மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத்சிங்கும்!!
வரலாற்றின் குரலுக்கு சரியாக செவிமடுத்து தனது வரலாற்று கடமையை சிறிது கூட தயக்கமின்றி நிறைவேற்றிய புரட்சிக்காரன் தோழர் பகத்சிங்கும், அவரது தோழர்கள் சுகதேவும், ராஜ்குருவும் தூக்கிலடப்பட்ட நாள் மார்ச் 23. வேறென்றைக்கும் விட இன்றைய மறூகாலனிய தாக்குதல் காலக்கட்டத்தில் இந்திய விடுதலையின் துவக்கமாக முழங்கிய இவர்களின் வரலாற்றுத் தேவை மிக அதிகமாக உணரப்படுகிறது.
தீர்க்கமான தனது பார்வையின் மூலம் தனது கடமையை உணர்ந்து அதற்க்கு நேர்மையாக சிறிதும் சமரசமின்றி வினையாற்றிய பகத்சிங்கை சிறுமைப்படுத்துவது என்பதை ஆளும் வர்க்கம் எப்பொழுதுமே செய்து வருவதுதான். அப்படி செய்யாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். சமீபத்தில் ஆதவன் தீட்சண்யாவின் புத்தகம் வெளியீட்டு விழாவில் தலித் முரசு ஆசிரியர் பகத்சிங்கை ஏக வசனத்தில் சிறுமைப்படுத்தி பேசியதன் மூலம் தான் யார் என்பதை வெளிப்படையாக வெட்கமின்றி காட்டிக் கொண்டார். அதுவல்ல இங்கு நமது பிரச்சினை. மாறாக அந்த கூட்டத்தை நடத்திய கார்ப்போரேட் கட்சியான, டாடாயிஸ்ட் கட்சியான CPMன் உறுப்பினர்கள் (AKA பங்குதாரர்கள்) இந்த அம்சத்தில் என்ன செய்தார்கள் என்பதும், இதில் அவர்கள் உண்மையாகவே யாராக பரிணமித்துள்ளார்கள் என்பது வெட்கமின்றி வெளிப்படுவதுமே இங்கு பேசப்படவுள்ள விசயம்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பதிவர் ஏகலைவன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதனை இங்கு மறு பிரசூரம் செய்கிறேன்.
பகத்சிங்கின் மேன்மை, அவர் இந்திய சூழலில் யாருடனும் ஒப்பிட முடியாத அளவு தீர்க்கமான பார்வையும், தனது பார்வைக்கு நேர்மையான செயல்பாடும் கொண்டவர் என்பதை விவாதிக்க விரும்புகிறவர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள். அப்படியொரு விவாதத்தில் காந்தியின் டவுசர் இதற்க்கு முந்தைய விவாதங்களில் கிழிக்கப்பட்டது போலவே கிழிக்கப்படும் என்ற உத்தரவாததை மட்டும் இப்போதைக்கு கொடுக்க இயலும்.
********************************
சி.பி.எம்.மின் 'கண்ணியத்துக்கு' ஒரு அளவே இல்லையா????
சென்ற 19/08/2008 19/03/2008 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.எல்.ஏ. அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவின் 'நான் ஒரு மநு விரோதன்' எனும் நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.
நாம் உள்ளே நுழைந்தபோது தலித் முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் பேசிக்கொண்டிருந்தார். அரங்கில் சி.பி.எம். கட்சியைச் சார்ந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தார்கள். சி.பி.எம். மீது புனிதபாண்டியன் சில விமர்சனங்களை முன்வைத்தார்.
"நான் எந்த உள்நோக்கத்தோடும் இதனைச் சொல்லவில்லை" என்று அறிவித்துக் கொண்டே முன்வைத்தார்.
சி.பி.எம்.ன் சாதி எதிர்ப்பு போராட்டம் எனும் பித்தலாட்டங்களையும், அதன் பார்ப்பனச் சார்புத் தன்மையையும் விமர்சணமாக எடுத்துவைத்தார். "அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக எதிர்க்கும் பொருட்டே புத்தமதத்தைத் தழுவினார். எனவே சி.பி.எம். தோழர்களும் ஏன் புத்தமதததிற்கு மாறக்கூடாது?" என்றும் கேள்வி எழுப்பினார். சி.பி.எம். கட்சியினர் பார்ப்பனர்களை பெரும்பாலும் பிராமனர்கள் என்றே குறிப்பிடுகிறாகள். பார்பனர் என்றால் ஒரு தீய சொல்லைப் போல கருதுகிறார்கள் என்றும் இப்படிப்பட்ட போக்கை மாற்றிக் கொண்டு பார்ப்பனர்கள் என்று குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேற்கூறிய விமர்சணங்களின் தொடர்ச்சியாகவும், சொரனையற்ற போலிகளுக்கு சொரனையை ஏற்படுத்தும் விதமாகவும், அரங்கில் யாருமே சற்றும் எதிர்பார்த்திராத வகையிலும், ஏகதிபத்திய எதிர்ப்பு சிங்கம் தியாகத் தோழர் பகத்சிங்கை மிகவும் இழிவான முறையில் விமர்சித்தார். "சும்மா ரெண்டு குண்ட வீசிட்டா அவன் பெரிய ஆளா?" என்றார்.
ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது உயிரை துச்சமாக மதித்து இந்த நாட்டு மக்களுக்க்காக மடிந்த மாவீரன் பகத்சிங்கை கீழ்த்தரமாக இழிவுபடுத்தினார். இருந்தும் போலிகளுக்கு சுரனைவராதது துரதிருஷ்டவசமானது தான்.
பகத்சிங்கின் பலவிதமான போராட்டங்களை பெரியார் வியந்து பாராட்டியதோடு அதற்கெதிராக, நயவஞ்சகமாக, கீழ்த்தரமாக அரசியல் நடத்திய காந்தியை தனது 'குடியரசு' பத்திரிக்கையில் கடுமையாகச் சாடி பலமுறை எழுதியிருக்கிறார். ஆனால் சிறிதும் கூசாமல், ஒருகையில் துரோகி காந்தியையும் மறுகையில் தியாகி பகத்சிங்கையும் உயர்த்திக்காட்டும் சி.பி.எம்.ன் கேவலத்தைக் கண்டிப்பதற்கு பதிலாக பகத்சிங்கை இழிவுபடுத்துவது உள்நோக்கமுடையது.
இவர்கள் மட்டுமா? மார்க்சிய அறிஞர்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் சில பிழைப்புவாதிகளும் இங்கே காந்தியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு உலாவருகிறார்கள். பிர்லா மாளிகையில் இருந்து கொண்டு இந்திய முதலாளிகளின் கைப்பாவையாக, அரை நிர்வாணமாகத் திரிந்த காந்தியை, சமூக போராட்டத்தில் அம்பேத்கரின் பார்வையோடும், ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்தில் பகத்சிங்கின் பார்வையோடும், அனுகியிருந்தால் அவரின் முழுநிர்வானமும் அம்பலமாகியிருக்கும். தனது விமர்சணப் பார்வையைத் தவிர்த்து, வெறும் விசுவாசப்பார்வை பார்பவர்களுக்கு காந்தியின் சுயரூபம் புரிய வாய்ப்பில்லைதான்.
ஏகாதிபத்தியம் வீசும் எலும்புத்துண்டுகளுக்காக நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு அலைபவர்களை மேடைக்கு அழைத்தால் இப்படித்தான் கடிபட வேண்டியிருக்கும். ஆனால் அரங்கில் கடிபட்ட சத்தமல்ல, ஒரு முனகல் கூட கேட்கவில்லை. போலிகளுக்கு இதுபோன்ற அனுபவங்கள் நிறைய இருக்கிறது. ஆனால் போலிகளை விமர்சிப்பதன் ஊடாக மக்களுக்காக மடிந்த தியாகிளையும் இழிவுபடுத்துவது தான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான யுக்தி.
இப்படிப்பட்ட கைக்கூலிகள், ஏகாதிபத்தியத்தை சந்தோஷப்படுத்த இவ்வாறு செயல்படுவது ஒன்றும் ஆச்சர்யமான செயல் அல்ல. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் தம்மை மாய்த்துக்கொண்ட போராளிகள் மட்டும் தான் இவர்களின் இலக்கு, அவர்களை இப்படி இழிவுபடுத்துவதற்காகத்தானே ஏகாதிபத்தியம் இவர்களுக்கு பிச்சைபோடுகிறது.
தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பதாகவும், எழுதுவதாகவும், பத்திரிக்கை நடத்துவதாகவும் கூறும் புனிதப்பாண்டியனின் 'தலித் முரசு'க்கு எங்கேயிருந்து பணம் வருகிறது?
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை ஒடுக்கி, கொண்றொழித்து, அவர்களின் இரத்தத்தைக் குடித்து, சுரண்டிக் கொழுத்த ஏகாதிபத்தியத்தின் எச்சில் காசுதான் அது. ஏகாதிபத்தியம் கழிந்ததை கையில் வைத்துக் கொண்டு தலித் விடுதலை பேசும் இந்த பிழைப்புவாதி, ஏகதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி தனது 23 வயதில் மரணத்தை எதிர்கொண்ட ஒரு மாவீரனை என்றைக்குமே புரிந்து கொள்ள முடியாதுதான்.
அதன் பிறகு த.மு.எ.ச. பொதுச் செயலாளர் ச. தமிழ்ச்செல்வன் பேசவந்தார். "நாங்கள் பார்ப்பனன் என்ற வார்த்தையைப் பயன் படுத்துவதில்லை என்று புனிதப்பாண்டியன் இங்கே குறிப்பிட்டார். கடந்த த.மு.எ.ச. மாநில மாநாட்டுத் தீர்மணங்களை வாங்கிப் படித்து பாருங்கள், அதில் பத்து இடங்களுக்கும் மேலாக 'பார்ப்பான்' என்று குறிப்பிட்டுள்ளோம்" என்று மிக அருமையானதொரு பதிலை புனிதப்பாண்டியன் மீது அள்ளித் தெளித்தார். அதன் பிறகு "'நான் ஒரு மநு விரோதன்' என்ற புத்தகத்தை வெளியிட்ட பிறகும் ஆதவன் தீட்சண்யா மீது நாங்கள் (அதான் நம்ம காம்ரேடுகள்!) எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறோமே" அதிலிருந்தே எங்களது சாதி சார்பற்ற தண்மையை விளங்கிக் கொள்ளுமாறு புனிதப்பாண்டியனைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார். "இப்படிப்பட்ட விமர்சனங்களைச் சுமத்துவது நாம் விலகும் புள்ளியையே உறுதிப்படுத்துகிறது. மாறாக நாம் இணையும் புள்ளி என்று ஒன்று இருக்கிறது(!) நாம் அதிலிருந்து தொடங்குவோம்" என்று சொல்லி விவாதங்களைத் தவிர்த்துவிட்டு, அதிலிருந்து தப்பித்துக்கொண்டார். புனிதப்பாண்டியனின் பகத்சிங் மீதான கீழ்த்தரமான விமர்சனங்களை அவர் கண்டுகொள்ளவுமில்லை, அதற்காக பதிலளிக்கவுமில்லை.
பிறகு போலிகம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு தலைவர்களில் ஒருவரான சம்பத் பேசவந்தார். அவரும் தமது கட்சி மேடையிலேயே பகத்சிங் இழிவுபடுத்தப்பட்டதை சிறிதும் சட்டை செய்யவில்லை. பிறகு பேசிய பிரளயனும் சரி, ஏற்புரையாற்றிய ஆதவன் தீட்சண்யாவும் சரி, அதைத் தவிர மற்ற அணைத்து வியாக்கியானங்களையும் பேசினர்.
இறுதியாக பிரகதீஸ்வரன் என்பவர் தனது நன்றியுரையில் "புனிதப்பாண்டியன் இதைப் போன்று சுதந்திரமாக வேறு எந்த மேடையிலும் பேசமுடியாது என்பது எங்களது கண்ணியத்தை எடுத்துக் காட்டுகிறது" என்று கூறினார்.
இதனைக் கடுமையாகக் கண்டித்து பேசுவார்கள் என்று கடைசிவரைக் காத்திருந்து நொந்து போய்த் திரும்பினோம். அங்கே இழிவு படுத்தப்பட்டது தோழர் பகத்சிங் மட்டுமல்ல, இதைக்கூடவா எதிர்க்க மாட்டார்கள் என்று எதிர்பார்த்து ஏமார்ந்துபோன என்னைப் போன்ற சிலரும்தான் என்பதை உணர்ந்துகொண்டேன்.
இவர்கள் சொரனையோடு பதிலலிக்காதது ஏதோ தற்செயலாக நடைபெற்றது அல்ல. அது தான் போலிகளின் நிஜமுகம். இவர்களுக்குள்ளும் வேர்விட்டிருக்கிற ஏகாதிபத்திய அடிமைப் புத்திதான் இவர்களை பேசவிடாமல் தடுக்கிறது என்பதற்கு இதைவிடச் சிறப்பாக இனி எந்த நிகழ்வையும் எடுத்துக்காட்டமுடியாது.
ஏகலைவன்.
Related Articles:
மாவீரன் பகத்சிங் விடுதலை போரின் ஒப்பற்ற தலைவன்
விடுதலைப் போரின் கலங்கரை விளக்கம் பகத்சிங்