TerrorisminFocus

Saturday, October 05, 2013

மேநாட்டுக்கார பக்தனானலும் என்னாட்டுக்காரனென அருளிய மீனாட்சி!!

அது ஒரு ஆன்மிகச் சொற்பொழிவு. பேசிக் கொண்டிருந்த பெரியவர் ஒரு கதை சொல்லிக் கொண்டிருந்தார். கண்கண்ட தெய்வம் மதுரை மீனாட்சி தனது பக்தனுக்கு அருள் பாலித்து காப்பாற்றுவதற்கு எழுந்தருளிய கதை அது. கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் உணர்ச்சி மேவிட உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தது. கதை இதுதான், கதையல்ல நிஜமாகத்தான் இருக்கும்.

ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் வெள்ளைக்கார துரை ஒருவன் மீனாட்சி மீது மிக பக்தியாக இருந்திருக்கிறான். மீனாட்சியை தரிசிக்க ஆவல் இருந்த போதும் கோயில் உள்ளே எல்லாம் செல்வதில்லையாம்(என்ன காரணம்... ம்...) வெளியவே இருந்து பார்த்துக் கொள்வானாம். இப்படியாக நாட்கள் கழிந்தன. ஒருநாள் அவன் மொட்டை மாடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான்(இரவுதான்). திடீரென்று பெருமழை. இடியும் மின்னலுமாக அடித்து நொறுக்குகிறது. இவனோ அசந்து தூங்குகிறான். அப்போது அங்கே தோன்றிய அன்னை மீனாட்சி அவனை தட்டியெழுப்பி, அப்பனே என்னுடன் வா என்று அழைத்துச் செல்கிறாள். இவனும் அன்னையின் தரிசனம் கிடைத்த பெரூவகையில் பின்னாலே சென்று விடுகிறான். கோயில் வாசல் வரை கூட்டிச் சென்றவள் அங்கேயே மறைந்து விடுகிறாள் (கோயிலுக்குள் ஏன் கூட்டிச் செல்லவில்லை? என்ன காரணம்.. ம்...). இவனும் சரி பார்த்த வரை பரவசம் என்று கலெக்டர் மாளிகைக்கு திரும்பி வருகிறான். வந்து பார்த்தால் வேலைக்காரர்களெல்லாம் மாளிகை வெளியே பெரும் பரபரப்புடன் நின்று கொண்டிருக்கிறார்கள். காரணம் கலெக்டர் படுத்திருந்த இடத்தில் இடி இறங்கி முற்றிலும் பொசுங்கிப் போயிருந்தது. இப்படியாக கடை கோடி பக்தனுக்கு மட்டுமல்ல கடல் கடந்த பரதேசி பக்தனுக்கு அருள் பாலிக்கும் தெய்வம் அன்னை மீனாட்சி என்று கூறி உரையை தொடர்ந்து கொண்டிருந்தார் பெரியவர்.

நமக்கு மண்டையில் எக்கச்சக்கசக்கசக்க கேள்விகள். மொத கேள்வி பிரிட்டிஸ்கார நாய்க்கு சேவை செய்வதில் எப்படி ஆர் எஸ் எஸ்ம், ஆண்டாளும்... ஸாரி மீனாட்சி அன்னையும் ஒரே விதமாக சிந்தித்து செயல்பட்டனர் என்பது வியப்பளித்தது. மதுரை மீனாட்சி கோயில் உயிர் வாழ்வதே அங்குள்ள மக்களின் உழைப்பால்தான் எனும் போது அதை சுரண்டி கூறு கெடுக்கும் ஆங்கிலேயெ கலெக்டர் ஒருவனை பாதுகாப்பது என்பது அந்த மக்களுக்கு செய்யும் துரோகம் ஆயிற்றே?

நெண்டாவது கேள்வியாக தோன்றியது, வெள்ளைக்காரன் வெள்ளைக்காரந்தான் அவன் ஆய் போனாலும் அது ஒரு தனி அழகுதான் என்று ரசித்து மயங்கும் மனோபாவம் பாவம் தெய்வத்தையும் விட்டு வைக்கவில்லையே என்று தோன்றியது. இங்கே அவனவன் மொட்டைகளையும், கொட்டைகளையும், ஏன் பட்டைகளையும் கூட போட்டுக் கொண்டு தெய்வமே கதி என்று கிடக்க அவனுக்கெல்லாம் ஒரு சின்ன பிட்டு சீனு கூட காட்டாத மீனாட்சி, அந்த பரதேசி (அட பரதேசின்னாக்க வெளிநாட்டுக்காரன்னு அர்த்தமுங்க. ஆர் எஸ் எஸ் காரண்ட கேளுங்க அவனுக்குத்தான் இந்தி தெரியுமே) வெள்ளைக்காரன் மனுசுல ரோசிச்சதுக்கே எக்ஸ்ட்ரா எபெக்ட் கொடுத்து காப்பத்திருக்கு இந்த அம்மா. அப்போ இங்கன கெடந்து உருகுனெவனெல்லாம் லூசுப்பயலுவன்னு நான் சொல்லலீங்கோ அந்த அம்மா சொல்லுது இல்லைன்னாக்க அந்த சொற்பொழிவை ஆத்து ஆத்து என்று ஆத்திய பெரியவர் சொல்றாருங்கோ.

மூனாவது நெம்ப முக்கியமான கேள்விங்கோ, கோயிலுக்குள்ளார வெள்ளையன் ஏன் போகலன்னு(போக முடியலன்னு) நான் ஆராய்ச்சி செஞ்சா ஒரு சாதிய மட்டும் திட்டுறீங்கன்னு கோபப்படுறாய்ங்க. அந்த கேள்விக்கு சரியான இன்னொரு பதில் ஒன்னு இருக்குங்கோ அதையே கேள்வியக் கேட்டாக்க இந்த கேள்விக்கு பதில் கிடைச்சிரும் (ரொம்ப குழப்பமா இருக்குல்ல?). அதாவது பாரத தேசம், பாரினிலே  ஒரு ஆன்மிக ஊற்று, அது மனித வாழ்வை கடைத்தேற்ற நமக்கு காட்டிய தெய்வங்களை உளமார தொழுது வேண்டியவர்களில் ஒரு சாதியைச் சேர்ந்தவர் தவிர மீதி எல்லாருமே நெருப்புக்கும், இன்னபிற விசயங்களுக்கும் இரையாகி முக்தி அடைந்துள்ளனரே அந்த மர்மம் என்ன? உளமார தொழுத நந்தனார் கடைசி வரை சிவனை பார்க்கவே இயலவில்லை. அவரால முடியலப்பா அப்படித்தான் சொல்லோனும். இல்லைன்னாக்க ஒரு சாதிய திட்டுறாய்னு கடுப்பேத்துவாய்ங்க் லார்டுங்க. சிவனை பார்த்தே தீருவேன்னு போய் நின்னவர நெருப்புத்தான் தீண்டுச்சி (அதுவாவது தீண்டுச்சே). முக்தி இப்படித்தான் அவருக்கு கிடைத்தது. அதே போல அந்த வெள்ளைக்காரனுக்கும் மின்னல் மூலம் முக்தி கிடைக்கச் செய்திருக்கலாமே? வை திஸ் பார்சியாலிட்டி, இது வெள்ளைக்காரனுக்கு மட்டுமில்லை, மேலே ஏற்கனவே சொன்னது போல அந்த குறிப்பிட்ட சாதிக்காரங்களுக்கும் கூட இகலோக வாழ்க்கைக்கான அதிகபட்ச உத்திரவாதத்துடன் தான் முக்தி கிடைக்குது. மத்தவனுக்கு மொத்த உயிர பறிச்சுத்தான் முக்தி கிடைக்குது. அப்போ அந்த ஸ்பெசல் குவாலிபிகேசன் அந்த குறிப்பிட்ட சாதி அது இல்லைனா சாதியே இல்லாத மேட்டுக்குடி வெளிநாட்டுக்காரன் அப்படித்தானே?

இந்த கேள்விக்கு யாராவது ஆன்மிக அறிஞர்கள் பதில் சொன்னால் 'ரொம்ப வசதியா' இருக்கும். சொல்வாய்ங்களா?

அசுரன்

0 பின்னூட்டங்கள்:

Related Posts with Thumbnails