TerrorisminFocus

Friday, October 25, 2013

மறுபதிப்பு: எங்கள் தோழர் ஸ்டாலின்!!


ஸ்டாலின்: இருண்ட காலங்களின் மீது ஒளி பாய்ச்சி விரட்டி அடிக்கும் வெப்பச் சூரியன்!!


முதல் பதிவு:

தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!

சோவியத் யூனியன் உலகின் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வெற்றிகரமாக சோசலிசத்தை சாதிக்க முடியும் என்று நிரூபித்த நாடு. அதே நாடுதான் முதலாளித்துவத்தின் தோல்விக்கும் உதாரணமாக இன்று நின்று கொண்டிருக்கிறது. அது 1920களை ஒட்டிய கறுப்பு வெள்ளை காலகட்டம், உலக ஏகாதிபத்திய நாடுகள் முதல் உலகப் போர் முடிந்து ஒரு பத்தாண்டுகளிலேயே மீண்டும் ஒரு உலக யுத்தம் செய்வதற்க்கான தாயாரிப்புகளில் தீவிரமாக இருக்கின்றன. இந்த முறை அரசியல் களம் சிகப்பு நிறமாக இருந்தது ஒரு முக்கிய வித்தியாசம்.


துரோகிகளை உருவாக்கிய புதிய புரட்டல்வாதம் உருவான அந்த நெருக்கடி மிகுந்த வரலாற்று காலகட்டம் குறித்து ஜார்ஜ் தாம்சனின் 'மார்க்ஸ் முதல் மாவோ வரை' புத்தகத்திலிருந்து:

"சோவியத் அரசு வலுவடைய அடைய, ஏகாதிபத்திய அரசுகளிடையே உள்ள முரன்பாடுகளும் மேலும் கடுமையாகின. முதல் சோசலிச அரசுக்கு எதிரான தமது பகைமையில் அவை ஒன்றுபட்டன. அதன் வளர்ந்து வரும் வலிமையின் முன்னால் அவை பிளவுபட்டன. இப்பிளவு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளூம் வர்க்கத்துக்குள் பிரதிபலித்தது. பிரிட்டனில் சேம்பர்லினால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட பெரும்பான்மையாக இருந்த பிரிவு சோவியத் யூனியனைத் தாக்குமாறு ஹிட்லரை ஊக்குவித்தது. ஹிட்லர் சோசலிசத்தை அழிப்பதுடன் இந்த நிகழ்ச்சிப் போக்கில் தன்னையும் பலவீனப்படுத்திக் கொள்வான் என்றும், அதனால் பிரிட்டன் ஐரோப்பாவின் மிகப்பலம் பொருந்திய அரசாக உருவாகும் என்றும் இப்பிரிவு நம்பிக்கை கொண்டிருந்தது.

பிரிட்டனிடமும், பிரான்சிடமும் ஸ்டாலின் பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை முன்வைத்தார். இது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் போர் தடுக்கப்பட்டிருக்கும். அது ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லை என்பது தெளிவாகியதும், அவர் ஹிட்லருடன் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்.""மேற்கில் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்ட ஹிட்லர் இப்போது கிழக்கில் தாக்குதல் தொடுக்கத் தாயாராக இருந்தான். பிரிட்டனின் ஆதரவைப் பெற ஒரு முயற்சி செய்தான்; ஆனால் சர்ச்சில் பிரிட்டிசு மக்களின் ஆதரவுடன் பிரிட்டனை சோவியத் யூனியன் பக்கம் நிறுத்தி தன் பதிலை வழங்கினார். இதன் பொருள் பிரிட்டிசு ஆளூம் வர்க்கம் தனது குறிக்கோளைக் கைவிட்டு விட்டது என்பதல்ல, அதன் நடைமுறைத் தந்திரம் மட்டுமே மாறியது. சர்ச்சிலின் நோக்கம் என்னவென்றால், ஜெர்மனியைத் தோற்கடிக்க சோவியத் யூனியனுக்கு இயலும் வகையில் ஆதரவு தருவது; இதன் மூலம் சோவியத் யூனியன் தனது சக்தி அனைத்தையும் செலவிடும்; அதன் பிறகு பிரிட்டன் உண்மையான வெற்றியாளனாகி விரும் என்பதுதான். மீண்டும் ஒரு முறை அவர்கள் தவறாகக் கணக்கிட்டு விட்டார்கள். சோவியத் மக்கள் அளவிட முடியாத இழப்புகளை அனுபவித்தனர். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் இறந்தனர்; இரண்டரைக் கோடி மக்கள் வீடிழந்தனர். இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் பலன்களைக் காட்டிலும் அதிகமான பொருள்வகைச் சேதம் ஏற்பட்டது; ஆயினும் அவர்கள் வெற்றி பெற்றனர். முதல் சோசலிச அரசு பாசிசத்திலிருந்து உலகைக் காப்பாற்றியது."நீலகண்டன் என்பவர் தனது பொய்யுரைகளின் தொடர்ச்சியாக சமீபத்தில் இன்னுமொரு பொய்யை எழுதியிருந்தார். அதாவது ஹிட்லருடன் ஸ்டாலின் ஒப்பந்தம் செய்து கொண்டு ஏதோ பெரிய துரோகம் செய்தது போல அதில் சித்தரித்திருந்தார். இவர்கள் அரைப் பொய்யர்கள் என்று சொன்னதன் அர்த்தம் இதுதான். அதாவது உண்மையில் ஸ்டாலின் பிரிட்டிஸ், பிரான்சிடம் ஒப்பந்தம் போட கோரிக்கை வைத்த பொழுது அவர்கள் மறுக்கவும் வேறு வழியின்றி ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டதன் மூலம் ஒரு வருடம் போருக்கான தயாரிப்புக்கு அவகாசம் கிடைப்பதை உறுதிப் படுத்திக் கொண்டார். இந்த உண்மையின் கடைசிப் பாதியை மட்டும் வைத்து பொய்யுரைகளை எழுதும் இது போன்ற ஜென்மங்களை எந்த லிஸ்டில் சேர்க்க? மேலும் அவரது அந்த கட்டுரையில் ஸ்டாலின்தான் உண்மையில் ஹிட்லரை வளர்த்தார் என்று குறிப்பிடுகிறார். உண்மையில் நெருக்கடியை தவிர்க்க ஒரு வருட அவகாச காலகட்டத்தில் ஹிட்லருடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி சில அரசியல் பொருளாதார நடவடிக்கைகளை ஹிடலரின் ஜெர்மனியுடன் செய்து கொண்டதை மட்டும் சுட்டிக்காட்டி இவ்வாறு அவதூறு கிளப்புகிறார் பொய்கண்டன்.இதில் குறிப்பாக ஒரு விசயம் கவனிக்க வேண்டியுள்ளது,பிரிட்டனோ அல்லது அமெரிக்காவோ அல்ல மாறாக சோவியத் யூனியன் தான் போரினால் அதிகம் இழப்படைந்த நாடு. ஆனால் சில நூறு வருடம் உலகம் முழுவதும் சுரண்டிக் கொழுத்த பிரிட்டன் இரண்டாம் உலகப் போரின் நிறைவில் தனது பொருளாதாரத்தை புனரமைத்துக் கொள்ள அமெரிக்காவின் உதவியை நாடியது. அதன் ஒரு பகுதியாகத்தான் பிரிட்டிஸ் காலனிய நாடுகளின் விடுதலை உள்ளது. ஆனால் முதல் உலகப் போர் முதல் தொடர்ந்து பல கடும் நெருக்கடிகளை சந்தித்து வந்த சோவியத் ரஸ்யா இரண்டாம் உலகப் போரின் பெரும் இழப்புகளுக்குப் பிறகும் கூட தனித்து நின்று வல்லரசாக மீண்டது, எந்த நாட்டையும் சுரண்டாமல். இந்த சாதனையைத்தான் நீலகண்டன் போன்ற பொய்யர்கள் அவதூறு புளுதி கிளப்பி மறைக்க முற்படுகிறார்கள். தெருப் புழுதியால் சூரியனை மறைக்க இயலுமா?ஸ்டாலின் குறித்து அவதூறு பேசும் எந்த நாயும் இந்த அதிசயம் குறித்தும், ஸ்டாலின் மீது மக்கள் வைத்திருந்த பெரு மதிப்பு குறித்தும், மக்களை இயக்கி சாதனைகள் பலச் செய்ய செய்த உணர்வு நிலை என்ன என்பது குறித்தும் எதுவும் சொல்வதில்லை. நழுவி ஓடிவிடுகிறார்கள்.ஸ்டாலின் குறித்தான அவதூறுகளை அங்கு விஜயம் செய்து பல இந்திய தலைவர்களும் மறுத்துள்ளனர். ஆயினும் பொய்யிலே பிறந்த இவர்கள் தமது புரளிகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்வதில் மட்டும் கொஞ்சம் கூட சளைக்கவில்லை.சரி இங்கு சுருக்கமாக ரஸ்யாவில் கடும் நெருக்கடியான சூழலில் வர்க்கப் போராட்டம் கைவிடப்பட்ட சூழல் எது என்பதையும். அது எப்படி எதிர் வர்க்கங்களின் கையில் அதிகாரத்தை ஒப்படைத்தது என்பதனையும் பார்ப்போம்.ஸ்டாலினின் இரு தடுமாற்றங்கள் - தொடர் புரட்சி:

இரண்டாம் உலகப் போரில் வெளிநாட்டு எதிரிகளை வெற்றிகரமான செயல் தந்திரத்தின் மூலம் முறியடித்த ஸ்டாலின் உள்நாட்டு எதிரிகளை அவ்வாறூ முறியடிப்பதில் தோல்வியுற்றார். இது குறித்து ஒரு சின்ன சித்திரம்.


1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்டாலின் கீழ்காணும் தொலை நோக்குமிக்க எச்சரிக்கையை விடுத்தார்:

"நாம் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்து ஐம்பது அல்லது ஒரு நூற்றாண்டு பின் தங்கியுள்ளோம். இந்த இடைவெளியை நாம் பத்தாண்டுகளில் நிரப்ப வேண்டும். ஒன்று நாம் இதைச் செய்தாக வேண்டும் அல்லது நாம் வீழ்ந்தாக வேண்டும். "இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். அவர்கள் சோவியத்துடனான இறுதி மோதலுக்கான தயாரிப்புகளைச் செய்கிறார்கள். இந்த நெருக்கடியான பின்னணியில்தான் சோவியத் ரஸ்யாவில் எதிர் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஸ்டாலின் எடுத்துச் சென்ற விதம் குறித்து நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.


1933 இல் முதல் ஐந்தாண்டு திட்டம் முழுமை பெற்றது. 1937-ல் இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் முழுமை பெற்றது. இவையணைத்தும் பல இன்னல்களையும், அனுபவக் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்ப்பட்ட இழப்புகளுடன் வெற்றியை அடைந்தன. இதற்க்கு காரணம் சாதாரண மக்கள் காட்டிய துணிச்சல் மிக்க வேலைப்பாணியே.

முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் ஸ்டாலின் அறிவிக்கிறார்:


"சோவியத் அரசு அதிகாரத்தின் வளர்ச்சி, செத்துக் கொண்டிருக்கும் வர்க்கங்களின் கடைசி எச்சங்களின் எதிர்ப்பை ஆழப்படுத்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவ்வர்க்கங்கள் செத்துக் கொண்டிருப்பதாலும் அவர்களது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாலுமே, அவர்கள் தாக்குதலின் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு கூர்மையான வடிவத்துக்குப் போய்க் கொண்டே இருப்பார்கள்.."இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் நடுவில் மேற்சொன்னதை உறுதிப்படுத்தி எதிரிகளுக்கு எதிரான வர்க்க போராட்டத்தின் தேவையை உறுதிப்படுத்துகிறார் ஸ்டாலின்.


இந்நிலையில் 1936-ல் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது அனைவருக்கும் சம உரிமை வழங்கியது. அதாவது இரண்டாம் ஐந்தாண்டு திட்ட முடிவில் அவர் முந்தைய சமூகத்தின் எச்சங்கள் என்று கூறி சோவியத் மக்களை எச்சரிக்கை செய்ததையே மறந்துவிட்டு, எதிரிகள் இருப்பதையே கவனத்தில் கொள்ளாமல் எல்லாருக்கும் சம உரிமை கொடுக்கும் சட்டத் திருத்தத்தை கொண்டு வருகிறார். இதன் மூலம் தான் கொடுத்த எச்சரிக்கைக்கு மாறாக அவரே நடந்து கொள்கிறார். அதாவது முந்தைய சமூகத்தின் எச்சமாகிய முதாளித்துவ ஆட்களுக்கு சம உரிமை கொடுக்கிறார். இதன் அர்த்தம் வர்க்க போரட்டத்தை கைவிடுவது என்பதுதான். இதன் அர்த்தம் எதிரிகளுக்கும் சம உரிமை கொடுப்பது என்பதாகும். இதன் அர்த்தம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடுவது என்பதாகும்.


இதன் விளைவாக கட்சிக்குள் அத்தனை பிற்போக்குவாதிகளும் ஊடுருவுகிறார்கள். இதனை விரைவிலேயே உணர்ந்து ஸ்டாலின் இதற்க்கெதிராக விழிப்புடன் இருக்குமாறு 1937-ல் எச்சரிக்கிறார். சோவியத்தின் அழிவுக்கு உள்ளிருந்து வேலை செய்பவர்கள் தனித்து நிற்ப்பதில்லை. இவர்களுக்கு எல்லைக்கு வெளியே உள்ள சோவியத்தின் பகைவர்கள் உதவுகிறார்கள் என்று எச்சரிக்கிறார்.


ஒரு யுத்த அபாயத்தை எதிர்கொண்ட நிலை, உள்நாட்டு சதிக்கெதிரான நெருக்கடி இவையணைத்தும் சேர்த்து சோவியத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் ஏற்ப்படுத்திய அழுத்ததின் விளைவுதான் ஸ்டாலினின் இந்த முதல் தடுமாற்றத்துக்கு காரணமாக அமைகிறது. இதே நேரத்தில் கட்சி முதல் பல இடங்களில் ஊடுருவிய எதிரிகளை உணர்கிறார் ஸ்டாலின். அதனை எதிர்கொள்வதற்க்கு அவர் கையாண்ட அதிகாரத்துவமான முறை இரண்டாவது தடுமாற்றமாக இருக்கிறது. இதன் விளைவாக ஏற்கனவே எதிரிகள் ஊடுருவியிருந்த போலிஸ் துறையின் கையில் எதிரிகளை ஒழிக்கும் பொறுப்பை ஒப்படைக்கப்படுகிறது. விளைவு எதிரிகள் உண்மையில் சோவியத்தின் நண்பர்களை ஒழிக்கிறார்கள்.


எங்கே தவறு நிகழ்கிறது?

1935 வரை லெனினியத்தின் பாதையில் நடை போட்ட ஸ்டாலின் ஏகாதிபத்தியங்கள் சுற்றி வளைத்து ஏற்படுத்திய அழுத்தத்தின் விளைவால் தடுமாறுகிறார். இந்த விசயத்தில் சோவியத் ரஸ்ய பாட்டாளி வர்க்கம் செய்யத் தவறிய விசயம் மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையே முந்தைய சமூகம் உருவாக்கிய இடைவேளியை குறைக்கும் முயற்சிகளில் போதிய கவனம் செலுத்தாமை ஆகும். இதனை நிறைவேற்றும் பண்பாட்டு புரட்சிக்கான அறைக்கூவலை லெனின் தனது கடைசிக் கட்டுரைகளில் ஒன்றில் எழுப்புகிறார். இதனை ஸ்டாலினும் கூட மீண்டும் வலியுறுத்துகிறார். ஆனால் பண்பாட்டு புரட்சிக்கான தேவை உணரப்பட்டதோடு நின்று விட்டது. ரஸ்ய பாட்டாளி வர்க்கம் சந்தித்த கடும் இன்னல்கள் அதனை அந்த திசையில் தொடர்ந்து பயணித்து பண்பாட்டு புரட்சியை செய்வதிலிருந்து திசை திருப்பி விட்டது. ஸ்டாலினின் முதல் தவறுக்குப் பிறகு அவர் பிரச்சனையை மக்களிடம் கொண்டு சென்று அவர்களை களத்தில் இறக்கியிருந்தால் அதிகார வர்க்கத்தின் எதிர் புரட்சி நடவடிக்கைகள் மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கும்.ஆனால் ஸ்டாலின் தவறு செய்வதற்கு வரலாறு அவருக்கு கொடுத்த வாய்ப்புகளுடன் ஒப்பிடும் போது தனது முதல் தவறை திருத்ததுவதற்க்கு வரலாறு அவருக்கு கொடுத்திருந்த வாய்ப்புகளின் அளவு வெகு சொற்பமே.


ஸ்டாலின் மக்களை அணி திரட்டி எதிர் புரட்சியாளர்களை வெல்வது என்பது நடக்க இயலாதது அல்ல. ஏனேனில் மக்களுக்கு அரசுக்கும் இடையே உள்ள இடைவெளியை இல்லாமல் செய்வதில் பெரிய அளவில் வெற்றி பெற்ற மாவோ இந்த முறையில் மக்களை அணி திரட்டிதான் சீனாவில் அழிவு வேலை செய்ய முற்ப்பட்ட எதிர் புரட்சி கும்பல்களை முறியடித்தார்.இவை காட்டுவது என்னவென்றால், பாட்டாளி வர்க்கம் புரட்சி செய்து ஆட்சிக்கு வந்தவுடன் புரட்சி நிறைவு பெறுவதில்லை என்பதைத்தான். மாறாக இன்னும் கோடூரமானதொரு உயரந்த வடிவத்திலான புரட்சிக்கு பாட்டாளி வரக்கம் தன்னை தாயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது என்பதைத்தான். வர்க்கங்கள் இந்த உலகில் இருக்கும் வரை ஒவ்வொரு வர்க்கத்தின் கருத்தும் ஏதோ ஒரு வகையில் கட்சியின் உள்ளே நிலவுவதை தவிர்க்க முடியாது. எனவே அவற்றுக்கு எதிரான போராட்டம் என்பதும் தவிர்க்க முடியாது. இது சோசலிச சமூகத்தை கம்யுனிச சமூகமாக வளர்த்தெடுக்கும் கால முழுவதிற்க்கும் பொருந்தும். இதனைத்தான் லெனினியமும் வலியுறுத்துகிறது. அதாவது தொடர் புரட்சி.இதில் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தில் இருக்கிறதா இல்லையா என்ற வித்தியாசம் எதிரிகளுக்கெதிரான வன்முறையின் வடிவத்தையும், அரசுக்கும் மக்களுக்கு இடையிலான உறவை இயல்பானதாக மாற்றும் போராட்டத்தின் வடிவத்தையும் மாற்றுமே தவிர்த்து, வன்முறையையும், போராட்டத்தையும் முற்றிலும் விட்டொழித்து விடுவதில்லை. இன்னும் சொன்னால் அவற்றை இன்னும் மோசமானதாக்குகிறது. உண்மையில் புரட்சிக்கு பின்புதான் பாட்டாளி வர்க்கம் மிக நெருக்கடியான நிலையை சந்திக்கிறது.


இந்த காலகட்டத்தில் மக்களை அரசு நிர்வாகத்தில் பங்கு கொள்வது குறித்து அவர்களிடம் நிலவும் தேவையற்ற தயக்கம், அச்சம் இவற்றை களையச் செய்யும் வகையிலான பண்பாட்டு புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது உயிராதாரமான ஒரு விசயமாக உள்ளது. குறுகிய காலத்தில் எதிர்புரட்சி கும்பலை முறியடித்த அதே வேளையில் இரு தடுமாற்றங்கள் மூலம் அவர்களை வேறு வடிவங்களில் நிலைபெறச் செய்த இந்த அம்சத்தில்தான் தோழர் ஸ்டாலின் மீது நாம் விமர்சனம் வைக்கிறோம். நாமும் பாடம் கற்றுக் கொள்கிறோம்.ஸ்டாலின் எமது அதி உன்னத தோழர்:


ரஸ்யாவின் மீது அனைத்து ஏகாதிபத்தியங்களும் சுற்றி வளைத்து உள்நாட்டு சதிகளையும், எல்லையில் ஆக்கிரமிப்பு போர்களையும் செலுத்தியதும், இரண்டாம் உலகப் போர் நெருக்கடியையும், ரஸ்யாவில் ஏற்பட்ட பஞ்சத்தை ஒட்டிய பிரச்சனைகளையும் மனதில் கொண்டே ஸ்டாலினின் அந்த தவறுகளை அனுகுகிறோம்(மாபெரும் சதி). அதனால்தான் அவர் எமது பெருமைமிகு கம்யுனிச தலைவர்களில் ஒருவராக எம்மிடம் ந்஢லவுகிறார். இதனை குறிப்பிட்டுதான் ஜார்ஜ் தாம்சன் தனது "மார்க்ஸ் முதல் மாவோ வரை" புத்தகத்தில் சொல்கிறார்:


"இருபதைந்து ஆண்டுகளுக்கு பிறகு அவரது தலைமையின் கீழ் அதிகாரங்கள் மங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும். வரலாற்றில் வேறு எந்த ராஜதந்திரியும் இத்தகைய ஒரு சுமையை இத்தனை காலம் சுமந்ததில்லை."


எமது தோழர் ஸ்டாலின் இன்றும் சுமக்கிறார். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதற்க்கு அவரது எதிரிகளால் அவரை முதுகில் குத்திதான் பழி வாங்க முடிந்தது. அதுவும் அவர் இறந்த பிற்ப்பாடு. அவர் எதில் வேண்டுமென்றாலும் தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் ரஸ்ய உழைக்கும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதில் அவர் தோல்வியடையவில்லை. குறுகிய காலத்தில் சோசலிசத்தை அவர் எந்தளவுக்கு வலிமையாக கட்டியமைத்திருந்தார் என்றால் அதனை அவர்கள் உடைத்து சிதைப்பதற்க்கு 40 வருடங்கள் தேவைப்படும் அளவுக்கு. இதோ அவரது இந்த சாதனைக்கு நிரூபனமாக இன்று ரஸ்யா மக்களின் ஆதர்ச நாயகராக ஸ்டாலின் நிற்கிறார். ரஸ்ய மக்களின் வெல்லற்கரிய மன உறுதியின் அடையாளமாக ஸ்டாலின் இன்று நினைவு கூறப்படுகிறார். மாறாக, ஸ்டாலின் கால வன்முறை என்று போலி வருத்தத்தை வெளிப்படுத்தும் கும்பலோ, அவரது சிலையை உடைத்து அவமானப்படுத்திய கருங்காலி கும்பலோ நாட்டை கூட்டிக் கொடுப்பதில் வெகு சிரத்தையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் தொழிலாளி வர்க்கத்தின் உத்வேகத்திற்க்கான அடையாளமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கிறார்.


'தோழர் ஸ்டாலின்' - அவர் எதிரிகள் மீது செலுத்திய வன்முறை எமக்கு பெருமையளிப்பதே ஆகும். அதற்க்கு நாங்கள் உரிமை கொண்டாடுகிறோம். மக்கள் விரோதிகள்தான் அவரைக் கண்டு பயப்பட வேண்டும். நாங்கள் அவரை நெஞ்சார தழுவி நன்றி சொல்வோம், "இது வரை உலகில் எங்குமே நடந்திராத, உழைக்கும் வர்க்கம் மண்ணுலகில் சொர்க்கம் படைக்கும் என்ற வார்த்தையை நிருபித்துக் காட்டியமைக்காகவும், அதற்க்கு விலையாக பெரும் பழிகளையும், அவமானங்களையும் இன்று வரை சுமந்து கொண்டிருப்பதற்க்காகவும்'.

அசுரன்
தொடர்புடைய சுட்டிகள்:ஸ்டாலின் அவதூறுகள் - அமெரிக்க உளவாளிகளா அல்லது நிரூபர்களா?

0 பின்னூட்டங்கள்:

Related Posts with Thumbnails