இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்
இந்திய அரசு தனது வர்க்க சார்பை விட முடியாமல் தவிக்கிறது. விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பான துறை என்பதை யாராலும் மறுக்க இயலாது. இதனை முன்னிட்டுதான் விவசாயத்தில் குறைந்த பட்ச GDP வளர்ச்சியில்லையெனில் இந்தியாவின் GDP இலக்கை அடைய முடியாது என்று அலறுகிறார்கள் பா. சி., மண்டேக் சிங் அலுவாலியா முதலான அமெரிக்க புரோக்கர்கள்.
ஆயினும், இந்த அலறலை மக்கள் மீதான அன்பால் ஏற்ப்பட்ட அலறல் என்று யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். ஏனெனில் உண்மையில் இந்திய விவசாயத்தை வளர்க்க அதில் முதலாளித்துவ பாணி உற்பத்தி முறைகளை கொண்டு வர வேண்டும். ஆனால் இதனை செய்யும் தைரியமும், தனது சொந்த வர்க்கங்களுக்கு துரோகம் செய்யும் நெஞ்சுரமும் இந்த கைக்கூலிகளுக்கு இல்லை.
முதலில், அது என்ன முதலாளித்துவ பாணி உற்பத்தி முறை?
மிகப் பெரிய அளவில், ஒரே இடத்தில், மையப்படுத்தப்பட்ட முறையில் நவீன கருவிகள் உதவியுடன், பெரும் எண்ணிக்கையில் விஞ்ஞான முறைகளின் துணையுடன் செய்யப்படும் உற்பத்தி முறைதான் முதலாளித்துவ உற்பத்தி முறை. இதனை மேலைநாடுகளில் பார்த்திருக்கலாம். பல லட்சம் ஏக்கருக்கு ஒரே ஒரு பயிர்தான். விமானம் மூலம் உரம்-பூச்சி மருந்துகள், நீர் பாய்ச்சுவது மையப்படுத்தப்பட்டிருக்கும், ஒரு குறிப்பிட்ட பெரிய சந்தையை மனதில் கொண்டு திட்டமிடப்பட்ட உற்பத்தி, அதி நவீன ராட்சச யந்திரங்கள் மூலம் அறுவடை. இப்படி ஒரு தொழிற்சாலை போலவே அங்கு விவசாயம் நடைபெறுகிறது. இன்னும் சொன்னால் அங்கு விவசாய முதலாளியும், தொழிலாளியும்தான் உண்டு. விவசாயியோ அல்லது நிலபிரபுவோ கிடையாது.
ஆனால் இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் பின்னிபிணைந்துள்ள விவசாயமோ இன்னும் சிதறிய சிறுவீத உற்பத்தி எனும் நிலபிரபுத்துவ முறையையே பின்பற்றி வருகிறது. அதிலிருந்து மேலேறி அடுத்தக் கட்டத்திற்கு வரவிடாமல் இந்தியாவின் பொருளாதாரம் ஏகாதிபத்திய முடக்கு வாதத்தால் அவதியுறுகிறது. இதைத்தான் நாம் அரைக்காலனியம், அரை நிலபிரபுத்துவம் என்கிறோம்.
ஏன் இந்திய அரசால் விவசாயத்தை வளர்க்க முடியவில்லை:
விவசாயத்தை அடுத்தக் கட்டத்திற்க்கு கொண்டு வரும் முயற்சிகள் பெரும் நிலவுடமையாளர்களுக்கும், விவசாய உற்பத்தி பொருட்களின் விற்பனை பிரிவு, சந்தை பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் புரோக்கர் கும்பல்களுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும் என்பதால்தான் இந்த அரசு அத்தகைய நிலச் சீர்திருத்தம், விவசாய சீர்திருத்த நடவடிக்கைகளை செய்வதில்லை. இது பிரச்சனையின் ஒரு அம்சம் மட்டுமே.
இன்னொரு முக்கிய அம்சம் ஏகாதிபத்தியத்தின் சந்தை தேவையையும், மூல வளங்களின் தேவையையும் நிவர்த்தி செய்யும் ஒரு இழிச்சவாய நாடு என்று முத்திரையை இந்தியாவிற்க்கு தொடர்ந்து குத்துவதில் உள்ள ஆர்வம். இந்த அம்சம் மிக குறிப்பாக உலகமயத்திற்க்கு பிறகு பெரும் முக்கியத்துவம் பெருகிறது.
ஏனேனில், உலகமயத்திற்க்கு பிற்ப்பாடு மேலே சொன்ன முதல் அம்சமான - நிலவுடைமையாளர் மற்றும் விற்பனை மற்றும் சந்தை பிரிவுகளும் கூட MNC, தரகு முதலாளிகளுக்கு திறந்து விடப் படுவதுதான்.
இந்திய விவசாயத்தை இப்படி அரை நிலபிரபுத்துவமாக வைத்திருப்பதில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு என்ன அரசியல் இருக்க முடியும்?
மூன்று நோக்கங்கள்,
#1) குறை கூலி மனித வளம்:
குறைந்த கூலிக்கு, சொன்னதை அடிமை போலச் செய்யும் உழைப்பாளர்களை தொடர்ந்து உருவாக்கி(பெற்றெடுத்து வளர்த்து) செய்வதற்க்கு கிராம உற்பத்தி உறவுகளை நிரந்தரமாக பாதுகாப்பது அவசியம். இது குறித்து இந்த கட்டுரையில் 'இந்த பாணி உற்பத்தி முறையின் விளைவு என்ன?' என்ற தலைப்பின் கீழ் ஓரளவு விளக்கியுள்ளேன்.
இந்த பாணி உற்பத்தி முறை எப்படி அவனுக்கு குறைந்த கூலி ஆட்களை பெற்றெடுக்கிறது,
விவசாயத்தை சுதாட்டம் போல மாற்றி, விவசாயியை நிலத்தை விட்டு ஒரு பக்கம் விரட்டுகிறது இந்த பொருளாதாரம். இதன் மூலம் நகரங்களில் குறைந்த கூலிக்கு சுரண்ட தொடர்ந்து மனித வளம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்துகிறது. இன்னொரு பக்கம் அவனது வாழ்வை நகரங்களில் உத்திரவாதப்படுத்தாமல் கிராமம் பாதி நகரம் பாதி என்று அவனை அலைக்கழிக்கிறது. இதன் மூலம் அவன் நகரத்தில் குறை கூலிக்கு சம்பாதித்து அதை கிராமத்தில் மீண்டும் முதலிடுகிறான். அந்த முதலீட்டில் உற்பத்தியாகும் விவசாய பொருளை மிக குறை கூலிக்கு இந்த சமுகமே நுகர்கிறது. இங்கு கிராம நகர(Cost of Living) வேறுபாடு கிராமத்து கூலி தொழிலாளியை எப்படி ட்புள் சுரண்டலுக்கு உட்படுத்துகிறது என்பது புலனாகும். நகரத்திலோ அவனை தற்காலிக தொழிலாளியாக சிறு அளவிலும், சிறு பட்டறைகளில், கட்டுமான இடங்கள், ஹோட்டல் முதலான இடங்களில் உதிரி தொழிலாளியாக பெரும் எண்ணிக்கையிலும் வைத்து சுரண்டுகிறது. அவனை ஜனநாயகப்படுத்தாமல் மிக கவனமாக இந்த சமூக அமைப்பு கையாளுகிறது.
#2) மலிவு விலை மூல வளங்களும், மலிவு விலை சந்தைக்கான உற்பத்தி பொருட்களும்:
அ) சிறுவீத உற்பத்திகளான பட்டறை முதலாளிகளின் வளர்ச்சியை தடுப்பது. திருப்பூர் பனியன் பட்டறை முதலாளியால் திருப்பூரை தாண்டி சென்று விட முடியாது ஏனேனில் சந்தை ஒரு MNC கையிலோ அல்லது தரகு முதலாளி கையிலோ உள்ளது, இதன் மூலம் அவை காலாகாலத்தும் MNC, தரகு கம்பேனிகளுக்கு உற்பத்தி செய்யும் ஒரு தொங்கு சதையாகவே தேங்கி விடுவது.
சிறு முதலாளி, சுதந்திரமான தனது சந்தைகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு, இன்று MNC, தரகு கம்பேனிகளிடம் தமது பொருளை விற்க்கிறான். ஒரு விவசாயியின் நிலையைப் போலவே அவனும் தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை வைக்க வக்கின்றி இருக்கிறான். ஏனேனில் உற்பத்தி நடந்தால்தான் அவனுக்கு சோறு, உற்பத்திக்கு MNCயும், தரகு முதலாளியும் காண்ட்ராக்ட் தர வேண்டும், அப்படி அவன் காண்ட்ராக்ட் தருவதற்க்கு அவன் சொன்ன விலைக்கு விற்க்க தயாராக இருக்க வேண்டும். இந்த கந்து வட்டி போன்ற விசச் சூழல் மலிவு விலையில் MNC, தரகு முதலாளிகளுக்கு சந்தைக்கான பண்டங்களை உற்பத்தி செய்து கொடுக்கிறது. இது ஓரளவு IT தொழிலாளிக்கும் பொருந்தும்.
ஆ) விவசாயத்தின் நவீன உற்பத்தி முறைகளை தடுப்பது - அதாவது பெரும் விவசாய கூட்டுப் பண்ணைகள், மையப்படுத்தப்பட்ட சந்தை, மையப்படுத்தப்பட்ட விவசாய உற்பத்திக்கான திட்டம் போன்றவற்றை தடுப்பது - இதன் மூலம் சிறுவீத உற்பத்தி மூறையால்(Ex: காண்ட்ராக்ட் Farming) தொடர்ந்து தனது தேவைகளுக்கு மட்டும் இந்திய விவசாயம் சேவை செய்வதை நிரந்தரமாக்குவது.
இதற்க்கு உதாரணம்தான் பூ விவசாயம், இறால் பண்ணைகள் etc. லாபம் எந்த பொருளுக்கு உள்ளது என்பதை அவன் நிர்னயிப்பதன் மூலம் அதனை நாம் உற்பத்தி செய்ய வைக்கிறான். சில மடையர்கள் லாபம் என்பதனை மட்டும் பார்த்து இந்த அடிமை விசச் சூழலை வளர்ச்சி என்கிறார்கள். ந்மது தேவைக்கு உற்பத்தி செய்வதை விடுத்து அவனது சந்தை தேவைக்கு உற்பத்தி செய்வதன் மூலம் பாரம்பரியமான நமது சுயசார்பு பொருளாதார வலைப்பின்னல் சின்னாபின்னமாகிவிட்டது. இந்தியாவின் சுயசார்பை இப்படி அடித்து நொறுக்குவதன் மூலம், அந்த சந்தையையும் அவனே கைப்பற்றிக் கொள்வது(கோதுமை பிரச்சனை).
#3) சந்தை:
சுயசார்பை உடைத்தெறிவதன் மூலமும், இந்திய தொழில் துறையின் வளர்ச்சி என்பது தனது வளர்ச்சியாக மட்டுமே இருக்கமாறும் பார்த்துக் கொள்வதன் மூலமும் இந்த பெரிய சந்தையை தன் இஸ்டம் போல சுரண்டுவது.
(எ-கா: பசுமைப் புரட்சி காலத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தமது காலவதியான ஆயுத மருந்துகளை பூச்சிக் கொல்லியாக உரமாக கொடுத்தது, தற்போதைய BT விதைகள், விதை நெல் சீர்திருத்தம், ரீட்டையல் பிசினெஸில் FDI, சுதந்திரம் அடைந்த குறுகிய காலத்திலேயே அம்பலமான 'கோக்'கின் ஆதிக்கம், பேட்டண்ட்ஸ் ரைட்ஸ் மூலம் மருந்து சந்தைய முழுமையாக கபளீகரம் செய்துவிட்டது etc).
ஆக,
மலிவு விலையில் கூலி,
மலிவு விலையில் வளங்கள்,
மலிவு விலையில் உற்பத்திப் பொருட்கள்,
உற்பத்தியின் ஒரு பெரும் பகுதியையும் கூட சிறு முதலாளி எனும் இழிச்சவாயனும், விவசாயியும் பார்த்துக் கொள்வது,
இவையெல்லாம் போக அவன் எதை உற்பத்தி செய்தாலும் வாங்கிக் கொள்ள அவனது வர்க்கத்தின் ஆதிக்கம் மட்டுமே உள்ள மிகப் பெரிய சந்தை. இவற்றை மீறி அவனுக்கு உள்ள பிரச்சனையெல்லாம் அவனிடையே உள்ள போட்டி போறாமைதான். இத்தனை சாதகங்கள் இருந்து வெற்றி பெருவதை வெற்றி என்று நாராயன்களும், அல்பை ஆசீமும் பெருமையாகச் சொல்வது நகைப்பிற்கிடமாகவும், உண்மையான சாதனையாளர்களை கிண்டல் செய்வதாகவும் உள்ளது.
ஆக, நாம் உற்பத்தி செய்யும் பொருளை அவன் வந்து இஸ்டம் போல விலை வைத்து வாங்கிச் செல்ல வாய்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்போம், அதே நேரத்தில் நமக்கு தேவையான பொருளை அவன் இஸ்டம் போல விலை வைத்து விற்று செல்வதையும் நாம் வாய் பார்த்துக் கொண்டிருப்போம்.
இதனைத்தான் நாம் இழிச்சவாயத்தனம் என்போம். சில, தொந்தி வளர்க்கும் அடிமைகள் இதனை வளர்ச்சி, வல்லரசு என்றும் சொல்லுவர். இந்த மேற்சொன்ன சூழல்தான் இன்று நிலவுகிறது. ஒரு பக்கம் கோதுமையை அவன் கேட்ட விலைக்கு விற்று இழிச்சவாயர்களான விவசாயிகள், இன்னொரு பக்கம் கோதுமை விலை ஆறு மாதத்தில் ஆறு ரூபாய் ஏறி நாம் அவனை வாய் பார்த்துக் கொண்டிருப்பது. இந்த சூழல் இன்னும் வெகு துலக்கமான வடிவத்தை பெறவில்லை ஆயினும் அப்படி வரும் வரை காத்திருக்க வேண்டும் எனும் முட்டாள்களுக்காக இந்த பதிவு அல்ல.
இந்த மூன்று காரணத்திற்க்காத்தான் சிதறிய சிறுவீத கிராம விவசாய உற்பத்தி முறையையும், சிறு தொழில் பட்டறை முறையையும் இந்த ஆளும் வர்க்கம் பேணி பாதுகாக்கிறது. ஒரு வேளை விவசாயத் துறையிலொ அல்லது சிறு தொழில் துறையிலோ செய்யப்படும் எந்த மாற்றமும் இந்த மூன்று காரணங்களுக்கு குந்தகம் வாராத வடிவத்திலேயே நடைபெறும். எடுத்துக்காட்டுகள்: காண்ட்ராக்ட் விவசாயம், ஊக வணீகத்தில் விவசாய பொருட்கள், சிறு தொழில் துறையின் வளர்ச்சி.
இந்த பாணி உற்பத்தி முறையின் விளைவு என்ன?
பெரும்பான்மை மக்கள் இத்தகைய சிதறிய சிறு வீத உற்பத்தி முறையிலேயே, வளர்ச்சியின்றி தலைமுறை தலைமுறையாக பினைந்திருப்பது ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த அறிவு, பண்பாட்டு வளர்ச்சியை தடுக்கிறது.
அவனை ஜனநாயகமில்லாதவனாகவே வைத்து சுரண்டுகிறது. இதன் பொருளாதார அம்சம் - அந்த சமூகத்தில் மிக பெரும் தொழில்புரட்சி என்றுமே நடந்து விட விடாமல் செய்கிறது.
ரோட்டில் எச்சில் துப்புவது, ஒன்னுக்கடிப்பது, சிக்னலை மதிக்காமல் அவனவன் இஸ்டம் போல நடந்து கொள்வது, சிறு பட்டறை முதலாளியின் வீட்டு வேலைகளையும் சேர்த்தே செய்வது, போலிஸ், நீதிபதி இவர்கள் எல்லாம் ஏதோ வானத்து தேவர்கள் போல நடந்து கொள்வதும் சாதாரண கிராமத்து ஏழை அவர்களுக்கு அது போன்றே மரியாதை கொடுப்பது - இவை எல்லாம் ஜனநாயகமின்மையின் அறிகுறிதான். சமூகம் எனபது சக மனிதர்கள் இயைந்து பழகும் ஒரு அமைப்பு, இதில் அனைவருக்கும் உரிமை, பொறுப்பு உள்ளது என்ற புரிதலெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு இல்லையென்பதுதான் - இது போல பிறர் உரிமையில் தலையிடும் நடவடிக்கைகளையும், பிறரிடம் அடிமை போல நடந்து கொள்ளும் நடவடிக்கைகளையும் ஒருங்கே மேற்கொள்ள செய்கிறது.
அராஜகமும், அடிமைத்தனமும் ஒரே பொருளாதார அமைப்பு பெற்றெடுக்கும் பிள்ளைகள்தான். இதுதான் இயங்கியலின் விதி. இதைத்தான் ஜனநாயகமின்மை என்கிறோம்.
இது ஏன் இப்படி உள்ளது எனில் தனிப்பட்ட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு சிறுபட்டறை தொழிலாளி, ஒரு விவசாய கூலிக்கு இந்த சமூகம் இயைந்து இயங்குவது போன்ற ஜனநாயக அடிப்படைகளை புரிந்து கொள்ளும் உற்பத்தி முறை கிட்டவில்லை. பெரும் தொழிற்சாலை பாணி உற்பத்தியில் ஈடுபடுபவர்களிடம் இந்த பண்பாட்டை நாம் பெரும்பாலும் காணாலாம்(Exceptions இருக்கும்).
ஏனேனில் அவனது ஒவ்வொரு உற்பத்தி உறவிலும் அவன் கூட்டு உழைப்பினை உணர்கிறான். கூட்டு உழைப்பின் காரணமாக கட்டுப்பாடான தனது பங்களிப்பை செய்யும் கடமையை உணர்கிறான். எனவே தனது உரிமையையும், பிறரின் உரிமையையும் உணர்கிறான். உரிமைகளை மீறப்படும் போது உற்பத்தியில் ஏற்ப்படும் பிரச்சனைகளைப் பார்க்கிறான். ஒரே இடத்தில் தொழிலாளர்களை இணைத்து முதலாளியே அவனை அமைப்பாக ஆக்குகிறார். எனவே ஒற்றுமையின் வலிமையை உணர்கிறான். அவனிடம் இருந்து அடிமைப் புத்தி காணமல் போகிறது.
வேலை முடிந்தால், போட்டுக் கொண்டுள்ள சட்டையைத் தவிர வேலை சார்ந்த எந்த பொறுப்பும் கிடையாது என்பது அவனை சுதந்திர மனிதனாகாவும் - தான் வேறு தனது தொழிற்சாலை வேறு எனபதனையும் - தான் உண்மையில் அந்த தொழிற்சாலையின் ப்ரந்த தொழிலாளர்கள் எனும் பெரும் அமைப்பின் அங்கத்தினன் என்பதையும் உணர வைக்கிறது.
மாறாக, சிறுவீத உற்பத்தியில்(சிறு பட்டறை தொழிற்சாலை, விவசாயம்) விடிந்தால், பட்டறை முடிந்தால் படுக்கை என்று நாள் முழுவது கட்டுண்டு கிடக்கிறான். சுதந்திரம் தவிர்க்கிறான். கூட்டு உழைப்பின் பிரமாண்டத்தையும், முதலாளியே உருவாக்கிக் கொடுக்கும் ஒற்றுமையையும் அனுபவிக்கும் வாய்ப்பின்றி தான் பிறந்து வளர்ந்த நிலபிரபுத்துவ அடிமைத்தனத்தை பேணிக் காக்கும் நிலைக்குத் தள்ளப்படுகீறான். சமூகம், அரசு, வர்க்கம் என்பனவற்றைப் பற்றி சிந்திக்கவே நேரமில்லை என்பதிருக்க, அவனது உற்பத்தி முறைகளும் அதனை உணரவிடாமல் அவனை தொடர்ந்து ஏமாற்றியே சுரண்டுகின்றன.
இந்தியாவின் மிகப் பெரும்பான்மையினர் இது போன்ற உற்பத்தி முறையில்தான் ஈடுபட்டுள்ளனர். எனவேதான் இந்தியாவை ஜனநாயகம் இல்லாத நாடு என்கிறோம்.
ஜனநாயகம் என்பது சட்டத்திருத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசயமா?, இல்லை. அது சமூக பரிணாம வளர்ச்சியின் ஒரு கட்டம். அது சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் அலகு.
இந்தியாவில் பெரும் தொழிற்சாலைகள் ஒரு சிறு அளவிலான பிரிவினைரை மட்டுமே இது போன்ற தொழிற்சாலை பாணி ஜனநாயக உற்பத்தி முறைகளில் வைத்துக் கொண்டு, வாய்ப்புள்ள இதர பிரிவுகளையெல்லாம் சிறு பட்டறை முதலாளிகளிடம் காண்ட்ராக்ட் கொடுத்து விடுகிறார்கள். இதன் மூலம் இயல்பான முதலாளித்துவ வளர்ச்சி சமூகம் மொத்தத்திற்க்கும் பரவலாகிவிடாமல் தடுக்கப்பட்டு சமூகம் அழுகத் துவங்குகிறது.
இதை தடுக்க என்ன செய்யலாம்?
- இந்தியாவின் விவசாயத்தை ஏகாதிபத்தியங்களின் சந்தைக்காக உற்பத்தி செய்யும் பின்நிலங்கள் என்ற அள்வைத் தாண்டி இம்மிகூட முன்னேற விடாமல் தடுக்கும் அரசையையும், அதிகாரிகளையும் என்ன செய்யலாம்?
- இந்தியாவின் சிறு தொழில் துறையையும் இதே நிலைமையில் வைத்து இந்தியா முழுமைக்குமுள்ள நடுத்தர வர்க்கத்தின் கையிலுள்ள் சிறு மூலதனத்தின் சுதந்திரத்தையும், அவர்களின் இயல்பான சாதிக்கும் தாகத்தையும் முடக்கிப் போட்டு , அவற்றையும் தனது சந்தைக்காக உற்பத்தி செய்யும் பின் நிலங்களாக வைத்திருக்கும் இவர்களை என்ன செய்யலாம்?
- இந்தியனுக்கு ஜனநாயகத்தை மறுக்கும் இவர்களை என்ன செய்யலாம்?
- இது பேசி தீர்க்க முடியக் கூடிய விசயமா? சீர்த்திருத்தத்தில் தீர்வு அடங்கியுள்ளதா? புரட்சி செய்யவோமா?
அசுரன்