TerrorisminFocus

Monday, July 12, 2010

கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!!!

டைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். யார் இந்த கோவிந்சாமி? திருப்பூர் சி பி எம் கட்சியின் எம் எல் ஏதான் இந்த கோவிந்சாமி. பின்னலாடை நிறுவனத்தின் முதலாளி என்பது உபதொழில்.

எதற்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்? இதுக்கு முன்ன திருப்பூர் முதலாளிகளுக்கு தொழிலாளர் நலச் சட்டக் கெடுபிடிகளிலிருந்து சலுகை வாங்கித் தருவதாக சொல்லி அவர்களிடம் வசூல் வேட்டை நடத்தி மாட்டிக்கொண்டதால் அவர் நீக்கப்பட்டாரா? இல்லை. திமுகவிற்கு பாராட்டு விழா நடத்த முற்பட்ட குற்றத்திற்காகவே நீக்கப்பட்டுள்ளார்.

அப்போ இதுவரை அவர் திருப்பூர் முதலாளிகளுக்கு கோவணம் கட்டியதற்கு? தோழரே சி பி எம் ஒரு கம்யூனிஸ்டு கட்சியல்ல என்று சி பி எம்முக்கே தெரியும் என்பதால் முதலாளிகளுக்கு கோவணம் கட்டிய குற்றத்திற்கெல்லாம் கட்சியிலிருந்து நீக்க மாட்டோம். அப்படி நீக்குவதாயிருந்தால் செத்துப் போன ஜோதிபாசுவிலிருந்து இன்றைய கரத் வரைக்கும் மொத்த கட்சியையும் நீக்க வேண்டியிருக்கும், எனவே, எங்களது எதிர்கட்சிக்கு கோவணம் கட்டினால் மட்டுமே நீக்குவோம் என்று ஒரு மனசாட்சியின் குரல் கேட்கிறது….. எங்கேயோ கேட்ட குரல்….

சிபிஎம்-ன் பரிணாம வளர்ச்சி - படங்கள் நன்றி கலகம்:
திமுக அரசுக்குப் பாராட்டு விழா-சிபிஎம்மிலிருந்து கோவிந்தசாமி எம்.எல்.ஏ நீக்கம்

ஓவர் டூ திருப்பூர் கோவிந்சாமி:

சி.பி.எம்: புரோக்கர்களின் புகலிடம்
புதிய ஜனநாயகம் 2008

சி.பி.எம். கட்சியின் திருப்பூர் எம்.எல்.ஏ.வான கோவிந்தசாமி, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளி. திருப்பூரில் முதலாளிகள் வசிக்கும் அமர்ஜோதி கார்டன் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைக் கட்டியுள்ள கோடீசுவரர். ""பாட்டாளிகளின் தோழர்'' என்று இவரை சி.பி.எம். கட்சியினர் சித்தரித்தாலும், கோடீசுவர கோவிந்தசாமியின் வர்க்கப் பாசம் எப்போதுமே முதலாளிகள் பக்கம்தான்.


எட்டு மணி நேரத்துக்கு மேல் ஒரு தொழிலாளியை வேலை வாங்கக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், திருப்பூரில் இச்சட்டமெல்லாம் செல்லுபடியாகாது. இச்சட்ட விரோதக் கொத்தடிமைத்தனத்தைத் தடுப்பது என்ற பெயரில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது தொழிற்கூடங்களில் திடீர் சோதனை நடத்திப் பீதியூட்டுவதும், உரிய "கவனிப்பு'க்குப் பின் இச்சட்டவிரோதச் செயலைக் கண்டும் காணாமல் இருப்பதும் இங்கு வாடிக்கையாக நடக்கிறது.


தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் "தொல்லை'யிலிருந்து முதலாளிகள் நிரந்தரமாக விடுபட, தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அன்பரசனிடம் பேசுவதாகவும், அமைச்சருக்கு ஒவ்வொரு கம்பெனியும் ஒரு லட்ச ரூபாய் வீதம் கொடுக்குமாறும் சி.பி.எம். எல்.எல்.ஏ. கோவிந்தசாமி திருப்பூர் பனியன் கம்பெனிமுதலாளிகளிடம் பேரம் பேசி வசூல் வேட்டை நடத்தியுள்ளார். முதலாளிகளில் சிலரை அழைத்துக் கொண்டு அமைச்சரிடமும் பேசியுள்ளார். அதன் பின்னரும் அதிகாரிகளின் ரெய்டுகளும் "தொல்லை'களும் தொடரவே, முதலாளிகள் இதுபற்றி தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரித்தபோது, வசூலித்த பணம் அமைச்சருக்குப் போய்ச் சேரவில்லை என்பதையும், கோவிந்தசாமியே அதை அமுக்கி விட்டதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனே சி.பி.எம். கட்சித் தலைமையிடம் புகார் செய்தனர்.


கட்சித் தலைமை இதுபற்றி விசாரித்ததில், கோவிந்தசாமியின் புரோக்கர் வேலையும் கையாடலும் நிரூபணமானதால், வேறு வழியின்றி சி.பி.எம். கட்சியின் சட்டமன்றப் பேரவைத் தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கிவிட்டு, திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரான பாலபாரதியை அப்பதவிக்கு நியமித்துள்ளது. சி.பி.எம். கட்சியின் மாநிலக் குழுவிலிருந்தும் கோவிந்தசாமி நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணத்தை கட்சி அணிகளிடமும் மக்களிடமும் விளக்காமல், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் கோவிந்தசாமி இப்பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சி.பி.எம். கட்சித் தலைமை பூசி மெழுகுகிறது.


இதுதவிர, கைத்தறி விற்பனைக்காக அரசு தரும் ஊக்கத் தொகையில் சுமார் 40 கோடிக்கு மேல் பொய்க்கணக்கு எழுதி தமிழக அமைச்சர் ராஜா சுருட்டியதாகவும், இதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து மாநில அரசிடம் கேள்வி எழுப்ப, தனக்குச் சாதகமான தணிக்கையாளரை நியமிக்குமாறு முதல்வர் கருணாநிதியிடம் பேசுமாறு அமைச்சர் ராஜா, கோவிந்தசாமியைத் தூது அனுப்பியதாகவும், இந்த புரோக்கர் வேலைக்காக கோவிந்தசாமிக்கு உரிய கமிஷன் தரப்பட்டதாகவும் செய்திகள் மெதுவாகக் கசிந்துள்ளன.


திருப்பூரில் கொத்தடிமைகளாக உழலும் தொழிலாளிகளின் அவலத்தைப் போக்க இந்த எம்.எல்.ஏ. அமைச்சரிடம் பேசவில்லை. எட்டுமணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கும் முதலாளிகளின் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராகப் போராடவுமில்லை. மாறாக, தனது வர்க்கப் பாசத்தோடு முதலாளிகளின் கோரிக்கைகளுக்காக ""ரேட்'' வைத்து பேரம் பேச்சுவார்த்தை நடத்துகிறார் இந்த "காம்ரேடு'.


திருப்பூர் எம்.எல்.ஏ.வின் யோக்கியதை இப்படியிருக்க, கோவையில் நில மோசடி செய்து அம்பலப்பட்டு வழக்கு மன்றத்துக்கு நடந்து கொண்டிருக்கிறார் சி.பி.எம். கட்சியின் கவுன்சிலரான பத்மனாபன். இவர் நிலங்களை வாங்கி அவற்றை வீட்டுமனைகளாக்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வரும் லட்சாதிபதி. கோவை வடக்கு மண்டலத் தலைவராக உள்ள இவர், மூன்று முறை கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முக்கியப் புள்ளி.


கோவை அருகே காளப்பட்டியிலுள்ள மருதாசலம் என்பவரது நிலத்தை வீட்டுமனைகளாக்கி விற்றுத் தருவதாகக் கூறி, தன் பெயருக்கு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொண்டு, சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தின் மதிப்பைக் குறைத்துக் காட்டி தன் பெயரிலும் தனது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரிலும் கிரய சாசனம் செய்து கொண்டு, மனைகளைப் பல லட்சங்களுக்கு விற்று மருதாசலத்தை மோசடி செய்துள்ளார் பத்மனாமன். இதற்கெதிராக மருதாசலம் வழக்குத் தொடுக்க, பத்மனாபன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் வழக்கு மன்றத்துக்கு நடந்து கொண்டிருக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிக்காரரே இப்படி மோசடியில் ஈடுபட்டதைக் கண்டு கோவை நகர மக்களே காறி உமிழ்கின்றனர். ஆனாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது, சி.பி.எம். கட்சித் தலைமை.


சி.பி.எம். கட்சிக்குள் இன்னும் ஏராளமான கோவிந்தசாமிகளும் பத்மனாபன்களும் தலைவர்களாகவும், பிரமுகர்களாகவும் உள்ளனர். இத்தகையோர் மீது பாரதூரமாக நடவடிக்கை எடுத்தால் கட்சியே கலகலத்துப் போய் விடும் என்று கட்சித் தலைமை அஞ்சுகிறது. எனவேதான், குறிப்பிட்ட வரம்புக்கு மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் கட்சித் தலைமை தடுமாறுகிறது.


மே.வங்கம் சிங்கூர் நந்திகிராமத்தில் மக்கள் மீதே பயங்கரவாத வெறியாட்டம்; சமூக விரோதிகளே கட்சியின் பிரமுகர்கள்; முதலாளிகளும் ஊழல் பெருச்சாளிகளுமே உள்ளூர் தலைவர்கள் என்று சீரழிவில் புதிய பரிமாணத்தை எட்டி மே.வங்க சி.பி.எம். கட்சி "புரட்சி' செய்து கொண்டிருக்கிறது. அதையும் விஞ்சும் வகையில் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது, தமிழக சி.பி.எம். கட்சி.

· தனபால்

அசுரன்

மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத்சிங்கும்!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

கம்முனுஸ்டு மிஸ்டர் மீட்டிங்கு, ஈழப் பிரச்சினைக்கு தீர்வு சொல்றாருடோய்…. !!!

லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!

நண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்!!!

2 பின்னூட்டங்கள்:

said...

அய்யோ!!

தோலர் கோவிந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டாரா! நம்ப முடியவில்லை... நம்ப முடியவில்லை ... நம்ப முடியவில்லை நம்ப முடியவில்லை நம்ப முடியவில்லை நம்ப முடியவில்லை நம்ப முடியவில்லை (அவளா சொன்னாள்.... இருக்காது என்ற மெட்டைசேர்க்கவும்).

ஏனுங்! சுப்புக்குட்டியும் கோவிந்துக்குட்டியும் தான் கொங்கு நாட்டில் கமூனிச(கசுமால) போர்ப்படை தளபதிகள். கட்சிக்கு செம தில்லுங்கோ, கோவிந்து மொள்ளாலிங்க கிட்ட காசு வாங்கி ரெண்டு வருசம் ஆவப்போவுது , இப்ப அவுத்தால வெளா எடுக்குறேன்னு சொன்னவுடனே கட்சிக்கு மானம் பீச்சியடிக்குதுங்கோ டாஸ்மாக்குல நம்ம சிஐடியூ காரரு குலுக்கு வுட்டு பாட்டுல தொறந்தா பொங்குமே அப்புடி.

சுப்புக்குட்டி செமையான கவுண்டர் சாதி வெறியன் (புஜவில் தேர்தல் சமயத்தில் வெளியான கட்டுரையை தொடுப்பில் கொடுத்திருக்கலாம்). அவரும் தலைமைக்கு பன்க்கு தராமல் போனால் கட்சியை விட்டு நீக்கப்படுவார், சோம்னாத் கோவிந்து இப்படி கமூனிச போராளிகள் நீக்கப்பட்டாலும் கட்சி நீடிக்கும் (கட்சி மட்டும் நீடிக்கும் அதான் சொத்து இருக்குதே) அவர்கள் இங்கு பொறுக்கித்தின்னது போதாதென்று அங்கு பொறுக்கித்தின்ன கிளபி விட்டார்கள். இப்போது அதுதான் பிரச்சினை. இன்க்கே பொறுக்கும் போது நான் கட்சிய விடு தூக்கல, ஆனா திமுகவுக்கு வெளா எடுக்குறேன்னா சும்மா விடுவோமா ( கோவ்ந்த சாமி செயாவுக்கு புடவை துவைக்கும் விழா எடுத்திருந்தால் அவரை போராளியாக்கி இருப்பார்கள்) என்ன இருந்தாலும் கலங்காம சொல்லுறாரே ராம கிச்சா ரொம்ப நல்லவருங்க்கோ

கலகம்

said...

மன்னிக்க நீங்கள் கீழே கொடுத்துள்ள கட்டுரை கவனிக்க வில்லை, தவறக்கு மன்னிக்க

kalagam.wordpress

Related Posts with Thumbnails