TerrorisminFocus

Showing posts with label சாதி. Show all posts
Showing posts with label சாதி. Show all posts

Saturday, October 05, 2013

மேநாட்டுக்கார பக்தனானலும் என்னாட்டுக்காரனென அருளிய மீனாட்சி!!

அது ஒரு ஆன்மிகச் சொற்பொழிவு. பேசிக் கொண்டிருந்த பெரியவர் ஒரு கதை சொல்லிக் கொண்டிருந்தார். கண்கண்ட தெய்வம் மதுரை மீனாட்சி தனது பக்தனுக்கு அருள் பாலித்து காப்பாற்றுவதற்கு எழுந்தருளிய கதை அது. கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் உணர்ச்சி மேவிட உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தது. கதை இதுதான், கதையல்ல நிஜமாகத்தான் இருக்கும்.

ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் வெள்ளைக்கார துரை ஒருவன் மீனாட்சி மீது மிக பக்தியாக இருந்திருக்கிறான். மீனாட்சியை தரிசிக்க ஆவல் இருந்த போதும் கோயில் உள்ளே எல்லாம் செல்வதில்லையாம்(என்ன காரணம்... ம்...) வெளியவே இருந்து பார்த்துக் கொள்வானாம். இப்படியாக நாட்கள் கழிந்தன. ஒருநாள் அவன் மொட்டை மாடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான்(இரவுதான்). திடீரென்று பெருமழை. இடியும் மின்னலுமாக அடித்து நொறுக்குகிறது. இவனோ அசந்து தூங்குகிறான். அப்போது அங்கே தோன்றிய அன்னை மீனாட்சி அவனை தட்டியெழுப்பி, அப்பனே என்னுடன் வா என்று அழைத்துச் செல்கிறாள். இவனும் அன்னையின் தரிசனம் கிடைத்த பெரூவகையில் பின்னாலே சென்று விடுகிறான். கோயில் வாசல் வரை கூட்டிச் சென்றவள் அங்கேயே மறைந்து விடுகிறாள் (கோயிலுக்குள் ஏன் கூட்டிச் செல்லவில்லை? என்ன காரணம்.. ம்...). இவனும் சரி பார்த்த வரை பரவசம் என்று கலெக்டர் மாளிகைக்கு திரும்பி வருகிறான். வந்து பார்த்தால் வேலைக்காரர்களெல்லாம் மாளிகை வெளியே பெரும் பரபரப்புடன் நின்று கொண்டிருக்கிறார்கள். காரணம் கலெக்டர் படுத்திருந்த இடத்தில் இடி இறங்கி முற்றிலும் பொசுங்கிப் போயிருந்தது. இப்படியாக கடை கோடி பக்தனுக்கு மட்டுமல்ல கடல் கடந்த பரதேசி பக்தனுக்கு அருள் பாலிக்கும் தெய்வம் அன்னை மீனாட்சி என்று கூறி உரையை தொடர்ந்து கொண்டிருந்தார் பெரியவர்.

நமக்கு மண்டையில் எக்கச்சக்கசக்கசக்க கேள்விகள். மொத கேள்வி பிரிட்டிஸ்கார நாய்க்கு சேவை செய்வதில் எப்படி ஆர் எஸ் எஸ்ம், ஆண்டாளும்... ஸாரி மீனாட்சி அன்னையும் ஒரே விதமாக சிந்தித்து செயல்பட்டனர் என்பது வியப்பளித்தது. மதுரை மீனாட்சி கோயில் உயிர் வாழ்வதே அங்குள்ள மக்களின் உழைப்பால்தான் எனும் போது அதை சுரண்டி கூறு கெடுக்கும் ஆங்கிலேயெ கலெக்டர் ஒருவனை பாதுகாப்பது என்பது அந்த மக்களுக்கு செய்யும் துரோகம் ஆயிற்றே?

நெண்டாவது கேள்வியாக தோன்றியது, வெள்ளைக்காரன் வெள்ளைக்காரந்தான் அவன் ஆய் போனாலும் அது ஒரு தனி அழகுதான் என்று ரசித்து மயங்கும் மனோபாவம் பாவம் தெய்வத்தையும் விட்டு வைக்கவில்லையே என்று தோன்றியது. இங்கே அவனவன் மொட்டைகளையும், கொட்டைகளையும், ஏன் பட்டைகளையும் கூட போட்டுக் கொண்டு தெய்வமே கதி என்று கிடக்க அவனுக்கெல்லாம் ஒரு சின்ன பிட்டு சீனு கூட காட்டாத மீனாட்சி, அந்த பரதேசி (அட பரதேசின்னாக்க வெளிநாட்டுக்காரன்னு அர்த்தமுங்க. ஆர் எஸ் எஸ் காரண்ட கேளுங்க அவனுக்குத்தான் இந்தி தெரியுமே) வெள்ளைக்காரன் மனுசுல ரோசிச்சதுக்கே எக்ஸ்ட்ரா எபெக்ட் கொடுத்து காப்பத்திருக்கு இந்த அம்மா. அப்போ இங்கன கெடந்து உருகுனெவனெல்லாம் லூசுப்பயலுவன்னு நான் சொல்லலீங்கோ அந்த அம்மா சொல்லுது இல்லைன்னாக்க அந்த சொற்பொழிவை ஆத்து ஆத்து என்று ஆத்திய பெரியவர் சொல்றாருங்கோ.

மூனாவது நெம்ப முக்கியமான கேள்விங்கோ, கோயிலுக்குள்ளார வெள்ளையன் ஏன் போகலன்னு(போக முடியலன்னு) நான் ஆராய்ச்சி செஞ்சா ஒரு சாதிய மட்டும் திட்டுறீங்கன்னு கோபப்படுறாய்ங்க. அந்த கேள்விக்கு சரியான இன்னொரு பதில் ஒன்னு இருக்குங்கோ அதையே கேள்வியக் கேட்டாக்க இந்த கேள்விக்கு பதில் கிடைச்சிரும் (ரொம்ப குழப்பமா இருக்குல்ல?). அதாவது பாரத தேசம், பாரினிலே  ஒரு ஆன்மிக ஊற்று, அது மனித வாழ்வை கடைத்தேற்ற நமக்கு காட்டிய தெய்வங்களை உளமார தொழுது வேண்டியவர்களில் ஒரு சாதியைச் சேர்ந்தவர் தவிர மீதி எல்லாருமே நெருப்புக்கும், இன்னபிற விசயங்களுக்கும் இரையாகி முக்தி அடைந்துள்ளனரே அந்த மர்மம் என்ன? உளமார தொழுத நந்தனார் கடைசி வரை சிவனை பார்க்கவே இயலவில்லை. அவரால முடியலப்பா அப்படித்தான் சொல்லோனும். இல்லைன்னாக்க ஒரு சாதிய திட்டுறாய்னு கடுப்பேத்துவாய்ங்க் லார்டுங்க. சிவனை பார்த்தே தீருவேன்னு போய் நின்னவர நெருப்புத்தான் தீண்டுச்சி (அதுவாவது தீண்டுச்சே). முக்தி இப்படித்தான் அவருக்கு கிடைத்தது. அதே போல அந்த வெள்ளைக்காரனுக்கும் மின்னல் மூலம் முக்தி கிடைக்கச் செய்திருக்கலாமே? வை திஸ் பார்சியாலிட்டி, இது வெள்ளைக்காரனுக்கு மட்டுமில்லை, மேலே ஏற்கனவே சொன்னது போல அந்த குறிப்பிட்ட சாதிக்காரங்களுக்கும் கூட இகலோக வாழ்க்கைக்கான அதிகபட்ச உத்திரவாதத்துடன் தான் முக்தி கிடைக்குது. மத்தவனுக்கு மொத்த உயிர பறிச்சுத்தான் முக்தி கிடைக்குது. அப்போ அந்த ஸ்பெசல் குவாலிபிகேசன் அந்த குறிப்பிட்ட சாதி அது இல்லைனா சாதியே இல்லாத மேட்டுக்குடி வெளிநாட்டுக்காரன் அப்படித்தானே?

இந்த கேள்விக்கு யாராவது ஆன்மிக அறிஞர்கள் பதில் சொன்னால் 'ரொம்ப வசதியா' இருக்கும். சொல்வாய்ங்களா?

அசுரன்

Wednesday, July 14, 2010

இது துரோகத்தின் விளை நிலம்!








துரோகம் 1:
கயர்லாஞ்சி (2006 செப்) என்ற பெயர் பலருக்கு மறந்திருக்கும். ஞாபகம் இல்லாதோர் இந்த சுட்டியில் படித்துக் கொள்ளவும்.

கயர்வாஞ்சி தாழ்த்தப்பட்டோர் படுகொலை : சாதிவெறியர்களின் வக்கிரம்-கொடூரம்!

கயர்லாஞ்சி சாதிவெறிப் படுகொலை இந்தியாவைவே உலுக்கியது. ஏனென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய மாதக்கணக்கிலான வீரம் செறிந்த போராட்டத்தின் காரணமாக இந்தியா குலுங்கியது. பத்திரிகைகள் இந்தப் படுகொலையை போராட்டங்கள் வீரியமாக மாறிய ஒரு மாதம் முழுவதும் வெளியிடமால் ரகசியமாகவே வைத்திருந்தன. ஆனந்த் தெல்தும்பெடே அவர்கள் இந்தப் படுகொலையை ஒட்டி உலகமய அரசியல் சாதியத்தை எத்தகைய பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது என்று விரிவானதொரு ஆய்வுக் கட்டுரையையும் எழுதினார். உலகமயம் அடிப்படையில் உழைக்கும் மக்களை ஒடுக்குகிறது என்ற வகையில் தாழ்த்தப்பட்டவர்களும் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதே அதன் சாரம். கயரலாஞ்சி காட்டும் பேருண்மைகள் - உலகமயம் - தலித்தியம் - தலித் விடுதலை

இந்தப் படுகொலை வழக்கை கையிலெடுத்த சிபிஐ வழக்கம் போல தனது துரோகத்தை அரங்கேற்றத் துவங்கியது. சிபிஐ கேட்டுக் கொண்டதன் பேரில் பிப்ரவரி 2007ல் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 46 பேரில் 35 பேர் விடுவிக்கப்பட்டனர்.

செப் 2008ல் குற்றம்ச்சாட்டப்பட்ட 11பேரில் 6 பேருக்கு மரண தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் மூவரை விடுவித்தும் தீர்ப்பானது.

ஆனால் தண்டனைக்கான காரணங்களாக சாதிவெறி வன்கொடுமையோ, பெண் மீதான பாலியல் அத்துமீறலோ, திட்டம்மிட்ட படுகொலை முயற்சி என்பதோ சொல்லப்படவில்லை. அதாவது மொத்தத்தில் கயர்லாஞ்சி படுகொலை ஒரு படுகொலை மட்டுமே. அதில் சாதியோ, பெண்ணடிமைத்தனமோ இல்லை இல்லை இல்லைவேயில்லை என்பதே செப் 2008 தீர்ப்பின் சாரம்.

கயாலாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும்

இவ்வாறாக, வழக்கு அடுத்தக்க்கட்ட நீர்த்துப் போதலுக்குச் சென்றது. சாதிவெறிப் படுகொலை வெறும் 'கொலை வழக்காக' மாறியது. மேல் முறையீடு செய்யப்பட்ட இந்த நீர்த்துப் போன வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நடந்துவந்தது. இதோ இன்று அந்தக் 'கொலை வழக்கில்' தீர்ப்பு வந்துள்ளது. ஆறு சாதி வெறியர்களுக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுவிட்டது.

இதே போலத்தான் கிருத்துவர்கள் மீது ஒரிஸ்ஸாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி வந்த பஜ்ரங் தள் இந்து பயங்கரவாதி தாராசிங்ன் மீதான வழக்கும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது. போபால் வழக்கு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

துரோகம் 2, 3.. என்று பட்டியலிட கீழ் வெண்மணியிலிருந்து, போபால் வரை பெரிய பட்டியலே உள்ளது.

இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாம். உலகின் மிகப் பெரிய துரோகிகளின் நாடு என்று பெயர் மாற்றுங்கள் அதுவே பொருத்தமாக இருக்கும்.

அசுரன்

தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைகளின் தொகுப்பு

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!

காவிக் கறை படிந்த தீர்ப்புகள்

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியுமா எது உள்ளே எது வெளியே என்று?


சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்... அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

Monday, October 26, 2009

கவிதையைப் படிக்கும் முன்….

கவிதையைப் படிக்கும் முன்….

காலனி(ணி)க் கவிதை
""
ஆனால்,
நீ என்னோடு வரும்போழுது,
உன் பிஞ்சுப் பாதங்களால்
மேலத்தெருவில் அழுத்தமாய்
பாதம் பதித்து நடக்க வேண்டும்.

உன் காலணிகளின் அடியிலிருந்து எழும் இசை
அந்தத் தெருவில் குடிகொண்டிருக்கும்
ஜாதியத்தின் செவிகளை
துளைத்தெடுக்க வேண்டும்.

செய்வாயா என் செல்ல மகளே!
""


"இப்பொ யாருங்க சாதி பாக்குறாங்க? " வினயமாகக் கேட்டார் ஆனந்த பவனில் காபி குடித்துக் கொண்டிருந்த ஆறுமுகப் பாண்டியன். தினமலர் செய்தி ஏட்டில் முக்குலத்தோர் மணமாலையில் மணமகன் தேடி விளம்பரம் கொடுத்திருந்த செய்தித் தாளை அருகில் வைத்துக் கொண்டே.

"ஏதாவது சிறுசா நடந்துடக் கூடாது, உடனே தலித்து தலித்துன்னு கூப்பாடு போட்டு ஊரக் கூட்டிருவாங்க. வேலையத்த பயளுக.", அமைதி விரும்பியாக அறவுரை வழங்கினார் 'Veg ஒன்லி' விளம்பரம் கொடுத்து வீடு வாடகைக்கு விடும் பக்கத்து வீட்டு பரசுராமன்.

"அதெல்லாம் அந்தக் காலம், இப்போ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வைச்சி மேல் சாதிக்காரன கொடுமப்படுத்துறாங்க" சமூக நீதி போதனை செய்தார், பேராசிரியர் திருவேல்முருகன், தனக்குப் பின்னால் ஒட்டியிருந்த கீழ் வெண்மணி நினைவுநாள் சுவரொட்டியையும், கடையில் தொங்க விடப்பட்டிருந்த வாரப் பத்திரிகையில் தெரிந்த கயர்லாஞ்சி தீர்ப்பையும் தனது தொந்தியால் மறைத்துக் கொண்டே..

"அவா அவா வேலய அவா அவா செஞ்சா லோகத்துல என்ன பிரச்சினை வந்துடப் போறது?" பாதாளச் சாக்கடையில் இறங்கி கழிவு அகற்றியவருக்கு 10 ரூபாய் அருளிக் கொண்டே நவீன வர்ணாஸ்ரமத்தை அழுத்தம் திருத்தமாக கேட்டார் ஹரிராமன், பக்கத்தில் தொலைக்காட்சிப் பெட்டி பல்லிளித்துக் கொண்டிருந்தது - "அனைவரும் அர்ச்சகர் ஆவதற்கு நீதிமன்றத் தடை கோரும் வழக்கு விசாரணைக்கு வந்தது."

"தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் அவனோட அடையாளங்களை பெருமையா காட்டிக் கொள்வதை யார் தடுத்தாங்க?" நெத்தியில் கண்ணைக் கூசுச் செய்யும் அளவு நாமம் போட்டுக் கொண்டே நியாயம் பேசினார் வெங்கடராம நாயக்கர், மாட்டுக் கறி தின்ற ஹரியான தலித்துக்களின் தோலுரித்துக் கொன்ற ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும் நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டுதான் நியாயப்படுத்தினர் என்பது, கண்ணில் நிழலாடியது.

தடித்த, சொரனையற்ற சாதியக் காதுகளுக்கு எவ்வளவு அருகில் சென்று காலனி(ணி)ச் சத்தங்கள் ஒலிக்க முடியுமோ அவ்வளவு அருகில் சென்று ஒலிக்கட்டும், அப்பொழுதாவது சாதிய வண்ணம் பூசிய இந்த ஆபாசங்களையே நியாயம், நீதி என்று பேசுபவர்களின் செவிட்டுத் தனம் கிழிகிறதா என்று பார்க்கலாம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான வன்கொடுமைகளை தினமும் தொகுத்து வழங்கும் ஒரு தளம்.


காலனிச் சத்தங்கள்

என் செல்ல மகளே!
நீ பிறந்ததில் எனக்கு
மிக்க மகிழ்ச்சி.

உன் தாத்தாவிற்குத்தான்
என் மீது கொஞ்சம் வருத்தம்.
குலசாமி பெயர் விடுத்து,
மரித்தவர்களின் ஊர்ப்பெயரை
உனக்கு சூட்டியதற்காக…
முடிந்தவரை விளக்கிவிட்டு
பிடிவாதமாய்,
வெண்மணி என்றே உனக்கு
பெயரிட்டு விட்டேன்.
என்னைப் பொறுத்தவரை அவர்கள்
மரிக்கவில்லை.

நகரவாழ்வின் விழுமியங்களோடு
சங்கமித்து நிறைய வருடங்கள்
உருண்டோடிவிட்டன.
அதன் தொடர்ச்சியாய் – இப்பொழுது
நீயும் வந்துவிட்டாய்…

கடந்துவந்த தூரங்களின்
நீளத்தை என்றாவது ஒருநாள்- நீ
கேட்டறிய வேண்டும் என்பதே
என் ஆவல்.

ஏனெனில்,
தழும்புகளற்ற காயங்கள்
என்னிடம் நிறைய உண்டு.
அதை உன்னோடு பகிர்ந்து கொள்ளும் போது
உனக்குள் ஒரு பண்புமாற்றம்
நிகழலாம் என்பது என் நம்பிக்கை.

முரண்களின் மூட்டையாக
இருக்கும் இந்த சமூக அமைப்பின்
சிக்கல்களை
அறுத்தெறிவதற்கான ஆயுதமாக…
அந்த நம்பிக்கை
உனக்குள்ளும் ஊடுருவலாம்.

அழகிய ஓவிய வேலைப்பாடுகளடங்கிய
பீங்கான் குவளைகளில்,
நீயும் நானும்- இப்பொழுது
தேநீர் அருந்திகொண்டிருக்கிறோம்,
இவை நாம் எட்டிய
குறைந்தபட்ச வாழ்க்கை.

இது நடந்தது கூட
உடனடி நிகழ்வல்ல,
ஒரு நெடிய போராட்டத்தின்
விளைவு.

பனை மரத்து ஓலைகள்,
செரட்டைகள்,
அலுமினிய கிண்ணங்கள்…
இவைகள்தான்
உனது முன்னோர்களின்
தேநீர் குவளைகள்

அதாவது,
‘நாகரிக’ சமூகத்தை
தலைகுனியச் செய்திடும்
இருண்ட கணங்கள்.

“மனிதர்களை ‘மனிதர்’
நாயினும் கேவலமாய்
நடத்த முடியுமா அப்பா?”
என்று நீ கேட்கலாம்.

ஆம்,
இப்பொழுதும் இந்த வன்கொடுமைகள்
தொடர்கிறது…
புதிய வடிவங்களில்.
நீ எதிர்கொள்ளும்போது
இன்னும் நவீனப்பட்டிருக்கலாம்.

ஆனாலும்,
உன் கல்விக்கூடத்தில்
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்,
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,
………………………………’ என்று,
நாடே புனித திருவுருவாய்
இருப்பதுபோல்
வெற்று வார்த்தைகளை
உன்னுள் இட்டு நிரப்புவார்கள்

அப்பொழுது
உண்மையையும், பொய்யையும்,
உரசி பார்த்துக்கொள்ள
நம் பகிர்தல் உனக்கு பயன்படலாம்.

என் செல்ல மகளே!
நீ நடைபயில கற்றுக்கொண்ட
தருணங்கள் – உண்மையில்
அழகானவை, அற்புதமானவை.

எல்லா அப்பாக்களையும் போல்
அந்நிமிடங்களை மிகுந்த
ரசனையோடு விழுங்கியுள்ளேன்.

இருக்கட்டும்.
கடைவீதிக்கு சென்ற போதுதான்
உன் அம்மாவின் செல்ல கத்தல்
ஞாபகத்திற்கு வந்தது.

“குழந்தை இருக்கும் வீட்டில்
பொம்மைகளைவிட -
புத்தகங்கள்தான் அதிகமாய் உள்ளது,
அவள் எவற்றோடுதான் விளையாடுவாள்?”

உனக்கான பொம்மைகள்
விளையாட்டு பொருட்கள்,
நிறைய வண்ணங்கள்
கொஞ்சம் தூரிகைகள்…

எல்லாம் வாங்கிவிட்டேன்
குறிப்பாக,
நீ விரும்பி கேட்ட
அழுத்தி நடந்தால்
இசை எழுப்பக்கூடிய காலணிகளையும்
கவனமாய் வாங்கிக் கொண்டேன்.

அடுத்த வாரம்
அநேகமாய் நாம் ஊருக்கு
செல்ல நேரிடும்.

அப்பொழுது மேலத்தெரு வழியாகத்தான்
தாத்தா வீட்டிற்கு செல்வோம்.

அந்த வழியாக,
உன் கொல்லுத் தாத்தா,
தாத்தா…, ஏன் நானும் கூட
செருப்பை கையில் தூக்கியபடிதான்
கடந்து சென்றுள்ளோம்

ஆனால்,
நீ என்னோடு வரும்போழுது,
உன் பிஞ்சுப் பாதங்களால்
மேலத்தெருவில் அழுத்தமாய்
பாதம் பதித்து நடக்க வேண்டும்.

உன் காலணிகளின் அடியிலிருந்து எழும் இசை
அந்தத் தெருவில் குடிகொண்டிருக்கும்
ஜாதியத்தின் செவிகளை
துளைத்தெடுக்க வேண்டும்.

செய்வாயா என் செல்ல மகளே!

நீ நடைபயில கற்றுக்கொண்ட
தருணங்களை விட,
அப்போதைய நிமிடங்கள் இன்னும்
அழகானதாய், அற்புதமானதாய் இருக்கும்.

- முகிலன்

Tuesday, July 17, 2007

ஆண்ட சாதிகளும், இடஓதுக்கீட்டின் உள் அரசியலும்

டஒதுக்கீடு குறித்து குழலி பல்வேறு வாதங்களை வைத்துள்ளார். அவற்றிற்கெல்லாம் மையமாக இருக்கும் ஒரேயொரு அம்சம் கீழே உள்ளதுதான். அதனை மட்டும் உடைத்து வாதிட்டால் போதும் என்று கருதுவதால் இந்த பதிவு.

அது தவிர்த்து இந்த கீழ் கண்ட குழலியின் புரிதலை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்ட பிற வாதங்களை முந்தைய அசுரன் கட்டுரையின் பின்னூட்டங்களில் தோழர்களும், நண்பர்களும் உடைத்துள்ளனர். அந்த பின்னூட்டங்களின் அடிப்படையிலான வாதங்களும் இந்த கட்டுரையில் முன்னெடுக்கப்படும்.



//பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு ஆண்ட சாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் ம க இ க தோழர்கள், சற்று யோசித்து பார்க்க வேண்டும், இடஒதுக்கீடு புள்ளிவிபரங்கள் சொல்வது இந்த ஆண்ட சாதிகள் எத்தனை சதவீத இடங்களை பிடித்துள்ளனர், பார்ப்பனர்களோடு சேர்ந்து இவர்களும் சுரண்டுபவர்கள் என்றால் பார்ப்பனர்களும் இவர்களும் இணையாகவோ அல்லது ஓரளவிற்காவது நிரம்பியிருக்க வேண்டுமே, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு முன் இவர்கள் நிரம்ப வில்லையே ஏன்?//

இது குழலி சொன்னது,

நாங்க சொல்வது இங்கு பார்ப்பன்ர்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளதை ஏன் தாழ்த்தப்பட்டவர்களுடனும், பிற பிற்படுத்தப்பட்டவர்களுடனும் ஒப்பிட்டு எழுதவில்லை என்பதுதான்.

ஏனெனில் பாப்பனரின் மேலாதிக்கம் குறித்த விசயத்தில் எமக்கு, உங்களுக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அதாவது மேற்சொன்ன விசயத்தில் எமக்கும் உங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை.

மாறாக, பிற்படுத்தப்பட்டவர் இடஓதுக்கீட்டில் ஒரு சில ஆதிக்க சாதியினர் மட்டும் பயன்பெறுவதும் அந்த சாதியினர் எல்லாம் தமது சாதி வெறி ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருவதும் குறித்தே எமக்கும் உங்களுக்கு கருத்து வேறுபாடு.

இத்துடன் நாளும் வலுப் பெற்று வரும் சாதி உணர்வுக்கு எதிராகவும். அதன் பாற்ப்பட்ட வன்முறைக்கெதிராகவும் என்ன நடைமுறை தந்திரம் வைத்துள்ளீர்கள் என்பதை கேள்வி கேட்க்கிறோம். குறிப்பாக ஆதிக்க சாதியினரை கண்டுகொள்ளாமல் அவர்களை இடஓதுக்கீட்டுக்காக மட்டும் அணி திரட்டும் போக்கு எங்கு கொண்டு விட்டுள்ளது என்பதை சாதி சங்கங்களின் வலிமை பறை சாற்றுகிறது. பெரியார் திக சாதி வெறிக்கெதிராக பிரச்சாரம் செய்தால், திக ன்னு சொல்ற இடஓதுக்கீடை மட்டும் பேசு ஏன் ரெட்ட டம்ளர பத்தி பேசுற என்று கவுண்ட சாதி வெறியர்கள் அடிக்க வெரும் திமிர்த்தனத்துக்கு குழலி உள்ளிட்டவர்களின் பதில் என்ன என்று கேட்க்கிறோம்.

இந்த காரணத்தினாலேயே மேலேயுள்ள உங்களது ஒப்பீடு எந்த வகையிலும் எமது குற்றச்சாட்டிற்க்கான பதிலாக இல்லை.

இங்கு பார்ப்பன்ரையும் பிற்ப்படுத்தப்பட்டவர் பட்டியலில் உள்ள ஆதிக்க சாதியினரையும் ஒப்பிட்ட குழலி அதே கையோடு பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் உள்ள ஒடுக்கப்ப்ட்ட சாதியினருடன் ஆதிக்க சாதியினரை ஒப்பிட்டால் இந்த வகை இடஓதுக்கீட்டின் மோசடி தெரிய வரும். அதாவது ஆதிக்க சாதியினர், உண்மையிலேயே ஒடுக்குமுறைக்காளான பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரின் இடஓதூக்கீட்டை தின்று வருவது தெரியவரும். அத்துடன் இல்லாமல் சாதி வெறியுடன் துடுக்குத்தனம் செய்து வருவதும் தெரியவரும்.

பிறபடுத்தப்பட்டோர் குறித்த வரையறையை, பட்டியலை மாற்றியமைக்க கோரும் மகஇகவின் வாதம் இங்குதான் நிலை கொண்டுள்ளது.

இதுதான் நாம் வாதிடும் மையமான விசயமாக உள்ளது.

மேலே சொன்ன விசயத்தை கவனத்தில் கொண்டுதான் பிற்படுத்தப்பட்டோர் இடஓதுக்கீட்டை பெருவாரியாக விழுங்கி வரும் ஆதிக்க சாதியினரை தனியாக பிரித்தோ அல்லது உள் ஒதுக்கீடு கொடுத்து பிற ஒடுக்கப்ப்ட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடஓதுக்கீட்டின் பலன் போய்ச் சேர வழி வகுக்க வேண்டும் என்பதுதான் மகஇக கோரிக்கை.

இந்த விசய்த்தில் ஏன் உங்களிடமிருந்து பதில் இல்லை.

இந்த உள் ஒதுக்கீடு செய்வதில் அல்லது ஒதுக்கீடு செய்யாமல் சமூக புறக்கணிப்பு செய்வதில் என்ன சிக்கல் வந்து விடப் போகிறது?

இந்த விசயத்தை வலியுறுத்தியே யாரோ ஒரு தோழர் BC1, BC2 என்று உட்பிரிவு ஒதுக்க வேண்டும் என்ற ஒரு பரிந்துரை செய்திருந்தார். இது நல்ல யோசனையாகத்தான் படுகிறது.

இத்துடன் சேர்ந்து சாதி மறுப்பு திருமணம் செய்தவருக்கு இடஓதுக்கீட்டில் முன்னுரிமை, தனி ஒதுக்கீடும் செய்வது.

ஆதிக்க சாதி வெறியர்கள் ஆட்டம் போடும் இடங்களில் ஒட்டு மொத்தமாக இடஓதுக்கீட்டை ஆதிக்க சாதிகளுக்கு ரத்து செய்வது. அங்கு நடைபெறும் வளர்ச்சிப் பணிகளில் ஆதிக்க சாதி வெறியர்கள் புறக்கணிக்கப்படுவது. அதாவது ஒட்டு மொத்தமாக ஆதிக்க சாதியினர் ஆட்டப் போடும் இடங்களில் அவர்களை சமூக புறக்கணீப்பு செய்ய ஜனநாயக சக்திகளையும், பொது மக்களையும் அணி திரட்டுவது. அந்த பகுதிகளில் ஆதிக்க சாதிகளின் இடஓதுக்கீட்டு பங்கை பிற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒதுக்குவது உள்ளிட்ட செயல்பாடுகள்.

இந்த வேலைகளை செய்வதில் என்ன சிக்கல் வந்து விடப் போகிறது?

இதைச் சொன்னால் மறைமுகப் பார்ப்னியம் என்று அவதூறு சொல்லும் பொழுது நமக்கு சந்தேகம் வருகிறது, சமூக நீதி பேசும் இவர்கள்தான் உண்மையான மனு நிதியின் காவலர்களாம பார்ப்னர்களோ என்று.

இது சந்தேகம்தான். எதுவும் ஊர்ஜிதப் படுத்தி சொல்லவில்லை. நண்பர்கள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.

இது தவிர்த்து இடஓதுக்கீடு என்பது ஒரு சீர்திருத்தம் தானேயொழிய சர்வரோக நிவாரணி அல்ல என்பதும். அந்த காரணத்தினாலேயே அதை நடைமுறைபடுத்துவது இருக்கின்ற சமூக பொருளாதார பிரச்சனைகளை வேறு வடிவங்களுக்கு பரிணமிக்க்ச் செய்யும் இயல்புடையது என்பதையும் நாம் குற்றச்சாட்டாக வைக்கிறோம். இப்படி சொல்வதின் அர்த்தம் இடஓதுக்கீட்டை எதிர்ப்பது அல்ல. மாறாக இடஓதுக்கீடு என்ற சீர்திருத்தத்துடன் ஒடுக்கப்பட்டவர்கள் திருப்திப் பட்டு நின்று விடக் கூடாது என்பதை அவர்களுக்கு புரிய வைத்து, நிரந்தர தீர்வு நோக்கி மக்களை அரசியல்படுத்தும் தேவைக்காகவே இப்படி சொல்கிறோம். இங்கு நடப்பதோ இடஓதுக்கீடு ஒன்றே எல்லா சாதிய, சமுக பொருளாதார சிக்கல்களையும் தீர்த்துவிடும் என்ற மயக்கத்தின் பாற்ப்பட்ட பிரச்சாரமே. இந்த அம்சம் குறித்தும் விவாதம் செய்யலாம்.

அசுரன்



இந்த அம்சத்தில் சிந்தனையை தூண்டும் சில பின்னூட்டங்கள்(முந்தைய கட்டுரையிலிருந்து):


//உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டடீரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது.//

குழலி, இது தான் மோசடியென்பது. பார்ப்பனரல்லாத "தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோ ரும்" என்று சொல்வதன் மூலம் தலித், பழங்குடி, பிற்பட்டோ ர் எனப்படுவோர் அனைவரையும் ஒரே தட்டில் நிற்க வைக்க முடியாது. இங்கே பிற்பட்டோ ர் என்று வகைப் படுத்தப்பட்டுள்ள எல்லோரையும் ம.க.இ.க ஆண்ட பரம்பரையென்று சொல்லி நிராகரிக்கவில்லை. அவர்களுக்குள்ளும் சேவைச் சாதிகளாய் இருக்கும் குயவர், தச்சர், குரும்பர், வெள்ளாளர்களில் ஒரு சில வகையினரை இடஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்றே சொல்கிறார்கள். அதாவது இடஒதுக்கீடு அதன் முழுமையான பலன் யாருக்குச் செல்ல வேண்டுமோ அவர்களுக்கே செல்ல வேண்டும் என்பதே ம.க.இ.க நிலை.

இதில் உங்கள் மோசடி எங்கே வருகிறது? "பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்டோ ர்" என்கிற வகையின் கீழ் ஆதிக்க சாதிகளான தேவர், மறவர், செட்டியார், வெள்ளாலக் கவுண்டர்கள், முதலியார்கள், நாயுடுக்கள், நாயக்கர்கள்.. இப்படி பண்ணெடுங்காலமாக பார்ப்பனியத்தின் செயல் வீரர்களாய் இருந்தவர்களையெல்லாம் ஒரே பட்டியலில் அடைப்பது என்பது எப்படி சரியானதாகும்? 1987 - 88 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படியே நாட்டில் உள்ள 77 சதவீத முற்பட்ட பிற்பட்ட சாதியினர் 83% நிலத்துக்கு உடைமையாளர்களாய் இருப்பது வெளிப்பட்டுள்ளது ( இதில் பார்ப்பனர்கள் உள்ளடங்கவில்லை )

இதற்கு நீங்கள் முன்னே வைத்த வாதம் என்ன?

//பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு ஆண்ட சாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் ம க இ க தோழர்கள், சற்று யோசித்து பார்க்க வேண்டும், இடஒதுக்கீடு புள்ளிவிபரங்கள் சொல்வது இந்த ஆண்ட சாதிகள் எத்தனை சதவீத இடங்களை பிடித்துள்ளனர், பார்ப்பனர்களோடு சேர்ந்து இவர்களும் சுரண்டுபவர்கள் என்றால் பார்ப்பனர்களும் இவர்களும் இணையாகவோ அல்லது ஓரளவிற்காவது நிரம்பியிருக்க வேண்டுமே, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு முன் இவர்கள் நிரம்ப வில்லையே ஏன்?//

அரசுப் பணிகளில் அமரவோ, டாக்டர் போன்ற சேவைத் தொழிலில் இறங்க வேண்டிய கட்டாயமோ இந்தச் சாதிகளுக்கு 1800களின் பிற்பகுதி வரையில் எழவில்லை என்பது தான் உண்மை. கவுண்டர் தேவர் போன்ற சாதிகளெல்லாம் வரலாற்று ரீதியில் நிலவுடைமையாளர்களாவே இருந்து வந்துள்ளனர் ( பெருமளவிலோ, குறைந்தளவிலோ ).. இவர்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. அப்படி இவர்களை ஒடுக்கியிருந்தால் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த இந்த சாதியினர் பார்ப்பனர்களை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள். சமூகத்தில் பார்ப்பனர்கள் மேலே ஏறினார்கள் என்றால் அப்படி அவர்கள் மேலேயே உட்கார்ந்திருப்பதற்கான தேவை இவர்களுக்கும் இருந்தது. இவர்களுக்கும் கீழே அடக்கி ஒடுக்கப்பட்டு கடுமையாக சுரண்டப்பட்டு, நிலத்தின் மேல் ஆதிக்கம் இல்லாதிருந்த சாதிகளிடம் "பார் எனக்கு மேலே அவன் உனக்கு மேலே நான்" என்று நியாயப்படுத்துவதற்கு தேவையாய் இருந்தது.

அரசு வடிவம் மாறி ஆங்கிலக் கல்வியுள்ளவர்களுக்கு ( மாண்டேகு- சிம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் இரட்டை ஆட்சிமுறை ) அரசுப் பணி என்றும் அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் கிடைக்க ஆரம்பித்த புள்ளியில் தான் இவர்களுக்கும் அரசுப்பணியின் அவசியம் ஏற்பட்டது. அது நிராகரிக்கப்பட்டவனின் உரிமைக் குரல் அல்ல - மாறாக இது வரையில் இருந்த ஆதிக்கத்தை நிலை நிறுத்தியாக வேண்டியதன் கட்டாயத்தில் எழுந்ததே. உங்கள் மூலமான நீதிக் கட்சியின் நிறுவனர்கள் பழைய ஜமீந்தாரிகள், மன்னர்கள் என்பது நினைவிருக்கட்டும் ( பொப்பிலி மகாராஜா போல ).. இவர்கள் ஆரம்பத்திலேயே பெரியார் போல பகுத்தறிவு இயக்கம் நடத்தவோ பார்ப்பனிய எதிர்ப்பிலோ ஈடுபட்டிருக்கவில்லை.. மாறாக பார்ப்பனியத்தின் அத்துனை கூறுகளையும் உட்செறித்து மேலே வந்து விட முடியுமா என்கிற முயற்சியில் தான் ஈடுபட ஆரம்பித்தனர். ..

மேலும் நீங்கள் கேட்பது போல இடஒதுக்கீட்டுக்கு முன் இவர்கள் நிறம்பவில்லையே ஏன்? என்கிற கேள்வியே அப்போது எழவில்லை. இடஒதுக்கீடு அமுலான ஆரம்ப காலத்திலேயே அதன் பலன்களை அதிகம் சுருட்டிக் கொண்டதும் ( தமிழக அளவில் உதாரணம் தர முடியும் ) இந்த "பிற்படுத்தப் பட்டோ ர்" என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்ட ஆண்டைகள் தான்.

இவர்கள் அதிகாரத்திற்கு வந்த பின் 1927ம் ஆண்டே வகுப்புவாரி உரிமை என்னும் அரசானையின் படி தமக்கான உரிமையை நிலை நாட்டிக் கொண்டனர்.. இடஒதுக்கீடு அமுலான முதல் (20 ஆண்டுகளில் ஆண்டைகளும் நிலவுடைமையாளர்களும் தமது ஆதிக்கத்தை அரசு மட்டத்திலும் உறுதிப்படுத்திக் கொண்டனர். அதற்கு முன் - குறிப்பாக மாண்டேகு - சிம்ஸ்போர்ட் சீர்த்திருத்தங்களுக்கு முன் - இட ஒதுக்கீட்டுக்கான தேவை சாதி இந்துக்களுக்கு எழவே இல்லை.. ஏனெனில் அவர்கள் நிதர்சனத்தில் ஆதிக்க சாதிகளாகத் தான் இருந்தனர்.


இப்போது மீண்டும் உங்கள் பதிவுக்கு வந்தால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் - தமிழகத்தில் எல்லோருமே தங்களை ஆண்ட சாதிகள் என்று தான் பெருமையடித்துக் கொள்கிறார்கள் என்கிறீர்கள். இது பார்ப்பனியம் தோற்றுவித்த காரணிகளில் ஒன்று தான். எல்லோரும் தங்களை ஆண்ட சாதி என்று சொல்லிக் கொண்டாலும் - நடைமுறையில் யார் நிலவுடைமையாளர்கள், ஆதிக்க சாதிகள் என்பதைக் கொண்டு தான் முடிவெடுக்க முடியும். இந்த வாதத்தை நீங்கள் விரிவாக்கிச் சென்றால் - தெற்கே திராவிடர்கள் வருவதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு ஆண்ட
சாதி என்பது இப்போது மலைவாழ் மக்கள் என்று அறியப்படுபவர்கள் தான் எனவே ம.க.இ.க மலைவாழ் மக்களுக்கும் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லுமா என்று கேணத்தனமாகக் கேள்வி கேட்கும் அளவிற்கும் போகலாம்... ஆனால் துரதிர்ஷ்டவசமாக ம.க.இ.கவின் நிலை அதுவல்ல.. நாம் அறிந்த வரலாற்றிலும், நிதர்சனத்திலும் எவர் ஆதிக்க சாதியாய் இருக்கிறார்கள் என்பதைத் தான் கணக்கில் எடுக்கச் சொல்கிறார்கள். எனவே நீங்கள் கேட்கும் கேள்வி அர்த்தமற்றது மட்டுமல்ல முட்டாள்தனமானதும் கூட.

பல்லவன் குடிசையில் பன்றி மேயுது என்கிற பம்மாத்து இல்லாமல் நேரடியாகச் சொல்லுங்கள் - வன்னியர்கள் அடிமைச் சாதி தானா? அடிமைச்சாதியென்றால் "வன்னிய குல சத்திரியர்" என்கிற வெட்டிப் பெருமை மட்டும் எதற்கு? அப்படி வெட்டிப் பெருமையடிப்பதற்காக ராமதாஸ் போன்றவர்களை நீங்கள் கண்டிக்க தயாரா?

இல்லை வன்னியர்கள் குடிசையில் பன்றி மேய்வது உண்மையானால் அதற்கும் சக்கிளியன் சேரியில் பன்னி மேய்வதற்கும் ஒரே காரணம் தானா? அதாவது பார்ப்பனியம் தானா? தீண்டாமையால் கொடுமைப் படுத்தப்பட்ட சாதி தான் வன்னிய சாதியா?

வன்னியர்களையும் காட்டு நாயக்கர்களையும் ( அவர்கள் தங்களை ஆண்ட சாதி என்று கருதிக் கொள்வதால் ) ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது என்பது முழு முட்டாள் தனம்.

***************

ஆண்ட பரம்பரைகள்னு போகிற போக்கில் சொல்லி ரகசியமாய் மகிழ்ந்து கொள்ளும் அறியாமையில் கிடக்கும் ஜனங்களை நோக்கிக் கூறப்பட்டதல்ல 'ஆண்ட பரம்பரையா! அடிமைப்பரம்பரையா?" என்பது.

நாங்கள் மூவேந்தரின் வாரிசுகள் என்றும், பல்லவனின் பரம்பரை என்றும் மேடை போட்டு முழங்கி முக்குலத்தோரின், வன்னியரின் உணர்வுகளை முறுக்கேற்றி, அவர்களின் போலி கவுரவத்தை வளர்த்தெடுத்து, பிற சாதியினரை (வேறு யாரை தலித்துகளைத்தான்) தங்களுக்கு அடிபணிந்து போகச்சொல்லி மிரட்டும் 'ஆண்ட பரம்பரை'ப் பொறுக்கிகளுக்குத்தான்...இட ஒதுக்கீட்டை ரத்து செய்யச் சொல்லுகிறோம்.

பொன்.பரமகுருவில் இருந்து மலைச்சாமி வரை எத்தனையோ பேர்கள் இட ஒதுக்கீட்டால் படித்து முன்னேறினார்கள்தான். அவர்கள் தங்கள் பணிக்காலத்தில் செய்தது என்ன? தங்கள் சாதிக்காரனாகப் பார்த்து போலீசுதுறையில் ரொப்பிக்கொண்டார்கள். ஓய்வு பெற்றவுடன் ஓடிச்சென்று தேவர்பேரவை போன்ற சாதித்தீ மூட்டும் அமைப்பில் ஒட்டிக்கொண்டார்கள் என்பதில் இருந்தே இவர்களின் அரசுப்பணியின் லட்சணத்தை நல்லாவே யூகிக்கலாம். யூகம் என்ன எல்லாமே நெசந்தான். 70% பேர் போலீசுக்காரங்களா இருப்பது..ஆண்ட பரம்பரை 'தேவர்'தான். தேவர் சாதிப்போலீசின் மிருகத்தனத்தை ஒவ்வொரு தலித் - தலித் அல்லாதோரின் மோதல்களிலும் பார்க்க முடியும்.. சமீபத்தில்--கடந்த 10 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டில் வந்த தேவர் சாதி போலீசுக்கும்பல் கொடியங்குளத்திலும் தாமிரபரணிக்கரையிலும் போட்ட வெறியாட்டம்...2 வயது சிறுவன் விக்னேசைக்கூட விட்டு வைக்கவில்லை.
.......
பறையர் பையனைக்காதலித்த குற்றத்துக்காக கண்ணகி-முருகேசனைக்கொன்ற சாதி வெறியர்களைக் காப்பாற்ற உள்வேலை செய்பவனோ, இட ஒதுக்கீட்டில் படித்து கலெக்டராக இருந்தவன்..இவன் திருநெல்வேலிக்கு கலெக்டராக இருக்கும்போதுதான் 17 தலித்கள் போலீசால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அன்று போலீசின் அத்துமீறலை ஆரம்பித்து வைத்து வன்கொடுமை சாதி வெறியந்தான் அந்த கலெக்டர்.. இவர்களுக்கு இட ஒதுக்கீட்டை தரக்கூடாது என்கிறோம்.

பிற்பட்டோ ர் பட்டியலுக்குள் ஆதிக்க சாதிகள் எல்லாம் உட்கார்ந்து கொண்டு உண்மையிலே பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடமில்லாமல் ஆக்குகிறார்கள் என்பதற்கு புள்ளிவிவரங்களைத்தேடி எல்லாம் செல்ல வேண்டாம்.

தென் மாவட்டக்கல்லூரிகள் எங்கும் நடக்கும் மாணவர் மன்றத் தேர்தல்களே இதற்கு சான்று. BC பட்டியலில் 80 சதவீத இடங்களை நாடார்களோ நாயுடுகளோ (அதாவது வடுகன் என்பவர்கள்) ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச் சங்கமே மாணவர்கள் மத்தியில் அமைத்து சாதி வெறி உண்டாக்கி தேர்தலில் நிற்கின்றனர். MBC ஒதுக்கீட்டில் பெருமிடங்களை தேவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச்சங்கம் கட்டி, உணவு விடுதிகளில் தலித் மாணாக்கரை 'ஓசிச்சோறு' என்றும், தலித் மாணவிகளை பாலியல்ரீதியாகக் கொச்சைப்படுத்திப்பேசி வக்கிரமாய் நடந்து கொள்வதும், சேவைத் தொழில் செய்யும் சாதியில் இருந்து வரும் ஒன்றிரண்டு மாணவர்களிடம் 'எனக்கு சிரைத்து விடு' என்றோ 'என் செருப்பைத் தைடா' என்றோ சாதித்திமிரோடு நடந்து கொண்டு வருவது வெளிப்படையான விசயம்.

அக்கல்லூரிகளில் உட்கார்ந்திருக்கும் ஆசிரியர்களும் தங்களைஆதிக்க சாதி சங்கங்களுக்குள் இணைத்துக் கொண்டு அதே சாதி மாணவர்களைக் கொம்பு சீவி விடுகின்றனர்.. இதை எல்லாம் சொல்லி இந்தக் கேடு கெட்ட சாதிவெறியன் களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்.. பிற்பட்டோ ர் பட்டியலை சீர் செய் என்றால்...மறைமுகப் பார்ப்பனீயம் என்கிறார்கள்..

ஆதிக்க சாதிகள் என நாம் சொல்லிடும் நாயுடு,கவுண்டர்,தேவர்,நாடார்,வன்னியர் எனப்படும் சாதியினரிடம் நூற்றுக்கணக்கிலும்,ஆயிரக்கணக்கிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கல்லூரிகளும் குவிந்து கிடக்கின்றன. அங்கு இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றதாக வரலாறு உண்டா? எப்படி நாடார் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பியூனில் இருந்து தலைமை ஆசிரியர் வரை நாடார்களாகவே இருக்க முடிகிறது? நாயுடு கல்லூரியும் அப்படித்தான்..கவுண்டன் கல்லூரியும் அப்படித்தான். ஆனால் பட்டியலில் இருக்கும் பல நூறு சாதிகளால் ஒரு நர்சரி பள்ளி ஆரம்பிக்கக் கூட தெம்பு கிடையாது என்பதுதான் உண்மை. எங்காவது வண்ணார் சங்கப் பள்ளியையோ மருத்துவ சாதி சங்க கலைக்கல்லூரியையோ காட்ட முடியுமா?

இதே மாதிரி எண்ணற்ற உதாரணங்கள் தமிழகம் எங்கும் பெருத்துக் கிடக்கும்போது சமூக நீதிப் புடுங்கிகள் இதற்கு எதிராக என்ன புடுங்கினார்கள்?

கல்லூரிக்கு அடுத்து வேலை செய்யும் இடங்களைப் பார்த்தால் பொதுத்துறை நிறுவனங்களுக்குள் ஆதிக்க சாதிக்கும்பல்தான் வேலை வாய்ப்பில் பெரும் இடங்களைப் பிடித்துக் கொண்டு சாதி ரீதியாய் தொழிற்சங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்கம் என்றால் ஏதோ தொழிலிடப் பிரச்சினைகளுக்காகப் போராடும் அமைப்பு என்றெல்லாம் எண்ண வேண்டாம். யார் யார் வீட்டில் கல்யாண வயசில் பொண்ணு இருக்கு? என்பதை விசாரித்து தங்களுக்குள் திருமணம் மூலம் மேலும் சாதியாய் இறுகிக்கொள்ளவும், மறக்காமல் ஆண்டுதோறும் தங்கள் குலதெய்வத்தின் விழா எடுக்கவும்தான் இச்சங்கங்கள்.. திருச்சி பெல்லில் பார்க்கலாம்..பெல்-சேனைத்தலைவர் சங்கம்..பெல்-வன்னியர் சங்கம்..லொட்டு லொசுக்கு எல்லாம்.

விப்ரோ டெக்னாலஜியில் பார்ப்பனர் சங்கம் கட்டி இருக்கிறார்கள்.. சவுராஸ்டிரா சங்கம் வைத்திருக்கிறார்கள்.. நவீன தொழில்நுட்பவாதிகள் இல்லையா? மெயிலிங் லிஸ்ட்டில் - ஈ-சாதிச்சங்கமாய் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு சங்கமாய்த் திரண்டு சாதியைக் காப்பாற்றும்/ சாதி வன்முறையை (கல்லூரி அளவிலேயே) வளர்க்கும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். அல்லது BC ஐ இரண்டாகப்பிரித்து இந்த மாதிரி ஆதிக்க சாதிகளை BC1ல் வைத்து 3 சதவீதம் அவர்களுக்கும்... இதர 200 BCகளை 27% கொடுத்து BC 2லிலும் வைப்பதுதான் உண்மையான சமூக நீதி.

சமூகநீதிப் புடுங்கிகள் என்றைக்காவது சாதிமறுப்புத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கோரி இருக்கிறார்களா? சாதி ஒழிப்புதானே - சமூக நீதியாகும்! சாதி ஒழிப்பை சாதிமறுப்பு திருமணம் தானே சாதிக்கும்!

சாதி மறுப்புத் திருமணம் மூலம் பிறந்தவர்களுக்கு பெயரளவில் இருந்த சிறு வீத ஒதுக்கீட்டையும் 'சமூக நீதியை' காத்த வீராங்கனை ஒழித்துக்கட்டியது.. ஆனாலும் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த 'சமத்துவப் பெரியாரும்' இதைக் கண்டு கொள்ளவே இல்லை.

***********

சாதி ஒழிப்பைத் தவிர்த்து விட்டு, இட ஒதுக்கீட்டில் மட்டும் அழுத்தம் கொடுக்கும் திராவிட,தமிழ்தேசிய,வன்னியவிய,தேவர்வெறியியக் கட்சி/குழுக்களால் ஏற்பட்ட சமூகவியல் மாற்றங்களைப் புரிந்து கொள்ள சில சான்றுகள்.

1) திண்ணியம் ஊரில் சக்கிலியர் வாயில் மலத்தைத் திணித்த சாதிவெறியர்களில் ஒருவர் - அரசுப்பணியில்-ஆசிரியராகப் பணியாற்றியவர். பெயர் என்ன தெரியுமா? குடியரசு.

2) சமதாக் கட்சியின் தமிழ் நாடு பிரிவுக்கு ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டார். பெயர் குடியரசுத் தேவர். (1929இலேயே வாலை நறுக்கிய இயக்கப்பின்னணி கொண்ட பெயருடையவருக்கு வால் முளைக்கிறது)

3) பெரியார் திராவிடர் கழகத்தினர் பழனி ஒன்றியத்தில் கவுண்டர் சாதிவெறியர்கள் நிறைந்த பகுதியில் 'தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பயணம்' மேற்கொண்டிருந்தபோது 'இரட்டைக்குவளைகள் முறை பற்றி'கண்டித்துப் பேசி வந்தனர். ஆத்திரமுற்ற கவுண்ட சாதி வெறியர்கள் பெ.தி.க. தொண்டர்களைத் தாக்க முயன்றனர். அப்போது அவர்கள் சொன்னது "தி.க.ங்கிற..சாமியப் பத்திப் பேசு..இட ஒதுக்கீடு பத்திப் பேசு..ஆனால் ரெட்டக்கிளாஸ் அது இதுன்ன..கொளுத்திப்புடுவோம்.."



****************


ராமதாசின் குடும்பத்தில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணங்கள் எத்தனை?

ஆனைமுத்துவின் கட்சி ஏன் வன்னியர் சங்கம் மாதிரியே இருக்குது?

தமிழரசனின் தனித்தமிழ் நாடு படை ஏன் வன்னியர் படையாக மட்டுமே இருக்குது?

தமிழ் தேசியம் என்பது வன்னியர் தேசியமா?

ஆண்ட பரம்பரன்னு சொல்லுர ராமதாசு ரிலயன்சு போன்ற சேட்டுகிட்ட போய் நாய் மாதிரி வாலாட்டுறப்ப ஆண்ட பரம்பரையின் குலப்பெரும கெட்டுடாதா?

இதற்கெல்லாம் குழலி எனும் ஆண்டபரம்பரைகள் பதில் சொல்ல வேண்டும்..

*************

கம்யுனிஸ பூச்சாண்டி சொல்வதை பார்த்தால் படித்தவன் எல்லாம் சாதி வெறயில்லாம இருப்பதாக இருக்க வேண்டும். அப்ப்டி இல்லை என்பதைத்தான் கனேசு, அன்பரசன், குரல்கள், புல்டோ சர் உள்ளிட்டவர்களின் எ-கா சொல்கிறது. இன்னும் சொன்னால் கல்வி நிலையங்க்ளில் சாதி ரீதியாக திரண்டு பிற சாதியினரை இழிவுபடுத்தும் போக்கு உங்களது வாதத்திற்க்கு முரனாகவே இருக்கிறது.

கல்வியறிவினால் சாதி ஒழியும் என்பதே ஒரு அப்பட்டமான மோசடி.

எப்படி பொருளாதார விடுதலை மட்டுமே சாதியை ஒழித்துவிடும் என்று கம்யுனிஸ்டுகள் சொன்னது அடிப்படையற்றதோ அதே போல வெறுமே பண்பாட்டு சீர்திருத்தங்களால் மட்டும் சாதி ஒழிந்து விடும் என்பதும் அடிப்படையற்றதே.

தத்துவம், பொருளாதாரம், அரசியல் என்று மூன்று முனைகளிலும் சம்ரசமற்ற போராட்டமே சாதியை ஒழிக்கும்.

இடஓதுக்கீட்டை சர்வரோக நிவாரணியாக காட்டும் உங்களது சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தையே படித்தவன் முதல் பலரும் தமது சாதி வெறியை விடாமல் இருப்பதும், இன்றைக்கு திராவிட அரசியலுக்கு உரிமை கொண்டாடும் பாமக உள்ளிட்டவர்கள் சாதி ரீதியாக அணி திரண்டு உரிமை பெறுங்கள் என்று அப்பட்டமாக பிழைப்புவாதம் பெசுவதும், குஜ்ஜார் பிரச்சனைகளும் காட்டுகின்றன. இடஓதுக்கீடு ஒரு சீர்த்திருத்தம் என்பதை புரிந்து கொள்ளாத நண்பர்கள் அதனது யாதர்த்த விளைவுகளை கண் கொண்டு நோக்கும் வலுவின்றி இருப்பது பரிதாபமே.

****************

Gopalan Ramasubbu said...

இது சட்டநாதன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருக்கும் ஒரு பத்தி(Page-188),

[http://books.rediff.com/bookshop/bkproductdisplay.jsp?PLAIN-SPEAKING-by-A-N-SATTANATHAN&prrfnbr=60109970&multiple=true&frompg=_]

"There are two tendencies which have become noticeable.Reservationhas helped the backward classes for nearly six decades from the 1920's to the 1980s-practically three generations.The benefit of reservation has gone mostly to the top few castes amongst the backward,and to an increasing layer of upper crust in each caste.The filtration process has not been through or uniform.This is not surprising,and is to some extent unavoidable.It would be a step in the larger interest of society and of the backward classes themselves,if a check is applied to both tendencies.There has been thinking on these lines among administrators;but the opposition of vested interest has been too strong to carry out the necessary pruning.But sooner or later,the removal of the two kinds of upper crust will become un-avoidable;otherwise we will be encouraging the caste to form a class system within caste system-not an altogether desirable trend in a democratic and sicialitic society"

***********

முருகேசன் கண்ணகியை எரித்துக்கொன்ற வன்னிய சாதி வெறியர்களைக் காப்பாற்றத் துடிக்கும் முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவரும் இட ஒதுக்கீட்டில்தானே படித்து முன்னேறி வந்திருக்கிறார்? இப்பேர்ப்பட்ட சாதி வெறி நாய்களுக்கு இட ஒதுக்கீட்டை இரத்து செய்யச் சொல்வதுதானே சரியாகும்?

கண்டதேவியில் தேர் இழுக்கப்படாது..வன்னியன் தெருவழியே பறையன்பிணம் வரப்பிடாது...கட்டினால் வன்னியகுல சத்திரியகுலத்திலேதான் செவப்பா அழகா கட்டுவோம் (இருப்பது இங்கிலாந்தில்) எனும் சாதி வெறியுடனும், பஞ்சாயத்து தலைவரா தலித் வந்தா ஆத்தாவுக்கு ஆகாது...ரெட்டை டம்ளர் டீ க்கடை... எல்லாவும் செஞ்சுப்புட்டு இட ஒதுக்கீடு வேணும்...நாங்கள்ளாம் மிகவும் பிற்பட்டவங்க என்பதும், சாதிக்கூட்டங்களிலே போய் நாங்க பல்லவர்களின் வழித்தோன்றல்...பாண்டிய மன்னர்கள்தான் எங்களோட 56 வது கொடிவழி பாட்டனாரு...ன்னு மீசையை முறுக்கறதும்... ஆண்ட பரம்பரைதானடா...உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு...

என்னக் கேட்டால், எவன் சாதி மறுப்பு திருமணம் செய்கிறானோ, ஆதிக்க சாதி சங்கத்திலே ஒட்டாம இருக்கிறானோ அவனுக்க மட்டுமே இட ஒதுக்கீடு தரணும்...ம.க.இ.க.வும் இதத்தான் சொல்லுதுன்னு நினய்க்கேன்.

அது கிடக்கட்டும்... பெரியாரின் கொள்கையில் இட ஒதுக்கீட மட்டுமே முன்னிறுத்தி வரும் ராமதாசும், ஆனமுத்துவும் ஏன் சாதி ஒழிப்பு பத்தி பேச மாட்டக்காக?
***************

Related Articles:

புரளி பேசும் போலி தமிழ தேசியவாதிகள்

இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு : மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின்: சமரசம்!

Tuesday, June 05, 2007

கவுண்ட சாதி வெறியர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

“சாமியப் பத்தி பேசு, இடஒதுக்கீடு கேளு; ஆனா, இரட்டை டம்ளர் பத்திப் பேசாதே!''

கன்னல்

நன்றி: தலித் முரசு

சாதி இழிவுகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்க்கத் துணியும் எவருக்கும் இந்த சமூகம் அளிக்கும் ஒரே பரிசு அவமானமும், அடி உதை யும் மட்டுமே. இச்சமூகத்தின் பிற கேடுகளை எதிர்க்கும் சமூகப் போராளிகள் சந்திக்க நேரிடும் அச்சுறுத்தல்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் நடுவே அவர்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச அங்கீகாரம்கூட, சாதி ஒழிப்புப் போராளிகளுக்கு கிடைப்பதில்லை. மனதையும் உடலையும் வருத்திக் கொள்வதிலேயே சாதி ஒழிப்புப் போராளிகளின் பயணம் நீடிக்கிறது. அதை விரும்பி ஏற்று, அயராது தொடர்பவர்களாலேயே சமூக விடுதலையும் சாத்தியமாகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் அண்மையில் கையிலெடுத்த ஒரு பிரச்சினை நமக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

திண்டுக்கல் மற்றும் பழனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இன்று வரையிலும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையும், இரட்டை இருக்கை முறையும் நிலவி வருகிறது. சாதி இந்துக்களுக்கு, கண்ணாடி குவளையிலும், தலித் மக்களுக்கு பிளாஸ்டிக் குவளையிலும் தேநீர் வழங்கப்படுகிறது. மேலும், தலித் மக்கள் அமர்வதற்கு சற்றே தாழ்ந்த பெஞ்சோ, சிமெண்ட் திண்ணை அல்லது தரையோதான் ஒதுக்கப்படுகிறது. இக்கொடுமைகளை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகத்தினர் 11.4.2007 முதல் பிரச்சாரப் பயணத்தை மேற் கொண்டனர். இதனால் சாதி இந்து கவுண்டர்களால் மிரட்டி விரட்டப்பட்டுள்ளனர்.

“முதலில் இரட்டை டம்ளர் முறை ஒழிப்பு பற்றி மட்டுமே பிரச்சாரம் செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். அச்சமயத்தில் அதாவது பிப்ரவரியில் ஒட்டன்சத்திரம் அருகே பழையபட்டி என்ற கிராமத்தில் தலித் ஒருவருக்குச் சொந்தமான பூமிதான நிலத்தை, செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு கைப்பற்றி, நிலத்துக்குச் சொந்தக்காரரான தலித்தை தாக்கி நிலத்திலிருந்து விரட்டியது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டக் கலெக்டர் வாசுகி மற்றும் எஸ்.பி. பாரி ஆகியோர் இருந்தனர். தங்கவேல் என்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும் இதற்கு துணையாக இருந்தார். இந்தப் பிரச்சனையை கையிலெடுத்த தமிழக தலித் விடுதலை இயக்கம், பெரியார் திராவிடர் கழகத்தின் ஆதரவைக் கோரியது. அச்சமயத்தில் அப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பஞ்சமி நிலங்கள் பற்றியும் அறிந்தோம். எனவே, இரண்டு பிரச்சனைகளையும் இணைத்துப் பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்தோம்'' என்கிறார், பெரியார் திராவிடர் கழக களப்பணி ஒருங்கிணைப்பாளர் தாமரைக் கண்ணன்.

ஏப்ரல் 11 அன்று திண்டுக்கல் மாவட்ட கிழக்கு எல்லையான குருவன் வலசில் இருந்து 20 தோழர்கள் ஒரு மினிடோரிலும், 4 இரு சக்கர வாகனங்களிலும் பயணத்தைத் தொடங்கினர். "இரட்டை டம்ளர் ஒழிப்பு பஞ்சமி நில மீட்பு இந்திய தேசிய பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை எதிர்ப்புப் பயணம்' என விளம்பரப் பதாகை பொருத்தப்பட்ட பிரச்சார வாகனத்திலேயே ஒலிபெருக்கி இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஊரிலும் மக்கள் அதிகம் கூடும் தேநீர்க் கடைகள் முன்பு முதலில் ஒரு பாடல் பாடி, பிறகு அரை மணிநேரம் அங்கு சாதி தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக உரை நிகழ்த்தப்படும். அப்போதே துண்டறிக்கை விநியோகம் மற்றும் உண்டியல் வசூல் என்று பிரச்சாரம் நடைபெற்றுள்ளது.

“5 நாட்கள் நடந்த இப்பிரச்சாரத்தில், உண்டியல் வசூல் 4,600 ரூபாய் என்பது மக்களிடம் உள்ள வரவேற்பைக் காட்டியது. தாழ்த்தப்பட்ட மக்களிடம் நாங்கள் எதிர்பாராத ஆதரவு கிடைத்தது. ஒரே நாளில் 90 "தலித் முரசு' இதழ்கள் விற்பனை ஆனது'' என்கிறார் பெரியார் திராவிடர் கழகத் தோழர் ஜவகர்.

காவல் துறைக்கு தெரிவித்த ஊர்களைத் தவிர, இக்கொடுமை எங்கெங்கு உள்ளது என கேள்விப்பட்ட பெரும்பாலான ஊர்களுக்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்றுள்ளனர். குறிப்பாக, பழனி ஒன்றியத்தில் அவர்கள் பயணம் செய்த மிடாப்பாடி, மயிலாபுரம், நல்லெண்ணக் கவுண்டன் புதூர், பாப்பாகுளம், அய்யம்பாளையம், சின்னாக் கவுண்டன் புதூர், வேலாயுதம்பாளையம் புதூர், காவலப்பட்டி ஆகிய ஊர்களிலும், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் கோவில் அம்மாபட்டி, அத்திமரத்துவலசு, ராஜாம்பட்டி, பணம்பட்டி, அக்கரைப்பட்டி, சரவணப்பட்டி, ஆலாவலசு, புலாம்பட்டி, வாகரை, மரிச்சிலம்பு, போதுப்பட்டி, கொழுமங்கொண்டான், சங்கஞ்சட்டிவலசு, பெரியமொட்டனூத்து, தாளையுத்து, நாச்சியப்பன்கவுண்டன் வலசு ஆகிய ஊர்களில் இரட்டை பெஞ்ச் முறையும், இரட்டை டம்ளர் முறையும் உள்ளதை நேரில் பார்த்துள்ளனர்.

“முதலில் எதிர்ப்பு வரவில்லை. சேரிகளுக்குச் சென்று அங்குள்ள கொடுமைகள் பற்றி விசாரித்தோம். வேலாயுதம்பாளையம் புதூர் என்ற ஊரில் அப்படிப் பேசுவதைப் பார்த்த கவுண்டர்கள் சிலர், நாங்கள் கிளம்பியதும் தலித்துகளிடம் மிரட்டும் தொனியில் பேசியதைப் பார்த்தோம். எனவே, தலித்துகளிடம் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்த்தோம். முதல் நாள் அய்யம்பாளையம் என்ற ஊரில் ஆங்காங்கே தனியாக நின்றுகொண்டு கண்டபடி ஆபாசமாக சாதி இந்துக்கள் திட்டத் தொடங்கினர். பெரும்பாலும் அனைத்து வகையான கெட்டவார்த்தைகளையும், முறைப்புகளையும் கண்டோம்'' என்கிறார் தாமரைக் கண்ணன்.

ஏப்ரல் 11 அன்று தொடங்கிய பயணம் பழனி மற்றும் தொப்பம்பட்டி ஒன்றியங்களில் உள்ள பல கிராமங்களைக் கடந்து ஏப்ரல் 15 அன்று மாலை 5 மணிக்கு திண்டுக் கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த வாகரையை அடைந்தது. பிரச்சாரக் குழுவினர், ஒலிபெருக்கியில் துண்டறிக்கையை முதலில் வாசித்தனர். “நாங்க துண்டறிக்கையை வாசிக்கத் தொடங்கிய உடனே அவ்வூரைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்லத்துரையை அழைத்து "மரியாதையாகக் கூட்டத்தை நிறுத்து' என்றனர். சிறிது சிறிதாக மக்கள் குவியத் தொடங்கினர். தேநீர்க் கடையில் இருந்த நானும் தோழர் மருத மூர்த்தியும் அங்கு ஓடினோம். "மரியாதையாக ஓடிவிடுங்கள். இரட்டை டம்ளர் அது இதுன்னு பேசினா... உயிரோட போக மாட்டீங்க. ஓடுங்கடா முதல்ல' என்றனர். கடுமையான கெட்டவார்த்தை ஒன்றால் திட்டினர். தோழர் மூர்த்தி கொஞ்சம் ரோஷப்பட்டு, முகத்தில் கொஞ்சம் கோபத்தைக் காட்டிவிட்டார். உடனே ஒரு பத்துப்பேர் சேர்ந்து அவரைப் பிடித்துக் கீழே தள்ளினர். வேறொரு டீக்கடையில் இருந்து பிற தோழர்கள் ஓடிவந்தனர். வாகனத்தை சுமார் 50 பேர் சூழ்ந்து கொண்டனர். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பெட்ரோலை எடுத்துட்டு வாடா, வண்டியக் கொளுத்தணும் எனக் காட்டுக் கூச்சல் கேட்டது. தோழர் ஜவகர் அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தார்.

“என்ன சொல்ல வர்றோம்னு கொஞ்சம் கேட்டுட்டுப் பேசுங்க, என நானும் கெஞ்சிப் பார்த்தேன். "பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க அறிவில்லையாடா ஒனக்கு? தி.க.ன்னா சாமியப் பத்திப் பேசு, 69 சதம் இடஒதுக்கீடு கேளு, அத விட்டுட்டு, இரட்டை டம்ளர்னு பேசுனா என்னடா அர்த்தம்? ஒரு மாசமா இங்க பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு, இங்க வந்து கலகம் பண்றீங்களா? யார் சொல்லிடா வந்தீங்க? எங்க பஞ்சாயத்து தலைவன் சொன்னானா? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். கூட்டமோ, என்னடா பேச்சு ஊத்துடா பெட்ரோல என்றது. சரி நாங்க பேசல. இப்படியே போயிடறோம் என்றோம். ஓடுங்கடா ஓடுங்கடா என விரட்டி விட்டனர்'' என்கிறார் தாமரைக்கண்ணன்.

தேவகோட்டை பகுதியில் ‘நாடு' அமைப்பு உள்ளது போல பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றியங்களில் உள்ள சாதி இந்து கவுண்டர்கள், சாதி வளர்ச்சிக்காக நிதி திரட்டி ஒருங்கிணைப்பாக உள்ளனர். இக்கிராமங்கள் "பண்டு கிராமங்கள்' (Fund) என்று குறிப்பிடப்படுகின்றன. இக்கிராமங்களில் காவல் துறையோ, இந்திய அரசியல் சட்டமோ – சாதி இந்துக்களை மீறி எதுவும் செய்ய முடியாது. ஒரு ஊரில் தலித் மக்கள் ஏதாவது கலகம் செய்தால், கிட்டத்தட்ட 50 கி.மீ. சுற்றளவில் அவர்கள் பிழைக்க வழியிருக்காது என்ற நிலையை பண்டு கிராமங்கள் உருவாக்கியுள்ளன. வாகரை அம்மாதிரியான கட்டமைப்பில் உள்ள ஒரு கிராமம்.

வாகரையின் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பூசாரிக் கவுண்டன் வலசைச் சேர்ந்த அருந்ததியரான சின்னான். இவர் குடியிருக்கும் பூசாரிக் கவுண்டன் வலசு பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தருவதற்காக வாகரையிலிருந்து பைப்லைன் போட்டுள் ளார். சாதி இந்துக்கள் அந்த பைப் லைனை வெட்டி, தண்ணீர் கொண்டு செல்லவிடாமல் தடுத்துவிட்டனர். பிறகு மீண்டும் பைப்லைன் பதிக்கிறார். அதையும் சாதிவெறியர்கள் வெட்டி விட்டனர். எனவே, இது பற்றி தொப்பம்பட்டி பி.டி.ஓ.விடம் புகார் செய்த தலைவர், சின்ன தொப்பம்பட்டி பி.டி.ஓ. அலுவலகம் சென்றபோது, அவரை அலுவலக வாசலிலேயே கவுண்டர்கள் அடித்து உதைத்தனர். இது தொடர்பாக கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு பஞ்சாயத்து தலைவர் சின்னான், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் அருள்செல்வனை அணுகி ஆதரவு கோரியுள்ளார். அதன் பிறகுதான் சட்டமன்றத்தில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டது.

உடனே திண்டுக்கல் கலெக்டர் வாசுகி வாகரைக்கு நேரில் சென்று விசாரித்து அங்கே இரட்டை டம்ளர் முறையோ, எந்த அடக்குமுறைகளுமோ கிடையாது என அறிவித்தார். தலைவர் சின்னõனும் அவ்வாறே கூற வைக்கப்பட்டார். பிறகு ஜெயா டி.வி.யில் கொடுமை நடப்பதாக தொலைபேசியில் கூறினார். இந்த சிக்கல் அண்மையில் நடந்துள்ளதால், அந்த பஞ்சாயத்து தலைவர் சின்னான் சொல்லித்தான் பிரச்சாரக் குழுவினர் வந்திருப்பார்கள் என சாதி இந்துக்கள் கருதியிருக்கின்றனர். அதன் பிறகு பிரச்சாரக் குழுவினர் அங்கிருந்து தப்பி 12 கி.மீ. தொலைவிலுள்ள கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர். உதவி ஆய்வாளர் சீனிவாசன் புகாரை வாங்க மறுத்திருக்கிறார்.

"யாரைக்கேட்டு அங்கு சென்றீர்கள்? யாரைக் கேட்டு உள்ளே நுழைந்தீர்கள்' என மிரட்டி, புகாரையும் வாங்க மறுத்திருக்கிறார். அதற்குள் செய்தி கேள்விப்பட்டு பழனி ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து சுமார் 50 தோழர்கள் காவல் நிலையம் முன் திரண்டனர். அதே நேரத்தில் துண்டறிக்கையில் இருந்த தாமரைக் கண்ணனின் எண்ணை வைத்து, பண்டு கிராமப் பகுதியிலிருந்து அவரது எண்ணுக்கு ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். தன்னை ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், "உங்களைத் தாக்க பண்டு கிராமம் எல்லாம் திரளுகிறது. உடனே கள்ளிமந்தையத்தை விட்டுக் கிளம்புங்கள்' என்று கூறியுள்ளார்.

இருப்பினும், புகார் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல மனமின்றி பிரச்சாரக் குழுவினர் புகாரை வாங்கச் சொல்லி, உதவி ஆய்வாளரிடம் வாதம் செய்து கொண்டி ருந்திருக்கின்றனர். அச்சமயம், இரவு 7 மணி அளவில் 2 மினி லாரிகளில் சாதி இந்துக்கள் சுமார் 100 பேர் அங்கு வந்து இறங்கினர். 7.15 மணியளவில் மீண்டும் 2 மினி லாரிகளில் ஆட்கள் இறங்கினர். காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மட்டுமே இருந்திருக்கிறார். காவலர்கள் யாரும் இல்லை. அதனால் அந்த உதவி ஆய்வாளர் வெளியே வந்து கவுண்டர்களிடம் பேசி, "உங்கள் புகாரைக் கொடுங்கள் வாருங்கள்' எனக் கூறி, அவர்களைத் தனியே அழைத்துச் சென்றுள்ளார். கவுண்டர்கள் விலகிச் சென்ற உடன், பிரச்சாரக் குழுவினர் தப்பி ஓடி வந்துள்ளனர்.

ஆனால், இப்பிரச்சினையை பெரியார் திராவிடர் கழகத்தினர் இத்துடன் விடுவதாக இல்லை.

“எத்தனை நாட்கள்தான் மென்மையாகப் போராடுவது? சாதி வெறியர்களுக்கு அழுத்தமாக உணர்த்தும் வகையில் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். ஒத்த கருத்துள்ள அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஆகியவற்றையும் இணைத்துக் கொண்டு, அதே கிராமங்களில் ஆகஸ்டு 15 அன்று இரட்டை டம்ளர் மற்றும் இரட்டை பெஞ்சு உடைப்புப் போராட்டத்தை நடத்த உள்ளோம். அது வரையில் மே 26 தொடங்கி அக்கிராமங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டும் பணிகளை செய்யத் திட்டமிட்டுள்ளோம்'' என்கிறார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

உண்மைதான். சாதியின் கோர முகத்தை மென்மையான கரங்களால் பிய்த்து எறிய முடியாது. சாதி தனது இருப்பை என்றுமே மென்மையாக வெளிக் காட்டியதில்லை. கீழ் வெண்மணி, மேலவளவு, கயர்லாஞ்சி என எங்கும் நாம் கண் டது, சாதியின் கொடூர முகத்தை மட்டுமே. எதிர்ப்புகளும் போராட்டங்களும் மட்டும் எதற்கு மென்மையாய்?


Related Post

கயரலாஞ்சி காட்டும் பேருண்மைகள் - உலகமயம் - தலித்தியம் - தலித் விடுதலை

Wednesday, May 23, 2007

பொங்கல் உழைக்கும் மக்கள் திருநாளா?

கொளத்த கண்ட குண்டி எத்தன. குண்டிய கண்ட கொளம் எத்தன?

தஞ்சை சாம்பன்

நன்றி கீற்று, புதுவிசை


வாங்கய்யா ராகுகாலம் வர்றதுக்குள்ள ஊரு தெருவுக்கு போய் மண்ணு போடணும். பொங்க இன்னும் ஏழு நாதான் கிடக்கு. ஏழா நா மண்ணு போட்டுடுவோம். சட்டுபுட்டுனு கிளம்பி நாழியைக் கடத்தாம வாங்கடா என்றவாறு தெருவின் மேல் கோடியில் வந்து நின்றார் கீழ ஒட்டு முத்தன். மண்வெட்டி கூடையுடன் வீட்டுக்கொரு ஆளாக மேல்சாதியார் தெரு நோக்கிப் புறப்பட்டார்கள். மொத மண்ணு அம்பலாரு வீட்டுக்குப் போட்டுட்டு அப்பறமா மத்த வீடுகளுக்கு போடுங்க என்றார் தெரு வில் வெயில் காய்ந்து கொண்டிருந்த பெரியவர். எல்லோரும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா தட்டுக் கூடையில் மண்வெட்டிப் போட்டாலும், அம்பலத்தின் குடிப்பறையன்தான் தேவையான மண்வெட்டிப் போட வேண்டும்.



ஆயா இந்த மண்ணு போதுமா என்று அம்பலத்தின் குடிப்பறை யன் கேட்டான். அம்பலம் மனைவி என்ன இவனே திட்டானி அடுப்பு, திண்ண மொழுகத்தானே போதும் போதும். முட்டாடு ரெண்டு குடம் தண்ணி ஊத்தறேன், மண் நல்லா புளிக்கட்டும் நாள வெள்ளென வந்து நல்லா மசிய குழைச்சுக் கொடுத்துடு. ஏ இவனே மட்டைப் பிடிச்சா ரெண்டு கஞ்சி ஊத்தறேன். குடிச் சுட்டுப் போடா என்றாள். அம்பலம் மனைவி தனது மாமனார் பெயர் முத்துராமு என்பதால் இவரை முத்தன் என்று பெயர் சொல்லி அழைக்கமாட்டாள். இதை அறியாத முத்தன் எங் கள்ளச்சி வாக்கப்பட்ட நா முதலா எம்பேரச் சொல்லி கூப்பிடறதில்லன்னு பெருமையாகக் கூறிக் கொள்வார்.



ஏலே அடி கிழக்கே திரும்பியதும் தான் நல்ல நேரமாம். பொழுது சாயறதுக்குள்ள பொங்க வெச்சி இறக்கிடனு மாம். சடுதியா பொங்கப்பானை வச்சி தீயை போடுங்க என்று முத்தன் தெருவின் மேல்கோடியிலிருந்து கூறிச் சென்றார். அவரவர் வீடுகளில் பொங்கல் பொங்கி வரும் வரை நிசப்தமே நிலவும். வாய்பேசாமல் சைகை மூலமே பேசிக் கொள்வார்கள். பானை பொங்கியவுடன்தான் பொங்கலோ பொங்கல் என்று அகமகிழ்ந்து கூறுவார்கள். எப்போதும் கேலியும் கிண்டலுமாய் பேசும் மழுப்பன் மவன் பொங்கலோ பொங்கல் மூணு கொட்டச்சி ..ம்க்கும்.. பொங்கல் என்றார். பக்கத்திலிருந்தவர்கள் ஏலே எப்பவும் உனக்கு இந்த கிண்டல்தானே வாய மூடுடா என்றார்கள்.



கருமங்களில் அம்பலார் வீட்டிற்கு பொங்கப்பானை கோலி பிடிச்சது பச்சரிசி வெல் லம் வாங்கினது எல்லாம் மூணு மூட்டை நெல்லை வட்டி முழுங்கிடுச்சு. இந்த வவுத்தரிச்சலத் தான் சொல்றான், உங்களுக்குத் தான் கேலியும் கிண்ட லுமா தெரியுது என்றார். பொங்கல் மகிழ்வில் மாமன் முறையுள்ளவர் களை கேலியும் கிண்ட லும் செய்து கொள்வார் கள். முறைப் பெண்களும் என்ன மாமா பால் பொங்கிடுச்சா ஆமாம் என்று பதில் வருவதற்கு முன் உன் காலு வீங்கி னிச்சா என்று கேட்டுக் கொள்வார்கள். கடன் பட்டு பொங்க வச்சியா என்று பொருள்படும்படி தான் இவ்வாறு பேசிக் கொள்வார்கள்.



இரவு ஒவ்வொருவரும் வெள்ளைத்துணி வைத்த பெரிய பெரியகூடைகளை அம்பலக்காரர் வீட்டுவாசலில் வரிசையாக வைத்து, ஆத்தா பொங்க சோறு வாங்க வந்திருக்கிறோம் என்று கூப்பாடு போட்டனர். அம்பலம் வெளியே வந்தார். சாமி இந்தாங்க இது அரசு கோழி, அய்யா இது அம்பலக் கோழி என்று கால்கட்டோடு உள்ள கோழிகளை ஜோடிஜோடியாக தூக்கிப் போட்ட னர். பெற்றுக்கொண்ட அம்பலம் நாலுமுழ காடா வேட்டியும், ஒரு துண்டும், கொஞ்சம் வெற்றிலைப் பாக்கும் வைத்து அனைவருக்கும் வழங்கினார்.



நெய்யும் முந்திரிப் பருப்பும் முக்கிய இடம்பெறும் அம்ப லார் வீட்டு சர்க்கரைப் பொங்கலை தனியாக வாங்கி வைத்துக்கொள்வார்கள். அனைவரும் வீடுவீடாக சென்று பொங்கல் சோறு வாங்கிக்கொண்டு வரும்போது ஒருவீடு விடுபட்டுப்போனது. அடுத்த வீடு சென்றதை பார்த்த மேல்சாதிக்காரர், ஏய் யாரும் இங்க சோறு வாங்கக்கூடாது என்றார். சமாதானம் பேச முற்பட்டனர். ஏய் யாம் வூட்டுல சோறு வாங்காத நீங்க யாரு வூட்டுல யும் சோறு வாங்கக் கூடாது என்றவாறே தடிக்குச்சியை எடுத்துத் தாக்கினார்.



அடிபட்டவர்கள் அலறல் சத்தத் தோடு சந்து பொந்துகளில் ஓடி ஒளிந்தனர். சத்தம் கேட்டு ஏலே என்னடா என்னடா என்று கேட்டுக்கொண்டே தெருவில் வந்து நின்றார் அம்பலார். மேல்சாதிக்காரரைப் பார்த்து ஏலே என்னடா நல்லநாளும் பெரியநாளுமா என்றார். எல்லா வூட்டுலேயும் சோறு வாங்கினானுவோ. யான் வூட்ட தள்ளிப்புட்டானுவோ. நான் என்ன பத்தாத கள்ளனா? என்றார். சோத்துக்கூடை இருந்த பக்கம் நாய் கள் வரவே ஒளிந்திருந்தவர்கள் துரத்தினர் . அம்பலம் விசாரித்ததில் முறையாக வீடு சென்றபோது யாரும் வீட்டிலில்லை என்பதும் இவர்கள் ஒதுக்கவில்லை என்ப தும் தெரிந்தது. ஏலே போய் எல்லாத்துக்கும் சோறு போடச் சொல்லு என்றபோது, மலுப்பன் மவன் இந்தா பாருங்க சாமி குடிக்கோழி போடுறதற்கு கொண்டாந்த கோழியும் போடாம வச்சிருக்கேன். எங்கள மறுவார்த்த பேசவுடாம துரத்தித் துரத்தி அடிக்கறாரு என்றார்.



அவரவர் வாங்கிய சோறு ஏகமாக கூடைகளில் நிரம்பி இருந்தது. அம்பலம் வீட்டு கரும்பையும் வாழைப்பழத் தையும் கக்கத்தில் இடுக்கியவாறு கூடையை வீட்டுக்கு சுமந்து சென்றார்கள். மலுப்பன் மவன் மனைவியை கூப் பிட்டு கருமங்களியையும் பழத்தையும் கொடுத்து விட்டு, கூடையை இறக்கி வீட்டினுள் கொண்டு வைத்த போது என்னய்யா மேலெல்லாம் தடிச்சு கிடக்கு என்று கேட்டாள். அதாம் புள்ள நம்ம அம்பலாரு அண்ணன் மகன் பக்கத்து வூட்டுல சோறு வாங்கிப்புட்டோம்னு அடிச்சிப்புட்டாரு என்றதும், அவன் கையில் படுவன் புறப்பட... இப்படி அடிச்சிருக்கானே.. இவனுக்குத்தான் குடிக்கோழி போடனும்னு ஒத்தக்கால்ல நின்னியாக்கும் என்றாள். அடிப்போடி போன வருஷம் பூரா ஒழச்சி களம் கடைசியானப்போ களம் விடுங்கன்னு கேட்டப்ப அவரு என்ன சொன்னாரு... நீ குடிகோழிப் போட்டு கிழிச்ச கிழிக்கு இது போதும்னாரு. இந்த வருஷமும் ஆத்துல தண்ணி வந்த நா முதலா ஒழச்ச நமக்கு களம் வுடாம போனா என்ன பண்றது. அதாம் புள்ள கடனவுடன வாங்கி கோழி போட்டேன் என்றார். சரி அது போகட்டும் இந்த சோத்தையெல்லாம் தண்ணி ஊத்தி வைச்சுடு. காலையிலே மறு தண்ணி பாச்சி வை புள்ள. பொங்க காடிய புதுப்பானையில ஊத்திவை. இரண்டு நாள் கழிச்சி குடிச்சா கிறுகிறுப்பாக இருக்கும் என்றார்.



இரண்டாம் நாள் மாடு அவிழ்த்துவிடும் விழா. மாடு அவிழ்க்கும் முறைக்காரர் சேரிப்பெரியவர்களிடம் ஏலே 25 வருஷம் கழிச்சி இப்பதான் என் முறை வருது. ஆட்டம் பாட்டத்தோடு மாடு அவுத்து வரணும். செலவு எக்கு முக்கா செய்யப்போறேன்... எல்லாருக்கும் வேட்டி துண்டு எடுத்திருக்கேன்... வந்திருங்கடா என்றார். ஐயா நாங்க வழமை தவறாம வந்திடுவோம், ஊரு கட்சிப் பட்டுக் கிடக்கு... நாயத்தைப் பேசிக்கிட்டுதான் மாடு அவுக்கணும்னு அம்பலாரு சொல்லியிருக்கார் என்றார் பெரியவர். ஏலே அதான் நாளைக்கு நடக்கிற ஊர்க் கூட்டத்துல பேசி முடிச்சுப்பிடலாம் என்றபோது, நம்ம முனியாண்டவர் புண்ணியத்துல நாளைக்கே எல்லாரும் சந்தனம் பாக்கு எடுத்து கை கலந்துக்கிட்டா நல்லதுதான். எனக்கு நெகா தெரிஞ்ச நா முதலா எத்தன முறை ஊரு கட்சிபட்டு மாடு அவுக்காம இரண்டு மூணு வருஷம் கிடந்துருக்கு. எதுக்கும் செலவு பாத்துக்கிட்டு செய்யுங் கய்யா என்றார். அப்படியெல்லாம் நடக்க ஒண்ணும் கூறு இல்ல. நாளக்கி எல்லாம் தீர்ந்து போயிடும் என்று கூறியவாறு மேல்சாதியார் சென்றார்.



மறுநாள் ஊர்க்கூட்டம். மணியார் வீட்டு வாசல் விசாலமானது. சுற்றிலும் பூவரசு வேம்பு மர நிழல். இது தான் சேரிக்காரர் இடம். மணியாரின் வீடு சுற்றுக்கட்டு வளைவு சுற்றிலும் திண்ணைகள். நியாயம் பேசுமிடம் தென்னைஓலையால் பந்தல் போடப்பட்டிருந்தது. சபை களை கட்டியது. அம்பலமும் மணியாரும் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தனர். ஏலே தெக்கித்தெரு வடக்குத் தெரு பறையவூட்டு பயலுவோலெல்லாம் வந்திட்டிய லாடா என்றார் அம்பலம். சாமி அல்லாரும் வந்துட்டம்.. என்ன குத்தம் குறை இருந்தாலும் ஏத்துக்கிடனும் சாமி.. என்றவாறே சேரித்தெரு ஆண்கள் அனைவரும் குவிந்த கரத்தோடு கூட்டம் நடக்கும் திசை நோக்கி குப்புற கவிழ்ந்தனர். என்ன மாமா கூட்டத்த ஆரம்பிச்சிடலாம், முக்கரையும் (மூன்றுகரை) வந்தாச்சி என்றார் மணியார். அம்பலம் தலையசைக்க ஊர்க்கூட்டம் ஆரம்பமானது.



10 மணிக்கு தொடங்கிய கூட்டம் மாலை 5 மணிக்குதான் முடிந்தது. இருதரப்பாரும் ஏற்றுக்கொள்ளாதபோது 2,3 நாட்கள் கூட்டம் நடக்கும். முடிவு எட்டாத நிலையில் கலைந்துபோகும். இம்மாதிரியான காலங்களில் ஊரில் பொதுத் திருவிழா எதுவும் நடக்காது. ஏலே முக்கரைப் பறையனும் எழுந்திரிங்கடா என்றார் அம்பலம்.எழுந்து நின்றார்கள். முத்தா வடக்கிக்கரைதான் குத்தம் பண்ணி ருக்கின்னு ருசுவாயிருக்கு. அவுகளும் ஒத்துக்கிட்டாங்க. நீங்க என்ன சொல்றீங்க என்றார். சாமி ஒங்க பேச்சி என் தலைக்கு மேலே. குத்தத்தை ஒத்துக்குறோம். தேங்கா உடைச்சி அவராதம் கட்டுறோம் என்றவாறு தேங்காய் உடைத்து பழைய நிலைபோல காலில் விழுந்தனர். சரி சரி எழுந்திரிங்கடா கிண்ணத்தை எடுத்து சந்தனம் வழங் குங்க. சந்தனம் பாக்கு பறையன்களுக்கும் கொடுங்க. நாளைக்கு மாடு அவுக்கிறது கீழவூட்டு முறை. சண்டை சச்சரவு இல்லாம முனியாண்டவர் கோயில் மந்தையில மாடு அவித்துவிடுங்க... அம்பலமும் மணியாரும் இருக்கையை விட்டு எழுந்துவிட்டார்கள்.



எந்த நிபந்தனையுமின்றி நியாயம் ஏற்கப்பட்டதால் வடக்குக்கரை மேல்சாதியாருக்கு கோபம் வரவில்லை. நிபந்தனை இருக்கும்பட்சம் கோபம் தணிக்கும் வடி காலாக தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்கப்படுவர். முக்கரை கள்ளர்கள் யார் தவறு செய்தாலும், தண்டனையும் தடி யடி படுவதும் காலில் விழுந்து மன்னிப்புக் கோருவதும் மூன்றுகரை பறையர்கள்தான். சேரிக்காரருக்கும் சந்த னம் பாக்கு வழங்கப்பட்டது. தகராறின்றி நியாயம் தீர்ந்த சந்தோசத்தில் சென்றனர். மலுப்பன் மவன் வீட்டு வாசலில் நின்று ஏ புள்ள ப்ளே என்று குரல் கொடுக்க இந்தா வரேன் என்றவாறு வெளியே வந்தவள், யேய்யா ஊரு நியாயம் தீர்ந்துச்சா என்றாள். ஆமாடி சந்தனம் வழங்கியாச்சி என்றார். அதானே மாருபூரா சந்தனம் மணக்குது என்றாள். சரி புள்ளே சாமி கும்புட சோறு கொழம்பு காச்சிட்டியா? மேலவூட்டு அக்கா இப்பதான் வட சட்டி கொடுத்திச்சி. படையலுக்கு வட சுட்டுக்கிட்டு ருக்கேன். நீ அக்கினி சட்டியில நெருப்பப் போடு. இங்கயே சராபிடியெல்லாம் சேத்து வச்சிருக்கேன். அது புடிக்கிறத்துக்குள்ளே இந்த ஈடும் எடுத்துறேன் என்றார்.



அக்கினி சட்டியிலே நெருப்பப் போடுங்க. நல்ல நேரத் திலே எடுக்கணும் என்று தெரு பெரியவர் குரல் கொடுத் தார். அவரவர் வீடுகளில் அக்கினி சட்டி தயாராகி கிழக்கு மேற்காக எதிரெதிர் நிலையில் ஜுவாலை எரிந்துக் கொண்டிருந்தது. தாரை தப்பட்டைகளோடு வரிசையாக தலைச் சும்மாட்டில் வேப்பிலை வைத்து அக்கினிச் சட்டிகளை சுமந்து தத்த மது குலதெய்வத்தின் பெயரை உச்சரித்த வாறு ஊரின் கீழ்பகுதியில் கொண்டு வந்து வைத்தனர். இந்த ஒற்றுமையான நிகழ்வு இவர்கள் குடி பார்க்கும் மேல்சாதியாரிடம் அனேகமாக இருக்காது. எப்பா அங்கிட்டு இங்கிட்டு போயிடாதிங்கடா ஒவ்வொரு வீடா கை நனச்சிட்டு போங்க என்று கூறிய படி முத்தன் தனது வீட்டில் முதல் படையல், கீழவூட்டு படையல் என்று பொங்கல் சோறு வடையை பூவரசு இலையில் வைத்து அனை வருக்கும் கொடுத்தார். கோழி அடிச்சிருக்கேன் ஒரு கை தின்னுட்டு போங்க என்றபோது ஏ பெரியாளு அல்லா வூட்டு படையலும் கொஞ்சங் கொஞ்சம் திங்கனும்மே போதும் போதும் எய்த்த வூடு போங்க என்றார். அனேகமாக அனைவர் வீட்டிலும் கோழிக்குழம்பும் குழிப்பணியாரமும் வடைகளும் செய்தே படைப்பார்கள்.



மறுநாள் மாடு அவிழ்த்துவிடும் முறைக்காரர் வீடு களை கட்டி இருந்தது. மதியம் அனைவருக்கும் சாப்பாடு- பறையர்களுக்கும். சந்தனம் வெத்தலை பாக்கு கொடுத்து கோடிவரத்தில் சாப்பாடு. யாருக்கு சந்தனம் இருந்ததோ இல்லையோ இவர்களின் உடல் பூராவும் சந்தனம்தான். சேரி ஆண்கள் அனைவருக்கும் வேட்டித் துண்டு போட் டார் முறைக்காரர். ஏலே மலுப்பன் மவனே, மாடு அவுத்து கையிலே புடிச்சி மந்தைக்கு போறவரைக்கும் தப்பாட்டம் ஜொலிச்சிப்புடனும் தெரியுமா? என்றார். அனைவரும் வேட்டித் துண்டு வாங்கிய சந்தோசத்தில், சாமி பாருங்கோ தப்பு கிழிய கிழிய அடிக்க மாட்டோம்? என்றார்கள். மாடுகள் பூராவும் முனியன் கோயில் மந்தையில் வரிசையாக நிறுத்தப்பட்டன.



அய்யா எல்லா மாடும் வந்துருச்சா... சாம்புரானி போடலாமா? என்றார் பூசாரி. நம்மோ பறையவூட்டு மாடு வந்திருச்சா, ஏ முத்தா ஒங்க மாடு வந்திருச்சா ... நம்மோ தெரு மாடு சாடா வந்திரிச்சி, சாம்புரானிய போடச் சொல்லுங்கோ என்றார். சாம்புரானிய போடலாம் என்றதும், பூசாரி மேல் முனி சாமி இறங்கியது. ஒரே சத்தம். பூசாரி கிழக்கும் மேற்கு மாக ஆடிவந்தார். அனைவருக்கும் திருநீர் வழங்கப் பட்டது. இரண்டொருவரை முனிசாமி கையில் வைத்தி ருந்த பிரம்பால் கடுமையாக தாக்கினார். மா விளக்கு போட வந்த சில பெண்கள் திருநீர் வாங்கும்போது அவர் களின் தலைமுடியைப் பிடித்திழுத்து ஆட்டி பிரம்பால் ஒரு இழுப்போடு விட்டுவிட்டார். இப்படி இழுபடும் பெண்கள் பலபேர் இரண்டு மூன்று நாள் கழித்து வலியென்று கூறுவார்கள். பிடித்திருக்கும் பேய் பிசாசு விட்டுடும் என்பதால் இதை இவர்கள் பெரிய விசயமாக எடுத்துக்கொள்வதில்லை. மந்தை கலைந்து அவரவர் வீடுநோக்கிச் சென்றனர்.



பூசாரி மாமா, என்ன பிசாசு அந்த ஆயியை பிடிச்சது... போட்டு இந்த உலுக்கு உலுக்கிறியே என்று கேட்ட போது ஓய் மாப்புள்ளே நான் சொல்றத போயி யாரு கிட்டேயும் சொல்லிப்புடாதே... எந்த பேயி பிசாசு புடிச்சிருந்தது நான் போயி விரட்ட? நம்மள மனுசனா மதிக்கிற தில்லே. யாம் வயசுக்கு அந்த ஆயி எம்பேரச் சொல்லி கூப்பிடறதும், வாடா போடாங்கிறதுமா திமிரு புடிச்ச ஆயி. அதான் சாமி பேராலே தலைமுடிய இழுத்து பெரம்பாலே ரெண்டு போடு போட்டேன். சாதாரணமா அந்த ஆயிய நம்ம தொட முடியுமா? அதான் நம்மோ ஆளுவலே ஏளிசமா நினைக்கிற ஆளுவளே இதே சாக்கா வெச்சி பழி தீர்க்கிறதுதான். எந்த சாமி வந்து இவனுக்கு இந்த பிசாசு, அந்த பிசாசு புடிச்சிருக்குன்னு சொல்றது என்றார்.



மலுப்பன் மவன் தன் வீட்டு வாசலில் வந்து அமர்ந்தார். யோவ் நாளைக்கு கதிரு அறுக்கணுமாம். ஆளு கூட்டிப் போயி ஓட வய அறுவடைன்னு நடுவூட்டுக்காரு சொன் னாரு. நானும் பத்து ஆளு தெவிச்சிருக்கேன். நீயும் தெக்குத்தெரு அம்பலாரு தெரு பக்கம்போயி இன்னும் பத்து ஆளு தெவச்சிட்டு வந்துருய்யா. நாலஞ்சு நாளுல கதிரு அறுவடைய முடிச்சுவுடலாம் என்றாள் மனைவி. அறுவடை முடிந்தது. இன்னிக்கு கடைசி களம். வேலை தலையிலே நிக்கிற ஆளுவளுக்கு கொழம்பு சோறு போடணும்னு நடுவூட்டுக்காரர்கிட்டே சொல்லிட்டு வந்துடுய்யா என்றாள்.



அறுவடை முடிந்து கடைசிநாளன்று சாமி கும்பிட தட்டு முட்டுச் சாமான்களை ஒவ்வொரு குடிப்பறையரும் தான் வாங்கி வரவேண்டும்.



தலையடி நெல் மூட்டைகளாகக் கட்டப்பட்டிருந்தது. சாமி கும்பிட ஒரு சிறியகூடையில் வைத்திருந்த சுமார் ஐந்து மரக்கால் நெல்லை மூட்டை களுக்கெதிரில் கொட்டினர். நடுவூட்டார் சாமி கும்பிட்ட வுடன் அனைவரும் சூட தீபத்தை கையெடுத்துக் கும்பிட் டனர். மலுப்பன் மவனும் மனைவியும், இந்த வருசம் மாதிரியே எல்லா வருசமும் வௌயனுஞ் சாமி என்று தெய்வத்தை வேண்டி நின்றனர். ஏலே சாமி கும்பிட்ட நெல்ல எடுத்துக்கடா என்றவாறே வேல செய்த ஆட் களுக்கு தலா ஒரு மரக்கால் அளந்து போட்டார். இது இவர்களுக்கு கடைசிக் களம்கிறதால உங்க செலவுக்கு... ஏலே எல்லோரும் சந்தோசமா சாராயம் குடிச்சிட்டுப் போங்கடா என்றார். அய்யா எனக்குக் களம் உடுங்கோ என்றார் மலுப்பன் மவன். ஏலே ரெண்டுமூட்டே ஒனக்கு ஒதுக்கிருக் கேன். இதான் பொலியடிக்கு, சாட்டு வாவுலே ஒதுக்கிருக்கு,



அப்புறமென்னடா களம்வுடனும் என்றார். சாமி புருசன் பொண் டாட்டி சேந்து களம் செதுக்கின துலே இருந்து பத்துநாளா வேல பாத்துருக்கோம். யாம் வூட்டுக்காரர் கருத அறுத்த நாள் முதலா களத்துமேட்டுல ராவுன்னும் பாக் காமா பவன்னும் பாக்காமா காவ காத்துக் கிடந்துச்சி, போன வருசம் தான் கோழி போடலே பறப்பய லுக்கு அவ்வளவு திமிரான்னீங்க... இந்த வருசம் குடிக்கோழி போட் டும் மோசம் பண்றீயளே, இது நாயமா சாமி... என்றாள் மலுப்பன் மருமகள். ஏய் நிறுத்தடி, கடைசி களம்னு பாக்கிறேன். இல்ல பிரி கட்டிப்புடுவேன்... என்னடி ரெண்டு ரூவாய்க்கூட பொறாத குஞ்ச புடிச்சி போட்டுட்டு கோழி போட்டாளாம் கோழி. இதோட முடிஞ்சிப் போச்சா... போரடி கிடக்கு பாத்துக்கலாம் என்றார். அப்பவும் இப்படியேதான் சொல்லுவியோ என்றாள். பக்கத்தில் நின்ற அவள் புருசன், ஏட்டி நிறுத்தடி போதும் என்று அதட்டினார். ஏலே கடைசி களம் கறையாமே போங்கோடா, எல்லாம் போரடி இருக்கு பாத்துக்கலாம் என்று நடுவூட்டார் கூறினார்.



மூன்று வண்டிகளில் ஏற்றினது போக பாக்கி இருந்த மூட்டைகளை அடுத்தநடையில் ஏற்றிவிடச் சொல்லி புறப்பட்டார் நடுவூட்டார். ஏலே நான் போறேன் சண்டை சச்சரவு போட்டுக்காதீங்க என்றார். அய்யா, நான் குடிப்பறையன். ஊரே ஒன்னாருவ கூலி வாங்குது. நான் அரை ரூவாதான் ஒங்ககிட்ட வாங்கறேன். நாத்து வுட்டதி லேயிருந்து கதிரறுப்பு வரையிலும் ஒங்க வேலைதான் பாக்குறேன். ஆறுரூவாக்கு சாமி கும்பிட சாமான் வாங் கின வகையில பாலத்துக்கடைக்கு ஆறு மரக்கா நெல்லு போடணும். பத்துவிரலால பாடுபட்டு அஞ்சு விரலால அள்ளித் திங்கனும்பாங்க. நாங்க ஆங்கமா ஒரு மாசங்கூட சாப்பிட முடியாது. இந்த கோவத்துலதான் அவள அடிச்சிப்போட்டேன்... என்றார் மலுப்பன் மவன். சரி போங்க, வண்டிய வெள்ளென வரச்சொல்லுங்க என்றார்.



அவர் சென்றவுடன் மலுப்பன் மவன் ஏ புள்ளே என்று இருமுறை கூப்பிட்டும் மௌனமாக அவள் வேலை செய்து கொண்டிருந்தாள். இதா நான் கூப்பிடுறது கேக்கலயா? என்றார். என்ன சொல்லு? இப்பதான் அதிசயமா கூப்பிடுவ, நாலு மனுசாளு நிக்கிறதுகூட தெரியாமா கூட்டிக்கிட்டிருந்த அலம்பக் கட்டையால அடிக்கிறியே ஒன்னமாரிதான் நானும் ஒழைச்சிக்கிட்டி ருக்கேன் என்றாள். இந்தாடி, நான் அடிச்சதுக்கு கோவிச்சிக்கிறீயே அந்த அய்யா என்ன சொன்னாரு, ஒம் ஒடம்புத் தோல பிரி கட்டிப்புடுவேன்னு பேசுறாரு. நீ எய்த்து எய்த்து பேசற. அவன் அடிச்சாலும் அடிச்சுப்புடுவான்னு தான் பொய் தட்டா தட்டினேன் என்று மனைவியை சமாதானம் செய்தார். நான் சொன்னா நீ என்னத்த கேட்ட... மூனுமூட்ட நெல்லு வட்டிக்குக் கடன் வாங்கி, குடிகோழி போடனும்னு ஒத்தக் கால்ல நின்னே.



ரெண்டுபேருக்கும் கூலியா ரெண்டு மூட்ட களம் கொடுத் திருக்கேன்னு பெரிசா சொல்லிட்டாரு. நான் வாங்குன கடன் கொடுப்பேனா? சொச்ச காலத்த கழிப்பேனா? நாம என்ன அந்த குண்டு வயலே அறுத்தாயா கடனகொடுக்க? ஏய்யா சுத்த கூறுகெட்ட மனுசனா இருக்க, இந்த ஆளுகிட்ட குடிவேல பாத்து வருசம்பூரா ஒழைச்சும் அரங்கையும் பொறங்கையுமா நக்கிக்கிட்டு தான் இருக் கோம்...என்றாள். என்ன புள்ள பண்றது. போனவருசம் குடிகோழி போடலீன்னு கோவிச்சிக்கிட்டாரு. வருசம் பூரா வேல பாத்தும் என்ன பிரயோசனம்? வாங்குன கடன் கொடுக்க எங்கே போவேன்... தலையைப் பிடித்தவாறு கீழே அமர்ந்தார். இங்கருய்யா கொட்டி கொட்டி அளந் தாலும், குருணி பதக்காவாது. பேசி என்ன பிரயோசனம்? நாளையிலே இருந்து வெளியாளா நின்னு வேல பாத்தாத்தான் நாம வாங்குன கடன கொடுக்கலாம்.



இனி இவுகள நம்புறதுல எந்த பிரயோசனமும் இல்ல. எய்த்தவூட்டு மாமென் கதிரறுக்க கூப்பிட்டாக, நானும் என்வூட்டாளும் வர்றோம்னு சொல்லிட்டேன். காலமே வெள்ளென கதிரறுக்க போயிறலாம் என்றாள். எப்படிப் புள்ளே இந்த வேலையை போட்டுட்டு அடுத்தவூட்டு வேலைக்குப் போனம்னா நடுவூட்டய்யா அடியனுக்கு வருவாரே என்ன பன்றது? ஆமா நீ என்ன வெல்லக் கட்டியா? போட்டு வெடுக்குன்னு முழுங்கிப்புட என்றாள். சரி புள்ள ஏதுக்கும் நாலு கள்ளங்கிட்ட சொல்லி வய்ப்போம் என்றார்.



அம்பலத்தைப் பார்த்து விவரங்களைக் கூறிய மலுப்பன் மவன், சாமி நான் ரெண்டு புள்ள குட்டிய வெச்சிக்கிட்டி ருக்கேன். இவரை நம்பி எந்த பிரயோசனமுமில்ல. இனி இவருக்கு குடிவேல பாக்கமுடியாது. காலம்பூரா ஒழச்ச எனக்கு குடிப்பறையன்னு அரைரூவா கூலி கொடுத்தாரு. இதுலயுமே கடைசி களத்தன்னிக்கு எங்கள ஐயோன்னு கைய தட்டிவுட்டுட்டுப் போயிட றாரு. நான் குடி பாக்குற குடிய நம்பிதான் கடன ஒடன வாங்கி பொங்க கும்பிட்டேன். போன வருசம் மாதிரி இந்த வருசமும் மோசம் பண்ணிட்டாருங்க. நான் வெளியாளா நின்னு வேல பாத்தா தான் வாங்குன கடன அடைக்க முடியும். அவருக்கு வேல பாக்காம அடுத்த கள்ள னுக்கு வேல பாத்தா நீங்களே ஏண்டா எங்கிட்ட ஒருவார்த்த சொல்லலம்பீங்க, அதான்யா ஒங்ககிட்ட சொல்றேன் என்றார். சரி சரி போடா, நான் பேசிக்கிறேன் என்றார் அம்பலம்.



மறுநாள் வேலைக்குச் சென்று திரும்பியவளிடம் நடு வூட்டார், ஏய் மலுப்பன் மருமவளே எங்கடி ஒன் வூட்டுக் காரன்? நெல்லு மூட்டைய குதுருல பாச்சனும். காலமே வெள்ளென அவன வரச்சொல்லு என்றார். நானும் அது வுந்தாங்க கதுரறுக்கப் போனோம். அறுத்துப் போட்டத அடிக்கனும். போவலன்னா, இன்னிய கூலியும் கெடைக் காது. நாளை காலையிலயே வரச்சொல்லுறேன் என்றாள். ஏய் என்னாடி, பதிலா சொல்லுற... நெல்லு மூட்டை யெல்லாம் வெளியே கெடக்கு, என்வூட்டு வேலை யெல்லாம் முடிச்சுப்புட்டானா? நாளைக்கு வரட்டும் பேசிக்கிறேன் என்று கூறிச்சென்றார்.



மனைவி சொன்ன விவரங்களைக் கேட்டதும் மலுப்பன் மவன் மனதில் உள்ளூர பயம் ஏற்பட்டது. ஏ புள்ளே இந்தாளு வந்து தகராறு செஞ்சாலும் செய்வான். நான் நாளைக்கு வெள்ளென எந்திருச்சி ஒரு அடிபோய் ஒன் ஆத்தால பாத்துட்டு அந்த ஆயி கேட்ட பலவாரத்த வாங்கி கொடுத்துப்புட்டு வந்துடறேன் என்றார். ஏய்யா உன்னமாரி பயந்தாங்கொள்ளி ஆம்பள இந்த ஊர்லயே இல்லய்யா. உழுவாயில ஊரு பயணமும், அறுக்கயில ஆளு பயணமும் போனா நாமோ நல்லா வாழ்ந்துப் புடலாம், நீ இப்ப ஒன்னும் போவ வேணாம். இந்த ஊரு அறுப்பு சொடுங்கிப்போச்சு. இன்னும் ஒரு வாரமோ, பத்து நாளோ முடிஞ்சிரும். நானும் வர்றேன், எங்க ஆயி வடதான் ஆசையா திங்கும். வூட்டுல சுட்டோம்னா புள்ளகுட்டிக்கும் ஆங்கமா நாலு வடய கொடுக்கலாம். பேசாம நீ வேலைக்குப் போ, கஞ்சி ஊத்தி எடுத்துக்கிட்டு நானும் வந்துடறேன் என்றாள். நடுவூட்டாரு எங்கடி ஒம்புருசன்னு கேட்டுட்டு என்னமா அதட்டி அதட்டி பேசுறாரு. இன்னிக்கு வேலைக்குப் போவலேனா கூலி கெடைக்காதுங்கறேன். அந்த கூலிய நான் தர்றேன் ரெண்டுபேரும் வாங்கன்னு சொல்றத்துக்குக்கு கூட மனசு வரல அவருக்கு. நீ வேலைக்குப் போயிடு அவரு வந்தா நான் சொல்லிட்டு வர்றேன் என்றாள்.



காலையில் அனைவரும் பாலத்தில் ஒன்றாகக் கூடி பிறகே வேலைக்குப் பிரிந்து செல்வார்கள். பிரிந்து போன மலுப்பன் மருமவளை நடுவூட்டார் ஏய், எங்கடி அவன்... அவன வரச்சொன்னியா என்றார். அது முன்னாடியே போயிடுச்சிங்க. நாளைக்கு வெள்ளன கூட்டிக்கிட்டு நானும் வர்றேன் என்றாள். ஏய் நீ சொல்றத கேக்க நான் என்ன ஆளா? எங்கடி அவன் என்றார். நிலவரம் புரிந்த வளாக நீங்க போங்க உரமத் துக்குள்ள வரச்சொல்றேன் என்றாள். ஏய் என்னடி நீயே மட அடச்சே பேசுறீயே? என்றவாறு மரக்கொம்பை உடைத்து அடித்தார்.



ஒரு கையால் தலையில் வைத்தி ருந்த கஞ்சிக் கலயத்தைப் பிடித்தவாறு மறுகையால் அடியைத் தேக்கினாள். வலி பொறுக்கவியலாத நிலை யில், இந்த எளவெடுத்த செம்மத்துல வாழ்றத விட நாண்டுகிட்டு சாவலாம் என்றவாறு தலையில் வைத்தி ருந்த கஞ்சிக் கலயத்தை ஆவேசத்தோடு நடுரோட்டில் போட்டு உடைத்தாள். கலயம் சுக்குநூறாக சிதறியது. இவளது ஆவேசத்தைப் பார்த்த நடுவூட்டார் திகைத்து நின்றார். தன்காலத்தில் இப்படியொரு பெண் ஆவேசப் பட்டதை அவர் பார்த்ததே இல்லை என்பதால் பதட்ட மாகி, திருப்பியடிக்க முடியாத ஆற்றாமையில் தான் கலயத்தை ரோட்டில் போட்டு உடைத்தாளா? என்ற யோசனையோடு வந்த வழியே விறுவிறுவென்று நடக்கலானார்.



வேலை முடிந்து கணவனும் மனைவியும் வீடு வந்தனர். மறுநாள் காலையில் இருவரும் அம்பலத்தைப் பார்த்து நடந்த விசயங்களைத் தெரிவித்தனர். விசயத்தை முதல் நாளே அறிந்திருந்த அம்பலம், ஏலே எனக்கு எல்லாம் தெரியும், ஏதோ கோபதாபத்துல பொம்மனாட்டிய அடிச்சுப்புட்டான். மூக்கு இருக்கும் வரைக்கும் சளி இருக்கத்தான் செய்யும். நான் அவன கண்டிச்சுப்புடுறேன் போடா என்றார். சாமி நாங்க புருசன் பொண்டாட்டி சேர்ந்து காலையிலேயே வந்து தெருகூட்டி, சாணி அள்ளிப்போட்டு, எந்த வேலையும் கொற வைக்காம தான் செஞ்சிருக்கோம். நான் குடிவேலை பாத்ததுக்கு அவுக கொடுத்த குடிகூலிய மொகஞ்சுளிக்காமதான் வாங்குனோம். குடிகோழியும் போட்டோம்.



கடைசி களத்துல எங்க ரெண்டுபேரு கூலியத்தான் கொடுத்தாரு. கேட்டா, போரடி இருக்குங்கிறாரு. அப்பவும் இப்படி தான் சொல்லுவாரு, எம் பொண்டாட்டி கடேசி களத் தன்னிக்கு பேசுனத மனசுல வெச்சிக்கிட்டு அவள மாட்டப்போட்டு அடிக்கிறமாரி அடிக்கிறாரு. அவரு களமும் வேணாம், அவரு குடியும் வேணாம், நான் இனிமே அவருக்கு வேலை பார்க்கமாட்டேன், பசியும் பட்டினியுமா கெடந்து வேலை பார்த்து என்ன பிர யோசனம்? என்று முறையிட்டுச் சென்றார்கள். வழியில் பார்த்த நடுவூட்டார், ஏலே அம்பலத்துக்கிட்ட மறவுட் டுட்டுப் போறிகளா? அம்பலம் என்னத்த செஞ்சிப்புடு வாரு, நெல்லு மூட்ட வெளிய கெடக்குது. அத பங்குடுப் படுத்தனும்னு ஒம்பொண்டாட்டிக்கிட்ட எத்தனை தடவ சொல்லிருக்கேன். அவ மறுத்து மறுத்து பதில் சொல்றா. அந்த கோவத்துலதான் ரெண்டு தட்டு தட்டுனே. அதப் பெரிசா சொல்றதுக்கு வந்துட்டியா என்றார்.



ஐயா ரெண்டுமூனு நாளைக்குத்தான் கருதறுப்பு தக்க மொய்க்கவா இருக்கும். நாங்க ரெண்டுபேரும் சேந்து ஒரு மூட்டைக்காவது அறுத்துப்புடுவோம். பொறவு ஒங்க வேலதான் வந்துர்றோம் என்றார். ஏண்டா, என்வூட்டு வேல எப்படி போனாலும் போவட்டுன்னு நீ சம்பாதிக்க நெனக்கிறியா? என்றவாறு பக்கத்திலிருந்த காட்டா மணக்கு மரக்கிளையை உடைத்து கணவன் மனைவி இருவரையும் தாக்கினார். அடிபட்ட மலுப்பன் மவன் யோவ் நிறுத்தய்யா, ஒனக்குதான் அடிக்கத் தெரியும்னு அடிக்கிறியா? ஏன் ஆயி அப்பன் என்ன ஒன்னுக்கிட்ட பண்ணைக்கா வெச்சிட்டு செத்தாக, இல்லே முச்சலிக்க போட்டுக் கொடுத்தாகளா? ஒன்கிட்ட ஆயிரம், ஐநூறு வாங்கிட்டு பண்ணையாளா இருக்கிறவனுக்கிட்ட இதெல்லாம் வச்சுக்கோ, ஏதோ எம்பாட்டன், முப்பாட்டன் வழமயாச்சேன்னு பாத்தா ரொம்பதான் ஓட்டுர்யோ, 50 மூட்ட நெல்லடிச்ச மிராசு ஒரு 5 மூட்ட நெல்லு களம் கொடுத்தியாயா நீ? நாங்க என்ன மண்ணள்ளி தின்னுப்புட்டா ஒனக்கு வந்து மாரடிக்கிறது? குடி பறையன வெச்சி கோலேச்ச தெரியாத உனக்கு குடி பறையன் ஒரு கேடா? போயா... மலுப்பன் மவனும் அவன் மனைவியும் நிற்கும் கோலத்தைப் பார்த்தால் நெருங்கினால் என்ன நடக்கும் என நினைத்துப் பார்க்க அந்த கணநொடி நடுவூட்டாருக்கு மோசமாகவே இருந் தது.



காலைப் பொழுது... வண்டி சோடு இருபக்கமும் கிளுவை வேலியான அடைப்பு... புருசன் பொண்டாட்டி சேந்து தாக்கினா சத்தங்கூட போட முடியாது. பறையன் அடிச்சிப்புட்டான்னு வெளியேயும் சொல்ல முடியாத நிலை. ஏலே எதுத்தா பேசுற? நீ இந்த ஊருல குடி யிருக்கிறத நான் பாத்துப்புடுறேண்டா? என்றார். யாரும் நடமாட்டம் இல்லாதது மலுப்பன் மவனுக்கு ரொம்ப தோதாப்போச்சு. போயா ஒன் அண்ட மண்டயில குடி வெச்சுக்காத. நீ அளக்குற படிய இன்னோட நிறுத்திப் புடு, கொளத்த கண்ட குண்டி எத்தன. குண்டிய கண்ட கொளம் எத்தன? போயா என்றார். இதை சற்றும் எதிர் பாராத நடுவூட்டார் மௌனமாக நின்றார். அப்படி யொரு ஜென்மம் அங்கிருப்பதையே பொருட்படுத்தாத வர்களாக புருசனும் மனைவியும் தங்கள் வழியில் கிளம்பினர்.


யோவ் ஒனக்கு இம்புட்டு கோவமிருக்கும்னு நான் நெனச்சுக்கூட பாக்கலய்யா. அந்தாளு அவுக பெரியப்பன் கிட்ட சொல்லி ஊரு கூட்டத்த கூட்டி நம்மல நிறுத்தி கேட்டா என்னா சொல்றது என்று புருசனைக் கேட்டாள். அடி போடி ஐயோ சாமி இவருதான் எங்கள வெரட்டி வெரட்டி அடிச்சாரு. நாங்க ஒரு குத்தமும் செய்யலியே சாமின்னு காலிலே விழ வேண்டியதுதான். இனி இவன் கிட்ட குடிவேலையும் வேணாம். அவன் வேட்டி துண் டும் வேணாம். கை கால் இருக்கு எங்க வேணும்னாலும் போயி பொழச்சிக்கலாம் என்றார் மலுப்பன் மகன். தன் பிடியிலிருந்து திமிறிப்போகும் குடிப்பறையனை தடுக்கும் பலத்தை இழந்து விட்டவராக அங்கேயே நின்றிருந்தார் நடுவீட்டார்.

Related Posts with Thumbnails