கம்முனுஸ்டு மிஸ்டர் மீட்டிங்கு, ஈழப் பிரச்சினைக்கு தீர்வு சொல்றாருடோய்…. !!!
CPM பாசிஸ்டு கட்சியின் இணைய பிரசங்கியான சந்திப்பு வேறு வழியின்றி மார்க்ஸியத்தின் ஒளியில் விசயங்களை பரிசீலிக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார். ஆயினும் அப்படி ஒரு ஆய்வு முறை பயிற்சியின் மூலமே ஒருவருக்கு கைவரும் என்பதும், 'போலச் செய்தல்' என்பது இங்கு சாத்தியமில்லை என்பதும் அவரது கட்டுரையை படிக்கும் போது புலப்படுகிறது. குறிப்பாக முதலாளித்துவ சிந்தனை முறைக்கு பழகிய CPM கும்பல்களால் இயங்கியல் ரீதியில் சிந்தித்து கருத்துக்களை வெளிப்படுத்துவது என்பது இயலவே இயலாத காரியமாகிவிட்டது. பரிதாபம்தான். எனினும், அவரது முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
நிற்க, ஈழம் பிரச்சினையில் புரட்சிகர அமைப்புகளை இலக்காக வைத்தே கட்டுரை எழுதியுள்ளார் திருவாளர் சந்திப்பு. நல்லது ஆனால் பிரச்சினை என்னவென்றால் புரட்சிகர அமைப்புகளின் நிலைப்பாடென்று அவரே ஒன்றை கற்பனை செய்து கொண்டு பேசுகிறார். இது நகைப்பிற்குரியது. அடுத்தவர் மண்டையில் உட்காந்து கொண்டு சிந்திக்கும் இவரது தோழர் கோமாளி வுடுதலையை இவர் ஞாபகப்படுத்துகிறார்.
சந்திப்பு சொன்னது:
""தமிழகத்தில் உள்ள பல இனவாத நக்சலிச அமைப்புகள் உட்பட பலரும் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ""
'சுயநிர்ணய உரிமை' என்ற சொல்பதத்தின் மார்க்ஸிய அர்த்தத்தை முதலில் சந்திப்பு புரிந்து கொண்டாரா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மார்க்ஸியத்திலிருந்து மேற்கோள் காட்டி அவர் விவாதிக்கும் ஒரு பிரச்சினை தனது நாட்டு எல்லைகளை கடந்து உள்ள ஒரு அந்நிய பிரதேசம் பற்றியது என்பதை சுத்தமாக மறைத்து விடுகிறார் அவர். இன்னொரு நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைக்கு அடுத்த நாட்டு கம்யுனிஸ்டு கட்சி தனது அரசியல் ஆதரவை மட்டுமே நல்க முடியும், தீர்வுகளை அல்ல என்பதை காமரேடு சந்திப்புக்கும், அவர் சார்ந்த CPM பாசிஸ்டுகளுக்கு ஞாபகப்படுத்த கடமைப் பட்டுள்ளேன்.
மேலும் இந்த விசயத்தில் ம க இ கவினுடைய நிலைப்பாடு என்பது ஒன்றிணைந்த இலங்கை என்பதையே விரும்புகிறது. ஆனால் அதனை முடிவெடுக்கும் தகுதி அந்த மக்களுக்கே சொந்தம். CPMமோ அல்லது இந்திய அரசோ அல்லது இலங்கை அரசோ அல்லது புலிகளோ கூட இதில் முடிவெடுக்க உரிமையற்றவர்கள்.
ஒரு முதலாளித்துவ அரசில், ஏகாதிபத்திய சூழலில் ஒரு பகுதி மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்திற்கு வேற்று நாட்டு கம்யுனிஸ்டு கட்சி தீர்வுகளை அல்ல மாறாக தனது ஆதரவைத்தான் நல்க முடியும். இப்படி நாடு விட்டு நாடு தாண்டி தீர்வுகளை நல்கும் நாட்டாமைத்தனம் அதிகாரத்துவ இயங்கியலின் ஒரு பதம் எனில் அதன் இன்னொரு எதிர்ப்பதம் 'சரண்டர்'த்தனம்.
ஒன்றுபட்ட போலி கம்யுனிஸ்டு கட்சியாக இவர்கள் இருந்த பொழுது இந்தியாவுக்கான தீர்வைத் தேடி ஸ்டாலினிடம் சென்று 'சரண்டர்' ஆகி அதனை அவர் கண்டித்து உங்களது நாட்டுக்கு ஏற்ப மார்க்ஸியத்தை நடைமுறைப்படுத்துவதை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்று கூறிய கதையின் இன்றைய மறுஎதிர் ஒளிபரப்புதான் CPM கட்சி சிரிலங்கா பிரச்சினைக்கு தீர்ப்பு சொல்லும் தற்போதைய கதை. என்றைக்குமே ஒவ்வொரு நாட்டு பாட்டாளி வர்க்கமும் அந்தந்த நாட்டு பிரச்சினைக்கான தீர்வுகளை அவர்களே பருண்மையாக கண்டுணர்வதுதான் சாத்தியம். அப்படியில்லாத ஒரு தீர்வு கருத்துமுதல்வாத திரிபே ஆகும்.
இதையெல்லாம் விட மிக முக்கியமானது ஒரு நாட்டில் நடக்கும் தேசிய விடுதலை போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் அதன் பக்கத்து நாட்டு கம்யுனிஸ்டு கட்சியானது அந்த தேசிய விடுதலை போராட்டத்தின் எதிரியாகிய ஏகாதிபத்தியத்தையும், அது சர்வதேச எதிரி என்பதையும், அது ஒடுக்கும் தேசிய இனத்தின் எதிரி என்பதையும் அம்பலப்படுத்தியே அரசியல் செய்ய வேண்டும். மாறாக ஏகாதிபத்தியத்திற்கு புனித முகமூடி போடும் வேலையை செய்யக் கூடாது. இந்த அம்சத்தில் ஈழப் பிரச்சினையில் பிராந்திய ஆதிக்க சக்தியான இந்தியாவின் ஆக்கிரமிப்பு நோக்கங்களை அம்பலப்படுத்துவம், அதன் பின்னே இருந்து கொண்டு சுரண்டும் இந்திய தரகு முதலாளிகளை அம்பலப்படுத்துவதுமே சரியான அரசியலாகும்.
இந்திய மக்களின் வரிப் பணத்தில் ஈழத்தை இந்திய தரகு முதலாளிகள் சுரண்டுவதை எதிர்ப்போம், ஈழ சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்போம் என்ற அடிப்படையிலான அரசியல் முழக்கங்கள்தான் இந்திய, சிங்கள, ஈழத் தமிழர்களை, மற்றும் சர்வதேசிய உழைக்கும் மக்களை ஈழத்திற்கு ஆதரவாக திரட்டும் சரியான அரசியல் வழியாக இருக்க முடியும். ஆனால் CPM கும்பலோ இந்தியாவின் இந்த அரசியல் பொருளாதார நோக்கங்களை பற்றி பேசவே காணோம். இதுதான் இவர்களின் மார்க்ஸியம்.
சொந்த நாட்டிலேயே கூட முதலாளித்துவ அரசின் கீழ் செயல்படும் பொழுது அது அரை காலனிய நாடாக இருக்கும் பட்சத்தில் பரந்துபட்ட மக்களுடன் ஐக்கியப்பட்டு ஆளும் வர்க்கத்தை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு ஏதுவாக அந்த நாட்டின் தேசிய இன உணர்வுக்கு முதலில் அங்கீகாரம் வழங்குவதும். அதனுடாக அவர்களுடன் ஐக்கியப்பட்டு செயல்படுவதின் மூலம் அதனை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திற்கு வளர்ப்பதும் தேவைப்படுகிறது. இதன் அர்த்தம் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவு என்று ஒருவன் கூறிக் கொண்டால் அவனை மார்க்ஸியவாதி என்று சொல்லுவதற்கு ஒரு அடிப்படையும் இல்லை. ஏனேனில் வைத்தால் முடி சிரைத்தால் மொட்டை என்பதும் இயக்கமறுப்பியல் வகைப்பட்ட சிந்தனைதான். எதையுமே அதன் வளர்ச்சி போக்கில் வைத்து புரிந்து கொள்வதும், பரிசீலிப்பதுமே இயக்கவியல் சிந்தனை முறை.
தேசிய இன பிரச்சினையில் சமரசமின்றி சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதைத்தான் மார்க்ஸியம் வலியுறுத்துகிறது. சந்திப்பு மேற்கோள் காட்டும் குறிப்பிட்ட பகுதியில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தேசிய இனம் பிரிந்து செல்ல விரும்பும் போது அது பாட்டாளி வர்க்க நலனுக்கு ஊறாக இருக்கின்ற பட்சத்தில் அனுமதிக்க முடியாது என்ற ஒரு விலக்கு விதியே சொல்லப்பட்டுள்ளது. ஒரு எ-காவுக்கு ஜெர்மனியுடனான ஒரு யுத்த தருணத்தில் ஒரு தேசியம் பிரிந்து செல்ல விரும்புகின்ற பட்சத்தில் அதனை அனுமதிப்பது முடியாது. ஆனால் இதனையே பொது விவரிப்பாக கூறும் சந்திப்பு சுயநிர்ணய உரிமை என்பதையே பிரிந்து செல்வது என்பதாக இன்னும் குறுக்கி சிதைக்கிறார். அதாவது விவாகரத்து உரிமையையே விவாகரத்தாக கருதி அவதூற்றும் பிற்போக்குவாதிகள் போல.
மார்க்ஸியத்தை பருண்மையாக அமுல்படுத்தியதிலிருந்து பல்வேறு நாடுகள் பெற்ற அனுபவங்களில் விதி விலக்கான விசயங்களை மட்டுமே முன்னிறுத்தி தனது திரிபுவாதத்தை நியாயப்படுத்த பயன்படுத்தும் CPM கும்பல் எப்பொழுதும் போலவே இப்பொழுதும் அதையே செய்துள்ளது ஆச்சர்யமான விசயமல்ல. பாராளுமன்றம், ரகசிய கட்சி, ஆயுத புரட்சி, வெகு ஜன அமைப்பு, புதிய ஜனநாயக கோட்பாடு போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள விதி விலக்கான விசயங்களையே பொது மார்க்ஸியமாக CPM பாசிஸ்டுகள் திரிப்பது முன்பு பலமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தேசியம் குறித்த திரிபும் சேர்கிறது.
சிரிலங்கா பிரச்சினையில் மட்டும்தான் இவர்களது நிலைப்பாடு இது என்றால் அப்படியில்லை. காஷ்மீர் முதல் எல்லா இடங்களிலும் இந்திய ஆளும் வர்க்கங்களின் நிலைப்பாடிற்கு சிங்கி அடிப்பதுதான் இவர்களின் மார்க்ஸியமாக உள்ளது. தரையில் ஊன்றி நடக்கச் சொல்லி நமக்கு அறிவுறுத்தும் இவர்கள் முதலில் இந்திய ஆளும் வர்க்கத்தின் தோள் பட்டையில் உட்கார்ந்து மக்களை காட்டிக் கொடுப்பதை விட்டொழித்து கீழே இறங்கி வரட்டும்.
அசுரன்
சி.பி.எம்.(மோடியிஸ்ட்) கும்பலின் கழிப்பறைக் காகிதம் - தீக்கதிர்!.... மற்றும் ’கோயபல்ஸ்’ செல்வப்பெருமாள்!!... (ஏகலைவனின் அருமையானதொரு கட்டுரை)
சுயநிர்ணயத்தை மறுக்கும் போலி (சி.பி.எம் சந்திப்பு) கம்யூனிஸ்டுகளின் கழுதை அரசியல்
CPM கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட ஈழ நிலைப்பாடும், டவுசர் கழண்ட சந்திப்பும்!!யுத்தத்தின் பின், தமிழ்மக்கள் பேரினவாத அரசுக்கு தம் எதிர்ப்பை காட்டுவார்களா?