TerrorisminFocus

Tuesday, July 11, 2006

அழிவில் லாபமும், லாபத்தால் அழிவும் - பாகம் II

இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம்!

இந்த கட்டுரையின் முதல்பாகம்: இயற்கையின் அழிவில் இன்பம் காண்போம் - பாகம் 1

"தனிச் சொத்துடைமை நம்மை முட்டாள்களாகவும் ஒரு தரப்பானவர்களாகவும் செய்து விட்டபடியால், ஒரு பொருள் நம்மிடம் இருந்தால்தான் அது நம்முடையதாகிறது" என்றார் கார்ல் மார்க்ஸ். பொதுச் சொத்துகளையும் இயற்கையையும் வீணாக்கும் பொறுப்பற்ற தன்மை மக்களிடம் நிலவுகிறதென்றால் அதற்கு முழு முதற்காரணம் முதாலாளித்துவம் அவர்களிடம் தோற்றுவித்திருக்கும் சிந்தனையும் பண்பாடும்தான்.


முதலாளித்துவத்தால் இன்னமும் தின்று செரிக்கப்படாமல் மக்களிடம் எஞ்சியிருக்கும் மரபுகளும், விழுமியங்களும், பாட்டாளி வர்க்கத்திற்கேயுரிய பொதுமை நாட்டமும்தான் "நமக்கு சொந்தமில்லாததையும் நம்முடையதாகக் கருதும்" பண்பாட்டை மக்களிடம் நிலவச் செய்திருக்கின்றன.

முதலாளித்துவமோ தனக்குச் சொந்தமில்லாத எந்தப் பொதுச் சொத்தையும் நாசமாக்குகிறது. பாலாறும், ஒரத்துப்பாளையம் அணையும், கங்கை, யமுனையும் சில எடுத்துக்காட்டுகள். முதலாளிகள் இயற்கையை நேசிக்குமாறு செய்யும்பொருட்டு இயற்கை வளங்களை ஹார்டினின் அறிவுரைப்படி தனியார்மயமாக்கி விடலாம்தான். ஆனால் அவற்றைச் சூறையாடுவதன் வாயிலாகத்தான் முதலாளித்துவம் தன்னுடைய நேசத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது.


ஆயிரம் ஆண்டுகளாய் சேமிக்கப்பட்ட பிளாச்சிமடாவின் நிலத்தடி நீர் வளத்தை இரண்டே ஆண்டுகளில் கொக்கோ கோலா ஏன் உறிஞ்சித் தீர்க்க வேண்டும்? பல லட்சம் ஆண்டுகளாய் சூரியனின் வெப்பத்தால் உருவாகிச் சேமிக்கப்பட்டிருக்கும் நிலக்கரியையும், எண்ணெய் வளத்தையும் சில பத்தாண்டுகளிலேயே சுரண்டி எடுத்து விட்டு "சூரிய ஒளியிலிருந்தே மின்சாரம்", "புதுப்பிக்கப்படக் கூடிய எரிபொருள்", "காற்றிலிருந்து மின்சாரம்", "கடல் நீரிலிருந்து குடிநீர்" என்று எதற்காகத் தவிக்க வேண்டும்?


பிளாச்சிமடாவின் நிலத்தடி நீரையும் வளைகுடாவின் எண்ணெயக் கிணறுகளையும் வற்றச் செய்தவர்கள் ஏழைகளால் பெற்றுப் போடப்பட்ட மக்கள் கூட்டமல்ல. யாரிடம் இயற்கை வளங்களை ஒப்படைக்க வேண்டுமென ஹார்டின் சொல்கிறாரோ, அந்தப் பணக்கார வர்க்கத்தின் கார் தாகமும், பெப்சி தாகமும்தான் ஏனைய மக்களைத் தாகத்தில் தள்ளியிருக்கிறது.


இந்த பணக்கார வர்க்கத்தின் தாகமும் இயல்பான தேவையிலிருந்து எழுந்ததல்ல இதுவும் விளம்பரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட தாகம் மூலதனத்தின் தாகத்தை, முதலாளி வர்க்கத்தின் லாப வேட்கையைத் தணிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட தாகம்.


"இந்தத் தாகம் ரொம்பப் பெரிசு". அதனால்தான் பல ஆயிரம் விவசாயிகள், சில நூற்றாண்டுகளாய் விவசாயம் செய்தும் அழியாத நிலத்தடி நீர்வளத்தை, ஒரே ஒரு கம்பெனி இரண்டே ஆண்டுகளில் அழித்து விட்டது.


நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் என்ற ஒப்பந்தத்தின் வரம்புக்குள் நின்று பத்தாண்டுகளுக்கு உற்பத்தியை விரிவாக்காமல் ஒரே அளவில் வைத்திருப்பதற்கு கோக் நிறுவனம் ஒரு விவசாயி அல்ல தாமிரவருணியிலிருந்து நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர் எடுக்க வேண்டுமென்பது ஒப்பந்தக் காகிதத்தால் தீர்மாணிக்கப்படுவதில்லை. அது அட்லாண்டாவில் உள்ள கோக்கின் தலைமையகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. "தண்ணீருக்குப் பதிலாக கோக்" என்பதைத் தனது முழக்கமாக வைத்துள்ள கம்பெனியின் தாகம் தாமிரவருணி ஆற்றையே பாட்டிலில் அடைத்தாலும் அடங்கப் போவதில்லை.

இயற்கையை ஓம்பும் விதத்திலோ, இயற்கை தன்னைப் புனரமைத்துக் கொள்ளூம் வேகத்தைக் கணக்கில் கொண்டோ முதலாளித்துவ சுரண்டலின் வேகம் தீர்மானிக்கப்படுவதில்லை. இலாபம் மட்டுமே அதன் உந்து சக்தி. எனவே இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் சுரண்டுவதில் முதலாளித்துவம் காட்டும் வரைமுறையற்ற வெறி என்பது அதன் இயல்பான பண்பு.


குடகு மலையின் காடுகளை அழித்து பல்லாயிரம் ஏக்கர் காப்பித் தோட்டம்! மழை பொய்த்தது, காவிரி வறண்டது, விவசாய்ம் அழிந்தது, திக்கற்றவர்களாக திருப்பூருக்கு ஒடிவரும் விவசாயிகளை 12 மணிநேரம், 15 மணிநேரம் என்று வேலை வாங்கி அவர்களையும் 40 வயதுக்குள் முடமாக்கி, மனிதக் கழிவுகளாக்கி வெளியேற்றுகிறது முதலாளித்துவம்.

"ஒவ்வொரு அழிவிலும், ஒவ்வொரு துயரத்திலும் தனக்கான சந்தையைக் கண்டுபிடிக்கிறது முதலாளித்துவம், மேற்பரப்பு நீரை அழித்துவிட்டு நிலத்தரி நீர்வேட்டைக்கு பம்பு செட்டு வியாபாரம் ஒருபுறத்தில் குடிநீரைக் கழிவுநீராக்கும் ஆலைகள் மறுபுறம் கடல்நீரைக் குடிநீராக்கும் எந்திரங்கள்!"

இயற்கையின் ஆதாரப் பொருளான தண்ணீரை நஞ்சாக்குவதைப் போலவே, இயற்கையின் அதிஉன்னதப் படைப்பான மனிதனையும் அது நஞ்சாக்குகிறது. மண்ணுக்கும் மனிதனுக்கும், நீர் வளத்துக்கும், மனிதவளத்துக்குமிடையே முதலாளித்துவம் பாராபட்சம் காட்டுவதில்லை. பொரி பொரியாய்த் தெறித்து ஈரப்பசை ஒட்ட மறுக்கும் பாலாற்றின் படுகைக்கும், சொறியும் சிரங்கும் வந்து தோல் வறண்டு போன அந்தப் பகுதி மக்களின் தோலுக்கும் என்ன வேறுபாடு? ஒரத்தப்பாளையம் கழிவுநீருக்கும் சிறுமி செல்வராணியின் கொப்புளங்களிலிருந்து வழியும் சீழுக்கும் என்ன வேறுபாடு?

"சமூகத்தைப் போலவே இயற்கை சம்பந்தமாகவும் கூட இக்காலத்தில்(முதலாளித்துவ) உற்பத்தி முறை உடனடியான விளைவுகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. பிறகு இந்த நோக்கத்தின் பால் திசைமுகம் திரும்பியுள்ள செயல்களின் எதிர்கால விளைவுகள்.....பெரும்பாலும் நேர் முரணானவையாக மாறிவிடுகின்றன."


"உற்பத்தி செய்த, அல்லது விலைக்கு வாங்கப்பட்ட சரக்கை வழக்கமான பேராசைப்பட்ட லாபத்துடன் விற்றவுடன் அவன்(முதலாளி) திருப்தியுறுகிறான். அதன் பிறகு அந்தச் சரக்கிற்கோ அதை வாங்குபவர்களுக்கோ என்ன நேர்கிறது என்பதைப் பற்றி அவன் கவலை கொள்பவனாக இல்லை" என்றார் எங்கெல்ஸ்.


முதலாளித்துவத்தின் அருந்தவப் புதல்வனான ப.சிதம்பரம் எங்கெல்சின் கூற்றைப் பொய்பித்துக் காட்டிவிட்டார். சிகரெட் தயாரிக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனமான ஐ.டி.சி. நடத்திய வரி ஏய்ப்பை "மன்னித்து" 350 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தார். புற்று நோய்க்கான மருந்தின் விலையை 100இலிருந்து 1000 ரூபாயாக உயர்த்திக் கொள்ளூம் ஏகபோக உரிமையை நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு நீதிமன்றத்தில் பெற்றுக் கொடுத்ததன் மூலம், சிகரெட் புகைப்பவர்களூக்கு என்ன நேர்கிறது என்பது குறித்தும் தான் "கவலை" கொண்டிருப்பதை அவர் நிரூபித்துக் காட்டினார்.


ஒவ்வொரு அழிவிலும், ஒவ்வொரு துயரத்திலும் தனக்கான சந்தையைக் கண்டுபிடிக்கிறது முதலாளித்துவம். மேற்பரப்பு நீரை அழித்துவிட்டு நிலத்தடி நீர் வேட்டைக்கு பம்பு செட்டு வியாபாரம் நிலத்தடி நீரை அழித்து முடித்தவுடனே கடின நீரை நன்னீராக்கும் கருவிகளின் விற்பனை ஒருபுறத்தில் குடிநீரைக் கழிவுநீராக்கும் ஆலைகள் மறுபுறம் கடல்நீரைக் குடிநீராக்கும் எந்திரங்கள்!


"இயற்கையை ஆளும் விதிகளைக் கண்டு பிடிப்பதென்பது நுகர்வுப் பொருள் அல்லது உற்பத்திச் சாதனம் என்ற முறையில் மனிதனுடைய தேவைகளுக்கு அதனைக் கீழ்ப்படுத்துகின்ற சூழ்ச்சியாகவே தோன்றுகிறது" என முதலாளித்துவத்தின் கையில் அகப்பட்ட இயற்கையின் அவலநிலையையும், அறிவியலின் தரத்தையும் விமரிசித்தார் மார்க்ஸ்.


இயற்கையின் மீதான் தனது வினைகள் எத்தகைய எதிர் வினைகளைத் தோற்றுவிக்கக் கூடும் என்பது குறித்து முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை. "ஆறு வற்றினால் நிலத்தடி நீர், அதுவும் வற்றினால் பனிப்பாறைகளை உருக்கு, கடல்நீரைக் குடிநீராக்கு..." என்று வெட்டுக்கிளியைப் போல இயற்கையைச் சூறையாடியபடியே செல்கிறது. ஒவ்வொரு அழிவும், ஒவ்வொரு மாற்றமும் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற தூரப்பார்வை அதற்குக் கிடையாது.


"மனிதகுலம் உயிர்வாழ்வதன் நோக்கம் உற்பத்தி உற்பத்தியின் நோக்கம் லாபம்" என்ற கிட்டப்பார்வைதான் முதலாளித்துவத்தை வழிநடத்துகிறது. இயற்கையை அழிக்கும்போதும், மாற்றியமைக்கும் போதும் அது மனிதனின் மீது என்ன விளைவுகளாத் தோற்றுவிக்கும் என்பதைப் பற்றியும் முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை.


இயற்கையின் அதியுன்னதப் படைப்பான மனிதன் உயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நாசமாக்கப்படுகிறான். கார்கள் வெளியிடும் புகையைச் சுவாசிப்பதன் விளைவாக மட்டும் மனிதனின் உடலில் ஈயத்தின் அளவு 100 மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது ஒரு ஆய்வு. "ஒரு நுகர் பொருள் தோற்றுவிக்கும் நோயைக் குணப்படுத்த இன்னொரு நுகர்பொருள்" என்று மனிதனின் உடலையே தனது லாப வேட்டைக்கான சுரங்கமாக மாற்றுகிறது முதாலளித்துவம். முதலாளித்துவ போட்டியும் நெருக்கடியும் வேலை இழப்பும் பதட்டமும் நிச்சயமற்ற வாழ்க்கையும் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை சின்னாபின்னமாக்கி மனநோயாளிகளைப் பெருக்குகிறது.


பல லட்சும் ஆண்டுகளாய் நிலத்திடியில் சேமிக்கப்பட்ட எரிபொருட்களைச் சூறையாடும் அந்த லாபவெறி, மனிதன் எனும் இயற்கையின் அற்புதப் படைப்பையும் ஊனப்படுத்தி சிதைக்கிறது. "இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு மனிதர்களைக் கொல்ல வேண்டும்" என்று பேராசிரியர் ஹார்டினைச் சொல்ல வைப்பது இயற்கையின் பால் அவர் கொண்ட காதல் அல்ல அது லாபத்தின் மீதான் காதல். இயற்கையின் சிறந்த படைப்பாகக் கூட மனித உயிர்களை மதிப்பிடவிடாமல் அவருடைய கண்ணை மறைக்கின்ற லாபவெறி!


முதலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரை இயற்கையைப் போலவே மனிதனும் ஒரு உற்பத்திச் சாதனம் இயற்கை வளத்தைப் போலவே மனித உழைப்பும் ஒரு விற்பனைச் சரக்கு. தேய்ந்த போன் உற்பத்திச் சாதனங்களைத் தூக்கியெறிவதைப் போல, விற்க முடியாமல் தேங்கிப் போன தானியங்களைக் கடலில் கொட்டுவதுபோல, தேவைப்படாத மனிதர்களையும் ஹார்டின் அழிக்க விரும்புகிறார். எனவே அவர்களை உபரி உற்பத்தி பொருட்களாக கருதுகிறார்.


யார் எந்தப் பொருளை எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய பன்னாட்டு முதலாளிகளை அழைத்து ஆணை பிறப்பிக்க முடியாத ஹார்டின். யார் எவ்வளவு பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக மக்களூக்கு ஆணையிடுகிறார். "பொருளுற்பத்தியைக் கட்டுபடுத்த முடியாது, அதற்கேற்ப மனித உற்பத்தியைக் கட்டுப்படுத்திக் கொள்ளூங்கள்! முதலாளிகளின் லாபம் சேர்க்கும் "மனித உணர்ச்சி"யை கட்டுபடுத்த முடியாது அதற்குப் பொருத்தமாக உங்கள் புலனுணர்ச்சியைக் கட்டுபடுத்திக் கொள்ளுங்கள்!" என்று மக்களை, குறிப்பாக ஏழை மக்களை எச்சரிக்கிறார் ஹார்டின்.அராஜகம் என்பது முதலாளித்துவத்தின் பிறப்பியல்பு. சமூகமே உற்பத்தியில் ஈடுபடுவது, ஒரு சிலர் மட்டும் அதை நுகர்வது ஒரு நிறுவனத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி, மொத்த உற்பத்தியில் அராஜகம் - என்பது முதலாளித்துவத்தின் முரண்பாடுகள். தானே தோற்றுவிக்கும் இந்த முரண்பாட்டிலிருந்து தான் விடுபடுவதற்காக போர்கள், பட்டினிக் கொலைகள் மூலம் முதலாளித்துவம் மனிதனைச் சூறையாடுகிறது, இயற்கையையும் சூறையாடுகிறது.


தன்னளவில் ஒத்திசைவு கொண்டதாக இயங்கும் இயற்கையை ஒத்திசைவு அற்ற மனித சமூகம் எதிர்கொண்டு நிற்க இயலாது. "தனது உற்பத்தி சக்திகளை ஒரே திட்டத்தின் அடிப்படையில் ஒன்றோடொன்று இணக்கமாகச் சேர்ந்து கொள்வதைச் சாத்தியமாக்குகின்ற சமூகம் மட்டும்தான்" இயற்கையுடனான உறவைச் சரியான முறையில் பேண முடியும்.


இயற்கை பதிலடி கொடுக்கிறது. பெருமழையாக, வறட்சியாக, பனிப்பொழிவாக, சூறைக்காற்றாக..., உடனுக்குடனோ, சற்றுத்தாமதித்தோ பதிலடி கொடுக்கிறது. ""இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது'' என்று குறிப்பிட்டார் எங்கெல்ஸ்.

தன்னளவில் ஒத்திசைவு கொண்டதாக இயங்கும் இயற்கையை ஒத்திசைவு அற்ற மனித சமூகம் எதிர்கொண்டு நிற்க இயலாது. "தனது உற்பத்தி சக்திகளை ஒரே திட்டத்தின் அடிப்படையில் ஒன்றோடொன்று இணக்கமாகச் சேர்ந்து கொள்வதைச் சாத்தியமாக்குகின்ற சமூகம் மட்டும்தான்' இயற்கையுடனான உறவைச் சரியான முறையில் பேண முடியும்.

இயற்கையைத் தனது உடலாகவும், உழைப்பைத் தனது சாரமாகவும் கருதுகின்ற பொதுவுடைமைச் சமூகத்தில் மட்டுமே இயற்கையுடனான முரண்பாட்டை மனிதகுலம் சரியாகக் கையாள முடியும். தனிச் சொத்துடைமையை மனிதனின் இயல்புணரயூச்சியாக அங்கீகரிக்கும் சமூகம், இயற்கையை அழிப்பதற்கு முன், தன்னுடைய சொந்த அழிவை, தானே விரைவுபடுத்திக் கொள்ளும்.

*****

உலகமயமாக்கம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்கத்தின் உள்ளடக்கம் முதலாளித்துவம். வேறொரு வகை முதலாளித்துவச் சித்தாந்தத்தால் இதனை முறியடிக்க முடியாது. மனித குலமும் உயிரினச் சூழலும் பிழைத்திருக்க வேண்டுமாயின் முதலாளித்துவம் அழிந்தாக வேண்டும்.

""பொதுச்சொத்தின் அழிவா, தனியார்மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்'' என்கிறார் பேராசிரியர் ஹார்டின். ""இரண்டும் ஒன்றுதான்'' என்ற பதிலே இத்தகைய அற்பர்களுக்குப் போதுமானது.

எனினும் ஹார்டினையொத்த முதலாளித்துவ அற்பமதியினரின் வாதங்களை முன் ஊகித்துத் தனது மூலதனத்தில் விடையளித்திருக்கிறார் மாமேதை கார்ல் மார்க்ஸ்:


"ஒரு மனிதன் பிறிதொரு மனிதனைத் தனது தனிச்சொத்தாக வைத்திருந்ததென்பது எங்ஙனம் (இன்று) அபத்தமானதாக ஆகிவிட்டதோ, அதேபோல, ஒரு உயர்ந்த சமூக பொருளாதார அமைப்பின் பார்வையில், தனிப்பட்ட சிலர் (இன்று) இந்தப் புவியில் கொண்டிருக்கும் தனிச் சொத்துடைமை என்பதும் (நாளை) அபத்தமானதாகவே கருதப்படும். ஒரு முழுச் சமூகமோ, ஒரு தேசமோ, அல்லது சமகாலத்தில் நிலவும் எல்லாச் சமூகங்களும் இணைந்தால்கூட யாரும் இந்தப் பூமியின் உடைமையாளர்களாகிவிட முடியாது. அவர்கள் இந்தப் பூமியில் (வாழப்)பெற்றிருக்கிறார்கள், பயனடைகிறார்கள் அவ்வளவுதான். "ஒரு நல்ல குடும்பத் தலைவன் செய்வதைப் போல', தனக்குப் பின்னர் வரும் தலைமுறைகளுக்கு இந்தப் பூமியை மேலும் சிறப்பான நிலையில் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டும்.'

kUijad;

Gjpa fyhr;rhuk;- nrg;lk;gH 2005

********************

புதிய கலாச்சாரம் - செப்டம்பர் 2005 இதழில், மருதையன் எழுதி பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இங்கு இரண்டு பகுதிகளாக பதிக்கப்படும். மேலே காண்பது இரண்டாம் பகுதி.

இந்தக் கட்டுரைக்கு தொடர்புடைய இன்னொரு சிறு கட்டுரை:

16 பின்னூட்டங்கள்:

said...

மருதையன் எழுதி பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இங்கு இரண்டு பகுதிகளாக பதிக்கப்படும். மேலே காண்பது இரண்டாம்

மிக மிக அருமையான பதிவு.

இக்கட்டுரையை எழுதிய திரு.மருதையன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

படித்து தெளிந்து கொள்ள இங்கே கொடுத்த உங்களுக்கும் என் நன்றிகள்.

இக்கட்டுரைகளைப் படித்தவுடன் மனது மிகவும் பாரமாகிவிட்டது.

இம்மாபெறும் பிரச்சனையை எவ்வாறு எதிர் கொள்ளபோகிறோம்?

நம் சந்ததிகளுக்கு கடைசியில் என்ன இருக்கப் போகிறது?

said...

அசுரா,

மருதையனின் கட்டுரையை படிக்க ஆரம்பித்துருக்கிறேன்... ஆஹா, என்ன அருமையான புரிதல்கள் அவர் தன் காதலியை காதலிப்பதை விட இந்த இயற்கையின் மீதும் அதன் மக்களின் மீதும் வைத்திருக்கும் பாசத்திற்கு என்னுடையெ வார்த்தைகளில் எதனைத் தேடி அவருக்கு எனது நன்றியாக வெளிக்கொணர்வேன்...

இது ஒரு சிறு முதல் பின்னூட்டமே... உந்துதல் வர வர நான் பின்னூட்ட மிட்டு கொண்டே இருப்பேன்... இதோ சில உங்களின் நியக் கோபங்களிலிருந்து...

//"இந்தத் தாகம் ரொம்பப் பெரிசு". அதனால்தான் பல ஆயிரம் விவசாயிகள், சில நூற்றாண்டுகளாய் விவசாயம் செய்தும் அழியாத நிலத்தடி நீர்வளத்தை, ஒரே ஒரு கம்பெனி இரண்டே ஆண்டுகளில் அழித்து விட்டது.//

நிசர்சனம், நிசர்தனம்...

//இயற்கையை ஓம்பும் விதத்திலோ, இயற்கை தன்னைப் புனரமைத்துக் கொள்ளூம் வேகத்தைக் கணக்கில் கொண்டோ முதலாளித்துவ சுரண்டலின் வேகம் தீர்மானிக்கப்படுவதில்லை.//

என்ன வேகம் உங்கள் ஆதங்கத்தில்... என்னால் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது, அசுரா... மீண்டும் வருகிறேன்...

said...

/"இயற்கையை ஆளும் விதிகளைக் கண்டு பிடிப்பதென்பது நுகர்வுப் பொருள் அல்லது உற்பத்திச் சாதனம் என்ற முறையில் மனிதனுடைய தேவைகளுக்கு அதனைக் கீழ்ப்படுத்துகின்ற சூழ்ச்சியாகவே தோன்றுகிறது"//

Instant gratification!? தொலை நோக்குப் பார்வையிருந்தால் இன்று எல்லாமே பாட்டிலில் அடைத்து விற்கும் அவலத்திற்கு இயற்கையை தள்ளி அதன் கற்புதனை சூரையாடியிருக்க மாட்டோமே...

//"ஆறு வற்றினால் நிலத்தடி நீர், அதுவும் வற்றினால் பனிப்பாறைகளை உருக்கு, கடல்நீரைக் குடிநீராக்கு..." என்று வெட்டுக்கிளியைப் போல இயற்கையைச் சூறையாடியபடியே செல்கிறது.//

அப்படியே சங்கிலித் தொடர் போல் சென்று கொண்டே இருந்தால் நம் கையில் எஞ்சி இருப்பது... மார்ஸ் போன்ற உபயோகமற்ற, ஒரு உருப்பிடாத பூமிக் கிராகம்தான் வேறு என்னெ...

said...

அசுரன்,

மிக மிக அருமையான பதிவு.

இக்கட்டுரையை எழுதிய திரு.மருதையன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

படித்து தெளிந்து கொள்ள இங்கே கொடுத்த உங்களுக்கும் என் நன்றிகள்.

இக்கட்டுரைகளைப் படித்தவுடன் மனது மிகவும் பாரமாகிவிட்டது.

இம்மாபெறும் பிரச்சனையை எவ்வாறு எதிர் கொள்ளபோகிறோம்?

நம் சந்ததிகளுக்கு கடைசியில் என்ன இருக்கப் போகிறது?

said...

//விற்க முடியாமல் தேங்கிப் போன தானியங்களைக் கடலில் கொட்டுவதுபோல, தேவைப்படாத மனிதர்களையும் ஹார்டின் அழிக்க விரும்புகிறார். எனவே அவர்களை உபரி உற்பத்தி பொருட்களாக கருதுகிறார்.//

A typical Capitalistic thinking, there is nothing to be amazed in it.

//""இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. //

யார் யாரை வெற்றி கொண்டதாக கருதுவது இங்கே. மனிதன் என்பவன் இயற்கையின் ஒரு அங்கமே அவனே எல்லாவும் கிடையாது. இயற்கை ஒட்டி வைக்கப் பட்ட சீட்டு கட்டடம் போன்றது இதில் எங்கிறுந்தே ஏதொ ஒன்றை தானே உருவுகிறோம் என்ன ஆகிப்விடப் போகிறது என்று கண்மூடித்தனமாக உருவினால், விளைவு, சங்கிலித் தொடர்புபோல்தான்.

நாம் அதுவரையிலும் இங்கிருந்து பார்க்க இருந்தால், இந்த பூமிக் காடே வாழத் தகுதியற்ற ஒரு பாலைவனமாக மாறிப் போய் புழுதிக் காற்று மட்டும் மார்ஸ் கிரகத்தில் வீசுவது போல வீசிக் கொண்டிருக்கலாம்.

அதுவரையிலும், வாங்க கோக் குடிக்கப் போவோம்...

said...

அசுரன்,

'மனிதனைக் கடவுள் படைத்தார். மனிதனுக்காகவே மற்ற எல்லா உயிரினங்களையும் அவர் படைத்தார். அதனால் அவற்றைத் தின்றொழிப்பதில் ஒன்றும் தவறில்லை.' என்று ஒரு கருப்பினக் கிருஸ்துவர் என்னிடம் சொன்னார். கோழி, மாடு, பன்றி போன்றவை உற்பத்திப் பொருட்களாய்ப் போனதால் அழிக்கப்படும் காடுகள், eco system பாதிப்பு பற்றிப் பேசும்போது சொன்னது இது. மனித இனத்தின் தற்கொலைக்கு ஒப்பான இச்சிந்தனையின்(கட்டுரை) வேர் எங்கே இருக்கிறது என்பது புரிகிறதா?

இது போன்ற கட்டுரைகள், போராட்டக்காரர்கள் கண் முன்னே இருக்கும் உண்மைகளைச் சொல்லக் கூட மிகப் பெரிய எதிர்நீச்சல் அடிக்க வேண்டியது ஏன் என்று யோசியுங்கள்.

கணேஷ்.

said...

//இயற்கையை ஓம்பும் விதத்திலோ, இயற்கை தன்னைப் புனரமைத்துக் கொள்ளூம் வேகத்தைக் கணக்கில் கொண்டோ முதலாளித்துவ சுரண்டலின் வேகம் தீர்மானிக்கப்படுவதில்லை. இலாபம் மட்டுமே அதன் உந்து சக்தி. எனவே இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் சுரண்டுவதில் முதலாளித்துவம் காட்டும் வரைமுறையற்ற வெறி என்பது அதன் இயல்பான பண்பு.//
உண்மை.. போனபார்ட், கட்டுரை முழுவதுமே மிகவும் நன்றாக இருக்கிறது.. இதை நான்கு பாகமாகப் பிரித்து இட்டிருந்தால், இன்னும் அதிக மக்களைச் சென்று சேர்ந்திருக்குமோ?

பழைய காலம் போல் பொதுவுடமை சார்ந்த தனியுடைமை வந்தால் இதற்கு ஒரு தீர்வு வரலாம்.. அதாவது, முற்காலத்தில், ஆறு குளம் வாய்க்கால் போன்ற நீர்நிலைகள் ஒரு ஊருக்குச் சொந்தமானதாக இருந்தது. அந்த நீர்நிலைகளைப் பராமரிப்பது உள்ளூர்வாசிகளின் முக்கிய கடமையாக இருந்தது. இறைவன் பேராலும், திருவிழாக்களை ஒட்டியும், அவ்வப்போது தூர்வாருவது, நீரைப் பாதுகாப்பது என்பதெல்லாம் சமூகக் கடமை என்னும் நிலையில் இல்லாமல், சொந்த வேலையாக இருந்து வந்தது. நீரையும் நிலத்தையும் கடவுளாகப் பார்த்த மனிதன், பயத்தினாலோ பக்தியினாலோ அவற்றை மாசுபடுத்தாமல் பாதுகாத்தான்.. மீண்டும் இயற்கை வழிபாட்டுக்குச் செல்வதன் மூலம் இன்றைய பிரச்சனைக்கு ஓரளவு வழி காணலாம்.

மற்றபடி, தனியார் மயமாக்குவதாலோ, முழுக்க முழுக்க அரசாங்கத்தின் பாதுகாப்பில் விட்டு வைப்பதாலோ நீர்நிலைகளைக் காக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை..
சரி, இந்த follow-up கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதினால் எப்படி? தமிழிலேயே தந்திருக்கலாமே?!! (அதிலும் ஆங்கில fontடில் தமிழ் வேறு!!)

said...

வாருங்கள் பொன்ஸ்,


//பழைய காலம் போல் பொதுவுடமை சார்ந்த தனியுடைமை வந்தால் இதற்கு ஒரு தீர்வு வரலாம்..//

பழைய காலத்தில் இப்படிப்பட்ட அட்வான்ஸ்டு டெக்னாலஜி கிடையாது. இன்றைக்கு இருக்கு.

பிரச்சனை என்னவென்றால் முதலாளித்துவம் செய்த மிக மிக உருப்படியான விசயம் சமூகம் மொத்ததையும் உற்பத்தியில் ஈடுபடுத்தி, மையப்படுத்தப்பட்ட அதி நவீன உற்பத்தி முறைகளை புகுத்தியதுதான். அது(முதலாளித்துவம்) செய்ய இயலாமல் தவிப்பது என்னவென்றால் அந்த சமூக உற்பத்தியை தனிமனிதன் சுவிகரிப்பதை நிறுத்துவது.

இந்த ஒரு முரன்பாட்டை(தனிமனித சுவிகரிப்பை) உடைத்து விட்டால் பிரச்சனை தீர்ந்தது.

மேலும் பொதுவுடைமை சமூகத்தின் வரவை யாராலும் தவிர்க்க முடியாது. அப்படியில்லையென்றால் மாற்று மனித சமூகத்தின் அழிவுதான். இரண்டில் ஒன்று நிச்சயம்.

இந்த பொதுவுடைமை சமூக பிரசவம், சூமுகமாக, குறைந்த பட்ச வன்முறையோடு(வன்முறை தவிர்க்க முடியாது - for example crimeச் in cities) உருவாகுவதற்க்கு உதவி செய்வதுதான் ஒரு கம்யூனிஸ்டு கட்சியின் கடமை......// மீண்டும் இயற்கை வழிபாட்டுக்குச் செல்வதன் மூலம் இன்றைய பிரச்சனைக்கு ஓரளவு வழி காணலாம்.//

சமூகத்தை பின்னுக்கு இழுக்க முடியுமா?
சாத்தியமில்லை. அது முட்டாள்தனமும் கூட. இப்படி பின்னுக்கிழுக்கத்தான் இஸ்லாம், இந்து, கிருத்துவ மத வெறி பன்றிகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.//இந்த follow-up கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதினால் எப்படி? தமிழிலேயே தந்திருக்கலாமே?!! (அதிலும் ஆங்கில fontடில் தமிழ் வேறு!!) //

அந்தக் கட்டுரை எனது தமிழ் வலைப்பூ உருவாக்கும் முன்பு எழுதியது. மேலும் அப்பொழுது எனக்கு இந்த யுனிகோட் சமாச்சாரம் எல்லாம் தெரியாது. அதனால்தான் தங்கிலிஸ்.

அங்குள்ள மற்ற கட்டுரைகளை படித்து கருத்து சொல்லவும்.

நன்றி,
அசுரன்

said...

Sivabalan,
//இக்கட்டுரைகளைப் படித்தவுடன் மனது மிகவும் பாரமாகிவிட்டது.

இம்மாபெறும் பிரச்சனையை எவ்வாறு எதிர் கொள்ளபோகிறோம்?

நம் சந்ததிகளுக்கு கடைசியில் என்ன இருக்கப் போகிறது? //

என்ன செய்யலாம் என்று நீங்களே கூறுங்கள்.

வருகைக்கு நன்றி,
அசுரன்.

**********

இயற்கை நேசி,

தங்களது டைனோசர் கட்டுரை படித்தேன் நல்ல கட்டுரை.

//மார்ஸ் போன்ற உபயோகமற்ற, ஒரு உருப்பிடாத பூமிக் கிராகம்தான் வேறு என்னெ... //

அந்த அள்வுக்கு போகிறவரை மனித சமூகம் உயிருடன் இருக்கும்?
இரண்டே சாய்ஸ்....கம்யுனிசம் OR டெத் of மனித சமூகம்.//யார் யாரை வெற்றி கொண்டதாக கருதுவது இங்கே. மனிதன் என்பவன் இயற்கையின் ஒரு அங்கமே அவனே எல்லாவும் கிடையாது. இயற்கை ஒட்டி வைக்கப் பட்ட சீட்டு கட்டடம் போன்றது இதில் எங்கிறுந்தே ஏதொ ஒன்றை தானே உருவுகிறோம் என்ன ஆகிப்விடப் போகிறது என்று கண்மூடித்தனமாக உருவினால், விளைவு, சங்கிலித் தொடர்புபோல்தான்.//

இயற்கை பற்றீய விசயங்கள் தங்களுக்கு மேலதிகமாக தெரியும் என்பதால் ஏற்படும் தங்களது ஆவேசத்தை உணர்கிறேன்.

நீங்கள் ஏற்கனவே கூறியது போல் விவசாயம் கார்போரேட் மயமாகி வருவதைப் பற்றி இருவரும் இணைந்து ஒரு கட்டுரை எழுதலாமே?
எனது மெயில் ஐடி: asurann@indiatimes.com//அதுவரையிலும், வாங்க கோக் குடிக்கப் போவோம்... //

இது பற்றிய ம.க.இ.க வின் பாடல்களை கெட்டுள்ளீர்களா?

அமேரிக்க மோத்திரம் கோக் என்பது அவர்களின் விமர்சனம்.....அது உண்மைதானே...
ஆனால் குடிக்கின்ற பன்றீகளுக்கு அந்த உணர்வெல்லாம் கிடையாது.

தொடர்ந்து வந்து கருத்துக்களை பரிமாறவும்

நன்றி,
அசுரன்

said...

கணேஷ்,

//மனித இனத்தின் தற்கொலைக்கு ஒப்பான இச்சிந்தனையின்(கட்டுரை) வேர் எங்கே இருக்கிறது என்பது புரிகிறதா?//

நீங்கள் சொன்ன கருப்பின கிருத்துவரின் சிந்தனை அவர் இருக்கின்ற சமூகத்திற்க்கு ஆதரவாக அவரது மதம் உருவாக்கியுள்ள சிந்தனை அவ்வளவே.

ஆனால் இந்த பிரச்சனையின் அடிப்படை தனி மனித சுவிகரிப்பும், லாபமும் இப்படிப்பட்ட ஆபத்தான தளத்தில் உள்ள தொழில்நுட்பமும்தான்.

சமயங்களும், மதங்களும் என்றைக்குமே ஆளும் வர்க்க தத்துவங்களை நியாயப்படுத்தவே செய்யும்.

இதே கருப்பின் கிருத்தவர் ஸ்பாட்டகஸ் காலத்தில் இருந்தால் அடிமை முறையை நியாயப்படுத்தி பேசியிருப்பார்.

அதனால் இது போன்ற சிறுபிள்ளைத்தனமான முடிவுகளுக்கு வராமல் இருக்கவும்.

கட்டுரையை இன்னொரு முறை முழுமையாக படித்தால் பல விசயங்கள் புரிய வரும்.

வருகைக்கு நன்றி. தொடர்ந்து வந்து தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும்

நன்றி,
அசுரன்.

said...

அசுரன்/போனபர்ட்,
//சமூகத்தை பின்னுக்கு இழுக்க முடியுமா? சாத்தியமில்லை. அது முட்டாள்தனமும் கூட. //
பின்னுக்கு இழுப்பது என்பது வேறு.. இயற்கையும் நம்மைப் போல ஒரு படைப்பு. மனிதனைப் போல மூச்சுவிடவும், தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் அதற்கும் உரிமை இருக்கிறது.. எல்லாமே மனிதனுக்காக படைக்கப்பட்டது என்னும் எண்ணம் இருக்கும் வரை இவற்றை உறிஞ்சிப் பார்க்க மட்டும் தான் மனிதனுக்குத் தோன்றும்.

இயற்கை படைக்கப்பட்டது, இயற்கைக்காக. "வாழு வாழ விடு" கொள்கையை மனிதனுக்கு மட்டுமன்றி சுற்றியுள்ள அனைத்து உயிருள்ள, இல்லாத பொருட்களுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும்.. இதைத் தான் நான் இயற்கை வழிபாடு என்று சொல்ல முயல்கிறேன்.

// இப்படி பின்னுக்கிழுக்கத்தான் இஸ்லாம், இந்து, கிருத்துவ மத வெறி பன்றிகள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்//
உங்கள் கருத்து சரியாக இருக்கலாம்.. ஆனால் சக மனிதனை - ஆம், யாராக இருந்தாலும் அவன் மனிதன் என்பது என் எண்ணம் - பன்றி போன்ற நீசம் என்று கருதக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. இது உங்கள் பாணியாக/பேச்சு வழக்காக இருக்கலாம்.. ஆனால், என் பெயரைச் சொல்லி, என்னிடம் கூறியமையால் பதிய வேண்டிய அவசியமாகிறது.

//அங்குள்ள மற்ற கட்டுரைகளை படித்து கருத்து சொல்லவும். //
ஆங்கில மீடியத்திலேயே படித்து வளர்ந்திருந்தாலும், பொதுவாக ஆங்கிலக் கட்டுரைகள் படிப்பதில் எனக்கு உந்துதல் குறைவு.. முடிந்தால் படித்துப் பார்க்கிறேன். அத்தனை உறுதியாகச் சொல்ல மாட்டேன்.

said...

//பின்னுக்கு இழுப்பது என்பது வேறு.. இயற்கையும் நம்மைப் போல ஒரு படைப்பு. மனிதனைப் போல மூச்சுவிடவும், தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் அதற்கும் உரிமை இருக்கிறது.. எல்லாமே மனிதனுக்காக படைக்கப்பட்டது என்னும் எண்ணம் இருக்கும் வரை இவற்றை உறிஞ்சிப் பார்க்க மட்டும் தான் மனிதனுக்குத் தோன்றும். //

இது சரிதான். இயற்கையுடன் நமது உறவை முரன்பாட்டை நட்பாகத்தான் கையாள வேண்டும்.

தங்களது இயற்கை வழிபாடு என்ற வார்த்தைகளை காந்தியின் கற்பனையான ராம ராஜ்யத்தை குறீப்பிட்டு சொல்கிறேர்களோ என்று நினைத்துவிட்டேன்.


//உங்கள் கருத்து சரியாக இருக்கலாம்.. ஆனால் சக மனிதனை - ஆம், யாராக இருந்தாலும் அவன் மனிதன் என்பது என் எண்ணம் - பன்றி போன்ற நீசம் என்று கருதக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. இது உங்கள் பாணியாக/பேச்சு வழக்காக இருக்கலாம்.. ஆனால், என் பெயரைச் சொல்லி, என்னிடம் கூறியமையால் பதிய வேண்டிய அவசியமாகிறது. //

மத வெறியர்களை நான் மனிதர்களாக கருதவில்லை. மன்னிக்கவும், அந்த அளவுக்கு எனது மனம் பக்குவப்பட்ட மனம் இல்லை. நேற்று கூட பாருங்கள் 250 பேர் பலி...இவ்விசயங்களும் இதை வைத்து அடுத்து வர இருக்கும் மாற்று மத துவேச போதனைகளும்....சம்பந்தமில்லாத டாபிக் அதனால் இங்கே அப்பீட் ஆகிறென்.


//ஆங்கில மீடியத்திலேயே படித்து வளர்ந்திருந்தாலும், பொதுவாக ஆங்கிலக் கட்டுரைகள் படிப்பதில் எனக்கு உந்துதல் குறைவு.. முடிந்தால் படித்துப் பார்க்கிறேன். அத்தனை உறுதியாகச் சொல்ல மாட்டேன்.//

எனது கட்டுரைகளை எப்பொழுது அவகாசம் கிடைத்தாலும் படித்து கருத்துக்களை சொல்லவும். தங்களது விமர்சனங்களை வரவேற்கிறேன்

நன்றி,
அசுரன்.

said...

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இயற்கை சார்ந்த வழிபாடுகளே இருந்து வந்தன. இயற்கையே கடவுள், அதனை மதித்து வாழ்வது நாம் வாழும் வீட்டினை சுத்தமாக வைத்துக் வாழ்வதற்கு சமம் என்ற முறையில் இருந்ததால் தான் இன்று நமக்கு மிச்சமாக கிடைத்திருக்கும் அந்த வன வாழ் செல்வங்கள்.

ஆனால் இந்த கடந்த நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் தொடங்கிய இயற்கை பலாத்காரமே இன்று விசுவ ரூபம்மெடுத்து 16,000 மேற்பட்ட தாவர விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக தெரிய வருகிறது (Endangered). எல்லாவற்றுகும் காரணம் அந்த அடிப்படை புரிதலே, அன்பர் கனேஷ் கூறிய;

//'மனிதனைக் கடவுள் படைத்தார். மனிதனுக்காகவே மற்ற எல்லா உயிரினங்களையும் அவர் படைத்தார். அதனால் அவற்றைத் தின்றொழிப்பதில் ஒன்றும் தவறில்லை.' //

என்ற கண்மூடித்தனமான அனுகுமுறையெ இந்த இயற்கை சார்ந்த சீரழிவுக்கு காரணம்.

இன்னும் வருகிறேன்...

said...

//'மனிதனைக் கடவுள் படைத்தார். மனிதனுக்காகவே மற்ற எல்லா உயிரினங்களையும் அவர் படைத்தார். அதனால் அவற்றைத் தின்றொழிப்பதில் ஒன்றும் தவறில்லை.' //

இது மட்டுமல்ல லாபம் சேர்க்கும் வெறியும்தான் காரணம். 'தின்றொழிப்பதில் தவறில்லை' என்ற கருத்தில் MNCக்களின் வியாபாரத்துக்காக உருவாக்கப்படும் நுகர்வு வெறி எனும் உள்ளடக்கம் இல்லையே?

இது தனிமனித சுவீகரிப்பின் விளைவு அதற்க்கு நீங்கள் மேற்சோன்ன விசயமும் ஆதரவாக உள்ளது

நன்றி,
அசுரன்.

said...

கார்கள் வெளியிடும் புகையைச் சுவாசிப்பதன் விளைவாக மட்டும் மனிதனின் உடலில் ஈயத்தின் அளவு 100 மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது ஒரு ஆய்வு.

Lead free petrol is the solution
implemented in many countries.

said...

//Lead free petrol is the solution
implemented in many countries.
//

anony....


ஈயத்திற்க்கு சொல்லிவிட்டீர்கள்... மற்ற சுற்றுச் சூழல், மருத்துவ பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு சொல்வீர்கள்...

முக்கியமாக தண்ணீர் தனியார் மயம்....

நாளை காற்றும் தனியார் மயமானால் நிலைமையை கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்கள்.

இதைத்தான் கட்டுரை தெளிவாக சொல்கிறது.

அதாவது லாபத்திற்க்காக அழிவை உருவாக்குவதோடுமட்டுமல்லாமல் அந்த அழிவிலிருந்தும் லாபம் பார்க்கும் ஏகாதிபத்தியம்.....பிரச்சனை அதன் முழுமையான பார்வையில் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் அனானி..

நன்றி,
அசுரன்.

Related Posts with Thumbnails