ஒரிஸ்ஸாவில் பயங்கரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் சண்டை!!
ஒரிஸ்ஸா கலிங்காநகரில் இரண்டு நாள் முன்பு(13 மே 2010) நடந்த துப்பாக்கிச் சூட்டில் வயது முதிர்ந்த ‘பயங்கரவாதி’ ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சில குடும்பப் பெண் ‘பயங்கரவாதி’களும் படு காயம் பட்டுள்ளார்கள். காயமுற்ற 'பயங்கரவாதி'களுக்கு எந்த மருத்துவ வசதியும் போய்ச் சேர்ந்து விடக் கூடாது என்று தடுத்து வருகிறது போலீசு.
கலிங்காநகர் என்ற பெயர் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கும் என்று தெரியவில்லை. 2006 ஆண்டு ஜனவரி மாதம் டாடா/பாஸ்கோ நிறுவனத்தினர் இரும்பு தொழிற்சாலைத் திட்டங்களுக்காக பழங்குடியின மக்களை விரட்டியடிப்பதை எதிர்த்து போராடிய மக்கள் மீது பன்னாட்டு நிறுவனக் கூலிப் படைகளும், காக்கிச் சட்டை பயங்கரவாதிகளுமான ஒரிஸ்ஸா போலிசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14பேர் கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து இன்றைய தேதி வரை அது ஒரு அறிவிக்கப்படாத யுத்த பிராந்தியமாகவே இருந்து வருகிறது. இந்த காலகட்டம் முழுவதும் அது நாட்டு எல்லை பிராந்தியம் போலவே பதட்ட நிலையில் உள்ளது.
கலிங்காநகரில் போராடி வரும் மக்களின் வீடுகளை போலீசு ரவுடிகள் இடித்து தள்ளியதை எதிர்த்த பொழுதுதான் இந்த துப்பாக்கிச் சுடு நடந்துள்ளது. தற்போது நடந்துள்ள துப்பாக்கிச் சூடு கூட புதிது அல்ல. கடந்த மார்ச் மாதம் ஒரு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மேலும் கிராமக் கிணறுகளில் பெட்ரோல் ஊற்றுவது, வீடுகளை கொளுத்துவது போன்ற நல்ல காரியங்களிலும் போலீசு மற்றும் டாடா ரவுடிகள் ஈடுபட்டுள்ளனர். கலிங்காநகர் பகுதி பல மாதங்களாக டாடா ரவுடிப் படை மற்றும் டாடா ஆதரவு போலீசு ரவுடிப் படைகளின் முற்றுகையின் கீழ் ஏதோ வெளி நாட்டு எல்லை போல மூடி வைக்கப்பட்டுள்ளது. ஈராக்கை அமெரிக்கா 8 வருடங்கள் முற்றுகையிட்டு 5 லட்சம் குழந்தைகளை மருத்துவ வசதி கிடைக்க விடாமல் கொன்றதை போலவே இங்கும் சில பல உயிர்களைக் கொல்லக் கொடுத்துள்ளது அரசு. மே 10 ஆம் தேதி கிராம மக்களை லத்தியால் அடித்துள்ளது போலீசு. ஏப்ரல் 30ல் பலருடைய வீடுகளை இடித்து தள்ளியுள்ளனர். மார்ச் 30ல் ஆரம்பித்து இன்றைய தேதி வரை தொடர்ந்து மக்கள் மீது அரசு தாக்குதல் தொடுத்துள்ளது, அதாவது ஒரிஸ்ஸாவில் மிகச் சரியாக ஆபேரேசன் கிரீன் ஹண்ட் ஆரம்பித்தும் இதே காலத்தில்தான். ஏற்கனவே 2006 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் ரத்தக் குழாய்களை போலீஸ் ரவுடிகள் வெட்டிக் கொன்றுள்ள கோடூரம் சமீபத்தில் அம்பலமானது. இந்த பச்சைப் படுகொலையை மறைப்பதற்காக இறந்தவர்களின் கைகளை பிரேத பரிசோதனையின் போது துண்டித்துள்ளனர் அழகிய குழந்தைகளும், குடும்பமும் வாய்க்கப் பெற்ற போலீசார்.
டாடா-போஸ்கோ தியாகிகள் கம்பனிக்கு ரோடு முதலான வசதிகள் செய்து கொடுப்பதை எதிர்த்துப் போராடும் கலிங்காநகர் மக்களின் அமைப்பு (VVJM) ஜன்மஞ்ச். ஜன் மஞ்சின் முன்னணியாளர்கள் 40 பேரை சமீபத்தில் சிறையிலடைத்துள்ளது போலீசு. ஆயிரக்கணக்கில் விதவிதமான போலீசு ரவுடிகளைக் குவித்து முற்றுகையிட்டுள்ளது போலீசு. இன்னிலையில் போராடுவதற்கு கூட வழியில்லாமல் மொத்தமாக தற்கொலைதான் செய்து கொள்ள முடியும் என்ற நிலையில் உள்ளோம் என்கிறார் ஜன்மஞ்சின் தலைவர் ஜரிக்கா. இவர்களின் கோரிக்கை சரியான நிவாரனம் கொடு என்பதுதான். நிலத்தை எடுத்துக் கொள்வாய் எனில் எனக்கு நிவாரணமாக வேறொரு இடத்தில் நிலம் கொடு என்பதுதான் மக்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வைத்த மறுநாளே போலீசை அனுப்பி மக்களை அடித்துள்ளது அரசு. இதே நேரத்தில் வேறு பல நிறுவனங்களுக்கு நிலங்களை அரசு தானமாக அள்ளிக்கொடுப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
யுத்த பிராந்தியம் என்று சொல்லும் பொழுது சும்மா வசதிக்காக அவ்வாறு சொல்லவில்லை. ஒரு பிராந்தியத்தின் மக்களுக்கு அடிப்படை தேவையானவற்றை கிடைக்க விடாமல் திட்டமிட்ட வகையில் முற்றுகையிட்டு தாக்குதல் தொடுப்பது சர்வதேச வரையறைகளின் படி யுத்தம் என்றே அறியப்படுகிறது. எப்படி ஈழத்தில் மக்கள் முற்றுகையிடப்பட்ட படுகொலை செய்யப்பட்டனரோ அது போல. கலிங்காநகரும் அவ்வாறான முற்றுகையில்தான் பல மாதங்களாக அரசு மற்றும் டாடா பயங்கரவாதிகளின் கொலைக்கரங்களின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
விசயம் இப்படியிருக்க சுட்டுக் கொல்லப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டவர் என்று டாடாவின் ஆசி பெற்ற பத்திரிகைகள் எழுதியுள்ளன. மேலும் இன்ன தேதி வரை ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட் நாயக்கும் துப்பாக்கிச் சூடை மறுத்து வருகிறார். சுட்டுக் கொன்ற போலிசுக்காரர்கள் மற்றும் அதற்கு ஆணையிட்ட கொழுத்த முதலாளிகளைப் போலவே கொல்லப்பட்டவர்களுக்கும் அழகான குழந்தைகள், குடும்பங்கள் இருந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன் (அதெல்லாம் யாருக்கு வேண்டும்).
சுட்டவர்களையும், சுட்டுக் கொல்லப்பட்டவர்களையும் சேர்த்தே பயங்கரவாதி என்று குறிப்பிட்டதற்கு ஒரு காரணம் உள்ளது. நம்மைப் போல நகரத்தில் வாழும் நாகரிக கனவான்களுக்கு வன்முறை என்பது அறவே விரும்பத்தகததாக இருக்கிறது. நமது நல்ல உள்ளங்களுக்கு, மனிதாபிமான அபிலாசைகளுக்கு பேதங்கள் கிடையாது. எனவே அடித்தவனையும், அடி வாங்கி திருப்பி அடிப்பவனையும் வேறுபடுத்தி பார்க்காமல் வன்முறையை பிரயோகித்தவர்கள் என்ற அறநெறி ஒழுக்கக் கோட்பாட்டின் அடிப்படையில் ‘எடை போட்டு’ பார்ப்பதே தர்மம் என்பதாலும், அவ்வாறு ‘குறிப்பிடு’வதோடு நம்மை வரம்பிட்டுக் கொண்டு வேறு எதுவும் செய்யாமல் பீட்ஸா பர்கர் சாப்பிட்டுக் கொண்டு எப்படி போராடுவது என்று ஆலோசனை கூறுவதுதான் நமது அறநெறிக் கோட்பாடு என்பதாலும் இவ்வாறு குறிப்பிடுகிறேன்.
இந்த மோதல்களில் இரு பக்கமும் மனிதர்கள் மடிவது குறித்து வினவு தளத்தில் செந்தழல்ரவி வருத்தப்பட்டிருந்தார். அவரது மனிதாபிமானம் புரிந்து கொள்ளக் கூடியதுதான். நகரத்தில் வாழும் நம்மைப் போன்றவர்கள் இது போன்ற மனிதப் படுகொலைகளை தடுப்பதற்கு செந்தழல் ரவி விருப்பப்பட்டது போல சில எளிய வழிகளை பரிந்துரைக்க விரும்புகிறேன். இங்கு நாம் வீதியில் இறங்கி மக்களை திரட்டி போராடினால், இந்தக் கோடூரங்களை விரிவாக மக்களிடம், நண்பர்களிடம் என எங்கும் பிரச்சாரம் செய்தால், அரசை தனிமைப்படுத்தினால் அங்கு அவர்கள் துப்பாக்கி தூக்குவதற்கு அஞசுவார்கள். இதுதான் அந்த எளிய வழி. இதற்கு நமது நேரத்தில் ஒரு சிறு பகுதியை தியாகம் செய்ய வேண்டும் அவ்வளவுதான். நமது நேரம் முக்கியமா அல்லது அங்கு மடியும் உயிர்கள் முக்கியமா என்பதை அவரவரின் மனசாட்சியின் முடிவுக்கே விட்டு வைக்கிறேன்.
அசுரன் என்ற பயங்கரவாதி
(ஏதோ சட்டம் போட்டிருக்காங்களாம் இது மாதிரி விசயங்களை ஆதரிச்சா தண்டனைன்னு. தண்டனைய கொடுங்கப்பா அவார்டு மாதிரி ஏத்துக்கிறோம்)
தொடர்புடைய பதிவுகள்:
ஒரிசா:மறுகாலனியாதிக்கத்தின் கோரம் பழங்குடி மக்களின் யுத்தம்