பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வை!!
மியான்மார்ல ராணுவ ஆட்சியாம். என்ன கொடுமை பாருங்க 15 வருசமா ஆங்சான் சூகியி என்ற தலைவரை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனராம். இப்போதான் ரிலீசே செஞ்சிருக்காங்க. ராணுவ ஆட்சின்னா எப்படி இருக்கும்? நம்ம மாதிரி 'ஜனநாயாக' நாட்டுல இருக்குறவங்களுக்கு அந்த கஸ்டம் புரியாதுதான். இப்படியும் பலர் பெருமிதத்துடன் பேசிக் கொள்கிறார்கள்.
அது சரி. ஆங்சான் சூகியியாவது தற்போது விடுதலை செய்யப்பட்டு விட்டார். ஆனால் கடந்த 10 வருடங்களாக இந்தியாவில் நடக்கும் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடி உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஐரோம் சர்மிளா. அவரை கைது செய்து 10 வருடங்களாகின்றன. அவருக்கு என்று விடுதலை? 60 வருட ஜனநாயகம் சர்மிளாவுக்கு தராததை, மியான்மார் ராணுவ ஆட்சி ஆங்சான் சூகியிக்கி தந்திருக்கு என்று சொல்லலாமா?
ஜம்மு-காஷ்மீரிலும், மணிப்பூரில் 1961லிருந்தும், பெரும்பாலான வடகிழக்குப் பகுதிகளில் 1972லிருந்து ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடுங்கோலாட்சிதான் நடக்கிறது. அரசே ஒத்துக் கொண்ட படி இதுவரை 20,000 பேருக்கும் மேல் காணாமல் போயுள்ளனர் மணிப்பூரில். தேச சேவை செய்வதாகக் கதை விட்டுக் கொண்டு தேக சேவை செய்யும் ராணுவப் பொறுக்கிகள் மீதுள்ள 458 வழக்குகளை விசாரிக்கக் கோரியுள்ளது ஜம்மு காஷ்மீர் அரசு. இன்று இத்தகைய ராணுவ ஆட்சி தண்டகாரன்யா, மத்திய இந்தியா, மேற்கு வங்கம் என விரிவாகி வருகிறது. நிலைமை இப்படியிருக்கு ஈயம் பித்தளையைப் பார்த்து பல்லிளித்த கதையாக இந்திய ஜனநாயகம், மியான்மார் ராணுவநாயகம் என்று வெத்துப் பெருமை பேசி இளித்துக் கொண்டழைகிறார்கள் சிலர்.
பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வைத்தால் அது #$%டேஸ்@#@ திங்காமல் இருந்துவிடப் போகிறதா என்ன? பன்றித் தொழுவத்துக்கு செண்ட் அடிச்சி நாடாளுமன்றமென்று பேர் வைத்தால் அது மியான்மார் ராணுவ ஆட்சியிலிருந்து இந்திய போலி ஜனநாயகத்தை வித்தியாசப்படுத்திவிடுமா என்ன?
அசுரன்
Related:
Irom And Her Sisters
Murder In Plain Sight
Irom And The Iron In India’s Soul