TerrorisminFocus

Showing posts with label இராமதாஸ். Show all posts
Showing posts with label இராமதாஸ். Show all posts

Thursday, December 20, 2007

பாமக பச்சோந்தியும் சில 'கூஜா'க்களும்!!

ஒரு பச்சோந்தியும் சில 'கூஜா'க்களும்

உருட்டல் - மிரட்டலால் உண்மையை மறைக்க முடியுமா?

""அடுத்த தேர்தலில் ஆட்சி: பச்சோந்தி இராமதாசின் பகல் கனவு'' என்ற தலைப்பில் ""புதிய ஜனநாயகம்'' ஆகஸ்டு இதழில் அட்டைப்படச் சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்கு, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நல்ல வரவேற்பு இருந்தது. ""பாரபட்சமின்றி'' அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் அம்பலப்படுத்தி வரும் ""புதிய ஜனநாயகம்'', பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் இராமதாசின் சந்தர்ப்பவாத, மோசடி அரசியலை உரிய நேரத்தில் உரிய வகையில் அம்பலப்படுத்தியிருப்பதாகப் பலரும் வரவேற்றுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் என்ற ஊரில் இருந்து முரளி என்ற வாசகர் எழுதியுள்ள கடிதத்தில் தமிழக ஆட்சியாளரின் பச்சோந்தித்தனத்தை அம்பலப்படுத்தி வருவதற்கு மனமார்ந்த பாராட்டுதலைத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இக்கருத்துக்கு நேர்மாறாக சென்னை வடபழனியில் இருந்து கி.ராம் (செட்டியார்) என்பவர், தன்னை ஒரு புதிய ஜனநாயகம் வாசகர், ம.க.இ.க.வைச் சேர்ந்தவர் என்று கூறிக் கொண்டு மிகவும் கீழ்த்தரமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பு.ஜ. வாசகர் என்றும், ம.க.இ.க. காரன் என்று புளுகிக் கொண்டு வடபழனி கி.ராம் எழுதிய இந்தக் கடிதத்தைப் படித்ததும் ஒரு பழைய நினைவுதான் வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், பண்ருட்டி இராமச்சந்திரன் பா.ம.க.வின் சட்டமன்ற கட்சித் தலைவராக இருந்தார். அப்போது அவரை விமர்சித்து எழுதியதற்காக, அப்போது இராமதாசு கட்சி நடத்தி வந்த ""தினப்புரட்சி'' நாளேட்டிலும், கடிதம் மூலமாகவும் ""புதிய ஜனநாயகம்'' பத்திரிக்கையாளரைக் கேவலமாக திட்டி எழுதியிருந்தனர். பு.ஜ. அதற்குப் பதிலடியும் எழுதியிருந்தது. பா.ம.க.வினரால் அன்று தாங்கிப் பிடிக்கப்பட்ட ""பண்ருட்டியார்'' பின்னர் என்ன ஆனார், பா.ம.க.வினராலேயே எவ்வளவு தூரம் வசைபாடப்பட்டார் என்பதும், அக்கட்சியினர் இப்போது மறந்து போன சங்கதி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு என்ற ஊரில் பு.ஜ. விற்றுக் கொண்டிருந்த இரண்டு தோழர்களை சூழ்ந்து கொண்ட பா.ம.க.காரர்கள் சிலர் இதழ்களைப் பிடுங்கி கிழித்து வீசினர். வேறு சிலரோ தோழர்களின் விளக்கத்துக்குப் பிறகு இதழ்களை வாங்கிச் சென்றனர்.

இப்போது, பா.ம.க. "பசுமைத் தாயக'த்தின் நிர்வாகிகள் என்று கூறிக் கொண்டு ""புதிய ஜனநாயகம்'' தொலைபேசிக்குத் தொடர்பு கொண்டு உருட்டுவதும், புலம்புவதும், மிரட்டுவதும் வசவுபாடுவதுமாக உள்ளனர்.

""எங்க அய்யாவைப் பத்தி என்னய்யா இப்படி அநாகரிகமாக எழுதியிருக்கீங்க? பத்திரிகைன்னா என்ன வேணாலும் எழுதறதா? மத்த கட்சிக்காரனெல்லாம் பண்ணாததையா எங்கய்யா பண்ணிட்டாரு? எங்க அய்யாவை மட்டும் ஏன் எழுதற? எல்லா விசயத்திலும் மக்களுக்காக எங்கய்யாதான் போராடிக்கிட்டு இருக்காரு, முன்மாதிரியா தொலைக்காட்சி கூட எப்படி நடத்தலாம்னு நடத்திக் காண்பிக்கிறாரு, அவரப்பத்தி இப்படி இழிவுபடுத்தி எழுதலாமா?''

இவர்களில் யாருமே அரசியலுக்காக பா.ம.க.வில் உள்ளவர்கள் அல்ல; பிழைப்புக்காக அக்கட்சியில் இருப்பவர்கள் என்பது அவர்கள் எழுப்பும் கேள்விகளில் இருந்தே தெரிகிறது. ""எங்கய்யாவைப் பச்சோந்தின்னு எப்படி எழுதலாம்? மத்த கட்சிக்காரனெல்லாம் யோக்கியமா? ஏன் எங்கய்யாவை மட்டும் எழுதற? பொன்முடிகிட்ட தி.மு.க. கிட்ட "சூட்கேசு' வாங்கிக் கிட்டுதானே இப்படி எழுதறே? நேத்து வந்த விஜயகாந்த் எல்லாம் கனவு காண்றப்ப மக்களுக்காக உயிரைக் கொடுத்துப் போராடுற எங்கய்யா கனவு காணக்கூடாதா?'' என்றவாறான இந்தக் கேள்விகளில் எங்காவது அரசியல் இருக்கிறதா? எல்லா ஓட்டுக் கட்சிகளைப் போலத்தான் பா.ம.க.வும் என்று இவர்களின் வாக்குமூலமே அக்கட்சி மற்றும் தலைமையின் யோக்கியதையை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறது.

இவர்களில் ""புதிய ஜனநாயகம்'' எழுதியுள்ள அரசியல் மீது எந்தக் கேள்வியும் எழுப்புவதற்கு யோக்கியதை உண்டா? நாடாளுமன்றத்துக்கு பா.ம.க. அனுப்பியுள்ள புதுவை எம்.பி.யான இராமதாசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஆதரித்து, வரவேற்று அங்கே பேசுகிறார். இங்கே இந்த "ஐயா' இராமதாசு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்துப் பேசுகிறார். எது பா.ம.க.வின் நிலை? இதைப் புரிந்து கொள்ளும், கேள்வி கேட்கும் பா.ம.க.காரர்களைத்தாம் அரசியலுக்காக அக்கட்சியில் இருப்பவர்களாகக் கருதமுடியும். அப்படி இல்லாமல் வெறுமனே இராமதாசுக்குத் துதிபாடும் பிழைப்புவாதிகள்தாம் ""புதிய ஜனநாயகம்'' பத்திரிகையை உருட்டி, மிரட்டிப் பார்க்கிறார்கள்.

யார் இந்த இராமதாசு? பா.ம.க.வில் அவருக்கு என்ன பொறுப்பு? தனக்குக் கட்சியில் பதவி வேண்டாம் என்று தியாகியைப் போல நாடகமாடிக் கொண்டே, ஜெயலலிதாவைப் போல யாரோ எழுதித்தரும் அறிக்கைகளுக்கு கையெழுத்துப் போட்டு வெளியிடுவதைத் தவிர கட்சியில் எந்தப் பொறுப்பும் ஏற்காது, அடிமுதல் முடி வரை கட்சிப் பொறுப்பாளர்களை நியமிக்கவும், அவர்களின் விசுவாசத்தை சந்தேகித்தால் தூக்கியடிக்கவும் வாய்ப்புக் கிடைத்தால் அன்பு மகன், மனைவி, மருமகள், பேத்தி எல்லோருக்கும் ""பதவி'' வழங்குவதை யும் இவர்கள் கேள்வி கேட்கிறார்களா? ""பத்து நாட்களில் ரிலையன்சு கடைகளை மூடாவிட்டால் இழுத்துப் பூட்டுவோம்'' என்று இராமதாசால் எச்சரிக்கை விடப்பட்ட ரிலையன்சு ஃபிரெஷ் கடைகள் இன்னமும் திறந்தே கிடக்கிறது பா.ம.க வீரர்கள் அங்கே போவார்களா?

— ஆசிரியர் குழு

Related Posts with Thumbnails