தமிழச்சியை விமர்சிக்க புகுந்த ஆணிய தற்குறிகள்
தமிழச்சி பெண்ணியம் என்ற பெயரில் எழுதி வருவம் விசயங்களில் எனக்கு ஒப்புதல் இல்லை. அவர் மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆயினும் இங்கு புனித பிம்பம் வேசம் கட்டிக் கொண்டு அவரது தளத்தை நீக்க வேண்டும் என்று கலாச்சார காவலர்களாக அவதாரமெடுத்துள்ளவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசத்தின் மீது ஏதோ அதீத அருவெறுப்பு கொண்டவர்கள் போல நடிக்கும் இந்த கயவர்கள் முடிந்தால் தமது வீடுகளிலும், சாலைகளிலும், வெகுசன ஊடகங்களிலும் இருக்கும் ஆபாசத்தை எதிர்த்து அட்டை கத்தி சுழற்றட்டும். ஏன் அவ்வளவு கஸ்டம்? இங்கே இணையத்தில் கிளு கிளுப்பாக, இரட்டை அர்த்தங்களில் எழுதி பெண்ணுடலை விற்று தமது வலைப்பூ கட்டுரைகளை சூடாக்கியவர்களுக்கு எதிராக தமது அட்டை கத்திகளை சுழற்றி விட்டு பிறகு தமிழச்சியை பார்த்து பேசட்டும்.
இந்த விசயம் வேறு எந்த சில்லரை பிரச்சினைகள் போலவும் சிற்சில சலசலப்புக்கு பிறகு அமுங்கிவிடும் என்றே தலையிட விரும்பமின்றி இருந்தேன். ஆயினும் இந்த பிரச்சினை மேலதிகமாக தமிழச்சி ஒரு பெண் என்ற அடிப்படையில் அவரை மையப்படுத்தி வக்கிரமாக தனிமைப்படுத்தும் எல்லையை அடைந்துவிட்ட நிலையில் இதனை பார்த்துக் கொண்டு இருக்க இயலாது என்பதால இந்த பதிவு.
தமிழச்சி பதிவுகள் ஆபாசம் என்பது எனது கருத்தல்ல. அவை ஆபாசமல்ல என்பதை அறிவிக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் விவாதம் செய்ய வரலாம். அவை பிரச்சினைகளை பேசாமல் வெறும் பரபரப்பு சமாசாரமாக தீர்ந்து போகிற அம்சத்தில்தான் அவர் மீது எனது விமர்சனங்கள் என்பதை குறிப்பிட்டு விடுகிறேன். ஒருவேளை தமிழச்சி தமிழ்மணத்திலிருந்து யோனி என்கிற வார்த்தை பிரயோகத்திற்க்காக நீக்கப்படுவார் எனில் எனது பதிவுகளில் தலைப்புகள் எல்லாவற்றிலும் இனிமேல் யோனி உள்ளிட்ட பெண்ணிய உடல் சார்ந்த வார்த்தைகளை இடம் பெறச் செய்வதன் மூலம் போராட தலைப்பட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழ்மணத்தில் ஆபாசம் சார்ந்த விசயங்களை தடுக்கும் கொள்கைகளை தமிழச்சிக்கு பயன்படுத்தும் அதே சட்ட வரம்புகளின் அடிப்படையில் எல்லார் மீதும் பயன்படுத்த தமிழ்மண சமூகத்தை நிர்பந்திக்கவும் தயாராக இருக்கிறேன். தமிழ்மணத்தில் முன்பொருமுறை தமிழச்சி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே கடுமையான கண்டனத்துக்குரியது எனும் போதும் அது சூழ்நிலை கருதி எடுக்கப்பட்ட ஒரு தன்மையான நடவடிக்கை என்ற அளவில் சமரசமாக இருந்து கொள்ளலாம். ஆனால் இது தொடர்வதை பார்த்துக் கொண்டிருக்க இயலாது.
தமிழ்மணம் இந்த விசயங்களை அதன் சரியான அம்சத்தில் உள்வாங்கி பரிசீலிக்கும் என்று நம்புகிறேன். அல்லது இன்னும் சிறப்பாக இந்த அம்சத்தில் அது தலையிடாமல் இதனை விட முக்கிய வேலைகள் இருந்தால் அதில் உருப்படியாக நேரம் செலவழிக்கலாம் என்று கருதுகிறேன். இதில் எனது தெளிவான முந்தைய நிலைப்பாடுகளையே வைக்கிறேன். தமிழ்மணம் எனும் சுதந்திர வெளியின் சட்டங்கள் இங்கு உலாவும் தனிப்பட்ட ஒவ்வொருவராலும் தீர்மாணிக்கப்பட வேண்டும். தமிழ்மண வாசகர்களின் கையில் கலாச்சார காவலர் உரிமை இருக்கட்டும் என்கிற எனது ஆரம்ப கால நிலைப்பாட்டை இங்கு மீண்டும் நினைவுறுத்துகிறேன்.
அசுரன்

