TerrorisminFocus

Monday, November 27, 2006

மறுகாலனியாதிக்க எதிர்ப்புச் சிறப்பிதழ் - நூல் அறிமுகம்

புத்தகப் பிரியன் எனும் வலைப்பூவில் இந்த மாத புதிய கலாச்சார இதழ் குறித்து ஒரு நூல் அறிமுகக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதை இங்கு மறுபிரசூரம் செய்கிறேன்.

*************
புதிய கலாச்சாரம் - நவம்பர் - 2006 (ம.க.இ.க மாத இதழ்)


விடுதலைப் போரின் வீர மரபு! - இதுதான் இந்த சிறப்பிதழின் மூல வாசகம்.

இந்தியாவின் முதல் சுதந்திர போர் என்று இன்றுவரை அரசு மற்றும் இதர ஊடகங்களில் 1857 சிப்பாய் கலகமே குறிப்பிடப்படுகிறது. கார்ல் மார்க்ஸ¤ம் கூட சிப்பாய் கலகத்தையே முதல் இந்திய சுதந்திரப் போர் என்று வரையறுக்கிறார். ஆனால், வரலாற்றின் பக்கங்களை புரட்டுமிடத்து, தென்னிந்தியா அதற்கு 80, 100 வருடங்களுக்கு முன்பே சிவக்க துவங்கி விட்டதைக் காட்டுகிறது. குறுநில, பெரிய மன்னர்களின் பல்வேறு போராட்டங்கள் என்று அது தொடர்ந்தது. இந்த போராட்டங்கள் எல்லாம் 1700 இன் இறுதியில் வீரியமாகி 1805-ல் வேலூர் சிப்பாய் கலகத்துடன் நிறைவடைகிறது.

இவை அனைத்தையும் பற்றி சுருக்கமாக அன்றைய இந்திய மன்னர்களின் ஆட்சியைப் பிடிக்கும் தன்மான உணர்ச்சியே அவர்களை ஆங்கிலேயருக்கு எதிராக போராட தூண்டியது என்ற அளவில் மட்டுமே இந்த போராட்டங்கள் பற்றிய பார்வை நம்முள் ஊட்டப்படுகிறது. மேலும் இவர்கள் அனைவரும் தனித் தனியாக தன்னெழுச்சியாகப் போராடினார்கள் என்பதாகவும், அஹிம்சா மூர்த்தி காந்திதான் உண்மையில் இந்தியப் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் என்பதாகவும் நமது பாடத்திட்டங்களும், ஆளும் வர்க்க ஊடகங்களும் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளன. மொத்தத்தில் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று செய்து விடுதலை பெற்றதாக வலுவானதொரு பொதுக் கருத்து நிறுவப்பட்டுள்ளது. இவையனைத்தும் பெருமிதம் தரும் இந்திய விடுதலைப் போரின் பக்கங்களை மறைத்து விட்டு, அவற்றில் முகிழ்ந்த பெருந்திருள் மக்கள் பங்களிப்பை மறைத்து விட்டு, ஏகாதிபத்திய அடிமைத்தன சமரச வாதத்தையே இந்திய சுதந்திரப் போராக முன்னிறுத்தும் திட்டமிட்ட தந்திரங்களே.

காந்தி இந்திய சுதந்திர போராட்டத்திற்க்கு தலைமை தாங்குவதற்க்கு முன்பும் சரி, இந்திய மக்கள் மீதான அவரது செல்வாக்கு சரிந்து மக்கள் தன்னெழுச்சியாக பிரிட்டிஸை எதிர்த்து போராட துவங்கிய 1940களும் சரி இந்திய வரலாற்றிலிருந்து செம்மையாக மறைக்கப்பட்ட விட்டன.

இந்த வரலாற்று இருட்டடிப்பை தக்க தரவுகளுடன் அம்பலப்படுத்துவதுடன், இந்திய விடுதலை போராட்டம் குறித்த நேர்மையானதொரு சித்திரத்தை தருகிறது இந்த புத்தகம்.

இந்த புத்தகத்தில், பல வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் இந்திய முதல் சுதந்திரப் போர் தென்னிந்தியாவில் மையம் கொண்டிருந்ததையும், இந்துஸ்தானத்திலிருந்து வெள்ளையரை வெளியேற்ற தென்னிந்திய வீரப் போராளிகள் கூட்டணி(தீபகற்ப கூட்டணி) அமைத்து போர் புரிந்ததையும், ஒட்டு மொத்தமாக மக்களின் கண்களிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு காலச் சூழல் குறித்த ஒரு பாரிய புரிதலுக்கு உதவும் வகையில் எல்லாருக்கும் புரியும் வகையில் தொகுத்து 12 கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளது. கீழே இந்த சிறப்பிதழின் தலையங்கத்தின் கடைசி பேராவில் இருந்து சில வரிகளைக் கொடுக்கிறேன்.

"..திப்பு, மருது, 1857 எழுச்சி முதல் வ.உ.சி. பகத்சிங் வரையில் நாம் காணும் மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்த மண்ணின் அரிய புதல்வர்கள் தமக்குள் அதிசயிக்கத்தக்கதோர் ஒற்றுமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணின் இறையாண்மையையும் மக்களின் நலனும் பிரிக்கவொண்ணாதவை என்ற கருத்து இவர்கள் அனைவரிடமும் இழையோடுகிறது. தியாகிகளை மட்டுமின்றி சமகால துரோகிகளையும் தெரிந்து கொள்வதன் மூலம்தான் தியாகத்தின் மதிப்பை உணர்ந்துகொள்ள இயலும் என்பதால் துரோகிகளுக்கும் சில பக்கங்கள் ஒதுக்கியிருக்கிறோம். இந்தத் துரோகத்தின் மரபணுக்கள் நிகழ்காலத் துரோகிகளை அடையாளம் காண்பதற்கும் வாசகர்களுக்குப் பயன்படும்.

துப்பாக்கிகளுக்கு எதிராக வேல்கம்புகளையும், பீரங்கிகளுக்கு எதிராக நெஞ்சுரத்தையும் நிறுத்திக் காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட இந்த வீரப் புதல்வர்களுக்கு நாம் வேறென்ன காணிக்கை செலுத்த முடியும், மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போரிடுவதைத் தவிர."
யார் இந்த ஹைதரும் திப்புவும்?

ஒரு சாராசரி வாசகனின் பார்வையில் ஹைதர் அலி ஒரு சாதாரண மன்னன், ஆனால் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் அவரது இன்னொரு பரிணாமம் என்னவென்பது யாருக்கும் தெரியாது. அவரைப் பற்றிய ஒரு கட்டுரை இந்த விசயங்களை சிறப்புற எடுத்தியம்புகிறது(மன்னர் குலம் சாராத மாவீரன்: ஹைதர் அலி).

மாராத்தாக்களையும், நிஜாம்களையும் ஒருங்கிணைத்து ஒரு ஐக்கிய முன்னணி கட்ட தனது கடைசி காலகட்டம் வரை முயன்று தோற்றார் ஹைதர். தனது சாவுக்கு முன்பு எழுதிய கடிதத்தில் கூட தனது மைசூர் ராஜாங்கம் பறிபோவது குறித்து கவலைப்படவில்லை, மாறாக இந்துஸ்தானத்தின் நிலையை எண்ணி கலங்குகிறார் இந்த மாவீரன். குறிப்பாக இவரது பிறப்பு, வளர்ப்பு பின்னணி குறித்த தகவல்களுடன் கூடிய மார்க்ஸிய பார்வை வரலாற்றை வேறுபட்ட வகையில் புரிந்து கொள்ள உதவுகிறது. ஹைதர் குறித்த கட்டுரையின் அனுகுமுறையை கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதியை குறிப்பிட்டு காட்டுவதன் மூலம் அறியலாம்.

"ஆளப்பிறந்த இந்து மேல் வருணத்தினராயினும், அதிகாரம் பறிபோவதைத் தம் கண் முன்னே கண்டு கொண்டிருந்த முகலாய உயர்குடியினராயினும் - மார்க்சின் வார்த்தைகளில் சொல்வதென்றால்- "பழமைக்குரிய கவுரவ மனப்பான்மை கூட இல்லாதவர்கள்". அவர்கள் தம் அதிகாரத்தின் சாசுவதத் தன்மை குறித்த கனவைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கண்ணை இறுக மூடிக் கொண்டார்கள்.

எனவே 'இந்துஸ்தானத்'தின் கவுரவம் குறித்துக் கவலைப்படுவதென்பது, சுய கவுரவம்கூட இல்லாத இவர்களுடைய யோக்கியதைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. அதற்கு, தன் முயற்சியால் சாம்ராச்சியத்தை உருவாக்க முடிந்த ஒரு வீரன், நிலபிரபுத்துவ உயர்குடிப் பெருமிதங்களால் குருடாக்கப்படாமல் புதுமையைக் கற்றுத் தேர்வதில் வெறி கொண்ட ஒரு வீரன் தோன்ற வேண்டியிருந்தது."


அத்தகையதொரு வீரனாக இந்திய விடுதலைப் போராட்டம் எனும் பிரமாண்டமான மேடையை அலங்கரித்தவர்தான் ஹைதர் என்பதை கட்டுரை நிறுவுகிறது. ஹைதர் குறித்த இந்த கட்டுரையிலிருந்து புத்தகம் தனது வரலாற்று மறுவாசிப்பைத் தொடங்குகிறது. கட்டுரையை எழுதியவர் ஏற்கனவே புதிய கலாச்சாரம் இதழில் பல்வேறு கலாச்சார கட்டுரைகள் எழுதி செழுமையான அனுபவம் உள்ள - சூரியன்.

ஹைதரின் மகன் திப்பு, தந்தை விட்டுச் சென்ற கடமையைச் செவ்வனே தொடர்கிறார். திப்புவைப் பற்றியும் கூட ஒரு வீரஞ்செறிந்த மன்னன் என்பதைத் தவிர்த்து வேறு விசயங்கள் பரவலாக யாருக்கும் தெரிவதில்லை. அவர் முற்போக்கு சிந்தனையுள்ளவர், பிரெஞ்சு புரட்சியால் ஈர்க்கப்பட்டு பிரெஞ்சு புரட்சியாளர்களால் குடிமகன் திப்பு என்று பட்டம் கொடுக்கப்பட்டவர், அமெரிக்க புரட்சிக்கு நிதி உதவி அளித்தவர், சர்வாதிகாரத்தை எதிர்த்தவர், தனது சொந்த மக்கள் அனைவருக்கும் துப்பாக்கி கொடுத்து ஆயுதபாணி ஆக்கச் சொன்ன முற்றிலும் புரட்சிகரமான ஒரு தலைவன், தனது ராஜ்ஜியத்தை முதலாளித்துவ மயமாக்க தலைப்பட்டவர் இப்படி அவரது பல்வேறு ஆளூமைகளை அவரைக் குறித்த இந்தக் கட்டுரை எழுச்சி பொங்க விறுவிறுப்பாக எடுத்தியம்புகிறது.

இயல்பானதொரு முதலாளீத்துவ வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரத்துடன் கூடிய தகவல்கள், அதன் காரணமாக தலித்துக்கள் சமூக விடுதலையை நோக்கி முன்னேறத் துவங்கியிருந்த நிலை ஆகியவற்றை கட்டுரை சிறப்பாக படம் பிடிக்கிறது. முரன்பாடுகளை அம்பலப்படுத்தியும் அதனூடாக கேள்விகள் எழுப்பி சிந்திக்க செய்வதுமான எழுத்து நடைக்கு சொந்தக்காரராகிய மருதையன் இந்த கட்டுரையைச் சிறப்பாக எழுதியுள்ளார்.

கட்டுரையில் இருந்து சில வரிகள்(விடுதலைப் போரின் விடிவெள்ளி: திப்பு சுல்தான் - மருதையன்)

"துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிக ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார்"

"திப்புவின் படையில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுகிறார்கள் பிரெஞ்சு புரட்சியாளர்களான ஜாகோபின்கள்"

"வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் வெகு சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்புவும் ஒருவர்.."

"கிழக்கிந்திய கம்பேனிக்கு போட்டியாக அரசு வணிகக் கம்பேனியைத் துவக்குகிறார்..."

"வேலைவாய்ப்புகளும், பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத அளவு செயல் துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது - கும்பினி அதிகாரி தாமஸ் மன்றோ"

"திப்புவின் கோட்டைக் கதவுகளை திறந்து நம்பிக்கை துரோகம் செய்த அமைச்சர் சதக் கின் உடல் மீது மக்கள் காறி உமிழ்ந்தனர், புதைத்த உடலை தோண்டி எடுத்து ஒரு வாரகாலம், அதன் மீது சேற்றையும் மலத்தையும் வீசினர். 'சதக்' என்ற பாரசீக சொல் துரோகத்தை குறிக்கும் கன்னட சொல்லாக மாறியது."

"திப்புவின் உடலை நெருஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள்...."தென்னிந்தியாவின் வீரகாவியம், அவமானப்படுத்தும் சாதியம்:

திப்பு என்ற சரித்திர நாயகனுக்கு தோள் கொடுத்த தென்னிந்தியாவில் தீபகற்ப கூட்டினைவில் தீரன் சின்னமலை முக்கியமானவர். திப்பு சார்பாக நெப்போலியனிடம் தூது சென்ற குழுவில் தீரன் சின்னமலையின் பிரதிநிதி இருந்தார் என்ற செய்தி நம்மை வியப்படையச் செய்கிறது. தீரன் சின்னமலையின் படைக்கு ஜக்கோபின் எனப்படும் பிரெஞ்சு புரட்சியாளர்கள் கொரில்லா போர் பயிற்சி கொடுத்தது பற்றிய தகவல்கள் புல்லரிக்கச் செய்கின்றன. அந்த காலத்தில் பிரிட்டிஸ் அரசுக்கு எதிராக ஒரு வலுவான உலக அணியை உருவாக்கு முனைந்த மன்னர் குலம் சாராத இந்த மாவீரர்களின் துணிகர முயற்சிக்கு என்ன கைமாறு செய்ய முடியும் என்பதை எண்ணும் போது இந்த விடுதலைப் போராட்ட மரபை நெஞ்சில் ஏந்தி மீண்டும் ஒரு விடுதலைப் போருக்கு நம்மை அர்ப்பணிக்கும் கடமையை எதிர்கொள்கிறோம்.

மருது சகோதரர்களுடனான போரில்தான் அதிகமான வெள்ளையர்கள் உயிரிழ்ந்ததாக பதிவுகள் உள்ளன. சின்ன மருதுவின் திருச்சி மலைக்கோட்டை பிரகடனம் அவர்கள் குறித்த கட்டுரையுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மக்களை போரிட அரைகூவி அழைக்கும் இந்த பிரகடனம் இன்றைய தரகு வர்க்க அரசியல்வாதிகளின் முகத்தில் காறி உமிழ்வதாக உள்ளது. மருது சகோதரர்களின் படையில் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் பாகுபாடின்றி அணி திரண்டிருந்தனர். இன்று இவர்கள் ஒரு சாதிக்கு உரித்தவர்களாக அவமானப்படுத்தப்படுவது குறித்தும் கட்டுரை குத்திக் காட்டுகிறது.


"ஓண்டிவீரன், வெண்ணிக்காலடி போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வீரர்கள் பூலித்தேவனுடன் இணைந்து போராடியிருக்கிறார்கள். முதல் பாஞ்சாலங்குறிச்சிப் போரில் உயிர் நீத்திருக்கிறார் சுந்தரலிங்கம். காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போரிட்டு நாடு கடத்தப்பட்ட மருதுவின் வீரர்களில் எல்லாச் சாதியினரும் இருக்கிறார்கள்.

ஆனால் இன்று 'தேவர் குருபூசை'யுடன் மருதிருவருக்கும் சேர்ந்து விழா எடுக்கிறார்கள் சாதியப் பிழைப்புவாதிகள். இன்று மறுகாலனியாதிக்கத்துக்கு அடியாட்படையாகச் செயல்படும் இந்தப் பிழைப்புவாதிகள், துரோகி தொண்டைமானின் வாரிசுகள் என்பதே உண்மை."
வீரர்களும், துரோகிகளும்:

கர்நாடகாவின் துந்தாஜிவாக், தமிழகத்தின் கோபால் நாயக்கர் இவர்கள் யாரென்று தெரியாத தலைமுறை நம்முடையது என்று எண்ணும் பொழுது வெட்கித் தலைகுனிய வேண்டியதாக உள்ளது. ஆனால், அன்றைக்கு தீரமுடன் போரிட்டவர்களை காட்டிக் கொடுத்த துரோகிகளின் வாரிசுகள் அமைச்சர்களாகவும், பென்சன் பெற்றும் வாழ்க்கையை அனுபவித்து கொண்டே இன்றைய இந்தியாவின் நவீன தரகர்களாக மாறியிருப்பதை அமப்பலப்படுத்தவும் ஒரு கட்டுரை உள்ளது.

"துரோகமும் பிழைப்புவாதமும் பெற்ற வெற்றியைப் புரிந்து கொள்வதற்கு நுண்ணோக்கி கொண்டு வரலாற்றை ஆய்வு செய்யத் தேவையில்லை. நிகழ்காலத்தைக் கண் திறந்து பார்ப்பதே போதும்."

"இப்படியொரு பதிலைக் கூறிய பின்னரும் காந்தியை மகாத்மாவாகக் கொண்டாட முடிந்த தேசம் தொண்டைமான்களைத் தொடர்ந்து பெற்றெடுப்பதில் என்ன வியப்பு?"

"எட்டயபுர ராஜா இன்றளவும் அரண்மனையில் வாழ்வதும், கட்டபொம்மனின் வாரிசுகள் தொகுப்பு வீடு கேட்டு மனுப் போடுவதும் எட்டப்பனின் வெற்றியைப் பறை சாற்றவில்லை?"

"மருதுவின் கோட்டை பாழடைந்து கிடக்கிறது, கோபால் நாயக்கரையும், தூந்தாஜி வாக்கையும் மக்களுக்கு யாரென்றே தெரியாது. இவர்களுக்கு வரலாற்று நூல்களிலும் இடம் கிடையாது. மைசூர் அரண்மனையில் ஆண்டுதோறும் தசரா நாளன்று, உடையார், தர்பார் நடத்துகிறார். தஞ்சைப் பெரிய கோயிலுக்கு சரபோஜியின் வாரிசுதான் பரம்பரை அறங்காவலர். சுதந்திர தினத்தன்று கவர்னர் மாளிகையின் முக்கிய விருந்தாளி ஆற்காட்டு இளவரசர்.

ஏனென்றால், இது துரோகிகளின் அரசு. விடுதலை வரலாற்று துரோகம் கம்பீரமாக அரியணையில் அமர்ந்திருக்க, தியாகம் புறக்கணிக்கப்படும் இந்த அவலம்,...."


வீரத்தை மட்டுமல்ல தூரோகத்தையும் புரிந்து கொள்வதன் தேவையை தூரோகம் குறித்த கட்டுரை உணர்த்துகிறது.
மதத்தை கடந்த தேசப் பற்றுக்கு சாட்சியாக இந்திய விடுதலைப் போர்:

1906 இந்தியா சுதந்திர போராட்டத்தை மதம் வெற்றிகரமாக விழுங்கிவிட்டதை, பிரித்தாளும் சூழ்ச்சி வெற்றி பெற்றதை அறிவிக்கும் ஒரு கால அடையாளம். 1806, 1857 இந்திய விடுதலைப் போர்களின் போது மத ஒற்றுமையுடன், பெரும்பான்மை இந்துக்கள், முஸ்லீம் அரசர்களை வரவேற்று அரியணை ஏற்றியது பிரிட்டிஸ்க்காரர்களை அதிர்ச்சியுறச் செய்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் பிரிட்டிஸ்க்காரனின் அந்த அச்சத்தில் உள்ளது. இந்திய விடுதலை போராட்டத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை குறித்து கட்டுரைகள் ஆதாரங்களுடன் எடுத்துரைக்கின்றன.

"முகலாயப் பேரரசை "இந்துஸ்தானத்"தின் அரசாக இந்துக்கள் அங்கீகரித்தார்கள் என்றால், கிளர்ச்சி வெற்றி பெற்ற இடங்களிலெல்லாம் நல்லெண்ண நடவடிக்கையாகப் பசுவதைத் தடையை முசுலீம்கள் அறிவித்தார்கள்." இவ்வாறு சிப்பாய் கலகம் குறித்த கட்டுரை சொல்கிறது.

அன்று மன்னர்களை மக்கள் தைரியமாக பதவியேற்க்கச் சொல்லி அழைத்தார்கள். ஒரு வேளை அந்த போராட்டங்கள் வெற்றிப் பெற்றிருந்தால், இனிமேலும் மன்னர்கள் பழைய மன்னர்களாக இருந்திருக்க முடியாது. அப்படிப்பட்டதொரு புரட்சிகர சமூகத்தின் எதிர்காலம் குறித்த கற்பனையை நம்முள் படரவிட்டு ஏக்க பெருமூச்சு விடச் செய்கிறது ஒரு கட்டுரை.நவீன இந்தியாவின் வீர தவப் புதல்வர்கள்:

"இதோ கட்டபொம்மன் வீழ்ந்த மண்ணிலிருந்து வ.உ.சி.எழுகிறார். பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கத்தை இந்த மண்ணில் ஒலித்த திப்புவைத் தொடர்ந்து, ரசியப் புரட்சியின் சோசலிசத்தை முழங்க பகத்சிங் வருகிறார். இந்திய விடுதலைப் போராட்ட மரபில்தான் எத்தனை மின்னல்கள், இடிமுழக்கங்கள்! ஆனால் ஒவ்வொரு முறையும் மழைமேகத்தைக் கலைத்துச் சென்றிருக்கிறது துரோகத்தின் காற்று." - இவை ஒரு கட்டுரையில் வரும் வரிகள். ஆம், பிரெஞ்சுப் புரட்சியின் பாரம்பரியமும், ரஸ்யப் புரட்சியின் பாரம்பரியமும் கூட இந்திய விடுதலைப் போரை வழி நடத்தியிருக்கின்றன. ஆயினும் தூரொகம் எனும் பெருங்காற்று புரட்சி மழையை பெய்ய விடாமல் இன்றளவும் இடைஞ்சல் செய்து வருவதை கட்டுரைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

ஏகாதிபத்தியத்தின் உயிர் நிலை அதன் மூலதனம் என்பதை உணர்ந்து அந்த இடத்தில் வலுவான அடி கொடுத்தார் வ.உ.சி. அவரது வாழ்வின் மறைக்கப்பட்ட பல பக்கங்களை அவரைப் பற்றிய கட்டுரை எடுத்துக்காட்டுகிறது.

1700 களின் இறுதியில் ஒரு புயலாக நுழைந்து விடுதலைப் போராட்டத்தின் திசை வழியை தீர்மானித்தது திப்பு எனில், துரோகத்தாலும், பிழைப்புவாதத்தாலும் சோம்பியிருந்த 1900 களின் ஆரம்பத்தில் புதிய ரத்தம் பாய்ச்ச தனது இன்னுயிரை ஈந்தவன் பகத்சிங். பகத்சிங்கிடம் நாம் கற்றுக் கொள்ள் வேண்டியவை பல. காலத்தை மீறி சிந்தித்தாக சொல்லப்படும் பாரதியார் தனது சாதி மேன்மையை சொல்லி சிறையிலிருந்து விடுதலை பெற பிரிட்டிஸாரிடம் பேரம் பேசி சோரம் போன காலத்தில்தான், அந்த காலத்திற்க்கான சிந்தனையான கம்யுனிசத்தை உள்வாங்கிக் கொண்டு ஒரு அனுபவம் வாய்ந்த பெரிய மனிதனைப் போல பேசுகிறார் பகத்சிங். கட்டுரையில் வரும் சில வரிகளை இங்கு கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.

" இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை;
எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை"


உங்களையும் என்னையும் நம்பி தூக்குக் கயிறை முத்தமிட்ட அந்த இளைஞனுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்??படியுங்கள் - ஒரு புதிய அனுபவம் - ஒரு சுய பரிசோதனை:

இப்படி துணூக்குகளாக தருவது என்றால் முழு புத்தகத்தையும் தரலாம் என்ற அளவில் அதன் ஒவ்வொரு எழுத்துக்களும் அற்புதமான கருத்து செழுமையுடன் உள்ளது.

ஓவியர் முகிலன், திரு, மருது ஆகியோரின் அற்புதமான ஓவியங்களுடன் வந்துள்ளது இந்த சிறப்பிதழ்.

இது போன்ற மாற்று இதழ்கள் கடுமையான நிதி சிக்கலை கடந்தே வருகின்றன. ஆயினும் பிற முதலாளித்துவ பத்திரிக்கைகளை விட சிறப்பானதொரு அட்டை வடிவமைப்புடன் புதிய கலாச்சாரம் இதழ் வெளி வருவது அதன் தனிச் சிறப்பு. இதற்க்கு பின்னால் உள்ள கடுமையான உழைப்பை நாம் உறுதியாக மெச்ச வேண்டியுள்ளது.

ராஜவனஜ் என்ற அன்பர் தனது தளத்தில் இந்த புத்தகம் குறித்த ஒரு அறிமுகக் கட்டுரை வெளியிட்டிருந்தார். அதில் சில வரிகளை இங்கு சேர்ப்பது பொருத்தமான அறிமுகமாக இருக்கும்.

"வரலாற்றின் போக்கில் மக்கள் விடுதலை என்பது கடைச் சரக்கல்ல... இப்படியெல்லாம் தன்னலமற்ற தியாகிகளால், மாபெரும் வீரர்களால் நடத்தப் பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை இன்று ஏன் அகிம்சையாக நடந்த சுதந்திர போராட்டம் என்று ஆளும் வர்க்கங்களால் வலுவுடன் பிரச்சாரம் செய்யப் படுகிறது? இந்த வீரர்களுக்கு கிடைத்த பரிசு என்ன? யாரால் இவர்கள் காட்டிக் கொடுக்கப் பட்டனர்? காட்டிக் கொடுத்தவர்களின் வாரிசுகள் இப்போது எப்படி இருக்கிறார்கள்? கிடைத்ததாக சொல்லப் படும் சுதந்திரத்தின் யோக்கியதை என்ன? தன்னுடைய மூலதனத்தின் விரிவாக்கத்துக்காக புதிய சந்தையைத் தேடி உள்நுழைந்தது வெள்ளை ஏகாதிபத்தியம்.. நம் அடிமைத் தனம் ஏற்பட முக்கிய காரணியான அந்த மூலதனம் சுதந்திரத்திற்குப் பின் என்னவானது? எங்கே போனது? நம்மை கசக்கிப் பிழிந்து விரிவடைந்த ஏகாதிபத்தியத்தின் மூலதனம் நாட்டுடமையாக்கப் பட்டதா?

யாரிடம் ஆட்சியைக் (சுதந்திரத்தையல்ல) கைமாற்றிச் சென்றான் வெள்ளையன்? ஏன் அவனுக்கு அந்த கட்டாயம் ஏற்பட்டது? ஏகாதிபத்தியம் ஆகஸ்டு 15 1947 க்குப் பின் மெய்யாலுமே நம் நாட்டை விட்டு சென்று விட்டதா?

கேள்விகள்.. கேள்விகள்.. கேள்விகள்.. இப்படி ஆயிரம் கேள்விகள்.. உங்களுக்கான விடை இம்மாத புதிய கலாச்சாரத்தில் காத்திருக்கிறது ...."

புத்தகம் வேண்டுபவர்கள் புதிய கலாச்சாரம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புத்தகத்தை அனுப்பக் கோரலாம்.


புதிய கலாச்சாரம்:

உள்நாடு:
தனி இதழ்: ரூ. 5.00
ஆண்டு சந்தா: ரூ. 90.00

வெளி நாடுகள் (வான் அஞ்சலில்)
ஆண்டு சந்தா: US$ 9


தொடர்புக்கு:
இரா.சீனிவாசன்,
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,
(15-வது தெரு அருகில்),
அசோக் நகர்,
சென்னை - 600 083.

தொலைபேசி: 044-23718706

மின் அஞ்சல் முகவரி:
puthiyakalacharam@rediffmail.comஇதழ் தயாரிப்பில் உதவிய நூல்கள்(பின் அட்டையில் குறிக்கப்பட்டுள்ளது):

1. Rajayyan, K., South Indian Rebellion, The first war of Independence 1800 - 1801, Rao and Raghavan, Mysore Publication, 1971.

2. Rajayyan, K. Tamilnadu A Real History, Ratna Publications, Trivandrum, 2005.

3. Firoz Alam, Great Indian Revolutinary Bhagat Singh, A collection of edited articles, Sahni Publications, 2003.

4. B.R. Agarwala, Trials of Independence (1858-1946), National Book Trust, 1991.

5. Bipan Chandra, India's Struggle for Independence, Penguin(India), 1989.

6. Manmathnath Gupta, Bhagat Singh and His times, Lipi Prakashan, Delhi, 1977.

7. Karl Marx, On India, Rhulika Publications, 2006.

8. Indian Independence War, 1857-1859; Progress Publishers, Moscow, 1988.

9. Bipan Chandra, Modern India, A History Textbook for Class XII, NCERT Publication, 2002.

10. P.C. Joshi, 1857 In Folk Songs(A compilation), 1994.

11. S.N. Chanda, 1857: Untold Stories, Sterling Publishers, 1976.

12. Publications Division, Ministry of I&B, Govt. of India, 1857: A Pictorial Presentation, 1997.

13. Denys Forrest, Tiger of Mysore, The Life and Death of Tipu Sultan, Allied Publishers, 1970.

14. Confronting Colonialism: Resistance and Modernization under Haidar Ali and Tipu Sultan, A collection of essays - Edited by Irfan Habib.

15. Saki, Making History: Karnataka's People and Their Past; Volume I, Stone age to Mercantilism, Vimukthi Prakashana, Bangalore, 1998.

16. Nick Robins, The Corporation that changed the World, How the East India Company shaped the Modern Multinational, Orient Longman, 2006.

17. E.J. Hobsbawm, The Age of Capital: 1848-1875, Rupa & Co., Calcutta, 1992.

18. Seema Alavi, The Eighteenth Century in India, OUP, 2002.

19. Dr. Shu Hikosaka and Dr. G John Samuel, General Editors; Dr. M. Shanmugam Pillai, Editor: The First Freedom Fighter, The Story of Pulittevan, Folklore of Tamilnadu Series No.8, Institute of Asian Studies.

20. முனைவர் கு. மங்கையர்க்கரசி, மருது பாண்டியர் வரலாறும் வழிமுறையும், புத்தா பப்ளிகேஷன்ஸ், 2003.

21. பேராசிரியர் ந. சஞ்சீவி, மானங்காத்த மருது பாண்டியர், காவ்யா, 2004

22. பேராசிரியர் ந. சஞ்சிவி, வீரத்தலைவர் பூலித்தேவர், காவ்யா, 2004

23. சிவலை இளமதி, வரலாறு படைத்த வழக்குகள், அலைகள், 1997

24. த.சிவக்குமார், கேளாத செவிகள் கேட்கட்டும்... தியாகி பகத்சிங்கின் கடிதங்கள், கட்டுரைகள், மற்றும் பிற ஆவணங்கள், நெம்புகோல் பதிப்பகம், 2006

25. நாத்திகம்-ப. ராமசாமி, நாத்திகச் சிங்கம் பகத்சிங், நாத்திகம், 1992

26. மாயா குப்தா, டாம் நார்ன், வேலூர்க் கலகம் ஜூலை 1806, விடியல் 2003

27. எஸ்.மித்தல், இர்பான் ஹபீப், விடுதலைப் பாதையில் இந்தியா, பகத்சிங்கின் நவஜவான் பாரத சபை பற்றிய அறிமுகம், கார்க்கி நூலகம், 1981

28. எப்போதாவது எண்ணிப் பாருங்கள்... தியாகச் செம்மல்களின் கடிதங்கள், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன், 1998

29. எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், சுதந்திரப் போர், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 1957

30. வே. மாணிக்கம், தானாபதிப் பிள்ளை வரலாறு, யாதுமாகி, 2005

31. டாக்டர் ஜெ.ராஜாமுகமது, புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, அரசு அருங்காட்சியகம், 1992

32. கொ.அ.அந்தோனவா, கி.ம.போன்காரத்-லேவின், இந்தியாவின் வரலாறு - மிகத் தொல் காலம் முதல் 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, முன்னேற்றப் பதிப்பகம், 1987

33. கால்டுவல் திருநெல்வேலி சரித்திரம், காவ்யா, 2004

34. இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் - சுனிதி குமார் கோஷ்-தமிழில் வ.கோவிந்தசாமி

35. வ.உ.சி நூல் திரட்டு-தொகுப்பு வீ.அரசு

36. வ.உ.சியும் திருநெல்வேலி எழுச்சியும்-ஆ.இரா.வேங்கடாசலபதி

37. வ.உ.சிதம்பரம் பிள்ளை - என்.சம்பத், பெ.சு.மணி

38. திராவிட இயக்கமும் வேளாளரும்-ஆ.இரா.வேங்கடாசலபதி

39. சிவனடி, இந்திய சரித்திரக் களஞ்சியம், தொகுப்பு நூல்கள்


**********

புத்தகம் வேண்டுபவர்கள் புதிய கலாச்சாரம் அலுவலகத்தை தொடர்பு கொண்டு புத்தகத்தை அனுப்பக் கோரலாம்.

புதிய கலாச்சாரம்:

உள்நாடு:
தனி இதழ்: ரூ. 5.00
ஆண்டு சந்தா: ரூ. 90.00


வெளி நாடுகள் (வான் அஞ்சலில்)
ஆண்டு சந்தா: US$ 9


தொடர்புக்கு:
இரா.சீனிவாசன்,
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, (15-வது தெரு அருகில்),
அசோக் நகர், சென்னை - 600 083.

தொலைபேசி: 044-23718706

மின் அஞ்சல் முகவரி:
puthiyakalacharam@rediffmail.com


Related article:

* படியுங்கள் இந்த மாத ‘புதிய கலாச்சாரம்’!!!

* புத்தகப் பிரியன்

7 பின்னூட்டங்கள்:

said...

நன்றாக உழைத்திருக்கிறீர் ஐயா.
நன்றி.
வணக்கம்.

said...

மிக நல்ல பணி..

இன்று பெரும்பான்மையானோர் பேசவே தயங்கும் subject இந்த இதழில் உள்ளது. உண்மையான விடுதலைப் போர் பற்றிய வரலாறு பற்றி பேசினால் பல பேருக்கு எங்கோ வலிக்கிறது.

நடிகர் நடிகைகளின் படுக்கையறை கிசுகிசுக்களை எழுதும் பத்திரிக்கைகளுடனும்.. மக்களின் வாழ்க்கைச் சோகத்தை முதலாக வைத்துக் கொண்டு 'ஆன்மீக' சேவை செய்து கல்லா கட்டும் பத்திரிக்கைகளுடனும்.. மக்கள் பிரச்சினைகள் பேசும் பத்திரிக்கைகள் போட்டியிடுவது என்பது ( பொருளாதார ரீதியில்) மிகக் கடினம்..

இதுவும் ஒரு போராட்டமே! பு.க பு.ஜ இரண்டும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.. இதை பிரபலப்படுத்துவது மிக அவசியம்!

said...

மாசிலா, ராஜவனஜ் இருவரின் வருகைக்கும் நன்றீ,
அசுரன்

said...

Good one!

said...

Your fonts are not readable to me.

can you help.

balan

said...

balan,

Now you should be able to read the post.
I have changed the Font to Arial and republished.

Please let me know whether are you able to read or not.

Thanks for informing me about this.

Asuran

said...

please see http://ieykkam.blogspot.com/
by
ieykkam

Related Posts with Thumbnails