TerrorisminFocus

Sunday, June 08, 2008

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

றுகாலனிய கொள்கைகளை அமல்படுத்தி நாட்டு மக்களை சாகடிக்கும் இந்த அரசு அதற்க்கு எதிரான மக்களின் எதிர்ப்புகளை, போராட்டங்களை பயங்கரவாதி என்றும் நக்சலைட்டு என்று முத்திரை குத்தி ஒடுக்கி வருகிறது. நந்திகிராமத்திலிருந்து, ஒரிஸ்ஸா, சட்டீஸ்கர் வரை இதுதான் நடந்து வருகிறது. அரசின் இந்த பாசிசத்தை எதிர்க்கும் ஜனநாயக சக்திகளும் கூட அரசின் பாசிச ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகிறார்கள். ஏற்கனவே தமது கொள்கைகளை விமர்சிப்பவர்கள் அனைவரையும் எந்தவொரு தடங்கலுமின்றி ஒடுக்கி வரும் இந்த அரசு சட்டப்பூர்வமாகவும் அதனை நியாயப்படுத்த பல்வேறு கறுப்புச் சட்டங்களையும், போடா சட்டத்தை திரும்ப கொண்டு வருவதற்கான முயற்சியிலும் உள்ளது.

நெருக்கடியில் சிக்கும் முதலாளித்துவ அரசின் கடைசி ஆயுதம் பாசிசம்தான். இதோ இந்திய அரசின் பாசிச கோடூர முகம் சட்டீஸ்கரில் வெட்கமின்றி வலம் வருவதை பாருங்கள். புரட்சிகர லட்சியத்தை தமதாக கொண்ட புரட்சிக்காரர்கள் மட்டுமல்ல, சுயமரியாதையுள்ள, மனிதாபிமானமுள்ள ஒவ்வொரு மனிதனும் கூட பாசிசத்தின் எதிரியாகவே நடத்தப்படுவான் என்பதை சட்டீஸ்கர் பெருமையுடன் இந்தியாவின் நடுநிலைவாதிகளுக்கு அறிவிக்கிறது. 'ஒன்று எங்கள் பக்கம் இரு அல்லது நீ என் எதிரி' என்ற ஜார்ஜ் புஷ்ஷின் 21-ம் நூற்றாண்டுக்கான பாசிசம் இங்கு பல்லிளிப்பதை பாருங்கள். அடிமைகள் மட்டுமே எமது குடிமக்கள் என்ற முழக்கம் அவலட்சணமாய் ஒலிப்பதை அவதணியுங்கள்.

இந்திய அரசு பயந்து விட்டது, அதன் முகத்தில் சவக் களை தெரிகிறது, அது ஒரு முழு நிறை யுத்தத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, அது ஏற்கனவே தனது சொந்த மக்களுக்கெதிரான உள்நாட்டு யுத்தத்தில் அதற்கான பயிற்சிகளை எடுத்து வருகிறது.... "Welcome to the World's Biggest Democracy".

இந்திய அரசு பய பீதியில் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல தன்னை எதிர்க்கும் எல்லாவற்றையும், தன்னிடம் மாற்று கருத்துக் கொண்டுள்ள எல்லாவற்றையும் கோடூரமாக ஒடுக்கி வருவதை, ஜனநாயக சக்திகளின் மீதும், மனித உரிமை போராளிகள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் தொடுத்து வருவதை விளக்கி புதிய ஜனநாயகத்தில் வந்துள்ள கட்டுரை கீழே உள்ளது படித்து பார்க்கவும். சட்டீஸ்கரின் புகழ் பெற்ற மனித உரிமை போராளியான பினாயக்சென் சல்வாஜூடுமை அம்பலப்படுத்தினார் என்ற ஒரே காரணத்தினால் பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அவருக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டதை ஒட்டி அவரது விடுதலைக்காக இந்தியா முழுவதும், உலகின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. இதனை ஒட்டி இந்த கட்டுரை இன்னும் முக்கியத்துவம் பெருகிறது.

_________________________________________________________________


கருத்துரிமைக்குக் கல்லறை
செல்வம், புதிய ஜனநாயகம், ஜூன் 2008

"""""
அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்களைக் கூடப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகிறது, ஆளும் கும்பல்.
"""""

சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும், ஆவணப் படத் தாயாரிப்பாளரும், குடியுரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுல் ஒருவருமான அஜய் தாச்சப்புள்ளி கங்காதரன் என்பவர், மே மாதம் 5-ஆம் தேதி, சட்டீஸ்கர் மாநில சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது அரசுத் துரோகக் குற்றச்சாட்டும்; தடை செய்யப்பட்டுள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சி(மாவோயிஸ்டு) - உடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்திய ஆளும் வர்க்கம் மனித உரிமைகளை மயிரளவிற்குக் கூட மதிப்பதில்லை என்பதற்கு இந்த கைது இன்னொமொரு எடுத்துக்காட்டு.

கடந்த ஆண்டு இதே மே மாதத்தில் (மே 14, 2007) குடியுரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் அனைத்திந்திய துணைத் தலைவரும், (சட்டீஸ்கர்) மாநிலச் செயலாளருமான பினாயக் சென், இதே சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது வாசகர்களுக்கு நினைவில் இருக்கலாம்(பு.ஜ. ஜூலை 2007). சர்வதேசப் புகழ் பெற்ற குழந்தை மருத்துவ நிபுணரும், மனித உரிமைப் போராளியுமான பினாயக் சென்னுக்குப் பிணையும் மறுக்கப்பட்டு, அவர் கடந்த ஓராண்டாகவே சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்திய அரசு, பினாயக் சென்னைப் பயங்கரவாதக் குற்றவாளியாகச் சித்தரித்தாலும், அமெரிக்காவைச் சேர்ந்த உலக நலவாழ்வுக் கழகம், சென்னின் மருத்துவச் சேவையை பாராட்டி இந்த ஆண்டிற்கான 'ஜொனதான்மான்' விருதை, அவருக்கு வழங்கியிருக்கிறது. இதனையொட்டி, பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், மருத்துவர்களும் மட்டுமின்றி நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரும் பினாயக் சென்ன உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளுக்கு சட்டீஸ்கர் மாநில அரசு அளித்த அநாகரிகமான பதில், அஜயின் கைது.

சமூக சேவகரான அஜய் கைது செய்யப்பட்ட விதம் மட்டுமன்று, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் இந்திய அரசின் பாசிச வக்கிர புத்தியைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

2004-இல் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற பொழுது, அத்தேர்தலை புறக்கணிக்குமாறு இ.பொ.க. (மாவோயிஸ்டு) அறைகூவல் விடுத்தது. சட்டீஸ்கர் மாநில அரசோ, எப்படியாவது பழங்குடி இன மக்களை ஓட்டுப் போட வைத்து, மாவோயிஸ்டுகளின் அறைகூவலை முறியடித்துவிட வேண்டும் என்ற நோக்கில், மத்திய ரிசர்வ் போலீசு படையைக் கிராமங்கள் தோறும் நிறுத்தியது.

இந்த நிலையில், அஜய், பினாயக் சென் உள்ளிட்ட சிலர், மக்களின் மனநிலையை அறிய தேர்தல் நடந்த நாளனறு பல்வேறு கிராமங்களுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். அன்று மாலை 4 மணியளவில், ஒரு கிராமத்திற்கு வந்த அவர்கள், அக்கிராமம் ஆள் அரவமின்றி வெறிச்சோடிக் கிடந்ததைக் கண்டனர். வாக்குசாவடியும் 'அநாதையாக'க் கிடப்பதைக் கண்ட அஜய், தனது புகைப்படக் கருவியால் அதனைப் படமெடுக்க முயன்றார்.

அந்த சமயத்தில் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கும் இளைஞர்கள் சிலர், அஜயையும் அவரது நண்பர்களையும் சுற்றி வளைத்துக் கொண்டனர். இவர்கள் போலீசின் ஏஜெண்டுகளாக இருக்கலாம் எனச் சந்தேகப்பட்ட அந்த இளைஞர்கள், அஜயையும் அவரது நண்பர்களையும் சிறை பிடித்தனர். இரவு வெகு நேரம் கழித்தே அவர்களைக் கிராமத்தில் இருந்து திரும்பிப் போக அனுமதித்தனர். எனினும் அந்த இளைஞர்கள் அஜயிடமிருந்து பறித்துக் கொண்ட புகைப்படக் கருவியைத் திருப்பித் தர மறுத்துவிட்டனர்.

இவ்விரும்பத்தகாத சம்பவத்தைக் கேள்விப்பட்ட இ.பொ.க.(மாவோயிஸ்ட்) தலைமை, "புகைப்படக் கருவியைத் திருப்பித் தந்து விடுகிறோம்; இல்லையென்றால் அதற்குரிய நட்ட ஈட்டைக் கொடுத்து விடுகிறோம்" என அஜய்க்கு உறுதியளித்தது. நடந்த சம்பவங்கள் அனைத்தும், இருட்டடிப்போ, மிகைப்படுத்தவோ இன்றி பத்திரிகைகளிலும் வெளிவந்தது.

இச்சம்பவம் நடந்து முடிந்து ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், மாவோயிஸ்டு கட்சிக்கு ஆயுதம் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு பெண்களை சட்டீஸ்கர் போலீசார் கைது செய்தனர். அப்பெண்களுள் ஒருவரின் வீட்டை போலீசார் சோதனையிட்ட பொழுது, மாவோயிஸ்ட் கட்சியின் பத்திரிகை தொடர்பாளருக்கு அஜய் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அக்கடிதம் தனது புகைப்படக் கருவியைத் திருப்பித் தந்தது தொடர்பாக அஜயால் எழுதப்பட்டது. இது தொடர்பாக அஜயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபொழுது, அவர் அந்த கடிதத்தை எழுதியதை ஒப்புக் கொண்டதோடு, எந்தச் சூழ்நிலையில் அந்த கடிதம் எழுதப்பட்டது என்பதையும் போலீசாரிடம் விளக்கினார். கிரிமினல், புத்தி கொண்ட போலீசாரோ, அஜயின் கணிணியைக் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

அஜய், தனது கணிணியைத் திருப்பித் தர உத்திரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு மே 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஐந்து நாட்கள் முன்னதாகவே போலீசார் அஜயை போடாவுக்கு இணையான சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அஜயை இக்கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் முக்கிய ஆதாரமாகக் காட்டும் கடிதம் 2004-ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. "குற்றம் நடந்த காலகட்டத்தில்" 2004-இல் இச்சட்டம் அமலுக்கு வரவேயில்லை என்பதுதான் இதில் "வேடிக்கையானது".

பினாயக் சென்னைச் சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் பொருட்டு போலீசார் அவர் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளும் இட்டுக்கட்டப்பட்டவைதான். சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்புர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் நாராயண் சன்யாலை, பினாயக் சென், 33 முறை சந்தித்தார் என்பது அரசின் குற்றச்சாட்டு. போலீசார் குறிப்பிடும் 33 முறையும், பினாயக் சென் நாராயண் சன்யாலை போலீசு உயர் அதிகாரிகள்-சிறைச்சாலைத்துறை அதிகாரிகள் அனுமதியோடுதான் சந்தித்திருக்கிறார். 33 சந்திப்புகளும் சிறைத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ், சன்யாலுக்கு மருத்துவம் செய்வது தொடர்பாகத்தான் நடந்தது என்பதும் அரசின் ஆவணங்களிலேய பதிவாகியிருக்கிறது.

இச்சந்திப்புக்களின் பொழுது, சன்யால் தரும் கடிதங்களை சிறைக்கு வெளியே கடத்திக் கொண்டு போய், உரியவர்களிடம் ஒப்படைக்கும் தபால்காரன் வேலையை பினாயக் சென் செய்தார் என்பது இன்னுமொரு குற்றச்சாட்டு. மாவோயிஸ்டு கட்சியின் ஆதாரவாளராக குற்றம் சாட்டப்பட்டிருந்த பியுஷ் குகா என்ற விசாரணைக் கைதி அளித்துள்ள வாக்குமூலத்தை இக்குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக போலீசார் காட்டியுள்ளனர். ஆனால், பியுஷ் குகா நீதிமன்ற விசாரணையின் பொழுது, போலீசார் தன்னைச் சித்திரவதை செய்து, வெற்றுக் காகிதத்த்ல் கையெழுத்துப் போடச் செய்து, வாக்குமூலத்தை எழுதிக் கொண்டதாக உண்மையை போட்டு உடைத்துவிட்டார்.

சட்டீஸ்கர் மாநில அரசு கொண்டு வந்துள்ள பொது பாதுகாப்புச் சட்டம் என்பது உண்மையில் பன்னாட்டு நிறுவனங்களையும், இந்திய தரகு முதலாளிகளையும் பாதுகாக்கும் சட்டம். அம்மாநில வனப் பகுதிகளில் புதைந்து கிடக்கும் கனிம பொருட்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தரகு முதலாளிகளுக்கும் கூறு போட்டு விற்கும் சதித் திட்டத்தை, மாநில அரசும், மைய அரசும் கூட்டுச் சேர்ந்து கொண்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. இம்மறுகாலனி ஆதிக்கக் கொள்கையை எதிர்த்துப் போராட பழங்குடி இன மக்களை திரட்டி வரும் இ.பொ.க (மாவோயிஸ்டு) - ஐ ஒடுக்குவதற்காக, இப்பாசிசச் சட்டத்தோடு சல்வாஜுடும் என்ற பெயரில் சட்டவிரோத குண்டர் படையையும் அம்மாநில அரசு இயக்கி வருகிறது. (பு.ஜ. ஜூன் 2006). இக்குண்டர் படை கடந்த மூன்று ஆண்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட பழங்குடி இன மக்களின் குடிசைகளைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளது. இப்பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியதால்தான், பினாயக் சென்னும், அஜயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இருவர் மட்டுமல்ல "பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் பழங்குடி இன மக்கள் மீது அரசு நடத்தி வரும் தாக்குதல்களை அம்பலப்படுத்தி எழுதியதற்காக கமலேஷ் பாய்க்ரா, அப்சல்கான் என்ற இரு பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்; தண்டேவாடா பகுதியைச் சேர்ந்த பழங்குடி இன மக்கள் தங்களின் நிலம் "தொழில் வளர்ச்சி"க்காகப் பிடுங்கப்படுவதை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த சி.பி.ஐ. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, போலிசாரின் கண் முன்னாலேயே குண்டர்களால் வழிமறிக்கப்பட்டு, மிரட்டப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டார். சல்வாஜுடும் குண்டர் படை நடத்திவரும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதற்காக, "வனவாசி சேத்னா ஆசிரம்"த்தை நடத்தி வரும் காந்தியவாதியான ஹிமான்ஷூ குமார், அரசின் மிரட்டலைச் சந்தித்து வருகிறார். பினாயக் சென், அஜய் உள்ளிட்டு இது வரை 43 பேர் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

முதலாளித்துவ அறிவுஜீவிகளால் கூட சல்வாஜூடுமை நியாயப்படுத்த முடியவில்லை. மைய அரசின் திட்ட கமிசன் மட்டுமின்றி, உச்சநீதி மன்றம் கூட சமீபத்தில் சல்வாஜூடுமை கண்டித்து கருத்து கூறியிருக்கிறது. எனினும், பினாயக் சென்னுக்குப் பிணை வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டனர், உச்சநீதி மன்ற நீதிபதிகள். சல்வாஜூடும் பொது மக்களுக்கு ஆபத்தானதாக இருக்கலாம்; ஆனால், பினாயக் சென்னோ அரசின் தனியார்மயக் கொள்கைக்கௌ ஆபத்தானவராக இருக்கிறார் என்ற உண்மை, நீதிபதிகளை அச்சுறுத்தியிருக்கக் கூடும்.

அரசின் தனியார்மயக் கொள்கையை, அதனின் பயங்கரவாத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் அனைவரையும், அரசு எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கிவிட்டது. அவர்களை மாவோயிஸ்டுகளாக முத்திரை குத்தி, சிறையில் தள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது.

==> உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் ராஹி என்ற பத்திரிகையாளர், ரியல் எஸ்டேட் மற்றும் கள்ளச் சாராய மாஃபியா கும்பலை எதிர்த்து மக்களை அணி திரட்டி போராடியிருக்கிறார். போலீசுக்கு நெருக்கமான இந்த சமூக விரோதிகளை எதிர்த்துப் போராடிய காரணத்திற்காக, அவரை இ.பொ.க.(மாவோயிஸ்ட்) கட்சியின் பிரதாந்திய தளபதி என முத்திரை குத்தி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்துவிட்டது, உத்தர்காண்ட் மாநில அரசு.

==> சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மானுடவியல் அறிஞரான பிரஃபுல் ஜா அரசின் கொள்கைகளை விமர்சித்து எழுதியதற்காக, மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதம் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சனவரி 22, 2008 அன்று கைது செய்யப்பட்டார்.

==> அசாமைச் சேர்ந்த பத்திரிகையாளரும், மனித உரிமைப் போராளியுமான லாசித் போர்தோலோய், மைய அரசிற்கும், அசாம் விடுதலை முன்னணிக்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையில் முக்கிய பங்காற்றி வந்தார். இந்த அமைதிப் பேச்சு வார்த்தையைச் சீர் குலைக்க இராணுவமும், துணை இராணுவப் படைகளும் நடத்திய சதிகள் குறித்த தகவல்களை லாசித் திரட்டி வந்தார். இதனாலேயே, "இந்திய விமானத்தைப் பாகிஸ்தானுக்குக் கடத்திச் செல்ல அசாம் விடுதலை முன்னணி தீட்டிய திட்டத்திற்கு லாசித் உடந்தையாக இருந்தார்" என்ற குற்றச்சாட்டின் கீழ் லாசித் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பினாயக் சென், அஜய், பிரசாந்த் ராஹி, பிரஃபுல் ஜா - இவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே அமைப்பு ரீதியான தொடர்பு கிடையாது; ஆயுதம் தாங்கிய வன்முறைப் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் இவர்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் அரசிடம் காட்டப்படுகின்றன. ஆனால், அரசோ, "நீங்கள் எங்கள் பக்கம் இல்லையென்றால், அவர்கள் பக்கம்தான்" என ஜார்ஜ் புஷ்ஷின் மொழியில் பதில் சொல்கிறது. இதன்படி பார்த்தால், அரசின் கொள்கையை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கும் சாதாரணக் குடிமகன் கூட, பயங்கரவாதி ஆகிவிடுவான்; நக்சலைட்டு ஆகிவிடுவான். இதைவிட முக்கியமாக, அரசின் விளக்கம், "மறுகாலனிய எதிர்ப்புப் போரில், நடுநிலை என்ற பேச்சுக்கே இடமில்லை" என அடித்துச் சொல்கிறது. முதலாளித்துவத்திற்கும், கம்யூனிசத்திற்கும் இடையே ஏதோ ஒன்று இருக்கும் என்ற நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் கனவில் விழுந்துள்ள சம்மட்டி அடி இது.

-செல்வம்-
புதிய ஜனநாயகம், ஜூன் 2008

1 பின்னூட்டங்கள்:

said...

http://puratchipadal.blogspot.com/

MaKaEeKa songs...

Related Posts with Thumbnails