாறு ஸ்டேட்மென்ட் விட்டார்: "இன்னும் ஒரேயொரு விவசாயி இங்கு தற்கொலை செய்தால் கூட நான் என் பதவியை ராஜினாமா செய்வேன்'.

வானில் ஏறிய அவருடைய ஹெலிகாப்டர் கீழிறங்கும் முன்பாக அங்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார், வழக்கம் போல கள்ளமௌனம் சாதிக்கிறது ஆளும் வர்க்கம். இந்த கோமாளித்தனங்களை செய்வதில் ஆர்வமில்லாத மன்மோகன் சிங் விதர்பாவிற்க்கு சென்றிருந்த அன்றே 8 பேர் கிட்ட தற்கொலை செய்தனர். அது குறித்து கருத்து கூட சொல்லவில்லை சோசலிஸ்டு பொருளாதார நிபுனர், மனிதாபிமானி மன்(னு)மோகன் சிங்.

இன்னொரு வகையான போராட்டமும் இதே இந்தியாவில் கருக் கொண்டு வெளிவரத் துவங்கியுள்ளது. அரசுடன் நேரடியாக மோதுவது அதுவும் ஆயுதம் தாங்கி மோதுவது என்ற வகையீனத்தை சேர்ந்தது அந்த போராட்டம். இந்த ஒரு மாதத்தில் மட்டும் பன்னாட்டு இரும்பு ஆலையை எதிர்த்து ஒரிஸ்ஸா கலிங்காநகர் மக்கள் இருமுறை அந்த கம்பேனியின் பிரதிநிதிகளை கடத்தி சென்றுள்ளனர், நந்திகிராமத்தில் மீண்டும் ஒரு மோதல் நடந்தேறியுள்ளது, ரிலையன்ஸை எதிர்த்து ராஞ்சியில் போராடிய சில்லறை வணிகர்கள் நேரடியாக களத்தில் இறங்கி ரிலையன்ஸ் கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர், புதுச்சேரியில் தேங்காய்திட்டில் அரசு அலுவலகத்தை தாக்கி நொறுக்கியுள்ளனர் மக்கள். இது தவிர்த்து பஞ்சாப் முதல் பல இடங்களிலும் SEZக்களை எதிர்த்து மக்கள் நேரடியாக அரசு இயந்திரத்தை எதிர்த்து கையில் கிடைத்ததை வைத்து போராடி வருகிறார்கள்.

இவையனைத்தும் எந்த ஒரு அமைப்பும் களத்தில் இறங்கி அணி திரட்டி நடத்திய போரட்டங்கள் அல்ல. இன்னும் சொன்னால் பிரிட்டிஷ் நேரடி காலனியாதிக்கத்தின் கொடுமைகளை எதிர்த்து மக்கள் அனாமத்தாக ஆங்காங்கே போராடி வந்தது போலவே இன்றும் ஆதரித்து வழி நடத்த ஆளின்றி ஆங்காங்கே போராடி வருகின்றனர் மக்கள்.

இந்த சூழலில் மக்கள் நலன் விரும்புபவர்களின் கடமையாக இந்த போராட்டங்களை அமைப்பாக்கி உண்மையான பொது எதிரியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி முன் கொண்டு செல்வதாக உள்ளது. போன நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் இந்தியா என்ன நிலைமைகளில் இருந்ததோ அதே நிலைமைகள் இன்றும் உள்ளன. ஆனால் போன நூற்றாண்டில் இந்த போராட்டங்களை முன்னெடுத்து செல்ல தவறிய அதே தவறுகளும் தடைகளும் கூட இன்றும் நிலவுவதுதான் வெட்கக்கேடான விசயம்.

அருந்ததிராய் பெங்களூர் வந்த பொழுதும், அதற்கு முன்பு நந்திகிராமத்தில் பாசிச CPM செய்த அட்டுழியங்களை ஒட்டியும் முன் வைத்த கருத்துக்கள் செவ்வுளில் அறைந்தது போல இன்னும் இன்னும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. "இந்த அரசு ஒரு போலீசு அரசாக மாறிவிட்டது. மக்கள் பிரச்சனைகளுக்கான நியாயமான ஜனநாயாக வழிப்பட்ட போராட்டங்களுக்கான எல்லா கதவுகளையும் இந்த அரசு மூடி அறைந்து சாற்றிவிட்டது. இதன் மூலம் இந்தியாவின் எல்லா இடங்களிலும் காஷ்மீர்களையும், வடகிழக்கு மாகணங்களையும் உருவாக்கி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு வன்முறை எல்லா வடிவங்களிலும் வெளிவரும், கிரிமினல்மயமாக, கழிசடைத்தனமாக, புரட்சிகரமாக என்று. இது அரசே உருவாக்கிய ஒரு சூழல். இதற்கு இந்த அரசுதான் முழுப் பொறுப்பேற்க்க வேண்டும்." (அருந்ததிராய் சொன்னதில் ஞாபகத்தில் இருந்ததை வைத்து எழுதுகிறேன்).

இதோ புதுச்சேரி தேங்காய்திட்டு போராட்டம் குறித்த கட்டுரை புதியஜனநாயகத்தில் வந்ததை இங்கு மறுபிரசூரம் செய்கிறேன். இதனை பிரசூரித்த தமிழரங்கம் வலைத்தளத்திற்க்கு நன்றிகள்.

***************

அரசின் நிலப்பறி புதுவை மக்களின் போர்க்கோலம்


தேங்காய் திட்டு: அரசின் நிலப்பறி

புதுவை மக்களின் போர்க்கோலம்


விளை நிலங்களைப் பறித்து, பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கத் துடித்த மே.வங்க போலி கம்யூனிச அரசுக்கு எதிராக, நந்திகிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் இடியோசை ஓயும் முன்பே, அதன் எதிரொலி போல புதுச்சேரி மாநிலத்தில் துறைமுக விரிவாக்கத்திற்காக விளைநிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து நிற்கும் தேங்காய்திட்டு கிராம மக்களின் போராட்டம் தொடர்கிறது.

புதுவையில் தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் காங்கிரசு ஆட்சி நடத்தி வருகின்றது. நாடு முழுவதும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி, நாட்டைப் பன்னாட்டுக் கம்பெனிகளின் வேட்டைக்காடாக மாற்றிவரும் காங்கிரசு கும்பல், தாங்கள் ஆளும் புதுச்சேரியில் மட்டும் அதனைச் செயல்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன? பன்னாட்டு ஏகபோக முதலாளிகளே வியக்கும் வண்ணம் நான்கு பகாசுரத் திட்டங்கள் மூலம் புதுவை மாநிலத்தையே கூறுபோட்டு விற்கும் முயற்சியில் அம்மாநில அரசு இறங்கியுள்ளது. இதன்படி மிகச்சிறிய புதுவை மாநிலத்தில் இரண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், இரண்டு துணை நகரங்கள், துறைமுக விரிவாக்கம், விமான நிலைய விரிவாக்கம் என ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை விழுங்கக்கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, இவற்றுக்கென நிலங்களை ஆக்கிரமிக்கும் வேலைகளும் தொடங்கிவிட்டன.

இப்பகாசுரத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் புதுவை மாநில மக்களில் பெரும்பாலோர் வீடிழந்து, நிலமிழந்து, வாழ்விழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாகும் பேரபாயம் நேரிடும். விவசாயமும்விவசாயிகளும், மீனவர்களும்மீன்பிடித் தொழிலும், கடற்கரையும் நீராதாரங்களும் நாசமாகும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

புதுச்சேரி கடற்கரைப் பகுதி அதிக ஆழமில்லாததால், இதுவரை புயல் கரையைக் கடக்காத மாநிலமாக புதுச்சேரி இருந்து வருகிறது. துறைமுக விரிவாக்கம் என்ற பெயரால் 400 மீட்டர் அகலம் 20 மீட்டர் ஆழத்துக்கு மணல் அகற்றப்பட்டால் இனிவரும் காலங்களில் புயல் மிக எளிதில் இப்பகுதியைத் தாக்கும். மேலும், கடற்கரை ஆழப்படுத்தப்பட்டால் கடல்நீரின் அழுத்தம் அதிகரித்து, நிலத்தடி நீரானது முற்றிலும் உப்புநீராகிப் போகும். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, உப்பு நீரால் விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்படும். சரக்குக் கப்பல்களுக்குத் தேவைப்படும் இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் புதுச்சேரியில் உறிஞ்சி எடுக்கப்பட்டால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து நிலம் பாலைவனமாகி, அப்பகுதியெங்கும் வெப்பம் அதிகரிக்கும். துறைமுக விரிவாக்கத் திட்டத்தின்படி, இலட்சக்கணக்கான டன்கள் அளவுக்கு மலைபோல நிலக்கரி மற்றும் இரும்புக் கழிவுகள் இறக்குமதியாகி குவிக்கப்பட்டால், அதன் துகள்கள் காற்றில் பறந்து மக்களுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

இத்திட்டங்களால் விளைநிலங்கள் பறிக்கப்பட்டு, விவசாயிகள் நாடோடிகளாக அலைய வேண்டிய அவலநிலை ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால் தரகுப் பெருமுதலாளிகளும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் சூறையாடுவதற்கென்றே உருவாகியுள்ள இத்திட்டங்களால் புதுச்சேரி மாநிலமே சுடுகாடாகிப் போகும். இவற்றைப் படிப்படியாக உணரத் தொடங்கியுள்ள புதுச்சேரி மாநில உழைக்கும் மக்கள், தமது போர்க்குணமிக்க போராட்டங்களால் அம்மாநிலத்தையே அதிர வைத்து வருகின்றனர்.

உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் பகற்கொள்ளை சூறையாடலுக்கென்றே "வளர்ச்சி'யின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள திட்டங்களுள் ஒன்றுதான் துறைமுக விரிவாக்கத்திட்டம். ரூ. 2,600 கோடி மதிப்பிலான இத்திட்டம் ""பாண்டிச்சேரி போர்ட் லிமிடெட்'' என்ற தனியார் கம்பெனியிடம் கடந்த பிப்ரவரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறைமுக விரிவாக்கத் திட்டத்தால், ஏறத்தாழ 300 ஏக்கர் விளைநிலங்கள் பறிக்கப்படவுள்ள கிராமம்தான் தேங்காய்திட்டு.
தங்களது வீடும் நிலமும் வாழ்வுரிமையும் பறிக்கப்படுவதைக் கண்டு பீதியடைந்த இக்கிராம மக்கள், இத்திட்டத்தைக் கைவிடக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து போராடினார்கள். வீடுகளில் கருப்புக் கொடியேற்றியும், உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தும், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை நடத்திய கூட்டத்தில் இத்திட்டத்திற்கு எதிர்த்து தெரிவித்தும் கூட ஆட்சியாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த மார்ச் 18ஆம் தேதியன்று துறைமுகப் பகுதியிலும் அரசு புறம்போக்கு பகுதியிலும் ஆரம்பகட்ட வேலைகளை ""பாண்டிச்சேரி போர்ட் லிமிடெட்'' நிறுவனம் தொடங்கியது. துறைமுகப் பகுதியிலுள்ள நீண்ட சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டு பணிகள் தொடங்கிவிட்டதை அறிந்த தேங்காய் திட்டு கிராம மக்கள் ஆவேசமடைந்து, அத்தனியார் நிறுவனத்தின் பெயர் பலகையை உடைத்தெறிந்து, அந்நிறுவனத்தின் அலுவலகத்தைச் சூறையாடினர். பின்னர், துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்த்து தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர். சுற்றுச்சூழல் துறையின் அனுமதியின்றி பணிகளைத் தொடங்கிய தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, தேங்காய்திட்டு கிராம மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டனர்.

இத்தனைக்கும் பின்னரும் இத்துறைமுக விரிவாக்கத் திட்டத்தை காங்கிரசு அரசு கைவிடாத நிலையில், தேங்காய் திட்டு கிராம மக்கள் ""நில ஆர்ஜித எதிர்ப்புக் குழு''வைக் கட்டியமைத்து அதன் தலைமையில் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் ஆதரவு கோரியதோடு, அரசைக் கண்டித்து தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மூலம் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அதைத் தொடர்ந்து மார்ச் 27ஆம் தேதியன்று துறைமுக விரிவாக்கத்தை கைவிடமறுக்கும் அரசை எதிர்த்து, சட்டமன்றத்தை முற்றுகையிட்டு தமது ரேஷன் கார்டு நகல்களை ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்தனர். இப்போராட்டத்தை ஆதரித்து முதலியார்பேட்டை வியாபாரிகள் நலச் சங்கத்தினர் அந்நாளில் அப்பகுதியெங்கும் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றினர். மார்ச் 27ஆம் நாளன்று தேங்காய்திட்டு கிராம மக்கள் மட்டுமின்றி, வியாபாரிகள், அறிவுத்துறையினர், மாணவர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் திரள ஏறத்தாழ 5000 பேர் பங்கேற்ற மாபெரும் பேரணி சட்டமன்றத்தை நோக்கி விண்ணதிரும் முழக்கங்களுடன் முன்னேறியது. வழியிலேயே அவர்கள் போலீசாரால் மறிக்கப்பட்டு ஏறத்தாழ 1500 பேர் கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்தும், துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்தும் உழைக்கும் மக்கள் தமது ரேசன் கார்டு நகல்களை தீயிட்டுக் கொளுத்தி முழக்கமிட்டனர்.

மக்களின் உறுதிமிக்க இப்போராட்டங்களைக் கண்டு ஆத்திரமடைந்த துறைமுகத்துறை அமைச்சரான வல்சராஜ், ""எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் இத்திட்டத்தை கண்டிப்பாக நிறைவேற்றியே தீருவோம்; மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்'' என்று மே.வங்க பாசிச முதல்வர் புத்ததேவ் வழியில் சட்டமன்றத்திலேயே கொக்கரித்தார். மேலும் போராடிய மக்களைத் தரக் குறைவான வார்த்தைகளால் ஏசி, போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி திமிராகச் சாடினார். இதைக் கண்டு வெகுண்டெழுந்த தேங்காய்திட்டு கிராம மக்கள், அமைச்சர் வல்சராஜ் வீட்டை முற்றுகையிட்டு போராடத் தீர்மானித்தனர். இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இத்திட்டம் கசிந்துவிட, அரண்டுபோன புதுவை அரசு, அமைச்சர் வல்சராஜ் வீட்டுக்கு மூன்று அடுக்கு போலீசு பாதுகாப்பு போட்டது. இதனால் கிராம மக்கள் இம்முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு அமைச்சரின் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.

திட்டமிட்டபடியே ஏப்ரல் 13ஆம் நாளன்று தாரை தப்பட்டைகள் முழங்க, அமைச்சரின் கொடும்பாவியை அலங்கார சவப்பாடையில் ஏற்றி கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பெண்கள் ஒப்பாரி வைக்க, இளைஞர்கள் பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் இக்கொடும்பாவி பாடையை தூக்கி வந்தனர். தகவலறிந்து முதலியார்பேட்டை போலீசு நிலைய ஆய்வாளர் ரவிக்குமார், பெரும்படையுடன் போலீசை திரட்டி வந்து ஊர்வலத்தைத் தடுத்ததோடு பெண்களை ஆபாசமாகத் திட்டினார். ஆவேசமடைந்த பெண்கள் சவத்திற்குத் தெளிக்க வைத்திருந்த மஞ்சள்குங்குமக் கரைசலை ஆய்வாளர் மீது ஊற்றி அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர். இதற்கிடையே அமைச்சர் வல்சராஜின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. அதைத் தடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தினர். இத்தாக்குதலில் 14 பெண்கள் உள்ளிட்டு 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் தமது கடமையைச் செய்ய விடாமல் தடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி 257 பேர் மீது போலீசு பொய் வழக்கு போட்டுள்ளது.

இக்கொடுஞ்செயலைக் கண்டு வெகுண்டெழுந்த மக்கள், போலீசு மிருகங்களை எதிர்த்து முதலியார்பேட்டை போலீசு நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட ஊர்வலமாகச் சென்றனர். போராடும் மக்களின் கோபாவேசத்தைக் கண்டு பீதியடைந்த போலீசார், முதலியார்பேட்டை போலீசு நிலையத்தை உடனடியாக காலி செய்து, துப்பாக்கிகள் மேசை நாற்காலிகள், ஆவணங்கள் அனைத்தையும் ஒரு லாரியில் அள்ளிப் போட்டுக் கொண்டு தப்பியோடினர். அப்போலீசு நிலையம் பூட்டு போடப்பட்டு, மத்திய ரிசர்வ் போலீசாரின் பாதுகாப்பில் விடப்பட்டது. மக்களின் எழுச்சியைக் கண்டு அரசு எந்திரம் அரண்டுபோய் விக்கித்து நின்றது.

அடுத்த கட்டமாக, மீண்டும் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். புதுவை முதல்வர் ரங்கசாமி, மக்களின் வாழ்வுரிமையைப் பாதிக்கும் எந்தத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படாது என்று உறுதியளித்து சமரசம் பேசியதால், தற்காலிகமாக இப்போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தேங்காய் திட்டு கிராம மக்களின் போராட்டம் மட்டுமல்ல; சிறப்புப் பொருளாதார மண்டலம், துணை நகரம், விமான நிலைய விரிவாக்கம் ஆகிய திட்டங்களால் விளைநிலங்களைப் பறிகொடுத்த மக்கள் ஆர்ப்பாட்டம், கருப்புக் கொடியேற்றுதல், சாலை மறியல் என அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த இரு மாதங்களாக புதுவை மாநிலமே இத்திட்டங்களுக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டு நிற்கிறது.

தமது வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து மக்கள் போராடத் தொடங்கியதும், அரசியல் ஆதாயம் கருதி எதிர்த்தரப்பு ஓட்டுக் கட்சிகள் இப்போராட்டங்களை ஆதரித்து அறிக்கைகள் வெளியிடுகின்றன. ""உங்களோடு சேர்ந்து தெருவில் இறங்கிப் போராடுவேன்; பிரதமரை நேரில் சந்தித்து முறையிடுவேன்'' என்றெல்லாம் சீறி வெடிக்கிறார், பா.ம.க. தலைவர் இராமதாசு. புதுவை துறைமுக விரிவாக்கத் திட்டம் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வரை அனைத்து முடிவுகளையும் மைய அரசுதான் எடுத்திருக்கிறது. அமைச்சரவையின் முடிவுகளில் மகன் அன்புமணி கையெழுத்திடுகிறார். தந்தையோ இங்கே தாவிக் குதிக்கிறார்.

பா.ம.க. மட்டுமல்ல, எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போது தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவது, எதிர்க்கட்சியாக உள்ளபோது மக்கள் போராட்டங்களை ஆதரிப்பதாக வாய்ச்சவடால் அடிப்பது என்ற நாடகத்தை நடத்தி வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் பல ஆட்சிகள் மாறிவிட்டன. ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற ஒரே கொள்கைதான் அமல்படுத்தப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தையும் கொள்ளையடித்து சூறையாடுவதற்காக பன்னாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ள உலக வங்கியும் உலக வர்த்தகக் கழகமும் போடும் உத்தரவுகளைத்தான் எல்லா கட்சி அரசாங்கங்களும் நிறைவேற்றி வருகின்றன. இவையனைத்தும் வெறும் பொருளாதாரக் கொள்கைகள் அல்ல; இவை நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்தும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்.

சுருக்கமாகச் சொன்னால், விளைநிலங்களையும் வாழ்வுரிமையையும் பறித்து மறுகாலனிய ஆக்கிரமிப்பு எனும் உள்நாட்டுப் போரைப் பிரகடனம் செய்திருக்கிறார்கள், எதிரிகள். இப்போரை, மக்கள் போரினால் மட்டுமே முறியடிக்க முடியும். எனவே, தமது வாழ்வுரிமை பறிக்கப்படுவதை எதிர்த்துப் போராடி வரும் புதுவை மக்கள், இப்போராட்டங்களை மறுகாலனிய எதிர்ப்புப் போராட்டமாக விரிவுபடுத்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மே.வங்கத்தின் நந்திகிராம மக்கள், அப்பகுதியில் அரசு எந்திரம் செயல்பட முடியாமல் முடக்கி வைத்துப் போராடி, அங்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கத் துடித்த போலி கம்யூனிஸ்ட் அரசைப் பணிய வைத்ததைப் போல, புதுவை மக்கள் தமது போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.

ஓட்டுக் கட்சிகளைப் புறக்கணித்து, நாட்டுப்பற்றும், ஜனநாயக உணர்வும் புரட்சிகர சித்தாந்தமும் கொண்ட புதிய போராட்டத் தலைமையின்கீழ் புதுவை மக்கள் போராடும்போது மட்டுமே, இம்மறுகாலனிய ஆக்கிரமிப்புப் போரை முறியடிக்க முடியும்; நந்திகிராம மக்களைப் போல எப்பேர்ப்பட்ட எதிரியையும் மண்டியிடச் செய்ய முடியும். அத்தகையதொரு புரட்சிகரத் தலைமையையும், போராட்டங்களையும் கட்டியமைப்பதே, இன்று போராடி வரும் புதுவை மக்களின் உடனடிக் கடமையாக உள்ளது.

பு.ஜ. செய்தியாளர்கள்,
புதுச்சேரி.

Wednesday, May 23, 2007

பொங்கல் உழைக்கும் மக்கள் திருநாளா?

கொளத்த கண்ட குண்டி எத்தன. குண்டிய கண்ட கொளம் எத்தன?

தஞ்சை சாம்பன்

நன்றி கீற்று, புதுவிசை


வாங்கய்யா ராகுகாலம் வர்றதுக்குள்ள ஊரு தெருவுக்கு போய் மண்ணு போடணும். பொங்க இன்னும் ஏழு நாதான் கிடக்கு. ஏழா நா மண்ணு போட்டுடுவோம். சட்டுபுட்டுனு கிளம்பி நாழியைக் கடத்தாம வாங்கடா என்றவாறு தெருவின் மேல் கோடியில் வந்து நின்றார் கீழ ஒட்டு முத்தன். மண்வெட்டி கூடையுடன் வீட்டுக்கொரு ஆளாக மேல்சாதியார் தெரு நோக்கிப் புறப்பட்டார்கள். மொத மண்ணு அம்பலாரு வீட்டுக்குப் போட்டுட்டு அப்பறமா மத்த வீடுகளுக்கு போடுங்க என்றார் தெரு வில் வெயில் காய்ந்து கொண்டிருந்த பெரியவர். எல்லோரும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா தட்டுக் கூடையில் மண்வெட்டிப் போட்டாலும், அம்பலத்தின் குடிப்பறையன்தான் தேவையான மண்வெட்டிப் போட வேண்டும்.



ஆயா இந்த மண்ணு போதுமா என்று அம்பலத்தின் குடிப்பறை யன் கேட்டான். அம்பலம் மனைவி என்ன இவனே திட்டானி அடுப்பு, திண்ண மொழுகத்தானே போதும் போதும். முட்டாடு ரெண்டு குடம் தண்ணி ஊத்தறேன், மண் நல்லா புளிக்கட்டும் நாள வெள்ளென வந்து நல்லா மசிய குழைச்சுக் கொடுத்துடு. ஏ இவனே மட்டைப் பிடிச்சா ரெண்டு கஞ்சி ஊத்தறேன். குடிச் சுட்டுப் போடா என்றாள். அம்பலம் மனைவி தனது மாமனார் பெயர் முத்துராமு என்பதால் இவரை முத்தன் என்று பெயர் சொல்லி அழைக்கமாட்டாள். இதை அறியாத முத்தன் எங் கள்ளச்சி வாக்கப்பட்ட நா முதலா எம்பேரச் சொல்லி கூப்பிடறதில்லன்னு பெருமையாகக் கூறிக் கொள்வார்.



ஏலே அடி கிழக்கே திரும்பியதும் தான் நல்ல நேரமாம். பொழுது சாயறதுக்குள்ள பொங்க வெச்சி இறக்கிடனு மாம். சடுதியா பொங்கப்பானை வச்சி தீயை போடுங்க என்று முத்தன் தெருவின் மேல்கோடியிலிருந்து கூறிச் சென்றார். அவரவர் வீடுகளில் பொங்கல் பொங்கி வரும் வரை நிசப்தமே நிலவும். வாய்பேசாமல் சைகை மூலமே பேசிக் கொள்வார்கள். பானை பொங்கியவுடன்தான் பொங்கலோ பொங்கல் என்று அகமகிழ்ந்து கூறுவார்கள். எப்போதும் கேலியும் கிண்டலுமாய் பேசும் மழுப்பன் மவன் பொங்கலோ பொங்கல் மூணு கொட்டச்சி ..ம்க்கும்.. பொங்கல் என்றார். பக்கத்திலிருந்தவர்கள் ஏலே எப்பவும் உனக்கு இந்த கிண்டல்தானே வாய மூடுடா என்றார்கள்.



கருமங்களில் அம்பலார் வீட்டிற்கு பொங்கப்பானை கோலி பிடிச்சது பச்சரிசி வெல் லம் வாங்கினது எல்லாம் மூணு மூட்டை நெல்லை வட்டி முழுங்கிடுச்சு. இந்த வவுத்தரிச்சலத் தான் சொல்றான், உங்களுக்குத் தான் கேலியும் கிண்ட லுமா தெரியுது என்றார். பொங்கல் மகிழ்வில் மாமன் முறையுள்ளவர் களை கேலியும் கிண்ட லும் செய்து கொள்வார் கள். முறைப் பெண்களும் என்ன மாமா பால் பொங்கிடுச்சா ஆமாம் என்று பதில் வருவதற்கு முன் உன் காலு வீங்கி னிச்சா என்று கேட்டுக் கொள்வார்கள். கடன் பட்டு பொங்க வச்சியா என்று பொருள்படும்படி தான் இவ்வாறு பேசிக் கொள்வார்கள்.



இரவு ஒவ்வொருவரும் வெள்ளைத்துணி வைத்த பெரிய பெரியகூடைகளை அம்பலக்காரர் வீட்டுவாசலில் வரிசையாக வைத்து, ஆத்தா பொங்க சோறு வாங்க வந்திருக்கிறோம் என்று கூப்பாடு போட்டனர். அம்பலம் வெளியே வந்தார். சாமி இந்தாங்க இது அரசு கோழி, அய்யா இது அம்பலக் கோழி என்று கால்கட்டோடு உள்ள கோழிகளை ஜோடிஜோடியாக தூக்கிப் போட்ட னர். பெற்றுக்கொண்ட அம்பலம் நாலுமுழ காடா வேட்டியும், ஒரு துண்டும், கொஞ்சம் வெற்றிலைப் பாக்கும் வைத்து அனைவருக்கும் வழங்கினார்.



நெய்யும் முந்திரிப் பருப்பும் முக்கிய இடம்பெறும் அம்ப லார் வீட்டு சர்க்கரைப் பொங்கலை தனியாக வாங்கி வைத்துக்கொள்வார்கள். அனைவரும் வீடுவீடாக சென்று பொங்கல் சோறு வாங்கிக்கொண்டு வரும்போது ஒருவீடு விடுபட்டுப்போனது. அடுத்த வீடு சென்றதை பார்த்த மேல்சாதிக்காரர், ஏய் யாரும் இங்க சோறு வாங்கக்கூடாது என்றார். சமாதானம் பேச முற்பட்டனர். ஏய் யாம் வூட்டுல சோறு வாங்காத நீங்க யாரு வூட்டுல யும் சோறு வாங்கக் கூடாது என்றவாறே தடிக்குச்சியை எடுத்துத் தாக்கினார்.



அடிபட்டவர்கள் அலறல் சத்தத் தோடு சந்து பொந்துகளில் ஓடி ஒளிந்தனர். சத்தம் கேட்டு ஏலே என்னடா என்னடா என்று கேட்டுக்கொண்டே தெருவில் வந்து நின்றார் அம்பலார். மேல்சாதிக்காரரைப் பார்த்து ஏலே என்னடா நல்லநாளும் பெரியநாளுமா என்றார். எல்லா வூட்டுலேயும் சோறு வாங்கினானுவோ. யான் வூட்ட தள்ளிப்புட்டானுவோ. நான் என்ன பத்தாத கள்ளனா? என்றார். சோத்துக்கூடை இருந்த பக்கம் நாய் கள் வரவே ஒளிந்திருந்தவர்கள் துரத்தினர் . அம்பலம் விசாரித்ததில் முறையாக வீடு சென்றபோது யாரும் வீட்டிலில்லை என்பதும் இவர்கள் ஒதுக்கவில்லை என்ப தும் தெரிந்தது. ஏலே போய் எல்லாத்துக்கும் சோறு போடச் சொல்லு என்றபோது, மலுப்பன் மவன் இந்தா பாருங்க சாமி குடிக்கோழி போடுறதற்கு கொண்டாந்த கோழியும் போடாம வச்சிருக்கேன். எங்கள மறுவார்த்த பேசவுடாம துரத்தித் துரத்தி அடிக்கறாரு என்றார்.



அவரவர் வாங்கிய சோறு ஏகமாக கூடைகளில் நிரம்பி இருந்தது. அம்பலம் வீட்டு கரும்பையும் வாழைப்பழத் தையும் கக்கத்தில் இடுக்கியவாறு கூடையை வீட்டுக்கு சுமந்து சென்றார்கள். மலுப்பன் மவன் மனைவியை கூப் பிட்டு கருமங்களியையும் பழத்தையும் கொடுத்து விட்டு, கூடையை இறக்கி வீட்டினுள் கொண்டு வைத்த போது என்னய்யா மேலெல்லாம் தடிச்சு கிடக்கு என்று கேட்டாள். அதாம் புள்ள நம்ம அம்பலாரு அண்ணன் மகன் பக்கத்து வூட்டுல சோறு வாங்கிப்புட்டோம்னு அடிச்சிப்புட்டாரு என்றதும், அவன் கையில் படுவன் புறப்பட... இப்படி அடிச்சிருக்கானே.. இவனுக்குத்தான் குடிக்கோழி போடனும்னு ஒத்தக்கால்ல நின்னியாக்கும் என்றாள். அடிப்போடி போன வருஷம் பூரா ஒழச்சி களம் கடைசியானப்போ களம் விடுங்கன்னு கேட்டப்ப அவரு என்ன சொன்னாரு... நீ குடிகோழிப் போட்டு கிழிச்ச கிழிக்கு இது போதும்னாரு. இந்த வருஷமும் ஆத்துல தண்ணி வந்த நா முதலா ஒழச்ச நமக்கு களம் வுடாம போனா என்ன பண்றது. அதாம் புள்ள கடனவுடன வாங்கி கோழி போட்டேன் என்றார். சரி அது போகட்டும் இந்த சோத்தையெல்லாம் தண்ணி ஊத்தி வைச்சுடு. காலையிலே மறு தண்ணி பாச்சி வை புள்ள. பொங்க காடிய புதுப்பானையில ஊத்திவை. இரண்டு நாள் கழிச்சி குடிச்சா கிறுகிறுப்பாக இருக்கும் என்றார்.



இரண்டாம் நாள் மாடு அவிழ்த்துவிடும் விழா. மாடு அவிழ்க்கும் முறைக்காரர் சேரிப்பெரியவர்களிடம் ஏலே 25 வருஷம் கழிச்சி இப்பதான் என் முறை வருது. ஆட்டம் பாட்டத்தோடு மாடு அவுத்து வரணும். செலவு எக்கு முக்கா செய்யப்போறேன்... எல்லாருக்கும் வேட்டி துண்டு எடுத்திருக்கேன்... வந்திருங்கடா என்றார். ஐயா நாங்க வழமை தவறாம வந்திடுவோம், ஊரு கட்சிப் பட்டுக் கிடக்கு... நாயத்தைப் பேசிக்கிட்டுதான் மாடு அவுக்கணும்னு அம்பலாரு சொல்லியிருக்கார் என்றார் பெரியவர். ஏலே அதான் நாளைக்கு நடக்கிற ஊர்க் கூட்டத்துல பேசி முடிச்சுப்பிடலாம் என்றபோது, நம்ம முனியாண்டவர் புண்ணியத்துல நாளைக்கே எல்லாரும் சந்தனம் பாக்கு எடுத்து கை கலந்துக்கிட்டா நல்லதுதான். எனக்கு நெகா தெரிஞ்ச நா முதலா எத்தன முறை ஊரு கட்சிபட்டு மாடு அவுக்காம இரண்டு மூணு வருஷம் கிடந்துருக்கு. எதுக்கும் செலவு பாத்துக்கிட்டு செய்யுங் கய்யா என்றார். அப்படியெல்லாம் நடக்க ஒண்ணும் கூறு இல்ல. நாளக்கி எல்லாம் தீர்ந்து போயிடும் என்று கூறியவாறு மேல்சாதியார் சென்றார்.



மறுநாள் ஊர்க்கூட்டம். மணியார் வீட்டு வாசல் விசாலமானது. சுற்றிலும் பூவரசு வேம்பு மர நிழல். இது தான் சேரிக்காரர் இடம். மணியாரின் வீடு சுற்றுக்கட்டு வளைவு சுற்றிலும் திண்ணைகள். நியாயம் பேசுமிடம் தென்னைஓலையால் பந்தல் போடப்பட்டிருந்தது. சபை களை கட்டியது. அம்பலமும் மணியாரும் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தனர். ஏலே தெக்கித்தெரு வடக்குத் தெரு பறையவூட்டு பயலுவோலெல்லாம் வந்திட்டிய லாடா என்றார் அம்பலம். சாமி அல்லாரும் வந்துட்டம்.. என்ன குத்தம் குறை இருந்தாலும் ஏத்துக்கிடனும் சாமி.. என்றவாறே சேரித்தெரு ஆண்கள் அனைவரும் குவிந்த கரத்தோடு கூட்டம் நடக்கும் திசை நோக்கி குப்புற கவிழ்ந்தனர். என்ன மாமா கூட்டத்த ஆரம்பிச்சிடலாம், முக்கரையும் (மூன்றுகரை) வந்தாச்சி என்றார் மணியார். அம்பலம் தலையசைக்க ஊர்க்கூட்டம் ஆரம்பமானது.



10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5 மணிக்குதான் முடிந்தது. இருதரப்பாரும் ஏற்றுக்கொள்ளாதபோது 2,3 நாட்கள் கூட்டம் நடக்கும். முடிவு எட்டாத நிலையில் கலைந்துபோகும். இம்மாதிரியான காலங்களில் ஊரில் பொதுத் திருவிழா எதுவும் நடக்காது. ஏலே முக்கரைப் பறையனும் எழுந்திரிங்கடா என்றார் அம்பலம்.எழுந்து நின்றார்கள். முத்தா வடக்கிக்கரைதான் குத்தம் பண்ணி ருக்கின்னு ருசுவாயிருக்கு. அவுகளும் ஒத்துக்கிட்டாங்க. நீங்க என்ன சொல்றீங்க என்றார். சாமி ஒங்க பேச்சி என் தலைக்கு மேலே. குத்தத்தை ஒத்துக்குறோம். தேங்கா உடைச்சி அவராதம் கட்டுறோம் என்றவாறு தேங்காய் உடைத்து பழைய நிலைபோல காலில் விழுந்தனர். சரி சரி எழுந்திரிங்கடா கிண்ணத்தை எடுத்து சந்தனம் வழங் குங்க. சந்தனம் பாக்கு பறையன்களுக்கும் கொடுங்க. நாளைக்கு மாடு அவுக்கிறது கீழவூட்டு முறை. சண்டை சச்சரவு இல்லாம முனியாண்டவர் கோயில் மந்தையில மாடு அவித்துவிடுங்க... அம்பலமும் மணியாரும் இருக்கையை விட்டு எழுந்துவிட்டார்கள்.



எந்த நிபந்தனையுமின்றி நியாயம் ஏற்கப்பட்டதால் வடக்குக்கரை மேல்சாதியாருக்கு கோபம் வரவில்லை. நிபந்தனை இருக்கும்பட்சம் கோபம் தணிக்கும் வடி காலாக தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படுவர். முக்கரை கள்ளர்கள் யார் தவறு செய்தாலும், தண்டனையும் தடி யடி படுவதும் காலில் விழுந்து மன்னிப்புக் கோருவதும் மூன்றுகரை பறையர்கள்தான். சேரிக்காரருக்கும் சந்த னம் பாக்கு வழங்கப்பட்டது. தகராறின்றி நியாயம் தீர்ந்த சந்தோசத்தில் சென்றனர். மலுப்பன் மவன் வீட்டு வாசலில் நின்று ஏ புள்ள ப்ளே என்று குரல் கொடுக்க இந்தா வரேன் என்றவாறு வெளியே வந்தவள், யேய்யா ஊரு நியாயம் தீர்ந்துச்சா என்றாள். ஆமாடி சந்தனம் வழங்கியாச்சி என்றார். அதானே மாருபூரா சந்தனம் மணக்குது என்றாள். சரி புள்ளே சாமி கும்புட சோறு கொழம்பு காச்சிட்டியா? மேலவூட்டு அக்கா இப்பதான் வட சட்டி கொடுத்திச்சி. படையலுக்கு வட சுட்டுக்கிட்டு ருக்கேன். நீ அக்கினி சட்டியில நெருப்பப் போடு. இங்கயே சராபிடியெல்லாம் சேத்து வச்சிருக்கேன். அது புடிக்கிறத்துக்குள்ளே இந்த ஈடும் எடுத்துறேன் என்றார்.



அக்கினி சட்டியிலே நெருப்பப் போடுங்க. நல்ல நேரத் திலே எடுக்கணும் என்று தெரு பெரியவர் குரல் கொடுத் தார். அவரவர் வீடுகளில் அக்கினி சட்டி தயாராகி கிழக்கு மேற்காக எதிரெதிர் நிலையில் ஜுவாலை எரிந்துக் கொண்டிருந்தது. தாரை தப்பட்டைகளோடு வரிசையாக தலைச் சும்மாட்டில் வேப்பிலை வைத்து அக்கினிச் சட்டிகளை சுமந்து தத்த மது குலதெய்வத்தின் பெயரை உச்சரித்த வாறு ஊரின் கீழ்பகுதியில் கொண்டு வந்து வைத்தனர். இந்த ஒற்றுமையான நிகழ்வு இவர்கள் குடி பார்க்கும் மேல்சாதியாரிடம் அனேகமாக இருக்காது. எப்பா அங்கிட்டு இங்கிட்டு போயிடாதிங்கடா ஒவ்வொரு வீடா கை நனச்சிட்டு போங்க என்று கூறிய படி முத்தன் தனது வீட்டில் முதல் படையல், கீழவூட்டு படையல் என்று பொங்கல் சோறு வடையை பூவரசு இலையில் வைத்து அனை வருக்கும் கொடுத்தார். கோழி அடிச்சிருக்கேன் ஒரு கை தின்னுட்டு போங்க என்றபோது ஏ பெரியாளு அல்லா வூட்டு படையலும் கொஞ்சங் கொஞ்சம் திங்கனும்மே போதும் போதும் எய்த்த வூடு போங்க என்றார். அனேகமாக அனைவர் வீட்டிலும் கோழிக்குழம்பும் குழிப்பணியாரமும் வடைகளும் செய்தே படைப்பார்கள்.



மறுநாள் மாடு அவிழ்த்துவிடும் முறைக்காரர் வீடு களை கட்டி இருந்தது. மதியம் அனைவருக்கும் சாப்பாடு- பறையர்களுக்கும். சந்தனம் வெத்தலை பாக்கு கொடுத்து கோடிவரத்தில் சாப்பாடு. யாருக்கு சந்தனம் இருந்ததோ இல்லையோ இவர்களின் உடல் பூராவும் சந்தனம்தான். சேரி ஆண்கள் அனைவருக்கும் வேட்டித் துண்டு போட் டார் முறைக்காரர். ஏலே மலுப்பன் மவனே, மாடு அவுத்து கையிலே புடிச்சி மந்தைக்கு போறவரைக்கும் தப்பாட்டம் ஜொலிச்சிப்புடனும் தெரியுமா? என்றார். அனைவரும் வேட்டித் துண்டு வாங்கிய சந்தோசத்தில், சாமி பாருங்கோ தப்பு கிழிய கிழிய அடிக்க மாட்டோம்? என்றார்கள். மாடுகள் பூராவும் முனியன் கோயில் மந்தையில் வரிசையாக நிறுத்தப்பட்டன.



அய்யா எல்லா மாடும் வந்துருச்சா... சாம்புரானி போடலாமா? என்றார் பூசாரி. நம்மோ பறையவூட்டு மாடு வந்திருச்சா, ஏ முத்தா ஒங்க மாடு வந்திருச்சா ... நம்மோ தெரு மாடு சாடா வந்திரிச்சி, சாம்புரானிய போடச் சொல்லுங்கோ என்றார். சாம்புரானிய போடலாம் என்றதும், பூசாரி மேல் முனி சாமி இறங்கியது. ஒரே சத்தம். பூசாரி கிழக்கும் மேற்கு மாக ஆடிவந்தார். அனைவருக்கும் திருநீர் வழங்கப் பட்டது. இரண்டொருவரை முனிசாமி கையில் வைத்தி ருந்த பிரம்பால் கடுமையாக தாக்கினார். மா விளக்கு போட வந்த சில பெண்கள் திருநீர் வாங்கும்போது அவர் களின் தலைமுடியைப் பிடித்திழுத்து ஆட்டி பிரம்பால் ஒரு இழுப்போடு விட்டுவிட்டார். இப்படி இழுபடும் பெண்கள் பலபேர் இரண்டு மூன்று நாள் கழித்து வலியென்று கூறுவார்கள். பிடித்திருக்கும் பேய் பிசாசு விட்டுடும் என்பதால் இதை இவர்கள் பெரிய விசயமாக எடுத்துக்கொள்வதில்லை. மந்தை கலைந்து அவரவர் வீடுநோக்கிச் சென்றனர்.



பூசாரி மாமா, என்ன பிசாசு அந்த ஆயியை பிடிச்சது... போட்டு இந்த உலுக்கு உலுக்கிறியே என்று கேட்ட போது ஓய் மாப்புள்ளே நான் சொல்றத போயி யாரு கிட்டேயும் சொல்லிப்புடாதே... எந்த பேயி பிசாசு புடிச்சிருந்தது நான் போயி விரட்ட? நம்மள மனுசனா மதிக்கிற தில்லே. யாம் வயசுக்கு அந்த ஆயி எம்பேரச் சொல்லி கூப்பிடறதும், வாடா போடாங்கிறதுமா திமிரு புடிச்ச ஆயி. அதான் சாமி பேராலே தலைமுடிய இழுத்து பெரம்பாலே ரெண்டு போடு போட்டேன். சாதாரணமா அந்த ஆயிய நம்ம தொட முடியுமா? அதான் நம்மோ ஆளுவலே ஏளிசமா நினைக்கிற ஆளுவளே இதே சாக்கா வெச்சி பழி தீர்க்கிறதுதான். எந்த சாமி வந்து இவனுக்கு இந்த பிசாசு, அந்த பிசாசு புடிச்சிருக்குன்னு சொல்றது என்றார்.



மலுப்பன் மவன் தன் வீட்டு வாசலில் வந்து அமர்ந்தார். யோவ் நாளைக்கு கதிரு அறுக்கணுமாம். ஆளு கூட்டிப் போயி ஓட வய அறுவடைன்னு நடுவூட்டுக்காரு சொன் னாரு. நானும் பத்து ஆளு தெவிச்சிருக்கேன். நீயும் தெக்குத்தெரு அம்பலாரு தெரு பக்கம்போயி இன்னும் பத்து ஆளு தெவச்சிட்டு வந்துருய்யா. நாலஞ்சு நாளுல கதிரு அறுவடைய முடிச்சுவுடலாம் என்றாள் மனைவி. அறுவடை முடிந்தது. இன்னிக்கு கடைசி களம். வேலை தலையிலே நிக்கிற ஆளுவளுக்கு கொழம்பு சோறு போடணும்னு நடுவூட்டுக்காரர்கிட்டே சொல்லிட்டு வந்துடுய்யா என்றாள்.



அறுவடை முடிந்து கடைசிநாளன்று சாமி கும்பிட தட்டு முட்டுச் சாமான்களை ஒவ்வொரு குடிப்பறையரும் தான் வாங்கி வரவேண்டும்.



தலையடி நெல் மூட்டைகளாகக் கட்டப்பட்டிருந்தது. சாமி கும்பிட ஒரு சிறியகூடையில் வைத்திருந்த சுமார் ஐந்து மரக்கால் நெல்லை மூட்டை களுக்கெதிரில் கொட்டினர். நடுவூட்டார் சாமி கும்பிட்ட வுடன் அனைவரும் சூட தீபத்தை கையெடுத்துக் கும்பிட் டனர். மலுப்பன் மவனும் மனைவியும், இந்த வருசம் மாதிரியே எல்லா வருசமும் வௌயனுஞ் சாமி என்று தெய்வத்தை வேண்டி நின்றனர். ஏலே சாமி கும்பிட்ட நெல்ல எடுத்துக்கடா என்றவாறே வேல செய்த ஆட் களுக்கு தலா ஒரு மரக்கால் அளந்து போட்டார். இது இவர்களுக்கு கடைசிக் களம்கிறதால உங்க செலவுக்கு... ஏலே எல்லோரும் சந்தோசமா சாராயம் குடிச்சிட்டுப் போங்கடா என்றார். அய்யா எனக்குக் களம் உடுங்கோ என்றார் மலுப்பன் மவன். ஏலே ரெண்டுமூட்டே ஒனக்கு ஒதுக்கிருக் கேன். இதான் பொலியடிக்கு, சாட்டு வாவுலே ஒதுக்கிருக்கு,



அப்புறமென்னடா களம்வுடனும் என்றார். சாமி புருசன் பொண் டாட்டி சேந்து களம் செதுக்கின துலே இருந்து பத்துநாளா வேல பாத்துருக்கோம். யாம் வூட்டுக்காரர் கருத அறுத்த நாள் முதலா களத்துமேட்டுல ராவுன்னும் பாக் காமா பவன்னும் பாக்காமா காவ காத்துக் கிடந்துச்சி, போன வருசம் தான் கோழி போடலே பறப்பய லுக்கு அவ்வளவு திமிரான்னீங்க... இந்த வருசம் குடிக்கோழி போட் டும் மோசம் பண்றீயளே, இது நாயமா சாமி... என்றாள் மலுப்பன் மருமகள். ஏய் நிறுத்தடி, கடைசி களம்னு பாக்கிறேன். இல்ல பிரி கட்டிப்புடுவேன்... என்னடி ரெண்டு ரூவாய்க்கூட பொறாத குஞ்ச புடிச்சி போட்டுட்டு கோழி போட்டாளாம் கோழி. இதோட முடிஞ்சிப் போச்சா... போரடி கிடக்கு பாத்துக்கலாம் என்றார். அப்பவும் இப்படியேதான் சொல்லுவியோ என்றாள். பக்கத்தில் நின்ற அவள் புருசன், ஏட்டி நிறுத்தடி போதும் என்று அதட்டினார். ஏலே கடைசி களம் கறையாமே போங்கோடா, எல்லாம் போரடி இருக்கு பாத்துக்கலாம் என்று நடுவூட்டார் கூறினார்.



மூன்று வண்டிகளில் ஏற்றினது போக பாக்கி இருந்த மூட்டைகளை அடுத்தநடையில் ஏற்றிவிடச் சொல்லி புறப்பட்டார் நடுவூட்டார். ஏலே நான் போறேன் சண்டை சச்சரவு போட்டுக்காதீங்க என்றார். அய்யா, நான் குடிப்பறையன். ஊரே ஒன்னாருவ கூலி வாங்குது. நான் அரை ரூவாதான் ஒங்ககிட்ட வாங்கறேன். நாத்து வுட்டதி லேயிருந்து கதிரறுப்பு வரையிலும் ஒங்க வேலைதான் பாக்குறேன். ஆறுரூவாக்கு சாமி கும்பிட சாமான் வாங் கின வகையில பாலத்துக்கடைக்கு ஆறு மரக்கா நெல்லு போடணும். பத்துவிரலால பாடுபட்டு அஞ்சு விரலால அள்ளித் திங்கனும்பாங்க. நாங்க ஆங்கமா ஒரு மாசங்கூட சாப்பிட முடியாது. இந்த கோவத்துலதான் அவள அடிச்சிப்போட்டேன்... என்றார் மலுப்பன் மவன். சரி போங்க, வண்டிய வெள்ளென வரச்சொல்லுங்க என்றார்.



அவர் சென்றவுடன் மலுப்பன் மவன் ஏ புள்ளே என்று இருமுறை கூப்பிட்டும் மௌனமாக அவள் வேலை செய்து கொண்டிருந்தாள். இதா நான் கூப்பிடுறது கேக்கலயா? என்றார். என்ன சொல்லு? இப்பதான் அதிசயமா கூப்பிடுவ, நாலு மனுசாளு நிக்கிறதுகூட தெரியாமா கூட்டிக்கிட்டிருந்த அலம்பக் கட்டையால அடிக்கிறியே ஒன்னமாரிதான் நானும் ஒழைச்சிக்கிட்டி ருக்கேன் என்றாள். இந்தாடி, நான் அடிச்சதுக்கு கோவிச்சிக்கிறீயே அந்த அய்யா என்ன சொன்னாரு, ஒம் ஒடம்புத் தோல பிரி கட்டிப்புடுவேன்னு பேசுறாரு. நீ எய்த்து எய்த்து பேசற. அவன் அடிச்சாலும் அடிச்சுப்புடுவான்னு தான் பொய் தட்டா தட்டினேன் என்று மனைவியை சமாதானம் செய்தார். நான் சொன்னா நீ என்னத்த கேட்ட... மூனுமூட்ட நெல்லு வட்டிக்குக் கடன் வாங்கி, குடிகோழி போடனும்னு ஒத்தக் கால்ல நின்னே.



ரெண்டுபேருக்கும் கூலியா ரெண்டு மூட்ட களம் கொடுத் திருக்கேன்னு பெரிசா சொல்லிட்டாரு. நான் வாங்குன கடன் கொடுப்பேனா? சொச்ச காலத்த கழிப்பேனா? நாம என்ன அந்த குண்டு வயலே அறுத்தாயா கடனகொடுக்க? ஏய்யா சுத்த கூறுகெட்ட மனுசனா இருக்க, இந்த ஆளுகிட்ட குடிவேல பாத்து வருசம்பூரா ஒழைச்சும் அரங்கையும் பொறங்கையுமா நக்கிக்கிட்டு தான் இருக் கோம்...என்றாள். என்ன புள்ள பண்றது. போனவருசம் குடிகோழி போடலீன்னு கோவிச்சிக்கிட்டாரு. வருசம் பூரா வேல பாத்தும் என்ன பிரயோசனம்? வாங்குன கடன் கொடுக்க எங்கே போவேன்... தலையைப் பிடித்தவாறு கீழே அமர்ந்தார். இங்கருய்யா கொட்டி கொட்டி அளந் தாலும், குருணி பதக்காவாது. பேசி என்ன பிரயோசனம்? நாளையிலே இருந்து வெளியாளா நின்னு வேல பாத்தாத்தான் நாம வாங்குன கடன கொடுக்கலாம்.



இனி இவுகள நம்புறதுல எந்த பிரயோசனமும் இல்ல. எய்த்தவூட்டு மாமென் கதிரறுக்க கூப்பிட்டாக, நானும் என்வூட்டாளும் வர்றோம்னு சொல்லிட்டேன். காலமே வெள்ளென கதிரறுக்க போயிறலாம் என்றாள். எப்படிப் புள்ளே இந்த வேலையை போட்டுட்டு அடுத்தவூட்டு வேலைக்குப் போனம்னா நடுவூட்டய்யா அடியனுக்கு வருவாரே என்ன பன்றது? ஆமா நீ என்ன வெல்லக் கட்டியா? போட்டு வெடுக்குன்னு முழுங்கிப்புட என்றாள். சரி புள்ள ஏதுக்கும் நாலு கள்ளங்கிட்ட சொல்லி வய்ப்போம் என்றார்.



அம்பலத்தைப் பார்த்து விவரங்களைக் கூறிய மலுப்பன் மவன், சாமி நான் ரெண்டு புள்ள குட்டிய வெச்சிக்கிட்டி ருக்கேன். இவரை நம்பி எந்த பிரயோசனமுமில்ல. இனி இவருக்கு குடிவேல பாக்கமுடியாது. காலம்பூரா ஒழச்ச எனக்கு குடிப்பறையன்னு அரைரூவா கூலி கொடுத்தாரு. இதுலயுமே கடைசி களத்தன்னிக்கு எங்கள ஐயோன்னு கைய தட்டிவுட்டுட்டுப் போயிட றாரு. நான் குடி பாக்குற குடிய நம்பிதான் கடன ஒடன வாங்கி பொங்க கும்பிட்டேன். போன வருசம் மாதிரி இந்த வருசமும் மோசம் பண்ணிட்டாருங்க. நான் வெளியாளா நின்னு வேல பாத்தா தான் வாங்குன கடன அடைக்க முடியும். அவருக்கு வேல பாக்காம அடுத்த கள்ள னுக்கு வேல பாத்தா நீங்களே ஏண்டா எங்கிட்ட ஒருவார்த்த சொல்லலம்பீங்க, அதான்யா ஒங்ககிட்ட சொல்றேன் என்றார். சரி சரி போடா, நான் பேசிக்கிறேன் என்றார் அம்பலம்.



மறுநாள் வேலைக்குச் சென்று திரும்பியவளிடம் நடு வூட்டார், ஏய் மலுப்பன் மருமவளே எங்கடி ஒன் வூட்டுக் காரன்? நெல்லு மூட்டைய குதுருல பாச்சனும். காலமே வெள்ளென அவன வரச்சொல்லு என்றார். நானும் அது வுந்தாங்க கதுரறுக்கப் போனோம். அறுத்துப் போட்டத அடிக்கனும். போவலன்னா, இன்னிய கூலியும் கெடைக் காது. நாளை காலையிலயே வரச்சொல்லுறேன் என்றாள். ஏய் என்னாடி, பதிலா சொல்லுற... நெல்லு மூட்டை யெல்லாம் வெளியே கெடக்கு, என்வூட்டு வேலை யெல்லாம் முடிச்சுப்புட்டானா? நாளைக்கு வரட்டும் பேசிக்கிறேன் என்று கூறிச்சென்றார்.



மனைவி சொன்ன விவரங்களைக் கேட்டதும் மலுப்பன் மவன் மனதில் உள்ளூர பயம் ஏற்பட்டது. ஏ புள்ளே இந்தாளு வந்து தகராறு செஞ்சாலும் செய்வான். நான் நாளைக்கு வெள்ளென எந்திருச்சி ஒரு அடிபோய் ஒன் ஆத்தால பாத்துட்டு அந்த ஆயி கேட்ட பலவாரத்த வாங்கி கொடுத்துப்புட்டு வந்துடறேன் என்றார். ஏய்யா உன்னமாரி பயந்தாங்கொள்ளி ஆம்பள இந்த ஊர்லயே இல்லய்யா. உழுவாயில ஊரு பயணமும், அறுக்கயில ஆளு பயணமும் போனா நாமோ நல்லா வாழ்ந்துப் புடலாம், நீ இப்ப ஒன்னும் போவ வேணாம். இந்த ஊரு அறுப்பு சொடுங்கிப்போச்சு. இன்னும் ஒரு வாரமோ, பத்து நாளோ முடிஞ்சிரும். நானும் வர்றேன், எங்க ஆயி வடதான் ஆசையா திங்கும். வூட்டுல சுட்டோம்னா புள்ளகுட்டிக்கும் ஆங்கமா நாலு வடய கொடுக்கலாம். பேசாம நீ வேலைக்குப் போ, கஞ்சி ஊத்தி எடுத்துக்கிட்டு நானும் வந்துடறேன் என்றாள். நடுவூட்டாரு எங்கடி ஒம்புருசன்னு கேட்டுட்டு என்னமா அதட்டி அதட்டி பேசுறாரு. இன்னிக்கு வேலைக்குப் போவலேனா கூலி கெடைக்காதுங்கறேன். அந்த கூலிய நான் தர்றேன் ரெண்டுபேரும் வாங்கன்னு சொல்றத்துக்குக்கு கூட மனசு வரல அவருக்கு. நீ வேலைக்குப் போயிடு அவரு வந்தா நான் சொல்லிட்டு வர்றேன் என்றாள்.



காலையில் அனைவரும் பாலத்தில் ஒன்றாகக் கூடி பிறகே வேலைக்குப் பிரிந்து செல்வார்கள். பிரிந்து போன மலுப்பன் மருமவளை நடுவூட்டார் ஏய், எங்கடி அவன்... அவன வரச்சொன்னியா என்றார். அது முன்னாடியே போயிடுச்சிங்க. நாளைக்கு வெள்ளன கூட்டிக்கிட்டு நானும் வர்றேன் என்றாள். ஏய் நீ சொல்றத கேக்க நான் என்ன ஆளா? எங்கடி அவன் என்றார். நிலவரம் புரிந்த வளாக நீங்க போங்க உரமத் துக்குள்ள வரச்சொல்றேன் என்றாள். ஏய் என்னடி நீயே மட அடச்சே பேசுறீயே? என்றவாறு மரக்கொம்பை உடைத்து அடித்தார்.



ஒரு கையால் தலையில் வைத்தி ருந்த கஞ்சிக் கலயத்தைப் பிடித்தவாறு மறுகையால் அடியைத் தேக்கினாள். வலி பொறுக்கவியலாத நிலை யில், இந்த எளவெடுத்த செம்மத்துல வாழ்றத விட நாண்டுகிட்டு சாவலாம் என்றவாறு தலையில் வைத்தி ருந்த கஞ்சிக் கலயத்தை ஆவேசத்தோடு நடுரோட்டில் போட்டு உடைத்தாள். கலயம் சுக்குநூறாக சிதறியது. இவளது ஆவேசத்தைப் பார்த்த நடுவூட்டார் திகைத்து நின்றார். தன்காலத்தில் இப்படியொரு பெண் ஆவேசப் பட்டதை அவர் பார்த்ததே இல்லை என்பதால் பதட்ட மாகி, திருப்பியடிக்க முடியாத ஆற்றாமையில் தான் கலயத்தை ரோட்டில் போட்டு உடைத்தாளா? என்ற யோசனையோடு வந்த வழியே விறுவிறுவென்று நடக்கலானார்.



வேலை முடிந்து கணவனும் மனைவியும் வீடு வந்தனர். மறுநாள் காலையில் இருவரும் அம்பலத்தைப் பார்த்து நடந்த விசயங்களைத் தெரிவித்தனர். விசயத்தை முதல் நாளே அறிந்திருந்த அம்பலம், ஏலே எனக்கு எல்லாம் தெரியும், ஏதோ கோபதாபத்துல பொம்மனாட்டிய அடிச்சுப்புட்டான். மூக்கு இருக்கும் வரைக்கும் சளி இருக்கத்தான் செய்யும். நான் அவன கண்டிச்சுப்புடுறேன் போடா என்றார். சாமி நாங்க புருசன் பொண்டாட்டி சேர்ந்து காலையிலேயே வந்து தெருகூட்டி, சாணி அள்ளிப்போட்டு, எந்த வேலையும் கொற வைக்காம தான் செஞ்சிருக்கோம். நான் குடிவேலை பாத்ததுக்கு அவுக கொடுத்த குடிகூலிய மொகஞ்சுளிக்காமதான் வாங்குனோம். குடிகோழியும் போட்டோம்.



கடைசி களத்துல எங்க ரெண்டுபேரு கூலியத்தான் கொடுத்தாரு. கேட்டா, போரடி இருக்குங்கிறாரு. அப்பவும் இப்படி தான் சொல்லுவாரு, எம் பொண்டாட்டி கடேசி களத் தன்னிக்கு பேசுனத மனசுல வெச்சிக்கிட்டு அவள மாட்டப்போட்டு அடிக்கிறமாரி அடிக்கிறாரு. அவரு களமும் வேணாம், அவரு குடியும் வேணாம், நான் இனிமே அவருக்கு வேலை பார்க்கமாட்டேன், பசியும் பட்டினியுமா கெடந்து வேலை பார்த்து என்ன பிர யோசனம்? என்று முறையிட்டுச் சென்றார்கள். வழியில் பார்த்த நடுவூட்டார், ஏலே அம்பலத்துக்கிட்ட மறவுட் டுட்டுப் போறிகளா? அம்பலம் என்னத்த செஞ்சிப்புடு வாரு, நெல்லு மூட்ட வெளிய கெடக்குது. அத பங்குடுப் படுத்தனும்னு ஒம்பொண்டாட்டிக்கிட்ட எத்தனை தடவ சொல்லிருக்கேன். அவ மறுத்து மறுத்து பதில் சொல்றா. அந்த கோவத்துலதான் ரெண்டு தட்டு தட்டுனே. அதப் பெரிசா சொல்றதுக்கு வந்துட்டியா என்றார்.



ஐயா ரெண்டுமூனு நாளைக்குத்தான் கருதறுப்பு தக்க மொய்க்கவா இருக்கும். நாங்க ரெண்டுபேரும் சேந்து ஒரு மூட்டைக்காவது அறுத்துப்புடுவோம். பொறவு ஒங்க வேலதான் வந்துர்றோம் என்றார். ஏண்டா, என்வூட்டு வேல எப்படி போனாலும் போவட்டுன்னு நீ சம்பாதிக்க நெனக்கிறியா? என்றவாறு பக்கத்திலிருந்த காட்டா மணக்கு மரக்கிளையை உடைத்து கணவன் மனைவி இருவரையும் தாக்கினார். அடிபட்ட மலுப்பன் மவன் யோவ் நிறுத்தய்யா, ஒனக்குதான் அடிக்கத் தெரியும்னு அடிக்கிறியா? ஏன் ஆயி அப்பன் என்ன ஒன்னுக்கிட்ட பண்ணைக்கா வெச்சிட்டு செத்தாக, இல்லே முச்சலிக்க போட்டுக் கொடுத்தாகளா? ஒன்கிட்ட ஆயிரம், ஐநூறு வாங்கிட்டு பண்ணையாளா இருக்கிறவனுக்கிட்ட இதெல்லாம் வச்சுக்கோ, ஏதோ எம்பாட்டன், முப்பாட்டன் வழமயாச்சேன்னு பாத்தா ரொம்பதான் ஓட்டுர்யோ, 50 மூட்ட நெல்லடிச்ச மிராசு ஒரு 5 மூட்ட நெல்லு களம் கொடுத்தியாயா நீ? நாங்க என்ன மண்ணள்ளி தின்னுப்புட்டா ஒனக்கு வந்து மாரடிக்கிறது? குடி பறையன வெச்சி கோலேச்ச தெரியாத உனக்கு குடி பறையன் ஒரு கேடா? போயா... மலுப்பன் மவனும் அவன் மனைவியும் நிற்கும் கோலத்தைப் பார்த்தால் நெருங்கினால் என்ன நடக்கும் என நினைத்துப் பார்க்க அந்த கணநொடி நடுவூட்டாருக்கு மோசமாகவே இருந் தது.



காலைப் பொழுது... வண்டி சோடு இருபக்கமும் கிளுவை வேலியான அடைப்பு... புருசன் பொண்டாட்டி சேந்து தாக்கினா சத்தங்கூட போட முடியாது. பறையன் அடிச்சிப்புட்டான்னு வெளியேயும் சொல்ல முடியாத நிலை. ஏலே எதுத்தா பேசுற? நீ இந்த ஊருல குடி யிருக்கிறத நான் பாத்துப்புடுறேண்டா? என்றார். யாரும் நடமாட்டம் இல்லாதது மலுப்பன் மவனுக்கு ரொம்ப தோதாப்போச்சு. போயா ஒன் அண்ட மண்டயில குடி வெச்சுக்காத. நீ அளக்குற படிய இன்னோட நிறுத்திப் புடு, கொளத்த கண்ட குண்டி எத்தன. குண்டிய கண்ட கொளம் எத்தன? போயா என்றார். இதை சற்றும் எதிர் பாராத நடுவூட்டார் மௌனமாக நின்றார். அப்படி யொரு ஜென்மம் அங்கிருப்பதையே பொருட்படுத்தாத வர்களாக புருசனும் மனைவியும் தங்கள் வழியில் கிளம்பினர்.


யோவ் ஒனக்கு இம்புட்டு கோவமிருக்கும்னு நான் நெனச்சுக்கூட பாக்கலய்யா. அந்தாளு அவுக பெரியப்பன் கிட்ட சொல்லி ஊரு கூட்டத்த கூட்டி நம்மல நிறுத்தி கேட்டா என்னா சொல்றது என்று புருசனைக் கேட்டாள். அடி போடி ஐயோ சாமி இவருதான் எங்கள வெரட்டி வெரட்டி அடிச்சாரு. நாங்க ஒரு குத்தமும் செய்யலியே சாமின்னு காலிலே விழ வேண்டியதுதான். இனி இவன் கிட்ட குடிவேலையும் வேணாம். அவன் வேட்டி துண் டும் வேணாம். கை கால் இருக்கு எங்க வேணும்னாலும் போயி பொழச்சிக்கலாம் என்றார் மலுப்பன் மகன். தன் பிடியிலிருந்து திமிறிப்போகும் குடிப்பறையனை தடுக்கும் பலத்தை இழந்து விட்டவராக அங்கேயே நின்றிருந்தார் நடுவீட்டார்.

Tuesday, May 22, 2007

பார்ப்பனியத்திற்க்கு எதிராய் ஒரு புதிய தளம்

யங்கரவாதம் என்றால் என்ன? ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான எல்லாவற்றையும் பயங்கரவாதம் என்ற ஒற்றை வாதத்தில் அடக்கி ஒடுக்கும் தந்திரத்தை செயல்படுத்தி வருகிறது. இன்னொரு பக்கம் பார்ப்பனிய பயங்கரவாதம் ஆளும் வர்க்கமாக இருந்து கொண்டே தனது இருப்பை நியாயப்படுத்தும் தேவைக்காக தனது வர்க்க நலன்களுக்கு நேரெதிரானவர்களையும், மத சிறுபான்மையினரையும் பயங்கராவாதிகள் என்று முத்திரை குத்தி பீதி கிளப்புவதன் மூலமே தனது மக்கள் விரோத பயங்கரவாத நடவடிக்கைகளை மக்களின் பார்வையிலிருந்து பாதுகாத்து வருகிறது.

இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழல் உருவாக்கும் சமூக பொருளாதார அழுத்தம் என்பது அதன் உண்மையான வடிவங்களில் வெளி வருவது என்பது ஆளும் வர்க்கங்களுக்கு என்றுமே ஆபத்தானதுதான். அப்படியே எங்கேனும் வந்தால் கூட அவற்றையும் பயங்கரவாத முத்திரை குத்தி வெகு சன அரங்கில் தனிமைப்படுத்தி முறியடிக்கும் தேவை தரகு வர்க்கத்துக்கு உள்ளது(Nandigram, etc).

வரைமுறையின்றி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் தரகு வர்க்க அரசியல்வாதிகளும், அதற்க்கு தரகு வேலை செய்யும் பார்ப்ப்னிய பயங்கரவாதிகளும் தமது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள தொடர்ந்து ஒரு போலியான எதிரியை உருவாக்கும் தேவை உள்ளது.

பார்ப்பனியத்தின் நலனும், ஏகாதிபத்தியத்தின் நலனும் ஒரு சில சொற்பமான விசயங்களைத் தவிர்த்து வேறு எங்கும் முரன்படவில்லை. ஆனால் இவர்கள் இருவரின் நலனும் ஒன்றிணையும் புள்ளிகள் பல உள்ளன. தொடர்ந்து பயங்கரவாத பீதியூட்டுவதன் மூலம் தமது பாசிச செயல்பாடுகளையே நியாயமானது என்ற பொதுக்கருத்தை வலுப்பெறச் செய்யும் தேவை இருவருக்கும் உள்ளது.

ஏகாதிபத்தியத்தின் தேவைக்குட்பட்டு பார்ப்பனியம் இங்கு இருக்கும் அதே வேளையில் உபரியாக பார்ப்ப்னியத்தின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்குபவர்களுக்கு எதிராகவும் இந்த பாசிச சூழலை பயன்படுத்தும் சலுகையை ஏகாதிபத்தியம் பார்ப்ப்னியத்திற்க்கு உறுதிப்படுத்துகிறது.

அதே நேரத்தில் இந்திய பாசிசமான பார்ப்பனியத்தின் சித்தாந்த அடிப்படை என்பதே ஏகாதிபத்தியத்தின் சமூக பொருளாதார சுரண்டல் வடிவத்துக்கு சேவை செய்வதாக உள்ளதும் இவர்களின் சகோதரத்துவ உறவுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

இந்த சூழலில், ஏகாதிபத்தியத்திற்க்கு சேவை செய்யும் எந்தவொரு வோட்டுக் கட்சிகளும் தவிர்க்க இயலாமல் பார்ப்பனிய நடைமுறைகளை தமது செயல்பாடுகளாக கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதன் அளவு வேண்டுமானால் வோட்டுக் கட்சிக்கு வோட்டு கட்சி மாறுபடலாம். ஆனால் பார்ப்பனியம் இன்றி ஏகாதிபத்திய சேவை இந்தியாவில் செய்ய இயலாது என்பதுதான் உண்மை.

மேலும் பார்ப்பனியம் தனது நலன்களை மட்டும் முன்னிறுத்தும் சில பத்து அமைப்புகளை கொண்டுள்ளதோடல்லாமல். தனது தேவைக்காக பிற மத, இன, சாதி ஆட்களையும் சேவை செய்ய வைக்கும் இயல்புடன் எல்லா வகை அமைப்பு வடிவங்களிலும் ஊடுருவி நிற்கிறது. சில ஆயிரம் வருடங்கள் ஆட்சியிலிருந்த பார்ப்பனியம் சமூகத்தின் அனைத்து விழுமியங்களிலும் தனது இருப்பை காட்டிக் கொள்வது ஆச்சரியமான விசயமல்ல. இதனை நேரடியாக பார்ப்பனிய கட்சிகளில் இல்லாமலேயே பார்ப்பனிய சேவை செய்யும் பிற வோட்டுக் கட்சி பயங்கரவாதிகள் அதீதமாக காணக் கிடைப்பதைக் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்.

இதே நிலைதான் ஊடகங்களிலும் நிலவிவருகிறது. ஊடகங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியம் பார்ப்ப்னியம் என்ற இந்த கூட்டணியின் நீட்சியாகவே இருக்கின்றன. இவையணைத்தும் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரி பிரச்சாரம் செய்யும் அளவு அதன் நிர்வாக இடங்களில் RSS ஆட்கள் உட்கார்ந்துள்ளனர்.

இந்நிலையில் பின்வாங்கியதாக பரவசவாத குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகளால கருதப்பட்ட பார்ப்பனியம் இன்னும் வெளிப்படையாக தனது பாசிச நடவடிக்கைகளை நியாயப்படுத்திக் கொணடு பொது அரங்கில் வெளிகாட்டி வருகிறது. இன்னொரு பக்கம் மறுகாலனிய நடவடிக்கைகளும் மிக வேகமாக ஈவிரக்கமின்றி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இவை வேகம் பெறுகின்றன என்ற உண்மை நமக்கு நேர்மறையாக சொல்லும் விசயம் என்னவென்றால், இதற்கெதிரான மக்களின் போராட்டங்களும் வேகம் பெரும் என்பதைத்தான்.

எதிர்மறையாக நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், இவர்களின் பாசிச நடவடிக்கைகளும் வீரியம் பெற இருக்கின்றன என்பதே ஆகும். இவர்களின் பய பீதியூட்டும் கோயபல்ஸ் பிரச்சாரம் வேகம் பிடிக்கப் போகின்றன என்பதே ஆகும். பய பீதியூட்டவும், போலி எதிரியை உருவாக்கவும் தேவையான சம்பவங்கள் இனி தொடர்ந்து அடிக்கடி உற்பத்தி செய்யப்படும் என்பதே ஆகும்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் போடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சி நடந்தேறி வருகிறது. எந்த வகையிலும் வோட்டுக் கட்சிகள் இவர்களின்(ஏகாதிபத்தியம், பார்ப்பனியம்) நலனுக்கு ஊறானவர்கள் இல்லை என்பதால் போடா சட்டத்தில் வோட்டுக் கட்சிகளுக்கு மட்டும் விலக்கு கொடுக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் போடா சட்டம் தனது உண்மையான இலக்காகிய ஜனநாயக, புரட்சிகர சக்திகளுக்கு எதிராக மட்டும் வேலை செய்வதை உறுதிப்படுத்துவதுடன், அதற்க்கு எல்லா பிழைப்புவாதிகளின் ஆதரவையும் உறுதிப்படுத்த இருக்கின்றன பாசிச சக்திகள்.

இந்நிலையில் ஒவ்வொரு ஜனநாயகவாதியின் கடமையாக பார்ப்பனியத்தின் முழு வடிவத்தையும் (அதன் வர்க்க சார்பு, வர்ண சார்பு, சித்தாந்த பின்புலம்) புரிந்து கொண்டு அதற்கெதிரான கருத்து பிரச்சாரத்தை, அதன் ஆணி வேரை தகர்த்தெறியும் வகையில் செய்ய வேண்டிய மிக மிக முக்கியமாக உள்ளது. மாற்று ஊடகங்களை கட்டியமைப்பதின் மூலம் இந்த் உண்மையான அதி பயங்கர பயங்கரவாதம் குறித்து வெகு சனங்களிடம் கொண்டு செல்லும் கடமை வேறு எப்போதையும் விட இன்று மிக முக்கியமானதாக முன் வந்துள்ளது.

எந்தவொரு ஊசலாட்டத்திற்கும் இடமின்றி கறாராக ஏகாதிபத்தியம்-பார்ப்பனியம் கூட்டணிக்கும், ஜனநாயக-புரட்சிகர கூட்டணிக்கும் இடையில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் ஒரு வரலாற்று நிர்பந்தம் இதோ ஆரம்பமாகிவிட்டது. எல்லாவித மன சஞ்சலங்களையும் விட்டொழித்து விட்டு சமரசமின்றி சிந்திக்க கோரி ஜனநாயக சக்திகளுக்கு இந்த கட்டுரையின் மூலம் அரைக் கூவி அழைக்கிறேன்.

இந்த அம்சத்தில் செயல்பட வேண்டிய தேவையை முன்னிட்டு முதல் முயற்சியாக இந்தியாவின் பெரிய பயங்கரவாதமாகிய பார்ப்பனியத்தின் பயங்கரவாதத்தையும், அரசு பயங்கரவாதத்தையும் அறிமுகப்படுத்தும் விதமாக இந்த தளத்தில் செய்திகள், விமர்சனக் கட்டுரைகள் இடம்பெறும். இந்த தளத்தில் பங்களிக்க விரும்பும் ஜனநாயக சக்திகள் இந்த பின்வரும் மெயில் ஐடியை தொடர்பு கொள்ளவும் - asuran@inbox.com. அல்லது இந்த பதிவில்(http://terrorinfocus.blogspot.com/) பின்னூட்டமிடவும். தகவல்களை பெயர் வெளியிட விரும்பாமலும் தரலாம். தகவல்களின் நம்பகத்தன்மை உத்திரவாதப்படுத்தப்பட்ட பின்பு வெளியிடப்படும்.


பிற சிறுபான்மை பயங்கரவாத நடவடிக்கைகளை விரிவாக பேசி துவேசம் பரப்ப பாசிஸ்டு ஊடகங்கள் இருக்கின்ற காரணத்தாலும், வேறு வெகுசன முதாலளித்துவ ஊடகங்கள் இந்த அம்சத்தில் விவாதத்தை முன்னெடுத்து சென்று மக்களிடம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி வருவதாலும் அவற்றிற்கு இங்கு முக்கியத்துவம் தேவைப்பட்டால் ஒழிய அளிக்கப்படாது.

Terrorinfocus

Friday, May 18, 2007

இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது!

ந்து சேர்ந்தது வீட்டுக்கு
வண்ணத் தொலைக்காட்சி
வைத்துப் பார்ப்பதற்கேற்ற
வாட்டமான இடம்
விவாதத்துக்கிடையில்
ஒருவழியாக முடிவானது
கூடத்து மூலையில் கிடந்த
கிழவியின் படுக்கை
திண்ணைக்குப் போனது
கேட்க ஆளின்றி
பாட்டியின் கதைகளும்,அனுபவமும்
பேச்சு மறந்து வீணாய்ப் போனது.

ஆட்டிவிடும்போது
தொலைகாட்சிக்கு
அடிபட்டுவிடும் என்று
குழந்தையின் தொட்டிலும்
கழட்டப்பட்டது முன்வாசலில்
கேபிள் கொடி படர்வதற்கு
இணங்காத
முருங்கையின் கிளை
முறிக்கப்பட்டது.

ஆறுமணி தொடர் பார்ப்பதற்கு
ஊறு நேராதவாறு
ஐந்து மணிக்கெல்லாம்
கோழியின் கூடை கவிழ்க்கப்பட்டது
தண்ணீர் வேண்டி கத்திப்பார்த்த
சினையாடு
கண்டு கொள்ள ஆளில்லாமல்
வேலிதாண்டி கர்ப்பம் கலைந்தது.

படாத இடத்தில்
தொலைக்காட்சிக்குப்
பட்டுவிட்டால் வருமா எனப்பயந்து
பையனின் 'ஒளிந்து பிடித்து'
விளையாட்டும்
வீட்டை விட்டு விரட்டப்பட்டது.

விளம்பர இடைவேளைக்கிடையே
கொஞ்சம் விசாரிப்பு பின்பு
வெடுகென்று முகத்தை திருப்பி
'கோலங்கள்'
குடும்பத்தின் 'கவனிப்பு' தாங்காமல்
சொல்லாமலே ஓடிப்போனான்
சொந்தக்காரன்.
தொலைக்காட்சிப் பூவில்
தேனெடுக்கத் தவித்து
சுருண்டு விழுந்த வண்டைப் பார்த்து
பரிதாபத்தோடு
'இச்சு' கொட்டியது பல்லி.

மனிதக்குரலற்று வெறிச்சோடிய
வீதியைப் பார்த்துபீதியுற்று
அலறியது தெருநாய்
கதவைத் திறந்து கொண்டு
வந்தவனின்
மனிதக்குரைப்பைக் கேட்டு
நடுங்கிப் போனது நாய்.


"ச்சீ...நல்ல நாடகம் ஓடுறப்ப
இங்க வந்தா கத்துற நாயே...!" என
அடிக்கப் பாய்ந்து வந்த
குடும்பத்தலைவனின் விழிகளில்
இதற்கு முன் இப்படியொரு
வெறித்தனத்தைப்
பார்த்திராத தெருநாய்
உயிர்ப்பிழைத்தால் போதுமென்று
ஊரை விட்டே ஓடியது.

துரை.சண்முகம்

புதிய கலாச்சாரம் மே 2007 இருந்து

நன்றி ஸ்பார்டகஸ்



தொடர்புடைய பதிவுகள் :

" புதிய கலாச்சாரம்" மே 2007

Thursday, May 17, 2007

பற்றி படரும் பார்ப்பனியமும், பயந்தாங்கொள்ளி பிழைப்புவாதிகளும்

பார்ப்பன வெறி பத்திரிக்கையான இந்தியன் எக்ஸ்பிரஸில் இன்று வந்த கார்ட்டூனில் பார்கா அணிந்த முஸ்லீம் பெண் பிண்ணனியில் இருக்க சுற்றிலும் தீயிட்டு எரிக்கப்பட்ட பொருட்கள் கலவரச் சூழலாய் இருக்க, பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை விட ஜனநாயக நடைமுறைகள் மகா மோசமானதாக இருக்கிறதே என்று முஷாரப்ஃ புலம்புகிறார்.


பாகிஸ்தான் ஒரு கழுதை விட்டை எனில் இந்தியா இன்னொரு கழுதை விட்டை. பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரம் குறித்தோ அல்லது அங்கு நிலவும் பாசிச சூழல் குறித்தோ எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் பிண்ணனியில் இவர்கள் காட்டும் பார்கா அணிந்த பெண்தான் முக்கியமான அம்சம். அதாவது இஸ்லாம் எனும் வெறி பிடித்த மதம் என்பதுதான் படிப்பவரின் மனதில் ஏற்றப்படும் விசம்.


இங்கு பாசிச நாடாக இருந்த நேபாளத்தில் நேபாள அரசனின் வன்முறைகளை ஒப்பிட்டு நோக்க வேண்டும் அங்கு இந்த வெறியர்கள் வெகு கவனமுடன் காரியமாற்றுவதில் வெளி வருகிறது இவர்களது சாதி வெறியும், மத வெறியும். அங்கு ஆட்சியில் இருந்தது இவர்களின் பார்ப்ப்னியம்தான். அது தன்னை இந்து நாடு என்று அறிவித்த ஒரு நாடு. ஆயினும் இஸ்லாம் நாடு என்று அறிவித்த பாகிஸ்தானின் எல்லா தவறுகளையும் இஸ்லாமுடன் அடையாளப்படுத்தும் இந்த வெறியர்கள் என்றைக்கேனும் நேபாளத்தின் தவறுகளுக்கு பார்ப்ப்னியத்தை இவர்கள் எங்கும் பொறுப்பேற்க்க செய்வதில்லை.


இது போன்ற தொடர் பக்க சார்ப்பு பிரச்சாரம் என்பது திட்டமிட்ட ஒரு சதி. தாடியுடன் அழைபவரெல்லாம் தீவிரவாதியாக பார்க்கப்படும் பண்பாட்டு மாற்றம் ஏற்ப்படும் அதே நேரத்தில் கடை திறக்கும் சாதாரண சர்டிபிகேட் இந்து சாமி பாடல்கள் ஒலிபரப்பும் பண்பு மதவெறியாக பார்க்கபடாமல் இருக்கும் வித்தியாசத்தை உறுதிப்படுத்தும் விசம் இது போன்ற தொடர் செயல்பாடுகளால் சமூகத்தில் ஊட்டப்படுகின்றன. அதாவது இயல்பான மத அடையாள நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் சந்தேகக் கண் கொண்டு உற்று நோக்கும் உளவியல் மாற்றத்தை சமூகத்தில் பரப்புகிறார்கள். இதன் மூலம் பரஸ்பரம் வணிக உறவு முதல் பல்வேறு நடவடிக்கைகளில் இயல்பாய் புழங்கி வந்த மக்கள் மெதுவே மனதளவில் விலக்கப்படும் சூழல் உறுதிப்படுகிறது.


ஒரு பக்கம் இவர்களின் பிரச்சாரம் பெரும்பான்மை மக்களை களங்கப்படுத்துகிறது எனில் இஸ்லாமியர்களிடையே இருக்கும் அடிப்படைவாதிகளின் சிறிய அளவிலான செயல்பாடுகள் இன்னொரு முனையில் இந்த போக்கை வீரியப்படுத்துவதில் குறிப்பிடத்தகுந்த வினையாற்றுகிறது.


இதனை தொடர் பீதியூட்டல் மூலம் உறுதிப் படுத்துகின்றன பார்ப்ப்ன வெறி ஊடகங்கள். இந்த சமூக உளவியல் தந்திரங்கள் எல்லாம் இவர்களின் புதிய நடைமுறைகள் அல்ல. பாசிஸ்டுகளின் கொள்கை பிரச்சார குரு கோயபல்ஸ் இந்த வேலையைத்தான் செய்தான். அதனால்தான் இவர்களையும் கோயபல்ஸ்களின் வாரிசுகள் என்கிறோம்.


இதே பார்ப்பன வெறியர்கள், இதோ இன்று வரை கல்லூரியில் வைக்கப்பட்ட ஓவியங்களை எதிர்த்து இந்துத்துவ வெறியர்கள் நடத்தும் வெறியாட்டம், பஜ்ரங்தள் வெறியர்கள் குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் காலாச்சார காவலர்களாய் அட்டுழியம் செய்வதாகட்டும் அது பற்றிய இடங்களில் எங்கும் மத அடையாளங்களை முன்னிறுத்துவதில்லை.


வன்முறை என்பதோ பண்பாட்டு சூழல் என்பதோ அவரவர் வாழும் சமூக பொருளாதார சூழலே தீர்மாணிக்கிறது. மதம் எந்த காலத்திலும் இந்த பாண்பாட்டை (attitude) தீர்மாணிக்கும் முக்கிய காரணியாக இருப்பதில்லை. ஆனால் பார்ப்ப்ன வெறியர்கள் வலியுறுத்த விரும்புவதோ அதைத்தான். இதனை பொதுக் கருத்தாக உற்பத்தி செய்து தமது அரசியல் தேவைக்கு அறுவடை செய்வதை இந்தியாவில் பல இடங்களில் நிரூபித்துள்ளனர்.
இன்னும் சொன்னால் வன்மூறையை குற்றமின்றி செய்வதற்க்கான தார்மீக சித்தாந்தம் உடையது பார்ப்ப்னியமே.


பார்ப்ப்ன பயங்கரவாதிகள் முதலில் சமூகத்தை மதவெறிமயமாக்கிய பிறகு, அரசு இயந்திரத்தை மதவெறி மயமாக்குகிறார்கள் (ஏற்கனவே உயர்மட்டத்தில் இருக்கும் வெறியர்களையல்ல மாறாக அடிமட்ட இய்ந்திர பாகங்களை).


இன்று கர்நாடகா இந்தியாவின் இரண்டாவது குஜராத்தாக மாறி வருகிறது. இந்துத்துவம் சமூகத்தை மதவெறிமயமாக்க ஏதுவான சூழல் என்பது லும்பனைஸ்டு சமூக சூழலாகும். ஏகாதிபத்திய பொருளாதாரம் எங்கெல்லாம் வலுப்பெறுகிறதோ அங்கெல்லாம் பார்ப்ப்னியம் பீடு நடை போடுவது சாத்தியமே. ஏனேனில் அங்கெல்லாம் அரசும், ஏகாதிபத்திய தரகர்களும், உள்ளூர் நிலபிரபுத்துவ பிரதிநிதிகளும்(ஆதிக்க சாதியினர்) சேர்ந்தே RSS உள்ளிட்ட பாசிஸ்டு இயக்கங்களை வளர்க்கிறார்கள்.


ஏனேனில் சொத்துடைமை வரக்கத்தாராகிய ஆதிக்க சாதியினர் ஏகாதிபத்தியமயமான பெருநகரங்களில்(பெங்களூர்) தங்கி விடுகின்றனர். ஆனால் தாழ்த்தப்பட்ட சாதியினரோ அல்லது பெரு நகரங்களுக்கு வரும் பிற உழைக்கும் மக்களோ எந்த உரிமையும் இன்றி சேரிகளில் நாடோ டிகளாய வாழ்ந்து லும்பனைஸ்டு ஆகீறார்கள். ஆதாவது ஏற்கனவே ஜனநாயகமற்ற ஒரு நிலை நீடித்து நிலவுகிறது. இந்த உதிரி பாட்டாளிகளையும், வேலையற்ற ரவுடி கும்பல்களையும் எந்த ஒரு தர்க்க வியாக்கியன பிரச்சாரமும் இன்றி வெகு சுலபமாக அணி திரட்டும் சமூக வலைப் பின்னல் இந்த ஆதிக்க சாதியினரின் கையில் இருக்கிறது. இதோ கர்நாடக ஒரு வகை மாதிரியாக நம்முன் நிற்க்கிறது.


பார்ப்ப்ன வெறியர்கள் ஊடகங்களை மத வெறிமயமாக்கி வருவது குறித்தான கர்நாடகத்தின் சென்ற காலத்தில் வெகு பிரபலமாக களப்பணியாற்றி இன்று குடும்ப சண்டையால் சுணங்கிப் போயுள்ள முற்போக்கு வெகு சன பத்திரிக்கையான லங்கேஸ் பத்திரிக்கை ஆசிரியரான கௌரி லங்கேஸின் கட்டுரை:

Communalising the Media/Soceity



பார்ப்பன பயங்கரவாதிகள் சமூகத்தை உளவியல் பயமுறுத்தலுக்கு ஆளாக்கும் உத்தி:
http://sabrang.com/cc/archive/2006/sep06/cover2.html


அரசு இயந்திரத்தின் வன்முறை ஆயுதமாகிய போலீசை மதவெறிமயமாகியுள்ளது:

Communalising the State

ஜனநாயக சக்திகள் என்ன செய்வதாக உத்தேசம்?

கருணாநிதியை தொடர்ந்து ஆட்சியில் இருக்க வைத்தால் பார்ப்ப்னியத்தை வென்றுவிடலாமா? (பெரியா சிலை உடைப்பில் கோழை பிழைப்புவாத சர்டிபிகேட் பெரியாரிஸ்டுகளால் முன் வைக்கப்பட்ட வாதம் இது)


அல்லது வீரமணி போல NGO வேலை செய்தால் பார்ப்ப்னியத்தை முறியடித்து விடலாமா?


அசுரன்

Related Article:

Wednesday, May 16, 2007

நாலாவது தூண்களும், நாறும் போலி ஜனநாயகமும்!!

நாலாவது தூண்

தினத் தந்தி தலைப்புச் செய்தி:
பிறந்தார் பேரன்;
தாத்தா ஆனார் ரஜினிகாந்த்!

தலைப்புச் செய்தியே இப்படி என்றால்,
உள்ளே என்ன இருக்கும்?

சிறப்புச் செய்தி:
அதிசயம்,
ஆனால் உண்மை!

பிறந்தார் பேரன்;
தாத்தா ஆனார் ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
லதா ரஜினிகாந்த் பாட்டி ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
தனுஷ் அப்பா ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
ஐஸ்வர்யா தனுஷ் அம்மா ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
ஐஸ்வர்யாவின் தங்கை சித்தி ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
தனுஷின் அண்ணன் பெரியப்பா ஆனார்!

உங்களால் நம்ப முடிகிறதா,
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
கஸ்தூரி ராஜா கூட தாத்தா ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
கஸ்தூரி ராஜா பொண்டாட்டி கூட பாட்டி ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
கஸ்தூரி ராஜாவின் ஒன்று விட்ட சித்தப்பா....

பிற முக்கியமில்லாத செய்திகள்:
டெங்கு காய்ச்சல் பரவுகிறது! அரசு மெத்தனம்!
கடன் தொல்லையால் விஷம் குடித்த விவசாயி சாவு!
--இன்னும் சில இது போன்ற சில வழக்கமான,
ஆச்சரியப்பட வேண்டாத செய்திகள்--------

வாங்கிப் படியுங்கள் தினத் தந்தி!
வாழ்க இந்தியா!
வளர்க நாலாவது தூண்!

நன்றி அரசு பால்ராஜ்

Tuesday, May 01, 2007

சற்றுமுன் - சென்னையில் ரிலையன்ஸ் எதிர்ப்பு முற்றுகைப் போராட்டம் - மகஇக மற்றும் தோழமை அமைப்புகள்

ன்று காலை சென்னை, சின்மயா நகர், ரிலையன்ஸ் பிரஷ் பல்பொருள் அங்காடிக்கு அருகே மக்கள் கலை இலக்கிய கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இவர்களின் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. சில்லறை வியாபாரிகள், கோயெம்பேடு தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த போராட்டம் குறித்து ஏற்கனவே தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள், சுவரெழுத்துக்கள் மூலம் இந்த அமைப்புகள் விரிவாக பிரச்சாரம் செய்து அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


சில்லறை வணிகத்தில் பன்னாட்டு, தரகு கம்பேனிகள் நுழைந்து உள்நாட்டு அண்ணாச்சிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தோராயமாக இரண்டாயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டு கைதானதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.


இது குறித்தான செய்திகள் சன், ஜெயா, மக்கள் தொலைக்காட்சிகளில் மகஇக வின் தலைவர் தோழர் மருதையனின் பேட்டியுடன் ஒலி/ஒளி பரப்பப்பட்டது.


அசுரன்

Related Posts:

சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ்

மே 1 சென்னையில் ரிலையன்ஸ் பிரஷ் முற்றுகை

சில்லறை வணிகம் எனும் பெருங்காதை!

கருணாநிதியின் அரிசியும், ஹிட்லரின் ரொட்டித் துண்டும்....

Related Posts with Thumbnails