TerrorisminFocus

Saturday, September 28, 2013

பூவாடைக்காரி தெய்வமும், பெண் பித்து பிடித்த தஞ்சை நாயக்கர் அரசும்!!

ஆந்திர தேசத்து தெலுங்கு சாதியினர் பலர் முஸ்லீம் அரசர்களின் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட அடக்குமுறைகளுக்கு தப்பிப் பிழைத்து அலை அலையாக தமிழகம் வந்தது பற்றி கி ராஜநாரயணன் நாவலில் ஒரு விவரிப்பு உண்டு. இதே போன்று பொதுவில் முஸ்லீம் அரசுகள் இந்தியாவில் பாலியல் அத்துமீறல்கள், கொடுமைகள், கோயில்கள் மீது தாக்குதல், 'இந்து'க்கள் மீது ஒடுக்குமுறை செய்தது குறித்து பொதுபுத்தி ஒன்று உருவாக்கப்பட்டு பரவலாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இது ஒரு வகைப்பட்ட உயர்சாதி/மேட்டுக்குடி அரசியல் உருவாக்கிய சமூக உளவியலே. புத்தி கெட்ட நடுத்தர வர்க்க பேமானிகளால் பராமரிக்கப்பட்டு பரப்புரை செய்யப்படுகிறது. இதனை புரிந்து கொள்ள இங்கே வலைப்பூக்களிலும் மோடிக்கு நேரடியாக வக்காலத்து வாங்கும் நேர்மையும்(காவி கும்பலிடம் இதை எதிர்பார்ப்பது தப்புதான்), தைரியமும் இன்றி 'இந்து'க்கள் பாதிக்கப்படுவதாக உச்சுக் கொட்டி, காஷ்மீருக்கெல்லாம் கேமராவை சூம் செய்து கதை சொல்லும்  வெள்ளை வேட்டிக்குள் காவி டவுசர் போட்ட பதிவர்களைச் சொல்லலாம். இவர்களின் நம்பகத்தன்மைக்கு உரைகல் அதே 'இந்து'க்கள் தீண்டாமைக் கொடுமைக்கும், படுகொலைக்கும் ஆதிக்க சாதி வெறியர்களால் ஆட்படும் போது பாரமுகமாக இருப்பது. இவர்களின் கரிசனம் 'இந்து' மீது அல்ல என்பது இங்கு புலப்படும்.

சரி இதற்கும் பூவாடைக்காரிக்கும் என்ன தொடர்பு?... பிடிக்காத மாமியார் கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என்று சொல்வார்களே அது போல. முஸ்லீம் மன்னர்களின் அடாவடித்தனங்களை மட்டும் சூம் போட்டு காட்டும் வரலாற்றுப் பார்ப்பனியம், அதே அளவுக்கும், அதை விட கொடூரமாகவும் 'சாதி இந்து' அரசர்கள் செய்துள்ள கொடுமைகளைப் பற்றி பேசுவதில்லை. உதாரணத்திற்கு சொல்ல வந்துதான் பூவாடைக்காரி தெய்வம் உருவான கதை.

தஞ்சை நாயக்கர் ஆட்சி காலத்தில் பாளையக்காரர்கள் கண்ணில் படும் அழகிளம் பெண்களை கடத்திச் சென்று வன்புணர்ந்து அடிமைகளாக விற்று விடுவர். பிரேவ் ஹார்ட் படத்தில் வருமே - திருமணம் ஆனால் முதலிரவு அப்பகுதி படைத்தலைவனுடன் நடக்க வேண்டும் என்று, அது போல பூப்படைந்த பெண்களை கடத்தி வந்து வன்புணர்ச்சிக்குள்ளாக்குவர். இதிலிருந்து தப்பிக்க பூப்படைந்த பெண்களை கௌரவக் கொலைகள் செய்வதும் நடந்துள்ளது. அப்படி கொல்லப்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பான பெண் தெய்வப் பெயர் வழங்கப்படுகிறது. தரங்கம்பாடி பகுதியில் இவ்வகை தெய்வங்களுக்கு பூவாடைக்காரி என்று பெயர் வழங்கப்படுகிறது. (தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி - 1 இராமச்சந்திரன்.சீ - உங்கள் நூலகம், ஆ, சிவசுப்பிரமணியன் செப் 2013)

விடுதலைப் போர் வீரன் கட்டபொம்மனுக்கும் கூட இவ்வகை கதையாடல் உண்டு. அது குறித்து நாட்டுப்புற வழக்கும் உள்ளது. 7 அண்ணன்களுக்குப் பிறந்த தங்கையை கட்டபொம்முவிடமிருந்து காக்க அவர்கள் கொன்ற கதை அது. இதே போல இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்ட கேரளாவை கொள்ளையடித்த கதை. பல்வேறு 'இந்து' மன்னர்கள் பக்கத்து நாடுகள் (இந்தியாதான் 50 கிமீ 100 கிமீ உள்ளயே) மீது  படையெடுத்து கோயில்களை கொள்ளையடித்த வரலாறுகள். இவைகள் நிகழ்காலத்தில் கலவரத்தை உண்டாக்கும் ரசவாதத்திற்கு உட்படாத கல்வெட்டுக்கால வரலாறுகள்.  காரணம் வரலாறு நெடுகிலும் காவி டவுசர்கள் பார்ப்பனியத்தின் பெயரில் உருவாக்கி வைத்துள்ள திட்டமிட்ட முஸ்லீம் வெறுப்பு கருத்தாக்கம்.

எப்படி இன்றைய காவி டவுசர் பதிவர்கள் அய்யோ காஷ்மீர் என்று அலறி போலியாக துடித்தாவது மோடிக்கு காவடி தூக்குகிற அதே வேளையில் கண்முன்னே சக 'இந்து'வுக்கு நிகழும் கொடுமையைக் கண்டும் காணாமல் போகிறார்களோ, மூடி மறைக்கிறார்களோ அதே போல வரலாறு நெடுகிலும் மன்னர் என்றாலே அடாவடித்தனம், ஒடுக்குமுறை சுரண்டல் என்ற உண்மையின் ஒரு பக்கத்தை மட்டும் முஸ்லீம் என்று குறிப்பிட்டு காட்டி பிரிவினை கிளப்புகிறார்கள்.

இந்த அடிமடையர்களுக்கும் அல்லக்கை கூட்டம் உண்டு. ஏனேனில் நாம் இருப்பது காலனிய அடிமைத்தனத்தில் ஊறித் திளைத்த சாதி வெறி இந்தியாவில். இது இதற்கு மீறி சிந்தித்தால்தான் நாம் ஆச்சர்யப்பட வேண்டும். இவர்களின் மொன்னைத்தனத்திற்கு ஒரு பூவாடைக்காரியை உருவாக்கினால் ஒழிய இதற்கு விடிவில்லை.

அசுரன்

தொடர்புடைய பதிவுகள்:
'இந்து' மன்னர்களால் இடிக்கப்பட்டவை எவை? 

தெய்வங்கள் உருவான கதை 

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

 




Related Posts with Thumbnails