கவிதையைப் படிக்கும் முன்….
கவிதையைப் படிக்கும் முன்….
காலனி(ணி)க் கவிதை
""
ஆனால்,
நீ என்னோடு வரும்போழுது,
உன் பிஞ்சுப் பாதங்களால்
மேலத்தெருவில் அழுத்தமாய்
பாதம் பதித்து நடக்க வேண்டும்.
உன் காலணிகளின் அடியிலிருந்து எழும் இசை
அந்தத் தெருவில் குடிகொண்டிருக்கும்
ஜாதியத்தின் செவிகளை
துளைத்தெடுக்க வேண்டும்.
செய்வாயா என் செல்ல மகளே!
""
"இப்பொ யாருங்க சாதி பாக்குறாங்க? " வினயமாகக் கேட்டார் ஆனந்த பவனில் காபி குடித்துக் கொண்டிருந்த ஆறுமுகப் பாண்டியன். தினமலர் செய்தி ஏட்டில் முக்குலத்தோர் மணமாலையில் மணமகன் தேடி விளம்பரம் கொடுத்திருந்த செய்தித் தாளை அருகில் வைத்துக் கொண்டே.
"ஏதாவது சிறுசா நடந்துடக் கூடாது, உடனே தலித்து தலித்துன்னு கூப்பாடு போட்டு ஊரக் கூட்டிருவாங்க. வேலையத்த பயளுக.", அமைதி விரும்பியாக அறவுரை வழங்கினார் 'Veg ஒன்லி' விளம்பரம் கொடுத்து வீடு வாடகைக்கு விடும் பக்கத்து வீட்டு பரசுராமன்.
"அதெல்லாம் அந்தக் காலம், இப்போ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வைச்சி மேல் சாதிக்காரன கொடுமப்படுத்துறாங்க" சமூக நீதி போதனை செய்தார், பேராசிரியர் திருவேல்முருகன், தனக்குப் பின்னால் ஒட்டியிருந்த கீழ் வெண்மணி நினைவுநாள் சுவரொட்டியையும், கடையில் தொங்க விடப்பட்டிருந்த வாரப் பத்திரிகையில் தெரிந்த கயர்லாஞ்சி தீர்ப்பையும் தனது தொந்தியால் மறைத்துக் கொண்டே..
"அவா அவா வேலய அவா அவா செஞ்சா லோகத்துல என்ன பிரச்சினை வந்துடப் போறது?" பாதாளச் சாக்கடையில் இறங்கி கழிவு அகற்றியவருக்கு 10 ரூபாய் அருளிக் கொண்டே நவீன வர்ணாஸ்ரமத்தை அழுத்தம் திருத்தமாக கேட்டார் ஹரிராமன், பக்கத்தில் தொலைக்காட்சிப் பெட்டி பல்லிளித்துக் கொண்டிருந்தது - "அனைவரும் அர்ச்சகர் ஆவதற்கு நீதிமன்றத் தடை கோரும் வழக்கு விசாரணைக்கு வந்தது."
"தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் அவனோட அடையாளங்களை பெருமையா காட்டிக் கொள்வதை யார் தடுத்தாங்க?" நெத்தியில் கண்ணைக் கூசுச் செய்யும் அளவு நாமம் போட்டுக் கொண்டே நியாயம் பேசினார் வெங்கடராம நாயக்கர், மாட்டுக் கறி தின்ற ஹரியான தலித்துக்களின் தோலுரித்துக் கொன்ற ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும் நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டுதான் நியாயப்படுத்தினர் என்பது, கண்ணில் நிழலாடியது.
தடித்த, சொரனையற்ற சாதியக் காதுகளுக்கு எவ்வளவு அருகில் சென்று காலனி(ணி)ச் சத்தங்கள் ஒலிக்க முடியுமோ அவ்வளவு அருகில் சென்று ஒலிக்கட்டும், அப்பொழுதாவது சாதிய வண்ணம் பூசிய இந்த ஆபாசங்களையே நியாயம், நீதி என்று பேசுபவர்களின் செவிட்டுத் தனம் கிழிகிறதா என்று பார்க்கலாம்.
தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான வன்கொடுமைகளை தினமும் தொகுத்து வழங்கும் ஒரு தளம்.
காலனிச் சத்தங்கள்
என் செல்ல மகளே!
நீ பிறந்ததில் எனக்கு
மிக்க மகிழ்ச்சி.
உன் தாத்தாவிற்குத்தான்
என் மீது கொஞ்சம் வருத்தம்.
குலசாமி பெயர் விடுத்து,
மரித்தவர்களின் ஊர்ப்பெயரை
உனக்கு சூட்டியதற்காக…
முடிந்தவரை விளக்கிவிட்டு
பிடிவாதமாய்,
வெண்மணி என்றே உனக்கு
பெயரிட்டு விட்டேன்.
என்னைப் பொறுத்தவரை அவர்கள்
மரிக்கவில்லை.
நகரவாழ்வின் விழுமியங்களோடு
சங்கமித்து நிறைய வருடங்கள்
உருண்டோடிவிட்டன.
அதன் தொடர்ச்சியாய் – இப்பொழுது
நீயும் வந்துவிட்டாய்…
கடந்துவந்த தூரங்களின்
நீளத்தை என்றாவது ஒருநாள்- நீ
கேட்டறிய வேண்டும் என்பதே
என் ஆவல்.
ஏனெனில்,
தழும்புகளற்ற காயங்கள்
என்னிடம் நிறைய உண்டு.
அதை உன்னோடு பகிர்ந்து கொள்ளும் போது
உனக்குள் ஒரு பண்புமாற்றம்
நிகழலாம் என்பது என் நம்பிக்கை.
முரண்களின் மூட்டையாக
இருக்கும் இந்த சமூக அமைப்பின்
சிக்கல்களை
அறுத்தெறிவதற்கான ஆயுதமாக…
அந்த நம்பிக்கை
உனக்குள்ளும் ஊடுருவலாம்.
அழகிய ஓவிய வேலைப்பாடுகளடங்கிய
பீங்கான் குவளைகளில்,
நீயும் நானும்- இப்பொழுது
தேநீர் அருந்திகொண்டிருக்கிறோம்,
இவை நாம் எட்டிய
குறைந்தபட்ச வாழ்க்கை.
இது நடந்தது கூட
உடனடி நிகழ்வல்ல,
ஒரு நெடிய போராட்டத்தின்
விளைவு.
பனை மரத்து ஓலைகள்,
செரட்டைகள்,
அலுமினிய கிண்ணங்கள்…
இவைகள்தான்
உனது முன்னோர்களின்
தேநீர் குவளைகள்
அதாவது,
‘நாகரிக’ சமூகத்தை
தலைகுனியச் செய்திடும்
இருண்ட கணங்கள்.
“மனிதர்களை ‘மனிதர்’
நாயினும் கேவலமாய்
நடத்த முடியுமா அப்பா?”
என்று நீ கேட்கலாம்.
ஆம்,
இப்பொழுதும் இந்த வன்கொடுமைகள்
தொடர்கிறது…
புதிய வடிவங்களில்.
நீ எதிர்கொள்ளும்போது
இன்னும் நவீனப்பட்டிருக்கலாம்.
ஆனாலும்,
உன் கல்விக்கூடத்தில்
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்,
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,
………………………………’ என்று,
நாடே புனித திருவுருவாய்
இருப்பதுபோல்
வெற்று வார்த்தைகளை
உன்னுள் இட்டு நிரப்புவார்கள்
அப்பொழுது
உண்மையையும், பொய்யையும்,
உரசி பார்த்துக்கொள்ள
நம் பகிர்தல் உனக்கு பயன்படலாம்.
என் செல்ல மகளே!
நீ நடைபயில கற்றுக்கொண்ட
தருணங்கள் – உண்மையில்
அழகானவை, அற்புதமானவை.
எல்லா அப்பாக்களையும் போல்
அந்நிமிடங்களை மிகுந்த
ரசனையோடு விழுங்கியுள்ளேன்.
இருக்கட்டும்.
கடைவீதிக்கு சென்ற போதுதான்
உன் அம்மாவின் செல்ல கத்தல்
ஞாபகத்திற்கு வந்தது.
“குழந்தை இருக்கும் வீட்டில்
பொம்மைகளைவிட -
புத்தகங்கள்தான் அதிகமாய் உள்ளது,
அவள் எவற்றோடுதான் விளையாடுவாள்?”
உனக்கான பொம்மைகள்
விளையாட்டு பொருட்கள்,
நிறைய வண்ணங்கள்
கொஞ்சம் தூரிகைகள்…
எல்லாம் வாங்கிவிட்டேன்
குறிப்பாக,
நீ விரும்பி கேட்ட
அழுத்தி நடந்தால்
இசை எழுப்பக்கூடிய காலணிகளையும்
கவனமாய் வாங்கிக் கொண்டேன்.
அடுத்த வாரம்
அநேகமாய் நாம் ஊருக்கு
செல்ல நேரிடும்.
அப்பொழுது மேலத்தெரு வழியாகத்தான்
தாத்தா வீட்டிற்கு செல்வோம்.
அந்த வழியாக,
உன் கொல்லுத் தாத்தா,
தாத்தா…, ஏன் நானும் கூட
செருப்பை கையில் தூக்கியபடிதான்
கடந்து சென்றுள்ளோம்
ஆனால்,
நீ என்னோடு வரும்போழுது,
உன் பிஞ்சுப் பாதங்களால்
மேலத்தெருவில் அழுத்தமாய்
பாதம் பதித்து நடக்க வேண்டும்.
உன் காலணிகளின் அடியிலிருந்து எழும் இசை
அந்தத் தெருவில் குடிகொண்டிருக்கும்
ஜாதியத்தின் செவிகளை
துளைத்தெடுக்க வேண்டும்.
செய்வாயா என் செல்ல மகளே!
நீ நடைபயில கற்றுக்கொண்ட
தருணங்களை விட,
அப்போதைய நிமிடங்கள் இன்னும்
அழகானதாய், அற்புதமானதாய் இருக்கும்.
- முகிலன்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment