அயோக்கியா: தீர்ப்பும், வரலாறும்!!
"கடந்த கால கசப்பு அனுபவங்களை மறந்துவிட்டு முன்னேறிச் செல்வோம்" - ஆர் எஸ் எஸ் தலைவன் மோகன் பகவத் சொல்கிறான். பல நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஆதாரமற்ற கசப்பனுபவமாம் ராமன் கோயில் இடிப்பு என்ற கதையை வைத்துக் கொண்டு பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்த பயங்கரவாத அமைப்பின் தலைவன் சொல்கிறான் இதை.
"நமது சமூகத்தில் மதவெறியர்களுக்கு(fanatics) இடமில்லை, இந்தத் தீர்ப்பு நல்ல தீர்ப்பு" இப்படி சொல்வது வேறுயாருமல்ல குஜராத் பாசிச மோடி என்ற மதவெறியன் தான்.
"தேசிய இணைவுக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது, உடனே ராமன் கோயிலை பெரிதாக கட்டுவோம்" இப்படி புரிய வேண்டியவர்களுக்கு மட்டும் புரிகின்றபடி உளறியது போல தெளிவாக உளறியிருப்பவன் திருவாளர் மார்க்கெட் போன அத்வானி.
அயோத்தித் தீர்ப்பு என்ற அயோக்கியத்தனம் செய்யும் மாயம் இந்த அதிசய பேச்சுக்களையெல்லாம் நாம் கேட்க வேண்டிய காலக் கொடுமை நிகழ்ந்துவிட்டது. நேற்று எல்லா தொலைக்காட்சிகளும் இந்து மத வெறித் தலைவர்களின் நல்லொழுக்க பேச்சுக்களால் நிரம்பி வலிந்தன. இது அயோத்தித் தீர்ப்பு அல்ல, அயோக்கியத் தீர்ப்பு என்பதை இதுவே உரக்க ஒலித்தது.
இந்தத் தீர்ப்பில் இந்து ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் மனசாட்சியாக நீதிமன்றத்தின் குரல் ஒலித்துள்ளது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், பாபர் மசூதி மற்றும் அது இருந்த இடத்தின் மீதான முஸ்லீம்களின் உரிமை என்னென்ன காரணங்களை நிராகரித்து பறிக்கப்பட்டதோ அதே நிராகரிக்கப்பட்ட காரணங்களை/வாதங்களை ஏற்றுக் கொண்டு ஆர் எஸ் எஸ் காவி வெறியர்களுக்கு அந்த இடத்தின் மீது உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது முரன்பாடு என்று கேட்டவர்கள் எல்லாம் நேற்று தேசவிரோதிகள் என்று தூற்றப்பட்டார்கள், கேலி செய்யப்பட்டார்கள்.
'அங்குதான் ராமன் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை எனவே அந்த இடம் அவர்களுக்கே சொந்தம்' (தீர்ப்பு நகல்1 மற்றும் 2) என்று சொல்லும் நீதிமன்றம்,
'அது பாபருக்கு சொந்தமான இடம் என்பதும், அதைக் கட்டியது பாபர்தான் என்பதும் போதுமான அளவு நிருபிக்கப்படவில்லை, எனவே உரிமையில்லை' (தீர்ப்பு நகல் 2, சரத்து 2) என்று கூறி முஸ்லீம்களின் உரிமையை மறுத்துள்ளது. ஆதாரமே இல்லாத ராமன் பிறந்த இடம் என்ற கட்டுக்கதை உண்மை ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை. ஆனால் நேரடி ஆதாரமற்றது(தீர்ப்பு நகல் 1, சரத்து 2.) என்பதாலேயே 1992ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி பொய் ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரானது.
இதைத்தான் இந்திய வரலாற்று முக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான இர்பான் ஹபீப் இப்படிக் கூறுகிறார்: "இந்த நாட்டின் இராண்டம்தர குடிமகனாக உணர்கிறேன்". இப்படித்தான் பெரும்பான்மை முஸ்லீம்களும் உணர்கிறார்கள். உலகின் இரண்டாவது மிகப் பெரிய முஸ்லீம் மக்கள் தொகையை கொண்ட நாட்டின் முஸ்லீம்கள் இரண்டாம்தரக் குடிமகன்களாக உணர வைக்கப்பட வேண்டும், அதன்படி அவர்கள் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும் என்பதுதான் ஆர் எஸ் எஸ்ன் இலட்சியமும் ஆகும்.இதைத்தான், 'தேசிய ஒருங்கிணைப்புக்கான புதிய சாத்தியம் உருவாகியுள்ளது' என்று முழங்குகிறான் அத்வானி.
இல்லாத ராமனுக்கு அந்த இடம் சொந்தமாம், ஆனால் பாபர் கட்டவில்லையென்பதாலேயே அது மசூதிக்கு சொந்தமில்லையாம். அப்படியென்றால் இடிக்கப்பட்ட மசூதி என்ன அந்தரத்திலா தொங்கிக் கொண்டிருந்தது, அந்த இடத்தில்தானே இருந்தது? யார் கட்டினால் என்ன? மசுதி இருந்தது என்ற உண்மைதானே இங்கு முக்கியமானது? 1949ல் ராமன் சிலையை அங்கு வைத்த திருடன் யார் என்று நீதிமன்றம் ஆராய்ந்துதான் தீர்ப்பளித்ததா? அப்போது மட்டும் இந்துக்களின் நம்பிக்கை முக்கியம், அதன் பூர்வாசிரமம் தேவையில்லை?
'1949ல்தான் மசூதியின் மைய கோபுரத்திற்குக் கீழே ராமன் சிலை வைக்கப்பட்டது (தீர்ப்பு நகல் 1,2,3). எனவே அது இந்துக்களுக்குச் சொந்தம்' என்று கூறியுள்ள நீதிமன்றம்.
'மசூதியை இஸ்லாம் சொல்லுகின்ற விதிகளின் படி கட்டவில்லை எனவே அது மசூதியில்லை(தீர்ப்பு நகல் 3), அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை" என்று கூறியுள்ளது. ராமன் சிலை மட்டும் இந்து விதிமுறைகளின் படித்தான் 1949ல் அங்கு திருட்டுத்தனமாக வைக்கப்பட்டதா என்ன? விதிமுறைகளெல்லாம் முஸ்லீமுக்கு மட்டும்தான் போலும்?
1949க்குப் பிறகு மைய கோபுரத்தின் கீழ் ராமன் சிலை வைக்கப்பட்டதால் அது இந்துவுக்குச் சொந்தம்(தீர்ப்பு நகல் 1, 2,3) எனில் 1949க்கு முன்புவரை அங்கு சிலையும் கிடையாது ஒன்றும் கிடையாது. பல நூறு வருடங்களாக அங்கு முஸ்லீம்கள்தான் தொழுதார்கள்(தீர்ப்பு நகல் 1,2). எனில், அவர்களுக்கு உரிமையில்லையா என்று யாரும் கேள்வி எழுப்பிவிடாதீர்கள். தேவைப்பட்டால் ஆயிரம் வருட பழய நம்பிக்கை(ராமன்) என்று நியாயப்படுத்தவும், தேவையில்லையெனில் லேட்டஸ்ட்(1949ல் சிலை வந்தது) என்னவென்று பாருங்கள் என்று நிராகரிக்கவும் ஆர் எஸ் எஸ்ன் மனசாட்சியாம் நீதிமன்றங்களுக்குத் தெரியும்.
அதாவது மைய கோபுரம் முஸ்லீம்களுக்குச் சொந்தம் என்பது நிருபிக்கப்படவில்லை என்கிறது நீதிமன்றம். சரி இருக்கட்டும். ஆனால் இந்துக்களுக்கு மைய கோபுரம் சொந்தம் என்பதை மட்டும் எப்படி நீதிபதிகள் ஆணித்தரமாக சொல்கிறார்கள்? அங்கு 1949ல் சிலை வைக்கப்பட்டதாலேயும், அதற்கு முன்பு வரை பொதுவாக அயோத்தியில் ராமன் பிறந்தான் என்று நம்பிக் கொண்டிருந்த இந்துக்கள், மசூதி உருவான பிறகு அந்தக் குறிப்பிட்ட பகுதியில் இராமன் பிறந்தான் என்று மாற்றிக் கொண்ட இந்துக்கள், பிறகு 1949ல் திருட்டுத்தனமாக ராமனது சிலை மசூதியின் மைய கோபுரத்தின் கீழே வைக்கப்பட்டது எனவே அது இந்துக்களுக்குச் சொந்தமாம்(தீர்ப்பு நகல் 1, 2,3). நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படித்தான் சொல்கிறது.
நீதிமன்ற தீர்ப்பில் எங்கேயுமே மைய கோபுரம் உள்ள பகுதி இந்துக்களுக்கு சொந்தம் என்பது நிருபிக்கப்பட்டுள்ளதால் அதை அவர்களுக்குத் தருகிறோம் என்று சொல்லவில்லை. நிருபணம் எல்லாம் முஸ்லீம்களுக்குத்தான், இந்துக்களுக்கு நம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்பதுதான் இதன் பொருள்.
"மசூதி இருந்த இடத்தின் மீதான உரிமையை சன்னி வக்பு வாரியம் நிருபிக்கவில்லை. மேலும், மசூதி இருந்த இடம் பாபருக்கு சொந்தமானது என்பதும் நிருபனமாகவில்லை" என்று கூறியுள்ளது நீதிமன்றம் (தீர்ப்பு நகல் 1, 2, 3).
ராமன் பிறந்த இடம் என்பதும்தான் நிருபிக்கப்படவில்லை, அங்கு ராமன் கோயில்தான் இருந்தது என்பதோ அல்லது கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்பதோ கூடத்தான் நிருபிக்கப்படவில்லை(தீர்ப்பு 1, 2). அந்த இடம் இந்துக்களுக்கானது என்பதும் கூடத்தான் நிருபிக்கப்படவில்லை. ஆனாலும் இந்துக்களின் நம்பிக்கை என்பதால் அது மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்குத் தரப்படவேண்டும் என்கிறது தீர்ப்பு.
பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பின் படி நிருபிக்கப்பட்டவையெல்லாம் இவைதான், 1) ஏற்கனவே, இடிந்த கோயில் ஒன்று இருந்துள்ளது, அங்குதான் மசூதி கட்டப்பட்டது. 2) கோயிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை. 3) மசூதி கட்டப்பட்ட பிறகுதான் மசூதி இருக்கும் அந்தக் குறிப்பான பகுதியில் ராமன் வழிபாடு நடக்கத் தொடங்கியது. 4)அதுவும் வெளிப் பிரகாரத்தில்தான். 5)1853 வரை மசூதி ஒரு பிரச்சினையாகவே இல்லை, இரு மதத்தவரும் அக்கம் பக்கமாக வழிபட்டு வந்துள்ளனர்.
இதிலும் கோயில்தான் இருந்ததா என்பதை ஆணித்தரமாக அகழ்வாராய்ச்சியால்` சொல்ல இயலவில்லை. பூசி மெழுகவே செய்கிறார்கள்.
இவைதான் நிருபிக்கப்பட்டவையெனில், இதே நிலையை மீண்டும் கொண்டு வருவதுதானே நியாயம்? மசூதியின் பிரகாரத்தில் இந்துவின் வழிபாட்டையும், மசூதி இருந்த இடத்தில் மசூதியையும் கொண்டு வருவதுதானே நியாயம்?
தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், வெளிப் பிரகாரத்தில் சீதா மற்றும் ராமன் வழிபாடு நிகழ்ந்ததால் அது நிர்மோகி அகாராவுக்குச் சொந்தம், உள்ளே மைய ஸ்தூபியில் 1949ல் ராமன் சிலையை வைக்கப்பட்டதாலும் அதையே இந்துக்கள் அன்றிலிருந்து நம்பத் தொடங்கியதாலும் அந்த இடம் இனிமேல் மசூதிக்கோ அல்லது முஸ்லீம்களுக்கோ சொந்தம் கிடையாது இந்து மகா சபைக்கே சொந்தம், 1992ல் மசூதி இடிக்கப்படும் வரை அங்கு மசூதி இருந்தது என்பது மறுக்க இயலாத அளவு நிருபிக்கப்பட்டுவிட்டது எனவே போனால் போகிறது மூனாவது பங்கு முஸ்லீம்களுக்கு என்று தீர்ப்பு சொல்லியுள்ளனர்.
அதாவது 400 வருடம் மசூதி இருந்தது ரெவின்யு டிப்பார்மெண்டிலோ அல்லது நிலப் பட்டா மூலமோ ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை (பாபருக்கு இந்த சட்டப் பிரச்சினையெல்லாம் தெரியாமல் போனதற்கு பாவம் நீதிபதிகள் என்ன செய்வார்கள்) எனவே அங்கு முஸ்லீம்களுக்கு உரிமையில்லை போலும். 400 வருட மசூதிக்கு உரிமையில்லை ஆனால் 61 வருடங்களுக்கு முன்பு வைக்கப்பட்ட ராமனது திருட்டு சிலைக்கு உரிமையுண்டு. ஏனேனில் அது இந்துக்களின் நம்பிக்கை(புதிய நம்பிக்கையா, பழைய நம்பிக்கையா என்பதெல்லாம் நீதிமன்றத்திற்கு தேவையில்லாத விசயம்).
இப்போது இந்தப் பிரச்சினையின் காலனி ஆட்சிக்கால பரிணாமத்தை புரிந்து கொள்வது தேவையாக உள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இந்து முஸ்லீம் பிரித்தாளும் சூழ்ச்சியும், காலனியாதிக்க பிரிட்டிஷ்க்காரர்களின் ஏவல் படையாகச் செயல்பட்ட இந்துத்துவவாதிகளின் முஸ்லீம் எதிர்ப்பு, பிரிட்டிஷ் ஆதரவு அரசியலும் இந்த பிரச்சினையில் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன.
நிர்மோகி என்ற குழு அங்கு கோயில் இருந்ததை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது என்று களத்தில் இறங்கிய பிறகுதான் 1853ல் அங்கு முதல் மத மோதல் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு வருடங்கள் நடந்த கலவரங்களின் விளைவால், நவாபின் ஆட்சியின் கீழ் இருந்த அங்கு கூட்டாக இந்துக்களும், முஸ்லீம்களும் உள்பிரகாரத்தில் வழிபடுவது தடை செய்யப்பட்டது. ஏற்கனவே மசூதி இருந்தபடியால், இந்துக்களின் வழிபாடிற்கு என்று வெளிப் பிரகாரத்தில் ஒரு இடம் கட்டப்பட்டது.
இதுதான் பிரச்சினையின் மையமான பகுதி. 1850களில் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒருங்கிணைந்து பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றும் சுதந்திரப் போரை நடத்திக் கொண்டிருந்தனர். திப்பு சுல்தான் தலைமையில் தென்னிந்தியாவில் ஒரு கூட்டிணைவு உருவாகி அது பிரிட்டிஸால் சிதைக்கப்பட்டிருந்தது. திப்பு சுல்தான் தலைமையில் தந்திரப் போரில் ஈடுபட்ட அரசர்கள் மூட்டிய கனல் 1805ல் வேலூர் சிப்பாய்க் கலகமாக வெடித்தது. பிற்பாடு, 1857ல் இந்திய சுதந்திரப் போராக இந்தியா முழுவதும் வெடித்துக் கிளம்பியது. இவையிரண்டும் பிரிட்டிஷ்க்காரர்களால் ஒடுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் இந்தியா ஒரு புரட்சியை எதிர்நோக்கி இருந்தது.
மத பிரிவினைகள் இன்றி மக்கள் ஒன்று பட்டு நின்றது பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு அபாயமானது எனவே, பிரித்தாளும் தந்திரம் விரிவாக அமல்படுத்தப்பட்டது. இன்னொரு பக்கம், புரட்சிகரமான இந்த காலகட்டத்தில்தான் துரோகமமும் உத்வேகத்துடன் முன்னுக்கு வந்தது. அந்தத் துரோகத்தின் வரலாற்றுக் குரலாக பதிவு செயப்பட்டதுதான், பக்கிம் சந்தர் சாட்டர்ஜியின் 'ஆனந்த மடம்' என்ற புதினம், அதில் முஸ்லீம்களை நாட்டை விட்டு விரட்டுவதே முக்கியம், பிரிட்டிஷ்க்காரர்களின் ஆட்சி நமக்குத் தேவையானது என்ற அரசியலும் பேசப்பட்டது. முஸ்லீம்களை விரட்ட செல்லும் கூட்டத்தினரின் 'தேசபக்த'ப் பாடலாக வந்தேமாதரம் பாடலும் புதினத்தில் இயற்றப்பட்டது.
இந்துத்துவாதிகளின் மதவெறி முஸ்லீம் வெறுப்புப் பிரச்சாரமும், பிரிட்டிஷ்க்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியும் தாளமும், லயமுமாக இணைந்து செயல்பட்டு இந்திய விடுதலைப் போராட்ட அரசியலை பிழைப்புவாத லாவணிக் கச்சேரியாகவும், மதவாத பிரிவினையாகவும் சிதைத்தன. இவைதான் பாபர் மசூதிப் பிரச்சினையில் தெரிந்தே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மோதலைத் தூபம் போடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தன.
ஒரு நீதிமன்றத் தீர்ப்பு முற்றுமுதலாக பெரும்பான்மையினரின் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டும் வழங்க இயலுமா? அத்தகைய நம்பிக்கை பெரும்பான்மையினருடையது என்பது கூட ஜனநாயக முறையில் நிருபிக்கப்படாத பொழுது தீர்ப்பின் தன்மையை நியாயமானதாக எப்படி புரிந்து கொள்ள இயலும்? மசூதியை இடிக்கக் கூடாது என்று நீதிமன்றம் சொல்லியதை மீறி அது இடிக்கப்பட்டுள்ளதற்கு நீதிமன்றத்தின் எதிர்வினை என்ன? இவையெல்லாம் உண்மையில் இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதையல்ல மாறாக இன்னும் சில பல வருடங்களுக்கு அடித்துக் கொண்டு அப்பாவி மக்களை பலி கொடுக்கப்படுவதையே உறுதி செய்யும். அதைத்தான் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளும் விரும்புகிறார்கள்.
இது தீர்ப்பு அல்ல, துரோகம். இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்தவர்களுக்கு செய்யப்பட்ட நம்பிக்கைத் துரோகம்.
அசுரன்
தீர்ப்பு நகல் 1
தீர்ப்பு நகல் 2
தீர்ப்பு நகல் 3
காலக் குறிப்புகள்
காலக் குறிப்புகள்
பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்
அயோக்கியத் தீர்ப்பு
கடப்பாறையேவ ஜெயதே – அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு !!
ராமனுக்கே மயிர் பிடுங்கிய அலகாபாத் நீதிமன்றம்..